Wednesday, March 20, 2019

முஸ்னது அஹ்மத் நபிமொழித் தொகுப்பு -ஒரு பார்வை

முஸ்னது அஹ்மத் நபிமொழித் தொகுப்பு -ஒரு பார்வை

மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் பின் ஹிலால் பின் அசத் (ரஹ்) அவர்கள், ஹி: 164 (கி.பி. 780)இல் துர்க்மானிஸ்தானில் உள்ள ‘மர்வ்’ எனும் ஊரில் பிறந்தார்கள். பின்னர் தாயாருடன் இராக் தலைநகர் பக்தாதில் குடியேறினார்கள். ஹி: 241 (கி.பி. 855)இல் பக்தாதில் தமது 75ஆவது வயதில் மறைந்தார்கள். அன்னார் ஓர் அநாதை. அவர்கள் பிறந்தபோது தந்தையும் பாட்டனாரும் இறந்துவிட்டிருந்தார்கள்.
தொடக்கக் கல்வியை பஃக்தாதில் கற்று, திருக்குர்ஆனை மனனம் செய்த இமாம் அவர்கள், நபிமொழிகள் சிலவற்றை இமாம் அபூயூசுஃப், ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பஸ்ரா, கூஃபா, திருமக்கா, யமன், எகிப்து, அர்ரய்யு முதலான நகரங்கள் சென்று அங்கிருந்த பெரும் அறிஞர்களிடம் கல்வி கற்றார்கள்.
இவ்வகையில் அரபி மொழி, நபிமொழி, அறிவிப்பாளர் தர ஆய்வியல், அறிவிப்புகளில் உள்ள மறைவான குறைகள், ஷரீஆ சட்டவியல், இறையியல்... எனப் பல்துறைகளையும் கற்றுப் பல்கலை அறிஞராக விளங்கினார்கள்.
அன்னாருடைய ஆசிரியர்களில் சுஃப்யான் பின் உயைனா, யஹ்யா பின் சயீத் அல்கத்தான், இமாம் ஷாஃபி, யஸீத் பின் ஹாரூன், வகீஉ பின் அல்ஜராஹ் (ரஹ்) முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவித்தோரில் பழம்பெரும் அறிஞர்கள் அடங்குவர். அவர்களில் இமாம் ஷாஃபி, புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ, யஹ்யா பின் மயீன் (ரஹ்) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
இறை வழிபாடு, நபிவழி நடத்தல், பற்றற்ற வாழ்க்கை, கொள்கைப் பிடிப்பு, அறச் சீற்றம், கடின உழைப்பு எனத் தம் வாழ்வையே தவ வாழ்வாகக் கழித்தவர் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள். கடுமையான வறுமையிலும் தன்மானத்தோடும் கௌரவத்தோடும் வாழ்ந்து வழிகாட்டியவர்.
எழுதிய நூல்கள்
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இன்றளவும் வழக்கில் உள்ளன. நபிமொழி, அறிவிப்பாளர்தொடர், பாகப் பிரிவினை, ஹஜ், இமாமத், குழப்பங்கள், முஸ்னது அஹ்லில் பைத், வரலாறு முதலான துறைகளில் அவர்கள் எழுதிய நூல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.
அவர்கள் தொகுத்த கருவூலங்களிலேயே முஸ்னது அஹ்மத் எனும் நபிமொழித் திரட்டுதான் உலகப் பிரசித்தி பெற்றதாகும். ‘முஸ்னது’ வகைத் திரட்டுகளில் -அதாவது அறிவிப்பாளர் பெயர் வாரியாக அகர வரிசையில் பாடத் தலைப்பிட்டு வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்புகளில்- முதன்மையானது.
இமாம் அவர்களே தமது நூல்குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்கள்:
ஏழரை லட்சம் நபிமொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 26,363 ஹதீஸ்களை மட்டுமே இத்தொகுப்பில் நான் திரட்டியுள்ளேன். ஒரு நபிமொழி விஷயத்தில் முஸ்லிம்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அவர்கள் இந்நூலை அணுகட்டும்! அவர்கள் தேடியது அதில் கிடைத்தால் சரி! இல்லையேல், அவர்கள் தேடியது ஆதாரபூர்வமானது அல்ல என்று அர்த்தம்.
இமாம் அவர்கள் தம் புதல்வர் அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் கூறியதாவது: இந்த நூலை நன்கு பாதுகாத்துக்கொள்! விரைவில் இது, மக்களுக்கு முன்னோடியாக விளங்கும்.
முஸ்னது அஹ்மத் நபிமொழித் தொகுப்பு அரபி மொழியில் 10-க்கும் அதிகமான பாகங்களில் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பாகமும் ஏறத்தாழ 600 பக்கங்கள் கொண்டது.
நபிமொழி அறிவிப்பாளர் பெயர் வாரியாக 14 அத்தியாயங்கள், 904 பாடங்கள், 26,363 ஹதீஸ்கள் இதில் இடம்பெறுகின்றன. அதாவது 900-க்கும் அதிகமான நபித்தோழர்களின் அறிவிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
இந்த அரிய - பிரமாண்டமான நபிமொழித் திரட்டின் தமிழாக்கப் பணி விரைவில் தொடங்கவுள்ளது. மௌலவி, கான் பாகவி தலைமையிலான மொழிபெயர்ப்பாளர் குழு இச்சீரிய பணியை மேற்கொள்கிறது                    இன்ஷாஅல்லாஹ்.
_____________________