Wednesday, September 28, 2016

இளம் ஆலிம்களே உங்களைத்தான்! (3 இணைப்பு)

அரபி இலக்கண
கலைச்சொற்கள் பட்டியல்
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

மாணவக் கண்மணிகளே...!

சென்ற தொடரில் அரபி இலக்கணப் பாடங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் ஆகிய இரு இலக்கணங்களின் கலைச்சொற்கள் பட்டியலை இங்கு வரைபடமாக (Chart) வழங்கியுள்ளேன். இதை நகல் எடுத்து பாதுகாத்து வாருங்கள்! நிச்சயம் உதவும்.

வரைபடம் Chart (1)
வரைபடம் Chart (2)
வரைபடம் Chart (3)
வரைபடம் Chart (4)
வரைபடம் Chart (5)
வரைபடம் Chart (6)

Thursday, September 22, 2016

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்... (3)


வகுப்பில் கவனிக்க வேண்டியவை

மா
ணவக் கண்மணிகளே! வகுப்புக்குச் செல்லும்போது வெறுமனே கைவீசிக்கொண்டு போகக் கூடாது. பாடப் புத்தகம், குறிப்பேடு (Note Book), எழுது பொருட்கள் ஆகியற்றைக் கவனமாக எடுத்துச்செல்ல வேண்டும். குறிப்பேட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பாடப் புத்தகத்திற்கும் தனித் தனியாக வைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர் பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டால், முழுக் கவனமும் அவரை நோக்கியே இருக்க வேண்டும். அரபிக் கல்லூரி பாட நூல்களைப் பொறுத்தமட்டில், மாணவர்கள் 3 விஷயங்களை அவதானிக்க வேண்டும்.

1. அரபி மொழியில் எழுதப்பட்டிருக்கும் அப்பாடநூலை, இலக்கணப் பிழையின்றி வாசிக்க முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.



2.    வாசகங்களின் பொருளை அறிய வேண்டும். ஒரு வாக்கியத்தில் இடம்பெறும் தனிச் சொற்களுக்கான பொருள், மொத்த வாக்கியத்தின் பொருள் என இரண்டையும் தெரிந்துகொள்ள முயல வேண்டும்.



3. அன்றைய பாடத்தின் மொத்த கருத்து என்ன? அக்கருத்துக்கான எடுத்துக்காட்டுகள் என்ன? பாமரரும் புரிந்துகொள்ளும் அளவிற்குத் தாய் மொழியில் அதனை எடுத்து வைக்கும் முறை என்ன... என்பன போன்ற கூடுதல் அம்சங்களையும் அறிந்துகொள்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்ட வேண்டும்.


ஆசிரியர் சொல்லும் விளக்கத்தில் ஐயம் எழலாம் மாணவனுக்கு. ஐயம், பாடம் தொடர்புள்ளதாக இருந்தால் மட்டுமே ஆசிரியர்முன் வைக்க வேண்டும். அதையும் பணிவோடும் கனிவோடும் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். கேள்வி, விதண்டாவாதமாக நிறம் மாறிவிடக் கூடாது.

இப்படி மாணவர்கள் முறையான வினா தொடுத்தால் ஆசிரியருக்கு உற்சாகம் மேலிடும். அக்கறையோடு அந்த மாணவனை அவர் கவனிக்கத் தொடங்கிவிடுவார். முன்தயாரிப்போடு வகுப்பில் வந்து ஆசிரியர் அமர வேண்டும் என்ற கட்டாயத்தை உங்கள் விழிப்புணர்வே ஏற்படுத்தும். இது உங்கள் வளர்ச்சிக்கும் ஆசிரியரின் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமையும்.

சொல்லிலோ பொருளிலோ கருத்திலோ ஒரு புதிய தகவல் கிடைத்தால், உடனே குறிப்பேட்டில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தகவல் நீளமாக இருந்து, நேரம் குறுகியதாக இருப்பின், சுருக்கத்தைக் குறிப்பெடுத்துக்கொண்டு, அறைக்குச் சென்றபின் அதை விரிவுபடுத்தி எழுதிப் பாதுகாக்க வேண்டும். பிற்காலத்தில் இந்தப் பதிவே அரிய தொகுப்பாக உங்களுக்கு அமையக்கூடும்.

படித்ததைத் திரும்பப் படித்தல்

மாணவர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளில் ஒன்றுமு(த்)தாலஆ (مُطالعة). அதாவது அனுதினமும் வகுப்பில் கற்ற பாடத்தை இரவில், அல்லது வேறு ஓய்வான நேரத்தில் திரும்பப் படிக்க (Study) வேண்டும். தனியாகவோ கூட்டாகவோ இவ்வாறு திரும்பப் பார்க்க வேண்டும். திறமையான மாணவர் ஒருவர் வாசிக்க, மற்றவர்கள் கவனமாகச் செவிமடுக்க, ஐயங்கள் இருப்பின் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டு, குறிப்புகளைப் பரிமாறிக்கொண்டு குறிப்பெடுத்துக்கொள்ள கூட்டாகப் படிப்பதே சிறந்த வழியாகும்.

இவ்வாறு அன்றாடப் பாடங்களை அன்றே அசைபோட்டு மனதில் பதிவேற்றம் செய்துவிட்டால் தேர்வு சமயத்தில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தேர்வுக்காக ஓரிரு முறை படித்தாலே போதும். நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிடலாம். மற்றவர்களுக்காகப் பாடம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலோ, சக மாணவர்கள் சந்தேகம் என்று வந்து விளக்கம் கேட்டாலோ மறுத்துவிடாதீர்கள்; சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஏனெனில், இதுவே உங்களுக்கு ஒரு பயிற்சிக் களமாகும். பிற்காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகையில் உதவியாக இருக்கும். அத்துடன், தேர்வுகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெல்லவும் துணைபுரியும். அடுத்தவருக்குச் சொல்லிக்கொடுத்தால் நமக்குக் கல்வி குறைந்துவிடும் என்றோ அடுத்தவர் நம்மைவிடக் கூடுதலாக மதிப்பெண் பெற்றுவிடுவார் என்றோ தப்பித் தவறிகூட எண்ணிவிடாதீர்கள்.

நான்தான் என் வகுப்பிலேயே வயதில் குறைந்தவன். ஆனாலும் நானே பாடங்கள் வாசிப்பது வழக்கம். வகுப்புத் தோழர் ஒருவர், தமக்குத் தெரியாததையெல்லாம் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். நல்ல பழக்கம்தான். ஆனால், எனக்குத் தெரியாத ஒன்றை அவரிடம் நான் கேட்டால், அவருக்குத் தெரிந்திருந்தாலும் சொல்லமாட்டார். அவரது பெயர் இன்றும் நினைவிருக்கிறது. அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் இடத்தில் அவர் இல்லை என்றே நினைக்கிறேன்.


இரு வகை இலக்கணம்

ஆரம்ப மூன்று ஆண்டுகள் அரபி இலக்கணமே முதன்மையான சப்ஜெக்டாக (Subject) இருக்கும். இலக்கணத்தில் இருவகை உண்டு.

1. சொல் இலக்கணம் (Morphology).


இதைசொல் வடிவ அமைப்பியல்” (இல்முஸ் ஸர்ஃப்إسم الصرف - ) என்றும் குறிப்பிடலாம். வேர்ச்சொல்லில் (மஸ்தர் مصدر - - Root) இருந்து பிறக்கும் பெயர்ச்சொல் (இஸ்மு - Noun), வினைச் சொல் (ஃபிஅல் فعل - - Verb), வினையாலணையும் பெயர் (இஸ்முல் ஃபாஇல் إسم الفاعل - - Noun of Agent), செயப்பாட்டு எச்சவினை (இஸ்முல் மஃப்ஊல் إسم مفعول - - Noun of Patient), ஏவல் வினை (அம்ர் أمر - - Imperative Mood), விலக்கல் வினை (நஹ்யு نهي - - Prohibition), செய்வினை (மஅரூஃப் معروف - -Active Verb), செயப்பாட்டு வினை (மஜ்ஹுல் مجهول - - Passive Verb), உடன்பாடு (முஸ்பத் مثبت - - Possitive), எதிர்மறை (நஃப்யு نفي - - Negative)... எனப் பல்வேறு சொற்கள் எவ்வாறு பிறக்கின்றன? அதன் விதிகள் யாவை என்பன போன்ற விவரங்களே இக்கலையாகும்.

அத்துடன் பிறவினை, அல்லது செயப்படு பொருள் குன்றாவினை (முத்தஅத்தீ متعدّي - - Transitive Verb), தன்வினை, அல்லது செயப்படு பொருள் குன்றிய வினை (லாஸிம் لازم - - Intranstive Verb), மூல எழுத்துள்ளது (முஜர்ரத் مجرد - Abstract), கூடுதல் எழுத்துள்ளது (மஸீது ஃபீஹி مزيد فيه - - Additional), படர்க்கை (ஃகாயிப் غائب - - Third Person), முன்னிலை (ஹாளிர் حاضر - - Second Person), தன்மை (முதகல்லிம் -  متكلّم - First Person), ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை, உயர்திணை, அஃறிணை... போன்ற முரண் சொற்களை எப்படி பகுத்தறிவது என்பதற்கு இக்கலை வழிகாட்டும்.

2. பொருளிலக்கணம்

(பொருள்) இலக்கணம் (இல்முந் நஹ்வு علم النحو - ) இரண்டாவது வகையாகும். அரபு மொழியில் ஒரு சிக்கல் உண்டு. சொற்களை உச்சரிக்க ஒலிக்குறியீடு (ஹரகத்حركة  -  -Vicalise) வேண்டும். இது உகரம் (ளம்முضمّ - ), அகரம் (ஃபத்ஹுفتح - ), இகரம் (கஸ்ர்كسر - ), அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்سكون - ), நீட்டல் குறியீடு (மத்துمدّ - ) ஆகியனவாகும். இக்குறியீடுகள் குர்ஆன் பிரதிகளில் இருப்பதைப் போல அச்சிட்டிருந்தால் பிழையின்றி வாசித்துவிடலாம். ஸேர், ஸபர் போடாமல்தான் வேறு நூல்கள் இருக்கும். அப்போது சொல் இலக்கணம் கற்றவர்களால் மட்டுமே சரியாக மொழிய முடியும்.


அவ்வாறே, வார்த்தையின் கடைசி எழுத்தில் இடப்படும் எழுவாய் வேற்றுமை உருபு (ரஃப்உرفع - ), இரண்டாம் வேற்றுமை உருபு (நஸ்ப்نصب - ), முன்னிடை உருபு (ஜர்ருجرّ - ), அசைவற்ற உருபு (ஜஸ்முجزم - ) ஆகியவற்றில் எதை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என அறிய வேண்டுமானால் வாக்கிய உறுப்பிலக்கணம் (இஃராப்إعراب -) கற்றிருக்க வேண்டும்.

இந்த உருபுகள் இடத்திற்கு இடம் மாறுபடும். எழுவாய் (முப்ததா  مبتدأ -- Subjective), பெயர்ப் பயனிலை, (கபர் -- خبر Predicate), அல்லது வினைப் பயனிலை (ஃபிஅல்فعل - ), எழுவாய் (ஃபாஇல் - - فاعل Subjective), இரண்டாம் வேற்றுமை (மஃப்ஊல் - - مفعول Objective), செயப்பாட்டு வினை எழுவாய் (நாயிப் ஃபாஇல்نائب فاعل - ), தன்னிலைப் பெயர்ச்சொல் மற்றும் அடைமொழி (மவ்ஸூஃப் موصوف ஸிஃபத்صفة - ), தழுவுச் சொல் மற்றும் ஆறாம் வேற்றுமை (முளாஃப் مضاف -முளாஃப் இலைஹிمضاف إليه ), தழுவியற் சொல் மற்றும் பெயரடை (மவ்ஸூல் موسول ஸிலாسلة ), இணைப்பு மற்றும் இணைப்பகம் (மஅதூஃப் معطوف - மஅதூஃப் அலைஹிمعطوف عليه), அருகமைவு (பத்ல்بدل - ), சார்புநிலை அல்லது நிபந்தனை (ஷர்த்شرط - )... போன்ற ஏராளமான நிலைகளுக்கு உருபு என்ன என்பதை பொருள் இலக்கணம் படிப்பதால் மட்டுமே பிழையின்றி அறிய முடியும்.

வாசித்தல் மட்டுமன்றி வாக்கியத்தில் இடம்பெறும் ஒரு சொல்லுக்குச் சரியாக பொருள் செய்யவும் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். சுருங்கச் சொல்லின், அரபி மொழி  அறிய இவ்விரு இலக்கணங்களும்தான் அடிப்படையாகும். இதையெல்லாம் கற்காமல் அரபி மொழியைத் தவறின்றி படிக்கவோ, எழுதவோ, மொழிபெயர்க்கவோ இயலாது.

இதற்கடுத்து, அரபி மொழிச் சொற்கள், பெயர்கள் முதலானவற்றை மொழிப் பாடப் பிரிவில் பயில வேண்டும்.

இதனால்தான், இம்மூன்று (சொல்லிணக்கம், பொருளிலக்கணம், மொழி) பாடங்களை ஆரம்ப மூன்று ஆண்டுகளில் கற்பிக்கிறார்கள். மாணவக் கண்மணிகளே! இதுதான் அஸ்திவாரம். அஸ்திவாரம் பிழையானால், கட்டடம் நிமிர்ந்து நிற்காது. சரிந்துவிடும். முழு ஈடுபாட்டோடு இதனைக் கற்றுக்கொள்ளுங்கள்!

(சந்திப்போம்)