- பாகியாத் மைந்தன்
தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழா கடந்த 21/22.12.2013 ஆகிய இரு நாள்கள் அல்லாஹ்வின் பேரருளால் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம்பேர் கலந்துகொண்ட இச்சிறப்புக் கூட்டத்தில் பாகவி ஆலிம்கள் மட்டுமன்றி மற்ற ஆலிம்களும் பல மாநிலங்களிலிருந்து வந்து கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆலிம்களும் முஸ்லிம் பொதுமக்களும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். திருமக்கா, தேவ்பந்த், லக்னோ, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், சென்னை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு அழைப்பாளர்கள் பலர் நிகழ்ச்சிகளில் பங்குபெற்றனர்.
இது ஒரு தேசிய மாநாடுபோல் மிக விமரிசையாக, அதேநேரத்தில் மிக அமைதியாக நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்குவதற்கும் அவர்களின் உணவு, தேநீர் போன்ற தேவைகளுக்கும் சிறப்பான இடம் தேர்வு செய்யப்பட்டு, கூட்டம் ஒவ்வொன்றும் எந்த இடையூறுமன்றி திட்டமிட்டபடி நடப்பதற்கும் விழா அமைப்பாளர்கள் செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
வேலூர் கோட்டை வெளிப்புறத் தோற்றம்
|
பாகியாத்துஸ் ஸாலிஹாத்
திருக்குர்ஆனின் இச்சொற்றொடருக்கு ‘நிலையான நல்லறங்கள்’ என்பது சொற்பொருள். உலகில் நல்லறங்கள் நிலைத்து நிற்க, தழைத்தோங்க வேண்டுமானால் நற்சிந்தனைகள் தோன்ற வேண்டும். சிந்தனைகளின் ஊற்றுதான் கல்வியறிவு. அதிலும் இறையியல் கல்வியே நல்வழிப்படுத்தும் சிந்தனைகளின் ஊற்றாக விளங்க வல்லது.
தமிழகத்தின் ஜமீன்(சேலம்) ஆத்தூரைச் சேர்ந்த ஷைகு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களை வரலாறு மறக்காது. ‘ஷம்சுல் உலமா’ (ஞானச் சூரியன்) என்றும் ‘அஃலா ஹள்ரத்’ (பேரறிஞர்) என்றும் மக்களாலும் ஆலிம்களாலும் அழைக்கப்பட்டுவந்த அன்னார், ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்துவந்தபோது இம்மார்க்கக் கலைக்கூடத்தை நிறுவினார்கள்.
பாகியாத்தின் தாருல் ஹதீஸ்
|
இந்தியா விடுதலை அடைவதற்கு 90 ஆண்டுகளுக்குமுன் 1857ஆம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள் தமது 26ஆம் வயதில் தம் வீட்டுத் திண்ணையில்தான் வகுப்பைத் தொடங்கினார்கள். மாணவர்கள் யாரென்றால், அன்னாரின் புதல்வரும் உறவினர்களும்தான். 12 ஆண்டுகளுக்குப் பின் 1869ஆம் ஆண்டு வேலூர் பெரிய பள்ளிவாசலின் ‘முசாஃபிர் கானா’ எனப்படும் பயணியர் தங்கும் திண்ணைக்கு வகுப்பை மாற்றினார்கள்.
ஆறாண்டுகள் பள்ளிவாசல் திண்ணையில் நடந்த மதரசா 1875ஆம் ஆண்டு இப்போதுள்ள இடத்தில் தனிக் கட்டடம், பெயர், பாடத்திட்டம், மாணவர் விடுதி ஆகியவற்றுடன் முறையாகத் தொடங்கப்பட்டது.
பாகியாத் நியூலைன்
|
பின்னர் அன்னாரின் புதல்வர் ஷைகு ஜியாவுத்தீன் அஹ்மத் (ரஹ்) அவர்கள் மதரசாவை மேலும் விரிவுபடுத்தி ‘நியூலைன்’ எனும் புதிய பகுதியை 1925ஆம் ஆண்டு எழுப்பினார்கள். பின்னர் இன்றைய ஆட்சிமன்றக் குழுவின் பெருமுயற்சியில் பொதுச் செயலாளர் மலக் முஹம்மத் ஹாஷிம் சாஹிப் அவர்களின் ஏற்பாட்டால் 5 மாடி மாணவர் விடுதி, புதிய சமையல் கூடம், புதிய அலுவலகம், புதிய நூலகம், ஆசிரியர்களுக்கான குடியிருப்பு ஆகியவை 1992ஆம் ஆண்டு கட்டப்பட்டன.
அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் காலத்திலேயே பாக்கியாத்திற்கென ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டு, இந்திய அரசின் சட்டப்படி (1860/21) 1896இல் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. மேலும், ஆட்சிமன்றக் குழு, முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தொடர்பான நடைமுறை சாசனமும் (By Laws) தயார் செய்யப்பட்டது.
அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தமது 89ஆம் வயதில் 1919 ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 22 சனிக்கிழமை மறைந்தார்கள். இந்த வரலாற்றுக் குறிப்பின்படி பாக்கியாத்தின் வயது 156.
விழா நடந்த இடத்தின் முகப்புத் தோற்றம்
|
முதல்நாள் நிகழ்ச்சி
2013 டிசம்பர் 21ஆம் நாள் காலை 9.30 மணிக்குச் சரியாக விழா தொடங்கியது. திருமக்காவிலுள்ள ‘அஸ்ஸவ்லத்தியா’ மதரசாவின் முதல்வர் ஷைகு மாஜித் ஹஷீம் உஸ்மானீ அவர்கள் காலை அமர்விற்குத் தலைமை தாங்கினார். வேலூர் கொணவட்டம் கூனா பிரசிடென்சி ஸ்கூலின் விசாலமான வளாகத்தில் விழா நடைபெற்றது. ஸவ்லத்தியா மதரஸாவில் அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள் கல்வி பயின்றுள்ளார்கள். அன்னாரின் ஆசிரியரும் மதரஸாவின் நிறுவனருமான உ.பி.யைச் சேர்ந்த ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரானவீ (ரஹ்) அவர்களின் பேரர்தான் இந்த ஹஷீம் உஸ்மானி என்பது குறிப்பிடத் தக்கது.
அரபிமொழியில் வரவேற்புரையாற்றிய பாக்கியாத் முதல்வர் மௌலானா உஸ்மான் பாகவி சாஹிப் அவர்கள், நபிவழியைக் காக்கவும் இஸ்லாமியக் கல்வியைப் பரப்பவுமே இந்த மதரஸா நிறுவப்பட்டது என எடுத்துரைத்தார். அஃலா ஹள்ரத் அவர்கள் ஆலிம்களிலேயே சூரியனாக, கல்விக் கொடையை அள்ளி வழங்குபவராகத் திகழ்ந்தார்கள்; இன்றைய பாகவிகள் இத்தகைய முன்னோர்களைப் பின்பற்றி இறையச்சத்தோடும் மனத்தூய்மையோடும் சேவையாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து கல்லூரி துணை முதல்வர் மௌலானா ஷகீல் அஹ்மத் அறிமுக உரையாற்றினார். சமஸ்த கேரளா ஜம்இய்யத்துல் உலமாவின் மௌலானா இஸ்மாயில் பாகவி ஆற்றிய சிறப்புரையில், “கேரளாவில் ‘பாகவி’ ஆலிம் இல்லாத மஹல்லாவே இருக்காது. பிற்காலத்தில் தோன்றிய எல்லா மதரஸாக்களும் பாகவிகளால், அல்லது பாகவிகளின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவைதான்” என்று குறிப்பிட்டார்.
அடுத்து பெங்களூர் சபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலீ பாகவி உருது மொழியில் உரையாற்றினார். மார்க்க அறிஞர்கள் மார்க்கத்திற்காகப் பாடுபட்டுவருவதை சமுதாயம் நன்றியோடு நினைவுகூர வேண்டும்; அரபி மதரசாக்களின் அடிப்படை நோக்கமே, குர்ஆனையும் சுன்னாவையும் கற்பித்து, காத்து, விளக்கமளித்துப் பரப்புவதுதான் என்று குறிப்பிட்ட அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி பற்றி அல்லாஹ் கூறுகையில், வேதத்தை ஓதுவது (கிராஅத்), உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவது (தஸ்கியா), வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பது (தஃலீம்) ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றான் எனச் சுட்டிக்காட்டினார்.
இதனால்தான் பாகியாத்தில் கல்வியுடன் ஒழுக்கமும் போதிக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் போதகராக அனுப்பப்பட்டிருந்ததைப் போன்றே, நற்குணங்களையும் மனித நாகரிகத்தையும் முழுமைப்படுத்தவும் அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விழா மேடை
|
மௌலானா பி.எஸ்.பி
பாகியாத்தின் முன்னாள் முதல்வர் மௌலானா பி.எஸ்.பி. ஸைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் தமது நீண்ட உரையில், அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் வெற்றிக்குக் காரணமே அவர்களிடமிருந்த உளத்தூய்மைதான்; அன்னார் அநாசாரங்களை ஒழிக்கப் பாடுபட்டார்கள்; சேவைகள் அனைத்திலும் இறைவனின் அன்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள் என விவரித்தார்.
பாகவிகளே! ஆலிம்களே! உங்களிடம் திறமை இருக்கலாம். பெரிய பேச்சாளர்களாகவும் நூலாசிரியர்களாகவும் நீங்கள் இருக்கலாம். ஆனால், இது போதாது. அதனுடன் மனத்தூய்மை (இக்லாஸ்) இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் ஆற்றல் சமுதாயத்திற்குப் பயனளிக்கும்! தகுதி (காபிலிய்யத்) மட்டும் போதாது; இறைவனின் அங்கீகாரமும் (மக்பூலிய்யத்) வேண்டும்.
அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள், புனித கஅபாவில் நின்று “இறைவா! என் மதரசாவில் பயிலும் யாரும் பயனற்றுப்போய்விடாமல் காப்பாயாக!” என மனமுருகிப் பிரார்த்தித்தார்கள்- என்று தெரிவித்தார்.
சமூகத்தைப் பிளக்காதீர்
அடுத்து மௌலானா கலீலுர் ரஹ்மான் சஜ்ஜாத் நுஅமானி (உ.பி.) அவர்கள் உருது மொழியில் ஆற்றிய உரை ஆலிம்களுக்கு மிகச் சரியான பாடமாக அமைந்தது. ஓதி பட்டம் வாங்கினால் மட்டும் போதாது; சமூகத்தின் அவலங்களைப் போக்க களமிறங்கிப் பாடுபட வேண்டும். சமூக ஒழுக்கச் சீரழிவைத் தடுத்தாக வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். சமய நல்லிணக்கம் காக்க வேண்டும். தமக்கிடையே கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும்- என்றுரைத்த மௌலானா அவர்கள், முஸஃப்பர் நகரில் தாம் நேரில் கண்ட காட்சிகளையும் விவரித்தார்.
நபித்தோழர்களிடையேகூட கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது. ஆனால், ஒருவரையொருவர் குறைகூறவோ அவமதிக்கவோ இல்லை; சமூகத்தைப் பிளக்கவில்லை; அடித்துக்கொள்ளவில்லை; தர்க்கம் செய்யவில்லை- என்று எடுத்துக்காட்டுகளை அவர் கூறியது அனைவரையும் சிந்திக்கத் தூண்டியது.
தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா அபுல்காசிம் நுஅமானீ பனாரசீ அவர்கள் தமது உரையில், இவ்விழா 150 ஆண்டுகள் கழிந்ததற்காக மேற்கொள்ளப்படும் பாராட்டு விழா அல்ல; கடந்தகால அனுபவங்களை அசைபோட்டுத் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் எதிர்காலத் திட்டங்களை வகுத்துச் சிறப்பாகச் செயல்படவும் கிடைத்த அரிய வாய்ப்புதான் இவ்விழா என்று கூறி அனைவரின் பார்வையையும் ஈர்த்தார்.
ஆலிம்கள் தெற்கு, வடக்கு என்ற வித்தியாசம் பாராமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மௌலானா, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுவரும் இன்றைய சூழலில், ஆலிம்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. ஆனால், பண்பாடுகள் சிதைந்துகொண்டிருக்கின்றன என்ற கவலையை அவர் வெளிட்டார்.
சிறுவயதிலிருந்தே ஒழுக்கம் போதிக்கப்பட வேண்டும். இதற்கு மக்தப் மதரசாக்களுக்கு உயிரூட்ட வேண்டும். அரபிக் கல்லூரிகளின் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு பகுதியை இனிமேல் மக்தப்களுக்காக ஒதுக்க வேண்டும். இதனால் இரண்டு பலன்கள் உண்டு. 1. இளைய தலைமுறை பாதுகாக்கப்படும். 2. அரபிக் கல்லூரிகளுக்கு மாணவர்களும் கிடைப்பார்கள் என்று தீர்வு கூறினார்.
தலைமையுரை
இறுதியாக அரபி மொழியில் தலைமையுரை ஆற்றிய ஷைகு மாஜித் மஸ்ஊத் உஸ்மானீ (மக்கா) அவர்கள், பாகியாத்திற்கும் திருமக்காவில் உள்ள ஸவ்லத்திய்யா மதரசாவிற்கும் உள்ள நீண்டகால உறவை நினைவுகூர்ந்தார். தென்னிந்தியாவின் தாய்க் கல்லூரி பாகியாத் என்றால், அரபுக் கண்டத்தின் தாய்க்கல்லூரி எங்கள் பாட்டனார் உருவாக்கிய ‘ஸவ்லத்தியா’ மதரசாதான் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் காலனி ஆதிக்கமும் கிறித்தவமயமாக்கலும் கொடிகட்டிப் பறந்ததைக் கண்ட ரஹ்மத்துல்லாஹ் கீரானவீ (ரஹ்) அவர்கள் பெரிதும் துயருற்றார்கள். இதை அகற்ற பெருமுயற்சி மேற்கொண்டார்கள். நெருக்கடி முற்றியதையடுத்து மக்காவிற்குப் புலம்பெயர்ந்தார்கள். அங்கு ‘இள்ஹாருல் ஹக்’ எனும் நூலை வெளியிட்டு கிறித்தவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.
இச்சமயத்தில் அஃலா ஹள்ரத் அவர்கள் மக்கா சென்று, கீரானவியின் மதரசாவான ஸவ்லத்திய்யாவில் கல்வி கற்றதுடன் சமுதாய சேவையிலும் ஈடுபாடு கொண்டார்கள். ஆசிரியரின் வழிகாட்டலின்பேரில் இந்தியா திரும்பிய அன்னார் பாகியாத்தை உருவாக்கினார்கள்.
ஸவ்லத்தியாவில் கல்வி கற்றவர்கள் இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன், ஆப்பிரிக்க நாடுகள் ஆகிய பல்வேறு இடங்களில் மதரசாக்களை உருவாக்கினார்கள். இன்றும் பழைமையான அந்த மதரசாக்கள் இருந்தாலும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அவை சீர்குலைந்துபோயுள்ளன- என்று வரலாறு கூறினார்.
முதல் அமர்வின் இறுதியில் பாகியாத் பொதுச் செயலாளர் மலக் முஹம்மது ஹாஷிம் சாஹிப் நன்றி கூறினார்.
இரண்டாம் அமர்வு
முதல் நாள் நிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வு அஸ்ருக்குப்பின் தொடங்கியது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவரும் லால்பேட்டை அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலானா, ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி இந்த அமர்வுக்குத் தலைமை ஏற்றார். அதிராம்பட்டிணம் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது குட்டி பாகவி முதலில் உரையாற்றினார்.
அடுத்து மௌலானா அ. முஹம்மது கான் பாகவி, 150ஆம் ஆண்டு விழாவின் செய்தி (Message) என்ன என்பது குறித்துத் தமது உரையில் எடுத்துரைத்தார். இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் ஐந்து தளங்களில் பணியாற்ற வேண்டியுள்ளது. 1. தனிமனித ஒழுக்கம் 2. குடும்பப் பாரம்பரியம் 3. சமூக அவலங்களை ஒழித்தல். 4. தேசிய அளவில் ஏற்படும் பிரச்சினைகள் 5. சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு.
வெறுமனே பள்ளிவாசல்களிலும் மதரசாக்களிலும் பணியாற்றுவதோடு திருப்திபட்டுக்கொள்ளாமல் சமுதாயத்தையும் சமயத்தையும் காக்க களம் காண வேண்டும். இதற்காகப் பேச்சு மற்றும் எழுத்து எனும் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும். இணையதளத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும். வாழும்போது உங்கள் இருப்புக்கு அடையாளம் வேண்டும்; இறக்கும்போது வாழ்ந்தீர்கள் என்பதற்கான அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும்- என்று கான் பாகவி உருக்கமாக வேண்டிக்கொண்டார்.
பாகியாத்தின் பழைய நினைவுகளை அசைபோட்டபோது அவரும் கலங்கினார். பாகவிகளையும் கலங்கவைத்தார்.
மூன்றாம் அமர்வு மஃக்ரிபுக்குப்பின் தொடங்கியது. பாகியாத்திலிருந்து வெளிவரும் ‘ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் தமிழ் தஃப்சீரின் 11ஆம் பாகம் வெளியிடப்பட்டது. அவ்வாறே அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் வரலாறு தமிழ், உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது.
அதையடுத்து உருது மொழியில் ஹைதராபாத் மௌலானா காலித் சைஃபுல்லாஹ் ரஹ்மானீ உரையாற்றினார்கள். நமக்கிடையிலான கருத்து வேறுபாடு, பிளவு, உட்பூசல் –இவைகள்தான் இன்றைய மிகப்பெரும் சோதனைகளாக உள்ளன. இப்பிளவு ஆலிம்களிடமிருந்து பொதுமக்கள்வரை பரவிப்போயுள்ளது. நடுநிலைப் போக்கே பாகியாத்தின் நிலைப்பாடாகும். நபித்தோழர்கள், முற்கால அறிஞர்கள் மத்தியிலும் கருத்துவேறுபாடு இருந்தது. ஆனால், அது மோதலுக்கு வழிவகுக்கவில்லை. சமுதாயத்தைப் பிரிக்கவில்லை- என்று கவலையோடு குறிப்பிட்டார். மலையாளத்தில் மௌலானா அபுல் புஷ்ரா பாகவி உரையாற்றினார். இறுதியாக மௌலானா அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி தலைமையுரை ஆற்றினார்.
விழாவின் இரண்டாம் நாள் தமிழ் அரங்கம்
|
இரண்டாம் நாள்
முதல்நாள் பொதுவான நிகழ்ச்சியாக அமைந்தது. இரண்டாம் நாள் தமிழ், மலையாளம், உர்து ஆகிய மும்மொழி கூட்டங்கள் தனித்தனி அரங்குகளில் நடைபெற்றன. தமிழ் நிகழ்ச்சிக்கு மௌலானா ஓ.எம். அப்துல் காதிர் பாகவி தலைமை வகித்தார். ஒரே இடத்தில் முப்பதாண்டுகள் பணியாற்றிய பாகவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசைப் பெற்றவர்களில் 106 வயதுடைய பெரியவரான ஜம்பை முஹம்மது யூசுப் பாகவி, சித்தையன்கோட்டை என். அப்துல்லாஹ் பாகவி, சென்னை அப்துல் மஜீத் பாகவி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். அத்துடன் பாகியாத் முன்னாள் பேராசிரியர்கள், சிறப்பு மலர் கட்டுரையாளர்கள் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த அமர்வில் மௌலானா, இப்ராஹீம் பாகவி (சென்னை), அலாவுத்தீன் பாகவி (சென்னை), சித்தீக் அலீ பாகவி (ஈரோடு), பி.எம். ஜியாவுத்தீன் பாகவி (ஈரோடு), உமர் பாரூக் தாவூதீ (ஈரோடு) முஹம்மது இஸ்மாயில் பாகவி (நீடூர்), T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி, நூருல் அமீன் மன்பஈ (லால்பேட்டை) முதலானோர் உரையாற்றினர்.
இறுதி அமர்வில் சஹாரன்பூர் மளாஹிருல் உலூம் முதல்வர் மௌலானா சல்மான் மளாஹிரீ, கேரளாவின் A.P. அபூபக்கர் முஸ்லியார் பாகவி, சென்னை மௌலானா ஷப்பீர் அலீ பாகவி முதலானோர் சிறப்புரை ஆற்றினர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் பட்டமளிப்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றது. 53 மாணவர்கள் மௌலவி ஆலிம் பட்டமும் 17 மாணவர்கள் ஃபாஸில் பட்டமும் 1 மாணவர் ஹாஃபிழ் பட்டமும் 5 மாணவர்கள் காரீ பட்டமும் பெற்றனர். மக்கா ஸவ்லத்திய்யா முதல்வர் பட்டங்களை வழங்கினார். அவ்வாறே, சிறப்பு மலர்கள் தமிழ், மலையாளம், உருது ஆகிய மும்மொழிகளில் வெளியிடப்பட்டன.
பார்வையாளர்கள் கருத்து
- பேச்சாளர்கள் எண்ணிக்கை அதிகமானதால் பலருக்குப் போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை.
- பாகியாத் உள்பட பல மதரசாக்களில் மாணவர் எண்ணிக்கை அச்சமூட்டும் அளவிற்குக் குறைந்துபோனதற்குத் தீர்வோ திட்டமோ அளிக்கப்படவில்லை.
- பூட்டப்பட்ட மதரசாக்களை மீண்டும் திறப்பதற்கு வழிகாட்டுவது தாய்க்கல்லூரியின் தார்மிகப் பொறுப்பல்லவா?
- சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவைத் தடுக்க ஒருங்கிணைந்த திட்டமொன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
- அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் அநாசாரங்களை ஒழிக்கவே மதரசாவை நிறுவினார்கள் என்று விழாவில் பலரும் பேசினார்கள். அதை இன்று செயல்படுத்த பாகவிகளைத் தயார் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
- அஃலா ஹள்ரத் அவர்களின் சரியான சிந்தனைப் போக்கை அனைவரும் அறிவதற்கு வசதியாக அன்னாரின் மார்க்கத் தீர்ப்புகளை தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டிருக்கலாம்.
- பாகியாத் முன்னாள் மாணவர்களின் சங்கம் ஒன்றை அதிகாரபூர்வமாக மதரசாவே உருவாக்கி, செயல்திட்டங்களை அளித்திருக்கலாம்.
ஆக, பாகியாத் 150ஆம் ஆண்டு விழா பாகவிகளிடையேயும் இதர ஆலிம்களிடையேயும் ஓர் எழுச்சியை உருவாக்கியுள்ளதை மறுக்க முடியாது. அதற்காக அனைவரையும் பாராட்டுகிறோம். இறுதிநாள்வரை பாகியாத்தின் ஆக்கபூர்வமான சேவை தொடர அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.
__________________