Wednesday, January 20, 2016

பயணக் கட்டுரை - குவைத்


கான் பாகவி

குவைத்
 - தென்மேற்கு ஆசிய கண்டத்தில் மத்திய கிழக்கில் உள்ள ஒரு சிறிய அரபுநாடு. குவைத் நாட்டின் (தவ்லத்துல் குவைத்) வடகிழக்கே இராக்கும் தெற்கே சஊதிஅரபிய்யாவும் உள்ளன. மொத்தம் 17,818 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட குவைத்தின் மக்கட்தொகை 40 லட்சம் (2014 கணக்குப்படி).

சிறுகோட்டைஎனும் சொற்பொருள் கொண்டதுகுவைத்எனும் சொல். 1716ஆம் ஆண்டுதான் குவைத் நகரம் (மதீனத்துல் குவைத்) உருவானது. ‘ஆலுஸ் ஸபாஹ்குடும்பத்தைச் சேர்ந்த முதலாம் ஸபாஹ் ஆட்சிப் பொறுப்பேற்றார். அன்றைய குவைத் மக்களின் பாரம்பரிய தொழில் முத்துக்குளிப்பதுதான். இந்தியா - அரபு தீபகற்பம் இடையே வணிகம் செய்வதிலும் குவைத்தியர் ஈடுபட்டுவந்தனர்.

1937ஆம் ஆண்டு அங்கு முதலாவது எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், இரண்டாம் உலகப் போரின் காரணத்தால் எண்ணெய் ஏற்றுமதி தொடங்கப்படவில்லை. பின்னர் 1946 ஜூன் 30இல்தான் முதலாவது எண்ணெய்க் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது. குவைத்தின் எண்ணெய் உற்பத்தியால் எண்ணெய்யின் சராசரி விலை இறங்கத் தொடங்கியது.

குவைத் நகரம்தான் குவைத் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாகும். குவைத்தில் மன்னராட்சியே நடக்கிறது. இருந்தாலும், நாடாளுமன்றம் உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர் பொதுத்தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு வருமானத்தில் சுமார் 80 விழுக்காடு எண்ணெய் விற்பனைமூலம் கிடைக்கிறது. உலக எண்ணெய்த் தேவைகளில் 10 விழுக்காட்டை குவைத் நிறைவேற்றுகிறது. ஐந்து பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் குவைத்தும் ஒன்று.

சர்வதேச நிதியகத்தின் கணக்குப்படி, உயர்ந்த வருவாய் உள்ள நாடுகளில் குவைத்தும் அடங்கும். இது, உள்நாட்டு உற்பத்தியின் பொருளாதார ஆற்றல் பெருக வழிகோலுகிறது. வாங்கும் சக்தி 167.9 மில்லியன் டாலராக உள்ளது. இதில் தனிநபர் பங்கு ஏறத்தாழ 45,455 அமெரிக்க டாலராகும். இது 2011ஆம் ஆண்டு நிலவரம். உள்நாட்டின் மொத்த உற்பத்தித் திறனில் உலக அளவில் 8ஆவது இடத்திலும் அரபுலக மட்டத்தில் இரண்டாவது இடத்திலும் குவைத் உள்ளது. குவைத் நாணயத்தின் பெயர் தீனார் (KD). ஒரு தீனார் சுமார் 220 ரூபாய் மதிப்பு கொண்டது.
குவைத்தில் இந்தியர்கள்

குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைவிட அதிகம். அவர்களில் ஆண்கள் 6 லட்சம்பேர், பெண்கள் 2 லட்சம்பேர். இருப்பினும், நர்சுகளின் தேவை அதிகரித்திருப்பதால் இந்தியர்கள் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தைத் தொடும் என குவைத் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 5-6 விழுக்காடு கூடுகிறதாம்!

இந்தியர்களில் சுமார் ஒரு லட்சம் பெண்களும் இரண்டு லட்சம் ஆண்களும் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலோர் ஓட்டுநர்கள், தோட்ட வேலை, துப்புரவுப் பணி, சமையல் ஆகிய பணிகளில் உள்ளனர். சுமார் 25 ஆயிரம் பேர் குவைத் அரசு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். செவிலியர்களாகவும் தேசிய எண்ணெய் நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லநர்களாகவும் அவர்கள் உள்ளனர். தனியார் நிறுவனங்களில் கட்டுமானத் துறை, மருத்துவம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, ஆடிட்டிங் ஆகிய துறைகளில் பணியாற்றிவருகின்றனர்.

குவைத்தில் இந்தியப் பள்ளிக்கூடங்கள் ஏராளமாக உள்ளன. ஒரு லட்சம் இந்திய மாணவர்களில் 42 ஆயிரம்பேர் இப்பள்ளிகளில் பயில்கின்றனர்.

தமிழர்கள்


குவைத்தில் மலையாளிகள் அதிகம்; பல லட்சம்பேர் உள்ளனர். தமிழர்கள் சில லட்சம்பேர் இருக்கின்றனர். தமிழர்களில் லேபர்ஸ்களே அதிகம். கட்டடப் பணி, வீட்டு வேலை, டிரைவிங் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படித்தவர்கள் 10-15 விழுக்காடு இருக்கலாம்! அரசுப் பணிகளில் 3-4 விழுக்காடு தமிழர்கள் உள்ளனர். அக்கவுண்டர், பைனான்சியர், மேலாளர் ஆகிய பணிகள் செய்கின்றனர்.

இந்தியப் பணம் 20-25 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்களே அதிகம். 1-10 லட்சம் ரூபாய்வரை சம்பாதிப்பவர்கள் மிகச் சிலரே. இந்தப் புள்ளி விவரங்களில் தமிழ் முஸ்லிம்களும் அடங்குவர். முஸ்லிம்களில் பெரிய வேலைகளில் இருப்போர் மிகவும் குறைவு. சாதாரணப் பணிகளில் நம் நாட்டுக் காசில் ரூ.20 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களே பெரும்பான்மையோர்.

தமிழ் முஸ்லிம்கள் நடத்தும் நற்பணி மன்றங்கள் பல குவைத்தில் இயங்கிவருகின்றன. புனித ரமளான், புனித ஹஜ், சீரத்துந் நபி போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தமிழகத்திலிருந்து அறிஞர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்துகின்றனர். அத்துடன் குவைத் பள்ளிவாசல்கள் சிலவற்றில் வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பாவும் தொழுகையும் நடத்துகிறார்கள். தங்களுக்குள் சந்திப்புக் கூட்டங்கள், கடனுதவி, நோய் சிகிச்சை, பணி தொடர்பான உதவி, மார்க்க விளக்கக் கூட்டம்... எனப் பல்வேறு நல உதவிகளைச் செய்துவருகின்றனர். தமிழகத்தில் பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில், அங்கிருந்துகொண்டே நிவாரணங்களை அனுப்பி உதவுகின்றனர். அவர்களை இணைப்பது மார்க்கமும் மொழியும்தான்.

மிஸ்க்நிகழ்ச்சி


2012ஆம் ஆண்டு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) விடுத்த அழைப்பின்பேரில் சீரத்துந் நபி கூட்டத்தில் கலந்துகொண்டேன். இச்சங்கத்திற்கு விசுவக்குடி மௌலவி, மீராசா பாஜில் பாகவி தலைவராகவும் பரங்கிப்பேட்டை மௌலவி, கலீல் பாகவி செயலாளராகவும் பொறுப்புவகிக்கிறார்கள். அதிரை மௌலவி, நிஜாமுத்தீன் பாகவி, புத்தாநத்தம் நாசர் உள்ளிட்டோர் சங்கத்தில் உள்ளனர். பல்வேறு நற்பணிகளை இச்சங்கம் ஆற்றிவருகிறது.


மஜ்லிஸ் இஹ்யாஉஸ் ஸுன்னா - குவைத் (மிஸ்க்) என்றொரு முஸ்லிம் தமிழ் மன்றம் உண்டு. அதன் நிறுவனர் பெரியவர் மௌலவி, T.P. அப்துல் லத்தீஃப் காஸிமி அவர்களாவார். தலைவர் அய்யம்பேட்டை மௌலானா முஸ்தபா ஆலிம் அவர்களின் புதல்வர் முனைவர் M. முனீர் அஹ்மது. பொதுச் செயலாளர் பொறியாளர், கௌஸ் முஹ்யித்தீன். பொருளாளர் ஜாகிர் ஹுசைன். இவர்களுடன் 12 உறுப்பினர்களும் உள்ளனர்.



இந்தமிஸ்க்மன்றத்தின் சார்பாக 2016 ஜனவரி - 7,8 ஆகிய தேதிகளில் குவைத்தில் நடந்த சீரத்துந் நபி நிகழ்ச்சிகளில் நானும் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களும் கலந்துகொண்டோம். முதல்நாள் குவைத் ஃபஹாஹீல் உத்தைபி பள்ளிவாசலில் இஷாவுக்குப் பிறகு நடந்த கூட்டத்தில் குடும்பம், இல்லறம் பற்றி இருவரும் உரை நிகழ்த்தினோம்.

இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை இரு பள்ளிவாசல்களில் ஜுமுஆ உரையாற்றினோம். அதே நாள் இரவு முக்கிய நிகழ்ச்சியாகதஸ்மாஅரங்கில் நடந்த சீரத்துந் நபி கூட்டத்தில்வரலாற்று நாயகர் நபிகள் நாயகம் (ஸல்)’ எனும் பொருளில் உரைகள் அமைந்தன. இக்கூட்டம் மௌலானா அப்துல் லத்தீஃப் காஸிமி அவர்கள் தலைமையில் நடந்தது. சிறப்பு மலர் வெளியீடு, நூல் வெளியீடும் இருந்தது.

மிஸ்க் மேற்கொள்ளும் நலப்பணிகள் குறித்து அதன் பொருளாளர் ஜாகிர் அவர்கள் எடுத்துரைத்துவந்தபோது, அவர் குறிப்பிட்ட ஒரு பணி என்னை மிகவும் கவர்ந்தது. வெளிநாட்டு வேலைக்கென்று படித்துவிட்டோ படிக்காமலோ தாயகத்திலிருந்து நம் பிள்ளைகள் வந்துவிடுகின்றனர். பணிக்கான தகுதியை வளர்த்துக்கொள்வதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அதனால் பலர் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அல்லது வேலையே கிடைக்காமல் தாயகம் திரும்ப வேண்டியதாகிறது.

எடுத்துக்காட்டாக, குவைத்தில் கணினி சார்ந்த பணிகள் உள்ளன. அவற்றைப் பயிலாமலேயே வந்துவிடுகிறார்கள். எனவே, அதற்கான பயிற்சியை நாங்கள் அளிக்கிறோம் என்றார் பொருளாளர். அவ்வாறே, ஊரில் இருக்கும்போதே அந்தப் பயிற்சிகளை அளிக்கவும் இங்கிருந்துகொண்டே ஏற்பாடு செய்கிறோம். இதனால், தகுதிவாய்ந்த பணிகளில் நம் செல்வங்கள் அமரவும் நியாயமான ஊதியப் பயன்கள் கிடைக்கவும் வழியேற்படுகிறது என்று விளக்கினார். இதைப் போன்றே, வளைகுடாவில் இயங்கும் நலமன்றங்கள் செயல்பட வேண்டும் என்பது நம் அவா.

குவைத் - தமிழ்நாடு உலமா நலச்சங்கம்


எதிர்பாராத அருமையானதொரு சந்திப்பு எங்களுக்குக் கிடைத்தது. குவைத்தில் தமிழ்நாடு உலமா நலச்சங்கம் ஒன்று உண்டு. சங்க உலமாக்கள் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்கள் என்று கூட்ட ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள். சரி என்றோம். இரண்டாம் நாள் மதிய உணவுக்குப்பின் அவர்கள் இடத்திற்குச் சென்றால் அங்கே உலமாக்களின் ஒரு கூட்டமே காத்திருந்தது.


சங்கத்தின் செயல்திட்டங்கள் குறித்து பொதுச் செயலாளர் மௌலவி, முஹம்மது அலி ரஷாதி விளக்கினார்: 2013 நவம்பர் 8ஆம் தேதி இச்சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தில் சுமார் 100 தமிழ் ஆலிம்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மார்க்க அறிஞர்களின் நலன் என்ற பொதுநோக்கோடு இச்சங்கம் செயல்படுவதால் எல்லா அமைப்பு உலமாக்களும் இதில் அங்கம் வகிக்கின்றனர்; இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பைப் போன்று.

சங்க உறுப்பினர்களான ஆலிம்களின் கல்வி மேம்பாட்டுத் திட்டம், வேலை வாய்ப்புத் திட்டம், பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், கடனுதவித் திட்டம்.. எனப் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து இச்சங்கம் இயங்கிவருகிறது. தமிழ் முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வுக்காகவும் பாடபடுகின்ற இச்சங்கம், ‘அல்வாரிஸ்சிறப்பு மலர், சிறு நூல்கள் வெளியிடுகிறது. கல்வி விழிப்புணர்வு மாநாடு போன்ற கூட்டங்களையும் நடத்துகிறது.

சிறிது நேரம் நாங்களும் உரையாற்றிவிட்டுப் புறப்பட்டோம். அந்தச் சந்திப்பு மனத்தில் நீங்காத இடம் பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஆலிம்கள் தங்கள் மனக்குமுறல்களையும் ஊரில் பணியில் இருந்தபோது அடைந்த கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டது நெஞ்சை நெருடியது. பொதுச் செயலாளர் ரஷாதியின் கலகலப்பான உரையாடல் இதமாக இருந்தது. மறுநாள் நம்முடன் அவர்களும் மருத்துவப் பணியாளர் தம்பி சலாஹுத்தீன் அவர்களும் வந்து நேரம் கொடுத்தது மகிழ்ச்சி அளித்தது.

மொத்தத்தில், இந்த குவைத் பயணம் -குறுகிய கால அவகாசத்தில்- நல்ல, இனிய அனுபவமாக அமைந்தது. வெளிநாட்டில் பணியாற்றுவோர் யாரும் ஆசைக்காக அங்கே செல்வதில்லை. குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி, தாயகத்தின் சுற்றுச்சூழல்... என எல்லாமாகச் சேர்ந்து அவர்களை வெளிநாட்டிற்குப் பிடித்துத் தள்ளிவிடுகின்றன. குடும்பத்தாரையும் உறவுகளையும் பிரிந்து வாழ்வதில் அவர்களுக்குத் துக்கம் உண்டு.

ஒரேயொரு வார்த்தை! தரமான கல்வி கற்று, தேவையான தகுதிகளோடு செல்ல வேண்டும் வெளிநாடுகளுக்கு!

___________________