Monday, January 26, 2015

சர்வதேசப் பார்வை - செய்திச் சுருள்


ஃபிரான்ஸ் நாட்டின் பிரபல கேலிச் சித்திர வாரப் பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரான ஹென்ரி ரோஸல் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘டுவேல் டுடோன்’ எனும் புனைபெயரைக் கொண்டுள்ள இவர், பத்திரிகை ஆசிரியர்சார்போன்னியா (சார்பு)மீது அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் (ஜனவரி 7) பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதலில் கொல்லப்பட்ட சார்பு உலக முஸ்லிம்களுக்கெதிரான கருத்துப் படங்களை அதிகமாக வெளியிட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. பிரிட்டன் டெய்லி டெலிகிராப் நாளிதழ் ஜனவரி 16இதழில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

1970ஆம் ஆண்டு வெளியான இந்தப் பத்திரிகையின் முதல் இதழைத் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றியவர் டுவேல் டுடோன். இவர் இந்த வாரம் வெளியான ‘லா நோஃபில்’ இடதுசாரிப் பத்திரிகையில் ஆசிரியர் சார்புவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். “இவர் ஒரு முரட்டுப் பிடிவாதக்காரர். ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வரம்புமீறி நடந்துகொள்ளத் தூண்ட வேண்டியதன் அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு ஹெப்டோ பத்திரிகையின் வழக்குரைஞர் ரேர்ஷார்ட் மல்கா கோபத்தோடு மறுப்புத் தெரிவித்துள்ளார். சார்பு குறித்து தன் கருத்துகளை டுடோன் வெளியிட்டிருந்த பத்திரிகையின் உரிமையாளர் ஒருவருக்கு எழுதியிருந்த கடிதத்தில் வழக்குரைஞர் தன்கோபத்தைக் கொட்டியிருந்தார். சார்பு இன்னும் அடக்கம்கூட செய்யப்படவில்லை; அதற்குள் சர்ச்சைக்குரிய இந்தக் கட்டுரைதான் இந்தப் பத்திரிகைக்குக் கிடைத்ததா? எனச் சாடியுள்ளார் வழக்குரைஞர்.

இதற்கு ‘லா நோஃபில்’ ஆசிரியர் தெரிவித்த மறுப்பில், “டுடோன் கட்டுரை கிடைத்தவுடன் நன்கு ஆய்வு செய்தபிறகே கருத்துச் சுதந்திரம் தொடர்பான இந்த இதழில் வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டது. அவர் ஒரு குழப்பவாதி என்றே வைத்துக்கொண்டாலும்அவரது குரல் வெளிவராமல் தடுக்கப்பட்டால், பதற்றம் ஏற்படும் என்று தெரிந்ததாலேயே வெளியிட்டோம். அதிலும் அவரது குரல் எங்கள் நீண்ட நாள் வாசகர் ஒருவரின் குரலாகும்” என்று பதிலடி கொடுத்தார்.

மேலும், ஹெப்டோ உடன் டுடோன் மாறுபட்ட கருத்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, ஹெப்டோ பத்திரிகையை ஒரு சியோனிஸ ஏஜெண்டுக்கு அதன் முன்னாள் ஆசிரியர் விற்றுவிட்டார். முஸ்லிம்களுக்கு எதிரானதாகவும் அதைமாற்றிவிட்டார் என டுடோன் குற்றம் சாட்டியிருந்தார் என்று லா நோஃபில் எழுதியுள்ளது.
(அலூகா)



Strategic Vision (போர்த் திறன்-ஒரு பார்வை) எனும் ஆய்வு நூல் ஒன்று 2012இல் நியூயார்க்கில் வெளியானது. ‘போர்த்திறனில் அமெரிக்காவும் சர்வதேச ஆற்றல் பிரச்சினைகளும்’ என்பது நூலின் முழுப் பெயர். நூலாசிரியர் Zbigniew Brzezinski போலந்துநாட்டிலிருந்து அமெரிக்கா குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜிம்மி கார்டர் காலத்தில் அமெரிக்க குடியரசுக் கட்சியின் சார்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வகித்தவர். அமெரிக்க அரசியல் தொடர்பாக ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள்எழுதியவர். பேசிக்போக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்புதிய நூல் 218 பக்கங்களைக் கொண்டது.

இந்நூலில் அமெரிக்காவின் அரசியல் எதிர்காலம், கிழக்கு நாடுகளின் வளர்ந்துவரும் செல்வாக்கு ஆகியவை குறித்து ஆழமாக அலசியுள்ளார் நூலாசிரியர். இப்புத்தகம் 5 தலைப்புகளில் அடங்குகிறது. 1. பின்னோக்கி நடக்கும் மேற்கு 2. அமெரிக்கக் கனவின்சரிவு 3. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்குப்பின் உலகம் சந்திக்கும் பயங்கரக் குழப்பம் 4. 2025-க்குப்பின் புதிய புவி அரசியல் சமன்பாடு 5. முடிவுரை – அமெரிக்காவின் இரண்டாம் பங்கு ஆகியவையே அத்தலைப்புகள்.

நான்கு அடிப்படை வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியே இப்புத்தகம். 1. மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாறிவரும் உலக ஆற்றலின் விநியோகத்தால் கிடைக்கும் பலன்கள் யாவை? 2. அமெரிக்காவிற்குள்ள சர்வதேச வலுவான ஆற்றல் ஏன் பின்னடைவைச்சந்திக்கும்? 3. அமெரிக்க முன்மாதிரி தோற்கும்போது எதிர்பார்க்கப்படும் புவி அரசியலின் முடிவுகள் எப்படி இருக்கும்? 4. 2025-க்குப் பிறகு அமெரிக்காவின் உலக அரசியல் நோக்கங்கள் என்னவாக இருப்பது நல்லது?

அமெரிக்காவின் தற்போதைய இராணுவ நடிவடிக்கைகளும் போர்த்திறன் சார்ந்த நிலைப்பாடுகளுமே அதன் பின்னடைவுக்குக் காரணங்களாக இருக்கப்போகின்றன என்கிறது நூல். 2025வரை உலக நாடுகளின் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கான பங்கு தொடரும்.ரஷியா ஆற்றலைத் தொடர்ந்து இழந்துவரும். 2025க்குப்பின் ஆசிய நாடுகளில் ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் செல்வாக்கு உலக அளவில் மேலோங்கும்.
(முஜ்தமா)


ர்வதேச அமைப்புகள், பொருளாதாரம், சுற்றுலா, மனித உரிமை, விளையாட்டு ஆகிய துறைகளுக்கான சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றில் உயர்ந்த பொறுப்புகளுக்கு இந்த ஆண்டு துருக்கியரே நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 16 சர்வதேசஅமைப்புகளில் முக்கியப் பதவிகள் துருக்கி நாட்டினரின் கைகளுக்கு வந்துள்ளன.

  1. G20. ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு 2015இல் துருக்கி வசம் வந்துள்ளது. இந்நாடுகளின் உற்பத்திகள் உலகம் முழுமைக்கும் சென்றடைவது குறிப்பிடத் தக்கது.
  2. B20. தொழில் கூட்டணி நாடுகளான பி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு, துருக்கியின் பங்குச் சந்தை மற்றும் வணிகக் குழுமங்களின் தலைவர் ரிஃப்அத் ஒக்லோவிடம் வருகிறது.
  3. D8. எட்டு வளரும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமான டி8 நிறுவனத்தின் பொறுப்பை துருக்கி ஏற்கிறது. ஈரான், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனிசியா, எகிப்து, நைஜீரியா, துருக்கி முதலான நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
  4. WAIPA. முதலீடுகளைக் கவரும் ஏஜன்சிகளின் சர்வதேச ஒன்றியமான ‘வைபா’வுக்கு, துருக்கி முதலீட்டு ஏஜன்சியின் தலைவர் நிர்வாகியாகிறார். இப்பொறுப்பை ஏற்கும் இவர் 2016 செப்டம்பர்வரை இப்பதவியில் இருப்பார். இதில் 175 உறுப்பினர்கள் உள்ளனர்.
  5. AEA. ஐரோப்பிய விமான நிறுவனங்களின் ஒன்றியமான ஏ.இ.ஏ. அமைப்பிற்கு, துருக்கி ஏர்லைன்ஸ் பொதுமேலாளர் தாமல் கோத்தில் பொறுப்பேற்கிறார். இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பை இவர் வகிப்பார்.
  6. IAEE. எரிசக்தி பொருளாதாரத்தின் சர்வதேச அமைப்பான ஐ.ஏ.இ.இ. மன்றத்தின் தலைவராக, துருக்கி எரிசக்தி பொருளாதார மையத்தின் தலைவர் கோர்ஹான் ஒக்லோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  7. நகரங்கள் மற்றும் ஒன்றியங்களின் நிர்வாக அமைப்பு. இதற்கு இஸ்தான்பூல் (துருக்கி தலைநகரம்) மேயர் 2016வரை நிர்வாகியாக இருக்கவுள்ளார்.
  8. ICAPS. சர்வதேச பிளாஸ்டிக் சர்ஜரி மன்றம். இதற்கு 2012 முதல் பேராசிரியர் ஒனூர் ஈரோல் தலைவராக இருந்துவருகிறார். இதில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  9. ESOMAR. சந்தை ஆய்வுக்கான ஐரோப்பிய மன்ற மாநாடு. இதன் நிர்வாக அமைப்பில் துருக்கி மன்றம் கால் வைத்திருக்கிறது.
  10. ELFA. ஐரோப்பிய சட்டக் கல்லூரிகள் குழு. இக்குழுவிற்கு துருக்கியைச் சேர்ந்த ஹாலூக் காபலி ஒக்லு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. SKAL. சுற்றுலா மற்றும் பயணத் தொழிலாளர்களுக்கான சர்வதேச ஒன்றியம். இதற்கு துருக்கி தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தினைஸ் அனாபா தலைவராக நியமனமாகியுள்ளார்.
  12. IMF. சர்வதேச நிதியகம். துருக்கி கருவூல முன்னாள் ஆலோசகர் இந்த நிதியகத்திற்கு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. FIBA. சர்வதேச கூடைப்பந்து ஒன்றியம். தூர்காய் தமேரால் துருக்கியின் கூடைப்பந்து ஒன்றியத்தின் தலைவராக உள்ளார். இவரே இவ்வாண்டு ஐரோப்பிய கூடைப்பந்து பொது மன்றத்திற்குத் தலைவராகிறார்.
  14. ACI. சர்வதேச விமானநிலையங்கள் மன்றம். ஐரோப்பாவில் இம்மன்றத்தின் பிரதிநிதியாக சானீ ஷைனார் (துருக்கி) நியமிக்கப்பட்டுள்ளார். இம்மன்றத்தில் 174 நாடுகள் உறுப்பினர்கள்.

இவையன்றி, துருக்கியுடன் இணைந்து வேறுசில சர்வதேச நிறுவனங்கள் தம் திட்டங்களை உருவாக்கிவருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. அவையாவன: NAMET; AMAT; MISSAT; CIVETS; MINTS; TIMP.
(முஜ்தமா)


துருக்கி தலைநகர் இஸ்தான்பூலில் காண்லிகா பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது. துருக்கியின் ஐரோப்பிய பகுதியையும் ஆசியப் பகுதியையும் பிரிக்கின்ற 31 கி.மீ. நீளமுள்ள பாஸ்பொரஸ் நீரிணையில் (ஜலசந்தி)ஆசியா கரையில் இப்பள்ளிவாசல் அமையவிருக்கிறது. துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் உருதுகான் பள்ளிவாசல் கட்டுவதற்கான திட்டத்தைத் தீர்மானித்துள்ளார்.

தரைப் பகுதியில் பெரிய வசதிகளுடன் கட்டப்படவிருக்கும் இப்பள்ளிவாசலின் கட்டுமான பணிக்கு 150 மில்லியன் துருக்கி லீரா (56 மில்லியன் யூரோ) செலவு பிடிக்கும். துருக்கி குடியரசின் வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமான பள்ளிவாசலாகஅமையவிருக்கும் இதன் கட்டுமானப் பணிகளை பஹார் மீஸ்ராக், ஹாப்ரீ ஜோல் ஆகிய இருபெரும் பொறியாளர்கள் ஏற்கின்றனர். 3 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பள்ளிவாசல் எழுப்பப்படுகிறது.

இப்பள்ளிவாசலில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியான தளம், சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கான பெரிய மாடம் (Balcony), அருங்காட்சியகம், நூலகம், சுமார் 3500 கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி ஆகியன இருக்கும்.

இஸ்தான்பூல் நகரிலேயே உயரமான இடம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பெரும் பகுதிகளில் இருந்து பார்த்தால் தெரிகின்ற அளவுக்கு இது உயரமாக அமைகிறது. குறிப்பாக, பாங்கு மேடை துருக்கியிலேயே மிகவும் உயரமாக இருக்கப்போகிறது.
(அலூகா)

Monday, January 19, 2015

வாழ்க்கை அழகானது

உங்களுடன் நான் மனம்விட்டு... தொடர் - 07


றைவனின் படைப்புகளில் மனிதப் படைப்பே அபாரமானது; அற்புதமானது. அழகானது தோற்றம்; நடை அழகு; பேசும் கண்கள்; சுண்டியிழுக்கும் சிரிப்பழகு; பேசும் திறன்; ஆளுமைத் திறன்; கற்பனை வளம்; உணர்வுகள்; அவற்றை வெளிப்படுத்தும் வேறுபட்ட முகபாவங்கள்; அலைமோதும் எண்ணங்கள்; அவற்றை வெளிக்கொணரும் சொற்கள்; எழுத்துகள்! யாருக்கு அமையும் இத்துணை பாத்திரங்கள்!

இயற்கை வளமும் அழகும் கொஞ்சும் ஓர் எழிலான பூமியைப் படைத்து, அதுதான் நீ வாழ்வதற்கு ஏற்ற இடம்; அங்கே உனக்கு வேண்டிய அனைத்தையும் தயார் செய்துவைத்துள்ளேன் என்று மனிதனைப் பூவுலகுக்கு இறைவன் அனுப்பினான். இங்கு நிலமும் உண்டு; நீரும் உண்டு; விதையும் உண்டு; உரமும் உண்டு. உழுது பயிரிடுவது, களை அகற்றுவது மட்டுமே மனிதனின் வேலை. விதை முளைவிட்டு, மண்ணைத் தள்ளிக்கொண்டு இல்லை மண் வழிவிட்டு- தளிர் மேலே வருவதும் இறைவனின் ஏற்பாடு.

அனுப்பும்போது துணையோடுதான் அனுப்பினான் அந்தப் பேரரசன். மண்ணிலிருந்து தானியம்; கருவிலிருந்து சிசு. சந்ததி பெருக்கத்திற்கும் இங்கே வழி உண்டு; அது உண்டு உயிர் வாழ்வதற்கும் வகை உண்டு. ‘அறிவு எனும் மகா ஆற்றலை இவனுக்கு ஆண்டவன் அருளியது எதற்காக? ஆராய்ச்சி எனும் பயிரை அறிவு வளர்க்க, ஜீவிக்கத் தேவையான கட்டமைப்புகளையும் சாதனங்களையும் காலத்திற்கேற்ப உருவாக்கிக் கொண்டு வசதியோடு மனிதன் வாழத்தான்.

என்ன இல்லை இந்தப் புவியில்? சுவாசிக்க காற்று! தாகம் தணிக்க நீர்! உண்ண உணவு! உடுத்தும் உடைக்கான நூல்! உறையுள்ளுக்கான மண், கல், செங்கல், இரும்பு! ஆபரணங்களுக்கான பொன், வெள்ளி கனிமப் பொருட்கள்! உழைக்க கரம்! கண்டுபிடிக்க மூளை! அனுபவிக்க உடல்! வேறு கிரகத்தை எதற்குத் தேட வேண்டும்? வளங்கள் கொட்டிக்கிடக்கும் இத்தரணியில் வாழ வக்கில்லாதவனால் வேறு எங்கும் வாழவே முடியாது.

நாம் இப்படிச் சொன்னால், சில நண்பர்களோ, “நான் ஏன் பிறந்தேன்?” என்று வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை அலுத்துவிட்டதாம்! இந்தப் பூமி பழையதாகிப் பயனற்றுப் போய்விட்டதாம்! இங்கு செல்வங்களை யார் யாரோ அனுபவிக்கிறார்களாம்! தனக்கு மட்டும் எதுவுமே வசப்பட மறுக்கிறதாம்! என்ன உலகம்! என்ன வாழ்க்கை என்ற சலிப்பு! அதுவும் இளம்தளிருக்கு!

வாழ்க்கை அழகானது. அந்த அழகை ரசிக்க கண் மட்டும் போதாது; இதயமும் வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே! வெறுத்து ஒதுக்குவதற்கோ துறப்பதற்கோ அல்ல! வெறுப்பின் உச்சம்தான் தனிமை! கண்டதையும் சிந்தித்து உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக்கொள்வது! யாரைப் பார்த்தாலும் எரிச்சல்! எதைப் பார்த்தாலும் ஒவ்வாமை! சக மனிதர்கள்மீது, வீட்டின் மீது, குடும்பத்தின் மீது, செய்யும் தொழில் மீது, படிக்கும் புத்தகத்தின் மீது, சாப்பிடும் உணவின் மீது, அருந்தும் பானத்தின் மீதுகாரணமே இல்லாமல் அருவருப்பு!

உங்களில் யாரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தாலும் மரணத்தை விரும்ப வேண்டாம்!” என்பது நபிமொழி. (புகாரீ)
மற்றொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம்! ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாகத் தேடிக்கொள்ளலாம்! அல்லது அவர் தீயவராக இருப்பார். அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும். (புகாரீ)
ஆக, நல்லவனோ கெட்டவனோ சாவை வரவேற்கக் கூடாது; மேலும் வாழவே எண்ண வேண்டும். வேண்டுமானால் இப்படிப் பிரார்த்திக்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்: இறைவா! வாழ்வது எனக்கு நன்மையாக இருக்கும்வரை என்னை வாழவைப்பாயாக! இறப்பதே எனக்கு நன்மையாக இருக்குமானால் என்னை இறக்கச்செய்வாயாக! (நஸயீ)

வாழ்க்கை வெறுத்துப்போகக் காரணமென்ன? ஜீவிதத்தின் மீது சலிப்பைத் தூண்டுவது எது? பெரும்பாலோருக்கு இல்லாமையே காரணம். படிப்பு இல்லை; வேலை இல்லை; சம்பாத்தியம் போதவில்லை; வசதி இல்லை; உடல்நலம் இல்லை; கேட்பார் இல்லை; கவனிப்பார் இல்லை; அன்பு காட்டுவார் இல்லை... இப்படி பலஇல்லைகள்.

என்னைக் கேட்டால், ‘இல்லைகளை இருப்பவைகளாக மாற்றவே மனிதப் பிறப்பு! நீ பிறந்ததால், பெற்றோருக்குப் பிள்ளை இல்லை என்பதை முதலில் மாற்றுகிறாய். உன் அண்ணனுக்குத் தம்பியும் அக்காளுக்குத் தங்கையும் இல்லை என்பதை உன் பிறப்பு மாற்றுகிறது. இந்த உலகத்திற்கு, மனிதகுலத்திற்குப் புதிய உறுப்பினர் இல்லை என்ற குறையை நீ பிறந்துவந்து நீக்குகிறாய்.

கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், உடல்நலம், வாழ்க்கை வசதி, அமைதி, நிம்மதி, அன்புஇவையெல்லாம் இல்லை என்பதற்கு நீதான் காரணம்! இந்த விஷயத்தில் உனது ஆற்றாமையை மறைக்க அடுத்தவர்மீது பெற்றோர், உறவினர், சமுதாயம், நாடு, மொத்தத்தில் உலகத்தின் மீது- பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாய்; உன்னை நிரபராதி என்று நிரூபிக்க சொத்தைக் காரணங்களை வலைபோட்டுத் தேடுகிறாய்.

படிப்பும் பட்டமும் வேண்டுமானால், உன் இளமையை, இளமைக்கே உரிய வேட்கைகளை, விருப்பம்போல் சுற்றித்திரியும் குறிக்கோள் இல்லாத கற்பனை ஆசைகளைச் சற்றுத் தியாகம் செய்ய வேண்டும். எந்தத் துறையிலும் தியாகத்தின்மூலமே வாகை சூட முடியும். சின்னதை இழந்தால்தான் பெரியது கிடைக்கும். கார்பன் டை ஆக்ஸைடை இழந்தபிறகே ஆக்ஸிஜனை உள்ளே இழுக்க முடியும். வலியைத் தாங்கினால்தான், குருதியை இழந்தால்தான் மழலை மொழியின் சுகத்தை அனுபவிக்க முடியும்.

எல்லாம் தானாகவே நடக்கும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்துகொண்டே இருக்கும். நான் விரும்பும் வாய்ப்பு வரும்வரை காத்திருப்பேன். எதையும் நாடிச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்குத் திறமை உண்டு. என் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள இந்த உலகம் விரும்பினால் என்னைத் தேடி வரட்டும்.. என்றெல்லாம் வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு, கற்பனை உலகில் மிதந்துகொண்டு உட்கார்ந்திருந்தால், வயதுதான் போகும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு: கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று, உடல் வற்றி செத்ததாம் கொக்கு! கடல் எப்போது வற்ற? கருவாட்டை எப்போது கொக்கு தின்ன? அலைகள் ஓயப்போவதில்லை. அலையை மீறி கடல்நீரில் மூழ்கி எழுந்தால், எழும்போதே கொக்கின் அலகில் அழகான மீனைப் பார்க்கலாம்! அதிகாலையில் பறவைகள் கூட்டைவிட்டு, குஞ்சுகளைவிட்டுப் பறந்துபோய், அலைந்து திரிந்துதான் தீனியைப் பெறுகின்றன. தானும் பசியாறி குஞ்சுகளுக்கு இரையையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. இதை ஒரு நபிமொழி சுட்டிக்காட்டியும் உள்ளது.

உணவுச் சங்கிலி, (Food Chain) என்றொரு கொள்கை உண்டு. இயற்கையில் ஓர் உயிரினம் மற்றொன்றுக்கு உணவு என்ற வகையில் தாவரங்கள், விலங்குகள் என எல்லா உயிரினங்களும் இணைந்த தொடரேஉணவுச் சங்கிலிஎனப்படும். ஒரு செடியைக் கடித்துத் தின்று வெட்டுக்கிளி வாழ்கிறது. வெட்டுக்கிளியை விழுங்கி தவளை பிழைக்கிறது. தவளையைக் கவ்வி விழுங்கி பாம்பு உயிர் பிழைக்கிறது. பாம்பைக் கொத்தித் தின்று பருந்து ஜீவிக்கிறது. இந்தச் சங்கிலித் தொடரே உணவுச் சங்கிலி ஆகும்.

ஆனால், இவை ஒவ்வொன்றும் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டால் இரை கிடைக்குமா சொல்லுங்கள்! தேடிச் செல்ல வேண்டும். இரைக்காகப் போராட வேண்டும்! சில வேளைகளில் இரையே இரைதேடிய ஜீவனைத் தீண்டிபருந்தைப் பாம்பு தீண்டி, பருந்தின் உயிருக்கே ஆபத்து நேரலாம். எல்லாம் தெரிந்துதான் போராடத் தொடங்குகின்றன. இந்த இயற்கை நிகழ்வுக்கு மனிதன் மட்டும் எப்படி விலக்காக இருக்க முடியும்? அவனது வாழ்க்கையும், அதன் வளர்ச்சியும், வளர்ச்சியின் வேகமும் போராட்டத்தின் வீச்சைப் பொறுத்தே அமையும்.

ன்னொரு பெரிய காரணம், வருகின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல், தெரிந்தாலும் அலட்சியமாக இருந்துவிடுவது வாழ்க்கையை அழகற்றதாக, அழுக்கானதாக ஆக்கிவிடுகிறது. வாய்ப்பு, ஒன்றுக்குப் பலமுறை மனிதனின் கதவைத் தட்டத்தான் செய்கிறது. இண்டர்வியூ என்ற பெயரில், அறிமுகம் என்ற பெயரில், பரிந்துரை என்ற பெயரில், உதவி என்ற பெயரில் வந்து எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. அது வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்தும்போதெல்லாம் இவன் தூங்கிவிடுகிறான். அல்லது திமிர் வாதம் பேசி கெடுத்துக்கொள்கிறான். வாய்ப்பின் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான்.

வாழ்க்கையில் பல தருணங்கள் வந்துபோகின்றன. நீங்கள் விழிப்போடு இருந்து தருணங்களைச் சுவைக்க கற்றுக்கொண்டால் பெரிய மாற்றத்தைக் காணமுடியும். ஒரு தருணம் இல்லாவிட்டால் இன்னொரு தருணம் வசந்தத்தின் வாயிலைத் திறந்துவிடக்கூடும். தருணங்களைத் தவிர்த்துவிடுவது வாழ்க்கையைத் தவிர்ப்பதற்குச் சமம்! தேவை உங்களது விழிப்புணர்வு.

மனிதனுக்கு, அவன் முயற்சித்தது தவிர வேறொன்று கிடையாது (53:39) என்று அறிவிக்கின்றான் இறைவன். இறைவன் கொடுப்பான்தான்; இல்லை என்று சொல்லவில்லை நாம் கேட்க வேண்டுமல்லவா? தட்டினால்தானே திறக்கும்! கேட்டால்தானே கிடைக்கும்! இதற்குத் தேவை கடுமையான உழைப்பு. உழைத்தால் உண்ணலாம். உறுதியோடு எதிர்கொண்டால் வெல்லலாம். வெற்றி வயப்பட்டுவிட்டால், நேற்றுவரை திரும்பிப் பார்க்காத இந்த உலகம், உன் பெயரையே உச்சரிக்கத் தொடங்கிவிடும். ஏளனப் பார்வைகள் ஏங்கும் பார்வைகளாக மாறிவிடும். கீழே நின்றபோது, நீ கூச்சல் போட்டும் கண்டுகொள்ளாத செவிகள், உயரத்தில் இருந்து தும்மினால்கூட காதுகளைத் தீட்டிக்கொண்டு செவிமடுக்கவும் பேசவும் தொடங்கிவிடும்.

ன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். எவ்வளவு சம்பாதித்தாலும் சிலர் திருப்திப்படுவதே இல்லை. எவ்வளவு வசதியோடு வாழ்ந்தாலும் மனநிறைவு இருப்பதில்லை. இதனால் வாழ்வே சோகமயம். போதவில்லை என்ற புலம்பல். இவர்களுக்கு வாழ்க்கையில் தென்படும் வெறுமை வெறும் பிரமையே. இவர்கள் சற்று கீழ்நோக்கிப் பார்ப்பார்களானால், வாழ்வின் அருமை புரியும். நம்மைவிடக் கீழே உள்ளோர் கோடி. ஊர்க்கோடியில் திறந்த வெளிகளில், கூரைக் குடிசைகளில் அடிப்படை வசதிகளே இல்லாமல் சிலர் குடியுரிமைகூட கிடைக்காமல்- ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையே போராட்டமாகக் கழிக்கும் அவர்களை ஒரு விநாடி எண்ணிப்பாருங்கள்! நிம்மதியும் திருப்தியும் தானே பிறக்கும்.

செல்வத்திலும் தோற்றப் பொலிவிலும் தம்மைவிட மேலான ஒருவரைக் கண்டால், உடனே தம்மைவிடக் கீழானவர்களை எண்ணிப்பார்! (புகாரீ)

மேலே செல்ல விரும்புவதோ அதற்காக உழைப்பதோ தவறாகாது. அதே நேரத்தில், தற்போதைய நிலைமீது வெறுப்புகொள்வதோ அதை முன்னிட்டு வாழ்க்கை குறித்து விரக்தி அடைவதோ நன்றி மறந்த செயலாகும்.

நிறைய இருந்தும் வாழ்க்கைமீது அதிருப்தி ஏன் ஏற்படுகிறது? மனம்தான் காரணம். போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து. எதற்கெடுத்தாலும் அடுத்தவரையே பார்த்து ஏங்கக் கூடாது. சில நேரங்களில் அது பொறாமைக்கும் பகைமைக்கும்கூட வழிவகுத்துவிடும்.

அன்றைக்கு அவர் தமிழகத்தின் பெரிய பேச்சாளர். அடுக்கு மொழியில் அள்ளிவீசுவார். நன்றாகத்தான் வாழ்ந்தார். ஆனாலும், திருப்தி என்பதே கிடையாது. தன்னைவிடச் சிறியவனுடனெல்லாம் போட்டி போடுவார். அதுகூடப் பரவாயில்லை. அடுத்தவருக்கு வரும் வாய்ப்பை குறுக்கே விழுந்து- தடுத்துவிடுவார். இதனால் அவருக்கு இலாபம் இல்லை என்றாலும் ஓர் அற்ப சுகம்! நாட்கள் சென்றன. இவருடைய பொறாமைக்கு ஆளானவர் வளர்ந்தார். இப்போது அந்தப் பெரிய மனிதரைக் கண்டுகொள்ள ஆள் இல்லை. தன்மீது நம்பிக்கை இல்லாதவன்தான் பிறர் பிழைப்பைக் கெடுக்க முனைவான். அவனவனுக்கு எழுதப்பட்டது கிடைத்தே தீரும் என்பதெல்லாம் ஊருக்கு மட்டுமே உபதேசமா?

கல்லூரி நாட்களில் ஒரு நண்பர். தனக்குத் தெரியாதவற்றையெல்லாம்சந்தேகம்என்ற பெயரில் கேட்டுத் தெரிந்துகொள்வார். நமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து கேட்டால் தெரிந்திருந்தாலும்- தெரியாது என்று சொல்லிவிடுவார். கடைசிவரை, அவர் எதிர்பார்த்தபடி முதல் மதிப்பெண் பெற முடியவே இல்லை. இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. நமக்கு நம் நிலைமீது நிறைவு ஏற்படின் பிறர் பின்னால் அலையவோ அவர் வாழ்க்கையைக் கெடுக்கவோ எண்ணமும் எழாது; நேரமும் இருக்காது.

வசர முடிவுகளும் வாழ்க்கையில் பிரச்சினைகளைப் பிரசவித்துவிடுகின்றன. ஆத்திரத்தோடு அவசரமாக எடுக்கும் எந்த முடிவும் முட்டாள்தனமாகவே முடியும். மதரசாவில் இறுதியாண்டுகளில் தகுதிக்கு மீறி செலவு செய்துவிட்டேன். கடிதம் எழுதும்போதெல்லாம் பணம் அனுப்பினார் தந்தை. நீண்ட நாட்களாக தான் பயன்படுத்திவந்தபாக்கெட் வாட்ச்ஒன்றையும் நான் கேட்டேன் என்பதற்காகக் கொடுக்கவும் செய்தார். அநேகமாக ஹஜ்ஜில் வாங்கிவந்தது. அறையில் வைத்திருந்தபோது திருடுபோய்விட்டது.

விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, கோபமே கொள்ளாத தந்தை கடுமையாகக் கோபித்து திட்டியும்விட்டார்கள். எனக்கோநான் செய்த தவறுகளை எண்ணாது- கடுமையான ஆத்திரம். ஊரைவிட்டு ஓடிவிடுவது என்ற முடிவில் கையிலிருந்த காசுடன் பேருந்து நிலையம் வந்தேன். பஸ்ஸைத்தான் காணவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தேன். அதற்குள் தந்தை ஆளனுப்பி தேடச் சொல்லிவிட்டார்கள்போலும்! தேடிவந்தவன் சிறிய தந்தை மகன். புத்திமதி சொல்லி, என் கோபத்தைத் தணித்து வீட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டான். ஒருகால் உடனே பஸ் கிடைத்து, நான் எங்காவது போயிருந்தால், என் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்பதைக்கூட யோசிக்கவிடாத அவசர புத்தி! அது மட்டுமல்ல! காசின் அருமை புரியாத பேதமை! இன்றைக்கு நம் காசு ஊதாரியாக்கப்பட்டால் தந்தைக்கு வந்த கோபத்தைவிட பன்மடங்கு கோபம் வரும்போது வெட்கமாக இருக்கிறது.
மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும்!
பின்னே வரும் இனிப்புக்காக தற்போது கசப்பைச் சுவைக்கத்தான் வேண்டும்.
வாழ்க்கை அழகானது. அந்த அழகை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

_________________________