Wednesday, May 16, 2018

வல்லவரெல்லாம்_நல்லவரா?

வல்லவரெல்லாம்_நல்லவரா?

#கான்_பாகவி

ஒருவர் வல்லவராக இருப்பதால் நல்லவராகவும் இருப்பார் என்று நம்புவது, நம்பியவரின் தவறு. வல்லவராக இருப்பவரெல்லாம் நல்லவரும் அல்லர்; நல்லவராக இருப்பவரெல்லாம் வல்லவரும் அல்லர். வல்லவரில் சிலர் நல்லவராகவும் இருக்கலாம்! நல்லவரில் சிலர் வல்லவராகவும் இருக்கலாம்!

ஒருவர் நல்லவரும் அல்லர்; காரணம், நல்லவருக்கான குணநலன்கள் அவரிடம் இல்லை; வல்லவரும் அல்லர்; காரணம், வல்லவருக்கான திறமைகள் அவரிடம் இல்லை. மிக அரிதாகவே, ஒருவர் வல்லவராகவும் இருப்பார்; நல்லவராகவும் இருப்பார்.

வல்லவர் – என்றால் என்ன பொருள்? ஒன்றைச் செய்வதில் மிகுந்த திறமை உடையவரே வல்லவர் எனப்படுகிறார். அவர் பேச்சில் வல்லவர்; அவர் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர் என்று கூறுவர். ஆக, ‘வல்லவர்’ (Adept) என்பது, ஆற்றல், சக்தி, திறன் ஆகிய வலிமை (Power)  சார்ந்த பண்பு.

நல்லவர் – என்றால் யார்? பொதுவாக மனிதர்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒழுங்கு, நற்குணம், நன்னடத்தை முதலியவை உடையவரே நல்லவர் எனப்படுவார். ஆக, ‘நல்லவர்’ என்பது, நடத்தை, செயல்பாடு குறித்த பாராட்டத் தகுந்த, தீயதாக இல்லாத, பண்பாடு சார்ந்த (Character) பண்பு.

*மார்க்க ஒளியில்*

இஸ்லாத்தில் ‘நல்லவர்’ (ஸாலிஹ்) என்பதற்கு, இறைவனுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் அடியார்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் முறையாக நிறைவேற்றுபவரே ‘நல்லவர்’ (ஸாலிஹ்) எனப்படும். ‘நல்லடியார்’ என்பதற்குச் சிலர் இலக்கணம் சொல்கையில், மார்க்கம் எதிர்பார்க்கும், அல்லது மார்க்கம் திருப்திகொள்ளும் வகையில் யாருடைய செயல்பாடு அமைகிறதோ அவரே ‘நல்லடியார்’ ஆவார் என்று கூறுகின்றனர்.

திருக்குர்ஆனில், வெற்றியடைந்த இறைநம்பிக்கையாளர்கள் குறித்து ‘அல்முஃமினூன்’ அத்தியாத்தின் (23) தொடக்கத்தில் குறிப்பிடுகையில் அறுபெரும் பண்புகளைச் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்:

1. உள்ளச்சத்துடன் தொழுவது 2. வீண் செயல்களிலிருந்து விலகிவிடுவது 3. கட்டாய தர்மம் (ஸகாத்) வழங்குவது 4. கற்பொழுக்கம் பேணுவது 5. கையடைப் பொருட்களையும் ஒப்பந்தங்களையும் பேணிக் காப்பது 6. தொடர்ந்து தொழுகையைக் கடைப்பிடிப்பது. இப்பண்பாளர்களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர் சொர்க்கம் கிடைக்கும். (23:1-11)

*வரலாற்று ஒளியில்*

இறைத்தூதர்களான நபிமார்கள் ஒவ்வொருவரையும் திருக்குர்ஆன் ‘நல்லவர்’ (ஸாலிஹ்) எனச் சான்று பகர்கின்றது. அவர்களில் நபி தாவூத் (அலை), சுலைமான் (அலை) போன்றோரை ‘வல்லவர்கள் என்றும் இனம்காட்டுகிறது. (12:15-19)

உலக சர்வாதிகாரி ஃபிர்அவ்ன் (ஃபாரோ), அவன் அமைச்சரவையில் முதன்மை அமைச்சராக இருந்த ஹாமான், இஸ்ரவேலர்களில் அழகும் செல்வமும் மிகுந்த பெரும் பணக்காரன் காரூன் (கோராகு) ஆகியோர்பற்றிக் குறிப்பிடும்போது, இவர்களெல்லாம் வல்லவர்களாக இருந்தார்களே தவிர, நல்லவர்களாக இருக்கவில்லை என்கிறது. (29:39)

இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ‘வல்லவராக’ இருந்த அதே நேரத்தில், வல்லமையை முதன்மைப்படுத்தவில்லை; நல்லவர் பண்புகளுக்கே முதலிடம் அளித்தார்கள்; அதனாலேயே வென்றார்கள்.

எனவே, வல்லவரெல்லாம் நல்லவர் என்று தவறாகக் கணித்து, மக்கள் குழம்பிக்கொள்ள வேண்டாம்! அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் இறைமறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்! அவர்கள் தங்கள் திறமைமீது நம்பிக்கைகொண்டார்கள்; திறமையை வழங்கிய இறைவனை மறந்தார்கள்.

No comments:

Post a Comment