Tuesday, October 25, 2011

திருப்புமுனையாகும் புனிதப் பயணம் - 2


பொதுவாக இன்று ஹாஜிகள் தமத்துஉவகை ஹஜ்ஜையே மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சஊதிக்கு வெளியிலிருந்து வரும் ஹாஜிகள் இந்த வகை ஹஜ் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதுதான், முதலில் உம்ராவை முடித்துவிட்டுப் பிறகு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு வசதியாக இருக்கும்.

விமானத்தில் ஹாஜிகள்
தமத்துஉஎன்பதற்கு, ‘ஓய்வெடுத்தல்எனப் பொருள் கூறலாம். புனிதப் பயணிகள் ஊரிலிருந்து புறப்படுகையிலேயே இஹ்ராம்ஆடை அணிந்து, விமானம் குறிப்பிட்ட எல்லையை (மீகாத்) அடைந்ததும் உம்ராவுக்காக நிய்யத்செய்து தல்பியாகூறுகின்றனர்.
‘யலம்லம்’ வரைபடம்
எல்லை (மீகாத்) என்பதற்குப் பொருள், ‘இஹ்ராம்இல்லாமல் அந்த இடத்தை ஹாஜிகள் கடக்கக் கூடாது என்பதுதான். அந்த இடத்தில்தான் இஹ்ராம் கட்ட வேண்டும் என்பது கட்டாயமல்ல; நபிவழி (சுன்னத்) எனலாம். அதற்கு முன்பேகூட இஹ்ராம் கட்டலாம். இஹ்ராம்என்பதற்கு விலக்கிக்கொள்ளுதல்என்று பொருள். கட்டுப்பாடுஎன்று கருத்து.
இஹ்ராம்
உம்ரா அல்லது ஹஜ் செய்வோர், அதற்காக உறுதிமொழி எடுத்துக்கொள்வதுடன் சில கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நகம் வெட்டக் கூடாது; முடி களையவோ வெட்டவோ கூடாது; உடலுக்கோ உடைக்கோ நறுமணம் பூசக் கூடாது; தைத்த ஆடை அணியக் கூடாது; தலையைத் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் மறைக்கக் கூடாது (இந்த இரண்டிலும் பெண்களுக்கு விலக்கு); பாலுறவு கொள்ளக் கூடாது.
சுருங்கக் கூறின், அலங்காரம் ஆகாது. எல்லாம் இருந்தும், அல்லாஹ்வுக்காக எதையும் அனுபவிக்காமல் துறக்கிறார் புனிதப் பயணி. தம்மை ஒரு பரதேசிபோல இறைமுன் காட்டி, தாம் ஓர் அடிமைதான் என்பதைச் செயல்பூர்வமாக மெய்ப்பிக்கிறார் அவர்.
அதற்காக, தவிர்க்க முடியாத சில நடவடிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்பதில் சிலர் பிடிவாதமாக இருப்பது தேவைதானா? தூரிகை (பிரஷ்) கொண்டும் பற்பசை கொண்டும் பல் துலக்கலாகாது என்றும் மிஸ்வாக்எனும் பல் குச்சியாலேயே துலக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகின்றனர். பற்பசையில் நறுமணம் இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
நறுமணம் இல்லாத, மருத்துவ குணமுள்ள பற்பசைகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? வாடையே இருக்கக் கூடாது என்றால், மிஸ்வாக் குச்சியிலும் வாடை இருக்கத்தானே செய்கிறது? இவ்வாறுதான், உடலில் பயன்படுத்தும் சோப்பு. நறுமணமில்லாத, அழுக்கை அகற்றும் குணமுள்ளதாக சோப்பு இருந்தால் அதைப் பயன்படுத்துவதிலும் தவறில்லை. இவ்வாறு இனம் பிரிப்பது சிரமம் என்று கருதுவோர் சோப்பைத் தவிர்ப்பதே முறை.
உம்ரா
திருமக்கா நகரை அடைந்து, புனித கஅபா வந்தவுடன் உம்ரா கிரியைகளைப் புனிதப் பயணிகள் மேற்கொள்வர். உம்ராஎன்பது மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரு வழிபாடாகும். 1. புனித கஅபாவை தவாஃப் செய்தல். அதாவது ஏழு முறை கஅபாவைச் சுற்றிவர வேண்டும்.
இங்கு கஅபாவின் அமைப்பு குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. கஅபா ஒரு சதுர வடிவ கட்டடமாகும். கஅபாவின் தலைவாயில் உள்ள பகுதி கிழக்கு நோக்கி உள்ளது. அரைவட்டப் பகுதி (ஹத்தீம் அல்லது ஹிஜ்ரு இஸ்மாயீல்) வடக்கு நோக்கி உள்ளது. தலைவாயிலுக்கு நேர் எதிர்ப் பகுதி மேற்கு நோக்கியும் அரைவட்டச் சுவருக்கு நேர் எதிர்ப் பகுதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
புனித கஅபாவின் தென்கிழக்கு மூலையில்தான் அல்ஹஜருல் அஸ்வத்எனும் கறுப்புக் கல் 1.15 மீட்டர் உயரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 25 செ.மீ; அகலம் 17 செ.மீ. கறுப்புக் கல்ஒரு காலத்தில் ஒரே கல்லாக இருந்தது. பின்னர் ஓர் அசம்பாவிதத்தின்போது உடைந்து எட்டு துண்டுகளாகிப்போனது. அந்தத் துண்டுகளையே பளிங்கிக் கல்லில் பதித்துவைத்துள்ளனர்.
புனித கஅபாவின் தென்மேற்கு மூலைக்கே யமானீமூலை என்பர். அதில் எதுவும் பதிக்கப்படவில்லை. என்றாலும், ஓர் அடையாளம் இருக்கும். மற்ற மூலைகளிலும் எதுவும் பதிக்கப்படவில்லை. கஅபாவுக்கு வடக்கே உள்ள அரைவட்டச் சுவரையும் சேர்த்தே சுற்ற வேண்டும். அதுவும் புனித கஅபாவின் ஒரு பகுதிதான். அச்சுவரின் உயரம் 1.32 மீட்டர்; அகலம் 1.55 மீட்டர். இச்சுவருக்கு மேலே கஅபாவில் மீஸாப்என்றொரு குழாய் போன்ற பகுதி உண்டு. கஅபாவின் கூரையைக் கழுவினாலோ மழை பெய்தாலோ மேலிருந்து நீர் வடிவதற்காகக் கட்டப்பட்ட வடிகால்தான் மீஸாப்.
தவாஃப் செய்யும் முறை
புனித கஅபாவைச் சுற்றும் மதாஃபின் சுற்றளவு 17,000 மீட்டர் ஆகும். ஒரே நேரத்தில் 52 ஆயிரம் பேர் சுற்றலாம். கஅபாவை தவாஃப் செய்பவர் தமது முதல் சுற்றை, கறுப்புக் கல் உள்ள தென்கிழக்கு மூலையிலிருந்தே தொடங்க வேண்டும். அங்கு ஆரம்பித்து, கஅபாவின் தலைவாயில் உள்ள பகுதி வழியாக -அதாவது சுற்றுபவரின் இடது புறமாக- தவாஃபைத் தொடர வேண்டும். அரைவட்டச் சுவரையும் சேர்த்துச் சுற்றி மேற்குப் பகுதிக்கு வந்து, தென்மேற்கு மூலை (அர்ருக்னுல் யமானீ) வந்தவுடன், முடிந்தால் அந்த மூலையை அடையாளமிடப்பட்டுள்ள இடத்தில் கையால் தொட வேண்டும். அதையோ கையையோ முத்தமிடல் கூடாது. தொடுவதற்கு இயலாதபோது அதை நோக்கி சைகை செய்யாமல் அப்படியே சுற்ற வேண்டும்.
அங்கிருந்து ஹஜருல் அஸ்வத் மூலைக்கு வர வேண்டும். இடையில் யமானீ -ஹஜருல் அஸ்வத் ஆகிய மூலைகளுக்கிடையே ரப்பனா ஆத்தினாதுஆவை ஓதிக்கொள்வது நபிவழி (சுன்னத்) ஆகும். ஹஜருல் அஸ்வத் மூலைக்கு வந்தவுடன், முடிந்தால் அதை முத்தமிட வேண்டும். முத்துவதற்கு முடியாதபோது கையால் அல்லது வேறு பொருளால் கல்லைத் தொட்டு, கையை அல்லது அப்பொருளை முத்தமிட வேண்டும். அதுவும் சாத்தியமாகாதபோது, அதை நோக்கிக் கையால் சைகை செய்தால் போதும்.
‘ஹஜருல் அஸ்வத்’ கல்
கல்லை முத்தமிடும்போது, ‘பிஸ்மில்லாஹ் வல்லாஹு அக்பர்என்று கூற வேண்டும். சைகை செய்யும்போது, ‘அல்லாஹு அக்பர்என்று சொல்ல வேண்டும். இத்துடன் ஒரு சுற்று முடிந்தது. இவ்வாறு ஏழு முறை சுற்ற வேண்டும். இதுதான் ஒரு தவாஃப்ஆகும்.
இதைத் தவிர, ஒவ்வொரு சுற்றின்போதும் இன்ன துஆதான் ஓத வேண்டும் என்பதற்கெல்லாம் நம்பத் தகுந்த ஆதாரம் இல்லை. நமக்குத் தெரிந்த தஸ்பீஹ், அல்லது துஆ, அல்லது குர்ஆன் சூரா ஓதிக்கொள்ளலாம். தவாஃப் செய்யும்போது அவசியமில்லாத பேச்சுகளையும் உரையாடல்களையும் தவிர்ப்பது நல்லது.

மகாமு இப்ராஹீம்
புனித கஅபாவை ஏழு முறை சுற்றியபின், கஅபாவுக்குக் கிழக்கே உள்ள கண்ணாடி கூண்டுக்கு -அதாவது மகாமு இப்ராஹீமுக்கு- அப்பால் இரு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கதாகும். முதல் ரக்அத்தில் குல் யா அய்யுஹல் காஃபிரூன்சூராவும் இரண்டாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத்சூராவும் ஓதிக்கொள்வது சிறந்தது. அந்த இடத்தில் துஆவும் செய்கிறார்கள்.



இப்ராஹீம் நபியின் பாதச் சுவடு
மகாமு இப்ராஹீம்என்பது, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புனித கஅபாவை எழுப்பியபோது நின்ற கல்லாகும். இக்கல்லில் நின்றவாறுதான் அன்னார் கட்டடத்தை எழுப்பினார்கள். அக்கல்லில் அன்னாரின் பாதங்கள் பதிந்த சுவடு தெரிகிறது. ஒரு பாதம் 10 செ.மீ. ஆழத்திலும் மற்றொரு பாதம் 9 செ.மீ. ஆழத்திலும் உள்ளன. ஒவ்வொரு பாதத்தின் நீளம் 22 செ.மீ; அகலம் 11 செ.மீ. ஹஜருல் அஸ்வதிலிருந்து 14.5 மீட்டர் தூரத்தில் கண்ணாடிக் கூண்டில் இக்கல் உள்ளது.
பிறகு ஸம்ஸம்நீரை அருந்துவதுடன், சிறிது அள்ளி தலையில் ஊற்றிக்கொள்ளலாம்.





ஸஃபா - மர்வா சஃயு
2. உம்ராவின் இரண்டாவது அம்சம் ஸஃபா மலைக்கும் மர்வா மலைக்கும் இடையே சுற்றுவதாகும். இயன்ற வரை, தவாஃபை முடித்த கையோடு சஃயு செய்துவிட வேண்டும்.
ஸஃபாஎன்பது கஅபாவுக்குத் தென்கிழக்கே 130 மீட்டர் தொலைவில் உள்ள சிறிய மலையாகும். இப்போது கண்ணாடி அறைக்குள் அது அமைந்திருக்கிறது. ஹஜருல் அஸ்வதுக்குத் தெற்கே அதற்கு வழி உண்டு.
மர்வாஎன்பது, புனித கஅபாவுக்கு வடகிழக்கே 300 மீட்டர் தொலைவில் உள்ள சிறு மலையாகும். அதில் மலையே தெரியாத அளவுக்குக் கட்டடம் எழுப்பப்பட்டுவிட்டது.
ஸஃபா மர்வா சஃயு ஓடும் பாதை
ஸஃபாவில் தொடங்கி மர்வாவுக்கும், மீண்டும் மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கும் நடந்து செல்வதே சஃயுஎனப்படும். இடையே இரு பச்சை விளக்குகள் எரிகின்ற இடத்திற்கு மத்தியில் சற்று வேகமாக ஓட வேண்டும். உண்மையில் இந்த ஓட்டமே சஃயுஆகும். இவ்வாறு ஏழு முறை சுற்ற வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு சுற்று; மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு மீண்டும் வருவது இன்னொரு சுற்று. இப்படியே ஏழு முறை சுற்ற வேண்டும். இந்தச் சுற்றுப் பாதை 390 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் கொண்டது. ஏழு முறை சுற்ற வேண்டுமானால், 2.73 கி.மீ. நடக்க வேண்டும். ஒரே நேரத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் சஃயு செய்யலாம்.
ஸஃபா - மர்வா இடையே சுற்றும்போது இன்ன துஆதான் ஓத வேண்டும் என்ற குறிப்பு ஏதுமில்லை. தெரிந்த தஸ்பீஹ், துஆ, குர்ஆன் சூராக்களை ஓதலாம். கஅபாவை தவாஃப் செய்யும்போது அங்கத் தூய்மை (உளூ) உடன் இருப்பது அவசியம். ஸஃபா - மர்வா இடையே சுற்றும்போது தூய்மையுடன் இருப்பது நல்லது; கட்டாயமல்ல.
தலைமுடி களைதல்
3. உம்ராவின் மூன்றாவது அம்சம் தலைமுடி களைவதாகும். முதலில் தவாஃப்; அடுத்து சஃயு செய்து முடித்தவுடன் தலைமுடியை மழித்துக்கொள்ள வேண்டும்; அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். மழிப்பதே சிறந்தது.
எனினும், உம்ரா முடிந்த ஒருசில நாட்களிலேயே ஹஜ் கிரியைகள் தொடங்குவதாக இருந்தால், உம்ராவுக்குப்பின் தலைமுடியைக் குறைத்துக்கொள்வதே நன்று. அப்போதுதான், ஹஜ் முடிந்தபின் தலைமுடியை மழிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
ஆண்களைப் பொறுத்த வரை, அவர்கள் மழித்தாலும் குறைத்தாலும் தலைமுடி முழுக்கப் பரவலாக மழிக்க வேண்டும்; அல்லது குறைக்க வேண்டும். தலையில் சில பகுதியைச் சிறைத்துவிட்டுஅல்லது குறைத்துவிட்டு வேறு பகுதியை வெறுமனே விட்டுவிடலாகாது.
பெண்களைப் பொறுத்தமட்டில், விரல் நுனி அளவுக்குத் தலைமுடியின் ஓரத்தை வெட்டிக்கொண்டால் போதும்.
இத்துடன் உம்ராவின் கிரியைகள் நிறைவுபெறும். இதன்பின் ஹஜ்ஜுக்கு நாட்கள் இருந்தால், இஹ்ராமைக் களைந்துகொண்டு சாதாரணமாக இருக்கலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் இஹ்ராமுடைய கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக இருப்பதாலேயே, இந்த ஹஜ் முறைக்கு தமத்துஉ’ (ஓய்வெடுத்தல்) எனப் பெயர் வந்தது.
உம்ரா - ஹஜ் இடைப்பட்ட காலம்
உம்ராவை நிறைவு செய்தபின் ஹஜ் நாளை அடைய சிலருக்கு 20 நாட்கள், சிலருக்கு 15 அல்லது 10 நாட்கள் இடைவெளி இருக்கலாம். இந்நாட்களில் சிலர் மதீனா சென்று வந்துவிடுவர். சிலர் ஹஜ் முடிந்தபின் மதீனா செல்வதுண்டு.
இந்த இடைப்பட்ட நாட்களில் மக்காவில் தங்கியிருப்போர் கூடுதலாகப் பல உம்ராக்களை மீண்டும் மீண்டும் செய்து முடிக்கின்றனர். ஒருமுறை, தன்யீமில் உள்ள ஆயிஷா பள்ளிவாசலுக்குச் சென்று இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்து உம்ரா செய்கின்றனர். இன்னொரு முறை ஜிஇர்ரானாஎனும் இடத்திற்குச் சென்று இஹ்ராம் கட்டி, ‘பெரியஉம்ரா செய்கின்றனர்.
இவ்வாறு கூடுதலாகப் பல உம்ராக்கள் செய்ய முன்மாதிரி இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். சஊதி அரசு புனிதப் பயணிகளுக்குத் திரும்பத் திரும்ப ஓர் அறிவிப்பைச் செய்துவருகிறது. ஏற்கெனவே உம்ரா செய்து முடித்தவர்கள், அடுத்தடுத்து வரும் பயணிகள் உம்ராவைச் சிரமமின்றி மேற்கொள்ள வழி விடுங்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு.
ஆம்! கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்வதற்கும் ஸஃபா - மர்வா இடையே சுற்றுவதற்கும் நாள் செல்லச் செல்ல கடும் நெருக்கடியும் நெரிசலும் ஏற்பட்டு, பயணிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த நெரிசலுக்குக் காரணமே ஒரே நபர் பல தடவை உம்ரா செய்வதுதான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விடைபெறும் ஹஜ்ஜில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம் சென்று இஹ்ராம் கட்டி வந்து உம்ரா செய்தது உண்மைதான். ஹஜ்ஜுக்குமுன் உம்ரா செய்ய முடியாமல் அரஃபாநாள்வரை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அதனால், ஹஜ் முடிந்தபின் இவ்வாறு உம்ரா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள். (புகாரீ, முஸ்லிம்)
நாம்தான் முன்பே -மக்கா வந்தவுடனேயே- உம்ராவை நிறைவேற்றிவிடுகிறோமே! அவ்வாறே ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு நடந்த மக்கா வெற்றிக்குப்பின் ஹுனைனில் கிடைத்த போர்ச் செல்வங்களை மக்காவுக்கருகில் உள்ள ஜிஅரானாஎனும் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள். அப்போது அந்த இடத்தில் இஹ்ராம் கட்டி உம்ரா மட்டும் நிறைவேற்றினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
இதற்கும் இப்போது ஹாஜிகள் செய்வதற்கும் என்ன தொடர்பு? நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபின் நான்கு முறை உம்ரா செய்துள்ளார்கள். ஒவ்வொன்றும் தனித்தனி ஆண்டுகளில் நடந்தது. நபியவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் ஒரே உம்ராதான் செய்தார்கள். நபியவர்கள் செய்த ஹஜ் கிரான்’ (ஒரே இஹ்ராமில் உம்ராவும் ஹஜ்ஜும் நிறைவேற்றல்) ஆகும்.

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இரண்டு (தடவை) உம்ரா செய்துவந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரே ஆண்டில் மூன்று தடவை உம்ரா செய்திருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் ஓராண்டில் தனித் தனிப் பயணத்தில் பல முறை உம்ரா செய்தவர்கள். ஒரே பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நபித்தோழர்கள் யாரும் உம்ரா செய்திருந்தாலும், அது உம்ராவுக்கென மேற்கொண்ட தனிப் பயணத்தில் நடந்திருக்கும்; ஹஜ் பயணத்தில் அல்ல.
ஹஜ் பயணத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட தடவை முன்னோர்கள் யாரும் உம்ரா செய்திருந்தாலும், அக்காலத்தில் இவ்வளவு கடுமையான கூட்ட நெரிசல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
எனவே, கூடுதல் உம்ரா செய்ய விரும்பும் ஹாஜிகள் அடுத்தவருக்கு வாய்ப்பளித்து நெரிசலைக் குறைப்பதற்கு உதவ வேண்டும்.
என்ன செய்யலாம்?
இந்த இடைப்பட்ட காலத்தில் செய்வதற்கு நிறைய வழிபாடுகள் உள்ளன. இயன்ற வரை, ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் புனித ஹரம் பள்ளிவாசலில் ஹாஜிகள் நிறைவேற்ற வேண்டும்; அதில் வைராக்கியமாக இருக்க வேண்டும்.
அத்துடன் தஹஜ்ஜுத் தொழுகைக்கே புனித ஹரமுக்குச் சென்றுவிட வேண்டும். அங்கு எட்டு ரக்அத்கள் தனியாகத் தொழுதுவிட்டு, தஸ்பீஹ், திக்ர், குர்ஆன் ஓதுதல் ஆகிய வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். பின்னர் துஆ செய்ய வேண்டும். துஆவில் மனமுருகி அழுது மன்றாடி அல்லாஹ்விடம் இறைஞ்சி கேட்க வேண்டும்.
பாவங்களை மன்னிக்குமாறும், இனிமேல் பாவம் செய்யாமல் காக்குமாறும், மார்க்கக் கடமைகளைச் சீராகச் செய்யவும் பாவங்களிலிருந்து விலகியிருக்கவும் உதவுமாறும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். வாழ்க்கை வசதி உடல்நலம், கல்வி முன்னேற்றம், பாதுகாப்பு, நற்குணம், நன்னடத்தை, மறுமை விடுதலை ஆகியவற்றை நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.
அஸீஸிய்யா போன்ற இடங்களில் தங்கியிருப்போர் தஹஜ்ஜுதுக்கே புனித ஹரமுக்கு வந்து, ஃபஜ்ர் தொழுகையையும் முடித்துக்கொண்டு வீடு திரும்பலாம். லுஹ்ர் தொழுகைக்காக ஹரமுக்கு வர முடியாதவர்கள் இருக்கும் இடத்திலுள்ள பள்ளிவாசல்களில் தொழுதுகொள்ளலாம். பிறகு அஸ்ருக்கு ஹரம் சென்றால், இஷாவரை இருந்து மேற்சொன்ன வழிபாடுகளில் ஈடுபடலாம்.
வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்கு அவசியம் ஹரமுக்குச் சென்றுவிடுங்கள். ஜுமுஆவில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், காலை பத்து மணிக்கெல்லாம் ஹரமுக்குள் நுழைந்துவிட வேண்டும். இல்லையேல் சாலையில்தான் தொழ வேண்டியது வரும்.
இதுவெல்லாம், மனிதனுக்கு வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய பெரும் பேறுகளாகும். வாய்ப்புகளைப் பெற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பை நழுவவிட்டு, வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பிவிடக் கூடாது.
புனித ஹரம் பள்ளிவாசல் என்பது, கஅபாவைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள விசாலமான பெரிய பள்ளிவாசலாகும். இதற்குச் சிறியதும் பெரியதுமாக 155 தலைவாயில்கள் உள்ளன. அவற்றில் 32 தலைவாயில்களில் மின் ஏணி (எஸ்கலேட்டர்) உள்ளது. ஹரம் பள்ளிவாசலின் சுற்றளவு 2 லட்சத்து 66 ஆயிரத்து 168 சதுர மீட்டராகும். ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தொழலாம்.
புனித ஹரம் பள்ளிவாசலைச் சுற்றி -அதற்கு வெளியேயும் மக்கள் தொழுவதுண்டு. அதன் சுற்றளவு 88ஆயிரம் சதுர மீட்டராகும். கழிப்பறை வசதி, அங்கத்தூய்மை செய்வதற்கான வசதி, குடிதண்ணீர் (ஸம்ஸம்) வசதி, குளிப்பதற்கான வசதி பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
http://khanbaqavi.blogspot.com/2011/10/blog-post.html

Thursday, October 13, 2011

கொள்ளைபோகும் இராக் எண்ணெய் வளம்


- கான் பாகவி


ண்ணெய் வளமிக்க மேற்காசிய நாடுகளில் இராக் முதலிடம் வகிக்கிறது. இராக்கில் பூமிக்கடியில் 505 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) பீப்பாய்கள் (Barrel) அளவுக்கு பெட்ரோல் உண்டு. அவற்றில் 134 பில்லியன் பீப்பாய் பெட்ரோல் வெளியே எடுப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.

இது கடந்த அக்டோபரில் இராக் எண்ணெய் அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரமாகும். ஆனால், சர்வதேச அறிக்கை ஒன்று, 240 முதல் 300 பில்லியன் பேரல்கள் வரையிலான பெட்ரோல் தற்போது வெளியே எடுக்க வாய்ப்பு உண்டு என்கிறது.

இதன் மூலம், எண்ணெய் வளத்தில் இராக் முதலிடத்தைப் பிடிக்கிறது எனலாம். இதுவரை 264.5 பில்லியன் பேரல்கள் என்ற அளவில் முதலிடத்தில் இருந்த சஊதியை இராக் முந்திவிட்டது தெளிவாகிறது. 211.1 பில்லியன் பேரல் அளவில் வெனிஸுலா இரண்டாம் இடத்தையும், 137 பில்லியன் பேரல்கள் அளவில் ஈரான் மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தன. பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஓபெக்’ [OPEC]  வெளியிட்ட கணக்காகும் இது.

இராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்து அந்நாட்டை இன்றுவரைத் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்கு, இராக்கில் உள்ள எண்ணெய் வளம்தான் காரணமா என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய கட்டாயத்தை இப்புள்ளிவிவரங்கள் ஏற்படுத்திவிட்டன.


2003ஆம் ஆண்டுக்குப்பின் இராக்கில் எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு முதல் காரணம், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புக்கு முந்தைய கடைசி இரு மாதங்களில் 2.85 மில்லியன் (1 மில்லியன் 10 லட்சம்) பேரல்களாக இருந்த கச்சா எண்ணெய்யின் தினசரி உற்பத்தி, ஆக்கிரமிப்புக்குப் பிறகு 2.3 மில்லியன் பேரல்களாகக் குறைந்தது. அதாவது நாளொன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்கள் குறைந்துபோயின.

அமெரிக்க ஆக்கிரமிப்பு செய்த நாள் முதலாய் இராக்கின் எண்ணெய் உற்பத்தி மொத்தத்தில் 60 விழுக்காடு குறைந்துபோனது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் 5 முதல் 6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு எண்ணெய்ப் பொருட்களை இராக் இறக்குமதி செய்துவருகிறது.

இராக் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த முதல் வாரங்களில் நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகளையும் அரசு அலுவலகங்களையும் அமெரிக்க ராணும் இடித்துத் தரைமட்டமாக்கியது; எரித்துச் சாம்பலாக்கியது. இனி இவற்றைச் செப்பனிட்டுப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமானால், எல்லா வசதிகளும் உள்ள பெரிய எண்ணெய் நிறுவனங்களாலேயே அது சாத்தியமாகும். இத்தகைய நிறுவனங்கள் அமெரிக்காவிடமும் அதன் நேச நாடுகளிடமும்தான் உண்டு.

இது தொடர்பான ஒப்பந்தங்களை அமெரிக்க தன் நேச நாடுகளுடன் இரகசியமாக ஏற்கெனவே இறுதி செய்துவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா இராக்கைவிட்டு வெளியேறினாலும், புனரமைப்பு என்ற பெயரில் மேற்கு நாடுகள் இராக்கைச் சுரண்டப்போகின்றன.

இன்னொரு பக்கம், 2003க்குப் பிறகு இராக்கின் நிர்வாக அமைப்பும் சட்ட ஒழுங்கும் அடியோடு சிதைந்துபோயின. இதனால், பெட்ரோல் உள்பட எல்லாப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. அரசின் நிதி ஆதாரம் ஆட்டம் காணும் அளவுக்கு நாட்டின் பட்ஜெட் எகிறியது. கடந்த ஆண்டு இராக்கின் வரவு - செலவு திட்டம் 320 பில்லியன் இராக் தீனார் (சுமார் 280 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

இது, கடந்த 70 ஆண்டுகளாக இராக் கண்டிராத பயங்கரமான பட்ஜெட் என்கிறார்கள். மின்வெட்டை அறிந்திராத இராக் மக்கள், இன்று இருட்டிலேயே தங்களது வாழ்வைக் கழிக்கிறார்களாம்! சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் தினமும் 18 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. நல்ல குடிநீருக்குக் கடுமையான பஞ்சம். 25 விழுக்காடு மக்களுக்குக்கூட குடிநீர் சரியாகக் கிடைப்பதில்லை.

சுகாதாரத் துறை செயலிழந்து ஆண்டுகள் பல கழிந்துவிட்டன. குர்திஸ்தான் மாநிலம் தவிர இராக்கில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் மகப்பேறு சிகிச்சைகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெறவே இல்லையாம்?

2008ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 50 விழுக்காட்டுக்கு மேலாக எந்த அமைச்சகமும் செலவிடவில்லை; செலவிட இயலவில்லை. சில அமைச்சகங்கள் 20 சதவீதத்தைக்கூட எட்டவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

உள்கட்டமைப்புகளை அனைவரும் ஒன்றுசேர்ந்து நிலைநிறுத்த வேண்டியதிருக்க, இராக் மக்கள் இன்னும் தங்களிடையே சண்டையிட்டுக்கொண்டு நாட்டை மேலும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பழிவாங்குவதிலும் கணக்குத் தீர்ப்பதிலும் தீவிரம் காட்டிவரும் இராக்கியர் தங்களிடையேயான பிரச்சினைகளைத் தாங்களே பேசித் தீர்க்காமல் டெஹ்ரான், லண்டன், நியூயார்க் என அந்நிய பூமியில் எதிர்க்கட்சிகள் இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இராக்கின் சாலைகள் இரத்தத்தால் சிவக்கின்றன; வானுயர்ந்த கட்டடங்கள் எல்லாம் அகதிகள் முகாம்களாகின்றன.

இராக்கில் எண்ணெய் துறைக்கு மட்டும் 2003 - 2011வரை 493 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இராக்கியரின் ஆண்டு வருமானம் 3,500 டாலரிலிருந்து 18ஆயிரம் டாலராக உயர்வதற்கான வாய்ப்பு இருந்தும் நிர்வாகச் சீர்கேட்டால் 8.5 மில்லியன் வேலை வாய்ப்புகள் வீணாகிக் கிடக்கின்றன.

இராக்கில் எண்ணெய் உற்பத்தி தாமதப்படுவதால் 2006 - 2011 வரை 227 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுவே 2012 - 2016 இடைப்பட்ட காலங்களில் 538 பில்லியன் டாலர்களாக உயரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இன்னொரு கொடுமையும் அங்கு அரங்கேறுகிறது. அதுதான் பெட்ரோல் கடத்தல். சட்ட ஒழுங்கு சீர்குலைவைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் இக்கடத்தல் வேலையில் ஈடுபடுகின்றனராம்! தற்போதைய அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் (ஷியா) கட்சிகள் ஈரானுக்கு பெட்ரோலைக் கடத்துகின்றன. அங்கு பாதி விலைக்கு விற்று நாட்டைச் சுரண்டுகின்றன. இதற்கு ஈரானும் உடந்தை.

மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே குர்திஸ்தான் மாநில அரசு எண்ணெய் விற்பனையில் இறங்கிவிட்டது. இதனாலும் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

ஆக, வெளியிலிருந்து வந்த குள்ளநரிக் கூட்டம் மான்களை வேட்டையாடிக்கொண்டிருக்க, மான்கள் தங்களுக்குள் முட்டிமோதி செத்து மடிந்துகொண்டிருக்கின்றன.

வனவிலங்குகளுக்கு மனிதநேயம் வரப்போவதுமில்லை; மான்களின் சண்டை ஓயப்போவதுமில்லை. தொலைவிலிருந்து கேட்கும் அவர்களின் ஓலத்தை கேட்டுக்கொண்டிருப்பதுதான் நம் தலைவிதியோ!
மூலம்: அல்முஜ்தமா 

Tuesday, October 04, 2011

திருப்புமுனையாகும் புனிதப் பயணம் - 1


-   . முஹம்மது கான் பாகவி

ஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்புக்குரியவை. புனித ஹஜ் கடமை எல்லா விதத்திலும் சிறப்பானது; வித்தியாசமானது. முறையாக மேற்கொள்ளப்படும் புனித ஹஜ், ஹாஜிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைவது உறுதி.
இறைநம்பிக்கை, இறைவழிபாடு, தியானம், பிரார்த்தனை, தியாகம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல், அடக்கம், பணிவு, எளிமை, மார்க்கப் பற்று, முன்னோர்கள் மீதான மதிப்பு, நுகர்வு பற்றிய மதிப்பீடு, சக மனிதர்கள்மீது பச்சாதாபம், இன, மொழி, பிராந்திய வேற்றுமைகளை மறத்தல், படைத்தவனே நிஜம்; மற்றெல்லாம் மாயை என்ற ஆன்மிக உணர்வு... இப்படி ஏராளமான உயர் கோட்பாடுகளின் சங்கமமே புனித ஹஜ்.

ஊரை மறந்து, உற்றார் உறவினரை மறந்து, தொழிலை மறந்து, பொருளை மறந்து, இலட்சக்கணக்கானோர் மத்தியில் இருந்தாலும் அனைவரையும் மறந்து ஏக இறைவனின் அன்புக்காக ஏங்கவைக்கும் ஏற்றமிகு நாட்களே ஹஜ் நாட்கள்.

இறைமறை இறங்கிய இடம்; இறைத்தூதர் பிறந்த மண். அந்த இடம் புனிதம்; அந்தக் காற்று புனிதம்; அந்த வான்வெளி புனிதம்; அந்த மாதம் புனிதம்; அந்த நாள் புனிதம்; அந்த மண், நீர், மரம், செடி கொடி, காய்கனி, பேரீச்சங்கனி, குப்ஸ் (கோதுமை ரொட்டி), ஒட்டகம், தோட்டம், வயல்வெளி... எதையும் மறக்க முடியாது.

இந்த இடத்தில் அந்த மாமனிதரின் பாதம் பட்டிருக்குமோ! இந்த இடத்தில் அண்ணலார் அமர்ந்திருப்பார்களோ! இங்கு தொழுதிருப்பார்களோ! இங்கு அழுதிருப்பார்களோ! இங்கு தோழர்களிடம் உரையாடியிருப்பார்களோ! இங்கு படுத்திருப்பார்களோ! இங்கு உண்டிருப்பார்களோ! இங்கு உறங்கியிருப்பார்களோ... என்று கண்ணீர் மல்க காலச் சுவடுகளைத் தேடும் வழிகள்.

புனித கஅபா... அந்தச் சதுர வடிவ சிறு கட்டடம்... பல அடுக்குமாடி நவீனக் கட்டடங்களைக் கண்டு களித்த கண்கள்கூட புனித கஅபாவை முதன்முதலில் காணும்போது, உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, வார்த்தையால் வடிக்க முடியாதது.

கண் தானாகவே நீரைச் சுரக்கிறது; உடல் நடுங்குகிறது; நெஞ்சு விம்முகிறது; நடை தளர்கிறது; பாதம் நகர மறுக்கிறது. ஓவென அழத்தோன்றுகிறது. நா தழுதழுக்கிறது. இந்தப் பரவசத்தில், என்னை சக பயணிகள் மிதித்ததோ உதைத்ததோ தள்ளிவிட்டதோ எதுவும் எனக்குத் தெரியவில்லை.

கம்பீரமான, அதே நேரத்தில் சாந்தமான தோற்றம். காண கண் கோடி வேண்டும். எத்தனை நபிமார்கள், எத்தனை சான்றோர்கள், எத்தனை நல்லடியார்கள் சுற்றிவந்த இடம்! தொட்டுத் தழுவிய சுவர்! இதழ் பதித்து முத்திய கல்! அந்தப் பெருங்கூட்டத்தில் இதோ நானும் ஒருவன்.

பிறந்த பலனை அடைந்துவிட்டேன். இனி வேறொன்றும் வேண்டாம்! இதே உணர்வில் கதறி அழுத ஹாஜிகள் பலரை நேரில் பார்க்க முடிந்தது. அந்தக் கட்டடத்தில் உள்ள கல்லுக்கும் மண்ணுக்கும் உள்ள சிறப்பா இது? அப்படியானால், மற்ற கட்டடங்களுக்கு இந்தச் சிறப்பு இல்லையே!

அந்தக் கட்டடம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஓரிறைக் கொள்கைக்கே இந்த மாண்பும் மகத்துவமும். அதை எழுப்பிய மனிதப் புனிதர்களும் அதை தவாஃப் செய்த புண்ணியவான்களும் அதன்பின்னே ஒளிந்திருப்பதன் மகிமைதான் அது. நபிமார்கள், நபித்தோழர்கள், சான்றோர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அது பகரும் சான்றுதான் காரணம்.

ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே உள்ள நீளமான பாதை
ஸஃபா-மர்வா குன்றுகளுக்கிடையே நடக்கும்போதும் ஓடும்போதும் அன்னை ஹாஜர் முன்னே ஓடுகிறார். குழந்தை இஸ்மாயீலின் அழுகுரல் கேட்கிறது. ஸம்ஸம் நீரைப் பருகினால் வானவர் ஜிப்ரீல் தோண்டிய வற்றா ஊற்று காட்சியளிக்கிறது. அங்கே கால் வலி மறந்துபோகிறது. ஹாஜிகளுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு! ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றோடு அவர்கள் கரைந்துபோகிறார்கள்.

அரஃபா பெருவெளியில் லட்சம் தோழர்கள் நிற்க, ‘அர்ரஹ்மத்மலை உச்சியில் அண்ணெலம் பெருமானார் (ஸல்) அவர்கள் உருக்கமான ஓர் உரை நிகழ்த்த, இன்று அதே இடத்தில் நான். ஆகா! என்ன அற்புதமான காட்சியப்பா அது! பயணக் களைப்பும் களிப்பாக மாறும் அதிசயம்!

மினாவில் குளிரூட்டப்பட்ட கூடாரம். ஆனால், ஒதுக்கப்படும் படுக்கை கப்றைநினைவூட்டும். அந்த அளவுக்குக் குறுகலானது. தலையை நீட்டினால் மற்றவரின் தலையோடு மோதும்; காலை சற்று நீட்டலாம் என்றால், மற்றொரு சகாவின் காலில் இடிக்கும். கப்று வாழ்க்கைக்குப் பயிற்சிபோலும்!

மினா கூடாரங்களின் அழகிய காட்சி
மினாவில் ஷைத்தானுக்கு கல்லெறியும்போது ஏற்படும் உணர்ச்சி இருக்கிறதே அனுபவித்தால்தான் உணர முடியும். இவ்வளவு காலம் நீதானே என்னைக் கெடுத்துக்கெண்டிருந்தாய். இன்றோடு நீ ஒழிந்துபோ என்ற வேகம் ஒவ்வொரு கல்லை வீசும்போதும் எழுகிறது.

மதீனாவில்தான் எத்தனை நினைவுகள்! அந்த மாமனிதர் ஓய்வெடுக்கும் அத்தலத்தில் வர்ணிக்க இயலாத எண்ணங்கள்! ஆசைகள்! அப்படியே தடுப்பைத் தாண்டி உள்ளே புகுந்து அண்ணலாரின் திருவதனத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை பார்த்துவிடமாட்டோமா? அப்படியே கொஞ்சம் அவர்களின் பூக்கரத்தைத் தொட்டுவிடமாட்டோமா? மணக்கும் அந்த மேனியைக் கட்டித் தழுவிவிட மாட்டோமா? எத்தனை விபரீத ஆசைகள்! நடக்காது என்று தெரிந்தும் உள்ளத்தின் துடிப்பு அப்படி!

மிம்பரின் எழில்மிகு தோற்றம்
அண்ணலார் தொழவைத்த இடம்; உரை நிகழ்த்திய மேடை. அறிவுரை கூறிய இடம். ஆலோசனை நடத்திய இடம். விசாரணை செய்த இடம். தீர்ப்புச் சொன்ன இடம். நபித்தோழர்கள் தொழுத இடம்; அழுத இடம்; சிரித்த இடம்; பாடம் படித்த இடம். வெளிநாட்டுத் தூதர்கள் வந்துபோன இடம். திண்ணைத் தோழர்கள் பசியால் புரண்ட இடம்.

அருகிலேயே ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஜன்னத்துல் பகீஉ. பெருநாள் தொழுகைத் திடல்முஹாஜிர்கள்-அன்சாரிகள் இடையே கைதேர்ந்த விவாதம் நடந்த பனூசாயிதா மண்டபம். உஹுத் மலை; அங்கே ஹம்ஸா (ரலி) அவர்களின் அடக்கத்தலம்... இப்படி பல்வேறு வரலாற்றுச் சுவடுகள்; நபி (ஸல்) அவர்களின் காலத்தைச் சொல்லும் நினைவுச் சின்னங்கள்.

ஜன்னத்துல் பகீயின் தோற்றம்

எல்லாவற்றையும் கண்டு, ரசித்து, நினைத்து, அழுது, புலம்பி ஊர் திரும்புகையில் சொல்லில் செயலில் நிதானம், சாந்தம், விவேகம், சக மனிதர்கள்மீது பரிவு, பாசம், இறைநம்பிக்கையில் உறுதி, தெளிவு, இறைவழிபாட்டில் புத்துணர்வு, புதுத்தெம்பு என எல்லாம் கலந்த புது மனிதனாக திரும்புகிறார் ஹாஜி.

ஹஜ் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை; பல முனைகளில் இப்போது அவர் பயிற்சி பெற்றவர். நல்லவர். பாவங்கள் இல்லாத, பால் வடியும் முகம் கொண்ட பாலகர்.
(தொடரும்)