Monday, January 28, 2013

விஸ்வரூபம் அல்ல; விஷமரூபம்


கான் பாகவி

கான் சாஹிப் (மருதநாயகம்) படத்தை எடுக்க வக்கில்லாத கமல், தன் பெயரிலேயே இஸ்லாத்தை (கமால் ஹசன்) ஒட்டிக்கொண்டு முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கிறார் விஸ்வரூபத்தில்.


`விஸ்வரூபம்எனும் எழுத்தே அரபி ஸ்டைலில் வெளிவந்தபோதே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பது பலருக்கும் புரிந்தது. கதையும் காட்சிகளும் அரசல் புரசலாக வெளிவந்த வேளையில் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பு கமல் வட்டாரத்தைத் தொடர்பு கொண்டு, படத்தை எங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

அப்போதெல்லாம் தத்துவம் பேசிய கமல் தரப்பினர், படத்தைப் போட்டுக்காட்டுவதை இழுத்தடித்தனர். முஸ்லிம்களை உயர்வாகக் காட்டியிருக்கிறேன் -அதாவது இந்திய உளவுத்துறையான `ராவின் உயர் அதிகாரியான ஒரு முஸ்லிமாக நடித்துள்ளேன்- என்றும் இதற்காக நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்; அப்போது பிரியாணி விருந்து நடத்தப்போகிறீர்கள் என்றும் நக்கலாகப் பதிலளித்தார் கமல்.

இறுதியாகவேறு வழியின்றி 21.01.2013 அன்று போட்டுக் காட்டியுள்ளார்கள். படத்தைப் பார்த்த முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் மத உணர்வுகளையும் சமூக மரியாதையையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். இக்காட்சிகளை அகற்றிவிட்டே படத்தை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள்.

அத்துடன் தமிழக அரசிடமும் முஸ்லிம்களின் கூட்டமைப்பு முறையிட்டது. உடனே தமிழக அரசு இரண்டு வார காலத்திற்குப் படத்தை வெளியிட தடை விதித்தது.

அதையடுத்து படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தடையை நீக்க உத்தரவிடுமாறு வழக்குத் தொடுத்தனர். நீதிபதி சனிக்கிழமை (26.01.2013) விஸ்வரூபம் படத்தைப் பார்த்திருக்கிறார். இனி விசாரணை நடைபெறும். தீர்ப்பு வெளியாகும்.

பல இடங்களில் தடை


இதற்கிடையில் படம் வெளியாகி சில இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் பல நகரங்களில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற முஸ்லிம் நாடுகளில் விஸ்வரூபத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பல ஊர்களிலும் படத்திற்குத் தடை உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படத் துறையினர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் விஸ்வரூபம் தொடர்பாகக் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, வி.சி. தலைவர் தொல்திருமாவளவன் போன்றோர் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல் பா.ஜ.க. படத்திற்கு ஆதரவு. நடிகர் ரஜினிகாந்த்கூட படத்தை முழுமையாகத் தடை செய்யாமல், ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்.

ஆனால், முஸ்லிம்களின் நண்பனாக நடித்து அரசியலில் வளர்ந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ் பா.ஜ.க.வைப்போல் அதிரடியாகப் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். படத்திற்குத் தடை விதித்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்! ராமதாஸ் சொல்கிறார்.

சினிமாக்காரர்கள் பொதுவாக, 100 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறதே என்றுதான் கவலைப்படுகிறார்களே தவிர, உலகின் 161 கோடி முஸ்லிம்களின் மதஉணர்வு காயப்படுத்தப்பட்டிருப்பதை ஒருவரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா ரொம்பவே பேசியிருக்கிறார்.

படத்தில் என்னதான் இருக்கிறது?


படத்தின் கதையை இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. கதையோட்டமும் கதையின் கருவும் என்ன சொல்கிறது என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன். இதோ சில காட்சிகள்:

பின்னணிக் குரலில் படத்தின் தொடக்கத்தில் ஒலிக்கும் குரல் அரபிமொழியில் பேசுகிறதாம்! அதன் பொருள்: முஸ்லிம் அல்லாதோரைக் கொல்ல வேண்டும். இப்படிச் சொன்னபிறகே, முஸ்லிம்களில் ஒருவர் மற்றவரை நலம் விசாரிக்கிறாராம்!

இந்திய உளவுத் துறையான `ராவின் உயர் அதிகாரியாக கமல் என்ற முஸ்லிமை அமெரிக்காவிற்கு இந்திய அரசு அனுப்புகிறது. ஆனால், அவர் ஒரு கட்டத்தில், நான் முஸ்லிமாகவும் இருப்பேன்; இந்துவாகவும் இருப்பேன் என்று வசனம் பேசுகிறார். (இதைத்தான் முஸ்லிம்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன் என்று கமல் சொன்னார்போலும்.)

தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் நச்சு மாத்திரைகளை புறா காலில் கட்டிவிட்டு நியூயார்க் அனுப்புகிறாராம்! அது நகரமெங்கும் சுற்றி கிருமிகளைப் பரப்புகின்றதாம்! (அந்தப் புறாவை கிருமி தாக்கவில்லை என்பதுதான் பெரிய ஜோக்.)

நியூயார்க் நகரில் அணுகுண்டு வைத்து அழிக்க முஸ்லிம்கள் (தாலிபான்கள்) திட்டமிடுகின்றனராம்! நைஜீரியாவைச் சேர்ந்த அப்பாசி அதை வெடிக்கவைக்க முனையும்போது கமல் கண்டுபிடித்துவிடுகிறார். கும்பகோணம் பாப்பாத்தியான அவரது காதலி கமலுடன் சேர்ந்து அணுகுண்டை அழிக்க முயல்கின்றனர்.

இந்த அரும்பெரும் தொண்டைப் பார்க்கும் அமெரிக்க அதிகாரி ஒருவர் பேசும் டயலாக்தான் உச்சகட்டம். அவன் சொல்கிறான்: இஸ்லாம் என்ற தீவிரவாதத்தை அழிக்கப் பிறந்தவர்கள்தான் நாங்களும் நீங்களும். நீங்கள் எங்கள் ஜீன். (அதாவது அமெரிக்க யூத வமிசாவளியில் வந்தவர்கள்தான் ஆரியர்கள் என்ற பார்ப்பனர்கள்.)

ஆப்கனில் புகுந்து தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்ட முயலும் கமல் தாலிபான்களிடம் சிக்கிவிடுகிறார். அப்போது முல்லா உமர் தடுக்கிறார். அவர் சொல்கிறாராம்: இவன் (கமல்) தமிழ் ஜிஹாதீ; 5 லட்சம் பெறுமானமுள்ளவன். (அதாவது தமிழ்நாட்டில் தாலிபான்கள் தமிழ் முஸ்லிம்களிடம் ஜிஹாதைப் பரப்புகின்றனர்.)

தமிழ் பேசும் முல்லா உமரிடம் (நம்புங்கள் இந்தப் பொய்யை) கமல் கேட்கிறாராம்! உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும்? அதற்கு உமர் சொன்ன பதில்தான் விஷமத்தனமானது: நான் தமிழகத்தில் மதுரையிலும் கோவையிலும் 2 ஆண்டுகள் தங்கியிருந்தேன். (புரிகிறதா? மதுரையிலும் கோவையிலும் தாலிபான்களிடம் பயிற்சி பெற்ற தமிழ் முஸ்லிம்கள் உள்ளனராம்!)

சுருங்கக் கூறின் இந்திய `ராஅமைப்பின் அதிகாரியான கமல், அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டாக (கைப்பாவையாக) செயல்பட்டு முஸ்லிம் தீவிரவாதிகளை அழிக்கிறார். உண்மையிலேயே தீவிரவாதிகளை அழிக்கும் எண்ணம் இருந்தால் சினிமாவில் `டூப்போடுவதை விட்டுவிட்டு, பக்கத்திலுள்ள ஆப்கானிஸ்தான் சென்று அவர்களை வீழ்த்துவதுதான் உண்மையான வீரம்! உண்மையான விஸ்வரூபம்.

படத்தின் வெளியீட்டு விழாவிற்காக அமெரிக்கா சென்ற கமல் தன் இரு மனைவியருடன் (கதாநாயகிகளுடன்) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் கமலின் வீர வசனங்கள் இதோ:

அன்புதான் அல்லாஹ். அன்பின் காரணமாகவே இப்படத்தை எடுத்தேன்; வெறியில் எடுக்கவில்லை. சொத்துகளை விற்றுத்தான் இப்படத்தை எடுத்திருக்கிறேன். கேரளாவில் உள்ள தம்பிமார்கள் (முஸ்லிம்கள்) என்னை ஏற்றுக்கொண்டார்கள்; தமிழ்நாட்டில்தான் எதிர்க்கிறார்கள்.

ஆனால், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு முதலிய பகுதிகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதிகளில் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னொரு விஷயம்: தீவிரவாதிகள் பயன்படுத்தும் சங்கேத மொழியே `அல்லாஹு அக்பர்தானாம்! இம்மொழி உலகெங்கும் ஒலிக்கும்போது இதை இரகசியம் என்று காட்டுவதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் கமலஹாசன்? ஆக, இது விஸ்வரூபம் அல்ல; விஷமரூபம்.

Wednesday, January 16, 2013

அமெரிக்கா விரும்பும் மத்திய கிழக்கு வேறு


கான் பாகவி
த்திய கிழக்குப் பகுதிதான், அகிலத்தின் இதயம் என்பர். இயற்கை வளங்கள் நிறைந்த சொர்க்க பூமி என்பர் இன்னும் சிலர். மனித இனங்களில் பிரபலமானவை ஒன்றாக வாழும் பகுதி. இந்த இனங்கள்தான் வரலாறு படைத்த மனிதப் பிரிவுகள். அரபியர், துருக்கியர், பாரசீகர், குர்து இனத்தவர், ஆப்கானியர் ஆகியோரின் கலாசாரமும் பண்பாடுகளும் செழித்த மத்திய பூமி.

முக்கியப் பகுதி

இப்பகுதியில்தான் முப்பெரும் மார்க்கங்கள் தோன்றின. யூதம், கிறித்தவர், இஸ்லாம் ஆகியவை பிறந்த மண் இதுதான். இதனாலேயே இப்பகுதி மட்டும் உலகில் ஓயாத சண்டைக்களமாக இருந்தும்வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் என்ற ஒரு தேள் கொடுக்கு அப்பகுதியில் முளைத்தபின் சண்டைக்குப் பஞ்சமில்லாமல் போனது.

அவ்வாறே, பெட்ரோல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின், காலனி ஆதிக்க நாடுகளின் ஆசைக் களமாக இப்பகுதி முன்பும் இருந்தது; இப்போதும் இருந்துவருகிறது.

பூகோள அடிப்படையில் பார்த்தால் மத்தியக் கிழக்கு என்பது மிகவும் விசாலமானது; பரந்து விரிந்தது. சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க கண்டத்தையும் அட்லாண்டிக் கடல்வரை உள்ளடக்கியது. அரபு வளைகுடா, துருக்கி, ஈரான், ஏன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவரைகூட இது நீள்கிறது.

மத்திய கிழக்கு பல்வேறு பெரும் மோதல்களைக் கண்ட நிலப்பகுதி. சில மோதல்கள் இன்றும் தொடர்கின்றன. இப்பகுதி நாடுகளை நீண்டகாலமாக ஆக்கிரமித்திருந்த மேற்கத்திய காலனி வெறியர்களிடமிருந்து இந்நாடுகளை விடுவிக்க நடந்த விடுதலைப் போர் அவற்றில் முக்கியமானது. தங்களின் படைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் முதலீடு செய்யும் நிலமாக மேற்குலகம் இன்றும் மத்திய கிழக்கை நடத்திவருகிறது.

பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷியா, இறுதியாக அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. துருக்கியருடனும் ஆப்கனியருடனும் நடந்த மோதல்களில் ரஷியா பெரும் பங்காற்றியதை மறக்க முடியாது.

உள்நாட்டுப் போர்

வெளித் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று மற்றொன்றைத் தாக்கிக்கொண்ட சகோதர யுத்தங்களுக்கும் குறைவில்லை.

பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேலுடன் இதுவரை நான்கு முறை அரபு நாடுகள் போரிட்டுள்ளன. 1948, 1956, 1967, 1973 என சராசரி பத்தாண்டுகள் இடைவெளியில் இப்போர்கள் நடந்திருக்கின்றன.

அடுத்து யமன் (ஓமன்) போர்; மன்னர் குடும்பத்தின் ஆதரவாளர்களுக்கும் குடியரசு ஆதரவாளர்களுக்கும் இடையே இப்போர் நடந்தது.

துருக்கி-குர்துகள், சிரியா-இராக் இடையே நடந்த போர். அரபு-யூதர்கள் யுத்தத்திற்கு அடுத்து மத்திய கிழக்கில் நடந்த பெரிய போர்களாகும் இவை.

ஈரான்-வளைகுடா நாடுகள் மத்தியில் நடந்த கடும் மோதல். குறிப்பாக மூன்று தீவுகள் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஈரான் தொடுத்த போர். அரபு வளைகுடாவைக் கைப்பற்றுவதும் ஈரானின் நோக்கமாக அப்போது இருந்தது.

ஈரான்-இராக்; இராக்-குவைத்; எண்பதுகளில் நடந்த தீபகற்ப நாடுகளிடையிலான போர், ஆப்பிரிக்க கண்டத்தில் சோமாலியா-எத்தியோப்பியா; எரித்ரியா-எத்தியோப்பியா, சூடானில் தார்ஃபோர் மாகாணத்தில் நடந்த சண்டை, தெற்கு சூடான் சண்டை.

எழுபதுகளின் இறுதியில் எகிப்து-லிபியா எல்லைத் தகராறு, லெபனான் உள்நாட்டுப் போர், தென்பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு. ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷியா பின்வாங்கியபின் நடந்த உள்நாட்டு மோதல்.

அமெரிக்காவின் சதி

இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகளைக் கண்காணித்துவந்த அமெரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தது. உலகின் மீது அதிகாரம் செய்ய வேண்டுமானால், முதலில் மத்திய கிழக்கின் மீதான அதிகாரம் நிலைபெற வேண்டும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டது.

பழைய காலனி சக்திகளான பிரிட்டன், ஃபிரான்ஸ், சோவியத் ரஷியா ஆகியவற்றின் ஆதிக்க மோகம் கலைந்தபின், இப்பகுதிமீது ஆளுமையும் அதிகாரமும் செய்ய அமெரிக்கா நீண்டகாலமாகத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது. இதன்மூலம், உலகையே ஆட்டுவிக்கலாம் என்பது அமெரிக்காவின் கனவுத் திட்டமாகும்.

இதையடுத்து, யூதர்களுக்கு வேண்டிய எல்லா விதமான ஒத்துழைப்புகளையும் அமெரிக்கா அளிக்க ஆரம்பித்தது. இன்றும் அவை தொடர்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, இராணுவ உதவி, ஊடகம் மற்றும் கலாசார உதவிகள் இதில் அடங்கும்.

இஸ்ரேல் வழியாக இப்பகுதியில் கால் வைக்க அமெரிக்காவுக்கு இது வழிவகுத்தது. சில பொருளாதார உதவிகளைக் கொடுத்து, இப்பகுதியின் ஆட்சியாளர்கள் சிலரையும் அமெரிக்கா வளைத்துப் போட்டது.

அரபு நாடுகளில், அமெரிக்கா தன் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளவும் தன் திட்டங்களைச் செயல்படுத்திக்கொள்ளவும் முதலில் தேர்ந்தெடுத்தது, அங்குள்ள மதச்சார்பற்ற அதிகார வர்க்கத்தைத்தான். இவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டால், எளிதாகக் காரியத்தைச் சாதித்துவிடலாம் என எண்ணி மதச் சார்பற்றவர்களை -மார்க்கப்பற்று இல்லாதவர்களை- ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா.

ஆனால், ஆண்டுகள் பல உருண்டோடியும் அந்நாடுகளில் பொருளாதார வளம் ஏற்படவில்லை. பொருளாதாரம் சரிந்துபோனது. ஆட்சியாளர்கள் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தார்கள்; சுரண்டினார்கள். இதனால் மக்களின் ஆதரவை இழந்தார்கள்.

நினைத்தது ஒன்று

இதைக் கண்ட அமெரிக்கா, அந்த ஆட்சியாளர்களைக் கை கழுவியது. மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்ற ஆட்சியாளர்கள் இப்போது அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டனர். எனவே, அண்மையில் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகள் அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் தூண்டுதலால்கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால், அமெரிக்கா எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகப் புரட்சி அதன் கையைவிட்டு விலகி, வேறுபக்கம் திசைமாறியது; இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு வரக் காரணமாகியது. அமெரிக்காவின் எண்ணம் ஈடேறவில்லை. அது எதிர்பார்த்த சேதங்களும் நாசங்களும் அங்கு விளையவில்லை. எகிப்தும் துனூசியாவும் இதற்கு உதாரணங்கள். ஆக, இப்புரட்சிகளே, மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சமாதி எழுப்ப உண்மையான தொடக்கமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் விருப்பம்

அமெரிக்காவின் சதித் திட்டம் வேறுவிதமாக இருந்தது. மத்திய கிழக்கைத் துண்டாடி குட்டி நாடுகளை உருவாக்கி, அவற்றுக்கிடையே இன, குழு, மார்க்கம் சார்ந்த மோதல்களை உருவாக்குவதுதான் அத்திட்டம். சிலநாடுகளில் இதில் அமெரிக்கா வெற்றியும் கண்டுள்ளது. எடுத்துக்காட்டு: சூடான். லெபனான் மற்றும் இராக்கிலும் பிரிவினை தெரிகிறது.

சூடானை ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளாகப் பிரிப்பதே அமெரிக்காவின் திட்டம். தென் சூடானைப் பிரித்துத் தனி நாடாக்கிவிட்டது. எதிர்காலத்தில் தார்ஃபோர் (டார்ஃபர்) மாநிலத்தைப் பிரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இறுதியில் ஏழு நாடுகளாக சூடானைப் பிரிப்பதே அமெரிக்காவின் இலக்கு.

லெபனானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் உள்நாட்டுச் சண்டையை மூட்டிவிட்டிருக்கின்றன. லெபனானை நான்கு நாடுகளாகப் பிரித்து கிறித்தவர்களுக்கு ஒன்று, துரூஸுகளுக்கு ஒன்று, சன்னி முஸ்லிம்களுக்கு ஒன்று, மற்றவர்களுக்கு ஒன்று. பின்னர் இக்குட்டி நாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கையில் அந்தச் சந்தில் அமெரிக்கா நுழைந்து நாட்டாண்மைத்தனம் செய்யலாம்.

அவ்வாறே, இராக்கை மூன்று துண்டுகளாக வெட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஷியாக்களுக்கு ஒரு நாடு, சன்னிகளுக்கு ஒரு நாடு, குர்து இனத்தாருக்கு ஒரு நாடு. இராக் ஆக்கிரமிக்கப்பட்டபின் குர்துகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் நெருங்கிய உறவு கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

சோமாலியாவுக்கெதிரான போரில் எத்தியோப்பியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. ஆப்பிரிக்கா கண்டத்தில் கிறித்தவத்தைப் பலப்படுத்த இது உதவும். இறுதியாக, சோமாலியாவை கினியாவுக்கும் எத்தியோப்பியாவிற்கும் பங்கு போட்டுவிடலாம் என்பது அமெரிக்காவின் திட்டம்.

லிபியாவைப் பல்வேறு குழுக்களுக்கிடையே பிரித்துக் கொடுப்பதும் அமெரிக்காவின் திட்டத்தில் உள்ளது. குறிப்பாக பனூஃகாஸீ மற்றும் திரிபோலியை இவ்வாறு பிரிக்கலாம். பஹ்ரைன் நாட்டை, ஷியாக்களுக்கு ஒன்று, சன்னிகளுக்கு ஒன்று எனப் பிரிப்பதும் அதன் திட்டம்.

எகிப்தை பல நாடுகளாக்குவது அமெரிக்காவின் விரைவுத் திட்டத்தில் உள்ளது. எகிப்தின் தெற்கே கிறித்தவர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கிவிட்டு, மீதியை முஸ்லிம்களுக்கும் மதச்சார்ப்பற்றவர்களுக்குமாகத் தனித்தனியாகப் பிரிப்பது அதன் நோக்கம்.

இதுதான், அமெரிக்க விரும்பும் மத்திய கிழக்கு. இதன்மூலம், அப்பிராந்தியத்தில் தன் நலன்கள் காக்கப்படும்; இஸ்ரேலின் கை மேலோங்கி இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இஸ்ரேல் அப்பகுதியில் குட்டி நாடுகளுக்கு மத்தியில் வலுவான நாடாகிவிடுமல்லவா?

மத்திய கிழக்கு நாடுகள் விழிப்புணர்வு பெற வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆசையில் மண்ணைப்போட வேண்டும்.

ஆக, மத்திய கிழக்கு புரட்சி, உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி!

(‘ஆலுகாஇணையதளம்)

Saturday, January 12, 2013

இவரைத் தெரியுமா?


- கான் பாகவி

அவர் ஒரு ஆரம்பக் கால முஸ்லிம். 17ஆவது வயதில் இஸ்லாத்தில் இணைந்தவர். அவருக்குமுன் அபூபக்ர் (ரலி), அலீ (ரலி), ஸைத் (ரலி) ஆகியோர் மட்டுமே இஸ்லாத்தில் இணைந்த ஆண்கள்.

மரியாதைக்குரிய நபித்தோழர். சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பெற்ற பதின்மரில் ஒருவர். அன்னை ஆமினாவின் பனூஸுஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த இளவல்.

இந்த மாமன்முறை இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு மரியாதை கொடுத்துவந்தார்கள். ஒருதடவை தோழர்களுடன் அமர்ந்திருந்த நபிகளார், அவர் வருவதைப் பார்த்துவிட்டு, ``இவர் என் மாமன்; என் மாமன் போன்ற ஒருவரை யாரேனும் எனக்குக் காட்டட்டும்!’’ என்று (பெருமிதத்தோடு) சொன்னார்கள். (திர்மிதீ, ஹாகிம்)

ஹிஜ்ரத்திற்குமுன் 23ஆம் ஆண்டில் மக்காவில் அவர் பிறந்தார். அம்புகள் செதுக்கும் பணியில் ஈடுபட்டார். இப்பணி, அம்பெய்தல், வேட்டையாடல், போர் ஆகிய தீரச் செயல்களுக்கு முன்னோடியான ஒரு பணியாகும். குறைஷி இளைஞர்களுடனும் தலைவர்களுடனும் கலந்துறவாடி, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் நேரத்தைக் கழித்துவந்தார்.

ஒருநாள் இரவு கனவொன்று கண்டார். இருள்படர்ந்த ஓரிடத்தில் அவர் நடந்துசெல்கிறார். அவர் நடக்க நடக்க இருள் கூடிக்கொண்டே போகிறது. அடுத்து ஒளிரும் நிலாவைப் பார்க்கிறார். அங்கு அபூபக்ர், அலீ, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரைக் காண்கிறார்.

விழித்ததும், அந்த நிலா முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் என அறிகிறார். இஸ்லாத்தில் இணைகிறார்.

இறைவழியில் அம்பெய்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை தம் தந்தையும் தாயும் அர்ப்பணம் என்று கூறினார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். `உஹுத்போரில், ``அம்பெய்வீராக! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்!’’ என்றார்கள்.

இம்மார்க்கத்திலிருந்து அவரை வெளியே கொண்டுவருவதற்காக எத்தனையோ இடையூறுகள் செய்யப்பட்டன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. மனிதர் உறுதியாக இருந்துவிட்டார்.

உச்சகட்டமாக, ஈன்ற தாயின் பாசம் குறுக்கே நின்றது. இஸ்லாத்தைக் கைவிட்டுப் பழைய மதத்திற்கே மகன் திரும்பிவராவிட்டால், தான் உண்ணப்போவதில்லை; அருந்தப்போவதில்லை என்று தாயார் விரதம் பூண்டார்.

தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்து மரணத்தை நெருங்கிவிட்டார் அன்னை. இளைஞர் சென்றார்; தாயை ஒருமுறை பார்த்தார். தாயோ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால், இளைஞரின் உள்ளத்தில் ஈமான் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நின்றது.

சொன்னார்: தாயே! உனக்கு நூறு உயிர்கள் இருந்து, அவை ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் என் மார்க்கத்தைக் கைவிடமாட்டேன். சாப்பிடுங்கள்! சாப்பிடாமல் இருங்கள்! உங்கள் விருப்பம்.

மகனின் நெஞ்சுரத்தைக் கண்ட தாய் தன் உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றார்.

துஆ ஏற்கப்பட்டவர் என்று பிரசித்தி பெற்ற அந்த நபித்தோழரை, கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இராக்கின் ஆட்சியராக நியமித்தார்கள்.

இராக்கின் தலைநகராக அப்போதிருந்த கூஃபா நகரின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்திய ஆட்சியர், புதுப்புது கட்டடங்களை எழுப்பத் தொடங்கினார்.

வேடிக்கை என்ன தெரியுமா? அவரைப் பற்றி யாரோ ஒருவர் கலீஃபாவுக்குப் புகார் மனு அனுப்பினார். ``ஆட்சியர் இரகசியத்தைக் காப்பதில்லை; சமமாகப் பங்கிடுவதில்லை; அழுத்தமாகத் தீர்ப்பளிப்பதில்லை; ஒழுங்காகத் தொழவைப்பதில்லை’’ என்று புகார் மனுவில் எழுதப்பட்டிருந்தது.

செய்தியறிந்த ஆட்சியர் சிரித்துவிட்டுச் சொன்னார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைத்தான் அம்மக்களுக்கு நான் தொழுவித்தேன். முதல் இரு ரக்அத்களை நீட்டுவேன்; பிந்திய ரக்அத்களைச் சுருக்குவேன்.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியரை மதீனாவுக்கு வரவழைத்தார்கள். அவரும் வந்து சேர்ந்தார். குற்றச்சாட்டை நோட்டமிட்ட கலீஃபா, உண்மை கண்டறியும் குழு ஒன்றை கூஃபாவுக்கு அனுப்பினார்கள்.

ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்ற குழுவினர், ஆட்சியரைப் பற்றி மக்களின் கருத்தென்ன என்று ஆய்வு செய்தனர். ``அவர் சிறந்த மனிதர்’’ என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியாக ஒரு பள்ளிவாசலில் குழுவினர் ஆய்வை மேற்கொண்டபோது, அனைவரும் நற்சான்றே அளித்தனர்; ஒரே ஒரு மனிதர் தவிர. அவர் சொன்னார்: நான்தான் புகார் மனு அனுப்பியவன்.

ஆக, கருத்தெடுப்பில், ஒருவரைத் தவிர நூறு விழுக்காட்டினர் ஆட்சியரை சரி கண்டிருந்தனர்.

எனவே, அத்தோழரை மீண்டும் கூஃபா சென்று பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கலீஃபா சொன்னபோது, அந்த நல்ல நபித்தோழர் சிரித்தார். ``முறையாகத் தொழவைக்கவில்லை என்று கருதும் ஒரு கூட்டத்தாரிடமா நான் திரும்பச் செல்ல வேண்டும் என்கிறீர்கள்?’’ என வினவினார்.

பிறகு புகார் அனுப்பிய மனிதரிடம் சென்று இவ்வாறு பிரார்த்தித்தார்:
இறைவா! இம்மனிதர் பொய்யராக இருந்தால், இவருக்கு நீண்ட ஆயுளையும் ஏழ்மையையும் கொடு! குழப்பங்களுக்கும் சோதனைகளுக்கும் இவரை ஆட்படுத்து!

பல்லாண்டுகள் கழிந்தபின், புகார் கொடுத்த அந்த மனிதர், சாலைகளில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தள்ளாத வயதில் புருவங்கள் விழுந்து கண்களை மூடிவிட்டன. பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதும் மக்களின் ஏச்சுக்கு ஆளாவதும் அவருக்கு வாடிக்கையானது.

அந்தக் கிழவரிடம், யாரேனும் அவரது நிலை குறித்து விசாரித்தால், ``அந்த துஆ பலித்துவிட்டது’’ என்று கூறுவாராம்!

இறுதியாக, நம் நபித்தோழருக்கு இறப்பு வந்தபோது, கிழிந்த ஒரு கம்பளி ஆடையைக் கொண்டுவரச் சொல்லி, அதிலேயே தமக்கு `கஃபன்அணிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ``இதை அணிந்துகொண்டுதான் `பத்ர்போரில் எதிரிகளைச் சந்தித்தேன்; இதனுடனேயே அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’’ என்றார்.

ஹிஜ்ரீ 55ஆம் ஆண்டு மறைந்த அந்த நல்ல மனிதர் `அல்பகீஉமையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

யார் அவர்?


அந்த நபித்தோழர்தான், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள். அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பில் நமக்குச் சில பாடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை எனச் சிலவற்றைக் கூறலாம்:
1. சிகரத்தைத் தொட வேண்டுமா? சிரமங்களைத் தாங்கு! 
2. வெற்றியாளனை வீழ்த்த எதிரிகள் காத்திருப்பார்கள். அவன் திரும்பிப்பாராமல் முன்னேற்றத்தில் குறியாக இருக்க வேண்டும். 
3. மனிதன் வாகைசூடி ஒரு பதவியில் அமர்ந்துவிட்டாலும், பிடிக்காத ஜன்மங்கள் தூற்றிக்கொண்டுதான் இருக்கும். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பொல்லாங்கு பேசிக்கொண்டுதான் இருக்கும். அப்போது மார்க்க நெறிப்படி தீர்வு காண வேண்டும். 
4. பதவியில் இருப்போர் மீது குற்றச்சாட்டு எழும்போது, உண்மையைக் கண்டறிந்து முடிவெடுக்க குழுக்கள் இருக்க வேண்டும். 
5. வாய்ப்பும் வசதியும் உள்ள ஒவ்வொருவரும் அதை நன்கு பயன்படுத்தி வளரவும் ஈருலக இலட்சியங்களை அடையவும் முற்பட வேண்டும்.
(தொகுப்பு: விக்கிபீடியா)