Thursday, March 28, 2013

இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்


தமிழில்: கான் பாகவி


இலங்கைத் தீவில் ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு நபித்தோழர் சிலோன் வருகைதந்தார் என்றும் பிறகு அங்கிருந்து சீனா சென்றார் என்றும் இலங்கை முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதுண்டு. பின்னர் அவர், கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களது காலத்தில் அரேபிய தீபகற்பம் சென்றார் என்று கூறுவர்.

அடுத்து அரபியர் வருகை தொடர்ந்தது. அங்கேயே திருமணமும் செய்துகொண்டனர். இஸ்லாம் பரவியது; முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியது. ஆக, தங்களின் மரபுமூலம் அரபுகள்தான் என்று இலங்கை முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

இலங்கைக்கு அரபியர் வந்ததற்குக் காரணம் இரண்டு. 1. வணிகம். இலங்கையில் உற்பத்தியாகும் மிளகு, நறுமணப் பொருட்கள் வாங்கிச் சென்றனர். 2. முற்காலத்திலிருந்தே முஸ்லிம்களிடம் ஒரு கருத்து நிலவிவருகிறது. ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சிலோனில்தான் இறங்கினார்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. ஆதம் மலைஇலங்கையில் உண்டு. இன்றுவரை மக்கள் அதைக் காண வருகிறார்கள். அவ்வாறு அரபியரும் வந்திருக்கலாம்.

பிறகு இந்தியா, மலாயா, ஜாவா, இந்தோனேஷியா ஆகிய பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் இலங்கை வந்து குடியேறினர். ஆக, இலங்கை முஸ்லிம்கள் என்போர் இவர்கள் எல்லாரும் சேர்ந்தவர்களே. இதனால்தான், இலங்கை முஸ்லிம்கள் பல மரபுவழியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மக்கட்தொகை

இலங்கையில் 2012ஆம் ஆண்டு நடந்த அதிகாரபூர்வ மக்கட் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது:

கிழக்கு மாகாணம்
இலங்கையின் மொத்த மக்கட்தொகை 2 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 723. இவர்களில் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகியோர் அடங்குவர். இருப்பினும் பௌத்தர்களே பெரும்பான்மை மக்களாவர். அவர்கள் 1,42,22,844பேர் உள்ளனர். இது மொத்த மக்கட்தொகையில் 70.2 விழுக்காடு ஆகும்.

அடுத்து இந்துக்கள் 25,54,606பேர். இது 12.6 விழுக்காடு. முஸ்லிம்களைப் பொறுத்தவரை 19,67,227 பேர்; சுமார் 2 மில்லியன். இது மொத்த எண்ணிக்கையில் 9.7 விழுக்காடு. இலங்கை முஸ்லிம்களில் 40 சதவீதம் பேர் கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்றனர். ஏனையோர் நாட்டில் பரவலாக வாழ்கின்றனர்.

கல்வி நிலை

இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலையைப் பார்த்தால், முன்பெல்லாம் பள்ளிவாசல்களில் உள்ள ஆரம்ப மதரசாக்களில் (மக்தப்களில்)தான் கல்வி கற்றுவந்தனர். அரசு பள்ளிகளுக்கு அருகிலும் மதரசாக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்நிய காலனியாதிக்கக் காலத்தில், முஸ்லிம்களுக்கென தனியான அரசு பள்ளிகள் நடந்துவந்தன.

தற்போது முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் 780 அரசாங்கப் பள்ளிகள் முஸ்லிம்களுக்காக நடந்துவருகின்றன. இவற்றில் 3 லட்சம் மாணவ மாணவியர் பயில்கின்றனர்; 14 ஆயிரம் முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகள் கல்வி போதிக்கின்றனர்; போதனை மொழி தமிழ்.

இதன்றி, 55 ஆயிரம் முஸ்லிம் மாணவ, மாணவியர் பௌத்தர்கள் பள்ளிகளில் சிங்கள மொழியில் கல்வி கற்றுவருகின்றனர். மொத்த முஸ்லிம் மாணவர்களில் இவர்கள் 17 விழுக்காடு. இவர்களுக்குச் சில பிரச்சினைகளும் உண்டு.

எடுத்துக்காட்டாக, சிங்களப் பள்ளிகள் சிலவற்றில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களால் வெள்ளிக்கிழமைகளில் ஜுமுஆ தொழ முடிவதில்லை. முஸ்லிம் மாணவிகள் தலையை மறைப்பதற்கோ பர்தா அணிவதற்கோ தடை உள்ளது. சில நேரங்களில், பள்ளி வளாகத்தில் நடக்கும் புத்த மத விழாக்களில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம், முஸ்லிம் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் இருக்கும் பள்ளிகள் போதிய வசதி இல்லாதிருப்பதும்தான். முஸ்லிம் பெற்றோர்களிடம் உள்ள ஒரு தவறான எண்ணமும் காரணம்தான். பெற்றோர்களும் இத்தகைய பள்ளிகளிலேயே கற்றார்கள்; முஸ்லிம் பள்ளிகளில் தரம் இல்லை; அரசால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.

பௌத்தர்கள் நடத்தும் பள்ளிகளில் படித்தவர்களுக்கே மற்றவர்களைவிட அதிகமாக அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். மார்க்கத்தைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். இப்பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களிடம் பௌத்த சிங்களக் கலாசாரத்தின் தாக்கம் உள்ளது. பெற்றோர்களிடம் விழிப்புணர்வும் சீரான வளர்ப்பு முறையும் இருந்தால் மட்டுமே மாணவர்களை இந்த அழிவிலிருந்து காக்க முடியும்.

மொழிப் பிரச்சினை

எதில்காலத்தில் பேராபத்து ஒன்று காத்திருக்கிறது எனலாம். இலங்கை முஸ்லிம் சமூகம் மொழி ரீதியாக மூன்றாகப் பிரியக்கூடிய ஆபத்துதான் அது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்று பிரிந்து போவார்கள்போலும். சிங்களமும் தமிழும் அதிகாரபூர்வ அரசாங்க மொழிகளாக இருந்தாலும், அரசு அலுவலகங்களில் தமிழ் நடைமுறையில் இல்லை; சிங்களமும் ஆங்கிலமுமே அங்கு கோலோச்சுகின்றன.

கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் தமிழை ஆட்சிமொழியாக ஏற்காததே பௌத்தர்களுக்கும் இந்துத் தமிழர்களுக்கும் இடையிலான இனமோதல்களுக்கு அடிப்படைக் காரணமாயிற்று என்பது ஊரறிந்த இரகசியமாகும். இந்தப் புறக்கணிப்பே, ஈழத் தமிழர்களின் விடுதலைப் புலிகள் இயக்கம் பிறக்கவும் வழிவகுத்தது.

இலங்கையில் தமிழ் மொழியானது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பேசும் மொழியாக இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலான முஸ்லிம்கள் பௌத்தர்கள் மத்தியில் பரவலாக வாழ்ந்துவருவதால், அதிகமானோர் சிங்கள மொழியையும் நன்கு அறிந்துள்ளார்கள்; அதை ஒரு முட்டுக்கட்டையாக அவர்கள் கருதுவதில்லை.

ஆனால், வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாகாணங்களில் திரளாக வாழும் இந்துத் தமிழர்கள் அவ்வாறல்ல. அவர்கள் சிங்கள மொழியைக் கற்பதில்லை. தமிழை ஆட்சிமொழியாக ஏற்க வேண்டும் என்பதில் அழுத்தமாக உள்ளனர்.

சமூக நல்லிணக்கம்

நீண்ட காலமாக முஸ்லிம்களும் பௌத்தர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணக்கமாகவே வாழ்ந்துவந்தனர். அண்மைக் காலமாக அங்கு சில தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கிப் பிரச்சினை செய்துவருகின்றன. இந்த அமைப்புகளுக்கு புத்த பிக்குகளே தலைமை தாங்குகின்றனர்.

முஸ்லிம்கள் தங்களின் வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதையும் பள்ளிவாசல்கள் எழுப்புவதையும் இந்த அமைப்பினர் தடுத்துவருகின்றனர். சில பள்ளிவாசல்களை இடிப்பதற்கும் திட்டமிடுகின்றனர். முஸ்லிம்களின் குடியுரிமையில் குழப்பம் விளைவிக்கின்றனர்.

ஜம்இய்யத்துல் உலமா தலைவர் முஃப்தி ரிஸ்வி
அத்துடன், முஸ்லிம்களின் வணிக நடவடிக்கைகளைத் தடுக்க பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, சிறு வெளியீடுகள், கட்டுரைகள் வாயிலாக முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துகளை விதைத்தல், இன அழிவு செய்வோம் என மிரட்டல் விடுத்தல் ஆகியவற்றைக் கூறலாம்.

இந்தத் தீவிரவாதிகளுக்குப் பின்னால் மறைமுகமாக சில சக்திகள் இருந்துகொண்டு, இலங்கையில் இனப் போர் மூள வேலை செய்கிறார்கள் எனத் தெரிகிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு, தம் ஆயுதங்களைக் காசாக்க ஆயுத வியாபாரிகள் செய்யும் சதியாக இது இருக்குமோ என்ற ஐயமும் உண்டு.

கடந்த ஓராண்டாக, முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாகியுள்ளன. பள்ளிவாசல்களை இடித்தல், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறாமல் தடுத்தல், பள்ளிவாசல்களை மூட முயற்சி செய்தல் என அவர்களின் அராஜகம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

இவர்களின் ஆர்ப்பாட்ட நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போன்று முஸ்லிம்கள் சிலரது நடிவடிக்கைகளும் அமைந்துவிடுகின்றன. தேவையோ அவசியமோ இல்லாத இடங்களில்கூட -கொடையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக- பள்ளிவாசல்களை எழுப்புவது, முஸ்லிம்கள் அல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒலிபெருக்கியின் மூலம் பாங்கை சப்தமாகக் கூறுவது போன்ற வேலைகளில் நம்மவர் ஈடுபடுவது, தீவிரவாத பிக்குகளின் வாதத்திற்கு வலு சேர்ப்பதைப்போல் அமைந்துவிடுகிறது.

தஅவாகளம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கிடையே மார்க்கப் பரப்புரை செய்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் பல செயல்பட்டுவருகின்றன. தப்லீஃக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, சலஃபீ ஜமாஅத் முதலான அமைப்புகளும் தற்கால இஸ்லாமிய அமைப்புகளும் இவ்வாறு பணிகளைச் செய்துவருகின்றன. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மார்க்க விழிப்புணர்வு நன்றாகவே உள்ளது. சூழ்நிலை அறிந்து, அதற்குத் தக்கவாறு புரிந்துணர்வோடு செயல்படுகின்றனர்.
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் செயல்பாடு குறிப்பிடத் தக்கது. அரபிக் கல்லூரிகளின் பட்டதாரிகளும் பள்ளிவாசல்களின் இமாம்களும்தான் இதன் அங்கத்தினர்கள். அதிகாரபூர்வமாக முஸ்லிம்களை வழிநடத்தும் அமைப்பாக இதுவே இருக்கிறது.



முஸ்லிம்களின் விவகாரங்களைக் கண்காணிப்பது, இமாம்களுக்கும் மதரசா ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுவது போன்ற பணிகளை இது மேற்கொண்டுவருகிறது. மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இதனுடன் ஒத்துழைக்கின்றன.

அமைப்புகளிடையே சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான பிரச்சினைகளில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஒரே கொடியின்கீழ் அனைவரும் ஐக்கியமாகிவிடுகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குமுன் விடுதலைப் புலிகள், குறிப்பிட்ட பகுதியிலிருந்து முஸ்லிம்களைத் துரத்திவிட்டனர். உடனே முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர். அவ்வாறே, ‘தம்புள்ளபகுதியில் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டது. அப்போதும் ஜம்இய்யாவின் தலைமையில் செயலாற்றினர்.

முஸ்லிம்களின் கோரிக்கைகள்

இலங்கை அரசாங்கத்திடம் முஸ்லிம்களுக்குச் சில அடிப்படை கோரிக்கைகள் உள்ளன. அரசாங்கப் பணிகளிலும் தொகுதிகள் ஒதுக்குவதிலும் முஸ்லிம்களின் மக்கட்தொகைக்கேற்ப, விகிதாச்சார அடிப்படையில் இடங்கள் தர வேண்டும். தற்போதைய அரசில் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பது உண்மைதான். ஆனாலும், அவர்களுக்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டவை; அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.

இதே கோரிக்கையை, முஸ்லிம்களுக்கு முன்பிருந்தே இந்துக்களும் அரசிடம் வைத்துவருகின்றனர். குறிப்பாக, விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பிறகு இக்கோரிக்கை வலுத்துவருகிறது. ஆனால், இந்துக்களும் முஸ்லிம்களுக்கு உரிமை அளிப்பதை எதிர்க்கின்றனர்.

எனவே, உலக முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் இலங்கை அரசை வற்புறுத்தி, இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற முயல வேண்டும். இலங்கையுடன் அரபு நாடுகளுக்கு நெருங்கிய நட்புறவு இருந்துவருவது ஒரு சாதகமான அம்சமாகும்.
(அல்முஜ்தமா)
http://magmj.com/index.jsp?inc=5&id=12522&pid=3535&version=194#

Wednesday, March 06, 2013

போப் ராஜினாமாவுக்குக் காரணம் என்ன?

வா
டிகனின் போப் 16ஆம் பெனடிக்ட் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகினார். முதுமையும் நோயும்தான் காரணம் என்று அறிவித்தார். கடந்த 600 ஆண்டுகளில் பதவியிலிருந்து தாமாக விலகிய முதலாவது போப் இவர்தான். இது கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

உண்மையில் வயோதிகம்தான் காரணமா? இவரைவிடக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது யோவான் பவுல் பதவியிலிருந்து விலகவில்லையே! சஊதி ஆய்வாளர் ஒருவர் இது குறித்து ஆய்வு செய்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் மதங்கள் ஒப்பீட்டியல் மற்றும் வாடிகன் விவகாரங்களின் சிறப்பு ஆய்வாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸாம் முதீர் எனும் அந்த ஆய்வாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்களாவன:

புராதன பைபிள் ஒன்று கிடைத்திருக்கும் இரகசியம் வெளியுலகிற்குக் கசிந்ததே உண்மையான காரணம். அதில் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த மூவர் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமன்றி, அதை வெளிப்படுத்தாமல் வாடிகனிலேயே தற்போது இருந்துவருகின்றனர். போப் அம்மூவரைப் பற்றி அறிய விரும்புகிறார். அவர்களில் ஒருவர்தான் தகவல் கசியக் காரணமாக இருக்க முடியும் என்று கருதுகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய மற்றொருவர் தென்னாப்பிரிகா சென்றுவிட்டார். அங்கு அஹ்மத் தீதாத் அவர்களின் ஊரில் வைத்து, தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்தார். இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு தீதாத் அவர்களே காரணமாம்!

வாடிகன் பொறுப்பாளர்களுடன் இந்த விஷயம் தொடர்பாக நேருக்குநேர் விவாதிக்கத் தாம் தயார் என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார். அவ்வாறே, வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர் என்பதையும் பிறகு வாடிகன் பொறுப்பிலிருந்து விலகினர் அல்லது விலக்கப்பட்டனர் என்பதையும் வாடிகனால் மறுக்க முடியுமா? என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போப்பும் ஆயர்களும் இந்த விஷயத்தில் மௌனம் சாதித்துவந்தனர். இச்செய்தியை மறுக்க வாடிகனால் இன்றுவரை இயலவில்லை. இறுதியாக போப் பெனடிக்ட் ராஜினாமா செய்தார்.

2006ஆம் ஆண்டில் போப் வெளியிட்ட அறிக்கைகளில் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் கொச்சைப்படுத்திப் பேசிப்பார்த்தார். இதன்மூலம் விஷயத்தை மறைத்துவிடலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், சூனியம் சூனியக்காரனுக்கெதிராகவே திரும்பிவிட்டது; பதவி விலகிவிட்டார்.

வாடிகனின் உளவுத் துறையினர், அந்த பைபிள் பிரதி யார் கையில் உள்ளது என்பதை வலைபோட்டுத் தேடிவருகின்றனர். உண்மை என்னவென்றால், அதைப் பாதுகாக்கத் தவறியவர் போப்தான்; அதைத் தொலைத்த குற்றத்திற்காகவே இப்போது பதவியைத் தொலைத்திருக்கிறார்.

பிரிட்டன் போன்ற பல நாடுகள், போப் தங்கள் நாட்டுக்கு வந்தால் உடனே கைது செய்யத் தயாராயிருந்தன; கைதுக்கான குறிப்புகள் வெளிவந்தது உண்மை என உறுதிப்படுத்தினார் இஸாம். போப்புடைய ஆயர்கள் பலர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதை போப் பிரயாசப்பட்டு மறைத்தார் என்பதே அந்நாடுகளின் குற்றச்சாட்டுகளாகும்.

இஸ்லாமியப் பிரசாரத்திற்கு முன்னால் இவர்களின் தோல்விகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாவதும் வரவிருக்கும் போப்பிற்குப் பெரிய சவால்களாக இருக்கும்.

(அல்முஜ்தமா)

Tuesday, March 05, 2013

பிரிட்டனைப் பயமுறுத்தும் பாலியல் பலாத்காரங்கள்


கான் பாகவி

பி
ரிட்டன் நாகரிகத்தின் (?) சிகரத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. தலைநகர் லண்டன் உலக நாகரிகங்களின் தொட்டில் என்று பெருமை பேசுவர். அறிவியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடு என்பர். படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் சிறந்த இடம் என்றும் அதேநேரத்தில், சுதந்திரம், பெண் விடுதலை, ஜனநாயகம், கருத்துரிமை போன்ற நவீனங்களின் வளர்ப்பு தேசம் என்றும் மெச்சுவர். சூரியன் அஸ்தமிக்காத நிலப்பரப்பு என்றும் போற்றுவர்.

அந்த நாட்டில்தான் இப்போது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்காரக் கொடுமைகள் எல்லை தாண்டி, நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மர்மக் கொள்ளை நோய்என்று நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் வர்ணிக்கின்ற அளவுக்கு, கற்பழிப்பு சம்பவங்களும் பாலின அத்துமீறல்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. நாடே கலாசார முடைநாற்றத்தால் மூச்சடைத்துப் போயிருக்கிறது.

2013 ஜனவரியில் வெளியான அரசாங்கத்தின் அறிக்கை இந்தக் கொள்ளை நோயைவெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. பிரிட்டனில் 20 பெண்களில் ஒருத்தி அறுபது வயதுக்குள் கற்பழிக்கப்படுகிறாள்; அல்லது அபாயகரமான பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்கிறது அரசு அறிக்கை.

பிரிட்டனின் சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தேசிய புள்ளிவிவர மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் இந்த அறிக்கை ஏராளமான ஏடுகளில் வெளியாகியிருக்கிறது. டைம்ஸ்பத்திரிகை, இந்தக் கற்பழிப்புகளை மர்மக் கொள்ளை நோய்என்றே வர்ணித்துள்ளது.

ஆண்டு தோறும் 5 லட்சம்


ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாலின அத்துமீறல் சம்பவங்கள் -அதன் எல்லா வகைகளையும் சேர்த்தால்- 5 லட்சத்தை எட்டுகின்றன. காரணங்கள் என்ன? விளைவுகள் யாவை? தீர்வு என்ன? தெரிந்துகொள்ள வேண்டாமா?

அறிக்கையை வாசிக்கும் யாருக்கும் முதலில் ஆச்சரியம்தான் ஏற்படும். உறுதிவாய்ந்த சட்டம், தனிமனித மற்றும் பாலினச் சுதந்திரம் ஆகியவை எல்லாம் நெடுந்தூரத்திற்குத் திறந்துவிடப்பட்டிருக்கிற ஒரு புதுமை பூமியில் இந்தக் கொடுமைகளா?

ஆம்! பிரிட்டனின் மறுபக்கத்தைப் பார்த்தால் இக்கொடுமைகள் இயல்பானவைதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பாலின நட்பு, காதல், விபசாரம், ஒருபால் உறவு இவை எல்லாம் பரஸ்பர இசைவில் நடந்தால் 16 வயது முதல் அனுமதிக்கப்படும் என்கிறது பிரிட்டிஷ் சட்டம். இந்தப் பைத்தியக்கார சுதந்திரம்தான் வயது வித்தியாசமின்றியும் இசைவின்றியும் நடக்கிற பாலியல் கொடுமைகளுக்கும் அடிகோலுகின்றன.

பாலின இச்சையின் வாயில் திறக்கப்பட்டால், அது எல்லையைத் தாண்டும் என்பதற்கு இது அடையாளமல்லவா? இதை அனுமதிக்கும் எந்தச் சமூகமானாலும் அது எல்லா மட்டங்களிலும் சிக்கல்களைச் சந்திக்கும் என்பதற்கு இது ஆதாரமல்லவா? செயற்கைச் சட்டங்கள் -மனிதன் வகுக்கும் விதிகள்- மனித குலத்தைக் காக்கத் தவறிவிட்டன; மார்க்கத்தையும் மனத்தையும் அரங்கிலிருந்து ஒதுக்கிவிட்டன என்பதற்குச் சிறந்த சான்றல்லவா?

இணையதளத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் பக்க்ததில் அநத் அறிக்கை விரிவாக வெளிவந்துள்ளது. இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நடக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்பான மீள்பார்வைஎன்பது தலைப்பு. இதுதான் இவ்வகையில் வெளியான முதல் அறிக்கையும்கூட.

அறிக்கை விவரம்


பிரிட்டனில் ஆண்டுதோறும் 95 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்; அல்லது ஆபத்தான வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

உண்மையில் அங்கு பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் 50 லட்சம் இருக்கும். வழக்கில் சிக்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவற்றிலும் 87 ஆயிரம் குற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் நீதிமன்றம் செல்கின்றன. ஆனால், வெறும் ஆயிரம் குற்றச் சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களில் 90 விழுக்காட்டினருக்குக் குற்றவாளி யார் என்பது தெரியும். ஆனால், 15 விழுக்காடு பெண்களே காவல்துறைக்குத் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மானம்; குடும்பத்தைப் பாதிக்கும் என்ற பயம்.

காவல்துறை இந்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை; ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சட்டமும் தனது இயல்பான போக்கில் இல்லை; பாதிக்கப்படும் பெண்களின் பரிதாப நிலைகளைக் கண்டுகொள்வதில்லை; உரிமைக்கு மதிப்பளிப்பதில்லை.

பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்குத் திரைப்படங்கள், விளம்பரங்கள், கிளப்கள், இரவு விடுதிகள், போதைப் பொருட்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆபாச இதழ்கள், இணையதள பக்கங்கள் ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.

உளவியல் நிபுணர்கள் கூறும் காரணங்களையும் பார்ப்போம்: கோபக் கற்பழிப்புஎன்று ஒன்று உண்டு. தன் கோபத்தைக் கற்பழிப்பு மூலம் ஒருவன் வெளிப்படுத்துகிறான். அதில் உடல்ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறான். ஆற்றல் கற்பழிப்புஎன்ற வகையும் உண்டு. இதில் ஈடுபடுபவன், தான் ஒரு பலசாலி என்பதைக் காட்ட விரும்புகிறான். அடுத்த இனத்தின்மீது அதிகாரம் செலுத்த விரும்புகின்றவனும் கற்பழிப்பில் ஈடுபடுகிறான்.

மனநோய், சமூகத்தின் அன்பு கிடைக்காமை, பெண்கள் தரம் குறைந்தவர்கள் என்ற தவறான கருத்து, நண்பர்களின் தூண்டல், நண்பர்களிடம் ஹீரோவாகக் காட்டிக்கொள்ளல், பாலியல் வன்முறைக்கு இவனே முன்பு இலக்கானது இப்படி பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.

தீர்வு என்ன?


இஸ்லாமியப் பண்பாடுகளும் விதிகளுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். இந்நிகழ்ச்சிகள் தினமும் இதையே நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

கற்பொழுக்கமுள்ள நல்ல முஸ்லிம் பெண்மணி தன்னைத் தவறான எண்ணத்தோடு பார்க்கும் ஒருவனை அந்நியவனாகக் கருதி ஒதுங்கிவிடுவாளே தவிர அவனுடன் சகவாசம் வைத்துக்கொள்ளமாட்டாள்.

வரலாற்றில் ஒரு நிகழ்வு உண்டு: பனூ நுமைர்குலத்தாரில் ஒரு குழுவைக் கடந்து அரபுப் பெண்மணி ஒருவர் சென்றார். அப்பெண்ணை அவர்கள் குறுகுறுவெனப் பார்க்கத் தொடங்கினர்; பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.

அப்போது அப்பெண்மணி கூறினார்: பனூ நுமைர் குலத்தாரே! நீங்கள் இரு அறிவுரைகளில் ஒன்றைக்கூட எடுத்துக்கொள்ளவில்லையே!

‘‘இறைநம்பிக்கையாளர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்’’ (24:30)

என்ற இறைவாக்கையும் நீங்கள் மதிக்கவில்லை.

கவிஞனின் இக்கூற்றையும் மதிக்கவில்லை:

தாழ்த்திக்கொள்பார்வையைநீ ஒரு நுமைர்’ (புலி)(தமீம் குலத்தின்)கஅபும் அல்லகிலாபும் (நாய்) அல்ல

விபசாரம் மற்றும் கற்பழிப்புக்கு இட்டுச்செல்லும் பாதைகளை இஸ்லாம் அடைத்துவிட்டது; மன இச்சைகளைத் தூண்டி ஆணையோ பெண்ணையோ சபலப்படுத்தும் வழிகளை மூடிவிட்டது; அத்தகைய செயல்களுக்குத் தடை விதித்துள்ளது.

அந்நியனுடன் ஒரு பெண் தனிமையில் இருப்பது, ஒருவரை ஒருவர் இச்சையுடன் நோக்குவது, ஒருவரின் மறைக்க வேண்டிய உறுப்புகளை மற்றவர் பார்ப்பது ஆகிய அனைத்துக்கும் மார்க்கம் தடை விதித்துள்ளது. அவ்வாறே, பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வது, பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் காட்டும் ஆடை ஆபரணங்கள் அணிந்து காட்சியளிப்பது, ஆண்-பெண்ணுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் போன்றவற்றை இஸ்லாம் அனுமதிக்காது.

இந்தப் பூமியை நிர்மாணித்து, அதில் தன் பிரதிநிதியாகச் செயல்படவே மனிதனை இறைவன் படைத்தான். பூமியின்கண் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமானால், மனித இனம் இருந்தாக வேண்டும். இது தொடர்வதற்காகவே மனிதனில் சில இயற்கைத் தேவைகளையும் இயல்பான வேட்கைகளையும் அவன் அமைத்திருக்கின்றான். பாலியல் உணர்வு என்பது அத்தகைய வலுவான, ஒதுக்க இயலாத இயல்புகளில் ஒன்றாகும்.

பாலியல் உணர்வுகளையும் இன ஆசைகளையும் பொறுத்தமட்டில் மனிதன் மூன்று வகையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றான் எனலாம்.

1. அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்போல் கண்போன போக்கில் இச்சைகளைத் தீர்க்க நினைப்பான். வரையறை, சமயம், பண்பாடு, சமூகக் கட்டுப்பாடு போன்ற எந்தக் கடிவாளத்தையும் ஏற்கமாட்டான். கடவுள் மறுப்புக் கொள்கைவாதிகளின் நிலை இதுதான்.


2. இயற்கையான அந்த ஆசைகளை அடக்குகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு துறவறத்தை மேற்கொள்ளல். இது இயற்கையைப் புதைத்து அதன் செயல்பாட்டைச் சாகடிப்பதாகும்.


3. இந்த ஆசைகளுக்கு வரையறை வகுத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்து அனுபவிப்பது. இந்த நடுநிலைப் போக்குதான் இறைமார்க்கம் சொல்லித்தரும் வழியாகும். அது விபசாரத்திற்கு தடை விதிக்கிறது; விவாகத்தை அனுமதிக்கிறது. குறிப்பாக இஸ்லாம், பாலியல் உணர்வை ஒப்புக்கொண்டு, அதற்கு வடிகாலாகத் திருமணத்தைக் காட்டி, துறவறத்திற்குத் தடையும் விதித்துள்ளது. அதே நேரத்தில், வரம்புமீறி விபசாரம் போன்றவற்றில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறது.

இதுவே நடுநாயகமான நிலையாகும். திருமண முறை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனித இனப்ªருக்கம் நின்றுபோய்விடும்; அதேநேரத்தில், விபசாரத்திற்கும் தவறான பாலுறவுகளுக்கும் தடை இல்லாதிருந்தால், குடும்பக் கட்டமைப்பு சிதறிவிடும். குடும்பம் இல்லையேல் சமூக அமைப்பும் இருக்காது. முன்னேற்றமோ வளர்ச்சியோ காணப்படாது.

எனவே, பிரிட்டளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும், பெண்களுக்கெதிரான வன்முறைகளை பிரிட்டனில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தடுக்காவிட்டால் மனிதகுலத்திற்குப் பேரழிவுதான்! இஸ்லாம்தான் அதற்கு ஒரே மருந்து.

நன்றி: அல்முஜ்தமா அரபி வார இதழ்

1- Hidden rape epidemic is revealed by crime survey
2- The Times 11 January 2013
3- An Overview of Sexual Offending in England and Wales
4- Home office: 10 January 2013
5- http://www.homeofficegov.uk/publications/scienceresearch-statistics/researchstatistics/crime-research/mojove view=Standard&pubID=1؟/rview.146199