Tuesday, September 22, 2015

மரணப் படகில் ஐரோப்பா ஹிஜ்ரத்


கான் பாகவி

ந்த ஆண்டு ஏப்ரல்வரை 1700 முஸ்லிம் அகதிகள் மத்தியத் தரைக் கடலில் தங்களது மரணத்தைச் சந்தித்தனர். அவர்களில் 800 பேர் ஒரே நாளில் (ஏப்ரல்-19) மரணத்தைத் தழுவினர். கடலில் இத்தாலிக்கும் லிபியாவுக்கும் இடையே அவர்களின் படகு கடலில் மூழ்கியது. ஆபத்துகள் சூழ்ந்த நீண்ட பயணத்தை மேற்கொண்ட அவர்கள்ஒரோனாவில் பாதுகாப்பு தேடி சென்றவர்கள். சிரியா, ஆப்பிரிக்க ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறி, மரணப் படகுகளின்மேல் கடலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது -என்கிறதுமுஜ்தமாமாத இதழ்.

19 வயது இளம்பெண் சிரியாவில் வீட்டிலிருந்து ஓடினாள். பெயர்: துஆ அஸ்ஸாமில். பாதுகாப்பான, சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்வோம் என்ற கனவில் புறப்பட்டாள். அடுத்து என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி துஆவே சொல்வதைக் கேளுங்கள்:


துஆவின் பேட்டி


நாங்கள் பயணித்த படகை ஒரு கப்பல் இடைமறித்தது. படகில் இருந்தவர்கள் எங்கள் படகை நிறுத்தச் சொன்னார்கள். இரும்புத் துண்டுகளையும் பலகைகளையும் எங்களை நோக்கி எறிந்தனர். எங்கள் படகோட்டியை அசிங்கமாகத் திட்டினர். படகு நிற்காமல் சென்றது. உடனே சுற்றிவளைத்து மோதினார்கள். படகில் இருந்தோர் கடலில் மூழ்கும்வரை காத்திருந்துவிட்டுப் பின்னர் புறப்பட்டுவிட்டனர்.

படகு கடலில் மூழ்கிக்கொண்டிருந்தது. சிலர் உயிரைக் காக்கப் படகிலுள்ள உயிர்காக்கும் கயிறுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். வேறுசிலர் நீரில் விழுந்தபோது படகின் இறக்கையில் (Propeller) கிழிக்கப்பட்டு உடல்கள் வெட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.

உயிர் பிழைத்த 100 பேரில் நானும் ஒருத்தி. நான் உயிர்காக்கும் கயிறைப் பற்றிக்கொண்டே, என்னைப் பெண்பேசியிருந்த என் எதிர்காலக் கணவரைத் தேடினேன். அவர் படகோடு மூழ்கிவிட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது. உயிர் பிழைத்தவர்கள் 3 நாட்களாக உணவோ தண்ணீரோ இல்லாமல் தத்தளித்தோம். பலர் வேகமாக மரணத்தைத் தழுவிக்கொண்டிருந்தனர்.

மக்கள் என்னிடம் தம் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளுமாறு வேண்டினர். முதியவர் ஒருவர் தம்முடைய ஒரு வயது பேத்தியை என்னிடம் ஒப்படைத்தார். அவளை உயிர்காக்கும் கயிற்றோடு பிணைத்துக்கொண்டேன்பிறந்து ஒன்றரைவயதே ஆன குழந்தையையும் 6 வயதான மகனையும் கொண்டுவந்த ஒரு தாய், தன் குழந்தையைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார். அக்குழந்தையையும் என்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டேன். சிறிது நேரத்தில் அந்த முதியவர், அந்தத் தாய், அவர் மகன் ஆகியோர் இறந்துபோனார்கள்.

இப்போது, எனக்காக இல்லாவிட்டாலும் அவ்விரு குழந்தைகளுக்காக வேண்டியாவது நான் உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு. லைபீரியா நாட்டுக் கொடியுடன் அங்கு வந்த ஒரு கப்பல்மூலம் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். அதற்கு முன்பே அந்த ஒரு வயது குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்டது. கிரீட் தீவுக்குக் கொண்டுவரப்பட்டோம். இது மத்தியத் தரைக்கடலின் கிழக்கே உள்ளது. 2014 செப்டம்பர் 10ஆம் தேதி நடந்த இக்கொடூரத்தை துஆவால் மறக்க இயலவில்லை. 500 பேருக்கும் அதிகமானோர் அப்படகில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும்தான். 11பேர்தான் பிழைத்தவர்கள். மால்டாவின் கிழக்குக் கடற்கரைக்கருகில் இது நடந்தது. இது, மத்தியத் தரைக் கடலில் சிசிலியின் தெற்கே உள்ள தீவு நாடு.


ஆயிரக்கணக்கானோர்


இப்படி எத்தனையோ சம்பவங்கள்! ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரத்திற்கான உயர்மட்டக் குழு அறிக்கையின்படி: கடந்த ஆண்டு நவம்பர்வரை 3400 பேர் மத்தியத் தரைக் கடலில் இறந்துபோனார்கள்; அல்லது காணாமல் போனார்கள். 2 லட்சம் அகதிகள் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை இத்தாலி ஏற்றுக்கொண்டது; மீதிப்பேர் கிரீஸில் அடைக்கலமாகியுள்ளனர். இவர்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்தவர்கள். சிரியா மற்றும் எரித்ரியா நாடுகளில் இருந்து வந்தவர்களே பாதிப்பேர்.

2015இல் முதல் 6 மாதங்களில் 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் மத்தியத் தரைக்கடல் வழியாக ஐரோப்பா நாடுகளுக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிரியாவிலிருந்து வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆவர். மற்றவர்கள் எரித்ரியா, இராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாளொன்றுக்கு 1000பேர் வீதம் அகதிகள் கிரீஸ் தீவுக்கு வருகின்றனர். பால்கனின் மேற்கே உள்ள வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கே பெரும்பாலான அகதிகள் வந்து குவிகின்றனர். சிரியாவின் அண்டை நாடுகளில் மட்டும் 4.1 மில்லியன் சிரிய அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனராம்! லிபியா நாட்டிலிருந்து நாளொன்றுக்கு 300-700 அகதிகள் ஐரோப்பா நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

காரணம் என்ன?

இலட்சக்கணக்கானோர் உயிரைப் பணயம் வைத்து மேலைநாடுகளுக்கு அகதிகளாகச் செல்வதற்குக் காரணம் என்ன? அதிலும் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளிலிருந்து, சொந்த மண்ணைத் துறந்து இப்படி ஓடிவரக் காரணம் என்ன?

1. வறுமை. இது அநேகமாக ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் நிலை. எண்ணை வளமிக்க ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்கூட அகதிகள் புற்றீசல்போல் வெளியேறுகிறார்கள் என்றால் காரணம் என்ன? இருக்கும் இயற்கை வளங்களை அங்குள்ள சிலர் மட்டும் கொள்ளையடிக்கிறார்கள். அல்லது அந்நிய சக்திகள் சுரண்டி எடுத்துப்போகின்றன. மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வியோ அடிப்படை வசதிகளோ ஆளுமைத் திறனோ ஏதுமின்றி, இன்னும் காட்டுவாசிகளைப் போன்றே வாழ்கின்றனர். பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்ற இந்த இஸ்ரேலுக்குத் தெரிந்திருக்கும் தொழில்நுட்பம், இந்த மக்களுக்குத் தெரியாமல்போனதுதான் பெரிய அவலம்! தெரிந்துகொள்ள முயலவும் இல்லை.

2. உள்நாட்டுப் போர். இராக், சிரியா, எகிப்து, லிபியா போன்ற அரபு நாடுகளில் இதுதான் நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே ஐக்கியம் இல்லை. ஒருவரைப் பற்றி ஒருவருக்குப் புரிந்துணர்வு இல்லை. ஷியா-சன்னி பிரிவினை, இக்வான்-சலஃபி பிரிவினை, குர்தி-இராகி பிளவு... என்று பல பிளவுகளால் அநியாயமாக முஸ்லிம்கள் சிதறுண்டு கிடக்கின்றனர்.

3. அரசியல் பதவிப்போட்டி. முறையாகத் தேர்தல் நடத்தி ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவ்வாறு தேர்தல் நடந்து அதில் ஒரு கட்சி வெற்றி பெற்றாலும் இராணுவத்தின் துணையால் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, கொடுங்கோல் ஆட்சி நடத்துவது.

இப்படி உயிர்கள் மடிவது ஒரு பக்கம்! செல்வங்கள் கொள்ளைபோவது மறுபக்கம்! அகதிகளால் அந்நாடுகளுக்கு உலக அரங்கில் ஏற்படும் அவமானம் இன்னொரு பக்கம்! இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த நெருப்புப் பொறியைப் பெரிதாக்கி, தீக்கங்கில் எண்ணெய் வார்க்கின்றன. அது, பற்றி எரியும்போது குளிர்காய்கின்றன. இதைப் புரிந்தும் புரியாமலும் முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டு தினந்தோறும் அழிந்துகெண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இப்போது அகதிகளை வரவேற்று இடமளித்திருக்கும் நாடுகளுக்கு மலிவான குறைந்த கூலியில் வேலைகள் செய்ய இலட்சக்கணக்கான கரங்கள் கிடைத்துவிட்டன. தங்குவதற்கு இடமும் பசியைப் போக்க சிறிது உணவும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் அகதிகள் இருப்பதால், குறைவான கூலிகூட அவர்களுக்கு நிறைவுதான்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் எழுதுவதைப் பாருங்கள்: அகதிகள் ஐரோப்பாவிலிருந்து பெற்றுக்கொள்வதைவிட, அக்கண்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் அகதிகள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதே உண்மை. வரிகள்மூலம் அரசுக்கு வருமானத்தைத் தருகிறார்கள் அகதிகள். ஒரு நாட்டுக்கு அகதிகள் வரும்போது தங்களுடன் பல திறன்களையும் சேர்த்தே கொண்டுவருகிறார்கள். சிலர் புதிய வேலைவாய்ப்புகளைக்கூட கொண்டுவரலாம்.

19 நாடுகளில் உள்ள உள்ளூர் மக்கள், அகதிகளின் வருகையால் பலனடைந்துள்ளனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. டென்மார்க்கில் 1990களில் பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் குடியேறிய பிறகு, அந்நாட்டு மக்களில் பலர் உடலுழைப்பு சார்ந்த பணிகளிலிருந்து திறன்மிகு தொழில்களுக்கு மாறி, கைநிறைய சம்பாதித்துள்ளனர் என்கிறது மற்றோர் ஆய்வு.

பிறப்பு விகிதம் குறைவாகவும் முதியோர் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அகதிகள் வருகை முக்கியமான நிகழ்வாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளைவிடவும் சிரியா நாட்டு அகதிகளை வரவேற்பதில் ஜெர்மனி அதிக ஆர்வம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆக, ஒரு நாட்டிலிருந்து அகதிகளாக மக்கள் வெளியேறுகிறார்கள் என்றால், மனிதவளமும் வெளியேறுகிறது என்றுதான் பொருள்.




முஸ்லிம் உலகம் விழிப்பது எப்போது?

இந்த நடுக்கடல் சாவுகள் நிற்பது எப்போது?
___________________

No comments:

Post a Comment