Tuesday, January 13, 2015

மார்க்கத்திற்கேற்ற மண் – அமெரிக்கா

- தமிழில்: அ. முஹம்மது கான் பாகவி



மெரிக்காவில் பல இஸ்லாமிய சமூக அமைப்புகளும் பிரசார இயக்கங்களும் செயல்பட்டுவருகின்றன. ‘தஅவாகளத்தில் சாதனை படைத்துவரும் ஓர் இஸ்லாமிய அமைப்பேரஹ்மத்துன் லில்ஆலமீன்’ (அகிலத்தாருக்கோர் அருட்கொடை). இதன் தலைவர் அம்ர் நயீம் அஸ்ஸமனீ அண்மையில் ஜித்தா வந்திருந்தார். ஜித்தாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய இளைஞர் மன்றத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகைபுரிந்த அவருடன்அல்முஜ்தமா’ (குவைத்) மாத இதழுக்காக ஹாத்திம் இப்ராஹீம் சலாமா கண்ட நேர்காணல்தான் இது.

  • உங்கள் அமைப்பின் பொதுவான செயல் திட்டம் பற்றி

முதலில், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பது; குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா குடிமக்களுக்கு.
அடுத்து, முஸ்லிம் பரைப்புரையாளர்களின் (தாஇ) ஒரு குழுவை உருவாக்குவது. அவர்கள் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களாக இருக்கலாம்; அல்லது இங்கு குடியேறிய வெளிநாட்டு முஸ்லிம்களாக இருக்கலாம்! ஆனால், அக்குழுவின் பணிதஅவாவாக மட்டுமே இருக்கும்.
  • அமெரிக்காவில் இக்களத்தில் பணியாற்றும் ஒரே அமைப்பு இதுதானா?

இந்தக் கண்டத்திலேயே இது ஒன்றுதான்! பரப்புரையாளர்களை உருவாக்கி, அவர்களுக்கான பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரே அமைப்பு! அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சுமார் 200 தாஇகளின் பொறுப்பை இந்த மன்றம் ஏற்றுள்ளது. அமெரிக்க முஸ்லிம்கள் அளிக்கும் நிதியுதவிகொண்டே இது இயங்கிவருகிறது.
  • உங்கள் அமைப்பின் பெரிய சாதனை என்று எதைச் சொல்வீர்கள்?
அல்லாஹ்வின் அருளால் நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். அத்துடன் தஅவாதுறையில் முஸ்லிம்கள் பலருக்குப் பயிற்சி அளித்துள்ளோம். இஸ்லாத்தின் மீது எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் முறையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளோம். நம்மைச் சுற்றி வாழ்வோரையும் நெருங்கி வருவோரையும் இஸ்லாத்தின்பால் எவ்வாறு அழைக்க வேண்டும்; அதற்கான செயல்திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் விளக்கியுள்ளோம்.
இந்த வகையில், சுமார் ஆயிரம் பேருக்குப் பயிற்சியளித்துவருகிறோம். லாஸ் ஏஞ்ஜல்ஸ் பகுதியில் மட்டும் 300க்கும் அதிகமானோர் புதிதாக நல்வழி பெற்றுள்ளனர். தஅவாவுக்கென இணையதளத்தையும் பயன்படுத்துகிறோம். இணையத்தில் படித்துவிட்டு இறையருளால் மாதந்தோறும் பத்துக்கணக்கனோர் இஸ்லாத்தில் சேர்கின்றனர்.
எங்கள் அமைப்பின் பணிகள் நிறுவன அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களிடம் நிர்வாக நிபுணர்களும் மார்க்கெட்டிங் செய்வோரும் ஆதரவு திருட்டுவோரும் உள்ளனர். இணையப் பயன்பாடு சிறந்த முறையில் நடந்துவருகிறது.
மூன்றாவதாக, புதிய முஸ்லிம்களுக்கு ஊக்கமளிக்கிறோம். நிறையப் பேர் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். ஆனால், தொடர்ந்து அவர்களைக் கண்காணிப்பது கிடையாது. இதனால் தொடக்கத்திலேயே பல்வேறு சிக்கல்களைப் புதியவர்கள் எதிர்கொள்கின்றனர். இதற்காக, புதிய முஸ்லிம்களைக் கவனிப்பதற்கென்றே ஒரு தனிப்பிரிவை உருவாக்கியுள்ளோம். இது, ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்ததுமுதல் அவரே ஒரு பிரசாரகராக மாறும்வரை அவரைக் கவனித்துக்கொள்கிறது.
  • அமெரிக்க சமூகத்திற்குமுன் உங்கள் உரைகள் எவ்வாறு அமைகின்றன?

அமெரிக்க சமூகம், முழுக்க முழுக்க பொருள் சார்ந்த ஒரு சமூகமாகும். அச்சமூகத்துடன் உரையாடும்போது அறிவுபூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் பேச வேண்டும். அமெரிக்கர்களைப்போல் அறிவையும் லாஜிக்கையும் நம்புகின்ற அறிவுபூர்வமான மக்களை நான் பார்த்ததில்லை. இஸ்லாம், அறிவுக்கும் சிந்தனைக்கும் அதிக முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கிறது.
அமெரிக்கர்களின் அறிவுக்குள் நாங்கள் நுழைவதற்குத் துடுப்பாக இருப்பது, திருக்குர்ஆனின் அறிவியல் அற்புதம்தான். அதேநேரத்தில், லத்தீன் அமெரிக்க மக்கள் இதற்கு மாற்றமான இயல்புடையவர்கள். அவர்களுடன் உரையாடும்போது மனதைத் தொட வேண்டும்; ஆன்மாவை உலுக்கிப் பார்க்க வேண்டும். பெரும்பாலோரிடம் பொருளும் ஆன்மாவும் சமநிலையில் இருப்பதையே காண்கிறோம். ஐரோப்பியரைப் பொறுத்தவரை, இந்த ஆன்மிகத் தாக்கம் இல்லாதவர்கள் ஆவர்.
  • பேச்சாளர்களைச் சலித்து எடுக்கிறீர்களா?
எங்களிடம் துறை சார்ந்தவர்களும் அனுபவசாலிகளும் நிபுணர்களும் உள்ளனர். எல்லாரும் அமெரிக்கர்கள்தான். ‘தஅவாஇமாம்களில் யூஷஉ ஐஃபன்ஸ், ஸைத் ஷாகிர் போன்றோரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மட்டத்தில் நன்கு அறிமுகமானவர்களும் உள்ளனர்.
  • இஸ்லாமோஃபோபியாவை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

நான் முன்பே குறிப்பிட்டதைப்போல் அமெரிக்க மக்கள் அறிவுபூர்வமாகவும் தர்க்கரீதிகாகவும் எதையும் சிந்திப்பவர்கள். நாங்கள் அறிவை நோக்கியே பேசுகிறோம். இது, இஸ்லாம் பரவுவதற்கு ஏற்ற நல்ல வளமான மண். தற்போது அமெரிக்கர்களில் 73 விழுக்காட்டினரிடம் இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறையான போக்கே உள்ளது. இருப்பினும், காரணகாரியங்களுடன் அறிவுபூர்வமாகப் பேசும்போது காது தாழ்த்துகின்றனர்; நம் கருத்துக்குச் செவிசாய்க்கின்றனர்; நம்மிடம் ஏற்கச்செய்யும் சான்றுகள் இருந்தால். 99 விழுக்காட்டினர் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்று முன்மொழியாவிட்டாலும் இஸ்லாத்தைப் பற்றிய தவறான பார்வையை மாற்றிக்கொள்கின்றனர்.
  • நீங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகள்…?

எத்தனையோ சவால்கள் இருப்பது உண்மையே. எனினும், மதச் சுதந்திரத்திற்கும் பிரசார சுதந்திரத்திற்கும் அமெரிக்க அரசியல் சாசனம் பொறுப்பேற்கிறது. இதனால் நமக்கு முன்னால் விசாலமான வெளி திறந்திருக்கிறது. நம்மிடம் அதிகமான தாஇகள் உள்ளனர். அவர்களுக்குப் பொறுப்பேற்கும் கரங்கள் தேவை. சுமை பெரிது. திட்டங்களை இன்னும் விரிவுபடுத்த அதிக செலவு பிடிக்கும்.
  • அமெரிக்காவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை…?

இஸ்லாமிய அமைப்புகளின் கணக்கெடுப்பின்படி சுமர் 60 லட்சம் முஸ்லிம்கள் அமெரிக்காவில் உள்ளனர். ஆனால், அமெரிக்க அரசு இதில் பாதியைத்தான் ஒப்புக்கொள்கிறது.
  • அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்பது குறித்து…?
இஸ்லாம் பரவுவதற்கும் ஏற்கப்படுவதற்கும் மிகப் பொருத்தமான களம் அமெரிக்காதான். ‘தஅவாபணியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தும் அரசாங்கப் புள்ளிவிவரப்படியே இஸ்லாம்தான் அதிக வளர்ச்சி கண்டுள்ளது. 2000-2010 இடையே 66.7 சதவீதம் இஸ்லாம் வளர்ந்துள்ளது. இதே பருவத்தில் கிறித்தவம் வெறும் 12.8 சதவீத வளர்ச்சியே கண்டுள்ளது. இது மிகப் பெரிய வித்தியாசமாகும்.
  • மதங்களை அவமதிக்கும் போக்கு அமெரிக்கர்களிடம் உள்ளதா?
திருக்குர்ஆன் எரிப்புச் சம்பவத்தை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள்போலும்! இதைச் செய்தவர், இயந்தரத் தனமான ஒரு மனிதர். பொதுவாக அமெரிக்க சமூகம் மதங்களை மதிக்கிறது. அமெரிக்க குடிமக்கள் 30 கோடிக்கும் அதிகம். இது 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு. வெளியிலிருந்து வந்து குடியேறியவர்களையும் சேர்த்தால் 35 கோடியாகும்.
அவர்களில் ஒரு ஆயிரம்பேர் தீவிரவாதச் சிந்தனையில் இருக்கலாம்; அது கணக்கில் சேராது. பொதுவான அமெரிக்கர்கள் மதங்களை மதிப்பவர்கள். என் மார்க்கம் இப்படிச் சொல்கிறது என்று நீங்கள் சொல்லிவிட்டால் அத்தோடு விவகாரம் முடிந்துபோகும். ஆனாலும், மீடியாஃபோபியா அவர்களையும் பாதித்துள்ளது.
அதே நேரத்தில், படிக்கும் சமுதாயமாகவும் ஆய்வு செய்யும் மக்களாகவும் அமெரிக்கர்கள் இருப்பதால் மீடியாவின் தாக்கமும் குறைவுதான். எனவே, காதில் விழுவதையெல்லாம் உடனே நம்பிவிடமாட்டார்கள். கூகுள் போன்ற ஆய்வுத் தளங்களில் நுழைந்து படித்துப் பார்த்தபிறகே முடிவு செய்வார்கள். 
  • மேற்கொண்டு உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?
எங்களிடம் நல்ல பல திட்டங்கள் உள்ளன. எல்லா இஸ்லாமிய அமைப்புகள், முஸ்லிம் வட்டாரங்கள் ஆகியவற்றின் ஆதரவும் ஒத்துழைப்பும்தான் தேவை. அமெரிக்காவில் தாஇகள்உருவாக்கத்திற்கான ஒரு இண்ஸ்டிட்யூட் அமைப்பது அவற்றில் ஒன்று. அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். இணையதள பாடத்திட்டம் ஒன்றும் எங்களிடம் உண்டு. அதில் தாஇகளுக்குத் தேவையான எல்லாப் பாடங்களும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கேற்ற ஒரு பெரிய இடமும் கிடைத்திருக்கிறது.
  • உங்கள் அமைப்பின் எதிர்காலம் பற்றி..?
இப்போதுள்ள இதே வளர்ச்சியில் அமைப்பு நடைபோட்டால் நல்ல எதிர்காலம் உண்டு. இப்போது எங்கள் அமைப்பு 15 நாடுகளில் இயங்கிவருகிறது. ஐரோப்பா, கிழக்கு நாடுகள், ஜப்பான், சீனா போன்ற அரசியல் மற்றும் பொருளாதார பலமிக்க பெரிய நாடுகள் என 30 நாடுகளில் எங்கள் பணியை விரிவாக்க வேண்டும். தெற்கு அமெரிக்காவில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்காகவும் முயன்றுவருகிறோம். நல்ல தகுதிவாய்ந்த பிரசாரகர்களுக்கு மாதம் 3 ஆயிரம் டாலர்கள்வரை வழங்குகிறோம்.
  • உங்கள் தஅவா பணியில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதேனும்...?
இஸ்லாம் தொடர்பான சந்தேகங்களுக்குத் தெளிவு பெறும் வகுப்பு ஒன்று எங்களிடம் உண்டு. அதில் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் சேர்ந்தார். அத்தோடு முஸ்லிமல்லாதவர்களுக்கு அளிக்கப்படும் தஅவா பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்வார். எங்களுடன் 4 மாதங்கள் இருந்தார். இஸ்லாத்தை அறிந்துகொள்ள வந்த சாதாரணப் பெண்மணி என்றே அவரை நாங்கள் ஆரம்பத்தில் எண்ணினோம். பிறகுதான் அவரது உண்மை நிலை தெரியவந்தது. அவர், பிராட்டஸ்டண்ட் கிறித்தவப் பிரிவின் சமயக் குரு என்பதும் ஒரு சமயக் குருவின் மனைவி என்பதும் தம்பதியர் இருவரும் கிறித்தவராக்கும் மிஷனரியில் பணிபுரிபவர்கள் என்பதும் புலனாயிற்று.
முஸ்லிம்களிடம் கிறித்தவப் பிரசாரம் செய்வதற்காக வந்திருக்கிறார். இஸ்லாத்தைப் பற்றிய ஆரம்ப அறிமுக வகுப்பில் வருவோரிடம் குறுக்கிட்டுக் கிறித்தவத்தைப் புகுத்துவது அப்பெண்ணின் நோக்கம் என்று புரிந்தது. பிறகு சில நாட்கள் கழிந்தபின் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். மூன்றாவது மாதத்தில் இஸ்லாத்தில் இணைந்தார். திரித்துவக் கொள்கையைத் துறந்தார். திருக்குர்ஆன் உண்மையான இறைவேதம்தான் என்பதை ஏற்றுக்கொண்டார்.
அப்பெண்மணி இஸ்லாத்தில் இணைந்த நாள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெருநாளாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

(அல்முஜ்தமா)

No comments:

Post a Comment