- மௌலவி, அ. முஹம்மது கான்
பாகவி
அறியாமைக் காலச் சிந்தனைகள் (அல்ஜாஹிலிய்யா) என்பது விரிவான பொருள் கொண்டதாகும். பலரும் புரிந்திருப்பதைப் போன்று, இறைமறுப்பு (குஃப்ர்), இணைவைப்பு (ஷிர்க்) ஆகிய கொள்கைகள் மட்டுமன்று. இறைக்கட்டளைக்கு எதிரான அனைத்துமே அறியாமைதான்; ஜாஹிலிய்யாதான்.
இதனாலேயே, இறைமறைக்கும் நபிவழிக்கும்
முரண்படுகின்ற சிந்தனைகள் அனைத்தும் ‘ஜாஹிலிய்யா’ என இலக்கணம் கூறுவர். சமயம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கலாசாரம் ஆகிய எந்தத் துறையாகவும் அது இருக்கலாம்.
இறைத்தூர் (ஸல்) அவர்களுக்கு
முன்பு இருந்தவை எல்லாம் ‘ஜாஹிலிய்யா’ என்பர் சிலர்.
எப்படியானாலும், ‘அறியாமை’ இன்னதெனப் புரிந்தால்தான், ‘அறிவு’ இன்னதெனத் துல்லியமாக
அறிய முடியும். இஸ்லாம் தெளிந்த அறிவு; அதன் கொள்கைகளும் நெறிகளும் இயற்கையானவை. இஸ்லாத்தில் அறியாமைக்கு அறவே இடமில்லை.
இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அறியாமைக் காலச் சிந்தனைகளை (ஜாஹிலிய்யா) அறியாதவர் இஸ்லாத்தில் தோன்றும்போது, இஸ்லாத்தின் பிடிகள் ஒவ்வோன்றாகத் தளர்ந்துவிடும்; தகர்ந்துபோகும். (அல்ஃபவ்ஸான்)
தீர்ப்பில் அறியாமை உண்டு. அல்லாஹ் கூறுகின்றான்: அறியாமைக் காலத் தீர்ப்பையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்தாருக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பு வழங்குபவர் யார்? (5:50)
கலாசாரத்தில் அறியாமை உண்டு. நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்: உங்கள் இல்லங்களிலேயே நீங்கள் தங்கியிருங்கள்; முந்தைய அறியாமைக் காலச் சுற்றலைப் போன்று வெளியே சுற்றாதீர்கள். (33:33)
பண்பாட்டிலும் குணத்திலும் அறியாமை உண்டு. அல்லாஹ் கூறுகின்றான்: இறைமறுப்பாளர்கள், தம் உள்ளங்களில் அறியாமைக் கால வைராக்கியத்தை வைராக்கியமாக ஏற்படுத்திக்கொண்டனர். (48:26)
மனிர்களிடையே குல, நிற, மொழி வேறுபாடு பார்க்கும் சமூக அநீதியும்
அறியாமைக்காலக் கலாசாரம்தான். தோழர் அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், கறுப்பு நிற தம்
பணியாளரை ஏசிவிட்டார்கள்.
தகவல் அறிந்த நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூதர்! அவருடைய தாயைக் குறிப்பிட்டு
இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம்
உள்ள மனிதராகவே இருக்கின்றீர். உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர்” என்று கண்டித்தார்கள். (புகாரீ)
பொதுவாகவும் அறியாமைக் காலக் கலாசாரம் குறித்துக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்
நபியவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு
ஆளானோர் மூவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் குருதியை ஓட்டுவதற்காக நியாயமின்றி கொலை செய்யத் தூண்டுகின்றவன்.
(புகாரீ)
அறியாமை பலவிதம்
அறியாமைக் காலச் சிந்தனைகளில் முதலிடம் வகிப்பது அன்றைய மதச் சிந்தனைகள்தான். அறியாமைக்
காலக் கொடுமைகளிலேயே வன்கொடுமை, மதத்தின் பெயரால் நடந்த அறிவீனம்தான்.
இறை தொடர்பான கொள்கைகள் மூன்றாகத்தான் இருக்க முடியும். 1. இறைமறுப்பு (குஃப்ர்) 2. ஓரிறை (தவ்ஹீத்). 3. பல்லிறை (ஷிர்க்). இஸ்லாம் வந்து, ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தியது; மற்ற இரண்டையும் நிராகரித்தது; கடுமையாக எதிர்த்தது.
இந்த வகையில் நாத்திகம், பலதெய்வக் கொள்கை, யூத மதம், கிறித்தவ மதம், இந்து மதம், ஜைன மதம், புத்த மதம் முதலானவை அறியாமைக் கால மதச் சிந்தனைகளில் அடங்கும்.
இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் மதப் பிரிவுகள் சிலவும் அறியாமைக் காலப் பிரிவுகளே
ஆகும். அவற்றில் ஷியா, காதியானி (அஹ்மதிய்யா), ஹதீஸ் மறுப்பு ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும்.
அறியாமைக் காலக் கலாசார சிந்தனைகள் பல உள்ளன. அவற்றில் பெண்ணியம் (FEMINISM) மேற்கத்தியம் ஆகியவை மிக ஆபத்தானவை. இவற்றைப் பற்றியே பின்னால் ஆய்வு செய்யவிருக்கிறோம்.
அறியாமைக் காலச் சித்தாந்தங்களில் முக்கியமானவை என நான்கைக் குறிப்பிடலாம். கிறித்தவமயமாக்கல், கிழக்கத்தியம், மதச்சார்பின்மை, டார்வினிஸம் ஆகியவையே அவை.
அறியாமைக் காலப் பொருளியல்
மற்றும் அரசியல் சிந்தனைகளும் பல உண்டு. அவற்றில் முதலாளித்துவம் (CAPITALISM), பொதுவுடமை, மேற்கத்திய ஜனநாயகம், தேசியம், கம்யூனிஸம் ஆகியவற்றைப்
பிரதானமாகக் குறிப்பிடலாம்.
மேற்கத்தியம்
அறியாமைக் காலக் கோட்பாடுகளிலேயே
இன்று உலக மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதும் படுகுழியில் தள்ளக்கூடியதும் என இரண்டைக்
குறிப்பிடலாம். ஒன்று, மேற்கத்தியக் கலாசாரம் (WESTERN CULTURE); இரண்டு, பெண்ணியம் (FEMINISM).
இவை மதம், மொழி, நாடு, இனம் ஆகிய எல்லா
எல்லைகளையும் கடந்து, ‘மனித நாகரீகம்’ அல்லது ‘உலகளாவிய நடைமுறை’ என்ற பெயரால், அனைத்துச் சமூக மக்களிடமும் ஊடுருவி காலூன்றிவிட்டன.
நடை, உடை பாவனை, உணவு, மொழி, கல்வி, பழக்க வழக்கங்கள், விழாக்கள், பொருளாதாரம், அரசியல், ஊடகம் என அனைத்துத்
தளங்களிலும் மேற்கத்தியமே கொடிகட்டிப் பறக்கின்றது.
மதக் கோட்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள், பாரம்பரியங்கள், இயல்புகள் முதலான
மானுட விழுமங்கள் எதுவும் மேற்கத்தியத்திற்கு முன்னால் நிற்க முடிவதில்லை; மதிக்கப்படுவதில்லை.
முன்னேற்றம், முற்போக்கு, வளர்ச்சி போன்ற கவர்ச்சியான அடைமொழிகள் மேற்கத்தியத்திற்கு மட்டுமே சொந்தமாகிப்போயின.
மேற்கத்திய கலாசாரத்திற்கு மாற்றமான அனைத்தும் பழைமை வாதம், பிற்போக்கு, அநாகரீகம், வறட்டுத்தனம், பிடிவாதம், மத மற்றும் சமூக
வெறி ஆகிய முத்திரைகள் குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுகின்றன; ஒதுக்கப்படுகின்றன.
புதிதாகத் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற கடுமையான விமர்சனங்களும் சேர்ந்துகொண்டுள்ளன.
வெள்ளைக்கார காலனி ஆதிக்கமும் சிலுவைப் போர்களும் முடிவுக்கு வந்துவிட்டாலும் கலாசார
மற்றும் சிந்தனைப் போர்கள் தொடர்கின்றன. இப்போர்களில் மேற்கத்திய உலகம் வாகை சூடிவிட்டன
எனலாம். மேற்கத்தியத்திற்குக் கிடைத்துள்ள இந்த வெற்றிதான் முந்தைய வெற்றிகளைவிட அவர்களுக்கு
மகத்தானவை; மற்றவர்களுக்கு ஆபத்தானவை.
இந்த எதார்த்தம் புரியாத காரணத்தால், கீழை நாடுகளும் சமூகங்களும் தங்களைத் தாங்களே ‘பிற்போக்குவாதிகள்’ என்று சொல்லிக்கொண்டு, மேற்கு நோக்கி நகர்கின்றன. இதற்காகச் சொந்த மக்களுடன் சண்டையிடவும் மோதிக்கொள்ளவும்
கிழக்கத்தியோர் தயங்குவதில்லை.
குழு மோதல்களை உருவாக்கி, சண்டையை மூட்டிவிட்டு, இரண்டு பக்கமும் ஆயுதங்களை விற்றுக் காசாக்கிக்கொண்டிருக்கின்றன மேற்கு நாடுகள்.
மேற்கத்தியம் என்ன சொல்கிறது?
உண்மையில் மேற்கத்தியம், அல்லது மேற்குமயமாக்கல் என்றால் என்ன?
அரசியல், கலாசார, கலை சார்ந்த இலக்குகளைக் கொண்ட மாபெரும் சிந்தனை இயக்கம்தான் மேற்கத்தியம். ஆனால், இந்தச் சொல்லாடல் அவர்களின் அகராதியிலோ தகவல் களஞ்சியங்களிலோ கிடைக்காது. தம்மைத்தாமே
‘சதிகாரர்கள்’ என்று அடையாளப்படுத்த அவர்கள் எப்படித் துணிவார்கள்?
எனவே, ‘மேற்கத்தியம்’ என்பது ‘இரகசிய இயக்கம்’ எனலாம்; அல்லது பெயர் வைக்கப்படாத ‘மர்ம அமைப்பு’ எனலாம். பெயர் இல்லையே தவிர, எல்லாத் திட்டங்களும்
செயலில் உள்ளன.
மேற்கத்திய நடைமுறைகளை உலக மக்கள்மீது திணிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். இதன்
மூலம், தனிமனிதனின் தனித்தன்மை, தனிப்பட்ட போக்குகள், சமயம் மற்றும் சமூகத்தின் வழிகாட்டல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டிவிட்டு, மேற்கத்திய நாகரீகத்தை முழுமையாக அடியொட்டி நடக்கின்ற கண்மூடித்தனமான அடிமைகளை
உருவாக்குவதே அதன் இலட்சியமாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம் நாடுகளில் கிழக்கத்திய சிந்தனையாளர்கள்
மேற்குமயமாக்கல் சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினர்.
இவர்கள் தம் படைகளை நவீனப்படுத்தினர்; புதிய எழுச்சிக்கு வித்ததிடுவதற்காக மேலை நாடுகளுக்கு முஸ்லிம் குழுக்களை அனுப்பினர்; அல்லது மேற்கத்திய பாடம் நடத்துவதற்காக மேலை நாடுகளிலிருந்து நிபுணர்களைக் கீழை
நாடுகளுக்கு இறக்குமதி செய்தனர்.
ஆடை அணிகலன்கள், கல்வி, புதிய அறிவியல், படைகளை உருவாக்குதல், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்காகங்களைப் புதிதாக ஆரம்பித்தல், முஸ்லிம் நாடுகளில் மேற்கத்தியப் பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய வழிகளில் மேற்கத்தியத்தை
உறுதிப்படுத்தினர்; நடைமுறைப்படுத்தினர்.
வாழ்க்கை வாழ்வதற்கே. சாத்தியமான வழிகளிலெல்லாம் பொருளீட்டி வாழ்க்கையைக் கொண்டாட
வேண்டும். பொருளீட்டும் வழியையோ செலவிடும் முறையையோ பற்றி யோசிக்க வேண்டியதில்லை. இதில்
சமயத்திற்கோ சமயயத் தலைவர்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது என்கிறது மேற்கத்தியம்.
ஒரு வகையில் முதலாளித்துவத்தின் அடிப்படையே இதுதான் எனலாம்.
கலாசாரம், பண்பாடு என்று சொல்லிக்கொண்டு
ஆண்-பெண் உறவுக்கும் நட்புக்கும் கட்டுப்பாடு விதிக்கலாகாது. 16வயதை அடைந்த ஓர் ஆணோ பெண்ணோ விரும்பும் வகையில் பாலியல் உறவு வைத்துத்கொள்ளலாம். காதல், நட்பு, விபசாரம், ஒருபால் உறவு என எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு.
ஆடையில் கட்டுப்பாடு, உணவு மற்றும் பானங்களில் கட்டுப்பாடு, போதைப் பொருட்களில் கட்டுப்பாடு, சூதாட்டத்தில் கட்டுப்பாடு, விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு என எந்தக் கட்டுப்பாடும் இருக்கக்
கூடாது.
விளைவுகள்
இந்த மிருகத்தனமான, தான்தோன்றித்தனமான போக்கால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், அவற்றைப் பின்பற்றுகின்ற இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகளிலும் மனித இனமே வெட்கித்
தலைகுனிகின்ற கேவலான கலாசாரம் வளர்ந்து, மனித குலத்தையே அச்சுறுத்திவருகிறது.
அமெரிக்காவில் 2003ஆம் ஆண்டில் மட்டும் திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் - அதாவது தகப்பன்
தெரியாத குழந்தைகள்- எண்ணிக்கை 14 லட்சம். இது, அந்த ஆண்டு அங்கு
பிறந்த மொத்த குழந்தைகளில் 34.6 விழுக்காடு.
அமெரிக்கர்கள், வாழ்க்கையில் நிம்மதியிழந்து
கண்ணில் படுபவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் சுட்டுக்கொண்டு
தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.
பிரிட்டனில் 2013 ஜனவரியில் அரசாங்கம்
வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. பிரிட்டனில் 20 பெண்களில் ஒருத்தி 60 வயதுக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அது கற்பழிப்பாகவும் முடியலாம்.
ஆண்டுதோறும் 95 ஆயிரம் பெண்கள்
கற்பழிக்கப்படுகின்றனர்; அல்லது ஆபத்தான வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். உண்மையில் இந்த எண்ணிக்கை 50 லட்சம் இருக்கும். வழக்கில் சிக்குவோர் மிகவும் குறைவு. நீதிமன்றம் செல்லும் 87 ஆயிரம் வழக்குகளில்கூட ஆயிரம் சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை
வழங்கப்படுகிறது.
2012-சன்டே இந்தியா வெளியிட்ட புள்ளி விவரங்கள் இந்தியாவின் அகோர முகத்தைக் காட்டுகிறது.
இந்திய நகர்ப்புற இளைஞர்களில் 62 விழுக்காட்டினர் 20 வயதுக்குள்ளாகக் கன்னித் தன்மையை இழந்தவிடுகின்றனர். 31 விழுக்காட்டினர் 21ஆவது வயதில் முதல் முறையாகப் பாலுறவில் ஈடுபடுகின்றனர்.
தவறான உறவில் கர்ப்பம் ஏற்பட்டுவிட்டால் 6 சதவீதத்தினரே திருமணம் செய்தகொள்வோம் என்றனர். 80 சதவீதத்தினர் கருக்கலைப்பே சிறந்த வழி என்றனர்.
இந்தியாவில் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே 32 விழுக்காடு மாணவர்களும் 26 விழுக்காடு மாணவிகளும் போதைப் பழககத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர்.
இஸ்லாத்தின் எச்சரிக்கை
மேற்கத்தியக் கலாசாரம் என்பது, கிறித்தவர்கள் மற்றும் யூர்களான வேதக்காரர்களின் கலாசாரம்தான். அவர்களின் வேதங்களில்
அக்கலாசாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேலை உலகில் பெரும்பான்மையாக வசிப்பவர்களும்
அக்கலாசாரத்தை ஊட்டி வளர்ப்பவர்களும் அவர்கள்தான்.
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! யூர்களையும் கிறித்தவர்களையும் நீங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; அவர்களில் சிலர்தான் சிலருக்கு உற்ற நண்பர்கள் ஆவர். உங்களில் யார் அவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறாரோ அவர், அவர்களைச் சேர்ந்தவர் ஆவார். (5:51)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள், எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள்
புகுந்திருந்தால்கூட, நீங்கள் அதிலும் புகுவீர்கள். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! யூர்களையும் கிறித்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு
நபி (ஸல்) அவர்கள், ‘வேறு யாரை?’ என்று கேட்டார்கள். (புகாரீ)
பெண்ணியம்
ஆணுக்குச் சமமாக பெண் மதிக்கப்பட வேண்டும் எனும் சிந்தனைப் போக்கே ‘பெண்ணியம்’ (FEMINISM) எனப்படுகிறது. பெண்களுக்குச்
சம உரிமைகளைக் கோருகின்ற சமூக இயக்கமாகும் அது.
பெண்ணுரிமைக்கே இவர்கள்
கொடுக்கும் பொருள் அபத்தமானது ஆணைச் சார்ந்திராமல் பெண் சுதந்திரமாக இருக்க வேண்டியவள்
என்பது மதிக்கப்பட வேண்டும்; ஆணுக்கு இருக்கும் உரிமைகள், வாய்ப்புகள் அனைத்தும் பெண்ணுக்கும் தரப்பட வேண்டும். இதுதான் பெண்ணுரிமை (WOMEN RIGHTS) என்கின்றனர்.
மேர்வுல்ஸ்டன் கிராஃப்ட்
எனும் பெண் எழுதிய A VINDICATION OF
THE RIGHTS OF WOMEN (1792) எனும் நூலே பெண்ணியத்தின் முதல் வெளிபாடு
என்று கூறுவர்.
அதையடுத்து 1848ஆம் ஆண்டில் எலிஸபெத்
கேடி ஸ்டான்டன், லக்ரீ ஷாமாட் போன்ற மார்களால் கூட்டப்பட்ட செனகா ஃபால்ஸ் மாநாடு, ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கு முழுமையான கல்வி வாய்ப்பு, சமமான இழப்பீடு போன்ற சட்டப்பூர்வ நிலைகளைக் கோரியது.
1949இல் சைமன் டி போவ்யார் எழுதிய தி செகண்ட் செக்ஸ் எனும் நூல், 1963இல் பெட்டி ஃபிரிடன் எழுதிய தி ஃபெமினைன் மிஸ்டிக் எனும் நூல், 1966ல் நிறுவப்பட்ட தேசிய மகளிர் அமைப்பு ஆகியவை பெண்ணியத்திற்குக் குரல் கொடுத்தன.
முஸ்லிம் நாடுகளைப் பொறுத்தவரை, மதச்சார்பற்றவர்களால் எகிப்தில் இவ்வியக்கம் தொடங்கப்பட்டது; பின்னர் மற்ற அரபு மற்றும்
முஸ்லிம் நாடுகளுக்கும் பரவியது.
பெண்ணியத்தின் முக்கயமான கொள்கைகள் இஸ்லாத்திற்கு எதிரானவை.
இஸ்லாமியப் பண்பாடுகள், ஷரீஅத் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்க வேண்டுமாம்!
ஹிஜாப், தலாக், பலதார மணம் ஆகியவற்றுக்குத் தடை.
பாகப் பிரிவினையில் ஆணுக்குச் சமமான பங்கு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும்.
எல்லாவற்றிலும் முஸ்லிம் பெண்கள் மேற்கத்தியப் பெண்களைப்போல் மாற வேண்டும்.
பெண்ணியத்தின் விஷமம் புரிந்தோ புரியாமலோ முஸ்லிம்களே அதற்குப் பல்வேறு பெயர்களில்
ஆதரவு தெரிவித்துவருவது வேதனையளிக்கும் செய்தியாகும். இதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தை, திருக்குர்ஆனை, நபிவழியையே தங்களையும்
அறியாமல் எதிர்க்கின்றனர் என்பதுதான் உண்மையாகும்.
இஸ்லாத்தின் நிலை
ஆண்-பெண் பிறவி வித்தியாசம் பார்க்கலாகாது என்பதில் இஸ்லாம் தெளிவாக இருக்கிறது.
பெண் பிறவியைக் கண்ணியமாகக் கருதிப் போற்றுவதிலும் பெண்ணுக்கு வேண்டிய இயல்பான உரிமைகளை
வழங்குவதிலும் இஸ்லாம்தான் உலகுக்கே முதலில் வழிகாட்டியது.
அதே நேரத்தில், இயற்கைக்கு மாற்றமாக, இயல்புக்கு ஒவ்வாத வகையில் பாலின சமத்துவம் பேசுவதை இஸ்லாம் ஏற்கவில்லை என்பதைச்
சொல்வதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. இஸ்லாத்தின் இந்தத் தொலைநோக்குப் பார்வைதான்
முற்றிலும் சரியானது என்பதையே இன்றைய உலக நடப்புகளும் புள்ளி விவர ஆய்வுகளும் தினமும்
நிரூபித்துவருகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான்: ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களில் சிலரைவிட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதும் ஆண்கள் தம் செல்வங்களை (பெண்களுக்காக)ச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம். எனவே, நல்ல பெண்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். (கணவன்) இல்லாத நேரத்தில் அல்லாஹ் அறித்துள்ள பாதுகாப்பால் (தம் கற்பையும் கணவனின் உடைமைகளையும்) அவர்கள் பாதுகாப்பார்கள். (4:43)
இத்திருவசனத்தில் பெண்ணின் நிர்வாகியாக, தலைவனாக, காவலனாக ஆணே இருக்க
வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 1. இயற்கையான காரணம். அதுதான் உடல் வலிமை, நெஞ்சுரம், நிர்வாகத் திறன், அறிவுக்கூர்மை ஆகியவையாகும். உடல் வலிமைக்கும் புத்திக்கூர்மைக்கும் இன்றைய அறிவியலே
சான்று பகர்கின்றது.
மனித உடலில் 60 மில்லியன் உயிரணுக்கள்
உள்ளன. அவற்றில் ஆண் -பெண் உயிரணுக்கள் இடையில் வெளிப்படையான உருவ வேறுபாடுகள் உண்டு.
நுண்ணோக்கிகொண்டு பார்த்தால் அவை தெளிவாகவே தெரியும்.
குரோமோசோம்கள் எனப்படும் இனக்கீற்றுகளில் ஆண்-பெண் இடையே வித்தியாசம் உண்டு. ஆண்களில்
ஒவ்வொரு செல்லிலும் ஙீசீ இனக்கீற்று இருக்கும் என்றால், பெண்களில் ஙீஙீ இனக்கீற்று இருக்கும். அது வலுவானது; இது பலவீனமானது. சிசுவின் பாலினத்தை நிர்ணயிக்கும் சக்தி ஆணின் செல்லுக்கே உண்டு.
ஆணின் ஒவ்வொரு துளிவிந்திலும் பல மில்லியன் அணுக்கள் இருக்கின்ற நிலையில், பெண்ணின் கருப்பை மாதம் ஒரு முட்டைக் கருவை மட்டுமே வெளியிடுகிறது.
இடுப்புப் பகுதியில் மட்டும் ஆண்-பெண் இடையே 19 வித்தியாசம் உள்ளன.
மூளையில்கூட ஆண்-பெண் இடையே இயற்கையான வித்தியாசம் உள்ளது என 1981 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரோகர்ஸ் ஸ்பிரே கூறுகிறார். ஹார்மோன்களில் ஏற்படும் வித்தியாசமே இதற்குக் காரணமாம்!
2. செயல்பாடும் பொருளாதாரமும் இரண்டாவது காரணமாகும். குடும்பத்திற்காகக் கடுமையாக
உழைப்பவன் ஆண்தான். குடும்பத்திற்கான செலவினங்களுக்கு ஆணே பொறுப்பு.
இதனாலேயே மற்றொரு வசனம், “அந்தப் பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப் போன்றே நியாயமான உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. ஆயினும், அவர்களைவிட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு” (2:228) என்று குறிப்பிடுகின்றது.
அந்த ஒருபடி உயர்வு, புத்திக்கூர்மை, வீரம், கடின உழைப்பு ஆகிய இயல்பான தகுதிகளால் கிடைத்ததாகும். இதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, அவசியமும் நெருக்கடியும் இல்லாமலேயே நாங்களும் சம்பாதிக்கப்போகிறோம் என்று பெண்கள்
வெளியேறியதால் பல்வேறு சிக்கல்களும் பாதிப்புகளும்தான் ஏற்பட்டுள்ளன.
பெண்ணியம் படுத்தும் பாடு
முதலில் குடும்பத்தில் ஆரோக்கியமான, சகஜமான உறவு இருப்பதில்லை.
தம்பதியரிடையே நீயா, நானா என்ற கௌரவப் பிரச்சினை.
இயல்பான, முக்கியமான பொறுப்புகளில்
பெண்கள் சோடை போய்விடுகிறார்கள்.
எல்லாவற்றையும்விடப் பெண்களுக்கே உரிய குடும்பப் பொறுப்புகள் வீணாகின்றன.
பெற்றோர் இருந்தும் குழந்தைகள்
அநாதைகளாக; மனைவி இருந்தும்
கணவன் துணை இல்லாதவனாக; எல்லாரும் இருந்தும் வீடு கவனிப்பார் இல்லாததாக... ஆவதற்கு யார் காரணம்? பெண்களின் நேரங்கள்
வெளி வேலைக்குக் களவாடப்படுவதே காரணம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் செலவிடும் நேரங்கள் பற்றிய ஆய்வு ஒன்றைப் பாருங்கள்:
வேலைக்குச் செல்லவும் வீடு திரும்பவும் 2 மணி நேரம்; வேலைக்காக 8 முதல் 10 மணி நேரம்; வீட்டு வேலைகளுக்காக 3 முதல் 4 மணி நேரம்; தூக்கம் மற்றும்
ஓய்வுக்காக 7 முதல் 8 மணி நேரம்; குழந்தையுடன் அரைமணி
நேரம்தான். வாரிசுகளின் நிலைமை என்னவாகும்? சொல்லுங்கள்!
ஆக, பாலின சமத்துவம் என்பது, இயல்புக்கு ஒவ்வாத, வலிந்து ஏற்கும் பெரும் சுமையே தவிர வேறொன்றுமில்லை. பெண்களுக்கே உரிய நாணம், அடக்கம், பணிவு போன்ற உயர் பண்புகளைக் கெடுக்கவும் இல்லறத்தில் புயலைக் கிளப்பவும் தான் பெண்ணியம் வழிவகுக்கும்
என்பதை மறந்துவிடக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாணம், இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். (புகாரீ)
மேலும் கூறினார்கள்: நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்! (புகாரீ)
அரைகுறை ஆடை, கடின உழைப்பு, காலம் கடந்து வீடு திரும்புதல், அலுவலகங்களில் பாலியல் கொடுமை, பயணங்களில் ஆண்களின் தொல்லை.... எனப் பெண்ணியத்தின் எதிர்வினைகளின் பட்டியல் நீள்கிறது.
அந்நியனுடன் ஒரு பெண் தனிமையில் இருக்கலாகாது; ஒருவரை ஒருவர் இச்சையுடன் பார்ப்பது, பழகுவது, பேசுவது கூடாது; ஒருவரின் மறைக்க வேண்டிய உறுப்புகளை மற்றவர் பார்ப்பது கூடாது; அலங்காரம் செய்துகொண்டு பெண் ஊரைச் சுற்றுவது கூடாது; தகுந்த துணையின்றி பயணிக்கக் கூடாது; பெண்ணை நுகர்பொருளாகக் காட்டும் ஆடை ஆபரணங்கள் அணிந்து காட்சியளிப்பது கூடாது...
என இஸ்லாம் நாகரீகமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இவை செயல்படுத்தப்பட்டால், பாலியல் பலாத்காரப் பிரச்சினைக்கு இடமிருக்காது; மீறி பாலியல் கொடுமை நடந்தால் தகுந்த தண்டனையையும் இஸ்லாம் வகுத்துள்ளது. ஆனால், இங்கு அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளும் இல்லை; வீரியமிக்க தண்டனைகளும் இல்லை.