Saturday, February 11, 2012

இதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும்


காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.

தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே! அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!


இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாசாரச் சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள். 

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எழுதிவிட்டேன் பலதடவை
முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.

நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.

சென்னை மஸ்ஜித் மஃமூர் பள்ளிவாசலில் 17.01.2012 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதன் ஒலிப்பதிவு நமது முகநூல் பக்கத்தில் வெளியாகியும் உள்ளது. m(அதன் இணைப்புகளை க்ளிக் செய்து செவியுறலாம்) https://www.facebook.com/khanbaqavi?sk=wall http://f.cl.ly/items/1Z2A3m0K1Y432z3M3C0d/Khan%20Baqavi%20Speech%20@%20mamoor%2017.01.2012.mp3 இன்னும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவில் சென்னை ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. சமுதாயத்தில் ஓர் அசைவு தென்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்...

ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் prசில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும் அவ்வண்ணமே கோரும்இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?



மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.

கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது; இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:

அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்த்து. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், இவர்கள் யார்?என்று கேட்டேன். வானவர்கள், இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)
அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆக, பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரவிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடு பட்டேனும் இந்தச் சமூகக் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.


நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

Tuesday, January 24, 2012

சமூக மாற்றத்தில் பள்ளிவாசலின் பங்கு


ggபள்ளிவாசல் என்பது ஓரிறைவனான அல்லாஹ்வைத் தொழுது வழிபடுவதற்கான இறையில்லம் ஆகும். அரபியில் மஸ்ஜித்என்பர். இதற்கு சிரவணக்கம்’ (சஜ்தா) செய்யும் இடம் என்று பொருள்.

தமிழில் பள்ளிஎனும் சொல்லுக்குப் பல பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. கடவுள், வழிபாட்டுத்தலம், அறச்சாலை, ஆசிரமம், பள்ளிக்கூடம் ஆகிய பொருள்கள் அவற்றில் அடங்கும்.

பள்ளிஎன்பதுடன் வாசல்என்பதையும் சேர்த்து, இறைவனை அடைவதற்கான நுழைவாயில் என்ற கருத்தில் மஸ்ஜித்என்பதற்கு பள்ளிவாசல்என்கிறோம். தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், வேண்டுதல், நீதிபோதனை ஆகிய நல்லறங்கள் நடைபெறும் அறச்சாலையாகவும் பள்ளிவாசல் திகழ்கிறது.

சிறுவர்கள் திருமறை ஓதவும் வழிபாடுகள் செய்யவும் கற்பிக்கின்ற சமய வகுப்பு நடப்பதால் பள்ளிவாசல் ஒரு பள்ளிக்கூடமாகவும் விளங்குகிறது. ஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் அதிகமாகத் தங்கும் இடமாக இருப்பதால் ஆசிரமம்என்ற பொருள்கூடப் பொருந்தும் என்பர் சிலர்.

ஆனால், நம்மில் பலர் எண்ணியிருப்பதைப் போன்று, பள்ளிவாசல் என்பது ஐவேளைத் தொழுகைகள் நடக்கும் இடமாக மட்டும் முற்காலத்தில் இருக்கவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில், பள்ளிவாசல்தான் முஸ்லிம் சமுதாயத்தின் முக்கியக் கேந்திரமாக விளங்கியது; மாற்றத்திற்கு வித்திட்ட சமூக மையமாகத் திகழ்ந்தது.

வழிபாடு முதல் வீரவிளையாட்டுவரை
இறையுணர்வு, இறைவழிபாடு, கல்வி கேள்வி, வழக்கு விசாரணை, தூதுக்குழுவினர் சந்திப்பு, வீரவிளையாட்டு எனச் சமூகத்தின் பல்துறை நடவடிக்கைகளும் நபி (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலில் - மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில்தான் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே -அதாவது அல்லாஹ்வை வழிபடுவதற்கே- உரியவை. எனவே, அல்லாஹ்வுடன் வேறுயாரையும் அழைக்காதீர்கள் (72:18) என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
இங்கு பள்ளிவாசல்கள் ஓரிறை உணர்வை ஊட்டக்கூடியவை என்பது உறுதிசெய்யப்படுகிறது. எனவே, பள்ளிவாசல்களில் ஓரிறை உணர்வு மட்டுமே மேலோங்கியிருக்க வேண்டும். அதற்குப் பங்கம் நேரக்கூடிய வகையில் எந்தப் பிரசாரமோ நிகழ்வுகளோ நடக்க இடமளித்துவிடக் கூடாது.

இறைவழிபாடு
பள்ளிவாசல்களில் தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆ போன்ற வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். பள்ளிவாசல்களில் வழிபாடுகள் நடப்பதற்குத் தடை ஏற்படுத்துவதோ பூட்டிவைத்து வழிபாடுகளைத் தடுப்பதோ கூடாது. பாதுகாப்புக் கருதி குறிப்பிட்ட நேரங்களில் பூட்டுவது வேறு விஷயம்.

தொழுமிடம் ஒவ்வொன்றிலும் உங்கள் முகங்களை (அல்லாஹ்வை நோக்கியே) திருப்புங்கள். அவனை மட்டுமே உளத்தூய்மையோடு வழிபட்டு அவனிடமே பிரார்த்தியுங்கள் (7:29) என்கிறது திருமறை.
மதீனா பள்ளிவாசலில் தொழுமிடத்தில் சிறுநீர் கழித்துவிட்ட ஒரு நண்பரிடம் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் சாந்தமாக எடுத்துரைத்தார்கள்:

இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆன் ஓதுவதற்கும் உரியவையாகும். (ஸஹீஹ் முஸ்லிம் - 480)

பள்ளிவாசலின் தூய்மை எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்ற அதே வேளையில், பள்ளிவாசலால் நோக்கம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வை நினைவுகூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன (13:28) எனும் இறைவசனம் திக்ரின் அவசியத்தையும்,
என்னை அழையுங்கள்; உங்களுக்கு நான் பதிலளிக்கிறேன் (40:60) எனும் வசனம் துஆவின் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்புகின்றன.
பள்ளிவாசல்களில் நிறைவேற்றப்படும் கூட்டுத் தொழுகையின் (ஜமாஅத்) சிறப்பு குறித்தும் மகிமை குறித்தும் பல நபிமொழிகள் வந்துள்ளன. ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும் தமது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் ஜமாஅத்துடன் தொழுவது மதிப்பில் இருபத்து ஐந்து(மடங்கு தொழுகைகள்) கூடுதலாகும்.

ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத்தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான்.

அவர் பள்ளிவாசலில் நுழைந்துவிட்டால், அவர் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். அவர் தொழும் இடத்தில் இருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ‘‘இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்குக் கருணை புரிவாயாக!’’ என்று பிரார்த்திக்கிறார்கள்; அவருக்குச் சிறுதுடக்கு ஏற்படாமல் இருக்கும்வரை இது நீடிக்கும். (ஸஹீஹுல் புகாரீ - 477)

கல்விகேள்வி
கல்விகேள்வியின் மையமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. மதீனா பள்ளிவாசலில், தாம் கற்ற கல்வியை நபித்தோழர்கள், குறிப்பாகத் திண்ணைத் தோழர்கள் மற்றவர்களுக்குக் கற்பித்ததன் பலனாகவே இஸ்லாம் பரவியது.

நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளில் ஓதுநர்கள்’ (அல்குர்ரா) என அழைக்கப்பட்டுவந்த திண்ணைத் தோழர்கள் எழுபதுபேர் இருந்துவந்தனர். இவர்கள் இளைஞர்கள். இவர்கள் மாலைவரை பள்ளிவாசலில் இருப்பார்கள். (நபி (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கேட்டறிவார்கள்.)

மாலையில் மதீனாவின் ஓர் ஒதுக்குப்புறத்தில் ஒன்றுகூடி, தாங்கள் கற்றதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள்; தொழுகையிலும் ஈடுபடுவார்கள்.

இதனால் அவர்களின் குடும்பத்தார், இவர்கள் பள்ளிவாசலில்தான் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள்; பள்ளிவாசலில் இருப்போர், இவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என நினைத்துக்கொள்வார்கள். அதிகாலையில், இவர்கள் சுவைநீரைத் தேடிக் கொண்டுவருவார்கள்; விறகு வெட்டிக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவரில் சாத்திவைப்பார்கள். (முஸ்னது அஹ்மத்)

ஒரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

யார் நம்முடைய இந்தப் பள்ளிவாசலில் நல்ல விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்ள, அல்லது கற்றுக்கொடுக்க வருகிறாரோ அவர், இறைவழியில் அறப்போர் புரிந்தவர் போன்றவர் ஆவார். இதன்றி வேறு நோக்கத்திற்காக யார் பள்ளிவாசலுக்குள் நுழைகிறாரோ அவர், தமக்கு உரிமையில்லாத ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் போன்றவர் ஆவார். (முஸ்னது அஹ்மத்)

கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஏற்ற இடம் இறையில்லம் என்பது தெளிவாகிறது; அத்துடன் அதற்கு மாபெரும் நன்மையும் கிடைக்கிறது என்கிறது இந்த ஹதீஸ்.

வழக்கு விசாரணை
நபி (ஸல்) அவர்களது காலத்தில் வழக்கு விசாரணைகளும் தீர்ப்பு வழங்கப்படுவதும் கைதிகள் கட்டிவைக்கப்பட்டதும் பள்ளிவாசலில்தான் நடந்துள்ளன.

நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்தபோது, ‘அஸ்லம்குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, ‘‘நான் விபசாரம் செய்துவிட்டேன் என்று சொன்னார். இவ்வாறு நான்கு தடவை அந்த மனிதர் வாக்குமூலம் அளித்தார்.

அவர் புத்திசுவாதீனத்துடன்தான் பேசுகிறார் என்பதையும் திருமணமானவர் என்பதையும் உறுதி செய்துகொண்ட நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு ஆணையிட்டார்கள்.

அவ்வாறே தொழுகை திடலுக்கு (முஸல்லா) அழைத்துச்செல்லப்பட்ட அந்த மனிதருக்கு அங்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. (ஸஹீஹுல் புகாரீ - 5270)

நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் ஸுமாமா பின் உஸால். அவரைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிப்போட்டார்கள். அவரிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) என்ன கருதுகிறீர் ஸுமாமாவே!’’ என்று கேட்டார்கள்.

அவர் சொன்னார்: நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால், பழிக்குப் பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்; (மன்னித்து) உபகாரம் செய்தால், நன்றி செய்யக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்; நீங்கள் செல்வத்தை விரும்பினால், விரும்புவதைக் கேளுங்கள்.

அவர் அப்படியே விடப்பட்டார். அடுத்தடுத்த நாட்களிலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே வினவ, ஸுமாமாவும் அதே பதிலைச் சொன்னார். மூன்றாவது நாள், ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

உடனே அவர் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த தோட்டத்தில் குளித்துவிட்டு வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். (ஸஹீஹுல் புகாரீ - 4372)

தூதுக்குழு, வீரவிளையாட்டு
நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வெளிநாடுகளிலிருந்து தூதுக்குழுவினர் வருவதுண்டு. பெரும்பாலும் அவர்கள் மதீனா பள்ளிவாசலிலேயே தங்கவைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒருமுறை யமன் நாட்டின் நஜ்ரான் பகுதி கிறித்தவர்கள் குழுவொன்று மதீனா வந்தது. அவர்களில் பேராயர்கள், மதத் தலைவர்கள் எனப் பிரமுகர்களும் இருந்தனர். பலநாட்கள் தங்கியிருந்து நபி ஈசா (அலை) அவர்கள் (இயேசு) குறித்து நபி (ஸல்) அவர்களின் கருத்து என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

நஜ்ரான் கிறித்தவர்கள் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தமது வழிபாட்டை நிறைவேற்ற முனைந்தார்கள். அப்போது முஸ்லிம்கள் தடுக்கப்போனார்கள். தடுக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைத் தடுத்துவிட்டார்கள். கிறித்தவர்கள் கிழக்கு நோக்கி தொழுதார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்)

இவ்வாறே பள்ளிவாசலில் வீரவிளையாட்டுகள் நடைபெற்றதற்கும் சான்று உள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(ஒரு பெருநாளன்று) பள்ளிவாசலில் அபிசீனியர் (ஈட்டியெறிந்து) விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், (பள்ளிவாசலை ஒட்டியிருந்த) என் அறையிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல்துண்டால் மறைத்துக்கொண்டிருந்தார்கள்.

நானாகச் சடைவடையும்வரை இவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தேன். விளையாட்டுமீது ஆவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். (ஸஹீஹுல் புகாரீ - 5236)

இதுவெல்லாம், சில எடுத்துக்காட்டுகள்தான்! முஸ்லிம்களின் மகிழ்ச்சி-கவலை, உயர்வு-தாழ்வு, அறிவு-அறியாமை எல்லாம் வெளிப்பட்டது பள்ளிவாசலில்தான். தனிமனித ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு, குடும்ப அமைதி, நாட்டுப் பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவு என எல்லாத் துறைகளும் அலசப்பட்டது பள்ளிவாசலில்தான்.

உயிரோட்டம் திரும்ப வேண்டும்
காலப்போக்கில் பள்ளிவாசலின் முக்கியத்துவம் குறைந்துபோய், சமூக மாற்றத்தில் அதற்கான பங்கு பெரிய அளவில் சுருங்கிவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமன்றி முஸ்லிம் நாடுகளிலும் இதுதான் நிலை. இந்தியாவில்கூட, பள்ளிவாசல்கள் சுதந்திரமாக இயங்க முடிகிறது. முஸ்லிம் நாடுகளில் அரசாங்கத்தின் இரும்புப் பிடியில்தான் பள்ளிவாசல்கள் சிக்கித் தவிக்கின்றன.

நாம் இங்குள்ள சூழ்நிலையில் என்ன செய்யலாம்? பள்ளிவாசலின் உள்ளும் புறமும் கட்டமைப்பு சீராக்கப்பட வேண்டும்; தூய்மை பேணப்பட வேண்டும். வக்ஃப் சொத்துகள் நேர்மையோடு பாதுகாக்கப்பட வேண்டும்; பராமரிக்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுகின்ற நல்லவர்கள் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். ஒரு மஹல்லாவின் நன்மை-தீமைக்கு அந்த நிர்வாகமே பொறுப்பு என்பதால், ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

பள்ளிவாசல் இமாம் தரமான அறிஞராக, சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும் நாட்டு நடப்புகளையும் நன்கறிந்தவராக இருக்க வேண்டும்; சமுதாயப் பிரச்சினைகளுக்கு மார்க்க அடிப்படையில் தீர்வுகாணும் ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.

ஆரம்ப குர்ஆன் மதரசா எனப்படும மக்தப்மதரசா சீரும் சிறப்போடும் நடக்க எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். மார்க்கப் படிப்புடன் சேர்த்து உலகப் படிப்புகளைக் கற்பிக்கும் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளை ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொடங்க வேண்டும். அடிக்கடி மகளிர் பயான் நடக்க வேண்டும்.

மஹல்லாவில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பள்ளிவாசல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். மஹல்லாவில் நடக்கும் சமூகத் தீமைகளைக் களைய பாடுபட வேண்டும். குறிப்பாக வரதட்சிணை, வட்டி, மணமுறிவு, இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முயல வேண்டும்.

சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மார்க்க அடிப்படையில் தீர்த்துவைக்க ஷரீஆ சமரச மையங்களை உருவாக்க வேண்டும். மாணவ-மாணவியரின் கல்விக்கு முன்னுரிமை அளித்து உதவிடவும் வட்டியில்லா கடன் அளிக்கவும் பைத்துல் மால் அமைப்பை உருவாக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் செய்தால் சமூக மாற்றத்தில் பள்ளிவாசலுக்கிருந்த பங்கு புத்துயிர் பெற்று, மீண்டும் அந்தப் பொற்காலம் பிறக்கும்.

Saturday, December 03, 2011

‘பித்அத்’களை எதிர்ப்பது பயங்கரவாதமா?


- கான் பாகவி
முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவது, திருமணநாள் கொண்டாடுவது, நினைவுநாள் அனுசரிப்பது, முஹர்ரம் மாதத்தில் தீ மிதிப்பது, பஞ்சா எடுப்பது, இறைச்சி கூடாது என நம்புவது, தர்ஹாக்களில் சந்தனக்கூடு தூக்குவது, சமாதிகளைச் சுற்றிவருவது, அங்கு குழந்தைகளை உருட்டிவிடுவது, சமாதிகளுக்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வது, குழந்தைவரம் கேட்பது, திருமண வரன் கேட்பது, குழந்தைகளின் பிறந்தமுடி எடுத்து காணிக்கை செலுத்துவது, ஷைகுகள் மற்றும் பெரியவர்களின் கால்களைத் தொட்டு, அல்லது கால்களில் விழுந்து ஆசி கேட்பது, சிலவேளைகளில் அவர்களையே வணங்குவது, பெண்கள் ஷைகுகளின் கரம் பற்றி நல்லாசி பெறுவது, கத்னா (சுன்னத்) ஊர்வலம் நடத்துவது, திருமணத்தில் பந்தல்கால் நடும் வைபவம், காதுகுத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா, இறந்தவர்கள் பெயராலும் திருமணத்தை முன்னிட்டும் நடத்தப்படும் சில சடங்குகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாம் என்ன? இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இவையெல்லாம் நபிவழிகளா? குறைந்தபட்சம் மார்க்கம் இவற்றை அனுமதிக்கின்றதா? ‘பரக்கத்’ (வளம்) வேண்டி செய்யப்படும் இவற்றால் இறையருள் கிட்டுமா? அப்படி கிட்டும் என்றால், இறைவனோ இறைத்தூதரோ இறைத்தூதரின் அன்புத் தோழர்களோ சான்றோர்களோ யாராவது இவற்றைச் சொல்லியிருப்பார்களா? இல்லையா?
இதுபோன்ற கூத்துகளுக்கு மார்க்கத்தில் ஏதேனும் முன்மாதிரி இருக்க வேண்டுமா? இல்லையா? இவற்றைச் சொந்த விருப்பத்திற்காக -வாழையடி வாழையான ஒரு சம்பிரதாயத்திற்காக- பெண்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காகச் செய்கிறோம்; மார்க்கத்தின் பெயரால் அல்ல என்கிறீர்களா?
இந்தச் சடங்குகளால் நன்மை கிடைக்கும்; அல்லது ஆபத்து அகலும் என்று நம்புகிறீர்களா? இல்லையா? இந்த நம்பிக்கை, உங்களது ஏகஇறை நம்பிக்கைக்கு, இறைத்தூதர்மீது கொண்ட நம்பிக்கைக்கு, குர்ஆன்மீது கொண்ட நம்பிக்கைக்கு முரண்படுகிறதே! என்ன செய்வீர்கள்? அந்த நம்பிக்கையே இல்லை என்றாலும், சடங்குகளுக்காகச் செலவழிக்கப்படும் பணம், நேரம், உழைப்பு எல்லாம் வீண்தானே! இதற்கு மறுமையில் என்ன பதில் சொல்வீர்கள்?
ஆக, மார்க்கம் சொல்லாத, அல்லது மார்க்கத்தில் முன்மாதிரி இல்லாத ஒன்றை மார்க்கத்தின் பெயரால், அல்லது நன்மையைக் கருதி உருவாக்குவதும் அதைக் கடைப்பிடிப்பதும்தான் பித்அத்’ (அநாசாரம்) எனப்படுகிறது.
பித்அத் என்றால் என்ன?
பித்அத்எனும் அரபிச் சொல்லுக்கு, ‘முன்மாதிரியின்றி ஆரம்பிக்கப்பட்ட செயல்என்பது சொற்பொருளாகும். இஸ்லாமிய வழக்கில், மார்க்க ஆதாரமோ அடிப்படையோ இல்லாத செயலுக்கு பித்அத்என்பர். வணக்கவழிபாடுகள், மார்க்க அடையாளங்கள், மார்க்க விதிமுறைகள் ஆகியவற்றில் மக்களாக உருவாக்கும் நடைமுறைதான் பித்அத் எனப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்படும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள், சமாதிகளில் நடக்கும் அநாசாரங்கள், புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழுகைகள் மற்றும் நோன்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும். (புகாரீ)
மற்றொரு ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கின்றது: உரைகளில் சிறந்தது இறைமறை; நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறை; செயல்களிலேயே தீயது புதிதாக உருவாக்கப்படுவதுதான். புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்) ஒவ்வொன்றும் தவறான வழியாகும்; தவறான ஒவ்வொரு வழியும் நரகத்திற்குச் செல்லும். (முஸ்லிம், நஸயீ)
ஆக, ‘பித்அத்எனும் சொல்லுக்கு அநாசாரம், குருட்டு நம்பிக்கை, நவீன சித்தாந்தம் என்றெல்லாம் பொருள் செய்யலாம். இது எவ்வளவு பெரிய கேடானது என்பதற்கு நபிமொழிகளும் சான்றோரின் சொற்களும் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பித்அத்வாதியிடமிருந்தும் பாவமன்னிப்பை (தவ்பா) தடுத்துவிடுகிறான். (தப்ரானீ, ஷுஅபுல் ஈமான்)
ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு கூட்டம் தம் மார்க்க விஷயங்களில் அநாசாரம் ஒன்றை உருவாக்கினால், அதன் இடத்தை வகிக்கும் நபிவழியான சுன்னத்தை அல்லாஹ் அகற்றாமல் இருப்பதில்லை. பிறகு மறுமை நாள்வரை அந்த நபிவழி அவர்களிடம் திரும்பிவருவதே இல்லை. (தாரிமீ)
கப்றுகளில் சஜ்தா
அநாசாரங்களிலேயே மிகவும் கேடானது அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கு -மனிதருக்கோ சின்னத்திற்கோ கட்டடத்திற்கோ- சஜ்தாஎனும் சிரவணக்கம் செய்வதுதான்.
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: அல்லாஹ்வுக்கே சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்; (அவனையே) வழிபடுங்கள். (53:62)
அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (இராக்கிலுள்ள) அல்ஹீராஎனும் ஊருக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள், தங்களிடையே இருந்த ஒரு மாவீரனுக்கு சஜ்தா செய்வதைக் கண்டேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்யப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்’’ என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன்.
நான் மதீனா திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் அந்த ஊரில் கண்டதைச் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சஜ்தா செய்வதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்களாயிற்றே?’’ என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் இறந்து அடக்கம் செய்யப்பட்டபின்) என் அடக்கத்தலம் அருகில் நீங்கள் செல்ல நேர்ந்தால், அதற்கு நீங்கள் சஜ்தா செய்துவிடுவீர்களா?’’ என்று வினவினார்கள். நான் இல்லைஎன்றேன்.
அப்போது நபியவர்கள், ‘‘அப்படிச் செய்துவிடாதீர்கள். (அதாவது நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்தபிறகும் எனக்கு சஜ்தா செய்ய வேண்டாம்.) ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு சஜ்தா செய்ய நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவனுக்கு அதைச் செய்யுமாறு மனைவிக்கு உத்தரவிட்டிருப்பேன். பெண்கள் தம் கணவன்மார்களுக்கு அந்த அளவுக்குக் கடமைப்பட்டுள்ளார்கள்’’ என்று விளக்கினார்கள். (அபூதாவூத், ஹாகிம், தாரிமீ, தாரகுத்னீ, ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சஜ்தா செய்த ஒட்டகம்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது. அதுதான் அவர்களின் தோட்டத்தில் நீர் இறைக்கும். ஒரு தடவை அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தது. நீர் இறைக்க மறுத்தது.
அந்த அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபியவர்கள் தம் தோழர்களிடம் எழுந்திருங்கள்என்று சொல்லிவிட்டு, தோட்டம் வந்துசேர்ந்தார்கள். ஒட்டகம் ஓர் ஓரத்தில் நின்றிருக்க, அதை நோக்கி நபியவர்கள் நடந்தார்கள். தோட்ட உரிமையாளர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயாக மாறியிருக்கிறது. உங்கள்மீது பாய்ந்துவிடும் எனப் பயப்படுகிறோம்’’ என்று தடுத்தார்கள்.
ஆனால் நபியவர்கள், அதனால் எனக்கு எந்தத் தீங்கும் நேராது என்று சொல்லிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒட்டகம் கூர்ந்து பார்த்துவிட்டு, அவர்களை நோக்கி நேராக வந்து, அவர்களுக்கு முன்னால் அப்படியே சரிந்து சஜ்தா செய்தது. பின்னர் அதன் நெற்றியில் வருடிக்கொடுத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அது அடங்கிவிட்டது. தன் பணியைத் தொடங்கியது.
இக்காட்சியைக் கண்ட தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ இந்த அறிவற்ற விலங்கு உங்களுக்கு சஜ்தா செய்கிறது. நாங்கள் ஆறறிவு உள்ளவர்கள். உங்களுக்கு சஜ்தா செய்ய நாங்களே பொருத்தமானவர்கள்’’ என்றார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள்: எந்த மனிதரும் எந்த மனிதருக்கும் சஜ்தா செய்வது தகாது. அப்படித் தகும் என்றிருந்தால், பெண் தன் கணவனுக்கு சஜ்தா செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருப்பேன். அவனுக்கு அவள் அந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.
என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! கணவனின் பாதத்திலிருந்து தலைவரை கொப்புளம் இருந்து, அதில் சீழும் சலமும் வடிந்துகொண்டிருக்க, மனைவி வந்து அதைத் தன் நாக்கால் சுத்தம் செய்தாலும், கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை தீராது. (முஸ்னது அஹ்மத்)
என்ன செய்ய வேண்டும்?
அநாசாரங்களைத் தடுப்பதும், அநாசாரங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்வதும் கற்றறிந்தவர்களின் தலையாய கடமையாகும். அதை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற குருட்டு நம்பிக்கைகளுக்கும் தவறான செயல்முறைகளுக்கும் பரிந்துபேசுவதும் வக்காலத்து வாங்குவதும் கடுமையான குற்றமாகும்; பெரும்பாவமாகும். கற்றவர்கள் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது சாமானியர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துவிடும்; அவர்கள் அநாசாரங்களிலிருந்து மீள வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
ஒரு செயல் சரியா, தவறா என்ற சர்ச்சை எழுந்துவிட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன? இதோ அல்லாஹ்வே கூறுகின்றான்:
ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புகிறவர்களாயின், அதை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் விட்டுவிடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். (4:59)
அதாவது இறைமறையிடமும் இறைத்தூதரின் வழியிடமும் விட்டுவிட வேண்டும். அல்லாஹ்வோ அவன் தூதரோ என்ன சொல்கிறார்களோ அதையே தீர்வாக ஏற்க வேண்டும்.
மற்றொரு வசனம், ‘‘நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டாலும் அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது’’ (42:10) என்று கூறுகின்றது.
இவ்வாறிருக்க, இறைவசனத்திற்கும் நபிமொழிகளுக்கும் மனவிருப்பத்திற்கேற்ப விளக்கமளிப்பதும், அவற்றை வளைத்து ஒடிப்பதும் எவ்வாறு தகும்?
இது பயங்கரவாதமா?
தாருல் உலூம் தேவ்பந்த் அரபிக் கல்லூரி
எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை என்னவென்றால், குருட்டு நம்பிக்கைகளையும் அநாசாரங்களையும் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களையெல்லாம் பயங்கரவாதிகள்என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதுதான்.
இதற்கு இவர்கள் கையாளும் தந்திரம் என்னவென்றால், அநாசாரங்களைச் சாடுபவர்கள் வஹ்ஹாபிகள்; வஹ்ஹாபிகள் பயங்கரவாதிகள் என்ற சொத்தை வாதம்தான். அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் எல்லாரும் வஹ்ஹாபிகள் என்பது பொய்; வஹ்ஹாபிகள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்பதும் பொய்.
கடந்த மாதம் உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் நகரில் ஒரு மாநாடு நடந்தது. மாநாட்டின் பெயர்: சூஃபி மகா பஞ்சாயத்துக் கூட்டம். முக்கியப் பேச்சாளர்: மஷாயிக் வாரியத்தின் தலைவர். அவர் பேசியதுடன் மாநாட்டின் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்ட சில வரிகள்:
  • தேவ்பந்த் மதரசா, ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு, வஹ்ஹாபிஸம் எல்லாம் பயங்கரவாத இயக்கங்கள்.
  • இவர்களின் பிடியில் சிக்கியுள்ள பள்ளிவாசல்களையும் மதராசக்களையும் கைப்பற்ற வேண்டும்.
  • வக்ஃப் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.
  • காங்கிரஸ் கட்சியை நம்பக் கூடாது; தோற்கடிக்க வேண்டும். இதற்காக மஷாயிக் வாரியம் அரசியலில் குதிக்க வேண்டும்.

அகில இந்திய மஷாயிக் வாரியம், பத்திரிகையாளர் சந்திப்பு
இந்தக் கூட்டத்தின் கோஷங்களும் தீர்மானங்களும் இந்துத்துவா சக்திகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாகும். இவ்வாறு ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, ஒருவர்மீது ஒருவர் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தால், இரு பக்கமும் அழியப்போவது கலிமாசொன்ன முஸ்லிம்கள்தான்.
இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை? அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் அல்லவா? மூடநம்பிக்கை, சமூகத்தீமை ஆகியவற்றைக் களைய பாடுபடுவோர் நாலு பேர் இருப்பதால்தான், சமுதாயம் சிறிதளவாவது மார்க்க வழியிலும் பகுத்தறிவு பாதையிலும் நடைபோட முடிகிறது.
உங்களுக்கு அநாசாரங்கள் பிடிக்கும் என்றால், அறிவால், வாதத்திறமையால், உண்மையால், ஆதாரங்களால் நிரூபியுங்கள். அது முடியவில்லை என்பதற்காக பயங்கரவாத முத்திரை குத்துவதும் அபாண்டங்களைச் சுமத்துவதும்தான் நாகரிகமாக? அல்லது நீங்கள் சொல்லும் ஆன்மிகமா?
வெளியேற்றாதீர்கள்!
அதே நேரத்தில், பித்அத்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நிதானமிழந்து செயல்படுவோர் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பித்அத்களை எதிர்க்கும் சாக்கில் சமுதாயத்தில் பிளவை உண்டாக்குவதையும் முஸ்லிம்களையே இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுவதையும் இவர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
ஈமான்என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். பித்அத் செய்யும் ஒருவர், ஓரிறைக்கொள்கை, இணை கற்பிக்காமை, முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதான நம்பிக்கை முதலான அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருந்தால், அவரை எப்படி இஸ்லாத்திலிருந்து வெளியேற்ற முடியும்? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். (புகாரீ)
அதாவது காஃபிர் என்ற சொல்லுக்கு உண்மையிலேயே அவர் தகுதிபெற்றவராக இல்லை என்றால், அச்சொல் சொன்னவரையே திருப்பித் தாக்கும்.
எனவே, பரப்புரை (தஃவா) வெறுப்பேற்றக்கூடியதாக இருக்கலாகாது; சிந்திக்கத் தூண்டக்கூடிய வகையில் நளினமானதாகப் பிரசாரம் அமையம் வேண்டும். புரிந்துகொள்வார்களா...?
 https://www.facebook.com/khanbaqavi?sk=wall