Tuesday, December 13, 2016

பாகப்பிரிவினையில் பெண்களுக்குப் பாதகமா?

சொத்துப் பாகப்பிரிவினையில் முஸ்லிம் பெண்களுக்குப் பாதகம் இழைக்கப்படுகிறது என்று பொத்தாம்பொதுவாகப் போகிறபோக்கில் சிலர் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிவிட்டுச் செல்கிறார்கள். இதை, இஸ்லாமிய சமயத்தின் மீதான குற்றமாகவும் குறையாகவும் பரப்புரை செய்வதுதான் வேதனை அளிக்கும் விபரீதமாகும்.

ஒரு சமுதாயத்தைப் பற்றி, அல்லது சமயத்தைப் பற்றிக் குறைகூறுவதற்கு முன்பாக, அதைச் சற்று ஆழமாகப் படித்தோ கற்றறிந்த அறிஞர்களிடம் கேட்டோ வாய் திறக்க வேண்டும். யாரோ சொன்னார்கள்! யாரோ எழுதினார்கள்! அல்லது கோஷம் எழுப்பினார்கள் என்பதற்காகவெல்லாம் விமர்சிப்பதென்பது, கண்ணியவான்களுக்கு அழகல்ல. இப்படி, மேம்போக்காகத் தாக்கிப்பேசத் தொடங்கினால், அதற்கு முடிவே இருக்காது; ஆரோக்கியமான விவாதமாகவும் அது அமையாது.

அறியாமைக் காலம்

இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் பெண்களைக் கொத்தடிமைகள்போல் நடத்திவந்தனர் அரபியர். திருமணம், மணவிலக்கு, சொத்துரிமை... என எதை எடுத்துக்கொண்டாலும் பெண்களை மனுஷிகளாகவே அவர்கள் மதித்ததில்லை. பெண் சிசு கொலை, பெண்ணைப் பெற்றவன் அவமானம் தாங்காமல் தலைமறைவாக வாழ்வது, கணவனை இழந்த கைம்பெண் மாதக்கணக்கில் அழுக்கோடும் அசிங்கத்தோடும் வாழ வேண்டிய பரிதாபம், கணவன் குடும்பத்தாரே அவளுக்குச் சொந்தம் கொண்டாடி அவளது வாழ்க்கையைச் சூனியமாக்குவது... எனப் பெண்ணினக் கொடுமைகளுக்கு அன்று பஞ்சமே இல்லை.

மொத்தத்தில், பெண் இனத்தையே ஓர் அவமானச் சின்னமாகக் கருதிய இருண்ட காலத்தில்தான், நபிகள் நாயகம் (ஸல்) என்ற அற்புதமான இறைத்தூதர், இஸ்லாமிய மார்க்கத்தை அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அன்னாருக்கு இறைவன் குர்ஆன் எனும் மாமறையை அருளினான். அதன் வழியில் புத்துலகிற்கு மக்களை அழைத்துச் சென்றார்கள் நபிகளார்.

அப்புத்துலகில் பெண்மைக்கு மரியாதை இருந்தது. கற்புக்குப் பாதுகாப்பு இருந்தது. தாய்மைக்கு முதலிடம் இருந்தது. பெண்ணைப் பெற்றவன், இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் இறைக் கருணைக்கு உரியவன் என்று போதித்தார்கள். ‘தாயின் காலடியில் சொர்க்கம்’ என்று சொல்லி, அன்னையரின் அந்தஸ்தை வானளவிற்கு உயர்த்தினார்கள். (அஹ்மத்)

சொத்துரிமை

அறியாமைக்கால அரபியர், சொத்து என்பதே ஆண்களுக்கு மட்டும்தான்; ஆண்களிலும் பெரியவர்களுக்கு மட்டும்தான் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தார்கள். இதற்கு அவர்கள் கற்பித்த காரணம்தான் வேடிக்கையானது. ஆண்களில் பெரியவர்களாலேயே போரில் கலந்துகொள்ள முடியும்; வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட முடியும்; பிறர் உடைமைகளைப் பறிக்க முடியும். இப்படி விநோதமான காரணங்களைப் பட்டியலிட்டார்கள். இதனால் பெண்களுக்குச் சொத்துரிமையை மறுத்தனர்; குழந்தைகள், பலவீனர்கள் ஆகியோருக்கும் சொத்தில் பங்கு கிடையாது என்று அறிவித்தனர்.

இந்நிலையில்தான், திருக்குர்ஆன் வாயிலாக இஸ்லாம் பாகப்பிரிவினை விதிகளை மிகத் துல்லியமாகவும் விரிவாகவும் வழங்கியது. இறந்துபோன ஒருவரின் சொத்தில், அவருடைய உறவினர்களில் யார், யாருக்கு உரிமையுண்டு; எவ்வளவு பாகம் உரிமையுண்டு; எப்போது உரிமையுண்டு என்ற விவரங்களை விலாவாரியாக எடுத்துரைத்து, அதைக் குடிமைச் சட்டமாக ஆக்கியது திருக்குர்ஆன். இது நடந்தது கி.பி. 625 வாக்கில். ஆனால், இந்தியாவில் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இலும் கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டம் 1925இலும்தான் இயற்றப்பட்டது; அதுவும் மனிதர்களால்.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில், பொதுவானதொரு அடிப்படைக் கூறு உண்டு. இறந்துபோனவரின் சொத்தில் பங்கு பெற வேண்டுமானால், இறந்தவரின் உறவினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் இரத்த சொந்தமும் முத்த சொந்தமும் அடங்கும். (திருமணத்தால் வரும் சொந்தமே முத்த சொந்தமாகும்.) உறவின் நெருக்கம், அந்த உறவிலும் பொருளாதாரத் தேவையின் அளவு, வாழ்க்கைச் செலவினத்தை எதிர்நோக்கியுள்ள இளைய தலைமுறையா; வாழ்க்கையின் எல்லையைத் தொட்டுவிட்ட மூத்த தலைமுறையா என்ற கண்ணோட்டம் ஆகிய அடிப்படைகளைக் கொண்டே பாகப் பிரிவினை அமையும்.

ஆக, உறவினருக்கு வாரிசுரிமை உண்டு. ஆனால், வாரிசுகளுக்குக் கிடைக்கும் பங்குகள், அவரவரின் தகுதி நிலைக்கேற்ப கூடலாம்; அல்லது குறையலாம். எல்லாருக்கும் சமமான பாகம் கிடைக்காது. தர்க்கரீதியாக அதை ஏற்கவும் முடியாது. சொத்துக்காரரின் சொந்த மகளும் தம்பியும் சமமாக முடியுமா? மகன் இல்லாதபோது தம்பிக்குச் சொத்தில் பங்கு கிடைக்கலாம். ஆனால், மகளுக்குக் கிடைக்கும் சமமான பங்கு கிடைக்காது.

அவ்வாறே, உறவுகளில் மிக நெருங்கிய உறவினர் இருக்கையில், தூரத்து உறவினருக்குச் சொத்தில் பங்கு கிடைக்காது. சொந்த மகன் இருக்கும்போது, சகோதரனுக்கோ சகோதரிக்கோ சொத்தில் பங்கு கேட்பது முறையாகாது. சகோதரன், உறவில் சற்றுத் தள்ளிப்போய்விடுகிறான் அல்லவா? அவ்வாறே, இறந்தவருக்குத் தந்தை இருக்கையில், தந்தையின் தந்தைக்கோ தந்தையின் உடன்புறப்புகளுக்கோ பாகம் கேட்பது எந்த வகையில் நியாயம்?

மகளுக்காக வாதாடிய தாய்

அன்சாரியான உம்மு குஜ்ஜா (ரலி) என்ற தாய், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் தந்தை (என் கணவர்) இறந்துபோய்விட்டார். (அவருக்குச் சொத்து உள்ளது. ஆனால்,) மகள்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை” என முறையிட்டார். அப்போதுதான் பின்வரும் வாரிசுரிமை வசனம் அருளப்பெற்றது (இப்னு மர்தவைஹி):

தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே,) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து, குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இது (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:7)

இவ்வசனம் ஆண்களைப் போன்றே, பெண்களுக்கும் அடிப்படை சொத்துரிமை வழங்குகிறது; அதைக் கட்டாயமாக்குகிறது. சொத்து சிறியதோ பெரியதோ தாய், தந்தை, உறவுக்காரர் விட்டுச்சென்ற சொத்தில் ஆண் வாரிசுக்கும் பங்கு உண்டு; பெண் வாரிசுக்கும் பங்கு உண்டு. சொத்தை விட்டுவிட்டு இறந்தவருக்கும் வாரிசுகளுக்கும் இடையே உள்ள இரத்த சொந்தம், திருமண பந்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கிடைக்கும் பங்குகளில் வித்தியாசம் இருந்தாலும் அடிப்படைச் சொத்துரிமையில் ஆணும் பெண்ணும் சமமே! (இப்னு கஸீர்)

பெண்ணுக்கான சொத்துரிமையைக் குறிப்பாகச் சொல்லும் ஒரு வசனத்தின் பின்னணி பாருங்கள்:

நபித்தோழர் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இப்படி முறையிட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இவ்விரு பெண் குழந்தைகளும் சஅத் பின் அர்ரபீஉ உடைய புதல்வியர். தங்களுடன் ‘உஹுத்’ போரில் கலந்துகொண்ட இவர்களின் தந்தை (சஅத்), வீரமரணம் அடைந்துவிட்டார். இவர்களின் செல்வம் முழுவதையும் சஅதின் சகோதரர் எடுத்துக்கொண்டார். இவர்களுக்கு எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. இவர்களுக்குச் செல்வம் இருந்தால்தான் திருமணம் நடக்கும்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இதற்கு ஒரு தீர்வை அளிப்பான்” என்று கூறினார்கள். அப்போதுதான் பின்வரும் வசனம் அருளப்பெற்றது:

ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பாகத்திற்குச் சமமான (சொத்)து கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு, அல்லது) இரண்டுக்குமேற்பட்ட மகள்கள் இருந்தால், (பெற்றோர்) விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரு பாகங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். ஒரே ஒரு மகள் (மட்டும்) இருந்தால் (சொத்தில்) பாதி கிடைக்கும். (4:11)

இவ்வசனம் இறங்கிய உடனேயே அவ்விருவரின் தந்தையுடைய சகோதரரை அழைத்துவரும்படி நபியவர்கள் ஆளனுப்பினார்கள். அவர் வந்ததும் அவரிடம் நபியவர்கள், ‘‘சஅதுடைய மகள்கள் இருவருக்கும் மூன்றில் இரு பாகங்களும் அவர்களின் தாய்க்கு (சஅதின் மனைவிக்கு) எட்டில் ஒரு பாகமும் கொடுத்துவிடுங்கள். மீதி உங்களுக்குரியது” என்று கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்)

அதாவது இறந்தவரின் மனைவிக்கும் அவருடைய மகள்களுக்கும் சொத்துரிமை மறுத்த ஆணிடம், அவர்களுக்குச் சொத்துரிமை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். (வரைபடம் காண்க!)



பெண்ணின் ஆறு பருவங்கள்

பெண்கள் அடையும் ஆறு பருவங்களிலும் அந்தந்தப் பருவங்களில் உள்ள உறவினர்களிடமிருந்து பெண்களுக்குச் சொத்துரிமை கிடைக்கும் என்கிறது இஸ்லாமிய ஷரீஆ குடிமைச் சட்டம்.

1. மகள்: தாய், அல்லது தந்தை இறந்துவிட்டால், அவர்களின் சொத்தில் மகளுக்குப் பங்கு உண்டு. (மகன் இல்லாமல்) ஒரு மகள் இருந்தால், மொத்த சொத்தில் பாதி (50%) அவளுக்குச் சொந்தம். இரு மகள்களோ அதற்கு மேலோ இருந்தால், சொத்தில் மூன்றில் இரு பாகம் (66.66%) கிடைக்கும். அதை அவர்கள் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

மகனும் இருந்தால், அவனுக்கு இரு பங்கும் மகளுக்கு ஒரு பங்கும் கிடைக்கும்.

2. பேத்தி: சொத்துப் பிரிவினையின்போது மகன் இறந்துபோயிருந்தால், மகனின் மகனுக்கும் (பேரன்) மகனின் மகளுக்கும் (பேத்தி) சொத்துரிமை உண்டு. பாகப் பிரிவினை செய்யும்போது மகள் இறந்துபோயிருந்தால், மகளின் மகனுக்கும் (பேரன்) மகளின் மகளுக்கும் (பேத்தி) பங்கு கிடைக்கும். மகன் அல்லது மகளின் இடத்தை பேரனும் பேத்தியும் அடைவர்.

3. மனைவி: கணவனின் சொத்தில் மனைவிக்குப் பங்கு கிடைக்கும். குழந்தை இருந்தால், மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகமும் (12.50%) குழந்தை இல்லாவிட்டால் நான்கில் ஒரு பாகமும் (25%) மனைவிக்கு உரியதாகும்.

4. தாய்: மகனோ மகளோ இறந்துபோனால், அவர்களின் சொத்தில் பெற்ற தாய்க்குப் பங்கு உண்டு. இறந்தவருக்குக் குழந்தை இருந்தால், தாய்க்கு மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகமும் (16.66%) இறந்தவருக்குக் குழந்தை இல்லாவிட்டால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகமும் (33.33%) கிடைக்கும்.

5. சகோதரி: சகோதரன் இறந்துபோனால், அவன் விட்டுச்செல்லும் சொத்தில் சகோதரிக்கு ஒரு கட்டத்தில் பங்கு உண்டு. இறந்துபோனவருக்கு மூலவாரிசான பெற்றோரோ பெற்றோரின் பெற்றோரோ கிளைவாரிசான மக்களோ மக்களின் மக்களோ இல்லாத சந்தர்ப்பத்தில் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும். சகோதரி ஒருத்தி இருந்தால், மொத்த சொத்தில் பாதியும் (50%) ஒருவருக்குமேல் இருந்தால் மூன்றில் இரு பாகங்களும் (66.66%) சொத்துக் கிடைக்கும். (குர்ஆன் 4:176)

6. பாட்டி: பேரன், அல்லது பேத்தியின் சொத்தில் பாட்டிக்கும் பங்கு உண்டு. ஆனால், இறந்தவருக்குத் தாய் இல்லாதபோதுதான், தாயின் இடத்தைத் தாயின் தாய் அடைவார். (பாட்டி விவகாரத்தில் பQலத்த கருத்துவேறுபாடு காணப்படுகிறது.)

ஆண் - பெண் வித்தியாசம் ஏன்?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் பாகப்பிரிவினைச் சட்டத்தில், ஆணுக்கு இரு பங்கு; பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது நான்கு கட்டங்களில் மட்டுமே.

1. தாய், அல்லது தந்தையின் சொத்தில் மகன் மற்றும் மகளுக்குப் பங்கு பிரிக்கும்போது.

2. பாட்டி, அல்லது தாத்தாவின் சொத்தில் பேரன்-பேத்திக்குப் பங்கு கொடுக்கும்போது.

3. கணவன் சொத்தில் மனைவிக்கும் மனைவி சொத்தில் கணவனுக்கும் பங்கு கொடுக்கும்போது.

4. இறந்தவரின் சகோதரன் மற்றும் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும் கட்டத்தில்.

சில சமயங்களில் ஆண்-பெண் உறவுகளுக்குச் சமமான பங்கு அளிக்கப்படும். உதாரணமாக, இறந்துபோனவருக்கு மூலவாரிசுகளோ கிளைவாரிசுகளோ இல்லாத நிலையில் தாய்வழிச் சகோதர-சகோதரிகளுக்கு (தாய் ஒன்று; தந்தை வேறு) சொத்தில் பங்கு கிடைக்கும்.

இந்தச் சகோதர-சகோதரிகள் பலர் இருந்தால், மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகம் (33.33%) கிடைக்கும். அதை அவர்கள் (ஆண்-பெண் வித்தியாசமின்றி) சமமாகத் தங்களிடையே பிரித்துக்கொள்ள வேண்டும். (குர்ஆன், 4:12)

இன்னொரு தகவல்: சில உறவுகளில் ஆணைவிடப் பெண்ணுக்குக் கூடுதல் பங்கும் கிடைப்பதுண்டு. உம்: ஒருவரின் சொத்தில் அவருடைய தந்தையைவிட மகள் கூடுதல் பங்கு பெறுகிறார்.

இன்னும் சில கட்டங்களில் பெண்ணுக்கு மட்டுமே பாகப்பிரிவினையில் பங்கு உண்டு; நிகரிலுள்ள ஆணுக்கு பங்கே கிடைக்காது. உம்: வரைபடம் காண்க:



கூடுதல் சுமை ஆணுக்கே!

பொதுவாக, இஸ்லாமியக் குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆணுக்கே எல்லாவிதப் பொருளாதாரச் சுமையும் கடமையும் உண்டு; அல்லது கூடுதல் சுமை உண்டு. குடும்பத்தைக் கட்டிக்காத்தல், தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்தல், குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தன் தேவையையும் பார்த்துக்கொண்டே, தன்னை நம்பியுள்ள மனைவி, மக்கள், பெற்றோர், சில நேரங்களில் சகோதரிகள் முதலான உறவுகளின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் ஆண்மகன் உள்ளான். பெண்ணுக்கு இச்சுமைகள் இல்லை –கட்டாயக் கடமை இல்லை.

பிறந்த வீட்டில் இருக்கும்வரை, பெண்ணின் எல்லாத் தேவைகளையும் தந்தை கவனித்துக்கொள்கிறார். அது அவரது கடமையும்கூட. தந்தை இல்லாத கட்டத்தில் சகோதரர்களோ நெருங்கிய வேறு உறவினர்களோ கவனித்தாக வேண்டும். புகுந்த வீட்டில், அவளுக்கு வேண்டிய நியாயமான தேவைகள் கணவனால் நிறைவேற்றப்பட வேண்டும். அது அவனது பொறுப்பு. கணவன் இல்லாத நிலையில் கணவன் குடும்பத்தாரோ அவளுடைய பிள்ளைகளோ அப்பெண்ணுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் உண்டு.

அப்படி ஒருவருமே உதவ முன்வராவிட்டால் இஸ்லாமிய அரசு, ஆதரவற்றோருக்கான நிதியிலிருந்து நிதியுதவி அளித்தாக வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில், முஸ்லிம் ஜமாஅத் ஸகாத், ஸதகா போன்ற நிதிகளிலிருந்து அவளுடைய தேவைகளை நிவர்த்திக்க முன்வர வேண்டும்.

ஆக, ஒரு பெண் தன் சொந்த தேவைக்காகட்டும்! பிறர் தேவைகளுக்காகட்டும்! பொறுப்பேற்கும் கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. ஆதலால், ஆணுக்கும் பெண்ணுக்கும் – சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரேயளவிலான பொருளாதாரத் தேவை இல்லை என்பது தெளிவு. எனவேதான், ஆணுக்கு இரு பாகம்; பெண்ணுக்கு ஒரு பாகம் என்ற கணக்கு சில கட்டங்களில் விதியாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பாகத்தின் வாயிலாகப் பெண், தெம்போடும் சமூக அந்தஸ்தோடும் வாழ முடியும் என்ற நிலையை அடையலாம்.

நடைமுறையில் உள்ளதா?

எல்லாம் சரி! குர்ஆனின் இக்கட்டளை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு ஷரீஆ குடிமைச் சட்டப்படி சொத்துரிமை வழங்கப்படுகிறதா? முறைப்படி பாகப்பிரிவினை வழங்கப்படுகிறதா? இக்கேள்விக்கு சமுதாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்; தட்டிக்கழிக்க முடியாது.

மார்க்கச் சட்டப்படி நடக்கும் இறையச்சமுள்ள குடும்பங்களில் இது முறையாகச் செயல்படுத்தப்படுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இந்தியாவில் –குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை என்ன?

திருமணத்தின்போது, பெண்ணுக்கு வழங்கப்படும் சீர்வரிசை, வரதட்சிணை போன்ற –மார்க்கத்தில் இல்லாத- சடங்குகளைத் தவிர, பிறந்த வீட்டிலிருந்து வேறு என்ன சொத்துக் கிடைக்கிறது? கேட்டால், கல்யாணத்திலேயே 50 சவரன், நூறு சவரன் போட்டுவிட்டோம். மாப்பிள்ளைக்கு கார், அல்லது பைக் வாங்கிக் கொடுத்தோம். மிகச் சிலர், வீடு வாங்கிக் கொடுத்தோம். இதற்குமேல் பாகப்பிரிவினை என்ன கிடக்கிறது? என்று ஆண் வாரிசுகள் முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்கிறார்கள்.

ஆரம்பமாக இதைப் புரிந்துகொள்ளுங்கள்! வரதட்சிணை என்பது இஸ்லாத்தில் இல்லாத, வேறு கலாசாரம். இதைக் காரணம் காட்டி, மார்க்கம் கட்டாயமாக்கியுள்ள பாகப்பிரிவினையை எப்படி மறுக்கலாம்? திருமணத்தின்போது பெண்ணுக்குத் தரப்படும் பொருள் அன்பளிப்பு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால், அன்பளிப்பைப் பேரம் பேசியோ முன்நிபந்தனை விதித்தோ வாங்கலாமா? அதற்கு அன்பளிப்பு என்று சொல்ல முடியுமா? அவ்வாறே, அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதைப் பாகப்பிரிவினையில் கணக்கிடலாமா? தயைகூர்ந்து யோசியுங்கள்!

ஆகவே, அதற்கும் பாகப்பிரிவினைக்கும் சம்பந்தமில்லை. பாகப்பிரிவினைக்கு முன்பாகக் கோடியே கொடுத்திருந்தாலும், பெண்ணுக்காகச் செலவிட்டிருந்தாலும் பாகப்பிரிவினை பங்கில் அது சேராது; சேர்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், ஆணுக்குச் செலவழிப்பதில்லையா? படிப்பு, வேலை, திருமணம், தனிவீடு... என இலட்சக்கணக்கில் செலவழித்தும்விட்டு, பாகப்பிரிவினையின்போது சண்டைபோட்டுத் தன் பங்கை ஆண் வாரிசு வாங்குகிறானா இல்லையா? பதில் சொல்லுங்கள்!

நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உம்முடைய வாரிசுகளை, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச்செல்வதே சிறந்தது. (புகாரீ – 1295)