க
|
ருத்துருவாக்கம்தான் பெரும் புரட்சிகளுக்கு வழிகோலியுள்ளது. பேரரசுகளைக்கூட வீழ்த்துகின்ற ஆற்றல்
அதற்கு உண்டு. பகுத்தறியும் திறனால் பெறும் எண்ணம் அல்லது கருத்துதான்
சிந்தனை. சிந்தனை மாற்றம் ஏற்படாமல் எழுச்சியைக் காண்பது அரிது.
இறைநம்பிக்கையை வளர்ப்பதானாலும் மூடநம்பிக்கையை ஒழிப்பதானாலும் அடக்குமுறையை
அடக்குவதானாலும் மக்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.
சிந்தனை, எண்ணம், கருத்து ஆகியவையே மாற்றத்திற்கு
வித்திடுகின்றன. இறைமறுப்பும் இணைவைப்பும்தான் காலங்காலமாகத் தங்கள்
முன்னோர்களிடம் இருந்துவந்தன என்பதே ஏகஇறைக் கொள்கையை மக்கா குறைஷியர் எதிர்க்கக் காரணமாக அமைந்தது.
இந்தப் பழமைவாதத்தை மாற்ற, பெரிய அளவில் சிந்தனைப் புரட்சி செய்ய வேண்டியிருந்தது.
இப்புரட்சிக்காகவே தம் வாழ்நாளின் முக்கியப் பகுதியில் 13 ஆண்டுகளை இறைத்தூதர்
செலவிட்டார்கள்.
இதன்மூலம் மக்கள் உள்ளத்தை வென்றபின் வழிபாடு, சட்ட
விதிகள், ஒழுங்குமுறைகள், கலாசார மாற்றம், வாழ்க்கை முறை, பொருளாதாரம், அரசியல்...
என எல்லாத் துறைகளிலும் இலகுவாக மாற்றத்தை உருவாக்க முடிந்தது. அதற்கு 10 ஆண்டுகள்
மட்டுமே தேவைப்பட்டது. சிந்தனை மாற்றம் ஏற்படாத வரை எந்தக் கொள்கைகோட்பாட்டையும்
ஏற்கவோ பின்பற்றவோ மக்கள் முன்வரமாட்டார்கள்.
சி
|
ந்தனை உருவாக்கத்தில் எழுத்து மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், ஒன்றும் அறியா மனிதனுக்கு எழுத்தைக் கொண்டே எல்லாவற்றையும் இறைவன் கற்பித்தான். எழுத்து என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்திருப்பின் உலகமே இயங்கியிருக்காது; மனிதன் மனிதனாக வாழ்ந்திருக்க முடியாது;
நாலு விஷயங்களைத் தெரிந்திருக்க முடியாது.
“அவனே எழுதுகோலால் கற்றுக்கொடுத்தான்; மனிதன் அறியாதவற்றை அவனுக்குக் கற்பித்தான்” (96:4,5) என்பது அனைவரும் அறிந்த திருவசனங்கள் ஆகும்.
புத்தகம், பத்திரிகை, தகவல் தொடர்பு, இணையதளம், காட்சி ஊடகங்கள், கலை,
இலக்கியம்… என எந்த அறிவுத் தளங்களை எடுத்துக்கொண்டாலும்
எல்லாமே எழுத்தைப் பின்னணியாகக் கொண்டவைதான். எழுத்து இல்லாவிட்டால்
இவற்றுக்கு வேலை இல்லை. கல்வி சார்ந்த அனைத்துக்கும் அடிப்படை ஆயுதம் எழுத்தே! எழுதத் தெரிந்தவன் மானிடனைச்
செதுக்கும் சிற்பி! எழுதுகோல் அவன் கையிலிருக்கும் உளி.
இதனால்தான் எழுத்தாளரை ‘படைப்பாளி’ என்பர் இலக்கியத்தில்.
முஸ்லிம்களை, எழுத்தின் முன்னோடிகள் எனலாம்! அவர்கள் எழுதிக் குவித்த ஏடுகள்
ஏராளம்! எண்ண இயலாது. அவர்கள் தொடாத கலைகளோ இயல்களோ துறைகளோ
இல்லை. சுயமாக எழுதியும் மொழிபெயர்த்தும் முஸ்லிம்கள் படைத்த கருத்தோவியங்கள்தான்
உலக மாந்தரின் கண்களைத் திறந்தன; எல்லாத் துறைகளுக்கும்
வழிகாட்டின. அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய அறிஞர்கள் இறைமொழிக்கும் நபிமொழிக்கும்
சட்டம் மற்றும் வரலாற்றுக்கும் செய்திருக்கிற எழுத்துக்கொடை, உலகில் வேறெங்கும்
காணமுடியாத ஓர் அற்புதம்.
அ
|
ந்தப் பாரம்பரியத்தில் வந்த மார்க்க அறிஞர்கள் எழுதத்
தெரிந்தவர்களாகவும் எழுத்தால் மார்க்க அறிவைப் பரப்பும் கேடயங்களாகவும் விளங்குவது
காலத்தின் கட்டாயம்; தார்மிகக் கடமையும்கூட. பேச்சு காற்றில் கரைந்துபோகும்; அதன் பதிவு நீண்ட நாள்களுக்குத் தாக்குப் பிடிக்காது. எழுத்தோ காலத்தால் அழியாத கருவூலம். மீண்டும் மீண்டும்
பதிப்பித்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் இருக்கலாம்.
பதிவுதான் வரலாறு; பதிவுதான் இலக்கியம்; பதிவுதான் அடையாளம்; பதிவுதான் கலாசாரத்தின் சான்று;
பதிவினாலேயே மார்க்கம் இன்றும் வழிநடத்திக்கொண்டிருக்கிறது. இறையை நாம் கண்டதில்லை; இறைமறையைத் தினமும் பார்த்துப்
பயில்கிறோம். இறைத்தூதரைப் பார்த்ததில்லை; அவர்களின் வாக்கும் வாழ்வும் இன்றும் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன.
சான்றோரைக் கேள்விப்பட்டிருக்கிறோம்;
சந்தித்ததில்லை. அவர்கள்தம் எழுத்தோவியங்களால் நம்மோடு
உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
உரை நிகழ்த்தும்போது எதிரில் ஜீவன்கள் இருந்து
தலையாட்டும். கூட்டத்தைப் பார்த்தாலே உற்சாகம் பிரவாகம் எடுக்கும். அதையடுத்து
பேச்சு ஊற்றெடுக்கும்; அருவியாய் கொட்டும். எழுத்தில் அதற்கு வாய்ப்பில்லை.
நான்கு சுவர்களுக்கிடையே அமர்ந்து நீங்கள் எழுதும்போது, உங்களை நீங்களே தட்டிக்கொடுத்து, சிரித்து, சலித்து, மனதுக்குள்ளேயே உணர்ச்சிகளைக் பிரதிபலித்து
ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். எழுத்தாளன் தனிமையில் இருந்தாலும்
–தனிமைதான் எழுத்துக்கு ஏற்ற நிலை- ஆயிரமாயிரம்
உள்ளங்களோடு உரையாடுகிறான்; உறவாடுகிறான் என்பது மட்டும்
உண்மை.
எழுத்து அச்சிலேறியபின் வாசிக்கும்போது எழுத்தாளனுக்கு
ஏற்படும் ஆனந்தம் இருக்கிறதே, அதற்கு ஈடில்லை. வாசகர்களின் ‘கமண்டை’ காணும்போது
எழும் துள்ளல் கோடி பெறும். வாசகர் கடிதங்கள்தான் ஓர் எழுத்தாளனுக்கு ஊக்க
மருந்து. எழுத்தால் பிழைத்தவர்களும் உள்ளனர்; பழுதடைந்தவர்களும் உள்ளனர்.
வாழ்ந்தவர்களும் உள்ளனர்; வீழ்ந்தவர்களும் உள்ளனர். ஆனால்,
நல்ல எழுத்துக்கு எப்போதும் வீழ்ச்சி இல்லை; அது சாவதில்லை.
அ
|
ரபிக் கல்லூரிகளில், மாணவர்கள் எழுத்துப் பயிற்சி பெறுவதற்காகக்
கையெழுத்துப் பத்திரிகை வெளியிடும் மரபு உண்டு. வேலூர் பாகியாத்
கல்லூரியில் நாங்கள் பட்ட வகுப்பில் கற்கும்போது ‘அல்இர்ஷாத்’
எனும் கையெழுத்துப் பத்திரிகை வெளிவந்தது. அதில்
நான் எழுதினேனா என்பது நினைவில்லை. எங்கள் ஆண்டில் கம்பம் பீர்
முஹம்மது பாகவிதான் அப்பத்திரிகையின் ஆசிரியர். பேச்சைப் போன்றே
அவரது எழுத்தும் சிறப்பாக இருக்கும்.
1980இல் பாகியாத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தபின்புதான் என் எழுத்துப்
பயணம் தொடங்கியது எனலாம். அதற்கு முன்பும் எழுதியிருந்தாலும்
முறைப்படுத்தப்பட்ட, துறைசார்ந்த எழுத்தாக அது இருக்கவில்லை.
நான் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பைக்கூட முடிக்காதவன்; மொழியை முறையாகக் கற்காதவன். எழுத்துப் பயிற்சியும் அந்த அளவுக்கு இல்லை.
நான் சுயமாகத் தமிழ் கற்றது தினமணி வாசிப்பின் மூலம்தான். எழுதக் கற்றதும் வெளியே
தெரியும் அளவுக்கு எழுதத் தொடங்கியதும் தினமணியினால்தான்.
எ
|
ழுத்துத் துறையில் எனக்குச் சற்று ஆழமான ஈடுபாடு
ஏற்பட்டது 1983இல்தான். இதற்கு வழிவகுத்ததும் தினமணியே. 26.04.1983 தினமணி இதழில் ‘லண்டன்
எகானமிஸ்ட்’ பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரை எடுத்தாளப்பட்டிருந்தது. பாகிஸ்தானைப்
பற்றி எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையில் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள், இஸ்லாமிய
நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதோர், ஸகாத், சாட்சியம் பகர்வதில் ஆண்-பெண் பாகுபாடு,
விபசாரத்திற்கான தண்டனை முதலான விஷயங்களில் இஸ்லாம் தவறாக
விமர்சிக்கப்பட்டிருந்தது.
லண்டன் பத்திரிகையின் கட்டுரை ‘எமது இஸ்லாமிய
நிருபரிடமிருந்து’ என்ற குறிப்போடு வெளிவந்ததுதான வேடிக்கை. உடனே சாந்தமான,
சாத்வீகமான முறையில் மறுப்பு எழுதி அனுப்பினேன். மாணவர்களும் எழுதினார்கள்.
வேறுசிலரும் எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான்கு நாட்களுக்குப்பின்
30.04.1983 தினமணியில் என் மறுப்புக் கட்டுரை ‘ஒரு பேராசிரியர் தவறுகளைக் காட்டி
விளக்குகிறார்’ எனும் தலைப்பில் அரைப் பக்கத்தில் வெளியாகியிருந்தது. அன்றைய
தினமணி ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ஏ.என். சிவராமன் கட்டுரையின் ஓரத்தில்
தன் வருத்தத்தையும் வெளியிட்டிருந்தார்.
என் மறுப்புக் கட்டுரை வெளியானபின் தினமணி முஸ்லிம்
வாசகர்கள் பலர் எனக்குக் கடிதம் எழுதினார்கள். (முகவரி தினமணியில் வெளியாகியிருந்தது.)
எல்லாரும் என்னைப் பாராட்டியும் எனக்காக வெகுவாக துஆ செய்தும் எழுதியிருந்தனர்.
தினமணியின் மூத்த முஸ்லிம் வாசகர் ஒருவர் எழுதியிருந்த மடல் என்னை உலுக்கிவிட்டது.
அசல் கட்டுரை வெளியானபோது “இதற்கெல்லாம் பதிலளிக்க சமுதாயத்தில் ஒருவருமில்லையே
என்று எண்ணி அழுதுவிட்டேன்; உங்கள் மறுப்பு வெளியான பிறகுதான் எனக்கு நிம்மதி. உங்களைப் போன்றவர்கள் வாளாவிருக்கலாகாது. எடுத்த எழுதுகோலை
இனி கீழே வைத்துவிடாதீர்கள்!” என்று பாசத்தோடும் உரிமையோடும்
அந்தப் பெரியவர் ‘எழுதியிருந்தார்’ என்று சொல்வதைவிடக் ‘கண்ணீர் வடித்திருந்தார்’.
அப்போது எழுதுகோலை அழுத்தமாகப் பிடித்தவன்தான் இன்னும்
கீழே வைக்கவில்லை; எழுதுகோலும் என்னை விடவில்லை. எழுத்துதான் இப்போது என்
முழுநேரப் பணியாகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக
மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் என்னால் பேனாவைத் தொடாமல் எப்படி இருக்க
முடியும்? அத்துடன் என் சமயப் பணி விரிவானதொரு தளத்தில் பயணிக்க
எழுத்தே காரணமாக அமைந்தது. நண்பர்கள் பலர் நேரில் சந்திக்கும்போது,
“உஙகளுக்கு என்னைத் தெரியாது; ஆனால், உங்களை எனக்குத் தெரியும்” என்பார்கள். வயதில் மூத்தவர்கள்கூட இவ்வாறு கூறும்போது கூச்சத்தோடு அந்த இடத்திலிருந்து
நகர்ந்துவிடுவேன். இவர்களுக்கெல்லாம் நான் எதன்மூலம் அறிமுகமானேன்?
எழுத்தே பாலம் அமைத்தது; எழுத்தே தூது சென்றது.
உ
|
லமாக்களில் பெரிய பெரிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் தமிழகத்தில் இருந்துள்ளார்கள்.
மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி, S.S. அப்துல் காதிர் பாகவி,
P.S.K. இப்ராஹீம் பாகவி (இருவரும் உத்தமபாளையம்)
இ.எம். அப்துர் ரஹ்மான் ஃபாஸில்
பாகவி (அன்வாருல் குர்ஆன்), அபுல் ஹசன்
ஷாதலி ஃபாஸில் பாகவி (ஜமாஅத்துல் உலமா மாத இதழ்), அப்துல் ஜப்பார் பாகவி (குர்ஆனின் குரல்), கீரனூர் சிராஜ் பாகவி (கவிஞர்), கம்பம் சதகத்துல்லாஹ் பாகவி, பி.ஏ. கலீலுர் ரஹ்மான் ரியாஜி (ரஹ்மத்
மாத இதழ்), குத்புத்தீன் பாகவி (ஐ.எஃப்.டி), அலாவுத்தீன் மன்பஈ
(தொண்டி)… இவர்கள் எல்லாரும் நன்றியோடு நினைவுகூரப்பட
வேண்டியவர்கள்.
இன்றைய இளம் ஆலிம்களிலும் பலர் நல்ல எழுத்தாளர்கள் உள்ளனர்; களப்பணி ஆற்றிவருகின்றனர். ஆயினும், பேச்சாளர்களின் எண்ணிக்கையைவிட எழுத்தாளர்கள்
மிகவும் குறைவே. இன்னும் அதிகமானோர் உருவாக வேண்டும்.
சிலருக்குக் கடிதம் எழுதுவதுகூட ஒரு பளுவான வேலை. ஆனால், எழுத்து ஓர் இனிய அனுபவம்; மறைந்தபின்பும் மறையாமல் வாழும் அடையாளம். இமாம் புகாரீ
(ரஹ்), இப்னு கஸீர் (ரஹ்),
இமாம் நவவீ (ரஹ்) போன்ற மேதைகள்
உலக அளவில் இன்றும் போற்றப்படுவதற்குக் காரணம் அவர்களின் நூல்கள்தான்! இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் குருதி
வழிந்தோடிக்கொண்டிருக்கவே எழுதுவார்களாம்!
முதலில் எழுத்தைக் காதலியுங்கள்; எழுதுகோலை நண்பனாக ஆக்கிக்கொள்ளுங்கள்!
அது எப்போதும் உங்கள் ஸ்பரிஸத்தில் இருக்கட்டும்! அடுத்து எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்! பயிற்சியும் பெறுங்கள்! மார்க்க நூல்களையும் கட்டுரைகளையும்
படிக்க வேண்டும் என்ற ஆர்வம் சமுதாயத்தில் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் எழுத்தாளர்களுக்குப்
பஞ்சம் என்றால், அது யாருடைய குறை?
மு
|
தலில் நல்ல ஏடுகளை, நல்ல புத்தகங்களைக் கவனமாகப் படியுங்கள்.
வெறும் கருத்தை மட்டும் கவர்வதோடு நின்றுவிடாமல், சொல்ஆளுமை, சொல்லாக்கம், வாக்கிய
அமைப்பு (எது முதலில்; எது அடுத்து;
எது முடிவில்), நடை வீச்சு, கருத்தை நிறுவும் முறை, சலிப்புத் தட்டாத விறுவிறுப்பு
–இவற்றையெல்லாம் நூல்களைப் படிக்கும்போதே மூளையில் பிரதி எடுத்துவிடுங்கள்!
அவ்வாறே, நல்ல தமிழில் எழுதுவது எப்படி என்பதை விவரிக்கும் நூல்கள் பல வெளிவந்துள்ளன.
அவற்றை என்ன விலை கொடுத்தாயினும் வாங்கி, கவனமாக
வாசியுங்கள்! முக்கியமான வழிகாட்டல்களைக் குறிப்பெடுத்துப் பதிவுசெய்து
வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் இலக்கண நூல்கள், சொல் அகராதிகள் சில கட்டாயமாக உங்களிடம் இருக்க வேண்டும். நான் அதிகமாகப் பயன்படுத்தும் அகராதிகள் என கிரியாவின் தற்கால தமிழ்
அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்), கழகத் தமிழ் அகராதி (கழக வெளியீடு), செந்தமிழ் அகராதி ஆகியவற்றைச் சொல்லலாம்! மரபுச் சொல்
அகராதியும் இடையிடையே கை கொடுக்கும். தமிழ் பழமொழிகள் இருப்பதும்
உதவும். (இவையெல்லாம் இணையத்திலும் காணலாம்!) தமிழில் மெல்லினம், வல்லினம் அறிய அகராதி முக்கியம்.
அவ்வாறே கலைக்களஞ்சியங்கள், தகவல் களஞ்சியங்கள் பேருதவியாய் இருக்கும்.
இணையத்தில் விக்கிபீடியா தகவல்களை கொட்டிவைத்திருக்கிறது. எந்தச் சொல், அல்லது பொருள் தொடர்பாக விளக்கம் தேடினாலும்
தேடித்தரும். சற்று இலக்கியமும் தேவை. இலக்கியம்
கலக்கும்போது எழுத்தில் நறுமணம் வீசும். வாசகனைச் சுண்டியிழுக்கும்.
“குர்ஆனை ஓதாமல் என்னால் இருக்க முடியாது” என்பது
எப்படி? “குர்ஆன் ஓதாவிட்டால் என் மூச்சு நின்றுவிடும்”
என்பது எப்படி? இரண்டும் ஒரே பொருள்தான்.
இரண்டாவதில் ஒரு கிறக்கம் உண்டு.
அ
|
டுத்து சாதாரணமாகப் பேசும்போது ஒரு வாக்கியத்தை எப்படி
பிரயோகிப்பீர்களோ அதில் கொச்சையை அகற்றிவிட்டால், அதுதான் எழுத்து மொழியாகும்.
‘எப்ப சாப்பிட்ட?’ என்பதை ‘எப்போது
சாப்பிட்டாய்?’ என்று எழுதுங்கள். “ஏன்டா என்
பிராண வாங்கிற?” என்பதை, “ஏனடா என்
உயிரை எடுக்கிறாய்?” என எழுத்தில் கொண்டுவாருங்கள். தஞ்சை தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் கூட்டு முயற்சியால் வெளிவந்துள்ள ‘தமிழ் நடைக்
கையேடு’ எனும் நூலை அவசியம் வாசியுங்கள்.
ஒரு பொருளைக் குறிக்கும்
சரியான சொல் கிடைக்காமல் திணறும்போது, அதற்கு ஈடான சொல்லை அகராதியில் தேடினால்,
நீங்கள் விரும்பும் அச்சொல்லே கிடைத்துவிடும். ‘தரக்குறைவானது’, என்ற வார்த்தை உங்களுக்குத்
தேவை. நினைவில் வர மறுக்கிறது. சிறிது நேரம் யோசித்துப்பார்த்துவிட்டு,
அதற்கு ஈடான ‘கீழ்த்தரமானது’ எனும் சொல்லை அகராதியில் தேடுங்கள்! தரக்குறைவானது
தானாகக் கிடைத்துவிடும். எழுத்தில் ஒரே சொல் பலமுறை இடம்பெறுவதை இயன்றவரைத்
தவிர்த்துவிடுங்கள்! அவசியம் ஏற்படின், நிகரான பல்வேறு சொற்களை ஆளலாம்!
நான்கைந்து பக்கங்களில் ஒரு
கட்டுரை வரைய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். தலைப்பைக்
கவனியுங்கள்! ‘இஸ்லாத்தில் தீவிரவாதமா?’ என்பது தலைப்பு. தலைப்புச் செய்தியின் தேவையை முதலில்
ஒரு பத்தியில் (Paragraph) சுருக்கமாக, அதே நேரத்தில்
அழுத்தமாகக் குறிப்பிட்டுவிடுங்கள்! இது, கட்டுரை முழுவதையும் வாசித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை வாசகருக்கு ஏற்படுத்தும்.
முதல் பத்திதான் கட்டுரைக்குத் தூண்டில். அடுத்து
தலைப்பில் இடம்பெறும் விவாதப் பொருளான ‘தீவிரவாதம்’ (Extremism) மற்றும் ‘பயங்கரவாதம்’ (Terrorism) ஆகியவற்றின் இலக்கணத்தை
–முடிந்தால் உதாரணத்துடன்- விளக்கிவிடுங்கள். அப்போதுதான், அதை இஸ்லாத்துடன்
இணைப்பது எவ்வளவு பெரிய கயமை என்பது வாசகருக்குப் புரியும்.
இங்கே ‘இஸ்லாம்’ என்றால் என்ன என்ற இலக்கணம் –விதிவிலக்காகத் தவிர-
தேவையில்லை. இஸ்லாம் இங்கே எழுவாய். எழுவாய் (Subject) பெரும்பாலும் அறிந்ததாகவே
இருக்கும். பயனிலை (Predicate) தான் தெரியாததாக, விவாவத்திற்குரியதாக
இருக்கும். எனவே, பயனிலையை விளக்கினால்
போதும்.
அடுத்து இந்த எழுவாயுக்கு
இந்தப் பயனிலை இருக்கிறதா? இல்லையா? இல்லை என்றால்
அதற்கான சான்றுகள் என்ன? இஸ்லாமும் தீவிரவாதமும் ஒரே கோட்டில்
பயணிக்க முடியாது என்பதை நீங்கள் நிறுவ முற்படும்போது இஸ்லாத்திலிருந்து ஆதாரங்களை
அடுக்கடுக்காக முன்வைக்க வேண்டும். ஆதாரம் இரண்டுவிதமாக இருக்கலாம்.
இஸ்லாத்தில் தீவிரவாதம் கிடையாது; ஏனெனில்,
தீவிரவாதத்தை இஸ்லாம் இப்படி இப்படியெல்லாம் எதிர்க்கிறது என்று நிறுவுவது ஒன்று!
மற்றொன்று, இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை;
ஏனென்றால், இஸ்லாம் சாந்தியைப் போதிக்கிறது;
மனித உரிமையை மதிக்கிறது; சட்ட ஒழுங்கைக்
காக்கிறது... என்ற வகையிலும் நிறுவலாம். முந்தியது நேரடியானது; பிந்தியது மறுமுகமானது. இரண்டுமே தலைப்பிற்கு வலுவூட்டும்.
இவற்றுக்கெல்லாம்
ஆங்காங்கே குறுந்தலைப்புகள் (Mini
Title) இட்டு, ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான திருக்குர்ஆன்
வசனங்கள், நபிமொழிகள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றைச் சுவையோடு சுட்டிக்காட்ட
வேண்டும். முடிவுரையாக ஒன்றைச் சொல்லிவிட்டு நிறைவு செய்துவிடுங்கள்!
க
|
ட்டுரைதான் புத்தகம் எழுத முதல்படி. கட்டுரை எழுத முதல்படி கடிதங்கள். வாசகர்
கடிதம், கட்டுரை, நூல் என்று படிப்படியாக முன்னேற வேண்டும். அப்படிச் செய்தால்
மலைப்பு தெரியாது. பல கடிதங்கள் சேர்ந்தது ஒரு கட்டுரை; பல கட்டுரைகள் சேர்ந்தது ஒரு நூல்; பல
நூல்கள் எழுதினால் எழுத்தாளர்; அல்லது பன்னூல் ஆசிரியர்.
இஸ்லாமிய எழுத்தாளரைப் பொறுத்தமட்டில், பாராட்டையோ
உற்சாகப்படுத்துதலையோ தட்டிக்கொடுப்பதையோ எதிர்பார்க்க முடியாது. உங்கள் கட்டுரை பிரசுரமாகும் பத்திரிகையின் ஆசிரியர்கூட ஒரு கடிதம் எழுதியோ
தொலைபேசியில் அழைத்தோகூடப் பாராட்டமாட்டார்; ஊக்கப்படுத்தமாட்டார்.
ஏதோ ஒரு வேட்கையில் நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்! பல ஆண்டுகள் கழிந்தபின், உங்களை அடையாளம் காண்பார்கள்.
சிலர் பாராட்டுவார்கள்; ஊக்குவிப்பார்கள்.
எழுத்தாளருக்குக் கிடைக்கும்
வரவேற்பு அவரை இறுமாப்புகொள்ள வைத்துவிடக் கூடாது. இரண்டு பத்திரிகையில்
எழுதியவுடனே, சில நூல்கள் மொழிபெயர்த்தவுடனே தன்னிலை மறந்து தற்புகழ்ச்சி
என்ற விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டுவிடக் கூடாது. அது
வளர்ச்சியை, சமுதாயம் பெறும் நன்மையைத் தடுத்துவிடும்.
எல்லாவற்றையும்விட, பேச்சில்
மட்டுமன்றி எழுத்திலும் ‘இக்லாஸ்’ எனும் தூய எண்ணம் இருக்க வேண்டும். இதன்மூலம்
மறுமையில் நன்மை கிடைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்க வேண்டும். அப்போதுதான், நாம் எழுதிய எழுத்து வேலை செய்யும்; வாசகனிடத்திலே மாற்றத்தை
உருவாக்கும்.
_____________________
No comments:
Post a Comment