Wednesday, December 25, 2013

தாய்க்கல்லூரியின் தவப்புதல்வர்கள் சங்கமித்த 150ஆம் ஆண்டு விழா

- பாகியாத் மைந்தன்

தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழா கடந்த 21/22.12.2013 ஆகிய இரு நாள்கள் அல்லாஹ்வின் பேரருளால் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம்பேர் கலந்துகொண்ட இச்சிறப்புக் கூட்டத்தில் பாகவி ஆலிம்கள் மட்டுமன்றி மற்ற ஆலிம்களும் பல மாநிலங்களிலிருந்து வந்து கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆலிம்களும் முஸ்லிம் பொதுமக்களும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். திருமக்கா, தேவ்பந்த், லக்னோ, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், சென்னை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு அழைப்பாளர்கள் பலர் நிகழ்ச்சிகளில் பங்குபெற்றனர்.

இது ஒரு தேசிய மாநாடுபோல் மிக விமரிசையாக, அதேநேரத்தில் மிக அமைதியாக நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்குவதற்கும் அவர்களின் உணவு, தேநீர் போன்ற தேவைகளுக்கும் சிறப்பான இடம் தேர்வு செய்யப்பட்டு, கூட்டம் ஒவ்வொன்றும் எந்த இடையூறுமன்றி திட்டமிட்டபடி நடப்பதற்கும் விழா அமைப்பாளர்கள் செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது.


வேலூர் கோட்டை வெளிப்புறத் தோற்றம்

பாகியாத்துஸ் ஸாலிஹாத்


திருக்குர்ஆனின் இச்சொற்றொடருக்கு ‘நிலையான நல்லறங்கள்’ என்பது சொற்பொருள். உலகில் நல்லறங்கள் நிலைத்து நிற்க, தழைத்தோங்க வேண்டுமானால் நற்சிந்தனைகள் தோன்ற வேண்டும். சிந்தனைகளின் ஊற்றுதான் கல்வியறிவு. அதிலும் இறையியல் கல்வியே நல்வழிப்படுத்தும் சிந்தனைகளின் ஊற்றாக விளங்க வல்லது.

தமிழகத்தின் ஜமீன்(சேலம்) ஆத்தூரைச் சேர்ந்த ஷைகு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களை வரலாறு மறக்காது. ‘ஷம்சுல் உலமா’ (ஞானச் சூரியன்) என்றும் ‘அஃலா ஹள்ரத்’ (பேரறிஞர்) என்றும் மக்களாலும் ஆலிம்களாலும் அழைக்கப்பட்டுவந்த அன்னார், ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்துவந்தபோது இம்மார்க்கக் கலைக்கூடத்தை நிறுவினார்கள்.


பாகியாத்தின் தாருல் ஹதீஸ்



இந்தியா விடுதலை அடைவதற்கு 90 ஆண்டுகளுக்குமுன் 1857ஆம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள் தமது 26ஆம் வயதில் தம் வீட்டுத் திண்ணையில்தான் வகுப்பைத் தொடங்கினார்கள். மாணவர்கள் யாரென்றால், அன்னாரின் புதல்வரும் உறவினர்களும்தான். 12 ஆண்டுகளுக்குப் பின் 1869ஆம் ஆண்டு வேலூர் பெரிய பள்ளிவாசலின் ‘முசாஃபிர் கானா’ எனப்படும் பயணியர் தங்கும் திண்ணைக்கு வகுப்பை மாற்றினார்கள்.

ஆறாண்டுகள் பள்ளிவாசல் திண்ணையில் நடந்த மதரசா 1875ஆம் ஆண்டு இப்போதுள்ள இடத்தில் தனிக் கட்டடம், பெயர், பாடத்திட்டம், மாணவர் விடுதி ஆகியவற்றுடன் முறையாகத் தொடங்கப்பட்டது.


பாகியாத் நியூலைன்


பின்னர் அன்னாரின் புதல்வர் ஷைகு ஜியாவுத்தீன் அஹ்மத் (ரஹ்) அவர்கள் மதரசாவை மேலும் விரிவுபடுத்தி ‘நியூலைன்’ எனும் புதிய பகுதியை 1925ஆம் ஆண்டு எழுப்பினார்கள். பின்னர் இன்றைய ஆட்சிமன்றக் குழுவின் பெருமுயற்சியில் பொதுச் செயலாளர் மலக் முஹம்மத் ஹாஷிம் சாஹிப் அவர்களின் ஏற்பாட்டால் 5 மாடி மாணவர் விடுதி, புதிய சமையல் கூடம், புதிய அலுவலகம், புதிய நூலகம், ஆசிரியர்களுக்கான குடியிருப்பு ஆகியவை 1992ஆம் ஆண்டு கட்டப்பட்டன.

அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் காலத்திலேயே பாக்கியாத்திற்கென ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டு, இந்திய அரசின் சட்டப்படி (1860/21) 1896இல் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. மேலும், ஆட்சிமன்றக் குழு, முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தொடர்பான நடைமுறை சாசனமும் (By Laws) தயார் செய்யப்பட்டது.

அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தமது 89ஆம் வயதில் 1919 ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 22 சனிக்கிழமை மறைந்தார்கள். இந்த வரலாற்றுக் குறிப்பின்படி பாக்கியாத்தின் வயது 156.


விழா நடந்த இடத்தின் முகப்புத் தோற்றம்

முதல்நாள் நிகழ்ச்சி


2013 டிசம்பர் 21ஆம் நாள் காலை 9.30 மணிக்குச் சரியாக விழா தொடங்கியது. திருமக்காவிலுள்ள ‘அஸ்ஸவ்லத்தியா’ மதரசாவின் முதல்வர் ஷைகு மாஜித் ஹஷீம் உஸ்மானீ அவர்கள் காலை அமர்விற்குத் தலைமை தாங்கினார். வேலூர் கொணவட்டம் கூனா பிரசிடென்சி ஸ்கூலின் விசாலமான வளாகத்தில் விழா நடைபெற்றது. ஸவ்லத்தியா மதரஸாவில் அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள் கல்வி பயின்றுள்ளார்கள். அன்னாரின் ஆசிரியரும் மதரஸாவின் நிறுவனருமான உ.பி.யைச் சேர்ந்த ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரானவீ (ரஹ்) அவர்களின் பேரர்தான் இந்த ஹஷீம் உஸ்மானி என்பது குறிப்பிடத் தக்கது.

அரபிமொழியில் வரவேற்புரையாற்றிய பாக்கியாத் முதல்வர் மௌலானா உஸ்மான் பாகவி சாஹிப் அவர்கள், நபிவழியைக் காக்கவும் இஸ்லாமியக் கல்வியைப் பரப்பவுமே இந்த மதரஸா நிறுவப்பட்டது என எடுத்துரைத்தார். அஃலா ஹள்ரத் அவர்கள் ஆலிம்களிலேயே சூரியனாக, கல்விக் கொடையை அள்ளி வழங்குபவராகத் திகழ்ந்தார்கள்; இன்றைய பாகவிகள் இத்தகைய முன்னோர்களைப் பின்பற்றி இறையச்சத்தோடும் மனத்தூய்மையோடும் சேவையாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து கல்லூரி துணை முதல்வர் மௌலானா ஷகீல் அஹ்மத் அறிமுக உரையாற்றினார். சமஸ்த கேரளா ஜம்இய்யத்துல் உலமாவின் மௌலானா இஸ்மாயில் பாகவி ஆற்றிய சிறப்புரையில், “கேரளாவில் ‘பாகவி’ ஆலிம் இல்லாத மஹல்லாவே இருக்காது. பிற்காலத்தில் தோன்றிய எல்லா மதரஸாக்களும் பாகவிகளால், அல்லது பாகவிகளின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவைதான்” என்று குறிப்பிட்டார்.

அடுத்து பெங்களூர் சபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலீ பாகவி உருது மொழியில் உரையாற்றினார். மார்க்க அறிஞர்கள் மார்க்கத்திற்காகப் பாடுபட்டுவருவதை சமுதாயம் நன்றியோடு நினைவுகூர வேண்டும்; அரபி மதரசாக்களின் அடிப்படை நோக்கமே, குர்ஆனையும் சுன்னாவையும் கற்பித்து, காத்து, விளக்கமளித்துப் பரப்புவதுதான் என்று குறிப்பிட்ட அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி பற்றி அல்லாஹ் கூறுகையில், வேதத்தை ஓதுவது (கிராஅத்), உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவது (தஸ்கியா), வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பது (தஃலீம்) ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றான் எனச் சுட்டிக்காட்டினார்.

இதனால்தான் பாகியாத்தில் கல்வியுடன் ஒழுக்கமும் போதிக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் போதகராக அனுப்பப்பட்டிருந்ததைப் போன்றே, நற்குணங்களையும் மனித நாகரிகத்தையும் முழுமைப்படுத்தவும் அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


விழா மேடை

மௌலானா பி.எஸ்.பி


பாகியாத்தின் முன்னாள் முதல்வர் மௌலானா பி.எஸ்.பி. ஸைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் தமது நீண்ட உரையில், அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் வெற்றிக்குக் காரணமே அவர்களிடமிருந்த உளத்தூய்மைதான்; அன்னார் அநாசாரங்களை ஒழிக்கப் பாடுபட்டார்கள்; சேவைகள் அனைத்திலும் இறைவனின் அன்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள் என விவரித்தார்.

பாகவிகளே! ஆலிம்களே! உங்களிடம் திறமை இருக்கலாம். பெரிய பேச்சாளர்களாகவும் நூலாசிரியர்களாகவும் நீங்கள் இருக்கலாம். ஆனால், இது போதாது. அதனுடன் மனத்தூய்மை (இக்லாஸ்) இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் ஆற்றல் சமுதாயத்திற்குப் பயனளிக்கும்! தகுதி (காபிலிய்யத்) மட்டும் போதாது; இறைவனின் அங்கீகாரமும் (மக்பூலிய்யத்) வேண்டும்.

அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள், புனித கஅபாவில் நின்று “இறைவா! என் மதரசாவில் பயிலும் யாரும் பயனற்றுப்போய்விடாமல் காப்பாயாக!” என மனமுருகிப் பிரார்த்தித்தார்கள்- என்று தெரிவித்தார்.

சமூகத்தைப் பிளக்காதீர்


அடுத்து மௌலானா கலீலுர் ரஹ்மான் சஜ்ஜாத் நுஅமானி (உ.பி.) அவர்கள் உருது மொழியில் ஆற்றிய உரை ஆலிம்களுக்கு மிகச் சரியான பாடமாக அமைந்தது. ஓதி பட்டம் வாங்கினால் மட்டும் போதாது; சமூகத்தின் அவலங்களைப் போக்க களமிறங்கிப் பாடுபட வேண்டும். சமூக ஒழுக்கச் சீரழிவைத் தடுத்தாக வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். சமய நல்லிணக்கம் காக்க வேண்டும். தமக்கிடையே கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும்- என்றுரைத்த மௌலானா அவர்கள், முஸஃப்பர் நகரில் தாம் நேரில் கண்ட காட்சிகளையும் விவரித்தார்.

நபித்தோழர்களிடையேகூட கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது. ஆனால், ஒருவரையொருவர் குறைகூறவோ அவமதிக்கவோ இல்லை; சமூகத்தைப் பிளக்கவில்லை; அடித்துக்கொள்ளவில்லை; தர்க்கம் செய்யவில்லை- என்று எடுத்துக்காட்டுகளை அவர் கூறியது அனைவரையும் சிந்திக்கத் தூண்டியது.

தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா அபுல்காசிம் நுஅமானீ பனாரசீ அவர்கள் தமது உரையில், இவ்விழா 150 ஆண்டுகள் கழிந்ததற்காக மேற்கொள்ளப்படும் பாராட்டு விழா அல்ல; கடந்தகால அனுபவங்களை அசைபோட்டுத் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் எதிர்காலத் திட்டங்களை வகுத்துச் சிறப்பாகச் செயல்படவும் கிடைத்த அரிய வாய்ப்புதான் இவ்விழா என்று கூறி அனைவரின் பார்வையையும் ஈர்த்தார்.

ஆலிம்கள் தெற்கு, வடக்கு என்ற வித்தியாசம் பாராமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மௌலானா, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுவரும் இன்றைய சூழலில், ஆலிம்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. ஆனால், பண்பாடுகள் சிதைந்துகொண்டிருக்கின்றன என்ற கவலையை அவர் வெளிட்டார்.

சிறுவயதிலிருந்தே ஒழுக்கம் போதிக்கப்பட வேண்டும். இதற்கு மக்தப் மதரசாக்களுக்கு உயிரூட்ட வேண்டும். அரபிக் கல்லூரிகளின் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு பகுதியை இனிமேல் மக்தப்களுக்காக ஒதுக்க வேண்டும். இதனால் இரண்டு பலன்கள் உண்டு. 1. இளைய தலைமுறை பாதுகாக்கப்படும். 2. அரபிக் கல்லூரிகளுக்கு மாணவர்களும் கிடைப்பார்கள் என்று தீர்வு கூறினார்.

தலைமையுரை


இறுதியாக அரபி மொழியில் தலைமையுரை ஆற்றிய ஷைகு மாஜித் மஸ்ஊத் உஸ்மானீ (மக்கா) அவர்கள், பாகியாத்திற்கும் திருமக்காவில் உள்ள ஸவ்லத்திய்யா மதரசாவிற்கும் உள்ள நீண்டகால உறவை நினைவுகூர்ந்தார். தென்னிந்தியாவின் தாய்க் கல்லூரி பாகியாத் என்றால், அரபுக் கண்டத்தின் தாய்க்கல்லூரி எங்கள் பாட்டனார் உருவாக்கிய ‘ஸவ்லத்தியா’ மதரசாதான் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் காலனி ஆதிக்கமும் கிறித்தவமயமாக்கலும் கொடிகட்டிப் பறந்ததைக் கண்ட ரஹ்மத்துல்லாஹ் கீரானவீ (ரஹ்) அவர்கள் பெரிதும் துயருற்றார்கள். இதை அகற்ற பெருமுயற்சி மேற்கொண்டார்கள். நெருக்கடி முற்றியதையடுத்து மக்காவிற்குப் புலம்பெயர்ந்தார்கள். அங்கு ‘இள்ஹாருல் ஹக்’ எனும் நூலை வெளியிட்டு கிறித்தவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.

இச்சமயத்தில் அஃலா ஹள்ரத் அவர்கள் மக்கா சென்று, கீரானவியின் மதரசாவான ஸவ்லத்திய்யாவில் கல்வி கற்றதுடன் சமுதாய சேவையிலும் ஈடுபாடு கொண்டார்கள். ஆசிரியரின் வழிகாட்டலின்பேரில் இந்தியா திரும்பிய அன்னார் பாகியாத்தை உருவாக்கினார்கள்.

ஸவ்லத்தியாவில் கல்வி கற்றவர்கள் இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன், ஆப்பிரிக்க நாடுகள் ஆகிய பல்வேறு இடங்களில் மதரசாக்களை உருவாக்கினார்கள். இன்றும் பழைமையான அந்த மதரசாக்கள் இருந்தாலும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அவை சீர்குலைந்துபோயுள்ளன- என்று வரலாறு கூறினார்.

முதல் அமர்வின் இறுதியில் பாகியாத் பொதுச் செயலாளர் மலக் முஹம்மது ஹாஷிம் சாஹிப் நன்றி கூறினார்.

இரண்டாம் அமர்வு


முதல் நாள் நிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வு அஸ்ருக்குப்பின் தொடங்கியது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவரும் லால்பேட்டை அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலானா, ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி இந்த அமர்வுக்குத் தலைமை ஏற்றார். அதிராம்பட்டிணம் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது குட்டி பாகவி முதலில் உரையாற்றினார்.

அடுத்து மௌலானா அ. முஹம்மது கான் பாகவி, 150ஆம் ஆண்டு விழாவின் செய்தி (Message) என்ன என்பது குறித்துத் தமது உரையில் எடுத்துரைத்தார். இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் ஐந்து தளங்களில் பணியாற்ற வேண்டியுள்ளது. 1. தனிமனித ஒழுக்கம் 2. குடும்பப் பாரம்பரியம் 3. சமூக அவலங்களை ஒழித்தல். 4. தேசிய அளவில் ஏற்படும் பிரச்சினைகள் 5. சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு.

வெறுமனே பள்ளிவாசல்களிலும் மதரசாக்களிலும் பணியாற்றுவதோடு திருப்திபட்டுக்கொள்ளாமல் சமுதாயத்தையும் சமயத்தையும் காக்க களம் காண வேண்டும். இதற்காகப் பேச்சு மற்றும் எழுத்து எனும் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும். இணையதளத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும். வாழும்போது உங்கள் இருப்புக்கு அடையாளம் வேண்டும்; இறக்கும்போது வாழ்ந்தீர்கள் என்பதற்கான அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும்- என்று கான் பாகவி உருக்கமாக வேண்டிக்கொண்டார்.

பாகியாத்தின் பழைய நினைவுகளை அசைபோட்டபோது அவரும் கலங்கினார். பாகவிகளையும் கலங்கவைத்தார்.

மூன்றாம் அமர்வு மஃக்ரிபுக்குப்பின் தொடங்கியது. பாகியாத்திலிருந்து வெளிவரும் ‘ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் தமிழ் தஃப்சீரின் 11ஆம் பாகம் வெளியிடப்பட்டது. அவ்வாறே அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் வரலாறு தமிழ், உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது.

அதையடுத்து உருது மொழியில் ஹைதராபாத் மௌலானா காலித் சைஃபுல்லாஹ் ரஹ்மானீ உரையாற்றினார்கள். நமக்கிடையிலான கருத்து வேறுபாடு, பிளவு, உட்பூசல் –இவைகள்தான் இன்றைய மிகப்பெரும் சோதனைகளாக உள்ளன. இப்பிளவு ஆலிம்களிடமிருந்து பொதுமக்கள்வரை பரவிப்போயுள்ளது. நடுநிலைப் போக்கே பாகியாத்தின் நிலைப்பாடாகும். நபித்தோழர்கள், முற்கால அறிஞர்கள் மத்தியிலும் கருத்துவேறுபாடு இருந்தது. ஆனால், அது மோதலுக்கு வழிவகுக்கவில்லை. சமுதாயத்தைப் பிரிக்கவில்லை- என்று கவலையோடு குறிப்பிட்டார். மலையாளத்தில் மௌலானா அபுல் புஷ்ரா பாகவி உரையாற்றினார். இறுதியாக மௌலானா அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி தலைமையுரை ஆற்றினார்.


விழாவின் இரண்டாம் நாள் தமிழ் அரங்கம்

இரண்டாம் நாள்


முதல்நாள் பொதுவான நிகழ்ச்சியாக அமைந்தது. இரண்டாம் நாள் தமிழ், மலையாளம், உர்து ஆகிய மும்மொழி கூட்டங்கள் தனித்தனி அரங்குகளில் நடைபெற்றன. தமிழ் நிகழ்ச்சிக்கு மௌலானா ஓ.எம். அப்துல் காதிர் பாகவி தலைமை வகித்தார். ஒரே இடத்தில் முப்பதாண்டுகள் பணியாற்றிய பாகவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசைப் பெற்றவர்களில் 106 வயதுடைய பெரியவரான ஜம்பை முஹம்மது யூசுப் பாகவி, சித்தையன்கோட்டை என். அப்துல்லாஹ் பாகவி, சென்னை அப்துல் மஜீத் பாகவி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். அத்துடன் பாகியாத் முன்னாள் பேராசிரியர்கள், சிறப்பு மலர் கட்டுரையாளர்கள் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த அமர்வில் மௌலானா, இப்ராஹீம் பாகவி (சென்னை), அலாவுத்தீன் பாகவி (சென்னை), சித்தீக் அலீ பாகவி (ஈரோடு), பி.எம். ஜியாவுத்தீன் பாகவி (ஈரோடு), உமர் பாரூக் தாவூதீ (ஈரோடு) முஹம்மது இஸ்மாயில் பாகவி (நீடூர்), T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி, நூருல் அமீன் மன்பஈ (லால்பேட்டை) முதலானோர் உரையாற்றினர்.

இறுதி அமர்வில் சஹாரன்பூர் மளாஹிருல் உலூம் முதல்வர் மௌலானா சல்மான் மளாஹிரீ, கேரளாவின் A.P. அபூபக்கர் முஸ்லியார் பாகவி, சென்னை மௌலானா ஷப்பீர் அலீ பாகவி முதலானோர் சிறப்புரை ஆற்றினர்.

முதல் நாள் நிகழ்ச்சியில் பட்டமளிப்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றது. 53 மாணவர்கள் மௌலவி ஆலிம் பட்டமும் 17 மாணவர்கள் ஃபாஸில் பட்டமும் 1 மாணவர் ஹாஃபிழ் பட்டமும் 5 மாணவர்கள் காரீ பட்டமும் பெற்றனர். மக்கா ஸவ்லத்திய்யா முதல்வர் பட்டங்களை வழங்கினார். அவ்வாறே, சிறப்பு மலர்கள் தமிழ், மலையாளம், உருது ஆகிய மும்மொழிகளில் வெளியிடப்பட்டன.

பார்வையாளர்கள் கருத்து

  • பேச்சாளர்கள் எண்ணிக்கை அதிகமானதால் பலருக்குப் போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை.
  • பாகியாத் உள்பட பல மதரசாக்களில் மாணவர் எண்ணிக்கை அச்சமூட்டும் அளவிற்குக் குறைந்துபோனதற்குத் தீர்வோ திட்டமோ அளிக்கப்படவில்லை.
  • பூட்டப்பட்ட மதரசாக்களை மீண்டும் திறப்பதற்கு வழிகாட்டுவது தாய்க்கல்லூரியின் தார்மிகப் பொறுப்பல்லவா?
  • சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவைத் தடுக்க ஒருங்கிணைந்த திட்டமொன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
  • அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் அநாசாரங்களை ஒழிக்கவே மதரசாவை நிறுவினார்கள் என்று விழாவில் பலரும் பேசினார்கள். அதை இன்று செயல்படுத்த பாகவிகளைத் தயார் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
  • அஃலா ஹள்ரத் அவர்களின் சரியான சிந்தனைப் போக்கை அனைவரும் அறிவதற்கு வசதியாக அன்னாரின் மார்க்கத் தீர்ப்புகளை தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டிருக்கலாம்.
  • பாகியாத் முன்னாள் மாணவர்களின் சங்கம் ஒன்றை அதிகாரபூர்வமாக மதரசாவே உருவாக்கி, செயல்திட்டங்களை அளித்திருக்கலாம்.

ஆக, பாகியாத் 150ஆம் ஆண்டு விழா பாகவிகளிடையேயும் இதர ஆலிம்களிடையேயும் ஓர் எழுச்சியை உருவாக்கியுள்ளதை மறுக்க முடியாது. அதற்காக அனைவரையும் பாராட்டுகிறோம். இறுதிநாள்வரை பாகியாத்தின் ஆக்கபூர்வமான சேவை தொடர அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.





__________________

Thursday, December 19, 2013

டிசம்பர் - 18 உலக அரபி மொழி தினம்

- அ. முஹம்மது கான் பாகவி


ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு, ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் நாளை உலக அரபி நாளாக 2010இல் அறிவித்தது. முக்கிய அம்சங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்து, அதை உலகெங்கும் கொண்டாடுவதும் கொண்டாடச் சொல்வதும் ஐ.நா.வின் பணிகளில் ஒன்று. அவ்வாறு செய்ய வேண்டுமானால், அப்பொருள் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

மொழிதான் ஒரு சமூகத்தின் வரலாறு; காலசாரம்; புவியியல்; சிந்தனை; கனவு….. எல்லாம். உலகத்தில் சுமார் 10 ஆயிரம் மொழிகள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1977ஆம் ஆண்டு வெளிவந்த ‘உலக மொழிகளின் பதிவு’ என்ற நூல் 20ஆயிரம் மொழிகளும் வழக்குகளும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. மூலமொழிகள் நான்காயிரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் 18 மொழிகள் செம்மொழிகளாக அறியப்படுகின்றன. அவற்றுள் அரபிமொழியும் ஒன்று. செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளும் அரபிக்கு உண்டு. உலக அளவில் அரபி மொழி பேசுவோர் 323 மில்லியன்பேர் என்கிறது ஒரு புள்ளி விவரம். அரபு நாடுகளின் மக்கட் தொகையின்படி இந்த எண்ணிக்கை சரியாக இருக்கலாம். இதற்கேற்ப உலக மொழிகளில் மூன்றாவது இடத்தை அரபி பெறுகிறது. சீனாவும் ஸ்பெய்னும் முதலிரு இடங்களைப் பெறுகின்றன.

கணக்கெடுப்பின்படி பார்த்தால் உலகில் அரபிமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட வர்கள் சுமார் 175-185 மில்லியன்பேர் உள்ளனர். இதன்படி அரபி மொழிக்கு 25ஆம் இடம் கிடைக்கும்.

அரபிமொழியின் தனித்தன்மைகள் என்று பார்த்தால் நிறைய உண்டு. முதல் தரமாக, அது இறுதி வேதமாம் திருக்குர்ஆனின் மொழி என்ற சிறப்பே அதற்குக் கிடைத்த மாபெரும் செல்வாக்கு ஆகும். அவ்வாறே நபிமொழியின் மொழியாகவும் அவ்விரண்டின் தொடர்பில் பிறந்த இலக்கியங்களின் மொழியாகவும் அரபி விளங்குகிறது.

மூன்றெழுத்து மொழி என்பது அரபியின் அடுத்த சிறப்பாகும். பெயரில் மட்டும் மூன்றெழுத்து (ஐன், ரா, பா) இருப்பதாகக் கருத வேண்டாம். அரபிச் சொற்களின் வாய்பாடுகள் பெரும்பாலும் மூன்றெழுத்து கொண்டவையாகவே இருக்கும். இதனாலேயே ‘ஃபஅல’ எனும் வாய்பாட்டை அடிப்படையானதாக அரபியர் கொண்டனர். அத்துடன் வினைவடிவங்கள் சொல்லிலேயே முக்காலத்தில் ஒன்றைப் பிரதிபலிப்பவையாக இருப்பது தனிச்சிறப்பாகும்.

அரபி மொழிக்குள்ள மிகப்பெரும் தனிச் சிறப்பு என அதன் இரத்தனச் சுருக்கத்தைக் கூறலாம். பொதுவாக உரை என்பது, இயல்பிலேயே சுருக்கமானதாக இருப்பதுதான் அதன் பலமே. இதனாலேயே, ஒரு வரி அரபி வாக்கியத்தைப் பிறமொழிகளில் பெயர்க்கும்போது குறைந்தபட்சம் மூன்று வரிகள் தேவைப்படுகின்றன.

திருக்குர்ஆன் இதற்கு மிகச் சரியான சான்றாகும். நபிமொழிகள் அடுத்த சான்று.

கனடாவைச் சேர்ந்த ஒரு தத்துவ அறிஞரிடம் அவருடைய மாணவர்கள், இந்த குர்ஆனைப் போன்ற ஒன்றை எங்களுக்காக நீங்கள், ஏன் படைக்கக் கூடாது? என்று பேச்சோடு பேச்சாகக் கேட்டுவைத்தனர். சரி என்று ஏற்றுக்கொண்ட தத்துவமேதை ஒருசில வரிகளை எழுதிக் கொடுத்துவிட்டு, நீண்டநாள் தலைமறைவாகிவிட்டார்.

பிறகு ஒருநாள் வெளியே வந்து நண்பர்களிடம் சொன்னார்: சத்தியமாகச் சொல்கிறேன்; இது என்னாலும் முடியாது; வேறு யாராலும் முடியாது. குர்ஆனைத் திறந்தேன்; ‘அல்மாயிதா’ அத்தியாயம் கண்ணில் பட்டது. அதன் முதலாம் வசனத்தை நோட்டமிட்டேன். இரண்டு வரிகள்தான். ஆனால், அதில் ஒளிந்திருந்த பொருள்கள் பல!

ஆம்! ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சொல்கிறது! மோசடிக்குத் தடை விதிக்கிறது. சிலவற்றைப் பொதுவாக ஹலால் ஆக்குகிறது. பிறகு ஒன்றன்பின் ஒன்றாக விலக்கு அளிக்கிறது. இறைவனின் ஆற்றலையும் சட்டமியற்றும் வல்லமையையும் பறைசாற்றுகிறது…. எல்லாம் இரண்டே இரண்டு வரிகளில்.

இறைநம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்குச் சொல்லப்பட இருக்கின்றவை நீங்கலாக, மற்ற கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருக்கும்போது வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டதெனக் கருதிவிடக் கூடாது. அல்லாஹ், தான் நாடுவதைச் சட்டமாக்குகின்றான். (5:1) இதுதான் அந்த வசனம்!

அரபி மூலத்தில் இரண்டு வரிகள்தான் உள்ளன. தமிழாக்கத்தில் அடைப்புக் குறியை நீக்கிய பிறகும்கூட இத்தனை வரிகள் தேவை! இதுதான் அரபிமொழியின் – திருக்குர் ஆனின் சொல்லாட்சி மகத்துவம். (அபூபக்ர் அந்நக்காஷ்)

இன்னொன்றைச் சொல்லலாம்! அரபிமொழியில் உள்ள நெடுங்கணக்கு 28 எழுத்துக்களைக் கொண்டது. இவற்றில் குறைந்தது 6 எழுத்துகளின் உச்சரிப்போ மொழிதலோ வேறு மொழிகளில் இல்லை. ளாத், ஐன், ஃகா, ஸாத், தோ, காஃப் ஆகியவையே அந்த ஆறு எழுத்துகளாகும்.

அரபிமொழி ஏற்கெனவே ஐ.நா. சபையால் அங்கீகர்க்கப்பட்ட 6 மொழிகளில் ஒன்றாகும். இப்போது டிசம்பர் – 18ஆம் நாளை உலக அரபி நாளாகவும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்தது 1973 டிசம்பர் – 18ஆம் நாள் என்பதால் அந்தத் தொடர்பிலேயே டிசம்பர் – 18ஐ உலக நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்நாளை, அரபிமொழி கற்பிக்கும் மதரசாக்கள், அரபிக் கல்லூரிகள், பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தலாம். சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரபி மற்றும் உருது, ஃபார்சி துறை சென்ற ஆண்டிலிருந்து இந்நாளைச் சிறப்பாக அனுசரித்துவருகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரபி உரைகள், சிறப்பு விருந்தினரின் நிறைவான அரபி உரை, உரை நாடகம்… என அரபித் துறை பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. சென்னை புதுக்கல்லூரி, வண்டலூர் புகாரியா, பிலாலியா ஆகிய கல்லூரிகளும் இவ்வாண்டு முதல் இந்நாளைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


கடந்த 18.12.2013 புதன் காலை சென்னைப் பல்கலை அரபித் துறை நடத்திய உலக அரபி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாணவ, மாணவியர் ஆற்றிய அரபி உரைகளைக் கேட்டுச் சிலிர்த்துப்போனேன். அழகான உரைகள்; ஆழமான கருத்துகள். முனைவர் ஜாகிர் ஹுசைன் பாகவி, முனைவர் அன்பர் பாதுஷா உலவி முதலான பேராசிரியர்களின் உழைப்பு நன்றாகவே வெளிப்பட்டது.

இன்னும் முஸ்லிம் கல்லூரிகள், பெண்கள் மதரசாக்கள், அரபிக் கல்லூரிகள் என எத்தனையோ கல்லூரிகள் உள்ளன. அங்கெல்லாம் இந்நாளை ஏன் நல்ல முறையில் பயன்படுத்தக் கூடாது? அரபி மெழியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கருத்தரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, பரிசுகள் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தலாம் அல்லவா?

இதன்மூலம், மாணவர்களின் அரபிமொழி ஆற்றல் வளரவும் குர்ஆனின் மொழி கௌரவப்படுத்தப்படவும் இதை முன்னிட்டு சமுதாய மக்களுக்கு அரபிமொழி மீதான ஆர்வம் பிறக்கவும் வழி உண்டாகுமல்லவா? சொல்லுங்கள்!

வாழ்க! அரபிச் செம்மொழி!

Tuesday, December 17, 2013

மூன்றாம் பாலினம் உண்டா? (ஆய்வுக் கட்டுரை)

- அ. முஹம்மது கான் பாகவி

லரும் கேட்கும் ஒரு கேள்வி: ‘அலி’கள் அல்லது ‘அரவானிகள்’தொடர்பாக இஸ்லாத்தின் கருத்தென்ன? அரவானிகளுக்கென தனிச்சட்டங்கள் உண்டா? அரவானிகளை சமுதாயம் எவ்வாறு நடத்த வேண்டும்? ஆண்பாலும் அல்லாத, பெண்பாலும் அல்லாத மூன்றாவது பாலினம் உண்டா?

‘அரவானி’ என்றால், வெளித்தோற்றத்தையும் உடலமைப்பையும் கொண்டு ஆண் என்றோ, பெண் என்றோ தீர்மானிக்க இயலாத மனிதர் என்று பொருள். ஷரீஆவின் பார்வையில், ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உள்ள, அல்லது இரண்டுமே இல்லாத மனிதருக்குத்தான் அடிப்படையில் ‘அரவானி’ அல்லது ‘அலி’ (குன்ஸா) எனப்படும். (அல்ஜுர்ஜானீ)

முதலில் ஓர் அடிப்படையைத் தெரிந்துகொள்வது அவசியம். ஒருவரை ‘அரவானி’ என்று எப்போது தீர்மானிக்க முடியும் என்றால், பருவ வயதை அடைந்தபிறகுதான் அந்த முடிவுக்கே வர முடியும். பருவமடைவதற்கு முன்பு ஆண் குறியும் பெண் குறியும் இருப்பதால் ஆண் என்றோ பெண் என்றோ தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்படும்.

பருவம் அடைந்தபிறகு பெரும்பாலும் ஆண், அல்லது பெண் என்பது இயல்புகளாலும் உடலமைப்பாலும் தெரிந்துவிடும். மார்பு பெரிதாவது, மாதவிடாய் வருவது, ஆண்மேல் ஈர்ப்பு போன்ற அடையாளங்கள் அவள் ஒரு பெண் என்பதைத் தீர்மானித்துவிடும். தாடி மற்றும் மீசை முளைப்பது, பெண்மேல் ஈர்ப்பு, ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவது போன்ற அறிகுறிகள் அவன் ஆண் என்பதற்குச் சான்றுகள்.

இருபாலில் ஒருபால் முடிவாகிவிட்டால், மற்றொரு பாலின் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். இனி ஆணை ஆணாகவும் பெண்ணைப் பெண்ணாகவும் நடத்துவதில் சிக்கலும் இராது. அதுவரை எந்த முடிவுக்கும் வந்துவிடவோ திருமணம் செய்துவைக்கவோ கூடாது.

ஆனால், வெகுசிலருக்குப் பருவத்திறகுப் பின்பும் எந்த அறிகுறியும் தூக்கலாக வெளிப்படாமல் சமநிலையில் இருந்துவிடலாம். இத்தகைய அரவானிகளே சிக்கலானவர்கள். அரபியில் இவர்களையே ‘குன்ஸா முஷ்கில்’ என்பர். வாரிசுரிமைச் சட்டப்படி இவர்களுக்கு ஆணின் பங்கில் பாதியும் பெண்ணின் பங்கில் பாதியும் வழங்கப்படும் என்று ஷைகு இப்னு பாஸ் தீர்ப்பு அளித்துள்ளார்கள்.

கெய்ரோ அஸ்ஹர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ‘ஃபத்வா’வின்படி, ஆண் அல்லது பெண்ணின் பங்குகளில் எது குறைவாக இருக்குமோ அதை இவர்கள் பெறுவார்கள். சொத்துக்குரியவர் இறக்கும்போது அரவானியின் பால் நிலை என்ன என்பதைக் கவனத்தில் கொண்டே அரவானிக்குப் பங்கு பிரிக்கப்பட வேண்டும்.

அரவானியின் பால் நிலை தெளிவாகத் தெரிவதற்குமுன், ஆண்-பெண் இடையே வித்தியாசப்படும் விதிமுறைகளில் மிகக் கவனத்துடனேயே அரவானியை நடத்த வேண்டும். அதாவது ஆண்கள் மத்தியில் அவள் ஒரு பெண்ணாகப் பாவிக்கப்படுவாள்; பெண்கள் மத்தியில் அவன் ஓர் ஆணாகப் பாவிக்கப்படுவான். எனவே, தெளிவுக்குமுன் அந்நிய ஆணுடனோ, அந்நியப் பெண்ணுடனோ அரவானி தனித்திருக்க அனுமதியில்லை.

திருநங்கை

அரவானிகளில் இன்னொரு வகை உள்ளனர். இவர்களே எண்ணிக்கையில் அதிகம். ஆணுறுப்புடன் மட்டும் பிறக்கும் ஒரு குழந்தை, பருவ வயதை நெருங்க நெருங்க பெண்ணின் குணாதிசயங்களை அடைந்துவிடும். ஆண்மீது ஈர்ப்பு ஏற்படும். பெண்களுடன் இருப்பதையே விரும்பும். இதைத்தான் இன்று ‘திருநங்கை’ என்கின்றனர். இவர்களை ஷரீஆவின் வழக்கில் ‘முகன்னஸ்’ என்பர்.

மென்மை, பேச்சு, பார்வை, அசைவு, நடை ஆகியவற்றில் பெண்ணுக்கு ஒப்பாக இருப்பவரே ‘முகன்னஸ்’ ஆவார். ஆணுறுப்போடு பிறந்த ஒருவனுக்கு இந்த மாற்றங்கள் இயற்கையாகவே தோன்றுமானால் அவன் அரவணைக்கப்பட வேண்டியவன்; அனுதாபத்திற்குரியவன்; அது அவனுடைய குற்றமோ குறையோ ஆகாது.

ஆனால், ஆணாகப் பிறந்த சிலர் வேண்டுமேன்றே செயற்கையாகப் பெண்ணைப்போல் நடந்துகொள்வதும் ஆணுறுப்பை அகற்றிவிடுவதும் உண்டு. இதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. ஒரு நபிமொழியில் இத்தகையோரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பெண்களைப்போல் ஒப்பனை செய்யும் ஆண்களையும், ஆண்களைப்போல் ஒப்பனை செய்யும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இத்தகையவர்களை உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றிவிடுங்கள் என்றும் சொன்னார்கள். அவ்வாறு சிலரை நபியவர்கள் வெளியேற்றவும் செய்தார்கள். (புகாரீ)

இதேபோல் இன்னொரு நிகழ்ச்சி. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அரவானி ஒருவர் அமர்ந்திருந்தார். இவர், உம்மு சலமா (ரலி) அவர்களின் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமையாவார்.

அந்த அரவானி அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், “அப்துல்லாஹ்! நாளை தாயிஃப் நகரம் வெற்றிகொள்ளப்பட்டுவிட்டால், ஃகைலானின் மகளை நீர் மணமுடித்துக்கொள்வீராக! ஏனெனில், அவள் முன்பக்கம் நான்கு சதைமடிப்புகளுடனும் பின்பக்கம் நான்கு சதைமடிப்புகளுடனும் வருவாள்” என வர்ணிப்பதை நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டார்கள்.

அப்போது, “இந்த அரவானிகள், (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க) வேண்டாம்!” என்று சொன்னார்கள். (புகாரீ)

ஆணாகப் பிறந்த இந்த அரவானி (முகன்னஸ்) தன்னைப் பெண் போன்று ஒப்பனை செய்துகொண்டிருந்ததால் தம்முடன் அமர உம்மு சலமா அனுமதித்திருந்தார்கள். ஆனால், ஆணின் அறிகுறியும் பெண்மீதான ஈர்ப்பும் அவர் பேச்சில் வெளிப்பட்டதால் இத்தகையவர்கள் பெண்களிடம் வந்துபோவதற்கு நபியவர்கள் தடை விதித்தார்கள். ஆக, இவர் தன்னை வேண்டுமென்றே பெண்ணாக வரித்துக்கொண்டவர் என்று தெரிகிறது.

உண்மையான திருநங்கைகள்

ஆனால், ஆணுறுப்புடன் பிறந்துவிட்டுப் பின்னர் இயல்பாகவே பெண்ணாக மாறிவிடும் திருநங்கைகளைப் பற்றியே நாம் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும். காரணம் இவர்கள்தான் மக்களோடு மக்களாக வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 30 ஆயிரம் திருநங்களைகள் உள்ளதாக ஒரு கணக்கு உண்டு. திருநங்கைகளை 163 நாடுகள் அங்கீகரித்துள்ளனவாம்!

பிறப்புறுப்பால் ஆண் என்று கருதப்பட்டு, பின்னர் தன்னையும் அறியாமலேயே பெண்ணாக உணர்ந்து, பெண்ணாகவே வாழ முற்படுவோர்தான் உண்மையான திருநங்கைகள். இந்த மாற்றம் இயற்கையாகவே ஏற்படுகிறது என்றும், அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் உண்டு என்றும் சிலர் கூறுவர்.

கருப்பையில் கரு உருவாகும்போது ‘குரோமோசோம்கள்’ எனப்படும் நிறமூர்த்தங்கள் அல்லது இனக்கீற்றுகளே சிசுவின் பாலினத்தைத் தீர்மானிக்கின்றன. குரோமோசோம்கள் ஆணில் XYயும் பெண்ணில் XXம் இருக்கும். பெண்ணின் X உடன் ஆணின் Y சேர்ந்தால் (XY) சிசு ஆணாகப் பிறக்கும். பெண்ணின் X உடன் ஆணின் X சேர்ந்தால் (XX) சிசு பெண்ணாகப் பிறக்கும் என்பது நாமெல்லாம் அறிந்த அறிவியல் உண்மை.

ஆனால், மூன்றாவது ஒரு சேர்க்கையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. XXY அல்லது XYY சேர்ந்தால், அது மூன்றாவது பாலினமாகப் பிறக்கிறதாம்! முந்தியது பெண்ணுறுப்புடன் பிறந்து ஆணாக மாற வல்லது; பிந்தியது ஆணுறுப்புடன் பிறந்து பெண்ணாக மாற வல்லது. இந்த இரண்டாவது வகையினரே திருநங்கைள் என்பது கணிப்பு.

ஆணுறுப்புடன் பிறக்கும் சிறுவன் ஹார்மோன்கள் சுரக்கும் பருவத்தை, அல்லது 13 வயதை அடையும்போது, உடலில் பெண்மைக்கான குணாதிசயங்களைத் தன்னை அறியாமலேயே உணர்வான். பெண்களைப்போல் பேசுவது, பெண்களைப்போல் நடப்பது, பெண்களுக்கே உரிய ஆசைகள், எண்ணங்கள் மனதிலே அரும்புவது ஆகிய மாற்றங்கள் ஏற்படும். அப்போதுதான் அச்சிறுவனுக்குப் பாலியல் தடுமாற்றம் ஏற்படும். தான் ஆணா? அல்லது பெண்ணா என்று குழப்பம் அடைவான்.

நாள் செல்லச்செல்ல தன்னை முழுவதுமாகப் பெண்ணாகவே தீர்மானித்து, பெண்ணுக்குரிய தன்மைகளோடே நடந்துகொள்வான். பார்ப்பவர்கள் நையாண்டி செய்ய, அவனோ தனக்குள் புழுங்கிக்கொண்டிருப்பான். பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், இவன் போன்ற திருநங்கைகள் மட்டுமே!

உண்மையில் இது ஒரு நோய்; ஊனம் என்றே கூறுகிறார்கள். மற்ற நோயாளிகளையும் மாற்றுத் திறனாளிகளையும் எவ்வாறு அணுகுகிறோமோ அவ்வாறே இந்த திருநங்கைகளையும் அணுக வேண்டும்; பரிவுகாட்ட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருநங்கைகள் பெண்களா?

ஆணுறுப்புடன் பிறந்தாலும், அது செயல்பட வேண்டிய பருவ வயது வரும்போது, அது முற்றாகச் செயலிழந்துவிட்டால், வெறும் சிறுநீர் வெளியேறும் குழாயாக மட்டுமே கருதப்பட வேண்டும்; பாலின உறுப்பாகக் கருதப்படாது. எனவே, கூடுதலான கட்டி ஒன்று உடலில் இருந்தால், அதை அறுவை சிகிச்சைமூலம் அகற்றுவதைப் போன்று அகற்றிவிடலாம். அத்துடன் மறைந்துள்ள பெண்ணுறுப்பை அறுவை சிகிச்சைமூலம் வெளிவரச் செய்யலாம்.

மருத்துவரின் ஆலோசனைப்படியும் அச்சிறுவனின் விருப்பப்படியும் 18 வயதிற்குமேல் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டால், அச்சிறுவன் திருநங்கையாக மாறுவான். இது உலக நாடுகளின் முடிவாக இருந்துவருகிறது. மருத்துவ ஆய்வும் இதை உறுதி செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

மார்க்கத் தீர்ப்பு என்ன என்று ஆராய்ந்து தேடியதில் கிடைத்த தகவல் இதோ:

எகிப்து நாட்டின் தாருல் இஃப்தா அளித்துள்ள ஃபத்வாவை அப்படியே கீழே தருகிறோம்:

  • ஆணுறுப்புடன் பிறந்த சிறுவன் பருவம் அடைகின்றபோது ஹார்மோன் மாற்றத்தின் விளைவால் பெண்ணின் குணாதிசயங்களை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதை இயன்றவரை மாற்ற முயலுமாறு சொல்ல வேண்டும்.

  • மாற்றிக்கொள்ளவே முடியாத அளவுக்கு இயல்பாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது தீர்க்கமாகத் தெரியும்பட்சத்தில், நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசனை கலந்து அதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  • மருத்துவப் பரிசோதனையில் அவை இயல்பான மாற்றங்கள்தான் என்பது முடிவாகும்போது, அது நோய் அல்லது ஊனம் என்பது இறுதியாகிவிடும். அப்போது பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.
(அல்மக்தபத்துஷ் ஷாமிலா)

ஐந்து வகை

ஆக, ‘அலி’களின் எல்லா வகையினருக்கான மார்க்கத் தீர்ப்பும் இந்த ஆய்வுமூலம் கிடைக்கிறது. அதன் சுருக்கம் வருமாறு:

  1. ஆணுறுப்புடனும் பெண்ணுறுப்புடனும் பிறந்த ஒரு மனிதருக்கு, பருவத்திற்குப்பின் எந்த உறுப்பு செயல்படுகிறதோ அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்வோம். மற்றோர் உறுப்பை அறுவை சிகிச்சைமூலம் அகற்றிவிட வேண்டும். இதில், ஆண் அல்லது பெண் என்ற ஓர் இனமே முடிவாக அமையும்.

  2. இரு உறுப்புகளில் எதுவும் பருவ வயதை அடைந்த பின்பும் செயல்பாட்டுக்கு வராத நிலையில், அல்லது இரண்டுமே செயல்படுகின்ற நிலையில் உள்ள ‘சிக்கலான அலி’ (குன்ஸா முஷ்கில்). இவர்கள் ஒரு விழுக்காடு அளவிற்குக்கூட இருக்கமாட்டார்கள். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரு உறுப்புகளில் ஒன்றை மட்டும் அகற்றிவிட்டு, மற்றொன்றை செயல்பாட்டிற்குக் கொண்டுவர இயன்றால், அவ்வாறு செய்யலாம். இதிலும் ஆண், அல்லது பெண் என்ற ஓரினமே முடிவாக அமையும்.

  3. ஆணோ, பெண்ணோ வேண்டுமென்றே பாலியலை மாற்றிக்கொள்வது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

  4. ஆணுறுப்புடன் பிறந்த ஒருவன், உண்மையிலேயே பெண்பாலுக்குரிய மாற்றங்களைக் காணும்போது ஆணுறுப்பை அகற்றிவிட்டுப் பெண்ணுறுப்பை வெளிவரச் செய்யலாம். இந்த திருநங்கை பெண்ணாகவே கருதப்படுவாள்.

  5. பெண்ணுறுப்புடன் பிறந்த ஒருத்தி, பருவத்திற்குப்பின் ஆண்பாலின் தன்மைகளை உண்மையிலேயே கண்டால், பெண்ணுறுப்பை அகற்றிவிட்டு ஆணுறுப்பை வெளிப்படுத்திக்கொள்ளலாம். இவன் ஆணாகவே கருதப்படுவான்.
_______________________

Friday, December 06, 2013

சர்வதேசப் பார்வை



‘கத்னா’ பற்றிய ஃபிரான்ஸ் செய்தியும்
நம் மறுப்புக் கட்டுரையும்

ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றம் முஸ்லிம்களும் யூதர்களும் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் ‘கத்னா’ எனும் ‘சுன்னத்’ நடைமுறைக்குத் தடை விதித்து அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பாவில் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிறது அத்தீர்மானம்.

தீவிர வலதுசாரிக் கட்சிகள்தான் இத்தீர்மானம் நிறைவேறக் காரணம். தீர்மானத்திற்கு ஃபிரான்ஸ் இஸ்லாமிய மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆய்வே செய்யாமல் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும் இது என்று மன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் சகரீ குறிப்பிட்டார்.

“பெண் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வதால் ஏற்படும் பாதிப்புகளைக் காரணம் காட்டி, ஆண் குழந்தைகளுக்கும் தடை விதிப்பது பொருந்தாத செயலாகும்” என்றும் அவர் சாடினார்.

ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றம், ‘கத்னா’ என்பது ஆண்களைக் கோரப்படுத்தும் செயலாகும். இதனால் ஆண்களின் இயற்கையான உரிமை –அதாவது பாலியல் சுகம்- மறுக்கப்படுகிறது என்று கருதுகிறதாம்!

‘கத்னா’வைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் இச்சட்டத்திற்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் பதிவாயின. 15 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. “குழந்தைகளின் உடலுக்குச் சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் ‘கத்னா’வைக் குற்றமாக அறிவித்து, தண்டனை வழங்க உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றக் கூட்டம் கேட்டுக்கொண்டது.

ஆனால், “இப்போது இப்பிரச்சினையைக் கிளப்பவேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? யூத மற்றும் முஸ்லிம் சமூக மக்கள் தொன்றுதொட்டுச் செய்துவரும் ஒரு சமூகப் பழக்கத்தைத் திடீரெனக் குற்றமாக அறிவிப்பது, புதிராக இருக்கிறது” என இஸ்லாமிய மன்ற உறுப்பினர் கவலை தெரிவித்துள்ளார். (பின்வரும் கட்டுரை காண்க:)

சுகாதாரத்திற்கு ஒரு ‘சுன்னத்து’


- மௌலவி, அ.மு. கான் பாகவி

காலம் காலமாகக் கலாசாரங்களில் இருந்துவரும் சில பழக்கங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டிவருகின்றன. அறிவியல் காரணங்களை ஆராய்ந்து இவை உருவாக்கப்படவில்லை. பிற்காலத்தில்தான் இவற்றுக்கு அறிவியல் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றன.

இவற்றுள் ஒன்றுதான் ‘சுன்னத்து’ எனப்படும் விருத்தசேதனம் (Circumcision) எனும் பழக்கம். ஆண் குழந்தை பிறந்தவுடன், அல்லது பிறந்து சிறிது காலம் கழித்து ஆண்குறியின் முன்தோலை அகற்றுவதே ‘சுன்னத்து’ எனப்படுகிறது.

எகிப்தியரிடமும் யூதர்களிடமும் இப்பழக்கம் நீண்டகாலமாக இருந்துவருகிறது. கட்டாயம் கிடையாது என்றாலும் கிறித்தவர்கள் சிலரிடமும் இப்பழக்கம் உண்டு. அமெரிக்காவில் 8 முதல் 61 விழுக்காடு குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யப்படுகிறது. முஸ்லிம்கள் கட்டாயமாக இதைக் கடைப்பிடித்துவருகின்றனர்.

நாவிதரைக் கொண்டு முன்தோல் அகற்றும் முறை இன்றும் நடைமுறையில் இருந்தாலும் அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்படுவதே அதிகம். குழந்தைப் பருவத்தில் ‘சுன்னத்து’ செய்வதுதான் எளிதானது; பிறவி உறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வல்லது.

இதிலுள்ள மருத்துவப் பலன்களை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஆண்குறி புற்றுநோயை இது தடுக்கும் என்று கூறுகின்ற ஆய்வாளர்கள், சுன்னத்து செய்யாத ஆண்களுக்குச் சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.

அமெரிக்க மருத்துவ இதழ்களில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் ‘சுன்னத்து’ தொடர்பாக வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் Family Physician இதழில் 1990 மார்ச்சில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. வாஷிங்டன் இராணுவ மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைவர் பேராசிரியர் Wisewell இக்கட்டுரையை எழுதியிருந்தார். “சுன்னத்துச் செய்யாத குழந்தைகள் சிறுநீர் நோய்த்தொற்றுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்விற்கு சுன்னத்து முறை வழிவகுக்கிறது –என 1988இல் கலிபோர்னியா மருத்துவக் கழக உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை தெளிவுபடுத்தியது. சுன்னத்துச் செய்வதால் குழந்தைகளின் பாலுறுப்பு சுகாதாரம் ஆயுள் முழுக்கப் பாதுகாக்கப்படுகிறது; முன்தோலில் நோய்க்கிருமிகள் சேர்வதை இது தடுக்கிறது – என்று இங்கிலாந்தின் பிரபல குழந்தைகள் மருத்துவர் டாக்டர் ஷவீன் கூறினார். ‘The New England Journal of Medicine’ எனும் இதழில் இதனை அவர் 1990ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.

பிரிட்டனின் மருத்துவ இதழான B.M.J. (1987) வெளியிட்ட ஆய்வொன்று, “யூதர்களிடமும் முஸ்லிம் நாடுகளிலும் பாலுறுப்பு புற்றுநோய் அரிதாகவே உள்ளது” என்று தெரிவித்தது.

சுன்னத்துச் செய்வதால் பல்வேறு பால்வினை நோய்களிலிருந்து தப்பலாம். ஆஸ்திரேலியாவில் நடந்த புதிய ஆய்வொன்று இதை உறுதி செய்கிறது. பரம்பரை தோல்நோய், கருப்பை நோய், மேகவெட்டை, மேகப்புண் ஆகிய பால்வினை நோய்கள் சுன்னத்துச் செய்யாதவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு. இதிலிருந்து சுன்னத்துச் செய்யாத ஆண்கள் மட்டுமன்றி, அவர்கள் உறவுகொள்ளும் பெண்களும் (கருப்பை நோய்மூலம்) பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிகிறது.


முஸ்லிம்கள்மீதான அமெரிக்காவின் பொய்ப்பிரசாரமும் நம் மறுப்புக் கட்டுரையும்


1980 முதல் இராக், ஆப்கானிஸ்தான், போஸ்னியா முதலான நாடுகளில் 4 மில்லியனுக்கும் (40 லட்சம்) அதிகமான முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் பெரும்பாலானவை பன்னாட்டுப் படைகளான நேட்டோவின் அடாவடித் தாக்குதலால் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

இக்கொலைகள் அனைத்தும் நியாயமானவைதான் என மேற்குலக மக்களை நம்பவைத்துமுள்ளனர் என்பதுதான் கொடுமை! இவ்வாறு நம்ப வைப்பதற்கு அமெரிக்கா கையாண்ட மிகப்பெரும் சூழ்ச்சிதான், முஸ்லிம்கள்மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு. இந்த நாடகத்தை அமெரிக்கா திட்டமிட்டே தொடர்ந்து அரங்கேற்றிவருகிறது.

மத்திய கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்றும் உலகில் நடக்கின்ற கொலைகளுக்கு அவர்களே காரணம் என்றும் அமெரிக்கா பிரசாரம் செய்யும்; மேற்குலகை மட்டுமன்றி முழு உலகத்தையே நம்பவைக்கும். பின்னாலேயே பயங்கரவாதிகளை ஒடுக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம் நாடுகளில் புகுந்து குண்டுமழை பொழிந்து படுகொலைகள் செய்யும். இப்படித்தான் 1980 தொடங்கி 40 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை நாம் சொல்லவில்லை. அமெரிக்காவின் நியூஸ் இணையதளமான NBC அம்பலப்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள்மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டை மேற்குலகு மக்கள், குறிப்பாக அமெரிக்கர்கள் நம்புவதற்குக் காரணம் என்ன என்பதை என்.பி.சி. ஆய்வு செய்தது. ஆய்வு முடிவை அண்மையில் அது வெளியிட்டது.

முஸ்லிம்கள்மீது அமெரிக்கா சுமத்திய பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளே, கடந்த மூன்று தசாப்தங்களாகப் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணம் என என்.பி.சி. இணையதளத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் மேற்குலகப் பயங்கரவாதிகளும் யூதர்களும் கிளப்பிவிடும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா என்பதைப் பின்வரும் எமது கட்டுரை புலப்படுத்தும்!


சமய நல்லிணக்கம்


- மௌலவி, அ.மு. கான் பாகவி

ஒரு முஸ்லிம் ஓரிறைக் கொள்கையில் எல்லாச் சூழ்நிலையிலும் தடுமாற்றமின்றி உறுதியோடும் தளராத பிடிப்போடும் இருக்க வேண்டும். அதில் சமரசத்திற்கு இடமில்லை. அப்போதுதான், தாம் கொண்ட கொள்கையில் அவர் உண்மையாளராக விளங்க முடியும். இது, அவரது சமயக் கோட்பாடு; நம்பிக்கைச் சுதந்திரம்.

அதே நேரத்தில், பிற சமயத்தின் மீதோ சமூகத்தின் மீதோ பகைமை பாராட்டுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பிற மதத்தாருடன் நல்லிணக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றே அது கட்டளையிடுகிறது. இது முஸ்லிம் நாடுகளுக்கும் பொருந்தும்; மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.

முதலில், பிற சமயத்தாரின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவதற்குத் திருக்குர்ஆன் தடை விதிக்கிறது. மத உணர்வைப் புண்படுத்துவது நல்லிணத்தைக் கெடுத்துவிடும் என்பதே காரணம். “உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு” என்று கூறிவிடுமாறு இறைத்தூதருக்கு இறைவன் ஆணையிடுகின்றான். (அல்குர்ஆன், 109:6)

மற்றொரு வசனத்தில், “உங்களிடையே நீதியோடு நடந்துகொள்ளுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வே எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு. (இனி) எங்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தர்க்கமும் வேண்டாம்” என்று சொல்லிவிடுமாறு நபிக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். (42:15)

எல்லாருக்கும் கடவுள் ஒன்றே! பிற மதத்தார் என்பதற்காக அநீதியிழைத்தல் கூடாது. அவரவர் செயல் அவரவருக்கு. நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் சொற்போர் நடத்திக்கொண்டு இருக்க வேண்டாம் –என இவ்வசனம் தெளிவாகவே அறிவிக்கிறது.

பிற சமயத்தார் வழிபடும் தெய்வங்களை வசைபாடக் கூடாது என்கிறது திருக்குர்ஆன். “அல்லாஹ்வையன்றி (வேறு யாரைத் தெய்வங்களாக) அவர்கள் அழைக்கிறார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். (அவ்வாறு ஏசினால்,) அறிவின்றி அவர்களும் எல்லைகடந்து அல்லாஹ்வை ஏசுவார்கள். (6:108)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் யூதர் ஒருவர் மூசா எனப்படும் மோசஸைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். உணர்ச்சிவசப்பட்ட ஒரு முஸ்லிம் யூதரின் கன்னத்தில் அறைந்துவிட்டார். உடனே நபிகளாரிடம் சென்று யூதர் புகார் செய்தார். அந்த முஸ்லிமை அழைத்து விசாரித்த நபிகளார் (அவரைக் கண்டித்ததுடன்), இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்” எனக் கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரீ)

அவ்வாறுதான், யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது, மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகவும் சமய நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்பதாகவும் அமைந்துவிடும். எனவே, கட்டாய மதமாற்றம் கூடாது எனத் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது. “இந்த மார்க்கத்தில் (இணையும் விஷயத்தில்) எந்த வற்புறுத்தலும் கிடையாது. தவறான வழியிலிருந்து நேரான வழி (இன்னதெனத்) தெளிவாகிவிட்டது” என்கிறது குர்ஆன். (2:256)

மதீனாவில் முஸ்லிம்கள் பலத்தோடு வாழ்ந்த காலகட்டத்தில் அருளப்பெற்ற ஒரு வசனம் என்ன சொல்கிறது பாருங்கள்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாத, உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நன்மை செய்வதையும், அவர்களுடன் நீதியோடு நடந்துகொள்வதையும் அல்லாஹ் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (60:8)

இதையெல்லாம்விட, எதிரிகளையும் மன்னிக்க வேண்டும்; முறைதவறி நடந்துகொள்பவரிடமும் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே நபிகளாரின் நல்வழி ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார்கள். கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார் அந்த மனிதர். நபிகளாரைக் கடுமையாகப் பேசி, முறைதவறி நடந்துகொண்டார். தோழர்கள் அவரைத் தாக்க முற்பட்டனர். அப்போது நபிகளார், “அவரை விட்டுவிடுங்கள்; கொடுத்தவக்குப் பேச உரிமை உண்டு” என்றார்கள். (நூல்: புகாரீ)

நபிகளார் எதிரிகளையே மதித்த நிகழ்ச்சியும் உண்டு. ஒரு யூதரின் பிரேதம் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அமர்ந்திருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே எழுந்து நின்றார்கள். இதைக் கண்ணுற்ற தோழர்கள், “இது ஒரு யூதரின் பிரேதமாயிற்றே!” என்றனர். அப்போது நபிகளார், “அதுவும் மனித உயிரல்லவா?” என்று திருப்பிக் கேட்டார்கள். (புகாரீ)

முஸ்லிம் நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் கட்டளையாகும். அதை மீறுவோர் இறைவனின் தண்டனைக்கு ஆளாவர்.

“(முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையை யார் கொலை செய்கிறாரோ அவர் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரீ)

கனடாவில் முதலாவது முஸ்லிம் மேயர் மீண்டும் தேர்வு


கனடாவில் நடந்த கல்காரி மாநரகத் தலைவர் தேர்தலில் தற்போதைய தலைவரும் முதலாவது முஸ்லிம் மேயருமான நாஹித் நைன்ஸி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வடஅமெரிக்காவில் உள்ள இந்த மாநகரின் தலைவராக மூன்றாண்டுகளுக்கு முன்பு நாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்; ஒருவார காலம் கல்காரி நகரையே மூடிவிட்ட கனமழையின்போது நகரிலேயே தங்கியிருந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டவர்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியான நாஹித், மாகினிஸீ அண்ட் கோ நிறுவனத்தின் ஆலோசகராகப் பணியாற்றினார். 1.1 பில்லியன் மக்கள் வாழும் இந்நகரின் பெரும்பகுதி வெள்ளத்தால் மூழ்கிக்கிடந்த நேரத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு தேசிய அளவில் நற்பெயர் பெற்றார்.

மாநகர மேயருக்கான தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர். அவர்களில் நைன்ஸி 74 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் மாநில முன்னாள் அமைச்சரும் ஒருவராவார். அறுதிப் பெரும்பான்மை பெற்று வென்றதால் அவர் சுதந்திரமாகச் செயல்படலாம் என ‘கல்காரி ஹயர்லேட்’ ஏடு தெரிவிக்கிறது.

ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருக்க வேண்டும். பதவி என்பது ஓர் அமானிதம். அமானிதம் காப்பது மார்க்கக் கடமையாகும். கட்டுரையைப் படியுங்கள்!

அமானிதம் காப்போம்

- மௌலவி, கான் பாகவி


‘அமானத்’ என்ற அரபுச் சொல்லே தமிழ் முஸ்லிம்களின் வழக்கில் ‘அமானிதம்’ என்றாயிற்று. கையடைப் பொருள், நம்பகத் தன்மை, நாணயம், பொறுப்பு, அறக்கட்டளை முதலான பொருள்கள் இதற்கு உண்டு. ‘அமானிதப் பணத்தை மோசடி செய்யாதே’ என்றால், ‘நம்பி ஒப்படைக்கப்பட்ட பணத்தைச் சுருட்டாதே’ என்று பொருள். ‘பள்ளிவாசல் பொறுப்பு ஓர் அமானிதம்’ என்று கூறுவதுமுண்டு. சில தமிழ் அகராதிகளில் ’அமானத்து’ என்ற சொல் காணப்படுகிறது.

ஒருவர் உங்களிடம் நம்பி ஒப்படைத்த, கொடுத்துவைத்த பொருளைத் திரும்பிவந்து கேட்கும்போது, அச்சுக்குலையாமல் அப்படியே திருப்பித் தருவதுதான் நாணயம்; நேர்மை. அவர் கொடுத்ததற்குச் சாட்சியோ எழுத்துப்பூர்வமான சான்றோ இல்லாதிருக்கலாம். மலைபோல் உங்களை நம்பியதாலேயே உங்களிடம் வலியவந்து கொடுத்துவிட்டுப் போனார். அவரை ஏமாற்றுவது ஓர் இறைநம்பிக்கையாளரின் செயலாகாது; மாறாக, அது நம்பிக்கைத் துரோகம்; நயவஞ்சகம்.

இதனாலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பொய், வாக்குத் தவறுதல், நம்பியவருக்குத் துரோகம் செய்தல் ஆகிய மூன்றும் நயவஞ்சகனின் குணங்களாகும்” என்று தெரிவித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

“கையடைப் பொருளை, உன்னை நம்பிக் கொடுத்தவரிடமே திரும்ப ஒப்படைத்துவிடு! உனக்குத் துரோகம் செய்தவருக்குக்கூட நீ துரோகம் செய்யாதே!” என்பதும் நபிமொழிதான். (ஜாமிஉத் திர்மிதீ)

நிதி நிறுவனங்களிலும் சீட்டுக் கம்பெனிகளிலும் பணத்தைக் கட்டி ஏமாந்துபோனோர் எத்தனையோ பேர்! வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சொந்த வீட்டுக் கனவில், அல்லது மகளின் திருமணக் கனவில் இருந்த அவர்களில் சிலர் ஏமாற்றப்பட்டதை அறிந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட துயரமும் நாம் கண்ட காட்சிதான்.

நம்பகத் தன்மையும் நாணயமும் இறைநம்பிக்கையின் அடையாளங்கள் எனலாம். நம்பியவனை ஏமாற்றிவிட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றிருந்தாலும், இறைவன் என்னைத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான இறையுணர்வு; அதுதான் இறையாற்றலை உண்மையிலேயே புரிந்துகொண்டதன் விளைவு.

வணிகத்திலும் அமானிதம் உண்டு. வணிகர்கள் அதைக் காக்க வேண்டும். கலப்படமில்லாத பொருளையே இவர் தருவார்; சரியான எடைபோட்டே கொடுப்பார்; நியாயமான விலையே வைப்பார் என்று நம்பித்தான் வாடிக்கையாளர் கடைக்கு வருகிறார். அந்த நம்பிக்கைக்கு உலைவைக்கும் வகையில் கடைக்காரர் நடந்துகொண்டு, நுகர்வோரை ஏமாற்றினால் அவரும் ஒரு நம்பிக்கைத் துரோகியே!

“உண்மையே பேசி, பொருளின் குறையை மறைக்காமல் நடந்துகொண்டால் வணிகத்தில் வளம் கிடைக்கும். பொய்பேசி, குறையை மறைத்தால் அந்த வணிகத்தில் ‘பரக்கத்’ (வளர்ச்சி) இருக்காது” என்றார்கள் நபிகளார். (புகாரீ)

“வாய்மையோடும் நம்பகத் தன்மையோடும் நடந்துகொள்ளும் வணிகர், (மறுமையில்) இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள் (ஸித்தீகீன்), உயிர்த் தியாகிகள் (ஷுஹதா) ஆகியோருடன் இருப்பார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ)

அவ்வாறே, ஒருவர் ஏற்கும் பதவி, பொறுப்பு, நிர்வாகம், பணி... இவையெல்லாம்கூட, அவரை நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்கள்தான். அந்த அமானிதத்தை அவர் முறையோடு காக்க வேண்டும். அதற்கான ஆற்றல் இல்லையென்றாலோ, இருந்தும் மனமில்லை என்றாலோ அப்பொறுப்பை ஏற்கவே கூடாது. ஏற்றபின் கடமையாற்றாது பொறுப்பை வீணாக்குவதோ தவறாகப் பயன்படுத்துவதோ நம்பிக்கைத் துரோகமாகும்.

ஆனால், எங்கும் இந்தத் துரோகம்தான் இன்று நடக்கிறது. இது கலியுகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவர் நபிகளாரிடம் வந்து, யுகமுடிவு எப்போது? என்று வினவினார். மக்கள்முன் உரையாற்றிக்கொண்டிருந்த நபிகளார் தமது உரையை முடித்தபின், “நம்பகத்தன்மை (அமானிதம்) பாழ்படுத்தப்பட்டால் யுகமுடிவை நீர் எதிர்பார்க்கலாம்” என்றார்கள். அம்மனிதரோ, “அது பாழ்படுத்தப்படுவது எவ்வாறு?” என்று வினா தொடுத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமையை எதிர்பாரும்” என்றார்கள். (புகாரீ)

பொறுப்பில் உள்ளவர்கள், மக்களுக்குப் பதில் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்! படைத்தவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே! அவனை ஏமாற்ற முடியாதே! அவன் தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாதே! எனவே, அமானிதம் காப்பது அனைவரின் சமய, சமூகக் கடமையாகும்.



பிரிட்டனில் கத்தோலிக்க தேவாலயம் ஏலத்தில்

பிரிட்டனில் ஸ்டோக் ஓன்டிரைன்ட் பகுதியில் தேவாலயம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. கத்தோலிக்க கிறித்தவர்களின் தேவாலயமான இதில் வழிபாடு செய்வதற்கு ஆளில்லாத நிலையில் அதன் வாயில் மூடப்பட்டுவிட்டது. அருகில் வேறு தேவாலயங்கள் தோன்றிவிட்டதும் ஒரு காரணம்.

தேவாலயத்தை விலைக்கு வாங்கப்போவது யார் தெரியுமா? பிரிட்டன் முஸ்லிம்கள்தான். ஏலம் கேட்டவர்களிலேயே முஸ்லிம்கள்தான் அதிகத் தொகைக்குக் கேட்டிருக்கிறார்களாம்! அதை வாங்கப்போகிற முஸ்லிம்கள் யார் என்பது இன்னும் இரகசியமாகவே உள்ளதாம்!

(அல்முஜ்தமா)