Sunday, February 01, 2015

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

உங்களுடன் நான் மனம்விட்டு... தொடர் - 08


தெ

ரிந்தவர்களைச் சந்திக்கும்போது குசலம் விசாரித்த கையோடு கேட்கும் முதல் கேள்வி, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” அல்லது உங்கள் வீட்டுக்காரர் என்ன செய்கிறார்?” என்பதாகத்தான் இருக்கும். அப்படி வினவும்போது யாரும் கோபித்துக்கொள்வதில்லை. அவரவர் பார்க்கும் வேலையைப் பற்றிச் சுருக்கமாகவோ விரிவாகவோ பதில் சொல்வதில் மகிழ்ச்சி அடைபவர்களே அதிகம்.

வேலை ஏதுமில்லாமல் இருப்பவர்கள்தான், தர்மசங்கடத்தோடு நெளிவார்கள். சற்றுத் தயங்கி சும்மாதான் இருக்கிறேன்என்று பதிலளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இந்த விசாரிப்பு, கேள்வி எல்லாம் ஓர் அக்கறையின்பேரில் பிறப்பதுதான். இன்ன வேலை செய்கிறேன் என்று சொன்னவுடன், இவரது வாழ்க்கைச் சக்கரம் சுமுகமாக சுழல்கிறது என்று அறிந்து, விசாரித்தவர் புளகாங்கிதம் அடைவார். அவரைப் பற்றிய உருப்படியான தகவல் கிடைத்த திருப்தி இவருக்கு.

சும்மா இருப்பதாகச் சொன்னவருக்கு, இவர் ஏதேனும் ஏற்பாடு செய்வதற்கும் வாய்ப்பு உண்டு. குறைந்தபட்சம் உருப்படியான யோசனையாவது தெரிவிக்கலாம். அறிமுகங்கள், கேட்டு நச்சரிப்பார்கள் என்பதற்காக வேண்டியாவது வேலையில்லா பட்டதாரி, முனைப்போடு வேலை தேடுவார். இதுவும் அவர்மீதான ஒரு வகை ஈடுபாடுதானே! சில பெரியவர்கள் கொஞ்சம் கூடுதலாகப் பேசிவிடக்கூடும். நல்ல வேலையில் இருப்பவர்கள் சுயபுராணம் பாடக்கூடும்! மிகச் சிலர் இளக்காரமாகப் பார்க்கக்கூடும்! இவையெல்லாமே நன்மைக்குத்தான் என்று பாசிடீவாக எடுத்துக்கொண்டால் உற்சாகம் குன்றாது.

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! பணி அல்லது வேலை என்பது மனிதனின் இருப்பைக் காட்டும் அடையாளம். இயக்கம்தான் ஜீவிதத்தின் அழகு. இயங்குவது உயிருள்ளவர்களின் குணம்; இயங்காமை இறந்துபோனவர்களின் குணம் - என்றொரு முதுமொழி உண்டு. நம்மைச் சார்ந்து வாழ்வோர், இறைவனுக்கு அடுத்து நம்மையே மலைபோல் நம்புகிறார்கள் இல்லையா? அவர்களை ஏமாற்றக் கூடாது. அனுமதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்து, நம்பியவர்களை வாழவைத்தாக வேண்டும்!

உணவுக்காகத் தன்னை நம்பியிருப்போரைப் பாழாக்குவது, ஒரு மனிதன் பாவி என்பதற்குப் போதுமான சான்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

இறக்கும்போதுகூட, வாரிசுகளைத் தன்னிறைவு பெற்றவர்களாகவே விட்டுச்செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் இப்படிச் சொன்னார்கள்:

நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட, தன்னிறைவு கொண்டவர்களாக அவர்களை விட்டுச்செல்வதே சிறந்ததாகும். (புகாரீ)


லக மக்களில் ஒரு பத்து விழுக்காடு மட்டுமே பரம்பரைச் சொத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிடும் வர்க்கத்தினர். இதுகூட அதிகம் என்றே நினைக்கிறேன். சொந்தத் தொழில் செய்வோர் -அவர்களும் உழைப்பாளிகள்தான்- ஒரு இருபது விழுக்காடு இருக்கலாம்! பாக்கியுள்ள 70 விழுக்காடு மக்கள் பிறரிடம் பணி செய்பவர்களே!

இவ்வகையில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பெரிய அல்லது சிறிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்... எனத் துப்புரவு தொழிலாளர் முதல் பெரிய கம்பெனியின் மேலாளர்வரை அனைவரும் வேலை செய்து சம்பாதிப்பவர்களே! அவரவர் வேலைக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு நூறிலிருந்து கோடிவரைகூட ஊதியம் பெறலாம். இவர்களில் தினக்கூலி, வாரக்கூலி, மாத ஊதியம், ஆண்டு ஊதியம் எனப் பலவகைச் சம்பளம் பெறுவோர் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாருமே உழைப்பாளர்கள் பட்டியலில் அடங்குவர். என்னைக் கேட்டால், உட்கார்ந்துகொண்டு வேளா வேளைக்குப் பல்சுவை உணவுகளை உண்பதைவிட, பணி செய்து, உழைத்து கிடைக்கும் ஊதியத்தில் உண்பதே சுவையானது என்பேன். இந்த வாழ்க்கையில் ஓர் எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஏற்றம் - இறக்கம், பாராட்டு - திட்டு, சுகம் - சோகம், உற்சாகம் - சடைவு... என எதிரெதிரான சுவைகளை வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்.

எப்போதும் ஒரே மாதிரியான ஏற்றத்திலேயே இருந்துகொண்டு, கீழே இறங்கி நடக்காமல், சேற்றை மிதிக்காமல், காலுறையிலேயே காலம் தள்ளுவதில் என்ன சுகம் உண்டு சொல்லுங்கள்! தூசு படிய வேண்டும்; பிறகு அதைத் துடைக்க வேண்டும். அழுக்காக வேண்டும்; பின்னர் அதைத் துவைக்க வேண்டும். விழ வேண்டும்; பின்னர் எழ வேண்டும். விழுந்ததில் பட்ட காயத்திற்கு மருந்திட வேண்டும். இதுதானய்யா வாழ்க்கை!

விழுந்தவன் எழும்போது, தோற்றவன் ஜெயிக்கும்போது, மூடிய கதவு திறக்கும்போது, இருள் அகன்று வெளிச்சம் வரும்போது, நோய் குணமாகி வீடு திரும்பும்போது, பயணம் முடிந்து ஊர்  திரும்பும்போது, இரவெல்லாம் படித்துத் தேர்வில் வெல்லும்போது... சுருங்கக்கூறின், துன்பத்திற்குப்பின் இன்பம் வரும்போது, ஒரு குதூகலம் பிறக்குமே! அதை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! அப்போது அந்த இன்பத்தின் சுவை மட்டுமல்ல; அருமையும் புரியும்; இறையருளின் பெருமை புரியும். நன்றியை நா தானாகவே உச்சரிக்கும். வாழ்க்கையின் இரகசியமே பொறுமையிலும் நன்றியிலும்தான் உண்டு. முந்தியது துன்பத்தில்; பிந்தியது இன்பத்தில்.

இதனால்தானோ! என்னவோ! நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்: ஒருவர் கைத்தொழில் செய்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் கைத்தொழில் (இரும்புக் கவசம்) செய்து உண்பவர்களாகவே இருந்தார்கள். (புகாரீ)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் சுயதொழில் செய்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே, நீங்கள் குளிக்கக் கூடாதா? என்று அவர்களிடம் கூறப்பட்டது. (புகாரீ)

தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் இந்த உலகம், அவர்களின் கடமைகள் குறித்து விழிப்புணர்வுகூட ஏற்படுத்துவது கிடையாது. ஏதோ தவறுகளெல்லாம் முதலாளி வர்க்கத்தின் மீதுதான்; தொழிலாளர்கள் எல்லாரும் சொக்கத் தங்கம் என்பதைப் போலவே உலகம் நடந்துகொள்கிறது. தொழிலாளர்களின் வியர்வை மதிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் இப்படி அறிவுறுத்தினார்கள்:

பணியாளர்கள் உங்கள் சகோதரர்கள். அவர்களை அல்லாஹ்தான் உங்கள் கரங்களில் வேலையாட்களாக ஆக்கியுள்ளான். ஆகவே, தம் சகோதரரைத் தமது அதிகாரத்தின்கீழ் வைத்திருப்பவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும்! தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணிவிக்கட்டும்! அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம்... (திர்மிதீ)


அதே நேரத்தில் வியர்வை வரும் அளவிற்குப் பணியாளரும் வேலை செய்ய வேண்டுமல்லவா? தொழிலாளர்கள் அல்லது பணியாளர்களில் எத்தனை பேர் தங்கள் கடமையை ஒழுங்காக, முழுமையாக, வாங்கும் சம்பளத்திற்குத் துரோகமில்லாமல் நிறைவேற்றுகிறார்கள்? சொல்லுங்கள்! ஊதிய உயர்வும் சலுகைகளும் கேட்பதில் இருக்கும் அக்கறையும் தீவிரமும் பணியைச் செம்மையாகச் செய்வதிலும் நிறுவனத்திற்கு வளம் சேர்ப்பதிலும் காட்டுகிறார்களா பணியாளர்கள்? வேலையில் கவனமாக இருப்பது தர்மம் மட்டுமல்ல; இறைவனிடம் சிறப்பான நன்மையைப் பெற்றுத்தரக்கூடியதுமாகும்.

தன் இறைவனை நல்ல முறையில் வழிபட்டு, (அதே நேரத்தில்) தன் எசமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி, அவருக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துகொண்டு) அவருக்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்ற பணியாளருக்கு (அல்லது அடிமைக்கு0 இரண்டு நன்மைகள் கிடைக்கும்என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மறக்கவே கூடாது. (புகாரீ)


கோ
ளாறு எங்கே ஆரம்பிக்கின்றது தெரியுமா? நேரம் தவறாமை (Punctuality) எத்தனை பேரிடம் இருக்கிறது? நேரம் தவறாமை என்பது, பணி செய்யும் இடத்தில் மட்டுமல்ல; குடும்பத்திலும் சமூகத்திலும்கூட ஒரு கௌரவத்தை அளிக்கும்; கேரக்டரையே மாற்றிவிடும்; “இவர் எதிலும் சரியாக நடந்துகொள்பவர்என்ற இமேஜை சுற்றுப்புறங்களில் உண்டாக்கும்.

நான் ஆசிரியர் பணியில் சேர்ந்த காலத்திலுருந்து மொழிபெயர்ப்புப் பணியில் இருந்துவரும் இன்றுவரை -40 ஆண்டுகளுக்கம் மேலாக- கால் மணி நேரம் முன்பே பணியாற்றும் இடத்திற்குள் நுழைந்துவிடுவேன். அதற்கு ஏற்றவாறே காலைக் கடன்கள், உணவு, புறப்பாடு ஆகிய முன்தயாரிப்புகளை அமைத்துக்கொள்வேன். தாமதமாகச் சென்றால், கேட்பதற்கு ஆளே இல்லாத நிலையில்கூட, என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டு, சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வேன்.

இதனால் வீட்டின் நிலையும் நமக்கேற்ப மாற வேண்டிய கட்டாயம். நம்மைப் பார்த்து பிள்ளைகளும் பள்ளி, கல்லூரி, தொழுகை, மதரசா, அலுவலகம்... என எங்கு செல்வதானாலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஹள்ரத் வந்துவிட்டார்; நேரம் 7.45 என்று மதரசா நாட்களிலும் சார் வந்துவிட்டார்; மணி 9.45 என்று அலுவலகத்திலும் சொல்லாமல் சொல்கின்ற நிலையைக் காண முடிந்தது; முடிகிறது.

எதையும் நேரத்தோடு செய்வதென்பது, பணியில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் ஒரு பிடிப்பை, உற்சாகத்தைத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களை நோக்கிய பார்வையும் மதிப்பீடும் அணுகுமுறையும் மதிப்பு கலந்தவையாக மாறிவிடும். செக்யூரிட்டி முதல் செக்ரட்ரி வரை அனைவரின் கண்களிலும் உங்களைப் பற்றிய உயர்வு தெரியும். தொலைபேசியில் தொடர்புகொள்வதானாலும் நேரில் சந்திப்பதானாலும் நம்முடைய இந்தப் பழக்கம் நேரத்தை அனுசரிக்க மற்றவர்களைத் தானாகவே தூண்டும்.

டுத்து பணியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் சொந்த விடுப்பு எடுப்பது. பணியாற்றும் இடத்தில், ஆண்டுக்கு இத்தனை நாட்கள் சொந்த (கேசுவல்) விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதியிருக்கும். அதற்காக ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டார்கள். சம்பளத்துடன் கூடிய இந்த விடுப்பைக்கூட, தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலன்றி பயன்படுத்தாமல் இருப்பது, உங்கள்மீதான மதிப்பை உயர்த்தும்.

சில நிறுவனங்களில், இந்த விடுப்பில் எத்தனை நாட்கள் பயன்படுத்தவில்லையோ அத்தனை நாட்களுக்கான ஊதியத்தைக் கூடுதலாக ஆண்டின் இறுதியில் கொடுப்பதுண்டு. அது ஒரு இலாபம். இதைவிட, “தேவையில்லாமல் லீவு போடமாட்டார்என்ற நற்பெயர் நிறுவனத்தில் பதிவாகிவிடும். இது உங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

எல்லா விடுமுறையும் விடுப்பும்போக, அளவுக்கதிகமாக லீவு எடுப்பதென்பது, நிர்வாகத்தால் சகிக்க முடியாத குற்றமாகப் பார்க்கப்படும். அவசரத்திற்கு எடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனால், அதையே வழக்கமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. அவ்வாறு வரம்பு மீறுவதால் சம்பளப் பிடிப்பு, கெட்ட பெயர், ஊதாரியாக நண்பர்களுடன் சுற்றுவது போன்ற கெடுதிகள் நேரலாம்.

வேலையில் காட்ட வேண்டிய கவனம், தொழிலில் இருக்க வேண்டிய பிடிப்பு - இவையெல்லாம் அற்றுப்போய், வேலைக்கே வேட்டுவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


ணியிடத்தில் நடந்துகொள்ளும் முறை, நாம் கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம். உங்களை நம்பி எந்தப் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ அதில் முழுமையாக நீங்கள் மூழ்கிவிட வேண்டும். அதற்கு இடையூறாக அமையும் - அரட்டை, பத்திரிகை வாசித்தல், மின்னூடகம், தூக்கம் போன்ற - எதையும் பணி நேரத்தில் வைத்துக்கொள்ளலாகாது.

மதரசா வாழ்க்கையில், நிர்வாகம் குறித்திருந்த பாடத்திட்டத்தை உரிய காலத்திற்கு முன்பே முடித்துத்தான் பழக்கம் எனக்கு. சில வேளைகளில் முதல்வரோ நிர்வாகியோ நம்ப முடியாமல், எப்படி அதற்குள் பாடத் திட்டத்தை முடிக்க முடிந்தது? என்று வியப்போடு கேட்டிருக்கிறார்கள். வகுப்பில் வெளி விவகாரங்களைத் தொடாமல், பாடத்தை மட்டும் நடத்தினால் முடியும் என்று சொன்னதுண்டு.

ஒருமுறை, பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான பாடத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குமுன்பே பூர்த்தி செய்துவிட்டு, பரப்புரைக்கு உதவும் பயனுள்ள குறிப்புகளை மாணவர்களுக்கு அளித்தேன். அதற்காகவும் என்மீது விசாரணை நடந்தது.

தற்போது பார்க்கும் மொழிபெயர்ப்பு மேலாய்வுப் பணி, ஒரு கூட்டு முயற்சியாகும். அதிலும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் மொழிபெயர்ப்பு. இது நெருப்பில் நடப்பதை ஒத்தது. தவறு நேர்ந்துவிடக் கூடாது என்ற அச்ச உணர்வோடு மேற்கொள்ள வேண்டிய புனிதப் பணி. ஓடுகிற ஓட்டத்தில் இதைக் கையாள்வதற்கோ ஒருவர் மட்டும் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, மாற்றுச் சிந்தனைக்கு வாய்ப்பே இல்லாமல் அந்த நேரத்தில் உதித்ததைக் கொட்டி நிரப்பிவிட்டுப்போவதற்கோ இது சிறுகதையும் இல்லை; நாவலும் இல்லை.

ஒன்றுக்கு நான்கு தடவைத் திரும்பத் திரும்பக் கவனத்தோடு கையாள வேண்டிய உன்னதப் பணி. அப்படியெல்லாம் பார்த்தும்கூடச் சிற்சில தவறுகள் - பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் - நேர்ந்துவிடுவதுண்டு. சுட்டிக்காட்டப்பட்டு அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்தியும் வருகிறோம்.

ன் பணிக்கு உகந்த ஊதியம் எனக்குக் தரப்படுவதில்லை என்று பணியாளர்கள் சிலர் அங்கலாய்ப்பதுண்டு. உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதையே காரணமாக வைத்து, ஏற்றுக்கொண்ட பணியில் சுணக்கம் காட்டுவதோ குளறுபடி செய்வதோ தர்மமாகாது. காரணம், இந்த ஊதியத்திற்குத்தான் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் போட்டு பணியில் சேர்ந்துள்ளீர்கள். ஒப்பந்த மீறல், வாக்குமீறல், நம்பிக்கைத் துரோகம் ஆகியவை எல்லாம் மார்க்கத்தில் பெருங்குற்றங்களாகும் என்பது நினைவில் இருக்க வேண்டும்.

எல்லா ஊழியர்களையும்விட, அரசாங்க ஊழியர்களும் அதிகாரிகளும் செய்கின்ற எல்லை மீறல்கள்தான் பொறுத்துக்கொள்ள முடியாதவை. இந்தியாவில் - தூய்மை (?) இந்தியாவில்- துப்புரவுப் பணி முதல் IAS பணிவரை கடமையைச் செய்வதற்குக் கையூட்டுப்பெறல், பொதுமக்களைக் கேவலமாக நடத்துதல், கேள்வி கேட்போரை அலையவிடுதல்... என இவர்களின் கொடுமைகளுக்கு அளவே இல்லை. உங்கள் பணியைச் செய்யத்தானே அரசாங்கம் சம்பளமும் சலுகையும் அளிக்கிறது; பிறகு எதற்காகக் கையூட்டு என்று கேட்டுப்பாருங்கள்! உங்கள் ஆவணம் அவரது மேஜையிலிருந்து ஓர் எட்டுகூட எடுத்து வைக்காது.

இந்தியா இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாமல் இருப்பதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள்தான் அடிப்படைக் காரணம் என்பதை மனசாட்சி இருந்தால் அவர்களே மறுக்கமாட்டார்கள். நான் மட்டும் நேர்மையாக இருந்து என்ன புண்ணியம்?” என்று எல்லாருமே சொல்லிக்கொண்டு, ஊழலில் திளைத்து மூழ்கிக் குளிக்கிறார்கள். முங்கிக் குளித்தால் குளிர்விட்டுப்போகும்தானே! கடவுள்தான் சாமானியர்களைக் காப்பாற்ற வேண்டும்!

, கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இறைவனுக்கு, அல்லது மனசாட்சிக்குப் பயந்து, வாங்கும் ஊதியத்திற்கு நியாயமாக ஊழியர்கள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். அது இல்லாமல், வேலையின் மெருகையும் ஊதியத்தின் கனத்தையும் சொல்லிப் பெருமைப்படுவதில் அர்த்தமில்லை.


தமிழகத்தில் அறிஞர் அண்ணா, காயிதே மில்லத் போன்ற அரசியல்வாதிகள் வாழத்தான் செய்தார்கள். இன்றைக்கும் பழ. கருப்பையா போன்றவர்கள் விரும்பும் கருத்தைச் சொல்ல முடியாமல் அவதிப்படுவது தெரிகிறது. சகாயம் போன்ற நல்லவர்களும் அதிகாரிகளில் இல்லாமலில்லை. பேராசிரியர், K.M. காதர் மைதீன் போன்றவர்கள், ‘அரசியலில் பிழைக்கத் தெரியாதவர்கள்என்ற பெயர் எடுத்தவர்கள்தான். பேராசிரியர், M.H. ஜவாஹிருல்லாஹ் போன்ற, 10 ரூபாய்கூட லஞ்சம் பெறாத சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கவே செய்கிறார்கள். இவர்களெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாக வெளியே தெரிவதில்லை.

No comments:

Post a Comment