Thursday, February 21, 2019

எழுத்துத் துறையில் ஏற்றம் எய்துவோம்

(இது வேலூர் பாக்கியாத் லஜ்னதுல் இர்ஷாத் நூற்றாண்டு விழா மலரில் இடம்பெற்ற கட்டுரை)
--------------------------------------------
#எழுத்துத்_துறையில்_ஏற்றம்_எய்துவோம்

#மௌலவி_அ.#முஹம்மது_கான்_பாகவி

எழுத்தென்பது ஒரு சுகமான அனுபவம். பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுதத் தொடங்கும்போது, எழுத்தாளர்முன் யாரும் இருப்பதில்லை. எங்கோ ஒரு கோடியில் அமர்ந்துகொண்டு, அவர்தம் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் வடிவம் கொடுக்கிறார். ஆனாலும், அங்கு ஆயிரமாயிரம் இதயங்களோடு மானசீகமாக உறவாடுகிறார்; உரையாடுகிறார்.

எவ்வளவு பெரிய சொற்பொழிவும் காற்றோடு கரைந்துபோகும்; எழுத்தோவியங்களே காலத்திற்கும் நின்று உள்ளத்தைக் கரைக்கும்; கண்ணீரைச் சுரக்கும். படுக்கை அறைவரை செய்தியைக் கொண்டுசேர்க்கும் அற்புதத் தூது எழுத்து. எழுத்து என்று ஒன்று இல்லாமல்போயிருந்தால், மறைகள் மறைந்துபோயிருக்கும்; வரலாறுகள் வாழாவெட்டியாயிருக்கும்; செந்நெறிகள் செல்லரித்துப்போயிருக்கும்.

உலகமறையாம் திருக்குர்ஆன், செவிவழி வந்த இறைச்செய்திதான். ஆனால், உடனே பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை மட்டுமல்ல; உலகம் உள்ளளவும் அது நிலைத்து நிற்கும். இறுதித் தூதர் செம்மல் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழிகள், செவியால் கேட்டு, நினைவால் பதிந்து, காலத்தால் எழுத்துருவம் பெற்று பாதுகாக்கப்பட்டவையே.

உலக வரலாறுகள், படிப்பினை பயக்கும் சுய சரிதைகள், பாடமாகும் தத்துவங்கள், இனிக்கும் கவிதைகள், கசக்கும் அனுபவங்கள், காலவெள்ளத்தில் முகவரி இழந்தவர்கள், போராடி அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டவர்கள், மறைந்த மாமேதைகள், அவர்களின் கனவுகளான கலைகள்… என எந்த அறிவை எடுத்துக்கொண்டாலும், எல்லாம் எழுத்தால் ஏற்றம் எய்தியவையே. எழுத்து என்ற ஆசான் மட்டும் இல்லையானால், எந்தக் கலையும் இல்லை; எந்த இயலும் இல்லை.

*எழுதுகோலும் எழுத்தும்*

‘எழுதுகோல்’ (அல்கலம்) எனும் பெயரில் ஓர் அத்தியாயமே (68) உண்டு திருக்குர்ஆனில். எழுதுகோல் மற்றும் எழுத்தின் அருமையை உணர்த்தவே, எழுதுகோல்மீதும் அதனால் எழுதப்படும் எழுத்துமீதும் வல்லோன் அல்லாஹ் ஆணையிடுகிறான்.

நூன்; எழுதுகோலின்மீதும் (எழுதுகோலால்) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் ஆணையாக! (68:1) என்பதே அந்த அத்தியாயத்தின் முதல் வசனமாகும்.

மனிதன் எழுதுகோலைக் கொண்டே, தான் கற்க வேண்டிய அறிவுகளையும் ஞானங்களையும் எழுதிப் பதிவு செய்கிறான். எழுதுகோல் நாவின் உடன்பிறப்பு; அடியார்களுக்கு அருளாளன் அருளிய விலை மதிப்பற்ற சொத்து. இதிலிருந்து, எழுத்து மற்றும் வாசிப்பின் மகத்துவம் புலனாகிறது.

ஏனைய படைப்புகளுக்கு மத்தியில் மனிதப் படைப்புக்கு மட்டுமே எழுத்தறிவைச் சிறப்பாக அருளியுள்ளான், எழுத்தறிவித்த இறைவன். உள்ளத்தில் உள்ளதை ஓசையின்றி வெளிப்படுத்தும் ஓர் அற்புத ஆயுதமே எழுத்து. (ஸஃப்வத்துத் தஃபாசீர்)

பேனாவின் மகிமைபற்றிப் பேசுகையில் பேருபகாரியான அல்லாஹ் சொல்கிறான்:

*அவன்தான், எழுதுகோலால் கற்றுக்கொடுத்தான்; மனிதனுக்கு, அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.* (96:4,5)
கற்றலால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மையே அறியாமை ஒழிப்புதான். அறியாமைபோல் மனிதனுக்கு மிக மோசமான வைரி வேறெதுவும் இருக்க முடியாது. அறியாமையால்தான், ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டது தலைநகரில். நேரடி சொர்க்கம் செல்வதே தற்கொலைக்குக் காரணமாம்! இந்த 21ஆம் நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள். அறியாமையால்தான், படைப்பைப் படைப்பாளன் என நமபி சோரம்போகிறாள் மனுஷி; அறியாமையால்தான் கெட்டிக்காரனிடம் ஏமாந்துபோகிறான் மனிதன்.
அறியாமை எனும் பெருநோயைக் குணப்படுத்தும் அருமருந்து எழுத்து. அதை எழுதுகிறது எழுதுகோல். இதனால்தானோ என்னவோ, இறைவனின் முதலாவது படைப்பு எழுதுகோல் என்றார்கள், படிக்காத மேதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
*அல்லாஹ் முதலில் படைத்தது எழுதுகோலாகும். அதனிடம் அவன் ‘எழுது!’ என்றான். “என் இறைவா! எதை நான் எழுதட்டும்?” என வினவியது எழுதுகோல். “யுகமுடிவு நாள்வரை தோன்றும் ஒவ்வொன்றின் விதியை எழுது!” என்றான் இரட்சகன்.* (அபூதாவூத்)
நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: *இறைவன், நான்கைத் தன் கரத்தாலேயே படைத்தான். 1. அர்ஷ் (இறை அரியணை) 2. அத்ன் (எனும் மேலான சொர்க்கம்) 3. எழுதுகோல் 4. ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள்.* (நூல்: அல்அழ்மத்)

*எழுத்தின் வகைகள்*

எழுத்தாக்கங்களில் வகைகள் பல உண்டு. கடிதத்தில் தொடங்கி ஆராய்ச்சி நூலில் முடியும் அவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தரம் உண்டு; எழுதும் முறையும் உண்டு. எழுத்து வசப்பட்டுவிட்டால், எந்த வகையும் கைவந்துவிடும்; கைக்கு அடக்கமாகிவிடும்.

1. *கடிதங்கள்*

கடிதம் வரைதல் ஒரு பெரும் கலை. பெற்றோர், உறவினர், நண்பர், ஆசிரியர், மாணவர், தொண்டர்… எனத் தெரிந்த முகங்களுக்கு நாம் வரையும் மடல்களும் ஓர் எழுத்தோவியம்தான். தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியே எழுத்தை வளர்த்துக்கொண்டவர்கள் உண்டு; தொண்டர்களை வளைத்துக்கொண்டவர்களும் உண்டு.

தினசரி, மாத இதழ், வார இதழ் ஆகியவற்றுக்கு வாசகர் கடிதம் எழுதியே, எழுத்தை வசப்படுத்தியவர்களும் அதன் வாயிலாக மக்களுக்கு அறிமுகமானவர்களும் உண்டு. இன்றைக்கு வலைத்தளங்களில் பின்னோட்டம் போட்டே பிரபலமடைந்ததோரும் உண்டு. மடல் வரைவு ஓர் எல்லையைத் தொட்டுவிட்டால், அடுத்தகட்ட எழுத்தை நோக்கி எளிதாகப் பயணிக்க முடியும். எனவே, கடிதம் எழுதுவதை மலிவாக எண்ணிவிடக் கூடாது.

2. *கட்டுரைகள்*

கட்டுரை எழுதுவது, கடிதத்தைக்காட்டிலும் சற்றுக் கடினமானது. கட்டுரைக்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். நாம் சொல்ல நினைக்கும் தத்துவத்தை, நன்னெறியை, திட்டத்தை பாடத்தை வாசகர் மனத்தில் சட்டெனப் பதியவைப்பதற்குக் கட்டுரைபோல் ஓர் எளிய வழி எழுத்துலகில் கிடையாது.

எழுத எழுத, கட்டுரை வரைவதில் ஒரு சுவை தெரிய ஆரம்பித்துவிடும்; வாசகர்கள் விரும்பி வாசிக்கும் அளவுக்குக் கட்டுரையாளரின் ஆக்கம் மேம்படத் தொடங்கிவிடும். பின்னர் அவரது எழுத்தைத் தேடிப்பிடித்துப் படிக்கின்ற நிலைக்கு நேயர்கள் வந்துவிடுவர். தொடர்ந்து எழுதிவருகையில், எழுத்தாளரின் பிம்பம் வாசகர்களின் உள்ளத்தை ஆட்கொண்டுவிடும். எளிதாக அவர் தம் கருத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட முடியும்.

3. *நூல்கள்*

எழுத்தில் நூலாக்கம் என்பது அடுத்த நிலையில் வருகிறது. பல கட்டுரைகளின் தொகுப்பே புத்தகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலத்திற்கேற்ற ஒரு பொருளை எடுத்துக்கொண்டு சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் வகையில், புரிகின்ற பாஷையில் நூலை உருவாக்கினால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். கூவிக்கூவி விற்க வேண்டிய தர்மசங்கடம் நூலாசிரியருக்கு நேராது. பதிப்பகத்தாரும் நாடிவந்து வெளியிடத் தயாராவர்.

சொந்த முதலீட்டில் நூல் வெளியிடுவதென்பது நம் சமூகத்தைப் பொறுத்தமட்டில், கையில் ஒரு பாரத்தைச் சுமந்துகொண்டு கயிற்றில் நடக்கும் வித்தை போன்றது. நான்கைந்து புத்தகங்கள் எழுதி வாகை சூடிவிட்டால், அடுத்தடுத்த கட்டம் எளிதுதான். விற்பனையும் விண்ணைத் தொடும். ஆனாலும் என்ன? வெளியீட்டாளரிடமிருந்து ராயல்டி கிடைப்பதுதான் மாமாங்கம் ஆகிவிடும். மறுபதிப்பு, அதற்கான ஆதாயம் எழுத்தாளரை வந்தடைவது நம்பிக்கையின்பாற் பட்டதாகும்.

4. *மொழிபெயர்ப்பு*

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு நூலைப் பெயர்ப்பதில் ஒரு வசதி உண்டு. மூளையைப் பிழிந்து, தேடியலைந்து நூலுக்கான கருவையோ, கருவிற்கான குறிப்புகளையோ கண்டறிய வேண்டிய கஷ்டம் இருக்காது. மூல நூலில் உள்ளதைச் சரியாக மொழிபெயர்த்துவிட்டாலே வேலை முடிந்துவிடும். மொழிபெயர்ப்பு என்பது இன்று வளர்ந்துவரும் கலையாகும். மூலநூலுக்கு உள்ள மரியாதை மொழிபெயர்ப்புக்கும் கிடைக்கிறது. காரணம் கருத்து, அல்லது தத்துவம் என்பதெல்லாம், ஒருவரிடமிருந்து வெளிவரும் வரைதான் அவருடையவை. வெளிவந்துவிட்டால் பொதுவுடைமை.

ஆயினும், மொழிபெயர்ப்புக் கலை சற்று கடினமானது. மூல நூலாசிரியரின் பின்னால்தான் மொழிபெயர்ப்பாளர் பயணிக்க முடியும். அவரை முந்திச் செல்ல முடியாது; செல்லவும் கூடாது. அவர் சொல்லவரும் பொருள், சொல்கின்ற தொனி, எழுதிய சூழல், நடை ஆகிய அனைத்திலும் அவரையே பின்தொடர வேண்டும். நமது சுயம் அவரில் மறைந்துபோகும்.

சில வேளைகளில், அசலைவிட நகல் மெச்சத்தக்கதாக அமைவதும் உண்டு. ஆனாலும், மொழிபெயர்ப்பில் தவறிழைத்துவிட்டாலோ பெருந்துரோகமாகிவிடும். மூல நூலாசிரியரின் சுயமரியாதைக்குப் பங்கம் நேர்ந்துவிடும். அதிலும், இறைமொழி, நபிமொழி போன்ற மார்க்க நூல்களின் மொழிபெயர்ப்பில் கோட்டைவிட்டால், அதைவிடக் கேடு வெறெதுவும் இருக்க இயலாது.
5. *கதைகள்*

சிறுகதை, நாவல், கவிதை, ஆய்வு, அறச்சீற்றம் தொடர்பான பதிவுகள் அடுத்த நிலையில் வரும். இவற்றில் கவிதை, எல்லோருக்கும் வாய்ப்பதில்லை; வாய்த்துவிட்டாலோ உயர்வுதான். மரபுக் கவிதையில் உள்ள சிக்கல் கேட்கவே வேண்டாம்! புதுக் கவிதைப் பணிகிறது பலருக்கும். காரணம், இல்லை அதற்கு இலக்கணம். இலக்கணம்தானே தலைக்கனம்! நான் சொல்வது, தலைக்குக் கனம்.

6. *இயல்கள்*

அடுத்து பாடநூல், இலக்கிய நூல், வரலாற்று நூல், சமய நூல், அறிவியல் நூல், பொருளியல் நூல், அரசியல் நூல், ஆராய்ச்சி நூல்… என இயல்வாரியான நூல்களின் பட்டியல் நீளும்.

*எழுதுவது எப்படி?*

இது, முக்கியமான குறுந்தலைப்பு. கடிதத்தில் தொடங்குவோம். அதிலும் வாசகர் கடிதத்தை எடுத்துக்கொள்வோம். ஓர் ஆக்கத்தைப் படிக்கிறோம். ஆக்கத்தின் ஆக்கிரகத்தை –தத்துவத்தை- முதலில் உள்வாங்க வேண்டும். அதை நுகரும்போது மனத்தில் துளிர்விடும் துள்ளல், உணர்ச்சி, ஆதரவு, எதிர்ப்பு ஆகிய உணர்வுகளை அப்படியே எழுத்தில் வடிக்க வேண்டும்.

உணர்ச்சிகளுக்கு வரிவடிவம் கொடுப்பதுதான் எழுத்துக்கலை. உணர்ச்சி உலர்ந்துபோவதற்கு முன்பே எழுதிவிட வேண்டும். உணர்ச்சி குளிர்ந்துவிட்டால், எழுத்தில் சூடு இருக்காது; ஆறிய தேநீராகிவிடும். அதே நேரத்தில், எவ்வளவு கடுமையான எதிர்ப்பைக்கூட, நளினமான வார்த்தைகளால் கண்ணியம் குன்றாமல் வெளியிடுவதில் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையேல், வாதத்தில் இருக்கும் நியாயத்தை, வார்த்தையில் இருக்கும் காரம் கொப்பளிக்கச் செய்துவிடும்; நம் கடிதம் பிரசுரமாவதற்கு அதுவே தடையாகிவிடும்.

அடுத்து கட்டுரை. கட்டுரையின் தலைப்பே முதன்மையானது. முதலில் அதைத் தேர்வு செய்ய வேண்டும். காலம், இடம், நாட்டு நடப்பு, சமூகத்தின் எதிர்பார்ப்பு ஆகிய தூண்டல்களைக் கண்முன் நிறுத்தித் தலைப்பைத் தெரிவு செய்ய வேண்டும். தலைப்பின் வாசகமும் ஈர்க்கும் வகையில் அமைதல் நன்று.

கட்டுரையின் முன்னுரையில், அதை எழுதுவதற்குக் காரணிகளாக உள்ள விஷயங்களை ஓரிரு பத்திகளில் விவரிப்பது அவசியம். நடப்புகளைச் சொல்லும்போது, புள்ளிவிவரங்கள் கிடைத்தால், அவற்றைக் குறிப்பிடுவது கட்டுரையின் நம்பகத் தன்மைக்கும் தரத்திற்கும் பக்கபலமாக இருக்கும்.

பிரச்சினை என்ன என்பதைச் சுருக்கமாக எடுத்தெழுதியபின், பிரச்சினைக்கான தீர்வைச் சொல்லியாக வேண்டும். இதுதான், கட்டுரையின் ஆன்மாவே. தீர்வைத் தேட வேண்டும். தேடுதல் இல்லையேல், ஈட்டுதல் சாத்தியமில்லை. இறைமறை, நபிமொழி, சான்றோர் கூற்று, வரலாறு, உலக நடப்பு ஆகியவற்றிலிருந்து தீர்வைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிவிட வேண்டும்.

நம் வாதத்திற்குப் பற்றுக்கோடாக (Support) எதை முன்வைத்தாலும், அதற்கான ஆதாரத்தைக் குறிப்பிடத் தவறக் கூடாது. திருக்குர்ஆன் வசனமாக இருப்பின், அத்தியாயம் எண், வசன எண் இரண்டையும் அடைப்புக் குறியில் (Brackets) குறிப்பிடல் வேண்டும். நபிமொழியாக இருப்பின், நபிமொழி இடம்பெற்ற நூல், நபிமொழி எண் ஆகியவற்றை இடம்பெறச் செய்தல் அவசியம். அறிவிப்பாளர் (ராவீ) பெயரையும் தேவைப்படின் குறிப்பிடலாம். சான்றோர் சொல், வரலாற்றுக் குறிப்பு போன்ற தரவுகளுக்கு அதனதன் நூல் பெயரை எழுதிட வேண்டும்.

அடுத்து நூல். என்ன தலைப்பில் புத்தகம் எழுதப்போகிறோமோ அதன் உட்பிரிவுகளை முதலில் தனியாகப் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும்; வரிசைப்டுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உட்பிரிவு தொடர்பான குறிப்புகளையும் திரட்டித் தனியாகக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகுதான், எழுதவே தொடங்க வேண்டும். தொடர்ந்து நீண்ட நேரம் எழுதாமல், இடைவெளிவிட்டு எழுதிவந்தால், எழுத்தில் சடைவு ஏற்படாது. ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடித்துவிட்டு, ஒரு சாமானிய வாசகனாக நின்று நாமே படித்துப்பார்க்க வேண்டும். அவசியம் ஏற்படின் திருத்தம் செய்வதற்குத் தயங்கக் கூடாது; சடையவும் கூடாது.

மூத்த அறிஞர்களிடம் கொடுத்துப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளலாம். அவர்கள் தரும் நியாயமான திருத்தங்களையும் யோசனைகளையும் வாங்கிக்கொள்ளலாம். அதற்காக, நமக்கென்று ஒரு நடை இருக்குமே அதில் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை.

*எழுத்து நடை*

புதிதாக எழுதத் தொடங்கும் நண்பர்கள், தரமான இதழ்களைத் தொடர்ந்து வாசிப்பது அவசியத்திலும் அவசியம். அது தினசரியாகவோ, மாத-வார இதழாகவோ, இலக்கிய நூலாகவோ இருக்கலாம். வாசிக்கும்போதே, விஷயத்தை மட்டுமன்றி அந்தச் சஞ்சிகையின் எழுத்து நடை, சொல்லாட்சி, வாக்கிய அமைப்பு, வேகம், நயம், இங்கிதம் ஆகிய எழுத்துக்கு வேண்டிய அத்துணை அம்சங்களையும் மனத்திலே நகல் எடுத்துவிட வேண்டும்.

நாம் சாதாரணமாகப் பேசும்போது எப்படிச் சொற்களை ஆள்கிறோமோ அப்படியே எழுத்தில் கொண்டுவரலாம். ஆனால், கொச்சை முறையை (Slang) நீக்கிவிட்டு, சுத்தமாக எழுத வேண்டும். (எங்க போன? – எங்கே போனாய்?; நேத்தே படிச்சிட்டேன் - நேற்றே படித்துவிட்டேன்; சாப்புட்டு எத்தன நாளாச்சு? – சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று?)

தமிழில் வல்லினம் (க்,ச்,ட்,த்,ப்,ற்), மெல்லினம் (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்), ஒற்று அல்லது சந்தி, ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய ஐம்பால், உயர்திணை, அஃறிணை ஆகிய பால் மற்றும் திணைப் பகுப்புகளைக் கவனத்தில் கொண்டு எழுத வேண்டும்.

அவ்வாறே, எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே தமிழிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். எழுத்தில், எழுவாயைச் சொல்லி, நீண்ட இடைவெளிக்குப்பின் பயனிலையைச் சொல்லக் கூடாது. எதையும் சுற்றிவளைக்காமல், சட்டெனப் புரியும் வகையில் வாக்கியங்கள் அமைய வேண்டும்.

ஒரே வாக்கியத்தில் (Sentence), ஒரே வார்த்தை (Word) பலமுறை இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது ஆரோக்கியமான எழுத்துக்கு அழகு. பத்தி (Paragraph) பெரிதாக, நீளமாக அமையாமல் கவனமாகப் பிரித்துவிட வேண்டும்.

*எழுதுபொருள்கள்*

பிழையின்றி எழுத விரும்பும் எழுத்தாளரிடம் இருக்க வேண்டிய சில நூல்களும் சில பொருட்களும் உண்டு. அவையாவன:
A. *அகராதிகள் (Dictionary)*

(தமிழில்) 1. க்ரியா – தற்காலத் தமிழ் அகராதி. இதில் தமிழ்ச் சொற்களுக்கான பொருள் விளக்கமும் அச்சொற்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்களும் இடம்பெறுகின்றன. 2. கழகத் தமிழ் அகராதி 3. செந்தமிழ் அகராதி 4. மதுரைத் தமிழ் பேரகராதி 5. மரபுத் தொடர் 6. தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி 7. பல்கலைக் கழக ஆங்கில-தமிழ் அகராதி.

(அரபியில்:) 1. அல்முன்ஜித் 2. காமூஸ் இல்யாஸ் 3. அல்மவ்ரித் (அரபி-ஆங்கிலம்; ஆங்கிலம்-அரபி)

(உர்து:) 1. ஃபைரூஸுல் லுஃகாத் 2. அல்காமூசுல் ஜதீத் (உருது-அரபி)

B. *தகவல் களஞ்சியம் (Encyclopedia)*

1. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்- 3 பாகம்) 2. விக்கிபீடியா (இணையக் களஞ்சியம்)

C. *எழுதுபொருட்கள் (Stationery)*

1. நல்ல பேனா 2. பென்சில் 3. ஸ்கேள் 4. ஒயிட்நர் 5. பேடு 6. ஸ்டிக்கர் 7. ஸ்டாப்ளர். 8. பேப்பர்

Monday, February 04, 2019

நல்லடியார் மறைந்தார்! முன்னோடியை இழந்தோம்!

#நல்லடியார்_மறைந்தார்! #முன்னோடியை_இழந்தோம்!

#மௌலவி, அ. #முஹம்மது_கான்_பாகவி

கண்ணியத்திற்கும் மேன்மைக்கும் உரிய மௌலானா M. முஹம்மது யஅகூப் காசிமி ஹள்ரத் அவர்கள் (85), உலமாக்களின் ஒரு பெருங்கூட்டத்தைத் தவிக்க விட்டுவிட்டு மறைந்துபோனார்கள் என்ற செய்தி கிடைத்தபோது, வெளியூரில் இருந்தேன். உடனே புறப்பட்டுவந்து ஜனாஸாவில் கலந்துகொள்ள இயலாத தொலைவில் இருந்தவண்ணம் இதை எழுதுகிறேன்.

எண்ணம் பின்னோக்கிப் பயணித்தது. ஹள்ரத் அவர்கள் பற்றிய நினைவலைகள் நிழலாடின. நான் பாக்கியாத்தில் கல்வி கற்றபோதும், பின்னர் ஆசிரியனாகப் பணியாற்றியபோதும் ஹள்ரத் அவர்கள் பாக்கியாத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார்கள். ஆனால், ஹள்ரத் அவர்களிடம் கல்விப் பாடம் கற்றவன் அல்லன் நான்; வாழ்க்கைப் பாடம் நிறைய படித்திருக்கின்றேன்.

முதலில் அவர்களிடம் என்னைக் கவர்ந்திழுத்து என்னை அவர்களின் ஒரு ரசிகனாக மாற்றியது, அன்னாரது எளிமைதான். இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு, எதிலும் அலட்டிக்கொள்ளாத ஒரு நடைமுறை. பியுசிவரைப் பள்ளிப்படிப்பை முடித்ததால் ஆங்கிலம் வாசிக்கும் திறன் இருந்தது. உருது, தமிழ், அரபி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். 5 ஆண்டுகள் அன்னார் தாய்க் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தில் பாகியாத் பள்ளிவாசலில் இமாமாக மட்டுமன்றி, தராவீஹும் தொழவைத்தார்கள். கிராஅத், தஜ்வீத் உயர் தரத்தில் இருக்குமாம்!

ஸஹீஹுல் புகாரி போன்ற நபிமொழி நூல்கள், பலரும் நடத்தியிருக்கலாம்! என் போன்றோர் மொழிபெயர்ப்பும் செய்திருக்கலாம்! ஆனால், ஸஹீஹுல் புகாரியாகவே வாழ்ந்துகாட்டியவர்களில் ஹள்ரத் அவர்களும் ஒருவர். சுன்னத்தைப் பின்பற்றுவதில் சமரசம் செய்துகொள்ளாத மகான்தான் யஅகூப் ஹள்ரத் அவர்கள்.

விஷாரத்தில் அவர்களது வீடு மிகச் சாதாரணமானது. அபிமானிகள் புதிய வீடு கட்டிக்கொடுக்க முன்வந்தபோதும் மறுத்துவிட்ட பெருமகனார். தஹஜ்ஜுத் விடாத வணக்கசாலி. நடை, உடை, பாவனை அனைத்திலும் சுன்னத் கமழும். பண ஆசை, பதவி ஆசை, புகழ், பரபரப்பு, தன்முனைப்பு போன்ற சாமானியர்களின் ஆசைகளுக்கு அடிபணியாத மேன்மகன். கொள்கைப் பிடிப்பில் சற்றும் தளராத மனஉறுதி, அனாசாரங்களின் எதிரி; ஆசாரங்களின் தொண்டர்.

#தாய்க்_கல்லூரியில்

பாகியாத்தில் நியூலைன் வலப் பகுதி மாடியில் இறுதி அறைதான் ஹள்ரத் அவர்களின் வகுப்பறை. அதில் முதல் அறைதான் எனது வகுப்பறை. நேரமேலாண்மையில் அன்னாரை மிஞ்ச எவராலும் முடியாது. பாடநேரத்திற்கு முன்பே கல்லூரி வந்துவிடுவதும், பாடங்களுக்கு விடுப்பில்லாமல் சரியாக நடத்துவதும், தொழுகைகளுக்கு வந்து சேர்வதும் எனக்கெல்லாம் பாடமாக அமைந்தது என்றால், மிகையாகாது.

என் அறை வழியாகச் செல்லும்போதும் திரும்பும்போதும் ஒரு கண் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப்போவது அன்னார் வழக்கம். சில நாட்கள் தொடர்ந்து என் அறைப் பூட்டிக் கிடந்தது. இதைப் பார்த்த ஹள்ரத் அவர்கள் விவரம் கேட்க, மூலநோய்க்காக கான் ஹள்ரத் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என்று அறிந்துகொண்டார்கள் ஹள்ரத் அவர்கள்.

மறுநாளே வீடுதேடி வந்து என்னை நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்கள். என்னால் மறக்கமுடியாத, என்னை மெய்சிலிர்க்கவைத்த இந்நிகழ்ச்சிக்கும் நபிவழியைப் பேணியதுதான் காரணம். இத்தனைக்கும் நான் அவர்களது சர்வீஸுக்கு முன்னால் ஒரு பொடியன்.

#தொடர்ந்த_தொடர்பு

பாக்கியாத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, கேரளாவுக்கும் அதையடுத்து சென்னை காஷிஃபுல் ஹுதாவுக்கும் யஅகூப் ஹள்ரத் அவர்கள் சென்றபின்பும் அவர்களுடனான தொடர்பு எனக்கு நீடித்துவந்தது. இதற்குக் காரணமாக அமைந்தது, ஹள்ரத் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட ‘லஜ்னத்துல் ஹுதா’ எனும் சமூக சீர்திருத்த அமைப்புதான். லஜ்னாவின் ஆலோசனைக் கூட்டங்கள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பிரசுரங்கள் வெளியீடு என ஒவ்வொரு சேவைகளிலும் என்னை ஹள்ரத் அவர்கள் மனம் விரும்பி பயன்படுத்திக்கொண்டார்கள்.

அதே நேரத்தில், பழைய வடஆற்காடு மாவட்டத்தில், அதுவரை தொடங்கப்படாதிருந்த தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா கிளை தொடங்குவதிலும் நான் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். அப்போது சபையின் மாநிலச் செயலாளராக இருந்த ஈரோடு மௌலானா, உமர் ஃபாரூக் தாவூதி ஹள்ரத் அவர்களின் வழிகாட்டல்பேரில் இப்பணியில் முனைப்புக் காட்டினேன்.

ஒவ்வோர் ஊராகச் சென்று ஆலிம்களையும் இமாம்களையும் தனித்தனியாகச் சந்தித்து, ஜமாஅத்துல் உலமா சபை குறித்த அவர்களின் ஐயங்களைப் போக்கி, கணிசமானோரை உறுப்பினர்களாகச் சேர்த்து, மாவட்ட கிளை உருவாகத் துணையாக நின்றேன். மாவட்ட சபையின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தேன்.

#மனாருல்_ஹுதா

ஒரு கட்டத்தில், லஜ்னத்துல் ஹுதா சார்பாக ஒரு மாத இதழ் தொடங்க வேண்டும் என்ற யோசனை லஜ்னாவின் செயற்குழுவில் முன்வைக்கப்பட்டது. அப்போது மாத இதழில் ஆசிரியராக யஅகூப் ஹள்ரத் அவர்கள் என்னையே தேர்ந்தெடுத்தார்கள். இதற்குக் காரணம் ஒன்று இருந்தது. ‘ஹிலால்’ எனும் பெயரில் இதழ் ஒன்றை பாக்கியாத்தில் ஆசிரியராக இருந்துகொண்டே நான் நடத்திவந்ததுதான். இச்சிற்றிதழ் மாணவர்களின் உதவியோடு, ஆசிரியர்களின் கட்டுரைகளுடன் வெளிவந்த இஸ்லாமிய பல்கலை இதழாகும்.

பின்னர் லஜ்னாவின் இதழ் முதலில் ‘அல்ஹுதா’ என்ற பெயரிலும், அதையடுத்து ‘மனாருல் ஹுதா’ என்ற பெயரிலும் வெளிவரலாயிற்று. ஹிலாலின் அனுபவம் மனாரில் கைகொடுத்தது. பாகவிகள், காஷிஃபிகள் போன்ற இளம் ஆலிம்கள் மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் இஸ்லாமிய இதழில் தொடர்ந்து எழுதவைத்த பெருமை மனாருக்கே உண்டு.

அதுவரைப் பொதுப் பத்திரிகைகளில் மட்டுமே கவிதை, கட்டுரை எழுதிவந்த கவிக்கோ அப்துர் ரஹ்மான், கவிஞர் தி.மு. அப்துல் காதிர், பேராசிரியர் அப்துர் ரஹ்மான், அப்துல்லாஹ் அடியார் போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகள், கவிதைகள், பேட்டிகள் முதலான ஆக்கங்கள் முதன்முதலில் மனாரில் வெளிவரத் தொடங்கின. மனாரையும் ஓர் இஸ்லாமியப் பல்கலை இதழாகவே நடத்திவந்தோம்.

அப்போது மனாரில் வெளிவரும் ஆக்கங்களை யஅகூப் ஹள்ரத் அவர்கள் கூர்மையாக வாசித்துக் கருத்துச் சொன்னதுண்டு. ஒருதடவை, தமிழக அரசியல் கட்சிகளில் ஒன்றைக் கடுமையாக விமர்சித்துத் தலையங்கம் தீட்டியிருந்தேன். அவ்விதழ் வெளியான சில தினங்களில் ஹள்ரத் அவர்களைச் சந்தித்தபோது, விமர்சனத்தில் இவ்வளவு கடுமை தேவையா, மௌலவி சாஹிப்? என்று கேட்டு, எனக்குப் பாடம் எடுத்தவர், யஅகூப் ஹள்ரத் அவர்கள்தான். அதன்பின் எழுத்தில் நயத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினேன்.

#திசை_காட்டி

அதுபோலவே, எழுத்துத் தளத்தில் சத்தியத்தைச் சொன்னதற்காகக் கடுமையான சோதனைகளை நான் சந்தித்தபோதெல்லாம் எனக்கு ஆறுதலாகவும் ஊக்குவிப்பவராகவும் இருந்த அந்தப் பெருமகனார் இன்று இல்லை என நினைக்கும்போது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால், நீர் செல்ல வேண்டிய திசை இதுதான் என்று எனக்குப் பாதை காட்டிய வழிகாட்டியை இழந்தது, என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட பேரிழப்பாகும்.

உடல்நலம் குன்றி, நினைவு தடுமாற்றம் ஏற்பட்ட பிறகு ஒரு தடவை ஹள்ரத் அவர்களைச் சந்தித்தபோது, பழைய நினைவில் “நீங்கள்தானே, ‘ஜவாஹிருல் குர்ஆன்’ தஃப்சீர் செய்துவருகிறீர்கள்!” என்று கேட்க, இல்லை; நான் தஃப்சீர் இப்னு கஸீர் மொழிபெயர்ப்பைக் கவனித்துவருகிறேன் என்று திருத்த வேண்டியதாயிற்று.

அதன்பின் அவர்களை இந்நிலையில் சந்திக்க எனக்குத் தைரியமில்லை. ஹள்ரத் அவர்களின் மறுமை வாழ்க்கை வளமாக இருக்க, அல்லாஹ் அருள் புரிவானாக!