உங்களுடன் நான் மனம் விட்டு... - 10
இலக்கியத்தில் பேச்சுக்கு முக்கியத்துவம் உண்டு. உரையில்லாத கலையோ இலக்கியமோ இருக்க வாய்ப்பில்லை. ஆயிரம்தான் உடல்மொழி பேசினாலும் வாய்மொழி இன்றி எக்கலையும் நிறைவடையாது. ‘பேசும் ஜீவன்’ (ஹயவான் நாதிக்) என்பதுதான், மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் தனிச்சிறப்பாகும்.அதாவது நிலைமையைப் புரிந்து பேசுவது என்பதே இங்கு பொருள். இதற்குப் பகுத்தறிவு வேண்டும். எனவே, ‘பகுத்தறிவுள்ள உயிரினம்’ என்றுகூட மனிதனைச் சொல்லலாம்.
பேச்சின் அருமை, வாய்பேச முடியாதவர்களிடம் கேட்டால் தெரியும். சாடையால் புரியவைக்க முடிகிறது என்றாலும் மனத்தில் உள்ளதைத் துல்லியமாகத் தெரிவிக்க‘நாமொழி’தான் சிறந்த கருவி என்பதை மறுக்கவியலாது. நா சுவையைச் சொல்லிக்கொடுப்பதைப் போன்றே பாடமும் சொல்லித்தரும். இதனால்தான், “பல் போனால் சொல்போகும்” என்பார்கள். சொற்களை நா உச்சரிக்க, பல்லும் உதவுகிறது என்பதாலா? அல்லது பல் போனால், அதாவது முதுமை முற்றிவிட்டால் பேச்சு போய்விடும் என்பதாலா?எப்படியோ முதுமையின் தள்ளாட்டங்களில் குழறலும் ஒன்று. முதியவர் தானும் குழறி, பிறரையும் குழப்பும்போது பேச்சின் இன்றியமையாமை புரியும்.
சிந்தனை முதலில். இது மூளையின் வேலை. இரண்டாவது அச்சிந்தனைக்குச் சொல்வடிவம். இது நாவின் பணி. மூன்றாவது செயல் வடிவம். இது, உறுப்புகளின் ஆற்றல். ‘கலிமா’கூட அப்படித்தான். உள்ளத்தால் உறுதி; வாயால் விண்ணப்பம்; உழைப்பால் உரைகல். இவற்றில் ஒன்று பழுதடைந்தாலும் ஈமானும பழுதடையும். ஆக,ஒருவரின்பேச்சு அவரது சிந்தனையின் வெளிப்பாடு. நற்சிந்தனை இருந்தால் நற்சொல்லும் இருக்கும். எண்ணம் தவறான வழியில் பிறந்தது என்றால், சத்தமும் அப்படியே இருக்கும்.
சாதாரணமாக உறவுகளுடன் உரையாடுவதும் நண்பர்களுடன் நகைப்பதும் கள்வருடன் கதைப்பதும் –இதுவெல்லாம் வேறு. ஒரு நூறு பேருக்கு முன்னால் எழுந்து நின்று, ஒரு மையக் கருவை ஒட்டி, பிசகாமல் உரையாற்றி, விஷயத்தைப் புரியவைக்கும் பேச்சாற்றல் என்பது வேறு. அதிலும் கேட்போரின் மனதைத் தொட்டு,கண்ணைக் கசியவைத்து, கடந்த காலத்தைச் சிந்திக்கத் தூண்டி, நிகழ்காலத்தைத் திருத்துகின்ற சொல்லாற்றல் இருக்கிறதே அது மிகப் பெரிய கொடையாகும்.
சில உரைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றும். சுற்றுப்புறங்களை மறந்து, நேரம் போவதே தெரியாமல், இமை கொட்டாமல், காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்கவைக்கும் ‘கட்டிப்போடுகின்ற’ பேச்சு உண்மையிலேயே வரம்தான். இதனாலேயே, “பேச்சில் சூனியம் (ஈர்ப்பு) உண்டு” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (புகாரீ)
சிலருடைய பேச்சில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். வயிறு வலிக்கச் சிரித்துவிட்டு மக்கள் போய்விடுவார்கள். சிலர் அடுக்குமொழியில் எதுகைமோனையோடு அசத்துவார்கள். காதுக்கு இனிக்கும்; அதிலும் வெகுசிலருக்கு. சிலரது உரையில் மொழி வளம் இருக்கும்; தமிழ் விளையாடும். சிலர் உப்புசப்பு இல்லாத கதைகளைச் சொல்லி நேரத்தை நிரப்புவார்கள். அக்கதைகளில் என்ன பாடம் என்பதைக்கூட சுட்டிக்காட்டுவதில்லை. இவர்கள் காதைக் கவரலாம். மிகச் சிலரே கருத்தைக் கவர்வார்கள். தத்துவங்கள், எதார்த்தங்கள், நடப்புகள், ஆழ்ந்த கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் ஆகியவை அவர்களது உரையில் கிடைக்கும். ஆனால், இத்தகைய உரைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
மார்க்க அறிஞர்களான உலமாக்களுக்குப் பேச்சு என்பது உயிர்மூச்சு. அவர்களின் பணியே எடுத்துச்சொல்லிப் புரியவைப்பதுதான். இதற்குப் பேச்சாற்றல்தான் அடிப்படை. நிறைய கற்று, மாணவர்களுக்குக் கற்பிக்கவோ மக்களுக்குப் பிரசாரம் செய்யவோ தெரியாவிட்டால், கற்ற கல்வி குடத்திலிட்ட விளக்காக அல்லவா போய்விடும்?
“என்னிடமிருந்து ஒரு (சிறு) தகவலானாலும் (அதைப் பிறருக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்” என்பது நபிமொழி. (புகாரீ)
இந்தக் கட்டளை, மற்றெவரையும்விட ஆலிம்களுக்கு மிகவும் பொருந்தும். அரபி மத்ரசாக்களில் சொற்பயிற்சி மன்றங்கள் வழக்கத்தில் வருவதற்குமுன்பு வெளிவந்த முந்தைய உலமாக்கள் சொந்த முயற்சியில் பேசக் கற்றுக்கொண்டவர்கள்தான். முறையாகத் தமிழ் கற்றவர்களோ பயிற்சிபெற்றவர்களோ அல்லர். அப்படியிருந்தும் அவர்களில் சிலரது உரை, கேட்போரை மெய்சிலிர்க்கவைக்கும்; கண்ணீர் வழிந்தோடும்; தேம்பி அழுவர் மக்கள்.
வேறுசிலரோ தூய தமிழில் தேனருவிபோல் சொற்களைக் கொட்டுவார்கள். கேட்க இனிமையாக இருக்கும். பெரியகுளம் மௌலானா, ஷரபுத்தீன் பாகவி அவர்கள், திருக்குர்ஆனை இனிய குரலில் ஓதும் நல்ல காரீ; அதே நேரத்தில், சுவையான தமிழில் இனிக்கும் குரலில் பேசும் சொற்பொழிவாளர். அவ்வாறே சித்தையன்கோட்டை ‘ஸஃகீர் ஹள்ரத்’ எனப்படும் மௌலானா, முஹம்மது ஹுசைன் பாகவி அவர்கள் ஆற்றும் செந்தமிழ் உரை உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் ஆற்றலுடையது. கடையநல்லூர்மௌலானா, யூசுஃப் அன்ஸாரி மிஸ்பாஹி அவர்களின் ஆற்றொழுக்கான பேச்சு மறக்க முடியாத ஒன்று.
இளம்வயதிலேயே மறைந்துவிட்ட மௌலவி P.S. அலாவுத்தீன் மன்பஈ, மௌலானா கலந்தர் மஸ்தான் மஹ்ளரி, ஆவூர் மௌலவி அப்துஷ் ஷகூர் மன்பஈ, கீழக்கரை கதீப் மௌலவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ போன்றோரும் நினைவில் நிற்கும் பேச்சாளர்கள் ஆவர்.
அரபிக் கல்லூரிகளில் சொற்பயிற்சி மன்றங்கள் அநேகமாக 1920களில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். சுமார் கடந்த 90 ஆண்டு காலமாக இம்மன்றங்கள் (லஜ்னா)நடைபெற்றுவருகின்றன. இவற்றில் வாரம்தோறும் வியாழன் பின்னேரம், ஒதுக்கப்படும் தலைப்புகளில் 15 அல்லது 20 நிமிடங்கள், தங்கள் கன்னிப் பேச்சைத் தொடங்கி,படிப்படியாகப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வார்கள் மாணவர்கள்.
நாங்கள் வேலூர் பாகியாத்தில் 1972இல் பட்ட வகுப்பில் கற்றபோது, நாகை மாவட்டம் கூத்தூர் அப்துல் வாஹித் பாகவி மன்றச் செயலாளராக இருந்தார். அவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மதரசாவில் சேர்ந்தவர். தமிழ், ஆங்கிலம் முறையாக கற்றவர். எனவே, வேலூரில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடக்கும் பட்டிமன்றம்,கவியரங்கம், வழக்காடு மன்றம் போன்ற கூட்டங்களுக்குப் போய்வருவார். அந்தப் பழக்கத்தில், பாகியாத் தமிழ் மன்றத்தில் பட்டிமன்றமும் கவியரங்கும் எங்கள் காலத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டன. அன்றுமுதல் பாகியாத் தமிழ் மாணவர்கள் இந்த அரங்குகளிலும் பயிற்சிபெறுகிறார்கள்.
அன்றைக்கே, என் வகுப்புத் தோழர் கம்பம் பீர் முஹம்மது பாகவி சிம்மக்குரலில் கர்ஜிப்பார். தமிழும் அவருக்குக் கைவந்த கலை. தங்கு தடையின்றி சொற்போர் புரிவார்.இன்றைக்கும் அவர் பேச்சு எடுபடுகிறது. மலேசியா வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றில் நன்கு அறிமுகமானவர். சென்னை ஜமாலியா பேராசிரியர் பழனி அப்துர் ரஹ்மான் ஃபாஸில் பாகவியின் தமிழ்உரை நன்றாக இருக்கும்.
நான் பாக்கியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய 1980 மற்றும் 90களில் தமிழ் மாணவர்களிடையே பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதில் ஆரோக்கியமான போட்டி நிலவியது. பட்டிமன்றங்களில் சூடான விவாதங்கள், கவியரங்குகளில் செறிவான கவிதைகள், நவீன தலைப்புகளில் கவர்ச்சியான உரைகள் எல்லாம் மன்றத்தைக் களைகட்டவைக்கும். இளம் ஆலிம்களால் இவ்வாறெல்லாம் கலக்க முடியுமா என்று வியப்பாக இருக்கும். மொத்தத்தில் திறமையான மாணவர்கள்.
இந்த மாணவர்கள் இன்று வெளிஉலகில் –பல்வேறு மேடைகளில்- மிளிர்கிறார்கள்; வெள்ளிமேடைகளை அலங்கரிக்கிறார்கள்; உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அவர்களின் குரல் ஒலிக்கிறது. எடுத்துக்காட்டுக்காகச் சொல்வதென்றால்கூடப் பட்டியல் நீளும். ஒருவரைச் சொல்லி, ஒருவரைச் சொல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக இருக்காது. சென்னையிலும் சரி; வெளியிலும் சரி! நல்ல பேச்சாளர்களான இளம் ஆலிம்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் – என்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
பெயர் குறிப்பிட்டுப் பாராட்டும்போது எதிர்மறையான விளைவு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படித்தான், மாணவ மன்றத்தில் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மாணவர்கள் சிலரது பேச்சு, எழுத்து மற்றும் கவிதைப் புலமையைப் பாராட்டப்போக, மதரசாவிலேயே தன்னைப் போன்ற திறமைசாலி எவரும் இல்லை என்று சிலர் பெருமை பேசத் தொடங்கிவிட்டனர். இது மற்ற மாணவர்களை வெகுவாகப் பாதித்துவிட்டது.
நானெல்லாம் ஆசிரியரான பிறகும்கூட 15 அல்லது 20 நிமிடங்களுக்குமேல் பேசிப் பழக்கமில்லாதவனாகத்தான் இருந்தேன். பேச்சும் சுமார்தான். எங்கள் ஆசிரியப் பெருந்தகைP.S.P. ஹள்ரத் அவர்கள்தான் ஊக்கம் கொடுத்து தொடர் சொற்பொழிவுகளுக்கு அனுப்பிவைத்து வழிகாட்டியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.
பொதுவில் மார்க்கப் பரப்புரை எப்படி அமைய வேண்டும்? மக்கள் இன்று எத்தகைய உரைகளை எதிர்பார்க்கிறார்கள்? குறிப்பாக, வெள்ளி மேடைகளை அர்த்தமுள்ள வகையில் அலங்கரிப்பது எப்படி? சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பயன்தரும் விதத்தில் உரைகளை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? இதுதான்,சொல்ல வேண்டிய முக்கிய தகவலாக இருக்கும் என எண்ணுகிறேன்.
முதலில் உரைக்கான தலைப்பு. தலைப்பைத் தேர்ந்தெடுப்பதுதான் பேச்சாளருக்குள்ள முதல் தலைவலி. மாநாடு, கருத்தரங்கு, குறிப்பிட்ட பொருளில் நடத்தப்படும் கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஏற்பாட்டாளர்களே நமக்குத் தலைப்பை ஒதுக்கிவிடுவார்கள். திருமணம், மதரசா விழா, பட்டமளிப்பு விழா, சிறப்பு இரவு... போன்ற கூட்டங்களில், அந்தப் பொதுப் பொருளில் அன்றைய காலச் சூழலுக்கும் பகுதி மக்களின் தேவைக்கும் பொருத்தமான கிளைத் தலைப்பை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பொதுப் பொருளில் இங்கும் அங்கும் அலைபாயக் கூடாது.
எடுத்துக்காட்டாக, மதரசா விழாவில் மார்க்கக் கல்வியின் அவசியம், மார்க்கக் கல்வியின் சிறப்பு, தனிமனித ஒழுக்கம், வழிபாட்டில் ஆர்வம், மனித உரிமை மீறல்,பெற்றோரை மதித்தல்… முதலான தலைப்புகளில் பேசலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சூழலுக்கேற்பத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதை ஒட்டி மட்டுமே உரையைத் தயார் செய்துகொண்டு வர வேண்டும். அப்படியில்லாமல், ஒவ்வொன்றையும் தொட்டுப்பேசி, எதையுமே உருப்படியாகச் சொல்லாமல் போவதால் மக்களுக்கு என்ன பயன்? அல்லது முன்தயாரிப்பே இல்லாமல் வந்து, ஒப்புக்கு எதையாவது கொட்டிவிட்டுப் போவதால் யாருக்கு என்ன நன்மை?
அடுத்தது முன்தயாரிப்பு. முன்கூட்டியே உரையைத் தயாரித்து, குறிப்புகளுடன் மேடைக்கு வரும் பேச்சாளர்கள் மிகவும் குறைவு. அப்படியே வந்தாலும் தலைப்புக்கு வெளியே தாவாமல், உள்ளுக்குள் நின்று பேசுவோர் அதைவிடக் குறைவு. முன்தயாரிப்போ குறிப்போ ஏதுமின்றி பேசுவோர் பெரும்பாலும் என்ன செய்கிறார்கள்? முந்திய கூட்டத்தில் பேசியதை, அல்லது முன்எப்போதோ பேசியதை, அல்லது எதிலேயோ படித்த, யாரிடமோ கேட்டதை தன் பாணியில் பேசிவிட்டுப்போவார்கள். இதனால் பேச்சாளருக்கு வளர்ச்சியும் இல்லை; கேட்போருக்குப் புதிய தகவலும் இல்லை.
முன்தயாரிப்பில் இறங்குவோருக்குக் கிடைக்கும் முதல் பலன் தேடல். ஒன்றைக் கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சியே ‘தேடல்’(Pursuit) எனப்படுகிறது. இது ஒரு வகையில் பேச்சாளர் மேற்கொள்ளும் ஆராய்ச்சியாகும். எடுத்துக்காட்டாக, ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற தலைப்பை எடுத்துக்கொள்வோம். இது ‘கலாசாரம்’ என்ற பொதுத் தலைப்பின்கீழ் வரலாம்.
‘சமய நல்லிணக்கம்’ என்றால் என்ன? என்பதில் தேடல் தொடங்க வேண்டும். இது தரவாகப் புரியாமல் தலைப்புக்குள் நுழைந்து கருத்துத் தெரிவிப்பது அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும். இதற்காகக் கலைச் சொற்களைத் தேட சொல் அகராதிகள், மரபுச்சொல் அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் ஆகியவற்றைத் தமிழிலோ அரபியிலோ மேய வேண்டும். அடுத்து சமய நல்லிணக்கம் குறித்துப் பிற சமூகங்களின் நிலைப்பாடு என்ன? ஐ.நா. சபையின் தீர்மானம் என்ன? இந்திய அரசியல் சாசனம் சொல்லும் விதி என்ன? என்பதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்து சமய நல்லிணக்கம் தொடர்பாக இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை ஆராய வேண்டும். இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எந்த விஷயத்தில் அறிய விரும்பினாலும் முதலில் நீங்கள் புரட்டுவது திருக்குர்ஆனாகவே இருக்கும். சமய நல்லிணக்கம் தொடர்பான வசனங்களை, அதன் எண்களோடு சேர்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். வசனம் அருளப்பெற்றதற்கான பின்னணி (சபபுந் நுஸூல்) கிடைத்தால் அதையும் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து சமய நல்லிணக்கம் தொடர்பான நபிமொழிகளைத் தேட வேண்டும். சமய நல்லிணக்கத்தின் உட்பிரிவுகளைக் கண்டறிந்து, அவற்றுக்கேற்ற குறுந்தலைப்பு கொடுத்து, ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்ற வசனங்களையும் நபிமொழிகளையும் திரட்டி, குறிப்பெடுத்துக்காள்ள வேண்டும். நபிமொழிகளின் (அரபி) வாசகங்களோடு, ஆதார நூல்கள்;ஹதீஸின் எண் ஆகியவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள். ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை (ஸனத்) ஆராய்ந்து, சரியான ஹதீஸ்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
அடுத்து வேற்று மதத்தாருடன் இணக்கமாக நடந்துகொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள், சான்றோர்கள் ஆகியோர் காலத்தில் நடந்த ஆதாரபூர்வமான நிகழ்ச்சிகளைக் குறித்துக்கொள்ளுங்கள். இஸ்லாம் வரவேற்றுப் பின்பற்றும் சமய நல்லிணக்கம் குறித்து பிற சமய, அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளையும் சான்றுகளாகக் காட்டலாம். அதே நேரத்தில், சமய நல்லிணக்கத்தின் எல்லை என்ன என்பதையும் வரையறுத்து மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
இறுதியாக, நம் நாட்டின் நடப்பைச் சுட்டிக்காட்டுங்கள். இந்நாட்டின் சூழலில் முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுங்கள்.
ஆக, நீங்கள் உரையாற்றப்போவது அரை மணி நேரம்; அல்லது ஒரு மணி நேரம்தான். ஆனால், அதற்கான முன்தயாரிப்புக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள்கூடப் பிடிக்கலாம். அந்த அளவுக்கு உழைத்தால்தான், ஓரளவுக்கேனும் திருப்தியான, ஆக்கபூர்வமான, பயனுள்ள உரையை வழங்க முடியும். இல்லையேல், பத்தோடு பதினொன்று;அத்தோடு இதுவும் ஒன்று – என்றாகிவிடும்.
நான் இவ்வாறு சுமார் 20 பொதுத் தலைப்புகளில் 150க்கும் அதிகமான உரைக் குறிப்புகளை தயார் செய்துள்ளேன். இப்பணி என்னைப் பொறுத்தவரை இன்னும் தொடர்கிறது.
அடுத்து உரையின் நடை. நடை விஷயத்தில் யாரையும் காப்பியடிக்காதீர்கள். உங்களுக்கென ஒரு நடை இயற்கையாகவே இருக்கும். அது புதுமையாகவும் எளிமையாகவும் இருக்கும். அடுத்தவர் நடையைப் பின்பற்றி அவருக்குப் புகழ் சேர்ப்பது வேண்டாத வேலை; உங்களின் தனி அடையாளத்தை இழக்காதீர்கள். ‘இவர் நடை இன்னது’ என உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசும் நிலை உருவாக வேண்டும்.
அவ்வாறே, மொழிக்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். இலக்கணப் பிழை இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும். மக்கள் புரிய வேண்டும். அதுதான் தேவை. இன்று கல்வியறிவு பரவலாகிவிட்டது. மக்கள் எதிர்பார்ப்பது விஷயத்தை –கருத்தைத்-தான். வார்த்தை அலங்காரம் இயல்பாக இருப்பின் சரி! செயற்கையாகச் சிரமப்பட்டு அதைத் தேடித் தேடி அலைய வேண்டியதில்லை.
அறிவியல் செல்வாக்குப் பெற்றுவரும் இன்றைய சூழலில், அறிவியல் உண்மைகளை நம் வாதத்திற்குச் சான்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்! அவ்வாறுதான் புள்ளிவிவரங்கள் அறிவியலில் ஒரு பிரிவு. முடிந்தால் பயன்படுத்தலாம்!
எல்லாவற்றையும்விட மார்க்கப் பேச்சாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதோர் அம்சம் உண்டு. அதுதான் ‘இக்லாஸ்’ எனும் தூய்மையான எண்ணம். மக்களின் பாராட்டு, பரிசு, விளம்பரம், புகழ் ஆகிய உலகாதய நோக்கம் ஒரு ‘தாஇ’யிடம் இருக்கலாகாது. அல்லாஹ்வுக்காக, அவன் மார்க்கம் செழித்தோங்குவதற்காக, மக்கள் திருந்தி நல்வழி பெறுவதற்காக, அநீதியும் அநாசாரமும் ஒழிவதற்காக; உலகில் தர்மமும் நேர்மையும் பிழைப்பதற்காக, இதை முன்னிட்டு மறுமையில் எனக்கு நன்மை கிடைப்பதற்காக என்ற குறிக்கோள் மட்டுமே இஸ்லாமியப் பரப்புரையாளரிடம் இருக்க வேண்டும்.
இந்நோக்கத்தோடு நீங்கள் எளிமையாகப் பேசினாலும் கேட்பவரின் மனத்தை அது சுடும்; உணர்வுகளைத் தட்டியெழுப்பும்; அவரது வாழ்வில் திருத்தம் ஏற்படும். உரையாற்றும் முன் இதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொள்வது நல்லது.
“உன்னைக் கொண்டு ஒருவரை அல்லாஹ் நல்வழியில் சேர்ப்பதுதான், உயர்ந்த செல்வங்களைக்காட்டிலும் மேலானது” என அலீ (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)
Arumayana saithigal intha katturaikku eththanai days eduththu kondeergal
ReplyDeleteஜஸாகல்லாஹ்
ReplyDelete