Monday, November 24, 2014

மனைவி அமைவதெல்லாம்...


உங்களுடன் நான் - மனம் விட்டு 03

ர் ஆணின் முன்னேற்றத்திற்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். உண்மையில் இரண்டு பெண்கள் இருப்பார்கள். ஆம்! திருமணம் செய்துகொள்ளும்வரை அன்னையின் அரவணைப்பும் ஆறுதலும்; திருமணத்திற்குப் பின்னால்மனைவி என்ற பெண் தரும் ஊக்கமும் உற்சாகமும்தான் ஒருவனைச் சாதனையாளனாக மாற்றுகிறது.

தாயுடனான நெருக்கம் 20 அல்லது 25 ஆண்டுகள் மட்டுமே! பின்னர் தொடங்கி கண்மூடும்வரை மனைவியே துணை!

அழும்போது கண்ணீரைத் துடைக்க, சாயும்போது தோள் கொடுக்க, அயர்ச்சியின்போது மடிமீது தலைவைக்க, ஆனந்தத்தில் அணைக்க, துவளும்போது தட்டி எழுப்ப, திணறும்போது யோசனை செல்ல, மனத்தின் பாரத்தை இறக்கிவைக்கஇப்படி வாழ்க்கையின் ஏற்ற இறக்கம் ஒவ்வொன்றிலும் கை கொடுக்க ஓர் ஆணுக்குப் பெண்ணின் ஸ்பரிசம் தேவையிலும் தேவை.

அவன் அழுதால் அவளும் அழுவாள். அவன் சிரித்தால் அவளும் சிரிப்பாள். அவன் சீறினால் - சினந்தால், அவள் சிணுங்குவாள்; குலுங்குவாள். அவன் வாடினால், வாட்டம் தணிப்பாள். அவன் சுணங்கினால், சுணக்கம் விரட்டுவாள்.

ஆக, இத்தகைய துணை ஒன்று இல்லாவிட்டால் துவண்டுபோவான் மனிதன். பெண்ணும் அப்படித்தான் ஆண் துணை இல்லாவிட்டால்! பிறந்த வீட்டில் தந்தையின் மீதுள்ள அபார நம்பிக்கையும் அவர் தரும் துணிவும் பெண்ணை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. புகுந்த வீட்டில் துணைவனின் அழுத்தமான துணை. அவன் காட்டும் பரிவும் காதலும் அவளை ஒரு குடும்பப் பெண்ணாக, தாயாக, மாமியாராக, பாட்டியாக சமூகத்திற்கு அடையாளப்படுத்துகிறது.

இதனால்தான், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களில் அமைதியை ஏற்படுத்தியுள்ளான் (16:80) என்றுரைக்கிறது திருக்குர்ஆன். 

மற்றொரு திருவசனம், உங்களிலிருந்தே உங்களுக்கு அவன் துணைவியரைப் படைத்திருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். அத்துணைவியரிடம் நீங்கள் மனஅமைதி பெறுவதற்காக! உங்களிடையே அன்பையம் இரக்கத்தையும் அவன் ஏற்படுத்தியும் உள்ளான் (30:21) என்று கூறுகின்றது.

இதுவெல்லாம் மனிதன்மீது இறைவன் சொரிந்துள்ள கருணை; அருள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், இது எப்போது சுகம்; எப்போது சாபம் என்பதுதான் நம் முன்னுள்ள பெரிய கேள்வி. மனைவி உண்மையான துணைவியாக இருந்தால்தான் கணவன் சாதிக்க முடியும். கணவன் உண்மையான துணைவனாக இருந்தால்தான் மனைவி நிம்மதியாக வாழ முடியும்.

பெற்றோர் செய்யும் மிகப் பெரிய தவறு, பையனுக்குப் பெண் தேடும்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் அளவுகோல்தான். சொந்தம் விட்டுப்போகக் கூடாது; நல்ல படித்த பெண்ணாக இக்க வேண்டும்; (சிலர்,) மருமகள் வேலைக்குப்போய் கைநிறைய சம்பாதிக்க வேண்டும்; பணக்கார வீட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும்; செல்வாக்கு மிக்க குடும்பமாக இருக்க வேண்டும்; பார்ப்பதற்கு பெண் லட்சணமாக இருக்க வேண்டும்; நகை நட்டுகள் நிறைய கொண்டுவர வேண்டும்... இதுதான் பெரும்பாலோரின் ஸ்கேள்.

சொந்தம் வேண்டும்தான். படிப்பும் அவசியம்தான் அளவோடு; பாரம்பரியமிக்க குடும்பாக இருப்பின் அதுவும் நல்லதுதான்! இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இதனாலெல்லாம் உங்கள் பையன் வாழ்க்கையில் சாதிப்பது இருக்கட்டும்! நிம்மதியாகக்கூட வாழ்ந்துவிட முடியுமா? பணம், அழகு, உயர்கல்வி, செல்வாக்குஇவையெல்லாமேவிதிவிலக்காகத் தவிர- செருக்கையே உண்டாக்கும்.

செருக்கு குடும்பத்திற்கு ஆபத்து. செருக்கு இருக்கும் இடத்தில பணிவுக்கு இடமில்லை. அடக்கமும் நாணமும் பெண்மைக்குப் பொலிவூட்டும் ஆபரணங்கள். அப்பெண் வாழும் வீடு தென்றல் வீசும் பூஞ்சோலை.

பிரபலமான நபிமொழி அது! எல்லாரும் சொல்கிறோமே தவிர, கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. ஒரு பெண் நான்கு நோக்கங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வம் 2. அவளது குடும்பப் பாரம்பரியம் 3. அவளது அழகு 4. மார்க்க ஒழுக்கம். ஆகவே, மார்க்க ஒழுக்கமுள்ளவளை மணந்து வெற்றி அடைந்துகொள்! இல்லையேல், உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (ஸஹீஹுல் புகாரீ)

ஆம்! கணவனின் வருமானம் அறிந்து செலவிடத் தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகளை அறிவார்ந்த தலைமுறையாக, பண்பாடும் ஒழுக்கமும் மிக்க எதிர்காலமாக, இறையச்சமும் இறைவழிபாடும் நிறைந்த சந்ததியாக உருவாக்கும் எண்ணமும் உத்வேகமும் இருக்க வேண்டும். கணவனை, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று சொல்லி நோகடிக்காமல், நேர்மையாக மட்டுமே சம்பாதிக்கத் தூண்ட வேண்டும்!

சோர்ந்திருப்பவனை மேலும் சோகமாக்க முயலக் கூடாது. அவனது ஏழ்மையை, பற்றாக்குறையை, படிப்பின்மையை, குறைவான வருவாயை, அழகுக் குறைவை, ஊனத்தை, குடும்பப் பின்னணியைக் குத்திக்காட்டி, வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தனிமையில் அமர்ந்து கண்ணீர் சிந்தும் நிலையை ஏற்படுத்தக் கூடாது.

கணவனிடம் குறை இருந்தால்இருக்கும்- பக்குவமாக எடுத்துச்சொல்லிப் புரியவைத்து திருத்த முயல வேண்டும். ஒரு பெண் நினைத்தால், முட்டாள் கணவனைக்கூட அறிஞனாக்கலாம்! பேதையைக்கூட மேதையாக்கலாம்! குடிகாரக் கணவனைத் திருத்தி நல்லவனாக்கலாம்! பொறுப்பற்றவனைப் பொறுப்பாளியாக்கலாம்! பெண்ணிடம் இல்லாத ஆகர்ஷிக்கும் சக்தி யாரிடம் உண்டு.

இங்குதான் என் சொந்த வாழ்க்கையை உங்களுடன் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

என் இல்லத்தரசிக்குப் படிப்பு கம்மிதான். துவக்கப் பள்ளியைத் தாண்டினாரோ என்னவோ! இருந்தாலும், என்னோடு வாழ்ந்த அனுபவத்தில் பொது அறிவு, பண்பாடு, நாகரிகம், மனிதர்களின் மாறுபட்ட மனம், கணவனின் எண்ணவோட்டம், பிள்ளைகளின் எதிர்பார்ப்பு, அவர்களின் பலம் அல்லது பலவீனம், உறவினர்களிடம் பழகும் முறைஎன எல்லா நுணுக்கங்களும் விரல்நுனியில்.

நான் வாசிக்கும் தினசரி பத்திரிகைகள் (முன்பு தினமணி, இப்போது தி இந்து-தமிழ்), மாதாந்திர மற்றும் வார இஸ்லாமிய இதழ்கள், எப்போதாவது கிடைக்கும் நாவல்கள், சிறுகதைகள்என எல்லா ஏடுகளையும் ஆழமாக, அல்லது மேலோட்டமாகவேனும் படிக்கும் பழக்கம் உண்டு.

என் குழந்தைகள் துவக்கப் பள்ளி படிக்கும்போது அவர்களின் வீட்டுப் பாடங்களை என் துணைவியாரே கவனித்துக்கொள்வார். எல்லாவற்றையும்விட, குடும்ப பட்ஜெட் போடுவதில் கெட்டிக்காரர்.

நான் ஓதிமுடித்து, மதரசா ஆசிரியராகச் சேர்ந்தபோது என் மாத ஊதியம் 175 ரூபாய். வேலூர் பாகியாத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தபோது 375 ரூபாய். அங்கிருந்து விருப்ப ஓய்வுபெற்ற வேளையில் 3,500 ரூபாய். சென்னையில் 18 ஆண்டுகளுக்குமுன் தலைமை மொழிபெயர்ப்பாளர் பணியில் சேர்ந்தபோது 7,000 ரூபாய். இப்போது அதைவிட மூன்று, அல்லது நான்கு மடங்கு அதிகம். பையன்கள் இருவரும் அவரவர் தகுதிக்கேற்ப சம்பாதிக்கிறார்கள்.

கீழ் நிலையில் இருந்தேபோதும் சற்று உயர்வுக்கு வந்துள்ள இப்போதும் ஒரே விதமான மனநிறைவு எனக்குக் குடும்பத்தில் கிடைக்கிறது. சிரமப்பட்ட சில நேரங்களில் சக்திக்கேற்ற கடனை வாங்கி சமாளித்திருக்கிறேன். அதைத் தவிர, பெரிய அளவில் முடங்கி நின்றதாக எனக்கு நினைவில்லை. காரணம், உள்ளதைக் கொண்டு போதுமாக்கும் மனைவியின் குணம்; நேர மேலாண்மை; நிதி ஆளுமை; சூழ்நிலை அறிவு ஆகியவைதான்.

இஸ்லாமிய மாத இதழ்களுக்கு தொடர் கட்டுரைகள், நெடுந்தொடர் கட்டுரைகள் எழுதிவந்திருக்கிறேன். நாள் நெருங்கியவுடன் நான் மறந்துவிட்டாலும்- குர்ஆனின் குரலுக்குத் தொடர் அனுப்பும் நாளாயிற்றே! ரஹ்மத்திற்குக் கட்டுரை அனுப்பவில்லையா என்று தூண்டும் அந்த ஊக்குவிப்புதான் என்னை உற்சாகமாக எழுதிக்கொண்டே இருக்கச்செய்கிறது.
ஊதாரியாகச் செலவழிக்கமாட்டாள் மனைவி; சிறுவாடு சேர்க்கமாட்டாள்; சேர்த்தாலும் குடும்ப நன்மைக்கே செலவழிப்பாள் என்று உறுதியாகத் தெரிந்துகொண்ட கணவன், சம்பளக் கவரை மனைவியிடமே கொடுத்துவிட்டு, பஸ்ஸுக்கும் ஆட்டோவுக்கும் அவளிடமிருந்தே பணம் வாங்கிக்கொண்டு போவதில் என்ன தவறு இருக்க முடியும்?

சொல்லப்போனால், நிதி, விலைவாசி, வீட்டுப் பொருட்கள், சமையல் விவகாரம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் நம் மூளையைக் குடைந்துகொண்டு, வேறு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நிம்மதியாக வேலை செய்ய இது உதவுமல்லவா? அத்தோடு சமையலில் கைபக்குவமும் இருந்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா?

என்னதான் சொல்லுங்கள்! ஒன்று மட்டும் உண்மை! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

சொந்தக் கதையைச் சொல்லி போரடிக்க வைத்துவிட்டேனா! இதில் உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பாடம் இருப்பின் எடுத்துக்கொள்ளுங்கள்!

அடுத்த வாரம் இன்னொரு தலைப்பில்...

_________________________