Wednesday, June 09, 2021

©©©©©©©©©©©©©©©©
அரபி மத்ரஸாக்களில் ஆன்லைன் வகுப்புகள்
©©©©©©©©©©©©©©©®
புனித ரமளான் முடிந்து ஷவ்வால் மாதமும் முடியப் போகிறது. கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் மத்ரஸாக்கள் திறக்கப்படுவதில் இழுபறி உள்ளது.

இதையடுத்து பாடங்கள் நடைபெறாமல் முன்பு போலவே வீணாகக் காலம் கழிகின்ற நிலையே காணப்படுகிறது.  இது , மேலும்  மாணவர்கள் துறை மாறுவதற்கு வழிவகுத்துவிடலாம். இருக்கும் மாணவர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் மீண்டும் நேர்ந்துள்ளது.

எனவே,உடனே எல்லா மத்ரஸாக்களிலும் ஆன்லைன் ( காணோலி) வகுப்புகளை ஆரம்பித்து, இருக்கிற ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்த தயக்கமின்றி முன்வர வேண்டும். ஆண்டின் இறுதியில் முழுஆண்டுத் தேர்வுகளையும் நடத்தி முடிக்கத் தயாராக வேண்டும்.

பட்டவகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதிகக் கூட்டம் சேர்க்காமல் கல்லூரியிலேயே வைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிடலாம்.

ஆக, தொடர்ந்து மத்ரஸாக்கள் செயல்பட வேண்டும். பூட்டிப்போட்டு பாடமும் நடத்தாமல் மாணவர்களை வேறு துறைகளுக்குத் தள்ளிவிட்டுவிடக் கூடாது.சிறிய மத்ரஸாக்களும் இதே நடைமுறையைக் கையாளலாம். வேலை செய்யாமல் ஊதியம் பெறுவதா என்ற கேள்வியும் இதன்மூலம் தவிர்க்கப்பட்டு விடும்.

ஆன்லைன் க்ளாஸ் எப்படி நடத்துவது என்ற நடைமுறை அறிந்தவர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருப்பார்கள். அவர்களின் உதவியை நாடலாம்.

காலத்தின் ஓட்டத்தை அறிந்து சவால்களை எதிர்கொள்ள முன்வராவிட்டால் இழப்பு நமக்குத்தான்; நம் சமுதாயத்திற்குத்தான் என்பதை மறந்துவிடலாகாது.
©©©©©©©©©©©©©©©®
அன்புடன் உங்கள்
கான் பாகவி.

Tuesday, June 01, 2021

~~~~~~~~~~~~~~~~~
குடும்பக் கட்டுப்பாடும் சீனாவும்
~~~~~~~~~~~~~~~~~~
மக்கட்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
 
இதையடுத்து அங்கு இளைஞர்களைவிட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. உழைக்க ஆட்கள் இல்லாமல் பொருளாதார தேக்க நிலை அங்கு உருவானது.

இதனால் 2016ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்தது. ஆனாலும் கடந்த ஆண்டு 1.2கோடி குழந்தைகளே பிறந்தனர்.

இது இப்போதுள்ள தேவையான அளவைவிட மிகவும் குறைவாகும் என அரசு கருதுகிறது. சீனாவின் மக்கட்தொகை 141 கோடியாக தற்போது உள்ளது. ஆண்-பெண் பாலின விகிதமும் குறைந்து வருகிறது.

பெரும்பாலான தம்பதியர் ஆண்குழந்தை களையே விரும்புகின்றனர். பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றிலேயே பெற்றோர் கொன்றுவிடுகின்றனர்.

இதனால் குடும்பக் கட்டுப்பாடு கொள்ள்கையைத் தளர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மூன்று குழந்தைகள் வரைப் பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

 *** 
வறுமையைப் பயந்து குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.( குர்ஆன்,17:31)
***
இரு பெண் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் எதிர்காலம் வரை அன்போடு பராமரித்து வளர்ப்பவர்கள் சொர்க்கம் செல்வர். ( நபிமொழி )

***