Monday, July 11, 2011

இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை


பொருளாதாரம் அல்லது பொருளியல் (Economics) என்பது, தவிர்க்க முடியாத ஒரு கலை ஆகும். பொருளியல் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். ஏனெனில், பொருளியலுக்கு இலக்கணம் கூறுவதிலேயே பொருளாதார மேதைகள் தடுமாறுகின்றனர்.

ஸ்காட்லாந்த் நாட்டைச் சேர்ந்த பொருளாதார மேதையாகக் கருதப்படுபவர் ஆடம் ஸ்மித் (1723 - 1790). இவர், முறைப்படுத்தப்பட்ட விரிவான பொருளாதாரக் கோட்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது.

பொருளியலை "செல்வக் கலை' என வர்ணிக்கும் ஆடம் ஸ்மித், "மனித சமுதாயத்தைச் செல்வச் செழிப்பு மிக்கதாக மாற்றுவதற்கு வேண்டிய வழிமுறைகளைச் சொல்லும் கலையே "பொருளியல்' ஆகும்'' என்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நிபுணர் ஆல்ஃபிரட் மார்ஷல் (1842 - 1924), "மனித வாழ்க்கைக்குத் தேவையான வருவாயைத் திரட்டும் வழிமுறைகளையும், கிடைத்த வருவாயைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் சொல்கின்ற கலையே "பொருளியல்' ஆகும்'' என்று கூறுகிறார்.

மற்றொரு பொருளாதார அறிஞர் லயோனல் ராபின்ஸ். இவர், "மனிதனின் பலதரப்பட்ட தேவைகள் நிறைவேறுவதற்கு அவசியமான உபகரணங்களைக் கையாளும் வழிகளை விளக்கமாக விவரிக்கும் கலைதான் "பொருளியல்' ஆகும்'' என்று இலக்கணம் கூறுகிறார்.

இலக்கணத்திலேயே பிழை

இவர்கள் கற்பிக்கும் இலக்கணங்களின்படி "பொருளியல்' என்பது, பருப்பொருள் (Meterial) சார்ந்த உத்திகளை மட்டுமே குறிப்பதாக அமையும். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கும் பொருளியலுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இந்த இலக்கணங்கள் மறந்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

பொருளாதாரத்தின் உண்மையான கருப்பொருள் மனிதனாக இருக்க, பொருளை மட்டுமே அதன் கருவாக ஆக்கிவிட்டார் ஆடம் ஸ்மித். மனிதனுக்காகத்தான் பொருளே தவிர, பொருளுக்காக மனிதன் அல்ல. மனித உணர்வோடும் தர்ம நியாயங்களோடும் அணுக வேண்டிய துறையே பொருளாதாரம் என்பதை அவர் மறந்துவிட்டார்.

ஆல்ஃபிரட் மார்ஷல் இப்பிழையைச் செய்யாவிட்டாலும், செல்வத்தைத் திரட்டல், அதைச் செலவழித்தல் என்ற இரு அம்சங்களில் பொருளாதாரக் கலையை அவர் அடக்கிவிட்டார். உண்மையில், இதற்கப்பாலும் பல அம்சங்கள் பொருளியலுக்கு உண்டு.

இந்த இலக்கணங்களிலேயே சற்று வித்தியாசமானது, லயோனல் ராபின்ஸ் சொன்ன இலக்கணம்தான். ஆனாலும், பொருளாதாரம் தொடர்பான சில அணுகுமுறைகளை விமர்சனம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளும் கலையைக்கூட "பொருளியல்' என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை அது ஏற்படுத்துகிறது.

மேற்கண்ட குறைகளைக் களைந்துவிட்டு, புதிய இலக்கணம் ஒன்றை அறிஞர்கள் சிலர் கண்டறிந்தனர். "மனிதனின் ஏராளமான தேவைகளுக்கும் ஓர் எல்லைக்குட்பட்ட வருமானத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே' பொருளியல் ஆகும் என்று அவர்கள் இலக்கணம் வகுத்தனர்.

பொருளாதாரம் என்பது, தனிமனிதனையும் சமூகத்தையும் மையமாகக் கொண்ட ஒரு துறையாகும் என்பது இந்த இலக்கணத்திலிருந்து தெரிகிறது.

பொருளாதாரக் கொள்கை

மிகவும் பழைமை வாய்ந்த (கி.மு. 1000 - 2000) நாடுகளான எகிப்து, பாபில் போன்ற பகுதிகளின் தலைவர்களாக விளங்கியவர்கள் சிலரிடம் பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் சில இருந்துள்ளன. ஆனால், அவை முழு உருவம் பெற்றிருக்கவில்லை.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான், பொருளியல் கல்வி மேற்குலகில் தோன்றியது. அது கொள்கை வடிவம் பெற்றது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான்.

ஆரம்பமாக, மேற்கத்திய உலகில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கை (Capitlism) பிறந்தது. தனி மனித உரிமை ஒன்றை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்ட முதலாளித்துவம், தனிமனிதர் ஒவ்வொருவரும் தமது விருப்பப்படி உற்பத்திப் பொருட்களையும் நுகர் பொருட்களையும் உடைமையாக்கிக்கொள்ள முழு அதிகாரம் வழங்குகிறது. உடைமைப்படுத்துவதிலோ நுகர்விலோ தனிமனிதனின் சுதந்திரத்தை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே முதலாளித்துவத்தின் தாரக மந்திரமாகும்.

ஆடம் ஸ்மித் 1776ஆம் ஆண்டு எழுதிய "வெல்த் ஆஃப் நேஷன்ஸ்' எனும் நூலில் செவ்வியல் முதலாளித்துவம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அவர் கூறிய தடையற்ற சந்தை பற்றிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதே முதலாளித்துவமாகும்.

முதலாளித்துவத்தால் பொதுவுடைமையும் பொதுநலனும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாயின. சில தனிமனிதர்களின் கரங்களில் உலகின் முழுப் பொருளாதாரமும் சிக்கிக்கொள்கின்ற ஆபத்து முதலாளித்துவத்தால் உருவானது. சிலர் வாழ, பலர் வாடும் நிலையை உருவாக்கியதுதான் முதலாளித்துவத்தின் பரிசு.

இதன் எதிர்வினையாக சோவியத் ரஷியாவிலும் சீனாவிலும் முளைத்ததுதான் பொதுவுடைமைக் கொள்கை (Communism) ஆகும். "அனைத்து உடைமைகளும் சமூகத்துக்கே (அரசாங்கம்) சொந்தம்; கிடைக்கும் பலன்களை ஒவ்வொருவரின் தேவைக்கேற்பப் பிரித்துக்கொள்ள வேண்டும்'' என்கிறது கம்யூனிஸம். கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கல்ஸின் ஆகியோர் எழுதிய நூல்களிலிருந்து பிறந்ததே பொதுவுடைமைக் கோட்பாடு.

உற்பத்திச் சாதனங்கள் எதையும் உடைமையாக்கிக்கொள்ளும் உரிமை தனிமனிதனுக்குக் கிடையாது; உற்பத்தி மூலப் பொருட்கள், வளர்ச்சித் திட்டங்கள், முன்னேற்றத் தடங்கள் ஆகிய அனைத்தும் நாட்டுக்கே சொந்தம்; குடிமக்கள் அனைவரும் -விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்- அரசாங்கத்தின் ஊழியர்கள் ஆவர் என்கிறது கம்யூனிஸம்.

இக்கொள்கையால் உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட, உரிமைகள் அனைத்தையும் இழந்த இழிநிலைக்குத் தனிமனிதன் தள்ளப்பட்டான். இதனால் விரக்தி ஏற்பட்டு, வாழ்க்கையில் பிடிப்பு இல்லாத நடைபிணமாக வாழ வேண்டிய கட்டாயம் தனிமனிதனுக்கு நேர்ந்தது.
முதலாளித்துவத்தில் பணக்காரர்களில் சிலரது ஆதிக்கம் கோலோச்சும் என்றால், கம்யூனிஸத்தில் ஒரு குழுவின் (அரசு) சர்வாதிகாரம் மக்களை ஆட்டிப்படைக்கும்.

இஸ்லாமியப் பொருளாதாரம்

ஒன்றுக்கொன்று எதிரெதிர் சித்தாந்தங்களான முதலாளித்துவமும் கம்யூனிஸமும் மக்களின் வாழ்க்கையில் நிம்மதியைக் குலைத்துவிட்டன. வறுமையை ஒழிக்கவோ செல்வப் பரவலை ஏற்படுத்தவோ அவற்றால் இயலவில்லை.

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகவும், ஏழை மேலும் ஏழையாகவும் வழிவகுத்ததுதான் முதலாளித்துவம் செய்த சாதனை. தனிமனிதன் வீடு வாசல், சொத்து சுகம் எதையும் பெற்றுவிடாமல் தடுத்ததுதான் கம்யூனிஸத்தின் கொடை.

இந்த இரண்டுக்கும் இடையே நடுநாயகமான, நடுநிலையானதொரு பொருளாதாரக் கொள்கையே இஸ்லாம் கூறும் பொருளாதாரம். இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையில் சமூகத்தால் தனிமனிதனோ, தனிமனிதனால் சமூகமோ பாதிக்கப்படாது. அவரவர் சக்திக்கும் வாய்ப்புக்கும் ஏற்றவாறு நேர்மையான முறையில் பொருள் சேர்க்கலாம்; செலவழிக்கலாம்.

இஸ்லாமியப் பொருளாதாரத்தில், தனிமனிதனுக்கு உரிமைகள் உண்டு. ஆனால், பொதுநலனுக்கு அவை ஊறு விளைவிக்க அனுமதி கிடையாது. பொதுவுடைமையும் உண்டு. ஆனால், அது பொதுநலனுக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால், தனியார் உடைமை, பொதுவுடைமை ஆகிய இரண்டு வகையான உடைமைகளுக்கும் சில அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதிக்கிறது. இரு உடைமைகளில் ஒன்று மற்றொன்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இவை.

இந்தக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பவன், பொருளின் உண்மையான சொந்தக்காரனான இறைவன் ஆவான். ஆம்! பொருட்கள் அனைத்தும் இறைவனுக்குச் சொந்தம். மனிதர்கள் அந்தப் பொருட்களின் முகவர்கள்தான். உரிமையாளனின் சொல் கேட்டு நடப்பது ஏஜென்டுகளின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

இறைவுடைமை

உண்மையில் பார்க்கப்போனால், தனியார் உடைமை என்றோ, பொதுவுடைமை என்றோ எதுவும் இல்லை. எல்லாம் இறைவுடைமைதான். இதைப் புரிந்துகொண்டால், கட்டுப்பாடுகளின் எதார்த்தம் நமக்குப் புரியும்.

திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்:

வானங்கள், பூமி, அவற்றுக்கு இடையில் இருப்பவை, பூமியில் புதைந்து கிடப்பவை ஆகிய அனைத்தும் அ(ந்த இறை)வனுக்கே சொந்தமானவை ஆகும். (20:6)

எல்லாச் செல்வங்களும் தனக்கே சொந்தம் என்பதை இத்திருவசனத்தில் வலியுறுத்தும் இறைவன், மற்றொரு வசனத்தில் இச்செல்வங்களுக்கு மனிதன் ஒரு பிரதிநிதிதான் என்பைத எடுத்துரைக்கின்றான்:

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்புங்கள். அவன் உங்களை எந்தச் செல்வங்களுக்குப் பிரதிநிதிகளாக்கினானோ அவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (57:7)

உலகச் செல்வங்களின் அதிபர் இறைவன் ஆவான்; மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்துகின்ற உரிமையைத் தாற்காலிகமாகவே பெற்றுள்ளனர் என்ற முடிவுக்கு நாம் வந்தபிறகு, அதிபரின் கண்சாடைக்கேற்பச் செயல்படுவதுதான் முகவர்களான மனிதர்களுக்கு அழகாகும்.

பொருளீட்டுவதற்கும் ஈட்டிய பொருளை நுகர்வதற்கும் சில கட்டுப்பாடுகளை இறைவன் விதித்துள்ளான். உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகிய பொருளாதார நடவடிக்கைகள் எதுவானாலும் மற்றவரைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் கவனமாக இருக்கிறது.

இந்த அடிப்படையில்தான், வட்டி, சூதாட்டம், பொய், பித்தலாட்டம், பதுக்கல், கலப்படம், நிறுவையில் மோசடி, குறைகளை மறைத்தல், நம்பிக்கைத் துரோகம், மதுபானம் உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளுக்கு இஸ்லாம் தடை விதிக்கிறது. இவையெல்லாம் நுகர்வோரைப் பாதிக்கும் பயங்கரவாதச் செயல்களாகும் என்பதில் ஐயமில்லை.

அவ்வாறே, ஈட்டிய பொருளை என் விருப்பத்துக்கேற்ப செலவிடுவேன் என்று மேலை நாகரிகம் பேச இஸ்லாத்தில் அனுமதி இல்லை. வீண் விரயம், ஆரம்பரம், களியாட்டம், குடி மற்றும் கூத்து, பாலியல் குற்றங்கள், ஆபாசம் உள்ளிட்ட நுகர்வுகளுக்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. இவை யாவும் ஒட்டுமொத்த மனித குலத்திற்குக் கேடு விளைவிப்பவை ஆகும் என்பது தெளிவு.

மாறாத அடிப்படை

இதுதான், இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை ஆகும். இந்த அடிப்படை விதிகள் என்றைக்கும் மாறாதவை. அவற்றை நம்பிக்கை கொள்வதும் செயல்படுத்துவதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமை ஆகும்.
அதே நேரத்தில், பொருளாதாரத்தின் நடவடிக்கைகளும் அவற்றின் வடிவங்களும் காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாறுபட வாய்ப்பு உண்டு.

எந்தப் புதுமையான பொருளாதார நடவடிக்கையாக இருந்தாலும், அடிப்படை விதிகளுக்கு அது விரோதமாக இல்லாத வரை இஸ்லாம் அதை அனுமதிக்கும்; விரோதமாக இருந்தால் எதிர்க்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதாரத் துறையில் புதுப்புது பிரச்சினைகள் எழலாம். இன்று "உலகமயமாக்கல்' கொள்கை உருவாகியிருப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

இத்தகைய புதுப் பிரச்சினைகளுக்கு, மார்க்கம் கற்ற அறிஞர்களே தீர்வு கண்டு சொல்ல வேண்டும்.

ஒரு பிரச்சினை இஸ்லாத்துக்கு எதிரானதா, ஏற்றதா என்பதை, இஸ்லாமிய அடிப்படை விதிகளோடு ஒப்புநோக்கிப் பார்த்து, மக்களுக்கு நல்வழி காட்டும் மாபெரும் பொறுப்பு மார்க்க அறிஞர்களுக்கு உண்டு.

5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்தக் கட்டுரை மிகவும் அருமையாகவுள்ளது. எல்லோரும் அவசியம் சிந்திக்க வேண்டிய ஆக்கம்.

    அப்துல்லாஹ் (அய்யாபுரம்)

    ReplyDelete
  2. Assalamu Alaikum. This is a good article.khan baqavi is a good scholar in tamil nadu.
    Kollumedu Rifayee.

    ReplyDelete
  3. உங்கள் கருத்துகளுக்கு நன்றி

    ஜஸாக்குமுல்லாஹு கைரன் கஸீரா

    Moderator

    ReplyDelete
  4. well said....May Almighty Allah bless shower His blseeings on you...
    Sheikh Mukhtar
    Halal India

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    கம்யூனிச ரஷ்யாவில் கம்யூனிசத்தை எதிர்த்து மக்கள் போராடினார்களா???

    ReplyDelete