ஃபிரான்ஸ் நாட்டின் பிரபல கேலிச் சித்திர வாரப் பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரான ஹென்ரி ரோஸல் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘டுவேல் டுடோன்’ எனும் புனைபெயரைக் கொண்டுள்ள இவர், பத்திரிகை ஆசிரியர்சார்போன்னியா (சார்பு)மீது அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் (ஜனவரி 7) பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதலில் கொல்லப்பட்ட சார்பு உலக முஸ்லிம்களுக்கெதிரான கருத்துப் படங்களை அதிகமாக வெளியிட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. பிரிட்டன் டெய்லி டெலிகிராப் நாளிதழ் ஜனவரி 16இதழில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
1970ஆம் ஆண்டு வெளியான இந்தப் பத்திரிகையின் முதல் இதழைத் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றியவர் டுவேல் டுடோன். இவர் இந்த வாரம் வெளியான ‘லா நோஃபில்’ இடதுசாரிப் பத்திரிகையில் ஆசிரியர் சார்புவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். “இவர் ஒரு முரட்டுப் பிடிவாதக்காரர். ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வரம்புமீறி நடந்துகொள்ளத் தூண்ட வேண்டியதன் அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஹெப்டோ பத்திரிகையின் வழக்குரைஞர் ரேர்ஷார்ட் மல்கா கோபத்தோடு மறுப்புத் தெரிவித்துள்ளார். சார்பு குறித்து தன் கருத்துகளை டுடோன் வெளியிட்டிருந்த பத்திரிகையின் உரிமையாளர் ஒருவருக்கு எழுதியிருந்த கடிதத்தில் வழக்குரைஞர் தன்கோபத்தைக் கொட்டியிருந்தார். சார்பு இன்னும் அடக்கம்கூட செய்யப்படவில்லை; அதற்குள் சர்ச்சைக்குரிய இந்தக் கட்டுரைதான் இந்தப் பத்திரிகைக்குக் கிடைத்ததா? எனச் சாடியுள்ளார் வழக்குரைஞர்.
இதற்கு ‘லா நோஃபில்’ ஆசிரியர் தெரிவித்த மறுப்பில், “டுடோன் கட்டுரை கிடைத்தவுடன் நன்கு ஆய்வு செய்தபிறகே கருத்துச் சுதந்திரம் தொடர்பான இந்த இதழில் வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டது. அவர் ஒரு குழப்பவாதி என்றே வைத்துக்கொண்டாலும்அவரது குரல் வெளிவராமல் தடுக்கப்பட்டால், பதற்றம் ஏற்படும் என்று தெரிந்ததாலேயே வெளியிட்டோம். அதிலும் அவரது குரல் எங்கள் நீண்ட நாள் வாசகர் ஒருவரின் குரலாகும்” என்று பதிலடி கொடுத்தார்.
மேலும், ஹெப்டோ உடன் டுடோன் மாறுபட்ட கருத்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, ஹெப்டோ பத்திரிகையை ஒரு சியோனிஸ ஏஜெண்டுக்கு அதன் முன்னாள் ஆசிரியர் விற்றுவிட்டார். முஸ்லிம்களுக்கு எதிரானதாகவும் அதைமாற்றிவிட்டார் என டுடோன் குற்றம் சாட்டியிருந்தார் என்று லா நோஃபில் எழுதியுள்ளது.
(அலூகா)
Strategic Vision (போர்த் திறன்-ஒரு பார்வை) எனும் ஆய்வு நூல் ஒன்று 2012இல் நியூயார்க்கில் வெளியானது. ‘போர்த்திறனில் அமெரிக்காவும் சர்வதேச ஆற்றல் பிரச்சினைகளும்’ என்பது நூலின் முழுப் பெயர். நூலாசிரியர் Zbigniew Brzezinski போலந்துநாட்டிலிருந்து அமெரிக்கா குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜிம்மி கார்டர் காலத்தில் அமெரிக்க குடியரசுக் கட்சியின் சார்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வகித்தவர். அமெரிக்க அரசியல் தொடர்பாக ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள்எழுதியவர். பேசிக்போக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்புதிய நூல் 218 பக்கங்களைக் கொண்டது.
இந்நூலில் அமெரிக்காவின் அரசியல் எதிர்காலம், கிழக்கு நாடுகளின் வளர்ந்துவரும் செல்வாக்கு ஆகியவை குறித்து ஆழமாக அலசியுள்ளார் நூலாசிரியர். இப்புத்தகம் 5 தலைப்புகளில் அடங்குகிறது. 1. பின்னோக்கி நடக்கும் மேற்கு 2. அமெரிக்கக் கனவின்சரிவு 3. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்குப்பின் உலகம் சந்திக்கும் பயங்கரக் குழப்பம் 4. 2025-க்குப்பின் புதிய புவி அரசியல் சமன்பாடு 5. முடிவுரை – அமெரிக்காவின் இரண்டாம் பங்கு ஆகியவையே அத்தலைப்புகள்.
நான்கு அடிப்படை வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியே இப்புத்தகம். 1. மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாறிவரும் உலக ஆற்றலின் விநியோகத்தால் கிடைக்கும் பலன்கள் யாவை? 2. அமெரிக்காவிற்குள்ள சர்வதேச வலுவான ஆற்றல் ஏன் பின்னடைவைச்சந்திக்கும்? 3. அமெரிக்க முன்மாதிரி தோற்கும்போது எதிர்பார்க்கப்படும் புவி அரசியலின் முடிவுகள் எப்படி இருக்கும்? 4. 2025-க்குப் பிறகு அமெரிக்காவின் உலக அரசியல் நோக்கங்கள் என்னவாக இருப்பது நல்லது?
அமெரிக்காவின் தற்போதைய இராணுவ நடிவடிக்கைகளும் போர்த்திறன் சார்ந்த நிலைப்பாடுகளுமே அதன் பின்னடைவுக்குக் காரணங்களாக இருக்கப்போகின்றன என்கிறது நூல். 2025வரை உலக நாடுகளின் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கான பங்கு தொடரும்.ரஷியா ஆற்றலைத் தொடர்ந்து இழந்துவரும். 2025க்குப்பின் ஆசிய நாடுகளில் ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் செல்வாக்கு உலக அளவில் மேலோங்கும்.
(முஜ்தமா)
சர்வதேச அமைப்புகள், பொருளாதாரம், சுற்றுலா, மனித உரிமை, விளையாட்டு ஆகிய துறைகளுக்கான சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றில் உயர்ந்த பொறுப்புகளுக்கு இந்த ஆண்டு துருக்கியரே நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 16 சர்வதேசஅமைப்புகளில் முக்கியப் பதவிகள் துருக்கி நாட்டினரின் கைகளுக்கு வந்துள்ளன.
- G20. ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு 2015இல் துருக்கி வசம் வந்துள்ளது. இந்நாடுகளின் உற்பத்திகள் உலகம் முழுமைக்கும் சென்றடைவது குறிப்பிடத் தக்கது.
- B20. தொழில் கூட்டணி நாடுகளான பி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு, துருக்கியின் பங்குச் சந்தை மற்றும் வணிகக் குழுமங்களின் தலைவர் ரிஃப்அத் ஒக்லோவிடம் வருகிறது.
- D8. எட்டு வளரும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமான டி8 நிறுவனத்தின் பொறுப்பை துருக்கி ஏற்கிறது. ஈரான், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனிசியா, எகிப்து, நைஜீரியா, துருக்கி முதலான நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
- WAIPA. முதலீடுகளைக் கவரும் ஏஜன்சிகளின் சர்வதேச ஒன்றியமான ‘வைபா’வுக்கு, துருக்கி முதலீட்டு ஏஜன்சியின் தலைவர் நிர்வாகியாகிறார். இப்பொறுப்பை ஏற்கும் இவர் 2016 செப்டம்பர்வரை இப்பதவியில் இருப்பார். இதில் 175 உறுப்பினர்கள் உள்ளனர்.
- AEA. ஐரோப்பிய விமான நிறுவனங்களின் ஒன்றியமான ஏ.இ.ஏ. அமைப்பிற்கு, துருக்கி ஏர்லைன்ஸ் பொதுமேலாளர் தாமல் கோத்தில் பொறுப்பேற்கிறார். இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பை இவர் வகிப்பார்.
- IAEE. எரிசக்தி பொருளாதாரத்தின் சர்வதேச அமைப்பான ஐ.ஏ.இ.இ. மன்றத்தின் தலைவராக, துருக்கி எரிசக்தி பொருளாதார மையத்தின் தலைவர் கோர்ஹான் ஒக்லோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- நகரங்கள் மற்றும் ஒன்றியங்களின் நிர்வாக அமைப்பு. இதற்கு இஸ்தான்பூல் (துருக்கி தலைநகரம்) மேயர் 2016வரை நிர்வாகியாக இருக்கவுள்ளார்.
- ICAPS. சர்வதேச பிளாஸ்டிக் சர்ஜரி மன்றம். இதற்கு 2012 முதல் பேராசிரியர் ஒனூர் ஈரோல் தலைவராக இருந்துவருகிறார். இதில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
- ESOMAR. சந்தை ஆய்வுக்கான ஐரோப்பிய மன்ற மாநாடு. இதன் நிர்வாக அமைப்பில் துருக்கி மன்றம் கால் வைத்திருக்கிறது.
- ELFA. ஐரோப்பிய சட்டக் கல்லூரிகள் குழு. இக்குழுவிற்கு துருக்கியைச் சேர்ந்த ஹாலூக் காபலி ஒக்லு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- SKAL. சுற்றுலா மற்றும் பயணத் தொழிலாளர்களுக்கான சர்வதேச ஒன்றியம். இதற்கு துருக்கி தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தினைஸ் அனாபா தலைவராக நியமனமாகியுள்ளார்.
- IMF. சர்வதேச நிதியகம். துருக்கி கருவூல முன்னாள் ஆலோசகர் இந்த நிதியகத்திற்கு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- FIBA. சர்வதேச கூடைப்பந்து ஒன்றியம். தூர்காய் தமேரால் துருக்கியின் கூடைப்பந்து ஒன்றியத்தின் தலைவராக உள்ளார். இவரே இவ்வாண்டு ஐரோப்பிய கூடைப்பந்து பொது மன்றத்திற்குத் தலைவராகிறார்.
- ACI. சர்வதேச விமானநிலையங்கள் மன்றம். ஐரோப்பாவில் இம்மன்றத்தின் பிரதிநிதியாக சானீ ஷைனார் (துருக்கி) நியமிக்கப்பட்டுள்ளார். இம்மன்றத்தில் 174 நாடுகள் உறுப்பினர்கள்.
இவையன்றி, துருக்கியுடன் இணைந்து வேறுசில சர்வதேச நிறுவனங்கள் தம் திட்டங்களை உருவாக்கிவருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. அவையாவன: NAMET; AMAT; MISSAT; CIVETS; MINTS; TIMP.
(முஜ்தமா)
துருக்கி தலைநகர் இஸ்தான்பூலில் காண்லிகா பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது. துருக்கியின் ஐரோப்பிய பகுதியையும் ஆசியப் பகுதியையும் பிரிக்கின்ற 31 கி.மீ. நீளமுள்ள பாஸ்பொரஸ் நீரிணையில் (ஜலசந்தி)ஆசியா கரையில் இப்பள்ளிவாசல் அமையவிருக்கிறது. துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் உருதுகான் பள்ளிவாசல் கட்டுவதற்கான திட்டத்தைத் தீர்மானித்துள்ளார்.
தரைப் பகுதியில் பெரிய வசதிகளுடன் கட்டப்படவிருக்கும் இப்பள்ளிவாசலின் கட்டுமான பணிக்கு 150 மில்லியன் துருக்கி லீரா (56 மில்லியன் யூரோ) செலவு பிடிக்கும். துருக்கி குடியரசின் வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமான பள்ளிவாசலாகஅமையவிருக்கும் இதன் கட்டுமானப் பணிகளை பஹார் மீஸ்ராக், ஹாப்ரீ ஜோல் ஆகிய இருபெரும் பொறியாளர்கள் ஏற்கின்றனர். 3 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பள்ளிவாசல் எழுப்பப்படுகிறது.
இப்பள்ளிவாசலில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியான தளம், சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கான பெரிய மாடம் (Balcony), அருங்காட்சியகம், நூலகம், சுமார் 3500 கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி ஆகியன இருக்கும்.
இஸ்தான்பூல் நகரிலேயே உயரமான இடம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பெரும் பகுதிகளில் இருந்து பார்த்தால் தெரிகின்ற அளவுக்கு இது உயரமாக அமைகிறது. குறிப்பாக, பாங்கு மேடை துருக்கியிலேயே மிகவும் உயரமாக இருக்கப்போகிறது.
(அலூகா)
No comments:
Post a Comment