Friday, September 26, 2014

உட்பூசல்களால் உருக்குலையும் உம்மத்

. முஹம்மது கான் பாகவி

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஒருவருக்கொருவர் சச்சரவு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் தைரியமிழந்துவிடுவீர்கள்; உங்களது வலிமை போய்விடும். பொறுமையோடு இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (8:46) எனத் திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இந்த அருள் வசனத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துப்பாருங்கள். இவ்வசனத்திற்கு, பிரபல விரிவுரையாளர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அளித்துள்ள விளக்கத்தை இனி படியுங்கள்:

முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்யலாகாது. அதனால் அவர்கள் கருத்துவேறுபாடு கொள்ள நேரிடும். அதுவே அவர்களின் ஏமாற்றத்திற்கும் தோல்விக்கும் காரணமாகிவிடும். “உங்களது வலிமை போய்விடும்” என்று இதையே இவ்வசனம் குறிப்பிடுகின்றது. அதாவது உங்கள் ஆற்றலும் வேகமும் குன்றி, நீங்கள் கண்டுள்ள வளர்ச்சி தடைபட்டுவிடும்.

பொற்காலம்


நபித்தோழர்கள் இந்த இறைக்கட்டளைக்கு ஏற்பவே வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் அன்புக்குரிய அவர்கள் வீரத்தில் சிறந்து விளங்கினார்கள். அதே நேரத்தில், நாடுகளை மட்டுமல்ல; எண்ணற்ற மக்களின் இதயங்களை வென்றார்கள். அவர்கள் வெற்றி கொண்ட நாடுகளின் படைபலத்துடன் ஒப்பிடும்போது, அந்த நபித்தோழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அப்படியிருந்தும் முப்பது ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே கிழக்கிலும் மேற்கிலும் இஸ்லாமிய அரசுகள் விரிவடைந்தன. நபி (ஸல்) அவர்கள் இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன், யமன் (ஏமன்) ஆகிய பகுதிகள் முஸ்லிம்களின் ஆளுமையின் கீழ் வந்துவிட்டன.

முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்தில் பாரசீகத்தின சில பகுதிகள், ஷாமின் (சிரியா) சில பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டன. இரண்டாம் கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியில், முழு ஷாம், எகிப்து, பாரசீகத்தின் பெரும் பகுதி வீழ்ந்தன. அன்றைய இருபெரும் வல்லரசுகளான பாரசீகமும் பைஸாந்தியாவும் நபிகளாரின் மறைவுக்குப்பின் 12 ஆண்டுகளில் முஸ்லிம்களிடம் சரணடைந்தன.

உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சியில் மேற்கு நாடுகளும் வெற்றிகொள்ளப்பட்டன. தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலுசியா, சைப்ரஸ், மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள லிபியா, செப்டா ஆகியவையும் வீழ்ந்தன. சீனாவின் எல்லைவரை வெற்றி தொடர்ந்தது. இராக் மற்றும் ஈரானின் பல நகரங்களும் வெற்றி கொள்ளப்பட்டன. (தஃப்சீர் இப்னு கஸீர்)

வீழ்ச்சியின் தொடக்கம்


அல்லாஹ் சொன்னதைச் செய்தான். ஆனால், காலம் செல்லச் செல்ல, முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரத்தை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்; இறையை மறந்தார்கள்; இஸ்லாத்தின் பெயரை மட்டும் உச்சரித்தார்கள். பதவிக்காக ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தார்கள். அந்நியனுக்கு நம்மவரையே காட்டிக்கொடுத்தார்கள். அங்கே முஸ்லிம்களின் வீழ்ச்சி தொடங்கியது.

அப்படியிருந்தும் இன்று 82 முஸ்லிம் நாடுகள் இருப்பதாக விக்கிபீடியா கணக்கெடுத்துள்ளது. ஆசியாவில்-46; ஆப்பிரிக்காவில்-30; ஐரோப்பாவில்-4; அமெரிக்காவில்-2 என மொத்தம் 82 முஸ்லிம் நாடுகள் உள்ளன. மற்ற நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 17 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இன்று உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 162 கோடியாகும். அதாவது உலக மக்கட்தொகையில் கால்வாசிப்பேர் முஸ்லிம்கள்.

இருந்தும், அரசியல், அதிகாரம், அறிவியல், இராணுவம், ஆயுதம், பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தில் முஸ்லிம்களோ முஸ்லிம் நாடுகளோ இல்லை. எல்லாவற்றையும்விட, இருக்கும் வளங்களை சண்டைபோட்டே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மாற்றானுக்கு விலைபோய், சொந்தச் சகோதரனையே கொன்று குவிக்கிறார்கள்.

மேற்குலகின் ஆயுதப்பசிக்கும் வளங்களைச் சுரண்டும் சூழ்ச்சிக்கும் இரையாகி, பணக்காரஎண்ணெய் வளமிக்க- மத்திய கிழக்கு நாடுகள் தங்களை அறியாமலேயே ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மாறிவருகிறார்கள். உலகின் பார்வையில் மதிப்பிழந்து, அதிகாரமிழந்து காட்சியளிக்கிறார்கள். ‘இப்படி இருக்கக் கூடாதுஎன்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

காரணம் என்ன?


இதற்கான காரணங்களை ஆராயும்போது பட்டியல் நீள்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், ஆரம்பக் கால முஸ்லிம்களின் வலுவான ஈமான் இன்றைய முஸ்லிம் தலைவர்களிடம் இல்லை. சுன்னத்தான வாழ்க்கை அருகிப்போனது. அந்நியக் கலாசாரத்திற்கு அடிமைகளாகிவிட்டனர். அறிவியல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, உற்பத்தி என எந்த நவீன வளர்ச்சியும் கிடையாது. ஆயுதங்கள் உள்பட, அடுத்தவரின் தயாரிப்புகளை அனுபவிக்கும் முதல் வாடிக்கையாளர்களாக விளங்கும் அவர்கள், நாம் ஏன் தயாரிக்கக் கூடாது என யோசிப்பதே இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, உலக அளவில் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம், அவர்களிடையே உள்ள உட்பூசல்கள்தான். அந்த உட்பூசல்களிலும் பிரதானமானது என்று கொள்கை, கோட்பாடு, மஸ்அலா ஆகிய பூசல்களைத்தான் சொல்ல வேண்டியுள்ளது. இவை இனம், சாதி போன்ற பிறவிப் பூசல்கள் அல்ல; கருத்தியல் அல்லது தத்துவ ரீதியிலானவைதான்.

ஷியா-சன்னி


எல்லைமீறி அலீ (ரலி) அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இரு பெரும் தலைவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரையும் ஆயிஷா (ரலி) போன்ற அன்னையரையும் தாழ்வாகக் கருதும் பிரிவினரே ஷியாக்கள் எனப்படுவோர். ஷியாக்களுக்கும்சன்னிகளுக்கும் இடையிலான மோதலே இன்று உலகளவில் பேசப்படுகிறது. ஷியாக்களிலும் ஸைதிகள்-இஸ்மாயிலிகள் இடையே கருத்து மோதல். போரா ஷியாக்கள்-மற்ற ஷியாக்கள் இடையே கருத்து வேறுபாடு.


சன்னி முஸ்லிம்களில் சலஃபிகள் சலஃபி அல்லாதோர் இடையே கருத்து வேறுபாடு. சலஃபிகள் இக்வான்களிடையே அரசியல் கருத்து மோதல். இந்தியாவில் தேவ்பந்தி -ப ரேலவி கருத்து வேறுபாடு; முகல்லித்-ஃகைரு முகல்லித் கருத்து மோதல். 
தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்-சுன்னத் வல்ஜமாஅத் கருத்து மோதல்; தவ்ஹீத் ஜமாஅத்களிலும் தவ்ஹீத்-ஜாக் இடையே கருத்து வேறுபாடு.

இன்று இராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கப் போர் விமானங்கள்ஆளில்லா விமானங்கள்- முஸ்லிம்களை- அவர்களில் சன்னிகளும் உள்ளனர்; ஷியாக்களும் உள்ளனர்- தாக்கி அழிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? ஷியாக்களின் ஆட்சியை சன்னிகளோ, சன்னிகளின் ஆட்சியை ஷியாக்களோ ஏற்கவில்லை என்பதுதான்.

ஈரானை அமெரிக்கா தாக்க வேண்டும் என வளைகுடா அரபு நாடுகள் எதிர்பார்ப்பதற்கும் வளைகுடா நாடுகளைத் தாக்கினால் நல்லது என ஈரான் ஆசைப்படுவதற்கும் இதுதான் காரணம்!

ஆடுகள் இரண்டு முட்டி மோதிக்கொண்டிருக்கஇரண்டும் ஒரே இனம்- நரிக்குக் கொண்டாட்டம்! கூட்டத்தைவிட்டுப் பிரிந்து தனியாக ஒரு வரிக்குதிரை மேய்ந்துகொண்டிருக்க, வேங்கைக்குக் கொண்டாட்டம்! இல்லையா?

அழிவது என்னவோ இரு பக்கமும் முஸ்லிம் உயிர்கள்! பற்றி எரிவது என்னவோ இரு பக்கமும் முஸ்லிம் எண்ணைக் கிணறுகள்! மத்தியஸ்தம் செய்துவைக்கிறேன்; அல்லது சிறுபான்மைக்கு உதவுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரண்டு பக்கமும் மனித இரத்தத்தைக் குடித்து, இரத்தனங்களையும் கொள்ளையடிப்பது இஸ்ரேலும் அமெரிக்காவும்!

நம் குழந்தைக்ள் அநாதைகளாய், பெண்கள் விதவைகளாய், முதியவர்கள் ஆதரவற்றவர்களாய், இளவல்கள் சடலங்களாய், சொத்துகள் கள்வர்களின் உடைமைகளாய், கன்னியர்கள் காமுகர்களின் வேட்டைகளாய்எத்தனை காலத்திற்கு இந்தக் கொடுமைகளைக் காணப்போகிறோம்!

வேற்றுமையில் ஒற்றுமை


இறைவன், அல்லாஹ் ஒருவனே! வேதம், திருக்குர்ஆனே! இறைத்தூதர், முஹம்மத் (ஸல்) அவர்களே! தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகியவை அடிப்படைக் கடமைகளே! மறுமை உண்டு; அங்கே விசாரணை உண்டு; சொர்க்கம், நரகம் உண்டு” – இந்தக் கோட்பாடுகளில் இன்றைய உலக முஸ்லிம்களில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து உண்டா? இல்லவே இல்லை.

மற்றக் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்றிணைந்து ஒரே திசைநோக்கி நாம் ஏன் நகரக் கூடாது? அவரவர் தம் கருத்தில் இருந்துவிட்டுப் போகட்டும்! யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி மாற்றிவிட முடியாது. மாற்றம் என்பது இயல்பாகவும் மனம் ஒப்பியும் பிறக்க வேண்டும். இல்லையேல், அந்த மாற்றமும் வந்த வேகத்தில் மாறிவிடும்.

கருத்து வேறுபாடுஎன்ற வேற்றுமைக்கு மத்தியில், பொதுவான-ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கின்ற- விஷயங்களில் ஒற்றுமை ஏன் காணக் கூடாது?

இறைமறுப்பாளர்களுடனும் இணைவைப்பாளர்களுடனும் சிநேகம் பாராட்டும் நம்மவர், ‘கலிமாவை ஏற்றுள்ளமாற்றுக் கருத்து கொண்ட- முஸ்லிமுடன் ஏன் அன்பு காட்டக் கூடாது? பல கட்டங்களில்பிடித்தோ பிடிக்காமலோ- எதிரியின் கரத்தைக்கூடப் பற்றும் நாம், சகோதர முஸ்லிமுடன் ஏன் இன்முகம் காட்டக் கூடாது? வணக்கம் தெரிவிக்கும் மாற்றாரிடம் முகம் மலரும் நீங்கள், சலாம் சொல்லும் முஸ்லிமுக்குப் பதில் சலாம் ஏன் சொல்லக் கூடாது?

அரங்கத்தில் பேசுவதை அம்பலத்தில்...


உங்கள் கருத்தை உங்கள் தலத்தில் எவ்வளவு உரக்கப் பேசினாலும் சமுதாயத்திற்குக் கேடில்லை. பொது மேடைகளில், பொது ஊடகங்களில் நம் கருத்து வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சிப்பதும் இஸ்லாத்திலிருந்தே வெளியேற்றும் தீர்ப்பு வழங்குவதும் பொதுப் பார்வையாளரை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா?

இந்நிலையைக் காணும் முஸ்லிமல்லாதோர், முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இஸ்லாத்தின் மீது அவர்களுக்குத் தப்பான எண்ணம்தானே தோன்றும்? அரங்கத்திற்குள் பேச வேண்டியதை அம்பலத்தில் விவாதிப்பது நியாயமா? அதுவும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது என்ன நாகரிகம்?

ஷியா முஸ்லிம்களும் சன்னி முஸ்லிம்களும் கலந்து வாழும் ஒரு நாட்டில் இரு சாராரின் தலைவர்களும் அமர்ந்து பேசி, குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி, ஏன் ஆட்சியமைக்கக் கூடாது? அவ்வாறே, வேறுபட்ட கருத்து கொண்ட முஸ்லிம் குழுக்கள் வாழும் இந்தியா, எகிப்து போன்ற நாடுகளில், தன்முனைப்பு பாராமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒன்றாகச் சேர்ந்து பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வு காணக் கூடாது?



ஆக, எதிரிகளின் வேலையைச் சுலபமாக்கிவிடக் கூடாது. நாமும் சீரழிந்து நம் சந்ததிகளையும் சீரழித்துவிடக் கூடாது. அல்லாஹ் கூறுவதைப் போன்று, நீங்கள் அனைவரும் (ஒன்றுசேர்ந்து) அல்லாஹ்வின் (குர்ஆன் எனும்) கயிற்றைப் பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்துவிடாதீர்கள் (3:103) என வாஞ்சையோடு கேட்டுக்கொள்வோம்.


Monday, September 22, 2014

சர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)


நியூயார்க்கில்ஹலால்இறைச்சிக்கூடம்


மூ
ன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!

இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.

இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயாஉணவு நீதி இயக்கம்என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

ஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களுக்கானஆதரவும் எதிர்ப்பும்


மெரிக்காவின் கருத்துக் கணிப்பு நிறுவனமானபியூஅண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய மக்களிலேயே ஃபிரான்ஸ் மக்கள்தான் அதிகமாக முஸ்லிம்கள்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருப்பதாகவும் அதிக வெறுப்பைக் காட்டுவதில் இத்தாலியர்தான் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தாலியர்களில் 63 விழுக்காட்டினர் முஸ்லிம்களுடன் பழகுவதை விரும்புவதில்லை; முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள். கிரீஸ் நாட்டில் 53 விழுக்காடு, போலந்தில் 50 விழுக்காடு, ஸ்பெய்னில் 46 விழுக்காடு, ஜெர்மனியில் 33 விழுக்காடு மக்கள் இவ்வாறு எதிர்மறையினராக உள்ளனர்.

ஆனால், ஃபிரான்ஸ் மக்களில் 72 விழுக்காட்டினர் முஸ்லிம்களுடன் நேர்மறை அணுகுமுறை கொண்டுள்ளனர். பிரிட்டனில் 64 விழுக்காடு, ஜெர்மனியில் 58 விழுக்காடு மக்களும் இவ்வாறு நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் இடதுசாரிகளே முஸ்லிம்களுடன் சுமுகமான அணுகுமுறையை மேற்கொண்டுவருகின்றனர் என இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

முஸ்லிம்களின் பெருநாள்களுக்கும்பொது விடுமுறை கோரி கையெழுத்து இயக்கம்


பி
ரிட்டனில் முஸ்லிம்களின் பெருநாட்கள், இந்துக்களின் தீபாளி பண்டிகை ஆகியவற்றுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கக்கோரி இதுவரை 1,16,000 பேர் கெயெழுத்திட்டுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில இந்தக் கையெழுத்து வேட்டை நடந்துள்ளது. பிரிட்டிஷ் பிரஜையான ஜான்தாமேஸே இந்தக் கருத்துக் கணிப்புக்கு ஏற்பாடு செய்தார்.

பிரிட்டனின் பொதுச் சபையில் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமானால், பொதுக் கருத்துக்கணிப்பில் ஒரு லட்சம்பேர் முடிவை ஆதரித்திருக்க வேண்டும். அதைவிட அதிகமானோர் ஆதரித்திருப்பதால் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

புருண்டியில் 120 பேர்இஸ்லாத்தில் இணைந்தனர்


ப்பிரிக்க நாடான புருண்டியில் 120 பேர் இஸ்லாத்தல் இணைந்தனர். இவர்கள் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டவர்கள். சஊதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் பிரசாரகர்கள் இவர்களுக்கு வகுப்பு நடத்தினர். இந்த மையத்தில் இஸ்லாத்தைத் தழுவிய 23ஆவது குழுவாகும் இது.


இந்த இஸ்லாமியதஅவாமையம் திறக்கப்பட்டதிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று, பெரும் வெற்றி அடைந்துவருகிறது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான புருண்டி மக்கள் இதுவரை இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். மையத்தில் இதற்குமுன் நடந்த 22 வகுப்புகளில் 1117 புதிய முஸ்லிம்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு வகுப்பு என்பது 60 நாட்களைக் கொண்டது.

அமெரிக்காவில் வேகமாகப் பரவும்இரண்டாவது மார்க்கம்


மெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புதிதாக நடத்தப்பட்டது. அதன் முடிவு குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையாவது: அமெரிக்காவின் 20 மாநிலங்களில் மிக வேகமாகப் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் இரண்டாம் இடத்தில் உள்ளது. குறிப்பாக, மத்திய அமெரிக்காவிலும் தென்அமெரிக்காவிலும் இஸ்லாம் அதிகமாகப் பரவியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் 8 மில்லியன் (80 லட்சம்) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களில் அமெரிக்க முஸ்லிம்கள், குடியேறிய முஸ்லிம்கள், அகதிகள் ஆகியோர் அடங்குவர்.


கிரிமியாவில் இஸ்லாமியப் பல்கலை

ஷியாவில் உள்ள கிரிமியா தீபகற்பத்தில் 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே இஸ்லாம் கால்பதித்துவிட்டது. கிரிமியாவில் உள்ள தாதாரியர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ரஷியாவின் ஐரோப்பிய பகுதி ஆன்மிக அமைப்பின் தலைவர் திம்யர் ஹழ்ரத் முஹம்மத் யனோஃப் ரஷிய அதிபருக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கிரிமியா தீபகற்பத்தில் இஸ்லாமியப் பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும் என்பதே அக்கோரிக்கை.

இந்த ஆன்மிக அமைப்பின் துணைத் தலைவர் கூறியதாவது: ரஷியாவின் தலைமை முஃப்தி எங்கள் அமைப்பின் தலைவரை அண்மையில் சந்தித்தபோதுதான் இந்தச் சிந்தனை உருவானது. தீபகற்பத்தில் ஆன்மிகக் கல்வியும் சட்டக் கல்வியும் பரவலாகப் போதிக்கப்படவும் மார்க்க நூல்கள் வெளியிடவும் உதவ வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக இஸ்லாமியப் பல்கலைக் கழகம் உருவாக்க விழைகிறோம்.

நார்வே தலைநகரில் முதலாவதுமுஸ்லிம் பள்ளிக்கூடம்


நா
ர்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் முஸ்லிம்களுக்கெனத் தனியான துவக்கப்பள்ளி ஒன்று உருவாக்கும் திட்டத்திற்கு அந்நாட்டு கல்வி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். ‘முஸ்லிம் அன்னையர்எனும் அமைப்பே இதற்கான கோரிக்கையை முன்வைத்தது.

மாணவர்கள் இஸ்லாமியஅரபிய கலாசாரத்தையும் மார்க்கத்தையும் இனி கற்றுக்கொள்வார்கள். இஸ்லாமியத் தத்துவங்கள், பண்பாடுகள் ஆகியவற்றையும் பயில்கின்ற வாய்ப்பைப் பெறுகின்றனர். தலைநகரின் கிழக்கே அமைந்துள்ள இப்பள்ளியில் 200 மாணவர்கள்வரை பயிலலாம்- என்றுமுஸ்லிம் அன்னையர்அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இத்திட்டத்திற்கு நார்வேயின் சில அரசியல் கட்சிகள் –குறிப்பாகத் தொழிலாளர் கட்சி- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமய அடிப்படையில் மக்களை ஒன்றுகூட்டுவதானது, நார்வே சமூகத்தின் ஐக்கியத்தைப் பலவீனப்படுத்திவிடும்; ஐக்கியத்திற்காக அதிகமான செல்வங்களைச் செலவழித்துவரும் நாடு, இனி தனித்தனியாகப் பிரிந்து அச்செல்வங்களைச் செலவிடவேண்டிவரும் என அக்கட்சிகள் தெரிவிக்கின்றன.