#அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பிரச்சினை தொடர்பான காலச்சுவடு பத்திரிகையின் தலையங்கத்திற்கு நான் எழுதிய கடிதம்#
*அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…*
‘கல்வித் தரகர்கள்’ எனும் தலையங்கம் வாசித்து முடித்தபோது மனம் வலித்தது. தக்க தருணத்தில் முறையாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை.
உயர் கல்வித் துறையில் காணப்படும் மோசடிகளைப் பார்க்கும்போது, அன்றாடம் நடக்கும் அற்ப சொற்ப ஊழல் எனக் கருதி மௌனமாகக் கடந்துபோக இயலவில்லை. கட்டணமில்லாக் கல்வியே அரசின் அறைகூவலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவரும் வேளையில், “காசின்றி கல்வி இல்லை” என்ற எதார்த்தம் சுடுகிறது; பிடரியில் ஓங்கி அறைகிறது.
அறிவிற்கும் அறத்திற்கும் வழிகாட்ட வேண்டிய கல்விக் கூடங்கள், கலவிக் கூடங்களாக மாறிவிடுமோ என்ற அச்சம் முள்ளாய் குத்துகிறது. அடியிலிருந்து உச்சிவரை பணம் பண்ணும் தொழிற் கூடங்களாகவும் அவை மாறிப்போன நிஜம், நிஜமாகவே நோகடிக்கிறது. இதையெல்லாம் நோக்குகையில், கல்வித் திட்டத்தில் எங்கோ கோளாறு இருப்பது உறுதியாகிறது.
“Teacher is Second Mother” என நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள்; ஆசிரியர்கள் அன்னையராகவே விளங்கவும் செய்தார்கள்; மாணவர்களின் கல்வி அறிவில் மட்டுமன்றி, அவர்களின் ஆரோக்கியம், குடும்ப நலன், அறநெறி ஆகியவற்றிலும் தாயைப் போன்றே அக்கறை செலுத்தினார்கள். பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை; பண்பே பிரதானமாக இருந்தது.
சுயநலமற்ற நல்லாசிரியர்கள் மட்டும் கிடைத்திருக்காவிட்டால், செய்தித்தாள் வினியோகித்து, அதில் கிடைத்த சில்லறைகளை வைத்துக்கொண்டு, படித்துப் பல பட்டங்கள் பெற்று, பிற்காலத்தில் விஞ்ஞானியாகி பெருமை சேர்த்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றோரை இந்நாடு கண்டிருக்குமா? அவர்களுக்கெல்லாம் ‘நல்லாசிரியர்’ விருது கிடைத்திருக்காது. ஆனால், இயல்பிலேயே நல்லவர்களாகத் திகழ்ந்தார்கள்.
இயந்திரங்களை இயக்கக் கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்கள், இதயங்களை இயக்குவது எப்படி என்பதைக் கண்டுகொள்ளாமல் போனதுதான், நமது துர்பாக்கியம். லட்சங்களைக் கொடுத்து கல்லூரியில் இடம் வாங்கி, லட்சங்களைக் கொடுத்துத் தேர்வுகளில் வென்று, கோடிகளைக் கொடுத்து பணியிலும் சேர்ந்துவிடும் ஒருவரிடம் திறமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? போட்டதை எடுக்கத்தானே அவர் பார்ப்பார்! இவரிடம் கல்வி கற்க வரும் அடுத்த தலைமுறை இவர்மூலம் எதைக் கற்கும்?
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல –என்பதை அடிப்படையிலேயே போதிக்க வேண்டும். பணத்திற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சமூக பிரக்ஞை, தேச நலன், மனித நேயம்… என எத்தனையோ நன்னெறிகள்தான் மனிதனைப் பண்படுத்திப் புனிதனாக்கும் –என்பதையெல்லாம் பாடமாகவும் பயிற்சியாகவும் மாணவர் உள்ளத்தில் ஊட்ட வேண்டும். இல்லையேல், மாற்றம் ஏமாற்றம்தான்.
10.5.2018
*அ. முஹம்மது கான் பாகவி*
சென்னை-14
No comments:
Post a Comment