னிதனால் மறக்க முடியாத மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள், நூல்கள்... எனப் பல உண்டு. ஏதாவதொரு விதத்தில் இவற்றால் பாதிப்பிற்குள்ளாகும் மனிதனால் அவற்றை -முயன்றாலும்- மறக்க இயல்வதில்லை. பாதிப்பு நல்லதோ கெட்டதோ! அது ஏற்படுத்தும் காயத்தின் வடு, அல்லது அது தரும் சுகத்தின் தொடு மாறாத நினைவை நெஞ்சில் விட்டுச்செல்கிறது. அது எப்போது மாறும் என்று கெடு சொல்ல முடியாது.
|
தாயின் அடக்கத் தலம் வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாயின் நினைவில் ஆழ்ந்துபோய் கண்ணீர் சிந்துகிறார்கள். தோழர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துவிடுகிறார்கள். சிறு வயதில் குறைஷிகளின் ஆடுகளை மேய்த்ததையும் அதற்குக் கிடைத்த கூலியையும்கூட மறந்துவிடவில்லை அந்த மனிதகுல மேய்ப்பர்.
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மறைவுக்குப்பின், அவர்களுடைய சகோதரியின் குரலைக் கேட்டவுடன் பழைய நினைவுக்குச் சென்றுவிடுவார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். கதீஜாவை மறக்க முடியாமல் பல நேரங்களில் நினைவுகூர்ந்தார்கள் நபிகளார்.
ஏன், இறைவனே நபி (ஸல்) அவர்களின் அநாதைப் பருவத்தை நினைவூட்டி, தான் அரவணைத்துக்கொண்டதை அருட்கெடையாகச் சொல்லிக்காட்டுகின்றான். நல்வழி அறியா ஒரு சமூகத்தில் பிறந்து, அவனிக்கே நல்வழிகாட்டியாக மாறியதையும் செல்வச் செழிப்பு இல்லாத குடும்பத்தில் பிறந்து, பின்னாளில் தன்னிறைவு பெற்றதையும் நினைவுபடுத்தி ஒரு கட்டத்தில் தேற்றுகின்றான் வல்லவன். நினைவுகள் எவ்வளவு நல்லது பார்த்தீர்களா?
பிறந்த மண், ஜனித்த வீடு, பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், உறவுகள், பள்ளி, பள்ளித் தோழர்கள், தினமும் நடந்துசெல்லும் சாலை, சாலையில் அடிக்கடி பார்க்கும் மனிதர்கள், வாழ்க்கைத் துணை, ஆலோசனையும் நல்வழியும் வழங்கும் அக்கறையாளர்கள்... இப்படி
எத்தனையோ! சில நேரங்களில் ஒரே ஒருமுறை சந்திப்பில் நம் மனதை ஆக்கிரமித்துவிடும் மனிதர்களும் இல்லாமலில்லை.
யா
|
ருக்கும் -அவர் பிறந்த மண் உசத்திதான்; மறக்க முடியாததுதான். குக்கிராமமோ பெரு நகரமோ; செழிப்பான பூமியோ காய்ந்துபோன காடோ; வசதிவாய்ப்புகள் நிறைந்ததோ சாலையே இல்லாத மண்தரையோ- எதுவானாலும் பிறந்த பூமிதான் அவரவருக்குச் சிறந்த பூமி.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம், திண்டுக்கல் வட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள பேரூராட்சியே சித்தையன்கோட்டை. முற்காலத்தில் ‘சித்தையன்’ என்ற குறுநில மன்னன் ஆண்ட பகுதி. அவனுடைய கோட்டையொன்று சிதிலமடைந்த நிலையில் இன்றும் ஊரின் மேற்கே உள்ளது. இதனாலேயே இவ்வூருக்கு சித்தையன்கோட்டை என்ற பெயர் வந்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுவதுண்டு.
குக்கிராமமும் அல்ல; நகரமும் அல்ல. நடுத்தரமான ஊர். இதுவே நான் பிறந்த ஊர். விவசாயத்தை நம்பியுள்ள, வானம் பார்த்த பூமி. சித்தையன்கோட்டைக்கு மேற்கில் காமராசர் அணை உண்டு. அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டால் மட்டுமே ஊரின் வாய்க்காலில் நீர் வரும். அப்போது வாய்க்காலை ஒட்டிய பகுதிகளான பெரியதேக்கம், கட்டேரி
போன்ற வயல்களுக்குப் பாசனநீர் கிடைக்கும். மும்மாரி மழையெல்லாம் பொழிவதில்லை. ஒரு போகம் மட்டுமே பயிரிடப்படுகிறது.
சித்தையன்கோட்டை, ஆத்தூர் போன்ற கிராம மக்களின் குடிநீர் தேவையை காமராசர் அணைதான் நிறைவேற்றிவந்தது. நல்ல சுவைநீரை அப்பகுதி மக்கள் அருந்திவந்தனர். அங்கிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக இப்போது காமராசர் அணையிலிருந்து தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்குக் கிடைத்துவந்த சுவையான குடிநீர் பறிபோனது. நிலத்தடி நீர்தான் ஒரே வழி. கிராமங்களை வஞ்சித்து நகரங்களை வாழவைப்பதே இந்தியாவின் இலக்கணமாகிவிட்டது. நல்ல குடிநீரும்போய், விவசாயமும் பொய்த்துப்போய், வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் மக்கள் செல்ல வேண்டிய நிலை.
சி
|
த்தையன்கோட்டையில் முஸ்லிம்களே அதிகம். இரண்டு பள்ளிவாசல்கள். அடக்கத்
தலத்துடன்கூடிய பழைய பள்ளிவாசல் ஒன்று. இதை வடக்குப் பள்ளிவாசல் என்று மக்கள் அழைப்பதுண்டு. மற்றொன்று ஊரின் மையப் பகுதியில் உள்ள புதுப்பள்ளிவாசல்; அல்லது தெற்குப் பள்ளிவாசல். இது 13.03.1953இல் கட்டப்பட்டது. புதுப்பட்டியில் சிறிய பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது.
சித்தையன்கோட்டை பழைய பள்ளிவாசல் |
முஸ்லிம்களுடன் செட்டியார்கள், வண்ணார்கள், மறவர்கள், குறவர்கள், தலித்கள் ஆகியோரும் இங்கு வசிக்கின்றனர். ஊரைச் சுற்றி தலித்களே பெரும்பாலும் வாழ்கின்றனர். அவர்கள்
முஸ்லிம்களை அண்டியே வாழ்பவர்கள். சமய ஒற்றுமைக்கு சித்தையன்கோட்டை நல்லதோர் எடுத்துக்காட்டு. மாமன்-மச்சான் உறவு சொல்லி நெருக்கமாக வாழ்கின்றனர்.
ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் மூத்த சகோதரர் முஹம்மது மீரான் அவர்களின் மகளுக்குத் திருமணம். புகுந்த வீட்டுக்கு மணமகளை அனுப்பிவைக்கும்போது, பிரிவு ஏக்கம் தாங்காமல் பெற்றோர், உற்றார் உறவினர் கண்கலங்குவது வழக்கம். எங்கள் குடும்ப நண்பரும் ஊரில் பெரிய மனிதருமான குஞ்சரம்பிள்ளை ஐயாவின் மகன் பாஸ்கரன் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். பாஸ்கரனை நாங்கள் அண்ணன் என்றே அழைப்போம். அந்த அளவுக்கு இரு குடும்பங்களுக்கிடையே நெருக்கம். என் அண்ணன்
மகளை, மணமகன் இல்லத்திற்கு அனுப்பிவைத்தபோது அண்ணனைவிட பாஸ்கரன் தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்துத் திகைத்துப்போனேன். அண்ணியும் அழுததாக ஞாபகம்.
முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் அங்குள்ள இந்துக்களுக்கு அத்துப்படி. எங்கள்
வீட்டில் பண்ணை வேலை செய்த பெரியசாமி, சின்னு சகோதரர்கள் சரளமாக கலிமா சொல்வார்கள்; சலாம் சொல்வார்கள்; பிஸ்மில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்ஷா அல்லாஹ்... எல்லாம்
அவர்களுக்கு அன்றாட மொழிகளாகிப்போயின.
சி
|
த்தையன்கோட்டையில் மூன்று முஸ்லிம் ஜமாஅத்கள் உள்ளனர்... 1. நல்லாம்பிள்ளை ஜமாஅத். 2. வைகை கரையார் ஜமாஅத் 3. முசிறியார் ஜமாஅத். இவையெல்லாம் சாதிகள் என்றோ குலப்பெயர்கள் என்றோ எண்ணிவிடாதீர்கள். அடையாளப் பெயர்கள்தான். ஒரு காலத்தில், இந்த ஊருக்கு எந்ததெந்த இடங்களிலிருந்து முஸ்லிம்கள் குடிபெயர்ந்து வந்தார்களோ அந்த இடங்களின் பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் செம்பட்டியைத் தாண்டி நல்லாம்பிள்ளை (நல்ல ஆண்பிள்ளை) பட்டி என்ற ஊருக்குத் தேய்ந்துபோன ஒரு சாலை பிரியும். அங்கு போய் பார்த்தால் ஊரே இருக்காது. வெறும் வயல்வெளிதான். ஒரேயோர்
அடக்கத் தலம் (கப்று) மட்டும் உண்டு. அங்கு ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர். விவசாயம் பொய்த்ததாலோ என்னவோ அங்கு வசித்த முஸ்லிம்கள், அடியோடு
புலம்பெயர்ந்து அருகிலுள்ள சித்தையன்கோட்டை, சற்று தள்ளியுள்ள உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில்போய் குடியேறிவிட்டார்களாம்! பழனி கீரனூர் அருகே உள்ள மேல்கரைப்பட்டி கிராமத்திலும் சிலர் இருக்கிறார்கள். சித்தையன்கோட்டையில் மட்டும் 560 தலைக்கட்டுகள் (Family Unit) உள்ளனர்.
இவர்கள்தான் ‘நல்லாம்பிள்ளைகள்’
என அறியப்படுகின்றனர். நல்லாம்பிள்ளை முஸ்லிம்களின் முன்னோர்கள் சைவப் பிள்ளைமார்களாக இருந்தவர்கள் என்றும் இஸ்லாத்தில் இணைந்தபின் நல்லாம்பிள்ளை என்று பெயரை மாற்றிக்கொண்டுவிட்டனர் என்றும் சிலர் கூறுவதுண்டு. அவ்வாறே, வைகை கரையிலிருந்து குடிபெயர்ந்த முஸ்லிம்கள் ‘வைகைகரையார்’ என்றும் முசிறி பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் ‘முசிறியார்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பகுதியிலிருந்து வந்தவர்களும் தத்தம் உறவுகளுடன் தனித்தனி தெருக்களில் வசிக்கத்தொடங்கினர். உணவு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும்கூட இம்மூன்று குழுக்களிடையே வித்தியாசம் உண்டு. இதனால், தெருக்களின் பெயர்களாலும் இவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். தெற்குத் தெருவில் நல்லாம்பிள்ளைகள், வடக்குத் தெருவில் வைகைகரையார்கள், புதூரில் (கிழக்கு) முசிறியார்கள் என வசிக்கின்றனர். இருப்பினும், ஒருவரின் சுகதுக்கங்களில் மற்றவரும் பங்கெடுத்து, புரிந்துணர்வோடு வாழ்ந்துவருகின்றனர்.
மா
|
ர்க்க அறிஞர்கள் (ஆலிம்கள்) நிறைந்த ஊர் சித்தையன்கோட்டை. முஸ்லிம் துவக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் மேனிலைப் பள்ளி, குர்ஆன் மத்ரசாக்கள் ஆகியவை உண்டு. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மௌலவி, ஜலீல் தாவூதி ஆரம்ப நிலை மத்ரசா ஒன்று நடத்திவருகிறார். புதிய பாடத்திட்டம், சீருடை, பயிற்சி ஆகிய சிறப்பம்சங்களோடு நடந்துவரும் அந்த மத்ரசாவின் பெயர் ‘மதீனத்துல் உலூம்’ ஆகும். தற்போது 160 மாணவர்கள் பயில்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். 3 இடங்களில் இம்மத்ரசாவின் கிளைகள் உள்ளன.
வெளியூர்களிலிருந்து வந்த மார்க்க அறிஞர்கள் மற்றும் பெரியவர்கள் மேற்கொண்ட எளிய பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம் பெற்றோர்கள் மார்க்கக் கல்விமேல் அதிக நாட்டம் கொண்டார்கள். விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. உலகக் கல்விக்கு ஏற்ற சூழலும் அப்போது ஊரில் இல்லை. இதனால், உள்ளூரில் மக்தப் மத்ரசாக்களில் குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றுக்கொண்ட கையோடு வெளியூர் அரபி மத்ரசாக்களுக்குப் பிள்ளைகளை அனுப்பிவிடுவர்.
இப்படி இதுவரை சித்தையன்கோட்டையில் ஏறத்தாழ 160 ஆலிம்கள் உருவாகியிருக்கிறார்கள். இதே பழக்கம்
அருகிலுள்ள சித்தரேவு (சித்தூர்), ஆத்தூர் ஆகிய ஊர்களையும் தொற்றிக்கொண்டது. அங்கும் ஆலிம்கள் கணிசமாக உள்ளனர்.
த
|
மிழகத்தின் பிரபல அரபிக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், இமாம்கள், பேச்சாளர்கள் எனப் பல்துறை அறிஞர்களை சித்தையன்கோட்டை ஈன்றுள்ளது. அவர்களில் குறிப்பிடத் தக்க சிலர்: 1. மறைந்த
மேதை மௌலானா, ஹுசைன் முஹம்மது பாகவி. ஸஃகீர் ஹள்ரத் என்றழைப்பர். எனக்கு
மாமு முறை. வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத்தில் சிறிதுகாலம் உஸ்தாதாகப் பணியாற்றிய அன்னார் நிருநெல்வேலி பேட்டை, கூத்தாநல்லூர் முதலான மத்ரசாக்களில் முதல்வராகப் பணியாற்றினார்கள்.
கண்டிப்பிற்கும் சுயமரியாதைக்கும் பெயர்போன ஸஃகீர் ஹள்ரத் அவர்கள், சிறந்த பேச்சாளர். கட்டிப்போடும் பேச்சுத்திறன். தமிழ் கொஞ்சும் உரைநடை. அன்னாரிடம் அனைவருக்கும் மரியாதை கலந்த அச்சம். 1968ஆம் ஆண்டு என நினைக்கிறேன். புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஸஃகீர் ஹள்ரத் அவர்கள் திருமக்காவிலேயே இறந்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். மேட்டுப்பாளையத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த நான், ஒருநாள் இரவு கனவில் என் தந்தை இறந்துபோனதாகக் கண்டு காலையில் அழுதுகொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் ஹள்ரத் அவர்களின் இறப்புச் செய்தி வந்துசேர்ந்தது.
சித்தையன்கோட்டையில் ஒரு அரபி மத்ரசாவைத் தம் சொந்த முயற்சியில் தொடங்கிவைத்துவிட்டுத்தான் ஸஃகீர் ஹள்ரத் அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். அன்னார் உயிரோடு திரும்பியிருந்தால், அந்த மதரசாவும் உயிர் பிழைத்திருக்கும். தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே மத்ரசா நின்றுபோனது,
அவ்வூருக்கு ஒரு பேரிழப்புதான்!
2. வேலூர்
பாகியாத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த அறிஞர் மௌலானா H. கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள். அன்னாரின் தந்தையும் ஆலிம்தான். மௌலானா, ஹுசைன் முஹம்மது பாகவி என்ற ‘கபீர்’ ஹள்ரத் அவர்களே அன்னாரின் தந்தை. 3. மேட்டுப்பாளையம் ஃபைஜுல் பரகாத் அரபிக் கல்லூரியில் நீண்ட காலம் முதல்வராகப் பணியாற்றிய மௌலானா, N. அப்துல்லாஹ் பாகவி ஹள்ரத் அவர்கள். முதுமையின் காரணத்தால் உடல் மெலிந்து அடையாளம் மாறிப்போய் மகன் வீட்டில் இருந்துவருகிறார்கள்.
அப்துல்லாஹ் ஹள்ரத்துடனான சந்திப்பு |
4. பெங்களூர் சபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியில் இறுதி மூச்சுவரை பேராசிரியராகப் பணியாற்றிய மௌலானா, முஹம்மது மீரான் பாகவி. அமைதியான உரை; இறையச்சத்தைத் தூண்டும் பேச்சு; சுன்னத்தான வாழ்க்கை. 5. சேலம் மழாஹிருல் உலூம் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் பணியாற்றி மறைந்த மௌலானா, ஷாஹுல் ஹமீது பாகவி (சீனி ஹள்ரத்). 6. இராஜகிரி காசிமிய்யா மதரசாவில் முதல்வராகப் பணியாற்றிய (மற்றொரு) கமாலுத்தீன் ஹள்ரத். 7. சிந்தாமணிப்பட்டி மௌலானா, சிராஜுத்தீன் ரஷாதி. இவர், சிந்தாமணிப்பட்டியில் அரபிக் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றை நடத்திவருகிறார்.
இ
|
மாம்களாகப் பணியாற்றி புகழ் பெற்றோர் பலர். கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசலில் இமாமாகப் பல்லாண்டுகள் பணியாற்றி மறைந்த முஹம்மது ஹுசைன் பாகவி (ஓடப்பட்டி ஹள்ரத்), தேவதானப்பட்டியில் நீண்டகாலம் இமாமாக இருந்த முஹம்மது இல்யாஸ் உலவி, அலாவுத்தீன் பாகவி (சித்தார்கோட்டை), அவருடைய தந்தை அப்துல் கரீம் நூரீ, ஜியாவுத்தீன் பாகவி, அஷ்ரப் அலீ ரஷாதீ முதலானோரைக் குறிப்பிடலாம்.
பிரசாரத்தில் பெயர்பெற்றவர்களும் உளர். மௌலவி தாஹா கனி நூரீ, சையித் முஹம்மத் பாகவி (பாவா ஹள்ரத்), யூசுஃப்
ஹள்ரத், நைனார் ஹள்ரத், அப்துல் வஹ்ஹாப் பாகவி, இல்யாஸ் உலவீ, சலாஹுத்தீன் பாகவி ஆகியோர் சில எடுத்துக்காட்டுகள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சராசரியாக 10க்கும்
மேற்பட்ட மாணவர்கள் அரபி மத்ரசாக்களில் கல்வி பயின்றுவந்த சித்தையன்கோட்டையில் இன்று ஓரிறு மாணவர்களேனும் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. மற்ற ஊர்களைப் போன்றே, சித்தையன்கோட்டையிலும் ஏற்பட்ட பொருளாதார மாற்றமே இதற்குக் காரணம் எனலாம்!
உ
|
லகமயமாக்கலைத் தொடர்ந்து உலகம் சுருங்கியது. தொழில்நுட்பம் பெருகியது. வசதியான வாழ்க்கைமீது நாட்டம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு, தான், தன் மனைவி, மக்கள் என்ற குறுகிய பார்வை, தார்மிகப் பண்புகள்மீதான அலட்சியப்போக்கு, வரம்பு மீறிய சுயநலம்... என எல்லாமாகச் சேர்நது பொருளாதாரத்திற்கு முதல் முன்னுரிமை கொடுத்துவிட்டனர். மார்க்கமாவது, மறுமையாவது -எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
இரண்டொரு குழந்தைகள்! அவர்களை
எப்பாடுபட்டேனும் பட்டப்படிப்புவரை படிக்கவைத்துவிட வேண்டும் என்ற வைராக்கியம்! படித்து
முடித்தபின் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ கைநிறைய சம்பளம் தரும் ஒரு வேலை! வசதியான இடத்தில் திருமணம்! பேரக்குழந்தைகளுடன் பொழுதைக் கழித்தல்- என்ற வாழ்க்கைத் திட்டத்திற்குப் பெற்றோர்கள் வந்து ஆண்டுகள் பல கழிந்துவிட்டன. மாநகரம், நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் வியாபித்துவிட்ட இப்புதிய கண்ணோட்டத்திற்குச் சித்தையன்கோட்டை முஸ்லிம்களும் விதிவிலக்கு அல்ல.
சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகம் |
ஓதவைப்பதை நிறுத்திவிட்டார்கள். ஆலிம்கள் உற்பத்தி நின்றுபோனது. பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. படித்த வர்க்கம் வெளிநாடுகள் செல்வதற்கு முன்பே, அவர்கள் வீட்டு ஆண்கள் வளைகுடா நாடுகளில் தெரிந்த வேலைகளைச் செய்து பொருளீட்டத் தொடங்கிவிட்டார்கள். குடிசைகளை இப்போது பார்க்க முடியவில்லை. பெரிய வீடுகள்; நல்ல உணவுகள்; உடைகள்; ஆபரணங்கள் என வசதிகள்
வந்துவிட்டன. ஆனால், இளவல்களிடம் கட்டுப்பாடு, கீழ்ப்படிதல், நிதானம், ஒழுக்கம், பண்பு, பாசம், பெரியவர்களை மதித்தல், பெற்றோர் மற்றும் உறவுகளைப் பேணல், சிக்கனம், சேமிப்பு போன்ற உயர் கோட்பாடுகள் ஒவ்வொன்றாக விடைபெற்றுவருகின்றன.
சுருங்கக்கூறின், சித்தையன்கோட்டை நிறம் மாறிப்போய்விட்டது; முகம் மாறிப்போய்விட்டது. பொருளாதாரப் பற்றாக்குறை இருந்த வரை பொருளுக்கு மட்டுமே பஞ்சம்! பொருள் வந்தவுடன் மற்ற எல்லாவற்றுக்குமே பஞ்சம்! பொருள் என்பது இல்லாவிட்டாலும் தொல்லை! இருந்தாலும் தொல்லை!
“உங்கள் பொருட்செல்வங்களும் மக்கட்செல்வங்களும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” (8:27) என்ற வேத வரிகள் எவ்வளவு பெரிய உண்மை!
________________________________
No comments:
Post a Comment