Thursday, October 28, 2021

பொறியியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை

~~~~~~~~~~~~~~~~~~~~
பொறியியல் பட்டதாரிகளின் 
பரிதாப  நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்நாட்டில் 2016-17இல் கல்லூரிகளில் 1,85,000ஆக இருந்த மொத்த இடங்கள்,நடப்புக் கல்வியாண்டில்1,51,870 இடங்களாகக் குறைந்துள்ளன. அதாவது56,801 இடங்கள் காலியாக உள்ளன.கல்லூரிகளின் எண்ணிக்கையும் 525இலிருந்து 440ஆகக் குறைந்து போனது.

          இதற்கு அடிப்படைக் காரணம், பொறியியல் படிப்புகளால் வேலைவாய்பிற்கு உத்தரவாதமோ உறுதியோ அளிக்க முடியாததுதான்.ஒன்றிய அரசின் மனிதவளத் துறை வெளியிட்ட 2019 அறிக்கையில், 38.52 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதாகக் குறிப்பிடுகிறது.

          ஆனால்,ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் எனும் வேலை வாய்ப்பு கணக்கெடுப்பு நிறுவனம்,2019இல் 80% பொறியாளர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர் என மதிப்பிட்டுள்ளது.
    
           இதனால் கிடைக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அப்பட்டதாரிகள் ஆளாகியுள்ளனர்.இதனால் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உருவாகிவருகிறது.

( இந்து தமிழ்-27.10.2021)

Monday, October 25, 2021

ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி- ஒரு சிறந்த முன்னோடி

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் எனும் இறைமார்க்கம் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. இதற்கு வரலாற்றுப் பூர்வமான தரவுகள் உண்டு. 
       இக்காலகட்டத்தில், இங்கே தமிழகத்தில் இஸ்லாமிய மேதைகள், சட்ட அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் முஃப்திகள் எனப் பல்துறை அறிஞர்கள் இருந்துள்ளனர்.
        ஆனால், கடந்த 13 நூற்றாண்டுகளாக அரபி மொழியில் தமிழக முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓத மட்டுமே செய்துள்ளனர். அதன் பொருள், கருத்து, விளக்கம் ஆகியவற்றை ஆலிம்கள் வாயிலாக வாய்மொழியாகவே கேட்டு அறிந்து வந்துள்ளனர். தாய்மொழியாம் தமிழ்மொழியில் திருமறையின் மொழிபெயர்ப்பையோ உரைகளையோ வாசிக்கின்ற பெரும்பேறு கிடைக்காமலேயே இருந்துவந்துள்ளது.
           
ஆ.கா. பாகவி
        இந்நிலையில், மார்க்க அறிஞர்களை மதிக்கும் ஒரு வணிகர் குடும்பத்தில் 26.11.1876 (ஹிஜ்ரி 1294) 
ஞாயிற்றுக்கிழமை சேலம் ஆத்தூரில் காதிர் முகைதீன் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு அப்துல் ஹமீது எனப் பெயர் சூட்டினர்.
          குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளியில் சேர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களைக் கற்றார்.பின்னர் தமது இளமைப் பருவத்தில் கிலாஃபத் இயக்க முன்னோடியாகவும், மதுவிலக்குப் பிரசாரகராகவும், கதர் அணியாத திருமணங்களில் கலந்துகொள்ள மறுத்த காந்தியவாதியாகவும் விளங்கினார்.

பாகியாத்தின் பாக்கியம்
         இதற்கிடையில், அண்ணல் அஃலா ஹழ்ரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் வேலூர் நகரில் கி.பி. 1884 ( ஹிஜ்ரி 1301)ஆம் ஆண்டு அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் எனும் பெயரில் ஓர் அரபிக் கல்லூரி தொடங்கி நடத்த வந்தார்கள். 
         அங்கு நிஸாமிய்யா பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. நிறுவனர் அஃலா ஹழ்ரத் அவர்களுடன் மூத்த ஆசிரியப் பெருமக்கள் பயிற்றறுவித்துவந்தனர். மெளலானாக்களான  குலாம் முஹ்யித்தீன், அப்துல் காதிர் பாஷா, முஹம்மது கமாலுத்தீன், அப்துல் ஜப்பார் ஆகியோரும் , வட இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் நூர் முஹம்மது பஞ்சாபி , ஷாஹ் ஸமான் தேவ்பந்தீ , அப்துர் ரஹ்மான் பஞ்சாபி ஆகியோரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். 
              கி.பி. 1892  ( ஹிஜ்ரி 1314)ஆம் ஆண்டில்-அதாவது 130 ஆண்டுகளுக்கு முன்- முதலாவது பட்டமளிப்பு விழா அங்கு நடந்தது. அதில் தஹ்சீல் ( இளங்கலை) வகுப்பில் தேறிய 17 ஆலிம்களுக்கும் முதவ்வல் (முதுகலை) வகுப்பில்
தேறிய ஃபாஸில்கள் 2 பேருக்கும் தாருல் உலூம் தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மெளலானா சையிது அஹ்மத் தஹ்லவீ அவர்கள் பட்டம் வழங்கினார்கள்.

பாகவி ஆனார் மெளலானா
      பாரம்பரியமிக்க இந்த அரபிக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் முதல் அணியில் தமது 17ஆம் வயதில் ஆ.கா. அப்துல் ஹமீது அவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அங்கு பத்தாண்டுகள் கல்வி பயின்று 1906ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் ஆலிம் பட்டம் பெற்றார்கள்.
        அப்படியானால், 1896ஆம் ஆண்டு அன்னார் பாகியாத்தில் சேர்ந்திருக்க வேண்டும். அங்கு மாணவராகச் சேர்ந்த நாள் முதலாய் , திருக்குர்ஆனுக்குத் தமிழில் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மெளலானா அப்துல் ஹமீது அவர்களுக்கு இருந்துவந்துள்ளது.
          ஆலிம் பட்டம் பெற்ற பிறகு வியாபாரம், அரசியல், கிலாஃபத் இயக்கம் என அன்னாரின் பொழுதுகள் கழிந்தன. பின்னர் 1926 பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தொடங்கினார்கள்.

அல்பகரா- அத்தியாயம்
          திருக்குர்ஆனின் 'அல்பகரா' (2) அத்தியாயத்தின் தமிழாக்கம், விரிவுரை ஆகியவற்றை எழுதி முடித்தபின், தமிழகத்தின் தலைசிறந்த ஆலிமகளின் பார்வைக்கு அனுப்பிவைத்து, அவர்கள் கொடுத்த முறையான திருத்தங்களுடன் 19.02.1929 அன்று முதல் பாகம் வெளியிடப்பட்டது.
     பின்னர் பொருளாதார தேக்கநிலை ஏற்படவே, சிரமப்பட்டுக் கொண்டிருந்த மெளலானா அவர்களுக்கு, ஹைதராபாத் நிஜாம் மன்னரின் மாமனார் நவாப் நஸீர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அதையடுத்து பொருளாதார உதவி கிடைக்கவே, காரைக்காலில் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
       இரவு பகலாக பணி தொடர்ந்தது. ஒரு வழியாக 1942 அக்டோபர் 24இல் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.இருந்தாலும், உடனே அச்சிடாமல் , பாகியாத் பேராசிரியர் குழுவின் ஆய்விற்கு உட்படுத்தி 9.11.1943இல் பணி முடிவுற்றது.

இரண்டாம் உலகப் போர்
            எழுபது வயதைக் கடந்துவிட்ட மெளலானா அவர்கள் பலமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இரண்டாம் உலகப் போர் நடந்த நேரம் அது. பயணம் என்பதே பெரிய கேள்விக்குறியதான நேரம். இதனால் தமது மொழிபெயர்ப்பைப் பாதுகாக்க மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ஒரு வேலை செய்தார்கள்.
            தமது கையேட்டுப் பிரதிநிதிகள் இரண்டைத் தயார் செய்தார்கள்.ஒரு பிரதியைத் தமது இல்லத்தில் பத்திரமாக வைத்துவிட்டு , மற்றொன்றை பாகியாத் கல்லூரி நூலகத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
          இறுதியாக, 1949ஆம்ஆண்டு மே மாதம் முதல் நாள் - ஹிஜ்ரி 1368 ரஜப் பிறை 2 -முழு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. 
             1955 ஜூன் 23ஆம் தேதி மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைந்தார்கள். அவர்களின் அகவை 79. அந்த மொழிபெயர்ப்பு இன்றுவரை கிடைக்கிறது.பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. அன்னார் நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.

( 23.10.2021இல் நடந்த ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் நினைவு நிகழ்ச்சியில் அ.முஹம்மது கான் பாகவி ஆற்றிய உரையின் சுருக்கம்)

Tuesday, October 19, 2021

ஆலிம் பப்ளிகேஷனின் இதயங்கனிந்த நன்றி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஆலிம் பப்ளிகேஷனின்
இதயங்கனிந்த நன்றி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறையருளால் 16.10.2021 காலை எமது ஆலிம் பப்ளிகேஷனின் வெளியீடான முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எமது அன்பு அழைப்பை ஏற்று விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அறிஞர் பெருமக்கள், விழாவை மிக வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அப்பகுதி பிரமுகர்கள், விழாவில் திரளாகக் கலந்துகொண்ட ஆலிம்கள், பட்டதாரிகள்,வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முதலான அனைத்து  அன்பர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

பாளையங்கோட்டையில் பிரபலமானதும் பிரமாண்டதுமான காயிதே மில்லத் moc அரங்கத்தை வழங்கி உதவிய நிர்வாகப் பெருமக்கள், நூல் தயாரிப்புச் செலவினங்களுக்கு வாரிவழங்கிய புரவலர்கள், எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று சிரத்தையோடு கவனமாகச் செய்த பெருந்தகைகள், மக்களுக்கு விழா குறித்துப் பள்ளிவாசல்களில் அறிவிப்புச் செய்து உதவிய இமாம்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலிம் பப்ளிகேஷன் மொழிபெயர்ப்புக் குழுவினர் மற்றும் நிர்வாகக் குழுவினர் சார்பாக  இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிப்பதில் அகமகிழ்றோம்.
ஜஸாகுமுல்லாஹு கைரல் ஜஸா ஃபித்தாரைன்.

நம்  தொடர்புகள் தொடரட்டும்! தொண்டுகள் சிறக்கட்டும்!
நபிகளாரின் பொன்மொழிகள் அனைவரின் வாழ்க்கையாக மாறட்டும்!
 வஸ்ஸலாம்.

நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம்
^^^^^^^^°^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித ஹஜ் பயணத்தின்போது பெருந்திரளாகக்  குழுமியிருந்த மக்கள் முன் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேருரையில் உலக மக்களுக்கு வெளியிட்டப் பிரகடனம்:

* மனிதர்களே! உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஒருவரே. 

* எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதோரைவிட, இறையச்சம் ஒன்றில் தவிர எந்த உயர்வும் கிடையாது.

* அரபியரல்லாத எவருக்கும் அரபியரைவிட ,இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது.

* வெள்ளையருக்குக் கறுப்பரைவிடவோ, கறுப்பருக்கு வெள்ளையரைவிடவோ , இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது.

* இந்தப் புனிதத் தலத்தில் , இப்புனித மாதத்தில், இப்புனித நாள் எவ்வளவு மகத்தானதோ அவ்வளவு மகத்துவமிக்கவை உங்கள் உயிரும் உங்கள் உடைமையும் உங்கள் சுயமரியாதையும்.

( முன்னது அஹ்மத் - ஹதீஸ் 22391)

Tuesday, October 12, 2021

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெங்களூரில்  10.10.2021 நடந்த உலக மனநல நாள் விழாவில் பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள நவீன பெண்களில் பெரும்பாலோர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வே விரும்புகிறார்கள்.இதைக் கூற வருத்தமாக இருக்கிறது.

ஒரு வேளை திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. வாடகைத் தாய் மூலமே குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கவே விரும்புகிறார்கள்.

நமது சிந்தனையில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இது சரியான போக்கு அல்ல.மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை இந்திய சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது துரதிருஷ்ட வசமானது

தாத்தா, பாட்டி உடனிருப்பதை விரும்பாத அவர்கள், தாய் தந்தையரை உடன் வைத்துக் கொள்ளத் தயங்குவது வேதனை அளிக்கிறது.

(நன்றி-தினமணி )