- கான் பாகவி
சொ
|
ந்தமாக எழுதுவது எப்படி ஒரு கலையோ, அப்படியே ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப்
பெயர்ப்பதும் ஒரு கலைதான். அது இன்று வேகமாக வளர்ந்துவருகிறது.
அப்படியானால், பேச்சு, சொந்த
எழுத்து போன்றே, மொழிபெயர்ப்பும் ஒரு பிரசார யுக்திதான்;
பரப்புரையின் சிறந்த கருவிதான்.
முதலில் மொழி குறித்து ஒரு குறுஆய்வு நடத்திவிட்டுப் பிறகு மொழிபெயர்ப்புக்கு வருவோம். மொழி (Language) என்பது, சொற்களையும் சொற்களின் தொடர்களையும் கொண்ட, மனிதர்கள் தம் கருத்தையும்
உணர்வையும் வெளிப்படுத்தித் தமக்குள் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் கருவியாகும்.
இதையே இப்படியும் விளக்கலாம்: மரபு வழியான பேச்சு அல்லது எழுதப்பட்ட குறியீடுகளைக்
கொண்ட அமைப்பே மொழியாகும். ஒரே பண்பாட்டைக் கொண்ட மக்களால் தங்களுக்குள்
தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள மொழி பயன்படுத்தப்படுகிறது. மொழியானது,
ஒரு பண்பாட்டின் சிந்தனை முறையைப் பிரதிபலிப்பதோடு அதைப் பாதிக்கவும்
செய்கிறது. ஒரு பண்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மொழியின்
வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. எல்லா மொழிகளும் பேச்சாகத்
தொடங்கியவையே. அதைத் தொடர்ந்து பல மொழிகள் எழுத்துமுறைகளை உருவாக்கிக்கொண்டவை
ஆகும்.
ஆக, மொழி என்பது, சிந்தனைக்குப் பேச்சுருவமும்
எழுத்துருவமும் கொடுக்கும் கலைஞன்; ஒரு சமூகத்தின் பண்பாடு, கலாசாரம், சமயம் ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கான
பாதை. ஒரு மொழியின் வளத்தைக் கொண்டு, அம்மொழி பேசும் மக்களின் அறிவு மற்றும்
பண்பாட்டு வளத்தை எடைபோட்டுக்கொள்ளலாம். ஒரு மொழியின் வீழ்ச்சி, அதைப் பேசிய
மக்களின் வீழ்ச்சிக்கு அடையாளமாகும். மொழியில்லையேல் வாயிருந்தும் புண்ணியமில்லை.
மொழியில்லையேல் பேச்சு, எழுத்து, வரலாறு என எதுவும் இல்லை.
உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன.
‘எத்னோலோக்’ (Ethnologe), தனது உலகமொழிகள் பட்டியலில் 7,330 முதன்மை மொழிகளைப்
பட்டியிலிடுகிறது; கிளை மொழிகள் என்றும் மாற்று மொழிகள் என்றும்
39,491 மொழிகளை அடையாளம் கண்டுள்ளது. ஒரே பொருளைக்
குறிக்க எத்தனை விதமான சொற்கள் பார்த்தீர்களா? இது படைப்பாளனின்
அபார ஆற்றலைக் காட்டுகிறதா, இல்லையா? திருக்குர்ஆன்
அறிவிப்பதைப் பாருங்கள்:
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும் உங்கள் மொழிகளும் வண்ணங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய (ஆற்றலுக்கான) சான்றுகளில் அடங்கும். நிச்சயமாக இதில் அறிஞர்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (30:22)
நம் இந்தியாவில் 1650க்கும் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளனவாம்! 2001ஆம்
ஆண்டு கணிப்பின்படி, இந்தியாவில் 10 லட்சத்திற்கும்
மேற்பட்ட மக்களால் 29 மொழிகள் பேசப்படுகின்றன. 10ஆயிரத்திற்கும் அதிகமான மக்களால் 122 மொழிகள் வழங்கப்படுகின்றன.
எழுபது விழுக்காடு மக்கள் இந்தோ – ஐரோப்பிய மொழிகளைப்
பேசுகின்றனர். 22 விழுக்காட்டினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர்.
இவையன்றி சீன – திபெத்திய மொழிகளும் ஆங்ஸ்திரேலிய
– ஆசிய மொழிகளும் பேசப்படுகின்றன.
இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி,
பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகளாகும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் புழக்கத்தில் உள்ளன.
இந்தி மத்திய அரசின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும்
வேறு 22 மொழிகள் மாநிலங்களின் அலுவல் மொழிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ், உருது, காஷ்மீரி,
மலையாளம், சமஸ்கிருதம் முதலானவை அந்த
22 மொழிகளில் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற மொழிகள் ஆறுதான். அரபி, ஆங்கிலம்,
சைனீஸ், பிரெஞ்சு, ரஷியன்,
ஸ்பேனிஷ் ஆகியவை அந்த ஆறு மொழிகள். இருப்பினும்.
இவற்றில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே ஐ.நா. அலுவல் மொழிகளாகும். இதர மூன்றும் பொருளாதாரம் மற்றும்
சமூக கவுன்சிலின் அலுவலுக்கான மொழிகளாகப் பின்னால் சேர்க்கப்பட்டவை. உலகச் செம்மொழிகள் என எட்டு மொழிகள் உள்ளன. கிரேக்கம்
(பைபிள்), இலத்தீன், அரபுமொழி
(திருக்குர்ஆன்), சீனம், ஹீப்ரு (தோரா – விவிலியம்),
பாரசீகம், சமஸ்கிருதம் (இந்து
வேதங்கள்), தமிழ் (திருக்குறள்)
ஆகியவையே அந்த எட்டு மொழிகளாகும். வேறுசில மொழிகளுக்கும்
இந்தியாவில் நடுவண் அரசு செம்மொழித் தகுதியை அறிவித்திருக்கிறது.
ஒரு மொழி, அதைப் பேசுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தே செல்வாக்குப் பெறுகிறது. அந்த வகையில் மேன்டரின் (Mandarin) மொழிதான் முதலிடம் பெறுகிறது. 955 மில்லியன் பேர் (ஒரு
மில்லியன் 10 லட்சம்) பேசுகின்றனர்.
சீனா, தைவான், சிங்கப்பூர்,
மலேசியா ஆகிய நாடுகளில் இம்மொழி பேசப்படுகிறது. மொத்த மக்கட்தொகையில் 14.4% பேர் இதைப் பேசுகின்றனர்.
இரண்டாவது இடத்தை ஸ்பேனிஷ் பிடித்திருக்கிறது. இதை 405 மில்லியன் மக்கள்
பேசுகின்றனர் (மொத்த மக்கட்தொகையில் 6.15%). மூன்றாம் இடம்தான் ஆங்கிலத்திற்கு. 360 மில்லியன் பேர்
பேசுகின்றனர் (5.43%). இந்தி 310 மில்லியன்
(4.70%). அரபி 295 மில்லியன் (29.5 கோடி – 4.43%). தமிழ் 70 மில்லியன்
(7 கோடி – 1.06%). உருது 66 மில்லியன் (6.6 கோடி – 0.99%). பர்சியன் (ஃபார்சீ) 65 மில்லியன்
(6.5 கோடி – 0.99%). துருக்கிஷ் – 63 மில்லியன் (6.3 கோடி – 0.95%). குர்திஷ் 21 மில்லியன் (2.1 கோடி
– 0.31%).
உலக மொழிகளில் அரபி லிபியில் (உர்து போல்) எழுதப்படும்
மொழிகள் 13. அரபி, பஞ்சாபி, உருது, ஃபார்சீ, பஷ்டு,
ஹவ்ஸா, ஒஸபிக், குர்திஷ்,
சரான்கி, தக்கன், கஸக்,
யுவாகூர், பாலூஜி ஆகியவையே அந்த 13 மொழிகளாகும். மலேயா, துருக்கிஷ்
போன்ற சில மொழிகள் அரபி லிபியிலிருந்து ஆங்கில லிபிக்கு மாறியவை என்பது குறிப்பிடத்
தக்கது.
அ
|
டுத்து மொழிபெயர்ப்பு (Translate) என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு மொழியில் எழுதப்பட்டதை, அல்லது சொல்லப்பட்டதைப் பொருளும் தொனியும் மாறாமல் மற்றொரு மொழியில் வெளிப்படுத்துவதே
மொழிபெயர்ப்பு, அல்லது மொழி மாற்றம், அல்லது
மொழியாக்கம் எனப்படுகிறது. சிலர் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்காமல்
கருத்தை மட்டும் பெயர்ப்பதற்கே ‘மொழியாக்கம்’ என்பர். இதன்படி, மொழியாக்கத்தில்
தொனி மாறினால் தவறாகாது எனலாம்.
அறிஞர் ஒருவர் ஒரு மொழியில் வெளியிட்ட தத்துவம், அல்லது அறிவியல் உண்மை, அல்லது சமயபோதனை அந்த மொழியிலேயே இருந்துவிட்டால், அம்மொழி
பேசாத பிற மக்களை அவரது கருத்து எட்டாது. இதனால் அம்மக்களுக்கும்
இழப்பு; அக்கருத்தின் தளமும் சுருங்கிவிடும். சாக்ரடிஸ், பிளாட்டோ, கலீலியோ,
லோக்மேன் (அறிஞர் லுக்மான்), இறைநம்பிக்கையாளர்களின் தந்தை இப்ராஹீம் (அலை),
இயேசு (ஈசா – அலை),
நபிகள் நாயகம் (ஸல்) முதலானோரின்
தத்துவங்களும் அறிவுரைகளும் உலக அளவில் பரவியிருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் மொழிபெயர்ப்புக் கலைதான்!
பொதுவாக, ஒரு தத்துவம் அல்லது உண்மை அதை வெளியிட்டவருக்கு மட்டுமோ அவருடைய சமூகத்தாருக்கு
மட்டுமோ சொந்தமல்ல. அனைவருக்கும் பொதுவானது.
இதனால்தான், கருத்துகள் பொதுவுடைமை என்பர்.
அதிலும் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனும் அவனியோர் அனைவருக்கும் பொதுவான
இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின்
பொன்மொழிகளும் மானிடர் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டிகளாகும். திருக்குர்ஆன் குறித்தும் நபிகளார் குறித்தும் இறைவன் குறிப்பிடுகின்றான்:
இது அகிலத்தாருக்கு அறிவுரையே தவிர வேறில்லை.
(38:87; 68:52; 81:27)
(நபியே!) மனிதர்கள் அனைவருக்கும் நற்செய்தி
கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவுமே உம்மை நாம் அனுப்பியுள்ளோம். (34:28)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (எனக்குமுன் வந்த) நபி தம் சமூகத்தாருக்கு மட்டுமே
(நபியாக) அனுப்பப்பட்டார். நானோ மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான நபியாக அனுப்பப்பெற்றுள்ளேன். (புகாரீ)
திருக்குர்ஆனும் நபிமொழிகளும் இஸ்லாமிய நெறிகளும் இன்று உலகெங்கும்
பரவியிருப்பதில் மொழிபெயர்ப்புக்கே முதல் பங்கு எனலாம்! ஆசியாவில் பிறந்த இஸ்லாம் அமெரிக்கா,
ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா
என எல்லா கண்டங்களிலும் பாதம் பதித்துவிட்டது. சுமார்
165 கோடி மக்கள் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக்க் கடைப்பிடித்து
வருகின்றனர்.
இஸ்லாம் தொடர்பான இலட்சக்கணக்கான சிறிய மற்றும் பெரிய நூல்கள்
அரபிமொழியில் குவிந்து கிடக்கின்றன. அரபிக்கு அடுத்து ஆங்கிலத்தில்தான் மார்க்க நூல்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன.
தமிழைப் பொறுத்தவரை இஸ்லாமிய நூல்கள் மிகவும் குறைவு. காரணம் தமிழில் சொந்தமாக இஸ்லாமிய நூல்கள் எழுதுவதற்கோ மொழிபெயர்ப்பதற்கோ அறிஞர்களின்
பஞ்சம் நிறைய உண்டு. இதனால் தாய்மொழியில் இஸ்லாத்தின் அனைத்துத்
துறைகளையும் வாசிப்பதற்கு வாய்ப்பில்லாமல் ஆங்கிலத்தையே நாட வேண்டியுள்ளது.
இஸ்லாமிய நூல்களை அரபி மூலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பதே
பல வகைகளிலும் பாதுகாப்பானது. அரபியிலிருந்து ஆங்கிலமாக்கப்பட்டுப் பிறகு அது தமிழாக்கப்படும்போது
நம்பகத் தன்மை குறைகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு எந்த அளவுக்குச்
சரியானது என்பது முதல் கேள்வி. அடுத்து அரபிச் சொற்களை ஆங்கிலப்படுத்தும்போது
ஏற்படும் உச்சரிப்புப் பாதிப்புகள். அந்தப் பாதிப்பால் நேரும்
பொருள் சிதைவு. இதையெல்லாம் மறந்துவிட்டு, எதற்கெடுத்தாலும் அரபி, அரபி எனக் கூச்சலிடுகிறார்களே
என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.
திருக்குர்ஆனின் மொழிக்கு, நபிகளாரின் இதழ்களில் தவழ்ந்த பாஷைக்கு,
இஸ்லாமிய மூல நூல்களும் விரிவுரைகளும் இதர இயல்களும் உரியவர்களால் வரையப்பட்ட
எழுத்தோவியங்கள் நிறைந்திருக்கும் மொழிக்கு முக்கியத்துவமும் முதலிடமும் இருப்பது இயல்புதானே!
இதில் குறை சொல்வதற்கோ பொறாமைப்படுதற்கோ என்ன இருக்கிறது? ஆங்கிலத்திலேயே நீங்கள் கற்றாலும் அதற்கும் அசல் அரபிதானே! உலக மொழிகளிலேயே ஐந்தாவது இடத்தை வகிக்கும் அரபி மொழிக்கு உலக அரங்கில்
மரியாதை இல்லாமல் போய்விடுமா? முடிந்தால் நீங்களும் அரபியைத் தாராளமாகக் கற்கலாம்!
அப்போதாவது அதன் எழில், சுவை, தனிச் சிறப்பு, வேதமொழியாகத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி…
எல்லாம் புரியும்!
அ
|
ரபி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க என்ன செய்ய வேண்டும் – அதை முதலில் சொல்லுங்கள் என்கிறீர்களா?
அதுவும் சரிதான்!
ஆரம்பமாக இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரு மொழிகளையும் வாசிக்க, எழுத, பொருளை விளங்கத் திறமை இருக்க வேண்டும்.
மொழிபெயர்க்கப்படும் கட்டுரை, அல்லது நூலின் இயலோடு
பரிச்சயம் இருக்க வேண்டும். இல்லையேல் மூலத்தின் பொருளையும் தொனியையும்
மொழிபெயர்ப்பில் பிரதிபலிக்க இயலாது.
மொழிபெயர்ப்புக்கான அடிப்படைத் தகுதிகள் என மொழித்திறன், சொற்களஞ்சிய அறிவு, சொற்பொருளியல்
அறிவு, சமூகப் பண்பாட்டு உணர்வு, இலக்குமொழி
மரபுகளை ஒட்டி மொழிபெயர்ப்புச் செய்யும் ஆற்றல், இலக்கண
– இலக்கிய அறிவு ஆகியவற்றைச் சொல்வார்கள். ஒரு
மொழிபெயர்ப்பு, அறிஞர்களுக்கு மட்டுமன்றி, சாதாரண மக்களுக்கும் புரியக்கூடியதாய் இருக்க வேண்டும். மூலநூலாசிரியரின் வார்த்தையைக் காட்டிலும் அவர் எந்தப் பாவத்துடனும் மனநிலையிலும்
அதைப் பயன்படுத்தியுள்ளார் என்பதே முக்கியம். மூலநூலின் ஆற்றொழுக்கான
நடை, நடையிலுள்ள எளிமை, இனிமை, கம்பீரம், பொருள் செறிவு முதலியன கூடியமட்டில் மொழிபெயர்ப்பில்
இருக்க வேண்டும்.
இரு மொழிகளின் இலக்கணத்தில் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டிய
முதன்மையான அம்சங்கள்: 1. ஒருமை,
(அரபியில் இருமை), பன்மை. 2. ஆண்பால், பெண்பால் 3. படர்க்கை,
முன்னிலை, தன்மை. 4. இறந்தகாலம்,
நிகழ்காலம், எதிர்காலம். 5. செய்வினை (மஅரூஃப்), செயப்பாட்டு
வினை (மஜ்ஹூல்). 6. உடன்பாடு (இஸ்பாத்), எதிர்மறை (நஃபி).
7. பிறவினை, தன்வினை (லாஸிம்,
முத்தஅத்தீ). அவ்வாறே இலக்கியத்தில், சொற்பொருள் (ஹகீகத்), மாற்றுப்
பொருள் (மஜாஸ்), ஆகுபெயர் (கினாயா), உருவக வழக்கு (இஸ்திஆரா),
சிலேடை (தவ்ரியா) ஆகியவை
முக்கியமானவை.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி நடை இருக்கும். அதையறிந்து மொழிபெயர்க்க வேண்டும். எ.கா:
(1)
“மலேசியாவில் என் நண்பனைச் சந்தித்தேன்.” இதை அரபியில்
زُرْتُ زَمِيْلِيْ
بِمَالِيْزِيَا
முதலில் சந்தித்தேன்; அடுத்து என் நண்பனை; அடுத்து மலேசியாவில்.)
(2)
உண்மையானது, அவர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றினால், வானங்களும்
பூமியும் சீர்குலைந்துபோய்விடும் (23:71). இந்த வசனத்தின் அரபி
மூலம்:
وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءَهُمْ لَفَسَدَتِ السَّمَوَات وَالْأَرْض
அவ்வாறே, அரபி மூலத்தில் நேரடியாக இடம்பெறாத சில சொற்களைத் தமிழாக்கத்தில் சேர்க்க வேண்டியது
அவசியமாகலாம்:
لا إله إلا هو
அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. இதில் ‘வேறு’ என்பதற்கு
மூலத்தில் நேரடியாகச் சொல் இல்லை. சில இடங்களில் வாக்கியங்களைப் பிரித்து மொழிபெயர்க்க வேண்டியது வரலாம்!
شرّ الطعام طعام الوليمة يُدعى لها الأغنياء ويُترك الفقراء
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவே,
உணவுகளில் மிகத் தீயதாகும். (புகாரீ –
5177)
இதையே இரு வாக்கியங்களாகப் பிரித்து மொழிபெயர்ப்பது தவறாகாது; உணவுகளில் மிகத் தீயது, ஒரு மணவிருந்து உணவாகும்; அதற்குச் செல்வர்கள் அழைக்கப்படுகின்றனர்; ஏழைகள் விடப்படுகின்றனர். சில இடங்களில் இவ்வாறு பிரிப்பது பொருள் மயக்கத்தைத் தந்துவிடக்கூடும்;
لبث النبي صلى الله عليه وسلم بمكّة عشر سنين ويُنزَل عليه
القرآن
وبالمدينة عشر سنين (புகாரீ – 4978)
நபி (ஸல்)
அவர்கள், தமக்குக் குர்ஆன் அருளப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மக்காவில் பத்தாண்டுகளும் மதீனாவில் பத்தாண்டுகளும் வசித்தார்கள். அதாவது திருக்குர்ஆன் 20 ஆண்டுகள் அருளப்பெற்றன. அதில் 10 ஆண்டுகள் மக்காவிலும் 10 ஆண்டுகள் மதீனாவிலும் நபிகளார் வாழ்ந்தார்கள். (இதில் ‘வஹீ’ நின்றுபோயிருந்த 3 ஆண்டுகள் சேர்க்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.)
இதையே “நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பத்தாண்டுகள் வசித்தார்கள்; அவர்களுக்கு குர்ஆன் அருளப்பெற்றுக்கொண்டிருந்தது. மதீனாவில் பத்தாண்டுகள் வசித்தார்கள்” என்று வாக்கியங்களைப் பிரித்தீர்களானால் பொருள் சிதையும். ஏதோ நபியவர்கள் மக்காவில் வசித்ததே 10 ஆண்டுகள் என்பது போலவும் அப்போது குர்ஆன் அருளப்பெற்றது போலவும் மதீனாவில் 10 ஆண்டுகள் பின்பு வாழ்ந்தார்கள் என்பது பேலவும் குளறுபடியாகிவிடும்.
இ
|
ரு பொருள் தரும் வகையில் வாக்கிய அமைப்பே சில நேரங்களில் இருந்துவிடும். நாம்தான் சரியான பொருளை அறிந்து, அதற்கேற்றவாறு மொழிபெயர்க்க வேண்டும். எ.கா:
أفلم يدّبّوا القول أم جاءهم مالم يأت آباءهم الأوّلين (28:68)
அவர்கள் இவ்வுரையை ஆழ்ந்து சிந்திக்கவில்லையா? முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்றல்லவா
அவர்களிடம் வந்துள்ளது! – என்பதே இவ்வசனத்தின் பொருளாகும்.
அதாவது இந்த இறைமறையை மக்கா குறைஷியர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! அவர்களின் முன்னோருக்குக் கிடைக்காத
ஒரு கருவூலம் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. அதை இவர்கள் சிரமேற்றிக்
கொண்டாட வேண்டாமா? என இறைவன் வினவுகின்றான்.
இவ்வசனத்தின் இரண்டாம் அடிதான் இரு பொருள் மயக்கத்தைத் தந்துவிடக்கூடும். “முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்றா
இவர்களிடம் வந்துவிட்டது!” – என்றோ “முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்று
அவர்களிடம் வந்துள்ளதா?” என்றோ மொழிபெயர்த்தால் முன்னோர்களுக்கும் – குறிப்பாக
அறியாமைக் காலத்தில் இறந்துபோன மூதாதையருக்கும் – இந்தப் பாக்கியம் கிடைத்திருந்தது
என்ற பொருள் வந்துவிடும்.
அவ்வாறே பல பொருள்கள் கொண்ட சொற்கள் இடம்பெறுகையில்
எச்சரிக்கையுணர்வு தேவை. எடுத்துக்காட்டாக, (وما قلى) உம்முடைய இறைவன் உம்மீது கோபம் கொள்ளவில்லை (93:3) என்பதே இதன் பொருளாகும். ஆனால், (قََلى) எனும் சொல்லுக்கு, இறைச்சியைப் பொரித்தல், தலையில் அடித்தல்
ஆகிய பொருள்களும் உண்டு. (قضى) என்பது மற்றொரு சொல். இதற்கு நிறைவேற்றுதல், பூர்த்தி செய்தல்,
தீர்மானித்தல், முடிவெடுத்தல் முதலான பொருள்கள்
உண்டு.
எழுத்தில் – குறிப்பாக மொழிபெயர்ப்பில் – வழக்கொழிந்த சொற்களை,
அல்லது வழக்கே இல்லாத சொற்களைத் தவிர்க்க வேண்டும். எத்திவைத்தல், போஷித்தல், நன்மாராயம்,
விஸ்தீரணம், இணைவைத்தல் (‘கற்பித்தல்’தான் சரி), பிச்சளம் போன்ற இலக்கணப் பிழையாக மொழிப்படுத்தக் கூடாது. இருக்குகிறது; எலும்பு கிடந்தன; முற்கள் கிடந்தது; ஆசிரியர் சொல்லப்பட்ட (சொன்ன எனும் இடத்தில்) போன்ற பிழைகளைக் களைய வேண்டும்.
சில அரபிச் சொற்களுக்கு நல்ல தமிழைப் பயன்படுத்த முன்வர வேண்டும். எ.கா: இல்ஹாம் - அகத்தூண்டல்; அதான் – தொழுகை அறிவிப்பு; இஃப்தார் – நோன்பு துறப்பு (திறப்பு அல்ல); சிக்த் – கருச்சிதைவு (விழுகட்டி அல்ல); உளூ - அங்கத்தூய்மை; ஸஃப் - அணி; ஃகுஸ்ல் – குளியல் அல்லது நீராடல்; கன்ஸ் – திரண்ட செல்வம். அவ்வாறே இலக்கணம் மற்றும் இலக்கியச் சொற்கள் அனைத்திற்கும் சரியான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
ஆக, அரபியிலிருந்து நல்ல தமிழுக்கு மொழிபெயர்க்க ஆலிம்கள் கிடைப்பதில்லை. பயிற்சி அளித்தே மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க வேண்டியுள்ளது. ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தால் வளர்ந்துவரும் இக்கலையில் முத்திரை பதிக்க முடியும்.
மூளையைப் பிசைந்து, புதிதாகக் கருத்துகளைத் தேடி நூல்கள் எழுத வேண்டிய சுமை இன்றைக்கு இல்லை. நாம் கற்ற அரபி மொழியில் கொட்டிக் கிடக்கின்றன கருத்துகள். அவற்றுக்குத் தமிழ் வடிவம் கொடுக்கவே நம் ஆயுள் போதாது. தமிழகத்தில் இத்துறைக்குத் தளம் உண்டு; களம் உண்டு. தகுதியான ஆட்கள்தான் இல்லை. இனிமேலாவது இத்துறையில் உலமாக்கள் அக்கறை காட்ட வேண்டும். இஸ்லாமிய அறிவுச் செல்வங்கள் தமிழ்கூறும் நல்லுலகின் கைக்கு எட்ட வேண்டும். இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட நாம் எழுதுகோலைத் தூக்கியாக வேண்டும்!
ஆக்க்கப்பூர்வமான கட்டுரை.கடைசி பாரா முத்திரை.
ReplyDeleteஅருமை. தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஆலிம்கள் ஆற்ற வேண்டிய பல சேவைகளில் மொழிப்பெயர்ப்பும் ஒன்று தான். இந்த தொடரோடு எந்த துறை சார்ந்த இஸ்லாமிய நூல்களை அல்லது எந்த நூல்களை மொழிப்பெயர்ப்பு செய்யலாம் என்கிற நூல்களின் பட்டியலை தாங்கள் தந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete