Thursday, January 17, 2019
Tuesday, January 01, 2019
*- டிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –* *பெற்றோர்களே! உங்கள் கையில்தான் உள்ளது!*
*- டிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –*
*பெற்றோர்களே! உங்கள் கையில்தான் உள்ளது!*
*அ. முஹம்மது கான் பாகவி*
பெற்றோர்களே! இன்றைக்குப் பணம் சம்பாதித்துவிடலாம்! வசதியான வாழ்க்கைக்கு வழிவகுத்துவிடலாம்! பிள்ளைகளைச் செல்லமாகச் செல்வச் செருக்கோடு வளர்த்தும்விடலாம். பட்டம் பதவிகளை அவர்களுக்கு வாங்கியும் கொடுத்துவிடலாம்!
ஆனால், நாம் பெற்ற குழந்தைச் செல்வங்களைப் பண்பாடு உள்ளவர்களாக, ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர்களாக, ஆணோ பெண்ணோ கற்பொழுக்கத்தில் கரும்புள்ளி படியாதவர்களாக –சுருங்கக் கூறின் பாரம்பரிய மனித நாகரிகம் உள்ளவர்களாக- வளர்த்து ஆளாக்குவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.
உங்களோடு உங்கள் மக்கள் வீட்டில் இருக்கும்வரைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறீர்கள்; பிள்ளைகளின் ஒவ்வோர் அசைவையும் அனுமானித்துப் பாடம் எடுக்கிறீர்கள்; பாசத்தோடு கட்டியணைத்துப் புத்திமதிகள் சொல்கிறீர்கள். சில நேரங்களில் கடிந்தும்கொள்கிறீர்கள். எல்லாம் சரிதான்.
வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டில் பெண்ணோ ஆணோ கால் பதித்துவிட்டால், அங்கே கழுகுகள், அதிலும் பிணந்தின்னிக் கழுகுகள் இரைதேடி வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆசை வார்த்தை காட்டி, உல்லாச உலகம் பேசி, இளமை இன்பங்களைப் பட்டியலிட்டுக் கொத்திக் செல்லக் காத்திருக்கின்றன. பெரும்பாலும் ஆண்பிள்ளைகள் கஞ்சாவிற்கும் போதைப் பொருளுக்கும் சமூகவிரோதிகளால் அடிமைகளாக்கப்படுகிறார்கள். பெண்கள் காதல் வலையில் சிக்கி, கற்பையும் இழந்து, குடும்பக் கௌரவத்தையும் சந்தி சிரிக்கவைத்து, தானும் அழிந்து தம் சார்ந்தோரையும் தூக்கில் தொங்கச் செய்துவிடுகின்றனர்.
இதுவெல்லாம் ஒருபக்கம் இருக்க; நம் குழந்தைகளின் கையிலேயே ஒரு கருநாகம் சுற்றிக்கொண்டிருக்கிறது. எப்போது நம் செல்வங்களைத் தீண்டி, நுரை தள்ளச் செய்யுமோ தெரியாது. அதுதான், ‘ஸ்மார்ட் ஃபோன்’ என்ற அலைபேசி நாகப்பாம்பு. இது வீட்டுக்குள்ளேயே, நம் கண் முன்னேயே நம் குழந்தைகளைத் தீண்டிவிடக்கூடும். இந்த ஆபத்திலிருந்து பிள்ளைகளைக் காப்பதுதான் பெற்றோர்களான நம் முன்னுள்ள மிகப் பெரிய சவால்.
*டிக் டாக் வீடியோ*
’டிக் டாக் வீடியோ’ என்ற செல்போன் செயலி ஒன்று, நம் இளவல்களை அழிக்கத் துவங்கியுள்ளது. பைட்டேன்ஸ் என்ற சீன நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ஆபாச செயலிதான் இது. 50 கோடி மக்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகிறார்களாம்! அமெரிக்காவின் 13 வயது சிறுமியான ஹலியா பீமர் என்பவரை டிக் டாக் வீடியோமூலம் 50 லட்சம்பேர் பின்தொடர்கின்றனராம்!
பேஸ்புக் போன்ற வலைதளங்களில் இந்த வீடியோ பிரபலம். இந்த செயலியில் பாடல்கள், வசனங்கள், திரைப்படக் காட்சிகள், கதாநாயகன், கதாநாயகி இணைந்து ஆட்டம் போடும் பாடல் வரிகள் என எல்லாமும் கிடைக்கும். இந்தக் காட்சிகளைக் காணும் இளசுகள் ஆர்வக் கோளாறினால் தன்னைத்தானே ஒரு ஹீரோவாக, ஹீரோயினாகக் கற்பனை செய்துகொண்டு, அதேபோன்று வீடியோ எடுத்து, அதை டிக் டாக் செயலியில் பதிவு செய்துவிடுகின்றனர். இவற்றில் சில ஆபாசமாக இருப்பது உண்மை.
இத்தகைய வீடியோக்களைப் பார்க்கும் விவஸ்தைகெட்ட காமுகர்கள் சிலர், அப்பெண்களை ஆபாசமாக வர்ணித்துக் கொச்சையான கருத்துகளைப் பகிர்கின்றனர். ஆபாசமான சினிமாப் பாடல் வரிகளுக்குப் பெண்கள் வாயசைத்து, அதனை வீடியோவாக வெளியிடும்போது, இத்தகைய எதிர்வினைகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய அவலம்தான் இன்று உள்ளது.
அது மட்டுமன்றி, இந்த வீடியோக்களை செயலியில் பார்க்கும் நபர்கள் சிலர், அந்தப் பெண்ணின் முகவரி, அலைபேசி எண் போன்ற விவரங்களைக் கேட்டு அப்பெண்ணுக்குத் தனிப்பட்ட முறையில் தொல்லை தருவதும் உண்டு. இதையடுத்து, டிக் டாக் வீடியோவுக்கு இந்தோனேசியா நாடு கடந்த மே மாதம் தடை விதித்தது. பிறகு அந்த நிறுவனம் கெஞ்சிக் கூத்தாடி இந்தோனேசியாவின் கண்டிஷன்களை ஏற்கவேண்டியதாயிற்று.
11-15 வயதுடைய சிறுமியரில் 58%பேர் டிக் டாக்கில் மயங்கிக் கிடக்கிறார்களாம்! இதையடுத்து பாலியல் இச்சைகளுக்கு இளம் வயதினர் இலக்காக்கப்பட வாய்ப்பு உண்டு என பிரான்ஸ் போலீசாரே எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை முற்றிப்போயிருக்கிறது. ஆக, ஆபாசமான அசைவுகளுடன் நடனங்கள், கவர்ச்சியான உடலமைப்பைக் காட்டும் வீடியோக்கள், ஆபாச வசனங்களுடன் கூடிய வீடியோக்கள் இந்த செயலியில் அதிகம் வருகின்றன.
*உங்கள் கையில்தான்*
பெற்றோர்களே! இப்போது சொல்லுங்கள்! உங்கள் செல்வங்களை யார் காப்பது? பள்ளி, கல்லூரி, தங்கும் விடுதி, பணிபுரியும் இடம், சுற்றுலா தலம், பொழுதுபோக்கு விடுதி, சினிமா தியேட்டர், கடற்கரை, நட்பு வட்டம்… என எதை எடுத்துக்கொண்டாலும் உங்கள் மகனை, அல்லது மகளைக் கலாசார ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் வழிகெடுக்கவும், பாழுங் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிடவும், ஆயிரமாயிரம் கண்கள் வலைவீசிக் காத்திருக்கின்றன; வாய்ப்பை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து தவம் கிடக்கின்றன.
நம்மைச் சுற்றி நடக்கும் கசப்பான, அருவருப்பான சம்பவங்கள் இதையே நாள்தோறும் உறுதி செய்துவருகின்றன. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியன்று; கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிற காட்சி. இத்தனைக்குப் பிறகும் ‘என் பிள்ளை அப்படிப்பட்ட ரகமல்ல’ என்று சொல்லி, எத்தனை காலம் காவலின்றி பிள்ளைகளை விடப்போகிறீர்கள்?
குழந்தைப் பருவத்திலிருந்தே, இறையுணர்வை, இறையச்சத்தை, மறுமை விசாரணையை, இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகத்தை, மறுமையின் நித்தியத்தைக் குழந்தைகள் மனதில் பதியச் செய்யுங்கள். பாவங்கள், குற்றங்கள் பற்றிய வெறுப்பை ஏற்படுத்துங்கள். பள்ளி மற்றும் கல்லூரி படிப்போடு நிறுத்திவிடாமல், சமயம்சார்ந்த கல்வியை, வேதத்தை, சான்றோர் வழியை குழந்தைகள் கற்க ஏற்பாடு செய்யுங்கள்!
நல்ல நண்பர்களுடன் மட்டுமே பழகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல நூல்களைப் படிக்கின்ற ஆர்வத்தையும் நல்லுரைகளைக் கேட்கின்ற பழக்கத்தையும் ஊட்டி வாருங்கள்! எல்லாவற்றையும்விட, பிள்ளைகளின் நல்லொழுக்க வளர்ச்சிக்காக எப்போதும் இறையை வேண்டியவண்ணம் இருங்கள்!