Wednesday, December 02, 2020

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இந்துத்துவா சக்திகள்

*இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இந்துத்துவா சக்திகள்*

*உரிய விளக்கத்தை முதலில் நாம் அறிவோம்*

*-கான் பாகவி*

இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்துகிறது. பெண்களை முஸ்லிம்கள் அடிமைகளாக நடத்துகின்றனர். இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த உரிமையுமில்லை -என்றெல்லாம் கதை கட்டிவிட்டு, அதற்கு ‘ஆதாரங்கள்’ என்று குர்ஆன் வசனங்கள் சிலவற்றையும் நபிமொழிகள் சிலவற்றையும் காட்டி, முஸ்லிமல்லாதோரிடம் பிரசாரம் செய்துவருகின்றனர் சிலர்.

அவர்கள் எடுத்துக்காட்டும் குர்ஆன் வசனங்களின் எண்களையும், நபிமொழி நூல்கள் மற்றும் ஹதீஸ் எண்களையும் கீழே தருகிறோம்.

இவற்றுக்கான சரியான விளக்கங்களை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம், மற்றும் ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் போன்ற வெளியீடுகளையும், அவற்றில் தரப்பட்டுள்ள அடிக்குறிப்பு விளக்கங்களையும் தயைகூர்ந்து, நிதானமாக வாசித்துத் தெளிவுபெறுங்கள்!

யாரேனும் உங்களிடம் இவை குறித்துக் கேட்டால், பொறுமையாக அவர்களுக்கு உண்மை விளக்கங்களை எடுத்துக் கூறுங்கள்!

வஸ்ஸலாம்.


குறிப்பு:
அவர்களின் அநாகரிகமான வாதங்களை நாமும் பரப்பிவிடக் கூடாது என்பதற்காக அவற்றை விலாவாரியாக நாம் குறிப்பிடவில்லை.


1. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 304, 1462; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் ஹதீஸ் - 132.

2. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 3331, 5186; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 2913, 2914.

3. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 5096; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 5290, 5291.

4. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 304, 1462; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 132.

5. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 2859, 5093, 5094; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 4478.

6. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 511, 514; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 886-888.

7. ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ் - 1083. (தஃப்சீர் தபரீ)

8. தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் - 4:24; 33:50; 4:11; 2:282; 4:34. ஆகிய வசனங்கள்.

Monday, October 26, 2020

இப்போதும் விழிக்காவிட்டால்..?

*இப்போதும் விழிக்காவிட்டால்..?*

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அநேகமாக, தமிழகத்தில் ஈரணிகள் களம் காண்பதற்கே வாய்ப்பு அதிகம். ஒன்று, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஓரணி. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையில் மற்றோர் அணி. அப்படி மூன்றாவது அணி உருவானாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு, அதன் பாதிப்புகள் இருக்கமா என்பது கேள்விக்குறியே!

இந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் தி.மு.க. அணியில் அங்கம் வகிப்பதுதான் எழுதப்படாத விதியாகிவிட்டது என்பதே அரசியல் கணிப்பாக உள்ளது. முஸ்லிம் கட்சிகள், அதிலும் தேர்தல் களம் காணும் கட்சிகள் என்று நான்கைக் குறிப்பிடலாம். 1. பாரம்பரியக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML). 2. வளர்ந்துவரும் மனிதநேய மக்கள் கட்சி (MMK).

3. SDPI கட்சி. இது, தமிழகத்தில் மட்டுமன்றி வேறுபல மாநிலங்களிலும் தேர்தல் களம் கண்டுவரும் கட்சி. 4. சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி தலைமையில் உள்ள மனிதேநேய ஜனநாயகக் கட்சி (MJK). இது அண்மையில் உருவாகி, தேர்தல் களம் கண்டு வெற்றிவாகை சூடிய புதிய கட்சி என்பது தெரிந்ததே!

இந்த நான்கு கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் வாக்காளர்களிடையே மட்டுமல்ல; பொதுவான வாக்காளர்களின் எதிர்பார்ப்பும்கூட. இவை அனைத்தும் ஓரணியில் நின்று, அதிகபட்சமாக 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றியே ஈட்டிவிட்டாலும், சமுதாயத்திற்குச் சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பெரிய சாதனை எதையும் படைத்துவிடப் போவதில்லை என்ற கருத்தும் உலவுகிறது.

சரி! அப்படி நான்கு கட்சிகளும் ஓரணியில் இணையுமா? அக்கட்சிகளே அதற்கு முன்வருமா? முன்வந்தாலும் அணியின் பெரிய கட்சி எந்த அளவிற்கு வரவேற்கும்? வரவேற்றாலும், பாதகமின்றி ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கைச் சரியாகக் கணித்து நியாயமான தொகுதிகளை ஒதுக்குமா? அல்லது பெரியண்ணன் எண்ணத்தில் கெடுபிடியைக் காட்டுமா?

எல்லாமே தெளிவற்ற நிலைதான். விடை கிடைக்காமல் திணறவைக்கும் கேள்விகள்தான். அநேகமாக, முதலிரு கட்சிகளுக்குத் தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்கலாம்! அதிலும் முதல் கட்சிக்கு ஓரிரண்டு தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாகத் தெரிகிறது. எப்படிப்போனாலும், இரண்டுக்கும் சேர்த்து ஐந்தைத் தாண்டாது என்பதும் மேல்மட்டத்தில் அடிபடும் பேச்சு என்கிறார்கள்.

அப்படியானால், கடைசி இரண்டு கட்சிகளின் நிலை என்ன என்பதே இப்போதைய பட்டிமன்றத் தலைப்பாக மாறியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால், மாற்று அணிக்குச் சென்றுவிடுவார்களா? அல்லது மூன்றாம் அணி காண்பார்களா? அல்லது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல், மற்றக் கட்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்களா? அல்லது எதிலும் தலையிடாமல் ஒதுங்கிவிடுவார்களா? விடை தெரியா வினாக்கள்.

அரசியல் கட்சிகள் உருவாக்குவதும் அதை முன்னிட்டு ஓடியோடி உழைப்பதும் சட்டமன்றத்தில், அல்லது பாராளமன்றத்தில் நாற்காலியில் அமரத்தான். அதுவே உச்சபட்ச அரசியல் முன்னேற்றம். அதையடுத்து ஆட்சி நாற்காலியைப் பிடிப்பதுதான் அடுத்த கட்ட வாழ்நாள் கனவு. இதை யாரும் மறுக்கமாட்டார்கள். இதுவெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை என்போர் கட்சியே தொடங்கியிருக்கமாட்டார்கள்.

அப்படியிருக்க, நீங்கள் தேர்தலில் நிற்காதீர்கள்! அல்லது எங்களுக்கு ஆதரவு தெரிவிரித்துவிட்டுப் பெரிய மனதோடு நடந்துகொள்ளுங்கள்! –என்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவது, கடையைத் திறந்துவிட்டீர்கள்! வியாபாரம் செய்யாதீர்கள் என்ற நகைப்பிற்கிடமான யோசனையாகவே அமையும்.

மக்களவைத் தேர்தலாக இருந்தால்கூட, சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் எனப் பேரம் பேசலாம். இப்போது நடக்கவிருப்பதோ சட்டப்பேரவைத் தேர்தல்! இதை விட்டால், அக்கட்சிகள் எதைக் கொண்டு சமாதானம் அடைய முடியும்?

சரி! அப்படியானால் இக்கட்சிகள் என்னதான் செய்வது? இக்கட்சிகளின் மேலிடம் நேரடியாகக் களத்தில் இறங்கி, கூட்டணித் தலைமைக் கட்சியின் கதவைத் தட்ட வேண்டியதுதான். எங்களைக் கூட்டணியில் சேர்ப்பதுடன் தொகுதியும் ஒதுக்குவதால், கூட்டணிக்குக் கிடைக்கும் அனுகூலங்களைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்து, கூட்டணித் தலைமையை இணங்கவைத்தாக வேண்டும்.

அதுவும் கைகூடாதபோது, வெற்றி – தோல்வியைப் பொருட்டாகக் கொள்ளாமல் மூன்றாம் அணி காண்பது ஒன்றுதான் அவர்கள் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி! ஆனால், இந்த முடிவால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பையும் நினைவுபடுத்தாமல் இருப்பது நீதியாகாது. அதே நேரத்தில், இந்த இழப்பில், கூட்டணியில் சேர்க்காமல் உதாசீனம் செய்த பெரிய கட்சிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதுதான், தர்க்கரீதியான வாதம் என்பதை, நியாய உணர்வோடு சிந்திக்கும் யாரும் மறுக்கவியலாது எனலாம். ஆயினும்கூட, மிக அபூர்வமாகச் சாத்தியமாகின்ற ஒரு யோசனையும் உண்டு. அநேகமாக அதுதான் கடைசி யோசனையாகவும் இருக்கலாம்!

அது வேறொன்றுமில்லை; தி.மு.க. கூட்டணியில் உரிய இடம் கிடைக்காத கட்சிகள், வேண்டுமானால் தாமாக முன்வந்து இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க முன்வருவதுதான், அந்த யோசனை. இது, இக்கட்சிகளுக்கு எட்டிக்கசப்பான தீர்வுதான். நாட்டின் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ளும்போது, தாற்காலிகமானதொரு முடிவாக இதை எடுத்தால் என்ன?

அதே வேளையில், இன்று சமூக வலைத்தளங்களில் நடந்துகொண்டிருக்கும் அநாகரிகமான, அசிங்கமான விமர்சனங்கள் சமுதாயத்தைத் தலைகுனியச் செய்து வருகின்றன என்பதை எம்மால் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த ஏச்சுப் பேச்சுகளால் யாருக்கு என்ன இலாபம்? அதிலும் இரு பக்கங்களிலும் மார்க்கம் படித்த ஆலிம்களும் அரசியல்வாதிகள்போல் தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் வசைபாடுவதை எந்த வகையில் சேர்ப்பது? இந்தப் போக்கானது, சாமானிய மக்களுக்கு எத்தகைய சமிக்ஞையைத் தரும் என்பதைக்கூட இவர்கள் நினைத்துப்பார்க்கவில்லையா? இனி எப்படி ‘மின்பர்’படிகளில் ஏறி நின்று பொதுமக்களுக்குச் சொல்லொழுக்கத்தைப் போதிப்பது என்று யோசித்துப் பாருங்கள்!

போதும்! இந்தச் சொற்போரை நிறுத்துங்கள். மற்ற அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழுங்கள்! பேசினால் நல்லதையே பேசுங்கள்! அதையும் நயமாகப் பேசுங்கள்! இல்லையேல், மௌனமாக இருந்துவிடுங்கள்!

அன்புடன் உங்கள்
*கான் பாகவி*

Wednesday, September 30, 2020

Tuesday, September 29, 2020

உலக மொழிபெயர்ப்பு நாள்-செப் - 30

~~~~~~~~~~~~~
உலக மொழிபெயர்ப்பு நாள்-செப் - 30
~~~~~~~~~~~~~
ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன.அதாவது இருபது விழுக்காடு. 
மூலநூலின் முழு உணர்வினையும் கருத்துகளையும் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும் அதிகப்படுத்தாமலும் மாற்றாமலும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலை உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.

மூல மொழியின் கருத்தினின்று மொழிபெயர்ப்பாளர் மாறுபடின் , மொழிபெயர்ப்பாளரின் அறியாமையைத்தான் உணர்த்தும்.

நூற்றுக்கு நூறு கல்வி வளமும் நூற்றுக்கு எண்பது பேர் இரு மொழிப் புலமையும் நூற்றுக்கு எழுபது பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்பு செல்வாக்குப் பெறலாம்.

தமிழக அரசு மொழிபெயர்ப்புக்கு மட்டும் 11 விருதுகள் வழங்கிவருகிறது.

நன்றி:
முனைவர் ந.அருள்.
தினமணி-29.09.2020.

Monday, September 28, 2020

Sunday, July 05, 2020

அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...

~~~~~~~~~~~~~
அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...
~~~~~~~~~~~~~
அண்மைக் காலமாக வரும் மரணச் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 

உறவுகள், ஆசிரியர்கள், உடன் கற்றவர்கள்,நம்மிடம் கற்றவர்கள், சமூக ஆர்வலர்கள்,சமுதாயத் தலைவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், சாமானியர் ...என எல்லாத் தரப்பினரும் இந்தப் பெருநோயால் பாதிக்கப்பட்டும் பலர் உயிர்நீத்தும் வருகின்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதற்கு வயது வித்தியாசமோ பார்க்கின்ற தொழில் வித்தியாசமோ கிடையாது.தலைவிதி எதுவோ அது நடந்தே தீரும். யாராலும் ஒரு விநாடிகூடத் தள்ளிப்போட முடியாது. ஜனாஸாவைக்கூட உறவினரும் சம்பத்தப்பட்டவரும் பார்க்க முடியாத, இறுதிப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியாத பரிதாபம் இருக்கிறதே சொல்லிமாளாது.

இருப்பினும், நமக்கென சில தற்காப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவைதானே! அதைக் கடைப்பிடிப்பதில் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும் அல்லவா? 

முதலில் வெளியே போவதை இயன்ற வரை தவிருங்கள். அடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியமின்றி மேற்கொள்ளுங்கள். திக்ர் மற்றும் துஆக்களில் அதிகம் ஈடுபடுங்கள்.அலுவலகப் பணியை வீட்டில் அல்லது பாதுகாப்பான இடத்தில் செய்யுங்கள்.கரோனா தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்காதீர்கள். அதைப் பற்றியே எப்போதும் பேசாதீர்கள்.சிந்திக்காதீர்கள்.

இறுதியாக இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு ரிலாக்ஸாக இருங்கள்.உடன் இருப்போரையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஒளிந்திருந்த குகை வாயிலை எதிரிகள் ஆயுதத்துடன் நெருங்கிவிட்ட நெருக்கடியான நிலையிலும் தோழரிடம் , மூன்றாவதாக நம்முடன் இறைவன் இருக்கிறான் என்று நபிகளார் சொன்ன ஆறுதலை அடிக்கடி நினைத்துக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் அவனே போதுமானவன். حسبنا الله ونعم الوكيل

அன்புடன் உங்கள் கான் பாகவி

Wednesday, July 01, 2020

கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?

*கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?*

*அ. முஹம்மது கான் பாகவி*

பொது முடக்கம் என்றும் முழு ஊரடங்கு என்றும் அரசு ஆணை பிறப்பிக்க, நாமெல்லாரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து பல மாதங்களாகிவிட்டன. இது எப்போது முடியும்; விடிவு பிறக்கும் என ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் பரிதாபத்தைக் கண்டு நெஞ்சு வெம்பித்தான் போகிறது. எல்லாம் கரோனா கொடுத்த ‘சீர்’கள்.

‘சும்மா’ இருப்பதைப் போன்றதொரு தண்டனை வேறு இருக்காது. நகராமை உயிரின்மையின் அடையாளம் அல்லவா? உயிர் வாழ்கிறோம் என்பதற்குச் சான்றே இயக்கம்தானே! அதுவே நின்றுபோனால், மூச்சு நின்றுவிட்டது என்றுதானே பொருள்! சிலவேளை இது மன அழுத்தத்திற்குக் காரணமாகி மரணத்திற்கே வழிவகுத்தாலும் வியப்பதற்கில்லை.

இப்போது தெரிகிறதா? பணி செய்வதன் அருமை! சரி! விதியை நோகக் கூடாது. ஏன், இதையே நமக்குக் கிடைத்த ஓர் ஓய்வாகக் கருதி, புண்ணியங்கள் தேடிக்கொள்ளக் கூடாது? காலம் கையிலிருக்கும்போது பயன்படுத்தத் தவறினால், பின்னர் கெஞ்சினாலும் கிட்டாது காலத்தின் ஒரு கணம்கூட.

மாணவக் கண்மணிகளே! பள்ளி, கல்லூரி, மத்ரஸா ஆகிய கலைக் கூடங்களில் பயின்றுவரும் நீங்கள், உங்களுக்குக் கிடைத்த ஓய்வு காலத்தை வீணாகக் கழிக்காமல், வினயமாகக் கழித்தால் என்ன என்று யோசித்துப்பாருங்கள்!

முதலில் மத்ரஸாக்களில் கற்ற, அல்லது கற்றுக்கொண்டிருக்கிற மார்க்கக் கல்வியாளர்களுக்குச் சில யோசனைகள்! பரிந்துரைகள்:

1. “கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு” -என்பார்கள். மத்ரஸா பாடத்திட்டத்தில் இல்லாத, அதே நேரத்தில் நமக்கு மிகவும் இன்றியமையாத நூல்கள் எத்தனையோ உண்டு. அவற்றைக் கண்டுபிடித்து நீங்களே வாசிக்கலாம்! முக்கியக் குறிப்புகளைப் பதிவு செய்துகொள்ளலாம்! தெரிய முடியாததை அருகிலுள்ள அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வரலாறு, நபித்தோழர்கள் வரலாறு, இந்திய வரலாறு, முடிந்தால் உலக வரலாறு, இதிய சாசன சட்டம், இஸ்லாமிய அறிவியல், பொருளியல், அரசியல், சட்டவியல், குடும்பவியல், சமூகவியல், தனிமனித ஒழுக்கவியல், உளவியல், வணிகவியல்... என நிறைய துறைகள் நமக்கு அந்நியமாக உள்ளன.

இவற்றை உங்களால் சுயமாகக் கற்க முடியும் என்பதைவிடக் கற்றாக வேண்டும். அதற்கு இந்த ஓய்வைப் பயன்படுத்துங்கள்.

2. இமாம்களாக இருப்பவர்களுக்கு, ஏன் எல்லா ஆலிம்களுக்கும் ‘தஜ்வீத்’ கலை மிகமிக அவசியமானது. இக்கலைக்காக நேரத்தைச் செலவிட்டுப் பயிற்சியாளர்கள் மூலம் தரமான பயிற்சி பெறலாம்.

3. ஜும்ஆ உரை மட்டுமன்றி, பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் உரையாற்ற வேண்டியவர்களாக உள்ளோம். உரைக்குக் குரல் மட்டும் போதாது. மொழியும் தேவை. அத்துடன் காலத்திற்கேற்ற தகவல்களும் தரவுகளும் தேவை. இவற்றைத் தலைப்புகள் வாரியாகத் திரட்டிப் பதிவு செய்துகொண்டால், நம் உரைகள் அர்த்தமுள்ளவையாக அமையும்.

அடுத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர். வீட்டுக்குள் அடைந்து செல்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் இணையத்திலேயே நேரத்தைக் கழிப்பதைக் கைவிடுங்கள்! உங்கள் எதிர்காலத்திற்கு உதவக்கூடிய துணைக் கலைகளைக் கற்றுப் பயிற்சி பெறுவதில் இந்த ஓய்வு நாட்களை உருப்படியாகச் செலவிடுங்கள்.

1. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பயிற்சி. என்னதான் திறமையாகப் படித்திருந்தாலும், வேலைவாய்ப்புக்கு மிகவும் அவசியமானது மொழியாற்றல். நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலில் நீங்கள் வெல்ல வேண்டுமென்றால், மொழித் திறன்தான் முதல்படியாக உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

மொழித் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அவற்றில் சேர்ந்து, உங்கள் பொன்னான நேரத்தைப் பயனுள்ள வகையில் கழியுங்கள்.

2. கணினிப் பயிற்சி. கணினியில் தட்டச்சுப் பயிற்சி, கணக்குப் பதிவுப் பயிற்சி, செயலிகளை (ஆப்) உருவாக்கி இயக்கும் பயிற்சி என வகைவகையான துறைகள் உள்ளன. இவற்றை நீங்கள் இப்போதே கற்றுக்கெண்டால், பின்னால் துணை நிற்கும்.

கையால் யாரும் எழுதுவதில்லை இப்போதெல்லாம்; எல்லாம் கணினிமயமாகிவிட்டன என்பதை மறவாதீர்!

3. கைத்தொழில் ஏதேனும் ஒன்றைக் கற்கலாம்! வயரிங், ஃபிட்டிங், ரிப்பேரிங்... என ஏராளமான -லாபகரமான- தொழில்கள் எப்போதும் உங்களுக்கு உதவும்.

4. நீங்கள் கல்லூரி அல்லது பள்ளி மாணவர்கள். உங்களால் எத்தனை பேருக்குத் தொழுகைமுறை தெரியும்? குர்ஆன் பார்த்து ஓதத் தெரியும்? சூராக்கள் மனப்பாடமாக ஓதத் தெரியும்? தஸ்பீஹ், திக்ர், துஆக்கள் ஆகியன முறையாகக் கற்றவர்கள் எத்தனை பேர்?

அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சுன்னத்தான நடைமுறைகள், ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடை செய்யப்பட்டது), ஈமான் மற்றும் இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் போன்ற மார்க்க விஷயங்களைக் கற்றவர்கள் உங்களில் எத்தனை பேர்?

இதையெல்லாம் கற்க இந்த ஊரடங்கை ஏன் நமதாக்கிக்கொள்ளக் கூடாது? அருகிலுள்ள ஆலிம்களைச் சந்தித்து, இதற்கான டியூஷன் நடத்தச் சொல்லுங்கள்! ஆங்கிலமும் கணினியும் தொழில்நுட்பமும் இம்மையில் சோறுபோடும் என்றால், மார்க்கம்தான் மறுமையில் சோறுபோடும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

Monday, June 22, 2020

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?
அ. முஹம்மது கான் பாகவி
கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆயிரக்கணக்கானோரின் இன்னுயிரைப் பலிகொண்டுவிட்டது. பொருளாதாரத்தில் கோடிக்கணக்கான டாலர்களை விழுங்கிவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, வணிகம், உற்பத்தி, ஏற்றுமதி... என எல்லாத் துறைகளையும் நலிவடையச் செய்துவிட்டது.
ஆன்மிகத்தையும் அது விட்டுவைக்கவில்லை. ஆம்! வழிபாட்டுத் தலங்கள் பல மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. அங்கே தொழுகை, தியானம், திருமறை ஓதல், திக்ர் செய்தல், நல்லுரை கேட்டல்... என உளத் தூய்மைக்கும் மன ஆறுதலுக்கும் வழிவகுக்கும் அத்துணை அமல்களும் தடைபட்டுப் போயுள்ளன.

மார்க்கக் கலைக் கூடங்கள் கலையிழந்துவிட்டன. உரிய காலத்திற்கு முன்பே கட்டாய விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் நடத்தாமலும் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாமலும் தொங்கலில் விடப்பட்டிருக்கின்றன. அடுத்தக் கல்வி ஆண்டின் நிலையும் தெளிவில்லாமல் இருக்கிறது.
இமாம்கள், ஹாஃபிழ்கள், மக்தப் ஆசிரியர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. சிலர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். பலருக்கு ஊரடங்கு கால ஊதியம், போனஸ் போன்ற பயன்கள் மறுக்கப்பட்டுள்ளன. வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்; முஅத்தினை வைத்துச் சமாளித்துக்கொள்கிறோம் என்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விதிவிலக்கு இருக்கலாம்! நல்ல முறையில் இமாம்களைக் கண்ணியப்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
மற்றொருபுறம் அரபிக் கல்லூரி மாணவர்களின் நிலை, இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையை நினைவுபடுத்துகிறது. மூன்றாம் ஆண்டு மாணவராக ஒருவர் இருப்பார். அந்த ஆண்டுக்கான பாடங்களை நிறைவு செய்யாமலும், செய்திருந்தாலும் தேர்வு எழுதாமலும் சென்றிருப்பார். அடுத்த ஆண்டு நிலை என்ன; எப்படி என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில் மாணவர்கள் சிலர், இடைப்பட்ட நாட்களில் குடும்பத் தொழில் அல்லது வேறு தொழிலில் ஈடுபட்டு, அதில் சுவை கண்டிருக்கலாம்! இனியும் அதையே தொடர்ந்தால் என்ன என எண்ணலாம்! அல்லது பள்ளி - கல்லூரியில் சேர்ந்து, விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தால் என்ன என்றுகூட ஆசைப்படலாம்!
ஆக, ஏற்கெனவே மார்க்கப் பணியில் ஈடுபட்டுள்ள ஆலிம்களோ, மார்க்கக் கல்வி பயின்றுவரும் மாணாக்கரோ துறை மாற வாய்ப்பு இல்லாமலில்லை.
இதனால் யாருக்கு இழப்பு? மொத்த சமுதாயத்திற்குத்தான் மெத்த இழப்பு. இந்த விவகாரத்தில் சமுதாயத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மெத்தனமாக இருக்கலாகாது. ஏற்கெனவே, அரபி மத்ரஸாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவரும் காலகட்டத்தில், கரோனாவால் மேலும் மாணவர்களின் வருகை குறைவது பெரும் கேடாக முடியும்.
அவ்வாறே, சமயப் பணியாற்றக்கொண்டிருக்கும் ஆலிம்கள் துறைமாற அனுமதிப்பதும் பெரும் நெருக்கடியை உண்டாக்கும். வடமாநிலத்தவரை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணுவோருக்கு ஒரு வார்த்தை, அவர்களால் நம் தாய்மொழியில் உரை நிகழ்த்த முடியாது. நம் குழந்தைகளுக்கு, அவர்கள் புரியும் பாஷையில் மார்க்கத்தைச் சொல்லிக்கொடுக்க முடியாது.
குர்ஆனைக்கூட சரியான உச்சரிப்பில் சொல்லித் தராமல், ஃதால், ளாத், ழாத் போன்ற எழுத்துகளை ஸால், ஜாத்... எனத் தவறாக உச்சரிப்பார்கள். தொழுகையிலும் இதுதான் அவர்களுக்கு வரும். தாய்மொழியின் தாக்கம் நிச்சயமாக அவர்களின் உச்சரிப்பில் தொற்றிக்கொள்ளாமல் இராது.
இறையில்லப் பொறுப்பாளர்களுக்கு ஒரு தார்மிகப் பொறுப்பு உண்டு. உங்கள் பள்ளிவாசலில் பணியாற்றிய இமாம், தம் பணியில் தொடர அனுமதியுங்கள். அதற்கு முன்பாக, விடுபட்ட இடைப்பட்ட மாதங்களுக்கான ஊதியம், போனஸ் போன்ற பலன்களை அவர்களுக்கு மனமார வழங்குங்கள்.
அவ்வாறே, எல்லா அரபிக் கல்லூரி நிர்வாகப் பெருமக்களுக்கும் அன்பானதொரு வேண்டுகோள். தங்கள் கல்லூரி பேராசிரியப் பெருமக்கள், முதல்வர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் ஊரடங்கு காலத்திற்கான ஊதியம், போனஸ் ஆகிய பலன்களை வழங்கி ஆசுவாசப்படுத்துங்கள்.
உங்கள் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள், தம் கல்வியைத் தொடர உதவி செய்யுங்கள்; அவர்களில் யாரும் இடைநிறுத்தம் செய்துவிட அனுமதித்துவிடாதீர்கள்.
மேலும், அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர், மஹல்லா ஜமாஅத், ஆலிம்கள் ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள்! அம்மாணவர்களைச் சந்தித்து உற்சாகமூட்டி, உதவிகள் செய்து ஆதரவு காட்டுங்கள்!
இந்த நடவடிக்கைகள் மூலம் அனைவரும் சேர்ந்து, மார்க்க அறிஞர்களை ஊக்குவிப்போம். மார்க்கம் கற்கும் மாணவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்.
பாரம்பரிய மார்க்க அறிஞர்களின் சேவை தொடர வேண்டும்! இந்த அறிஞர்களை உருவாக்கும் அரபி மத்ரஸாக்களில் மாணவர்கள் தொடர்ந்து சேர வேண்டும்.
இறையில்லங்களில் இறைமறை என்றும் ஒலிக்கட்டும்! மார்க்க உரைகள் எப்போதும் உரக்க முழங்கட்டும்! இந்தப் புண்ணியத்தில் நம் ஒவ்வொருவரின் பங்கும் அணிவகுக்கட்டும்! அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்!
_____________________

Sunday, April 26, 2020

தீமையிலும் ஒரு நன்மைஉண்டு!

~~~~~~~~~~~~
தீமையிலும் ஒரு நன்மை
உண்டு!
~~~~~~~~~
நான் மாணவனாக இருந்த சமயம் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் எங்கள் மாணவ நண்பர்களின் ரமளான் பொழுதுகள் இனிமையாகக் கழிந்ததுண்டு.

அருகில் உள்ள புதுப்பட்டி எனும் சிற்றூரில் ஒரு சிறிய மஸ்ஜித். அங்கு ஹாஃபிழ் வைத்து தராவீஹ் நடத்தும் அளவுக்கு வசதியில்லை.நாங்கள் சில மாணவர்கள் சேர்ந்து தராவீஹ் நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.

ரக்அத்களைப் பிரித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று பேர் தொழவைப்போம். அந்த எளிய மக்களுக்கோ ஆனந்தம்.தங்கள் மஹல்லாவிலும் சிறப்புத் தொழுகை நடக்கிறதே!

இப்படி சில ஆண்டுகள்.நானும் இமாமத் செய்தேன் மனநிறைவோடு. அதற்குப் பிறகு இமாமத்திற்கான வாய்ப்பு வாய்க்கவில்லை. நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுவதை விட்டதில்லை. அதில் அவ்வளவு ஓர் ஆனந்தம்; மனநிறைவு.

  இந்த ஆண்டு வந்ததே வைரஸுடன். பேரிடிதான். நினைத்தும் பார்க்கவில்லை. பள்ளியில் தொழமுடியாதென்று. நொந்து போனேன்.

திடீரென ஒரு யோசனை. இல்லத்தில் ஆறு பேர். ஏன் நாமே இமாமாக நின்று ஜமாஅத்தாகத் தொழக்கூடாது? அதையே நடைமுறைப்படுத்திவருகிறேன். மகிழ்ச்சியாக கழிகிறது ரமளான்.

ஆனாலும் என்ன? முழு குர்ஆன் ஓதி தொழமுடியவில்லை. சின்னச் சின்ன சூராதான். இதுவே என்ன கஷ்டமாக இருக்கிறது தொரியுமா?

இப்போதுதான் தெரிகிறது இமாமத் எவ்வளவு பெரிய மகத்தான பணி! அதிலும் ஹாஃபிழ்கள் பாடு எவ்வளவு பெரியது!

எப்படியோ கரோனா தீமையிலும் எனக்கொரு நன்மை!

அன்புடன் உங்கள் கான் பாகவி.

Sunday, April 19, 2020

மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே

~~~~~~~~~~~~
மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே
~~~~~~~~~~~~
பேரா.க.பஞ்சாங்கம்

மொழிபெயர்ப்பும் ஒரு கலையே; மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே என்ற கருத்துதான் இன்றைக்கு வலுவாக நிலைப்பெற்றுள்ளது.

       மூல நூலாசிரியரும் , மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.மொழிபெயர்ப்பாளரும் மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.

மொழிபெயர்ப்பாளருக்கு மூல நூலாசிரியர் உருவாக்கித்தந்த மொழி உலகம் வெளிப்படையாக முன் நிற்கிறது.மூல ஆசிரியருக்கு அவர் முன்னோர்கள் உருவாக்கித்தந்த மொழி உலகம் மறைவாக நிற்கிறது.அவ்வளவுதான்
வேறுபாடு. எனவே, பெரிதாக இருவருக்கும் இடையில் உயர்வு/தாழ்வு கற்பிக்கப் தேவையில்லை.

ஆக, மொழிபெயர்ப்பு என்பது, சிரமம் என்று கருதினால் சிரமம். அதேநேரத்தில்,ரசித்து இறங்கிவிட்டால் ,அதைப்போல சுவாரஸ்யமான பணி எதுவுமே இருக்க முடியாது.

மொழிபெயர்ப்பாளருக்குப் பன்மொழிப் புலமை இருந்தாக வேண்டும்.அது மட்டுமே மொழிபெயர்ப்பாளராகத் தகுதியா என்றால் அதுவும் இல்லை. மொழி
ஆளுமை வேண்டும். ரசனையும் வேண்டும்.

Thursday, April 02, 2020

~~~~~~~~~~~~எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~
எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு
~~~~~~~~~~~~
1960களில் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் எங்களுக்குத் திறம்பட கல்வி கற்பித்த என் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய ஆசிரியப் பெருமகனார் மெளலானா சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இன்று 02.04.2020 காலை லால்பேட்டையில் மறைந்தார்கள் எனும் செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமும் துக்கமும் அடைந்தேன்.

அன்னார் பொரவாச்சேரி , நெல்லை பேட்டை ஆகிய கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்கள். பின்னர் நீண்ட காலம் மலேஷியாவில் இருந்த ஹள்ரத் அவர்கள் மூப்பின் காரணத்தால் லால்பேட்டையில் தம் இல்லத்தில் ஓய்வு எடுத்துவந்தார்கள்.
சாலிஹ் ஹள்ரத் அவர்களிடம் நான் 3 ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளேன். பாடங்களை எளிமையாகப் புரியவைப்பதேடன் இறையச்சம், நல்லொழுக்கம் ஆகிய போதனைகளையும் செய்வார்கள். தாயுள்ளம் கொண்ட அந்த மகான் என்மீது தந்தை பாசத்தைப் பொழிவார்கள்.

நான் , கம்பம் பீர் முஹம்மது பாகவி, ஜைனுல் ஆபிதீன் உலவி, எம்.சி. ரோடு அப்துல் ஃபத்தாஹ் உலவி போன்றோர் அன்னாரின் மாணவர்கள். 

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள சில ஆண்டுகள் முன் லால்பேட்டை சென்றிரேந்தபோது சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இல்லம் சென்று அன்னாரைச் சந்தித்தோம். அச்சந்திப்பு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அண்மையில் ரஹ்மத் பப்ளிகேஷன் வெளியிட்ட தஃப்சீர் இப்னு கஸீர் பத்தாம் பாகத்திற்கு எங்கள் அன்பான வேண்டுகோளை ஏற்று அணிந்துரை வழங்கினார்கள்.ஒரு மாணவனின் எழுத்துக்கு, அவன் ஆசிரியர் வழங்கும் மதிப்புரையைவிட உயர்ந்த விருது வேறு இருக்க முடியாது. ஹள்ரத் அவர்களின் இறுதி நாட்கள் என்பதை உணர்ந்து, இப்போது விட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என்ற துடிப்பில் தான் அணிந்துரை வற்புறுத்தி வாங்கினோம்.

கிட்டத்தட்ட என் ஆசிரியர்கள் அனைவரும், அல்லது பெரும்பாலோர் என் எழுத்துத் தொண்டை ஊக்கிவித்து மதிப்புரை வழங்கியது நான் செய்த புண்ணியம் என்பேன்.
ஹள்ரத் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள தந்தான் வேண்டும். ஆனால் நாட்டு நிலைமை இடம் கொடுக்காது. அன்னாரின் மறுமை வாழ்வு செழிக்க அல்லாஹ் அருள் புரிவானாக.
اللهم اغفر له و ارحمه وأدخله جنة الفردوس الأعلى يارب العالمين.
என வேண்டி விடைபெறுகிறேன். வஸ்ஸலாம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி

Tuesday, March 10, 2020

அனைத்து ஆலிம்களும்அவசியம் ஆஜராகுஙகள்

~~~~~~~~~~~~~~~~
அனைத்து ஆலிம்களும்
அவசியம் ஆஜராகுஙகள்
~~~~~~~~~~~~~~~~
இன் ஷா அல்லாஹ் வருகின்ற 14.03.2020 சனிக்கிழமை மாலை 6.00மணிமுதல் 9.00மணிவரை சென்னை மண்ணடி மஸ்ஜித் லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளிவாசலில் நடைபெறவுள்ள எங்கள் ஆசிரியர் பெருந்தகை 
மெளலானா பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்களின் சுயசரிதை நூல் வெளியிடப்பட உள்ளது.

அன்னாரே தம் நாவால் சொல்லச் சொல்ல அன்புத் தம்பி மெளலவி கலீலுர் ரஹ்மான் மன்ப ஈ அவர்கள் வாசகம் அமைத்துத் தொகுத்துள்ளார்.

அத்தோடு ஹள்ரத் அவர்களின் என் போன்ற மாணவர்கள் ஹள்ரத் அவர்கள் பற்றி எழுதியுள்ள சுவையான சம்பவங்கள் கொண்ட கட்டுரைகளும் நூலில் இடம்பெறுகின்றன.

நம் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த ஆலிம் பெருமகனாருக்குப் புகழ் சேர்க்கும் இவ்விழாவில் எல்லா ஆலிம்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்ப்பது கடமையல்லவா? 

இன்றைய இளம் ஆலிம்கள் பெரும்பாலும் அன்னாரின் மாணவர்களாக, மாணவர்களின் மாணவர்களாக இருப்பர். இரண்டு மூன்று தலைமுறைகளைக் கண்ட ஹள்ரத் அவர்களின் சுயசரிதை நம் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பாடமாக இருக்கும்.இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.

காலையிலிருந்து தொடங்கும் நிகழ்ச்சிகளில் பல ஆலிம்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

ஒருவர் , அதிலும் மார்க்கத்திற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு பெருந்தகை வாழ்வில் சந்தித்த மேடு பள்ளங்கள்  இளையவர்களுக்குச் சிறந்த பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாருங்கள்! நாமும் வாழ்ந்து பார்ப்போம் !

- உங்கள் அன்பு 
கான் பாகவி
~~~~~~~~~~~~~~~~

Friday, February 21, 2020

*இந்திய முஸ்லிம்களின்* *இரண்டாவது விடுதலைப் போராட்டம்!*

*இந்திய முஸ்லிம்களின்*
*இரண்டாவது விடுதலைப் போராட்டம்!*

*அ. முஹம்மது கான் பாகவி*

இந்தியாவை 800-க்கும் அதிகமான ஆண்டுகள் ஆண்ட பெருமை முஸ்லிம்களுக்கு உண்டு. முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடந்தபோதுதான் இந்தியாவை ஆக்கிரமித்தனர் வெள்ளையர்கள். இந்திய மண்ணில் வெள்ளைக்காரன் கால் பதித்த அடுத்த நிமிடமே மோப்பம் பிடித்துவிட்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள், அவர்களை விரட்டியடிக்க ஆயத்தமாகிவிட்டார்கள் என்பது வரலாறு.

பின்னர் தனிப்பட்ட முறையிலும் மற்ற சமூகங்களுடன் இணைந்தும் ஆக்ரோஷமாகவும் ஆண்மையோடும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் கையிலெடுத்து, உயிர்கொடுத்துப் போராடினார்கள் முஸ்லிம்கள். பல முஸ்லிம் மன்னர்கள் குடும்பத்தோடு வீரமரணம் அடைந்தனர். சிலர் சொத்துகளை இழந்தனர். மார்க்கம் கற்ற ஆலிம் பெருமக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளையர்களால் கழுவேற்றப்பட்டார்கள்.

சுதந்திரம் கிடைத்தது. அப்போதைய தலைவர்களான காந்திஜி, ஜின்னா, பட்டேல் போன்றவர்களால் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டபடி நாட்டுப் பிரிவினையும் நடந்தது. விரும்பக்கூடிய யாரும் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்று குடியேறிக்கொள்ளலாம் எனப் பொது அறிவிப்பு வெளியானது. இன்றைய பாகிஸ்தான் மற்றும் அதையொட்டி வாழ்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலான முஸ்லிமல்லாதோரும் குடிபெயர்ந்தனர்.

ஆனால், வடக்கிலும் சரி! தெற்கிலும் சரி! பலகோடி முஸ்லிம்கள் இந்தியாதான் எங்கள் பிறந்த மண்; இதுவே எங்கள் இறந்த மண்ணாகவும் இருக்க வேண்டும் –என்று தீர்மானித்து, பாகிஸ்தான் குடிபெயர மறுத்துவிட்டனர். இந்தியாவே எங்கள் முன்னோர்கள் பிறந்த நாடு என்று சொல்லி, இங்கேயே தங்கி, இந்தியாவின் இன்ப – துன்பங்களில் சமபங்கு எடுத்துக்கொண்டு வாழ்ந்துவருகின்றனர்.

இதற்கிடையில், கிழக்கு பாகிஸ்தானில் வெடித்த உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட்டு, பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. பாகிஸ்தான் இரண்டானது. இந்நிலையில், பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் குடியேறிய இந்தியர்கள் பலர். சாதி-மத வேறுபாடின்றி இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர். அங்குள்ள வாழ்க்கைத் தரம், தட்ப வெப்பநிலை, பொருளாதார நெருக்கடி ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைந்தன.

‘முஸ்லிம் நாடு’ என்று பெயரளவிற்குப் பெயர் சூட்டிக்கொண்ட அவ்விரு நாடுகளின் மதரீதியிலான சில நடவடிக்கைகள் பொருந்தாமல் போனதும், முஸ்லிமல்லாதோரின் வெளியேற்றத்திற்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கக்கூடும். ஆனால், மதம் மட்டுமே காரணம் என்றால், அந்நாடுகளின் முஸ்லிம்களும் அகதிகளாக இந்தியா வந்து, குடியுரிமை இல்லாமல் ஏன் அவதிப்பட வேண்டும்.

பொருளாதாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய துறைகளில் அந்நாடுகளில் ஏற்பட்ட போதாமைதான் இவர்கள் குடிபெயர உண்மையான, சரியான காரணமாக இருக்க இயலும். இவ்வாறு இந்தியாவுக்குள் தகுந்த ஆவணங்களின்றி, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு, பரிதாப நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் படிப்படியாகக் குடியேறினர். அஸ்ஸாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் வசதிவாய்ப்பிற்கேற்ப உள்ளே புகுந்தோரில் சில லட்சம் முஸ்லிம்களும் அடங்குவர்.

உள்ளூரில் வாழ்ந்துவந்த மக்களுக்கு இவர்களின் வரவால் பல்வேறு நெருக்கடி ஏற்படவே, அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, இது அஸ்ஸாமில் சற்று கடுமையாகவே இருந்துவருகிறது. நடுவண் அரசு தலையிட்டு, இதற்கொரு தீர்வு காண முயலும்போது, அகதிகளில் அதிகமானோர் இந்துக்களாக இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது.

நீண்டகாலம் அகதிகளாக இருக்கும் முஸ்லிமல்லாதோரை மட்டும் ‘இந்தியர்கள்’ எனச் சட்டப்படி அறிவிக்க பா.ஜ.க. அரசு எண்ணியது. (அப்படிப் பார்த்தால், அனைவரும் இந்தியர்தான்.) முஸ்லிமல்லாத அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதென்றும் சில லட்சம் முஸ்லிம் அகதிகளை நாட்டைவிட்டுத் துரத்துவது என்றும் முடிவு செய்தது பாஜக.

இந்தியக் குடியுரிமை பெறும் முஸ்லிமல்லா அகதிகள், நன்றிக் கடனாகத் தங்களுக்குத் தேர்தல்களில் வாக்களிப்பார்கள். முஸ்லிம் அகதிகள் நமக்கு வாக்களிக்கமாட்டார்கள். அத்துடன், பாரதத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகமாகி, ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் –என்பதே இந்த பாரபட்ச முடிவுக்கு அசல் காரணம் என்றால், பாஜகவின் மனசாட்சி மறுக்காது.

ஆனால், அஸ்ஸாமியர் அகதிகள் அனைவரையும் –சாதிமத பேதம் பார்க்காமல்- நாட்டிலிருந்து வெளியேற்றியாக வேண்டும் எனப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, இதையொட்டியே இந்தியா முழுக்க வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் கணக்கெடுத்து, அரசு கோரும் சாத்தியமில்லா ஆவணங்கள் இல்லாததால் ‘சந்தேகத்துக்குரியோர்’ என முத்திரை குத்திக் கணிசமானோரை அகதிகளாக்க நடுவண் அரசு திட்டமிட்டது. இதன் விளைவே, இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள்.

ஆனால், இதன் அபாயத்தை அறிந்துகொண்ட இந்திய முஸ்லிம்கள் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை வீரியமிக்கப் போராட்டங்களைக் கையிலெடுத்துத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். தலைநகர் தில்லியில் தொடங்கிய ‘ஷாஹின் பாஃக்’ காத்திருப்புப் போராட்டம், சென்னை வண்ணாரப்பேட்டைவரை பரவி, இந்திய வீராங்கனைகளால் தொடர்ந்து நடந்துவருகிறது.

பர்தா முறையைப் பேணி, உணவை மறந்து, உறக்கத்தைத் துறந்து, இயற்கைத் தேவைகளைக்கூடத் தள்ளிவைத்துவிட்டுக் கைக்குழந்தைகளுடன் அந்த வீரப் பெண்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தைக் காண்கையில் நமக்கெல்லாம் சிலிர்த்துப்போகிறது. நம்மையும் அறியாமலேயே அவர்களுக்காக துஆ செய்யத் தூண்டுகிறது. காவலர்களின் தடியடியையும் வாங்கிக்கொண்டு, அதை ஒரு விழுப்புண்ணாக ஏற்றுக்கொண்டு உறுதியோடு போராடும் வீரமங்கையர் வாழ்த்துக்குரியவர்கள்; வரலாற்றுச் சின்னங்கள்.

இதே காத்திருப்புப் போராட்டம் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் மகளிரால் நடத்தப்படுவது வியப்பானது; வித்தியாசமானது. அத்துடன் மறியல் போராட்டங்கள், மனிதச் சங்கிலி போராட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்… என மக்களாட்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான சாத்வீகப் போராட்டங்களையும் சமுதாயம் முன்னெடுத்துவருவது, அதன் விழிப்புணர்வைக் காட்டுகிறது.

இத்தனைக்கும், அசம்பாவிதங்களுக்கு இடமளிக்காமல், சட்டமீறல்களில் ஈடுபடாமல், காவல்துறைப் பாதுகாப்போடு அறவழியில் இப்போராட்டங்கள் நடப்பது பார்ப்போரை வியக்கவைக்கிறது. காவலர்களின் அத்துமீறலால் சிற்சில இடங்களில் நடந்த தள்ளுமுள்ளுகள், தடியடிகள் தவிர வேறு விபரீதங்கள் எதற்கும் போராளிகள் இடமளிக்காததும் நம் தரப்பைப் பொதுமக்கள் அங்கீகரிக்க வழிவகுத்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

போராட்டங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், அதிகாரிகள், முதலமைச்சர், குடியரசுத் தலைவர்… என அதிகார வர்க்கத்தை முறையாகச் சந்தித்து, நம் அச்சங்களையும் கோரிக்கைகளையும் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளையும் சமுதாயப் பெரியவர்கள் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

எல்லாம்சரி! இது எத்தனை நாட்களுக்கு…? அரசு அசைந்து கொடுக்குமா…? கடைசியில் நம் நிலைதான் என்ன…? என்ற கேள்விகள் நம்முன் அணிவகுப்பதை நிராகரிக்க முடியவில்லை.

ஒன்றை மட்டும் உறதியாகச் சொல்லிக்கொள்வோம்! முயற்சி நம்முடையது; அதில் அயர்ச்சி கூடாதது; நகர்ச்சி இறைவனுடையது; அந்த நம்பிக்கையில் தளர்ச்சி வரக்கூடாதது.

ஏன் நம் அடுத்த திட்டங்கள் இப்படி இருக்கக் கூடாது? 1. கணக்கெடுப்பில் ஒத்துழையாமை. 2. ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு)–உம்ரா / ஹஜ் பெயரில்கூட- எடுத்துவைத்துக்கொள்ளல். 3. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் 4. சர்வதேச மனித உரிமைகள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லல். 5. இந்தியாவின் நட்பு நாட்டுத் தலைவர்களை அணுகுதல்.

எல்லாவற்றுக்கும் முன்னால் படைத்த இறைவனிடம் அழுது மன்றாடி முறையிட்டுக்கொண்டே இருத்தல். அப்போது நம்முடைய இரண்டாவது விடுதலைப் போராட்டமும் இன் ஷா அல்லாஹ் வெல்லும்.
___________________________

Sunday, February 02, 2020

வரிச்சலுகை உண்மையா?

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
வரிச்சலுகை உண்மையா?
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

பாஜக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் ஒரு பொய்த்தோற்றம் ஆகும்.காரணம், புதிய வரி விதிப்பின்படி உட்சபட்ச சேமிப்பு ரூ.62,400தான்.

ஆனால் பழைய வரிவிதிப்பின்படி உச்சபடசமாக 80-சி பிரிவின் கீழ் சுமார் ரூ.4லட்சம்வரை முதலீடு காட்டி சலுகை பெற முடியும்.

அப்படிப் பார்க்கும்போது பழைய வரியே மேல் என்கின்றனர் மாதாந்திர ஊதியம் பெறுவோர்.இதை உறுத்திப்படுத்துகிற வகையிலேயே நிதி அமைச்சரின் இன்னொரு அறிக்கை அமைந்துள்ளது.

புதிய முறைப்படி பல்வேறு வரிவிலக்குகள் மற்றும் சலுகைகள் பெற முடியாது என அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.அத்துடன்,இந்த இரு வரிவிதிப்பு முறைகளில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுக்கலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

இரண்டும் அரசுக்குச் சாதகம்தான் என்று இல்லாவிட்டால் இப்படி அறிவிப்பாரா நிதி அமைச்சர்.

ஆயுள் காப்பீடு பிரீமியம்,வருங்கால வைப்பு நிதி,வங்கி டெபாசிட் , குழந்தைகளின் கல்விக் கட்டணம் உள்ளிட்ட ரூ.1.5லட்சம்வரையிலான சலுகை புதியதில் கிடைக்காது. 

வீட்டுக்கடனுக்கான ஊக்கத்தொகை -ரூ.2லட்சம்,வீட்டு வாடகை,மருத்துவக் காப்பீடு, நிலைக்கழிவு ( டிஸ்கவுண்ட்) -ரூ.50 ஆயிரம் ஆகிய வரிச் சலுகைகளையும் புதிய முறையில் பெற முடியாது.

இப்போது சொல்லுங்கள்: இது சலுகையா? தந்திரமா ?
- அன்புடன் உங்கள்
கான் பாகவி

Thursday, January 09, 2020

பிரஸ்டன் கல்லூரி கல்விக் கருத்தரங்கு

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
பிரஸ்டன் கல்லூரி
          கல்விக்
    கருத்தரங்கு
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*பிரஸ்டன் பன்னாட்டுக் கல்லூரி, சென்னை நடத்தும்
ஒருநாள் கல்விக் கருத்தரங்கம்*

நாள்: *11.01.2020 சனிக்கிழமை* காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை

இடம்: *முத்தமிழ் பேரவை, T.N. ராஜரத்தினம் கலையரங்கம்,* துர்காபாய் தேஷ்முக் சாலை, (டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி எதிரில்) ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28

கருத்தரங்கப் பொருள்:
*இந்தியாவில் சமூக நல்லிணக்கம்
வரலாறு, சவால்கள், தீர்வுகள்*

*கருத்தரங்கத் தொடக்க நிகழ்ச்சி:*
காலை 09.00 முதல் 10.00வரை

தலைவர்: *முனைவர், ராம் புன்யானி* (மனித உரிமை ஆர்வலர்)

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: முஹம்மது உமர் சுலைமான் (D.O)

திருமறை: ஷைக், அப்துல் வஹீத் உமரி

வரவேற்புரை: முனைவர், T. அமீன் அஹ்மத் உமரி, மதனி

நிகழ்ச்சி அறிமுகம்: முனைவர், S. அப்துல் மாலிக்

தலைமையுரை: தலைவர்

நன்றியுரை: ஷைக், இஹ்த்திஷாமுல் ஹக் காஸிமி

*முதலாம் அமர்வு:*
முற்பகல் 10.15 முதல் 11.30வரை

தலைவர்: *முனைவர், முஹம்மத் சுலைமான் உமரி*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: முனைவர், K. அஹ்மத் ஸுபைர்

*கட்டுரையாளர்கள் (ஆங்கிலம்)*

1. சகோதரர் இம்தியாஸ் (முகலாயர்கள் தொடர்பான புனைவுகள்)

2. முனைவர், T. ஷஃபீக் அஹ்மத் (சமூக நல்லிணக்கத்தில் கர்நாடக நவாப்)

3. முனைவர், K. அஹ்மத் ஸுபைர் (அபுல்கலாம் ஆஸாத் – புறக்கணிக்கப்படும் தொலைநோக்குப் பார்வையாளர்)

4. ஷைக், தாரிகுல் ஹக் மதனி (அவுரங்ஸீபின் ஆட்சியில் இந்தியா)

5. முனைவர், J. ராஜா ஹுசைன் (தமிழகத்து மத நல்லிணக்கப் பூங்காவில் முஸ்லிம்கள்)

6. முனைவர், கா. சுகந்தி (திப்பு சுல்தான் மனித விழுமியங்களைப் பாதுகாத்தவர்)


*இரண்டாம் அமர்வு:*
முற்பகல் 11.45 முதல் பிற்பகல் 01.00வரை

தலைவர்: *மௌலானா, அ. முஹம்மத் கான் பாகவி*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி

*கட்டுரையாளர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)*

1. மௌலவி, முஹம்மது அலி ஜின்னா சிராஜி (இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை)

2. மௌலவி, ஹுசைன் ரஷாதி (அடிப்படைவாதம்)

3. சகோதரர் ஷமீம் (சமூக நலனுக்கான நோக்கங்களும் அவற்றை வெற்றி கொள்வதும்)

4. முனைவர், T. அமீன் அஹ்மத் (சமூக நல்லிணக்கம் – தடைகள் என்ன?)

5. மௌலானா, இப்ராஹீம் பாகவி (சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் பங்கு)

5. எஸ். தமீம் (சமூக நலனுக்கான நோக்கங்களும் அவற்றை வெற்றி கொள்வதும்)


*மூன்றாம் அமர்வு:*
பிற்பகல் 02.00 முதல் பிற்பகல் 03.00வரை

தலைவர்: *முனைவர், R.K. நூர் முஹம்மத் மதனி*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: ஷைக், தாரிகுல் ஹக் மதனி

*கட்டுரையாளர்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)*

1. மௌலவி, அப்துர் ரஹ்மான் உமரி (தேசியவாதம் எனும் குறுகிய சிந்தனை)

2. ராழியா ஹஃப்ஸா (சமூக நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு)

3. மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி (மறக்கடிக்கப்படும் மாவீரர் திப்பு சுல்தான்)

4. முஹம்மத் உமர் சுலைமான் (வழிபாடு என்பதன் பரந்த, விரிவான பார்வை)

5. மௌலானா, அ. முஹம்மத் கான் பாகவி (அடிப்படைவாதமும் தீவிரவாதமும்)

6. மௌலவி, கவுஸ் கான் உமரி (நபியவர்களின் மதீனா வாழ்க்கையில் சமூக நல்லிணக்கத்திற்கான வழிகாட்டல்கள்)


*நான்காம் அமர்வு:*
பிற்பகல் 03.15 முதல் மாலை 04.00வரை

தலைவர்: *முனைவர், சயீத், பெங்களூரு*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: சகோதரர் நிஸார் அஹ்மத்

*கட்டுரையாளர்கள் (ஆங்கிலம்)*

1. இஸ்மா பானு (முன்மாதிரி மனிதர்களின் பற்றாக்குறை)

2. சகோதரர் ஷாஹ்பாஸ் (அடுத்த தலைமுறையின் முன்மாதிரி)

3. ஷைக், அப்துல் வஹீத் (தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள்)

4. ஷைக், ஜுனைத் அஹ்மத் (சமூக நல்லிணக்கத்தில் கல்வியின் பங்கு)

5. முனைவர், R.K. நூர் முஹம்மத் மதனி (ஒருங்கிணைந்து வாழ்வதன் அடிப்படைகள்)


*நிறைவு நிகழ்ச்சி:*
மாலை 04.35 முதல் மாலை 05.50வரை

தலைவர்: *ஜனாப், அஹ்மத் மீரான்*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: சகோதரர் அஸீஸுர் ரஹ்மான்

*சிறப்புரைகள்*

*1. ஜனாப், அஹ்மத் மீரான்*

*2. முனைவர், P.S. சய்யித் மஸ்ஊத் ஜமாலி*

*3. முனைவர், M.H. ஜவாஹிருல்லாஹ்*

*4. சகோதரர், ஜிஃப்ரி காசிம் (கருத்தரங்க அறிக்கை மற்றும் நன்றியுரை)*


*முக்கியமான நேரத்தில் அவசியமான தலைப்பில் நடைபெறும் இந்தக் கல்விக் கருத்தரங்கில் சமூக அக்கறை கொண்ட மார்க்க அறிஞர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளுங்கள்.*