Monday, August 03, 2015

சர்வதேசப் பார்வை

தமிழில்: கான் பாகவி


ஹரம்வருகையாளர்கள் வரவேற்புக் குழு


தி
ருமக்கா நகருக்கு வருகைதரும் ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளை வரவேற்று வழிகாட்டுவதற்காக ஹரம் வரவேற்புக் குழுஒன்று செயல்பட்டுவருகிறது. தன்னார்வ தொண்டு அமைப்பான இக்குழுவில் மக்காவாசிகளான இளைஞர்கள் அங்கம் வகிக்கிறார்கள். குழுவின் தலைவராகப் பதவி வகிக்கும் பேராசிரியர் ஹானீ தூமான் அல்முஜ்தமாமாத இதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியின் சுருக்கம் வருமாறு:

திருமக்காவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய இளைஞர் கவுன்சிலின் கிளை மன்றங்களில் ஒன்றே எங்கள் அமைப்பு. திருமக்காவிற்கு வரும் ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளை வரவேற்று உபசரிக்கும் பொறுப்பு மற்றெவரையும்விட தங்களுக்கே இருப்பதாக இந்த மக்கா இளைஞர்கள் கருதுகின்றனர். மக்காவைப் பற்றியும் மக்காவாசிகள் பற்றியும் நல்லதொரு தோற்றத்தைப் புனிதப் பயணிகளுக்கு நாங்கள் அளித்துவருகிறோம். குறிப்பாக, புனித ஹரம் பள்ளிவாசல் பிரமாண்டமாக விரிவுபடுத்தப்பட்டதோடு ஹரமை ஒட்டி வசித்துவந்த மக்கா குடும்பங்கள் ஆங்காங்கே சிதறிவிட்டன. மக்காவாசிகள் எங்கே? என்று கேட்கும் நிலையே இருந்தது.

நான் ஒரு தடவை அல்பேனியா சென்றிருந்தேன். அங்கு ஒரு அநாதைச் சிறுவன், “நீங்கள் மக்காவாசியா?” என்று கேட்டான். நான் ஆம்என்றேன். அச்சிறுவன், “நான் மக்கா வந்திருந்தேன்; 10 நாட்கள் தங்கியிருந்தேன். உங்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. மக்காவாசிகள் எங்கே போனார்கள் என்று தேடினேன். அப்போது சிலர், “சிவப்புத் துண்டு போட்டிருப்பவர்கள்தான் மக்காவாசிகள்என்றனர். அத்தகைய அடையாளமுள்ள ஒரு கூட்டத்தைக் கண்டேன். ஆனால், அவர்களில் யாரும் எங்களை வரவேற்கவோ கைகொடுக்கவோ இல்லை என்று சொன்னவன், சட்டென்று என் பக்கம் திரும்பி, “மக்காவாசிகளே? ஏன் எங்களுடன் நீங்கள் முஸாஃபஹாசெய்வதில்லை?” என்று கேட்டுவிட்டான்.

நான் மக்கா திரும்பியவுடனேயே மக்கா இளைஞர்களைச் சந்தித்து இந்த வரவேற்புக் குழுவை உருவாக்கும் யோசனையை முன்வைத்தேன். இது ஹிஜ்ரீ 1422ஆம் ஆண்டு -அதாவது ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு- நடந்தது. பெண்கள் வரவேற்புக் குழுவும் இப்போது சேவை செய்கிறது. ஆண்கள், பெண்கள், பேராசிரியர்கள், பிரசாரகர்கள் என யார் மக்கா வந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிக்கும் சேவையை நாங்கள் செய்துவருகிறோம்.

மக்கா விருந்தினர்களே! வருக!என்பதே எங்கள் அடையாள முழக்கமாகும். எங்கள் அணியில் 12 உறுப்பினர்கள் பல யூனிட்களாகப் பிரிந்து செயல்படுகின்றனர். நிர்வாகம், தகவல் தொடர்பு, மக்காவிலுள்ள புனித மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிக்காட்டல், பெண்கள்... எனப் பல யூனிட்டுகள் உண்டு. மக்காவாசிகளுடனான சந்திப்புக்கும் விருந்துக்கும்கூட எங்கள் அணி ஏற்பாடு செய்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிலிருந்து பிரசாரகர்கள் வந்து 5 நாட்கள் எங்களிடம் தங்கிவிட்டுச் செல்வார்கள். ஒவ்வோர் ஆண்டும் மக்காவில் நடக்கும் மருத்துவ ஆராய்ச்சி மாநாட்டில் அவர்கள் கலந்துகொள்வார்கள். மக்கா உம்முல்குராபல்கலைக் கழகத்துடன் இணைந்து இரு மாதங்களுக்கு ஒருமுறை மாலைநேர வகுப்புகள் நடத்திவருகிறோம். மதீனா இஸ்லாமியப் பல்கலை மாணவர்கள் ஆண்டுக்கு இரு உம்ரா செய்ய ஏற்பாடு செய்கிறோம். அப்போது 3 நாட்கள் எங்கள் விருந்தினர்களாக மாணவர்கள் இருப்பார்கள். (அல்முஜ்தமா)


இஸ்லாத்தின் மீது வீண் பழி


செ
ர்பியர்கள் போஸ்னியாவிலும் சியோனிஸ்டுகள் ஃபாலஸ்தீனத்திலும் பௌத்தர்கள் பர்மாவிலும் கிறித்தவர்கள் மத்திய ஆப்ரிகாவிலும் முஸ்லிம்களுக்கு இழைக்கும் கொடுமைகளையோ, மேற்கத்திய நாடுகளில் முஸ்லிம்கள்மீதும் பள்ளிவாசல்கள்மீதும் நடத்தப்படும் அத்துமீறல்களையோ நாம் கேள்விப்படும்போது கிறித்தவம், அல்லது யூதம், அல்லது புத்தம் மதங்களைப் பயங்கரவாதத்தோடு இணைத்து யாரும் குறிப்பிடுவதில்லை.

அதே நேரத்தில் முஸ்லிம்களில் யாரேனும் இத்தகைய குற்றங்களில் ஒன்றை -தனிப்பட்ட முறையில்- செய்தால்கூட, உலக ஊடகங்கள் உடனே இஸ்லாமிய தீவிரவாதிஎன்று குறிப்பிடாமல் இருப்பதில்லை. இதன் மூலம், இஸ்லாமே தீவிரவாத மார்க்கம்தான் என்று அவை சொல்லாமல் சொல்கின்றன. இதனால் மற்றெல்லா முஸ்லிம்களும் தாங்கள் நிரபராதிகள் என்று உலகிற்கு நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஆனால், உண்மை என்ன? முஸ்லிம்களைவிட முஸ்லிமல்லாதோர் புரிகின்ற பயங்கரவாதக் குற்றங்களின் விழுக்காடுதான் அதிகத்திலும் அதிகம். இதைச் சான்றுகளோடும் தக்க ஆதாரங்களோடும் புள்ளிவிவரங்கள் உறுதிபடுத்திவருகின்றன. 2013ஆம் ஆண்டில் 50 நகரங்களில் நடந்த குற்றங்கள் குறித்து மெக்சிகோவில் நீதி மற்றும் பாதுகாப்பு கவுன்சில் எடுத்த புள்ளிவிவரம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

அந்நகரங்களில் ஆயிரக்கணக்கான தீவிரவாதக் குற்றங்கள் அந்த ஆண்டில் அரங்கேறின. அவற்றில் 40,206 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் முஸ்லிம்களால் கொலையுண்டோரைக் கைவிட்டு எண்ணிவிடலாம். டெய்லி போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட தகவலைப் பாருங்கள்: அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதக் குற்றங்களில் 98 சதவீதமும் இதர நாடுகளில் நடந்த குற்றங்களில் 94 சதவீதமும் முஸ்லிமல்லாதோரால் நிகழ்த்தப்பட்டவை ஆகும்.

அமெரிக்காவில் 1980 முதல் 2005 வரையிலான காலக்கெடுவில் நடந்த தீவிரவாதக் குற்றச் செயல்களில் 94 சதவீத குற்றங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தனியார் ஆய்வு நிறுவனமான FBI கூறுகிறது. 2001 செப்டம்பர் 11 நிகழ்வுக்குப்பின் இதுவரை முஸ்லிம்களுடன் தொடர்புள்ள தாக்குதலில் 37 அமெரிக்கர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்கிறது, வடக்கு கரோலின் மாநிலத்தின் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வு. அதே நேரத்தில், முஸ்லிமல்லாதோரின் கரங்களால் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதே வேளையில், ஓர் அப்பாவியைக்கூட கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 2000ஆவது ஆண்டுவரை இஸ்லாத்துடன் தீவிரவாதமோ பயங்கரவாதமோ இணைத்துப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. 2001ஆம் ஆண்டு முதல் அல்காஇதாஅமைப்புமீதும், கடந்த 2 ஆண்டுகளாக இராக் மற்றும் சிரியாவில் தோன்றியுள்ள தாஇஷ்எனப்படும் ஐ.எஸ். அமைப்புமீதும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அன்பு, கருணையைப் போதிக்கும் இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் என்ன தொடர்பு என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதற்காக, அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி, சொந்த மண்ணை ஆயுதந்தாங்கிய எதிரிகளிடமிருந்து காப்பதற்காகக்கூட ஆயுதம் ஏந்தக் கூடாது; அதுவும் பயங்கரவாதம் என்று யாரும் வாதிட்டால் அதை ஏற்க முடியாது. (அல்முஜ்தமா)

ரஷியாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல் -செப்டம்பரில் திறப்பு


திர்வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச நிகழ்ச்சி ஒன்று நடக்கவுள்ளது. மாஸ்கோவில் மிகப் பெரிய பள்ளிவாசல் திறப்புக்காக உலகத் தலைவர்கள் பலர் வருகைதர உள்ளனர். இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் மற்ற நாடுகளின் தூதுக் குழுக்களும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

ரஷிய நாளிதழான அஸ்வெஸ்டியாவெளியிட்டுள்ள செய்தியாவது: இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு சஊதி, துருக்கி, கத்தர், ஈரான், ஃபாஸ்தீன், ஜோர்டான், குவைத், கஸாகஸ்தான், ஆதர்பீஜான், துருக்மானிஸ்தான் முதலான நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா, இந்தியா, சூடான், லிபியா, இராக் முதலான நாடுகளிலிருந்து தூதுக் குழுக்கள் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி, வெறும் ஆன்மிகம் மற்றும் கலாசாரம் தொடர்பானதாக மட்டும் இராது; பூகோள மற்றும் அரசியல் வட்டத்திலும் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கும் என ரஷிய முஃப்திகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய உலகில் ரஷியாவின் பங்கையும் அதனுடனான தொடர்பை மேம்படுத்துவதையும் இவ்விழா நோக்கமாகக் கொண்டது என்று சபையின் மூத்த பிரதிநிதி ரோஷன் தெரிவித்தார்.

புதிய பள்ளிவாசல் 19 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது; ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல் இது என்பது குறிப்பிடத் தக்கது. (அல்அலூகா)

இஸ்லாத்தில் மக்கள் ஏன் சேர்கிறார்கள்? -கனடாவில் ஆய்வு


னடாவில், அந்நாட்டு மக்கள் இஸ்லாத்தில் ஏன் இணைகிறார்கள் என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மனிதவள மேம்பாட்டு ஆய்வாளர்கள் சிலருக்கு கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. மெல்போர்ன் பல்கலைக் கழக அறிஞர்களில் ஒருவரும் ஆஸ்திரேலிய பேராசிரியர்களில் பிரபலமானவருமான இஸ்காட் விலோர் கூறியதாவது: புதிய முஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் குறித்தும் சரியான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இப்போது நடக்கவிருக்கும் ஆய்வுகள் கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறையின் கண்கானிப்பில் மேற்கொள்ளப்படும். அதற்காக ஆஸ்திரேலியா பேராசிரியர் ஒருவர் 1,70,000 டாலர் முதல் தவணையாகப் பெற்றுள்ளார். மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் ஏன் இணைகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆஸ்திரேலியாவிலிருந்து பேராசிரியர் கனடா வரவிருக்கிறார். இஸ்லாம் பரவுவதைப் பார்த்து ஐரோப்பிய சமூகம் ஏன் பதற்றமடைகிறது என்பதையும் தம் ஆய்வுக்கு உட்படுத்தப்போவதாகப் பேராசிரியர் தெரிவித்தார். (அல்அலூகா)

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டுமுஸ்லிம் மாணவர்கள்


மெரிக்காவில் கல்வி கற்கும் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், முஸ்லிம்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்திவருகின்றன. 1,27,000 முஸ்லிம் மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்றுவருவதாகவும் அவர்களில் சஊதி மாணவர்கள் மட்டும் 53 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் புள்ளி விவரம் கூறுகின்றது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா வழங்கும் விசாக்களில் 14 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு வெளிநாட்டு மாணவர்களால் ஆண்டுக்கு 22 பில்லியன் டாலர் வருமானம் கிடைப்பதாகவும் அதில் 3 பில்லியன் டாலர் முஸ்லிம் மாணவர்களால் கிடைப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. (அல்அலூகா)