*காலச்சுவடு மதிப்புரையும் கான் பாகவி கருத்துரையும்*
‘ரோஜா’ மனம் எனும் தலைப்பில் களந்தை பீர் முஹம்மது எழுதிய நூல் மதிப்புரை கண்டேன். அவர் பெயரைக் கண்டவுடன், எல்லாரையும் போன்று நானும் “என்ன பூகம்பத்தைக் கிளப்பியுள்ளாரோ!” என்ற தயக்கத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன். நூலின் தலைப்பும் என் அச்சத்தை உறுப்படுத்தும்வகையில் ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ என்று இருந்தது. நூலின் அட்டைப் படம்வேறு என் அச்சத்திற்கு எண்ணெய் வார்த்தது.
மதிப்புரையை நுகர்ந்தபின் முகம் மலர்ந்தது. மனத்திற்குள் நூலாசிரியர் அப்சலையும் மதிப்புரை தீட்டிய களந்தையாரையும் வாழ்த்திக்கொண்டேன். சினிமா எனக்குத் தொடர்பில்லாத துறைதான். ஆனால், விவாதிக்கப்படும் பொருளோ முஸ்லிம்கள் தொடர்பானது; சொல்லப்போனால் இஸ்லாம் குறித்தது.
சினிமா என்பது, என்போன்றோரின் பார்வையில் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். ஒரு படத்தின் கதைக்களம் கற்பனையாகவே இருந்தாலும், அதன் கரு உண்மைக்குப் புறம்பாக இருக்கலாமா? ஒரு சமூகத்தின் முகத்தைக் கோரப்படுத்துவதும் அதன் நம்பிக்கையையே குற்றப்படுத்திக் கூண்டில் நிறுத்துவதும்தான் பொழுதுபோக்கா?
உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ சிலர் சுயநலத்திற்காக, அல்லது அரசியல் நோக்கத்திற்காக ஆயுதமேந்தி கண்மூடித்தனமாக அப்பாவிகளைச் சுட்டுத்தள்ளுகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த சமூகத்தின் மீதே ‘பயங்கரவாதிகள்’ முத்திரை குத்தி, சுமுக வாழ்வை மேற்கொண்டிருக்கும் பெரும்பான்மை அங்கத்தினரை இழிவுபடுத்துவது என்ன ரசனை?
நல்ல வேளையாக, சமூக நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதற்கென்றே பலர் திரைப்படங்களைத் தயாரித்துவந்த நிலையில், அதற்கு நேரெதிரான படங்களையும் தயாரித்து சிலர் வெளியிட்டது ஆறுதல் அளிக்கிறது. சினிமாதானே என்று புறம்தள்ளிவிட்டுப் போக முடியாத அளவிற்கு அது இன்றைக்கு ஒரு பெரிய ஊடகமாக மாறிவிட்டிருக்கிறது.
மணிரத்தினம் போன்றோர் திரையில் புதைத்த வெடிகுண்டுகளின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், அப்சலின் இந்நூல் நிச்சயமாக வாசகர்களின் இதயக் கதவைத் திறக்கும் என நம்பலாம். பாகிஸ்தானையும் இந்திய முஸ்லிம்களையும் நட்புச் சக்திகளாகக் கருதி இந்துக் கலைஞர்கள் படம்பண்ணி மாபெரும் வசூலை ஈட்டியுள்ளார்கள் என்பது, ஒரு நல்ல அடையாளம். அதிலும், அவர்கள் தம்மையும் தம் வாழ்வையும் பணயம் வைத்துப் படங்கள் எடுத்து வென்றுள்ளார்கள் என்பது வியப்பின் உச்சம்.
சர்வதேச அளவில் ‘இஸ்லாமோபோபியா’ ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, முஸ்லிம் சமூகம் முடங்கிக் கிடப்பதற்கு நூலாசிரியர் கண்டனம் தெரிவிக்கிறார். இது, சமூகத்தின் மீது அவருக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது.
ஆம்! முஸ்லிம் சமூகம் தன் ஆற்றலை எதில் செலவிடுகிறது? தன்னைப் பற்றிய உண்மைகளை, தன் மார்க்கம் உலக மாந்தருக்குமுன் எடுத்துவைக்கும் மனிதநேயப் பக்கங்களை எப்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் போகிறது? தம்மை நஞ்சூட்டிக் கொல்லப்போன யூத யுவதியை, கத்தியால் குத்தப்போன ஒரு இளைஞனைப் பழிதீர்க்க சக்தி இருந்தும் மன்னித்த மாநபி பற்றி எப்போது எடுத்துரைக்கப்போகிறது?
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை