- கான் பாகவி
நவீன இயந்திரங்களின் வருகையால் மனித நாகரிகமும் உயர்பண்பாடுகளும் நாளுக்குநாள் செத்துக்கொண்டிருக்கின்றன. அறிவியல் முன்னேற்றம் மனிதகுலத்தை மீளமுடியாத துயரங்களில் ஆழ்ப்படுத்திவருகிறது. ஒரு பக்கம், மனித நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துவதில் வெற்றிகண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள், இன்னொரு பக்கம் மனிதனை இதயமில்லாத இயந்திரமாக மாற்றிவருகின்றன என்பதுதான் உண்மை.
கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா என்பதை, குழந்தை பிறப்பதற்கு முன்பே கண்டுபிடிக்கின்ற நுண்ணிய கருவிகள் வந்துவிட்டன. இக்கருவிகளால் சிசுவின் பாலினத்தை அறிந்துகொண்டு, பெண்சிசுவாக இருப்பின் அதைக் கருவிலேயே கலைத்துவிடுகின்ற கொடுமை உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. தவறான உறவால் உண்டாகும் கருவை கலைப்பது மற்றொரு புறம் அரங்கேறிவருகிறது.
இதனால் உலக அளவில், குறிப்பாக ஆசிய நாடுகளில் ஆண்-பெண் விகிதாசாரம் அபாயகரமான அளவுக்கு வித்தியாசப்படுகிறது. இந்நிலை நீடித்தால், பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, திருமண வாழ்வே கேள்விக்குறியாகிவிடலாம். ஆண்களுக்குப் பெண்கள் கிடைக்காத காலகட்டத்தில், விபசாரம், ஒருபால் உறவு, சுயஇன்பம் போன்ற பாலியல் குற்றங்கள் தலைவிரித்தாடத் தொடங்கிவிடும். இது மனித இனத்திற்கே பெரும் கேடாக முடியும்.
அச்சுறுத்தும் ஆய்வு
பிரிட்டனிலிருந்து வெளிவரும் Lancet மருத்துவ இதழும் அமெரிக்காவின் Guttmacher எனும் மகளிர் சுகாதாரத்துறை அகாடமியும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் நம்மை கதிகலங்கச் செய்கின்றன.
- உலகம் முழுவதிலும் ஆண்டுக்கு 4 கோடியே 20 லட்சம் கருக் கலைப்புகள் நடக்கின்றனவாம்! அதாவது நாளொன்றுக்கு 1.15 லட்சம் கருக்கள் கலைக்கப்படுகின்றன.
- உலக சுகாதார மையம், பாதுகாப்பாற்ற கருக்கலைப்புகளைத் தடுக்க முயன்றும், ஆண்டுக்கு 21.6 மில்லியன் கருக்களையும்விட அதிகமானவைக் கலைக்கப்படுகின்றன-என்று அந்த மையம் அறிவித்தது. திரும்பத் திரும்ப கருக்கலைப்பு செய்துகொள்ளும் 74 ஆயிரம் பெண்கள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.
- ஆசிய நாடுகளில் மட்டும் புதிய தொழில்நுட்பம் நுழைந்தபின் ஆண்டு ஒன்றுக்கு 160 மில்லியன் கருக்கள் கலைக்கப்படுகின்றன வாம்!
இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? மனிதர்களின் போக்கு தலைகீழாக மாறிவிட்டது; இயற்கையான பண்புகள், சமய விதிகள் ஆகியவற்றிலிருந்து மனித சமுதாயம் வெகுதூரம் விலகிச்சென்றுவிட்டது. இதனால், மனித உயிர்களின் புனிதம் மதிக்கப்படாமல் மிதிக்கப்படுகிறது- என்பதைத்தானே இந்த ஆய்வுகள் உணர்த்துகின்றன!
அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் நடக்கும் கருக்கலைப்புகளில் மூன்றில் இரு பங்கு மணமாகாத கர்ப்பிணிகளுக்கே நடக்கிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் நடப்பவை, பகுத்தறிவையும் மார்க்கத்தையும் புறந்தள்ளிவிட்டன; இயற்கை விதிகளுக்கும் பலஇன படைப்பு முறைக்கும் வேட்டுவைக்கின்றன.
பரிசோதனை செய்துபார்க்கையில் பெண் சிசுதான் என்பது தெரிந்தவுடனேயே கருவைக் கலைத்து சிசுவைக் கொன்றுவிடுகின்றனர். இது முந்தைய அறியாமைக்கால கலாசாரத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அறியாமைக் கால மனிதர்கள் பெண்குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்தார்கள்; இன்றைய புதுயுக மனிதர்கள் வயிற்றிலேயே சமாதி எழுப்பிவிடுகின்றனர்.
அவனாவது, குழந்தையின் பால்வடியும் முகத்தைப் பார்த்துவிட்டுப் புதைத்தான்; இவனோ முகம் காணாத சிசுவை இரத்தமாக்கிக் கழிப்பிடத்தில் கரைத்துக்கொண்டிருக்கிறான். ஈவிரக்கம் இல்லாவிட்டாலும் புதைப்பதில் ஒரு செய்முறை உண்டு; ஆனால், கலைப்பதில் அந்த நாகரிகமும் இல்லை.
கலைப்புக் கலாசாரம்
ஒலியலைக்கு (Sound Wave) 12 வார கருவை இனம் கண்டு, ஆணா, பெண்ணா என்று காட்டும் திறன் உண்டு. தாய் வயிற்றில் கருவைச் சுற்றியுள்ள பனிக்குடத்தின் (Amnion) திரவத்தை வெளியே எடுத்துப் பரிசோதித்தால் 15 முதல் 20 வாரம்வரையிலான கருவின் பாலினம் தெரிந்துவிடும்.
ஆனால், இதுவரை ஆசியாவை எட்டாத புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தாயின் இரத்தத்தையும் கருவின் உயிரணுக்களையும் பரிசோதிப்பதன்மூலம் ஏழுவாரக் கருவின் பாலினத்தைக் கண்டறிய முடியுமாம்.
தாயின் சிறுநீரைப் பரிசோதித்துப்பார்த்து 10 வாரக் கருவின் பாலினத்தைச் சொல்ல முடியுமாம்!
இந்த விஞ்ஞானக் கருவிகளின் பயன்பாடு, இன்று மனிதகுலத்திற்குப் பேரழிவைத் தந்துகொண்டிருக்கிறது; ஆசியாவில் மட்டும் 16 கோடி கருக்கலைப்பு குற்றங்களைச் செய்யவைத்திருக்கிறது.
இந்தியக் குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவில்லை. இதனால், பெண் குழந்தை என்றால் பெற்ற தாய்கூட முகம் சுளிக்கிறாள். இதன் எதிரொலியாக, கடைசி 50 ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்தே வந்திருக்கிறது. இந்த வெறுப்புக்குக் காரணங்கள் பல. சமூக மற்றும் பொருளாதார பின்னணிகளே முக்கியக் காரணமாகும்
சிசுவின் பாலினப் பரிசோதனைக்குச் சட்டப்படி தடை இருந்தாலும், பணத்துக்காக இந்தப் பாவத்தைச் செய்யும் மருத்துவர்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. இச்சோதனைக்குக் கிடைக்கும் வருவாய், பிறகு பெண்சிசு என்று தெரிந்தால் கருவைக் கலைப்பதில் கிடைக்கும் வருவாய் ஆகியன அவர்களின் மனதைக் கல்லாக்கிவிடுகின்றன.
இவ்வாறு இந்தியாவையும் சீனாவையும் ஆட்டுவித்த கருக்கலைப்பு, இப்போது ஆரிமீனியா, ஜார்ஜியா, அல்பானியா, வியட்நாம் போன்ற இதர நாடுகளுக்கும் பரவிவருகிறது.
சீனாவைப் பொறுத்தவரை, கடந்த மூன்று அரசியல் பருவங்களாகவே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. முதல் குழந்தை பெண்ணாக இருப்பின், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள கிராமப்புற தம்பதிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
‘ஒரு குழந்தை’ அரசியல் காரணத்தாலும் ஆண் குழந்தைகளையே விரும்பும் பெற்றோரின் காரணத்தாலும் சீனாவில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். பெண்சிசு என்றவுடன் அதிகமானோர் கருக்கலைப்புக்கே செல்கின்றனர்.
இன்று சீனாவில் நிலைமை என்னவென்றால், 121 ஆண் குழந்தைகள் பிறக்கும் இடத்தில் 100 பெண் குழந்தைகளே பிறக்கின்றன. மீதியுள்ள 21 ஆண் குழந்தைகள் வளர்ந்து ஆளானபின் திருமணம் செய்ய பெண்களுக்கு எங்கே போவார்கள்?
கிழக்கை அழிக்கும் மேற்கு
ஆசிய நாடுகளில் பரவிப்போயுள்ள கருக்கலைப்பு பாவங்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஊக்கமளித்துவருகின்றன. எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து நடந்துவரும் இந்தக் கொலைக்கு ஆசியாவில் மட்டும் 160 மில்லியன் சிசுக்கள் பலியாகியுள்ளன என்கிறார், இந்தியாவின் பிரபல பெண் எழுத்தாளர் மாரா.
ஒரு பக்கம் குடும்பக் கட்டுப்பாடு; இன்னொரு பக்கம் பிறந்தபின் பெண்சிசுக் கொலை; மூன்றாவதாகக் கருக்கலைப்பு. மேற்குலகின் பணம் இதற்காகத் தண்ணீராய் செலவழிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் குறைப்பதற்கு 1969ஆம் ஆண்டு அமெரிக்கா முன்வைத்த 12 திட்டங்களில் ஒன்றாக சிசுவின் இனத்தைக் கண்டுபிடித்து அழிக்கும் முறையையும் சேர்த்தது.
மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருக்கலைப்பே சிறந்த தீர்வாகும் என அமெரிக்கா அறிவித்தது. உலக வங்கி இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்தது. ராக்ஃபில்லர், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் பணத்தை வாரிஇறைத்தன. இந்தியாவில் AIIMS எனும் மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் டாக்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தாயின் வயிற்றில் வளரும் கருவின் பாலினத்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வுமுறையை இந்திய மருத்துவர்கள் கற்றார்கள். இன்று அதன் விளைவை இந்தியா அனுபவிக்கிறது என்கிறார் மாரா.
அதே மருத்துவக் கழக டாக்டர்கள் மட்டும் ஒரு லட்சம் பெண்கருக்களைக் கலைத்துச் சாதனை படைத்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று இந்தியாவில் 112 ஆண் குழந்தைகளுக்கு நிகரில் 100 பெண் குழந்தைகளே பிறக்கின்றன.
மார்க்கம் என்ன சொல்கிறது?
திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அரசாட்சி உரியது. அவன், தான் நாடுவதைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண் குழந்தைகளை அவன் வழங்குகின்றான்; தான் நாடுவோருக்கு ஆண் குழந்தைகளை வழங்குகின்றான்; அல்லது ஆண்களையும் பெண்களையும் கலந்து வழங்குகின்றான். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன்; ஆற்றல்மிக்கவன். (42:49,50)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு மூன்று பெண்குந்தைகளோ மூன்று சகோதரிகளோ, அல்லது இரண்டு பெண்குழந்தைகளோ இரண்டு சகோதரிகளோ இருந்து, அவர்கள் விஷயத்தில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்து, அவர்களுக்கு நன்மை புரிந்தால், அவர் சொர்க்கம் செல்லாமலிருப்பதில்லை. (முஸ்னது அஹ்மத்)
இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் அளித்தள்ள தீர்ப்பாவது:
கரு உண்டான முதல் 40 நாட்களுக்குள் தகுந்த காரணமிருந்தால் கருவை கலைப்பது தவறாகாது. இதையும் சிலர் ஹராம் என்கின்றனர். 40 நாட்களுக்குப்பின் கலைப்பது ஹராம் ஆகும்.
120 நாட்கள் கடந்துவிட்டாலோ கருக்கலைப்பு கடுமையான ஹராமாகிவிடும். தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நெருக்கடியில் மட்டுமே விதிவிலக்கு உண்டு.
ராப்பிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் ஃபத்வா பிரிவு அளித்துள்ள தீர்ப்பு:
சிசுவின் பாலினத்தை அறிய எந்தப் பரிசோதனையும் செய்வது கூடாது. சிசுவுக்கு ஏற்பட்ட சில நோய்களுக்கான சிகிச்சைக்காக மட்டுமே இப்பரிசோதனை அனுமதிக்கப்படும். ஏனெனில், ஆண் சிசுவாக இருந்தால் அதற்கு ஒரு விதமான சிகிச்சையும் பெண்சிசுவாக இருந்தால் அதற்கு ஒரு விதமான சிகிச்சையும் அளிக்கவேண்டியதிருக்கும். இது மரபுவழி நோய்களுக்குப் பொருந்தும்.
ஆகவே, முஸ்லிம்கள் இந்தப் பாவத்தைச் செய்யக் கூடாது.