Tuesday, July 31, 2012

பறிபோகும் அகீதா; பலவீனமாகும் ஈமான்


- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி

ஸ்லாத்தின் தனிச் சிறப்புகளில் முதன்மையானது, அதன் இறையியல் கொள்கைதான். உலகமே இறையியல் கொள்கையில் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், இஸ்லாம்தான் தெளிவான இலக்கணம் வகுத்தது; திருக்குர்ஆன் அதற்கு வழி வகுத்தது.

இருக்கின்றான் இறைவன்; ஒருவனே அவன். இதுதான் இஸ்லாத்தின் இறையியல் அடிப்படை. இதன் மூலம், கடவுள் இல்லை என்ற இறைமறுப்பையும் (குஃப்ர்) பல தெய்வங்கள் உள்ளன என்ற இணைவைப்பையும் (ஷிர்க்) இஸ்லாம் ஒரே நேரத்தில் நிராகரித்தது.

(நபியே!) கூறுவீராக: அல்லாஹ் (இறைவன்) ஒருவன்; அவன் எந்தத் தேவையுமற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவில்லை; அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை; அவனுக்கு நிகர் யாருமில்லை. (112)

இந்த அத்தியாயம், முழு குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரீ). அதாவது குர்ஆனின் கருத்துகளை மூன்று பாகங்களாகப் பிரித்தால், அதில் ஒரு பாகம், ஓரிறைக் கொள்கையாகவே (தவ்ஹீத்) இருக்கும். மற்ற இரு பாகங்கள் செய்திகள், விதிகள் ஆகியவையாகும்.

உலகமே வரையறுக்கப்பட்ட ஒரு விதியின்கீழ் இயங்கிவருகிறது. அவ்விதியை உருவாக்கியவனே இறைவன். இறைவன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், உலகம் சீர்குலைந்திருக்கும் (21:22). ஒவ்வொருவனும் தன் படைப்புகளைத் தனியாகப் பிரித்து தனிக்கட்சி ஆரம்பித்திருப்பான். (23:91)

இறைவனின் தனித்தன்மைகள்
எகிப்து சர்வாதிகாரி ஃபிர்அவ்ன் (ஃபாரோ) தன்னையே கடவுள் என்று பிரகடனப்படுத்திக்கொண்டவன். இறைத்தூதர்கள் மூசா (அலை) அவர்களும் ஹாரூன் (அலை) அவர்களும், “நீ கடவுள் அல்ல; உன்னையும் எங்களையும் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான்என்றனர். நீங்கள் சொல்லும் அந்த இறைவன் யார் என்று சர்வாதிகாரி திருப்பிக் கேட்டான்.

அதற்கு மூசா, “ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் இயற்கையை வழங்கி, பின்னர் வழிகாட்டியவனே எங்கள் இறைவன்என்று கூறினார். (20:50) 
அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; இருள்களையும் ஒளியையும் படைத்தான். (6:1) 
அவனே என்னைப் படைத்தான்; எனக்கு நல்வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளிக்கிறான்; நீர் புகட்டுகிறான்; நான் நோயுறும்போது அவனே எனக்குக் குணமளிக்கிறான்; அவனே என்னை மரணிக்கச்செய்கிறான்; பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான் (என்று இப்ராஹீம் கூறினார்). (26:78-81)
என்னை அழவைப்பவன், சிரிக்க வைப்பவன், வாழவைப்பவன், எனக்குக் குழந்தை கொடுப்பவன், கல்வி கொடுப்பவன், செல்வம் கொடுப்பவன், ஏற்றமும் இறக்கமும் தருபவன், என்னைத் தடுக்கிவிழச் செய்பவன், கை கொடுத்துத் தூக்கிவிடுபவன், குற்றங்களைத் தடுப்பவன், குற்றம் செய்துவிட்டால் மன்னிப்பவன், நன்மை செய்யவைப்பவன், அதற்குக் கூலியும் கொடுப்பவன், என் வேண்டுதலை ஏற்பவன் -எல்லாம் அவனே; வேறு யாருமில்லை.

மனிதனின் பிறப்பு இறப்புக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் வெளிக்காரணிகள் இருக்கலாம். அவையே காரணங்கள் அல்ல; அடிப்படைக் காரணம் இறைவனே. அந்த வெளிக்காரணங்களை உருவாக்குபவனும் அவனே. அவனின்றி அணுவும் அசையாது. அவனே ஏகன்; அவனே அல்லாஹ். இதுதான் இஸ்லாமியக் கொள்கையான அகீதா; இவ்வாறே நம்பிக்கை (ஈமான்) கொள்ள வேண்டும்.

இணை கிடையாது
அல்லாஹ்வுக்கு இணை கிடையாது; அவனுடைய தனித்தன்மைகளில் யாரும் கூட்டாகவும் முடியாது. வானவர்களோ ஜின்களோ மனிதர்களோ விலங்குகளோ யாராக இருந்தாலும் அனைவரும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்களே; அவனுடைய அடிமைகளே. அவர்களுக்கெனத் தன்னாற்றல் எதுவும் கிடையாது; எல்லா ஆற்றல்களும் அல்லாஹ் அருளிய கொடைகளே.

வானவர்களை இறைவனின் புதல்வியர் (தேவதைகள்) என்றனர், அறியாமைக் கால அரபியர். இந்த வாதத்தை வன்மையாக மறுக்கின்றான் அல்லாஹ்:
அளவற்ற அருளாளன் குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவனோ தூயவன். (உண்மையில்) அந்த வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள் ஆவர். அவனை முந்திக்கொண்டு பேசமாட்டார்கள்; அவனது ஆணைக்கேற்பவே அவர்கள் செயல்படுவார்கள். (21:26,27)
அவ்வாறே மனிதர்களில் சிலர் ஜின்களைத் தெய்வங்களாக, அல்லது தெய்வத்திற்கு இணைகளாகப் போற்றி வழிபடுகின்றனர். இதையும் அல்லாஹ் மறுக்கின்றான்.
அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஆக்குகின்றனர். (ஆனால்,) அந்த ஜின்களையும் அவன்தான் படைத்தான். (6:100)
சிலர் இறைத்தூதர்களையே இறைவன் என்றனர்; அல்லது இறைவனின் அவதாரம் என்றனர். இதையும் அல்லாஹ் மறுக்கின்றான். இறைத்தூதர்கள் மனிதர்களே என்பதை இறைவன் அடித்துச்சொல்கின்றான்.
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும் கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். (25:20)
இறைவன் மனிதனல்ல; மனிதர்களான இறைத்தூதர்கள் இறைவனாக இருக்க முடியாது. இவ்வாறு மனிதர்கள், ஜின்கள், வானவர்கள் ஆகியோரைத் தெய்வங்களாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர். விலங்குகளைக்கூட சிலைகளாக வடித்து வழிபாடு செய்கின்றனர். சில விலங்குகள் கடவுளுக்கு உதவி செய்தனவாம்! அதனால் அவற்றையும் கண்ணியப்படுத்தி பூசிக்கின்றனர்.

அபிசீனிய நாட்டிற்குச் சென்றிந்த உம்மு சலமா (ரலி) அவர்கள், அங்கு மரியாஎனும் கிறித்தவ ஆலயத்தைக் கண்டார்கள். அதில் சில உருவப்படங்களையும் கண்டார்கள். ஊர் திரும்பியபின் அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அந்த மக்கள், தம்மில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து இறந்துவிட்டால், அவரது சமாதியின் மீது வழிபாட்டுத் தலம் ஒன்றை எழுப்பிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்துவிடுவார்கள். இத்தகையோர்தான் அல்லாஹ்விடம் மிகவும் மோசமானவர்கள். (புகாரீ)

இப்படித்தான், சிலை வழிபாடு ஆரம்பமானது. பெரியவர்கள்மேல் கொண்ட மரியாதை, பக்தியாக மாறி அவர்களையே கடவுளாக மாற்றிய கொடுமைதான். சிலை வழிபாட்டிற்கு வழி கோலியது.

முஸ்லிம் மகான்கள்
ஹிஜ்ரீ 5ஆம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமியப் பரப்புரையாளர்கள் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டார்கள். இந்தப் பிரசாரத்தின் பலனால் முஸ்லிம்களில் வழிதவறிச் சென்ற குற்றவாளிகள் பலர் திருந்தினர்; முஸ்லிமல்லாதோர் இலட்சக்கணக்கில் இஸ்லாத்தைத் தழுவினர்.

இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் இறையச்சம், தூய்மையான எண்ணம், கூடுதலான வழிபாடு, உலக ஆசையின்மை, சுன்னத்தான வாழ்க்கை, உயர்ந்த குணம், தியாக உணர்வு என எல்லா சிறப்பம்சங்களும் நிறைந்திருந்தன. அவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாயிருந்தன; அகமும் புறமும் அப்பழுக்கற்றவையாக இருந்தன.

இதனால் அவர்கள் எளிமையாகப் பேசினாலும் சொல்லில் வீரியம் இருந்தது; உள்ளத்திலிருந்து எழுந்த அவர்களின் மொழி உள்ளங்களைத் தொட்டது; குற்றவாளிகளைத் திருத்தியது; எதிரிகளை நண்பர்களாக்கியது. பிரதிபலன் எதிர்பாராத அவர்களின் சேவையும் இக்லாஸும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்.

இராக்கில் ஜீலான் நகரில் வாழ்ந்த ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ 561; கி.பி. 1166) தொண்ணூறு வயதுவரை வாழ்ந்தார்கள். மிகப்பெரிய மார்க்க அறிஞரும் ஓரிறைக் கொள்கையின் பரப்புரையாளருமான அன்னாரின் கரத்தில் பல மில்லியன் மக்கள் நல்வழி அடைந்தனர்.

இந்தியாவில் அஜ்மீர் நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷைக் காஜா முயீனுத்தீன் சிஸ்தி (ரஹ்) அவர்கள் (மறைவு: கி.பி. 1236) தம் கடுமையான உழைப்பால் இலட்சக்கணக்கானோரை இஸ்லாத்தில் இணைத்தார்கள். அவ்வாறே தமிழ்நாட்டில் நாகூர் நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷைக் ஷாஹ் அப்துல் ஹமீத் அல்காஹிரீ (ரஹ்) அவர்கள் மாபெரும் சீர்திருத்தவாதியாக விளங்கினார்கள்.

ஆனால், இந்த நல்லடியார்கள் மறைந்தபின், அவர்கள்மீது கொண்ட மரியாதையால் அவர்களின் அடக்கத் தலங்களில் பல்வேறு அனாசாரங்களை மக்கள் அரங்கேற்றிவருகின்றனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாக்களில் இஸ்லாத்திற்கு விரோதமான சடங்குகள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

சொல்லப்போனால், அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய சஜ்தாவை அந்த மகான்களுக்குச் செய்கின்றனர்; கஅபாவில் மட்டுமே செய்ய வேண்டிய தவாஃபை அடக்கத் தலங்களில் செய்கின்றனர். சிலர் மகான்களை, அவர்களின் தகுதிக்குமேல் உயர்த்தி அவர்களிடமே பிரார்த்திக்கின்றனர்; அவர்களையே சிலர் வழிபடவும் செய்கின்றனர்.

பறிபோகும் அகீதா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர் மரியாதைக்குரிய ஹுசைன் (ரலி) அவர்களின் நினைவு நாளன்று தீமிதி விழா(?) இன்று நடக்கிறது. அதை ஒரு தெய்வீகத் தன்மையோடுதான் மக்கள் பார்க்கின்றனர். இதையும் நியாயப்படுத்தக்கூடிய அறிஞர்கள் இருக்கவே செய்கின்றனர்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
அல்லாஹ்வுக்கே சஜ்தா செய்யுங்கள்; அவனையே வழிபடுங்கள். (53:62)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு சஜ்தா செய்வது தகாது. அவ்வாறு தகும் என்றிருந்தால், கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு மனைவிக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்; அவனுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை அந்த அளவுக்குப் பெரியதாகும். (முஸ்னது அஹ்மத்)

அது மட்டுமன்றி, “நம் மார்க்கத்தில் (முன்மாதிரி) இல்லாத ஒன்றை ஒருவர் புதிதாக உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும்என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

வேண்டுதல், அல்லது பிரார்த்தித்தல் என்பதெல்லாம், ஏக இறையான அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன். (40:60)
நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:

சிறுவரே! உனக்கு நான் சில விஷயங்களைக் கற்றுத்தருகிறேன்: (நடத்தைகளில்) அல்லாஹ்வைப் பேணிக்கொள்; (இம்மையிலும் மறுமையிலும்) உன்னை அல்லாஹ் பேணிக்காப்பான்; உன் பக்கம் இருப்பான். எதைக் கேட்பதாக இருந்தாலும் அல்லாஹ்விடமே கேள்! உதவி கோருவதானால், அல்லாஹ்விடமே உதவிகோரு!

சமுதாயமே ஒன்றுசேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நினைத்தாலும், உனக்கென அல்லாஹ் எழுதிய நன்மையைத் தவிர வேறு எதையும் அவர்களால் உனக்கு அளித்திட முடியாது. அவ்வாறே, சமுதாயமே ஒன்றுசேர்ந்து உனக்கு ஒரு தீங்கு செய்ய நினைத்தாலும், உன்மீது அல்லாஹ் எழுதிய தீங்கைத் தவிர வேறு ஒன்றும் அவர்களால் செய்திட இயலாது. (திர்மிதீ)

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் தேவைகளை முறையிட்டுத் பிரார்த்திக்கவோ பாவமன்னிப்புக் கோரவோ பிள்ளை வரம் கேட்கவோ கூடாது. சோதிடம் பார்ப்பது, சோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் செய்வது, பெரியவர்களிடம் சென்று குறிகேட்டு, அவர்கள் சொல்லும் மந்திர வேலைகளைச் செய்வது போன்ற உபாயங்களால் எந்தத் தீங்கும் அகலப்போவதில்லை. அத்துடன் ஈமானுக்கும் ஆபத்து என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈமானைத் துறக்கும் இளம் தலைமுறை
இன்றைக்கு எங்கு பார்த்தாலும், காதல் வலையில் சிக்கி, ஈமானையே இழந்து, ஓடிப்போகும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரின் செய்திகள்தான் தேளாய் கொட்டுகின்றன. காலப்போக்கில், முஸ்லிம் பெற்றோர்களே முன்நின்று இந்தக் கலப்புத் திருமணங்களை நடத்திவைக்கும் கொடுமைகளும் நடக்கின்றன.

பள்ளி, கல்லூரி, விடுதி, அலுவலகம் போன்ற ஆண்-பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதலின் பெயரால் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது, படுகுழியில் விழுகின்ற முட்டாள்தனம் என்பது, திருமணத்திற்குப் பிறகோ, கற்பை இழந்து நடுத்தெருவில் நிற்கும்போதோதான் இளசுகளுக்கு உறைக்கிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போய்விடுகிறது.

பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுதுபுலம்பி, வெளியே தலைகாட்ட முடியாமல், கூனிக்குறுகி, அணுவணுவாகச் செத்துக்கொண்டிருப்பதும், உற்றார் உறவினர் பரிதவிப்பதும், சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவும் காதல்போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, உயிரிலும் மேலான ஈமானையே இழக்கத் துணிந்துவிட்ட இளவல்களை என்ன செய்வது?

சினிமாவும் சீரியலும் ஈமானுக்கே வேட்டுவைக்கின்றன. உலகமயமாக்கல் கலாசாராத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மோகம் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் குழிதோண்டி புதைத்துவருகின்றன. நாகரிகம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மேற்கத்திய சுலோகங்கள் குடும்பக் கட்டமைப்பு, பாரம்பரிய வாழ்க்கை முறை, சமய நம்பிக்கை ஆகிய எல்லா நல்ல அம்சங்களையும் சீர்குலைத்துவிட்டன.

இந்நிலையில், அகீதாவையும் ஈமானையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரேவழி, குழந்தைப் பருவத்திலேயே மார்க்கத்தைப் போதிப்பதுதான். பிள்ளைகளுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள், அவர்கள் நல்ல முஸ்லிம்களாக வாழ்வதற்கும் மறுமையில் நரகத்தைவிட்டுப் பாதுகாக்கப்படுவதற்கும் எதையும் செய்யாமல் கோடிகோடியாகப் பணத்தை விட்டுச்செல்வதால் என்ன பயன்?

பெற்றோர்களே! உங்களுக்கு அல்லாஹ் பிறப்பித்துள்ள ஆணையைச் சற்றே சீர்தூக்கிப்பாருங்கள். அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்! அதன் எரிபொருள், மனிதர்களும் கற்களும்தான். (66:6)
இளைஞர்களே! இளம்பெண்களே! உங்களுக்கு வல்ல இறைவன் பிறப்பிக்கின்ற ஆணையையும் விடுக்கும் கடுமையான எச்சரிக்கையையும் தயைகூர்ந்து சீர்தூக்கிப்பாருங்கள்! திருந்துங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்:
இணைகற்பிக்கும் பெண்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள்; இணைவைப்பவர் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கைகொண்ட ஓர் அடிமைப்பெண்ணே சிறந்தவள். 
இணைகற்பிக்கும் ஆண்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பவன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன்.
அவர்கள் உங்களை நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
உங்களில் யாரேனும் தமது மார்க்கத்திலிருந்து மாறி இறைமறுப்பாளராக மரணித்தால், அவர்களின் நற்செயல்கள் யாவும் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாகக் கிடப்பார்கள். (2:217)
(மலேசியாவில் நடைபெற்ற தேசியத் திருக்குர்ஆன் மாநாட்டு ஆய்வு மலரில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை) 

Sunday, June 24, 2012

பென்டகன் என்ன விரும்புகிறது?


- கான் பாகவி

மெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பென்டகன், வர்ஜினியா மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு, அல்லது உலக நாடுகளின் பாதுகாப்பு என்ற பெயரில் யாரை அழிக்கலாம் எனத் திட்டமிடுவதே பென்டகன் உயர் அதிகாரிகளின் வேலை.

இப்போது இஸ்லாத்திற்கும் ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேரழிவுப் போர் ஒன்றுக்கு பென்டகன் திட்டம் தீட்டிவருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. டோக்கியோ, ஹிரோஷிமா, நாகஸாகி, ட்ரீஸ்டன் ஆகிய நகரங்களை அழிக்க கையாண்ட அதே நடைமுறையைக் கையாண்டு மக்கா, மதீனா உள்ளிட்ட இஸ்லாமியப் புனித நகரங்களைத் தகர்க்க பென்டகன் இரகசிய ஆய்வை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

சி.ஐ.ஏ. தூண்டுதலால் அமெரிக்கா போலீஸார் உள்ளத்தில் இஸ்லாத்தின் மீது வெறுப்பூட்டப்பட்டுவருகிறது. இதையடுத்து அமெரிக்க முஸ்லிம்களுக்கெதிரான வேலைகள், வேவு பார்த்தல், பள்ளிவாசல்களிலும் கல்வி மையங்களிலும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தல் போன்ற அவலங்கள் நடந்துள்ளதாகக் கடந்த மே-11ஆம் நாள் இதழில் கார்டியன் நாளிதழ் ஆய்வறிக்கை வெளியிட்டது.

மூன்றாவது போர்?

இதைவிட ஒரு பெரிய அக்கிரமம் அம்பலமாகியுள்ளது. இதை நியூயார்க் டைம்ஸ் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.

நியூயார்க் காவல்துறை ‘மூன்றாவது போர்’ என்ற பெயரில் ஒரு குறும்படம் தயாரித்துள்ளது. அதை, பயிற்சி முகாம் ஒன்றில் கலந்துகொண்ட 1500 போலீஸ்காரர்கள் பார்த்திருக்கிறார்கள். முஸ்லிம்கள், அவர்கள் எந்தக் குழுவினராக இருந்தாலும் எல்லாருமே அமெரிக்காவைத் தகர்க்கவே முயல்கிறார்கள் என்கிறது படம். ஒரு கறுப்புக் கொடியில் ‘கலிமா’ எழுதப்பட்டுள்ளது. அது வெள்ளை மாளிகைமீது பறக்கிறது. இப்படி ஒரு காட்சியும் உண்டு.

இது கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதையடுத்து தன் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, அமெரிக்காவுக்கான புலனாய்வுக் கழகம் கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது. இருப்பினும், வெர்ஜீனியாவில் அடுத்த சுற்றுப் பயிற்சி நடந்ததாக அண்மையில் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

பயிற்சிக் காவவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:  அமெரிக்க சமூகத்தின் பாதுகாப்பிற்கு உண்மையான அச்சுறுத்தல் தீவிரவாதிகளிடமிருந்து உருவாவது அல்ல; இஸ்லாத்திலிருந்தே உருவாகிறது.

கொழுப்பு

இச்செய்தியை வெளியிட்டுள்ள ‘ஒயர்டு’ (Wired) எனும் சஞ்சிகை கீழ்க்கண்ட தகவல்களையும் வெளியிட்டுள்ளது:
  • நடுநிலையான இஸ்லாம் என்பதெல்லாம் கிடையாது; எனவே, காட்டுத்தனமான இந்த மதக்கொள்கையை இனியும் பொறுத்துக்கொள்ள அமெரிக்காவால் இயலாது. ஒன்று, இஸ்லாம் மாற வேண்டும்; அல்லது அதை நாமே அழிப்போம்.

  • டோக்கியோ, ஹிரோஷிமா போன்ற நகரங்களின் அனுபவத்தை இஸ்லாமியப் புனித நகரங்களிலும் செயல்படுத்துவோம்; மக்காவையும் மதீனாவையும்கூட தகர்ப்போம்.

  • இதற்காக மொத்த சஊதியாவையே பட்டினியால் வாட்டுவோம்.

  • அவசியம் ஏற்பட்டால், ஜெனிவா ஒப்பந்தத்தைக்கூட தூக்கிப்போடுவோம்.

  • போலீஸ் பயிற்சி வகுப்பை முடித்தவர்களில் சிலர், பயங்கரவாத தடுப்பு ஏஜென்சியில் தங்களுக்கு அளிக்கப்ப்டட பயிற்சிக்கான பொருள்களின் தொகுப்பு ஒன்றை ‘வொயர்டு’ சஞ்சிகையிடம் கொடுத்துள்ளனர். தொகுப்பிலுள்ள சில வரிகள்:

  • அமெரிக்க முஸ்லிம்களால் ஏற்படும் முதலாவது பிரச்சினையே, பயங்கரவாதத்துக்கு அவர்கள் காட்டும் மென்மையான ஆதரவுதான்.

  • நபி முஹம்மத் மந்திரித்துவிடப்பட்ட (சூனியம் செய்யப்பட்ட) குழுவுக்கே தலைவராக இருந்தார்.

  • தர்மம் கொடுப்பதென்பது இஸ்லாத்தில் கொலைக்கான முதலீட்டு முறைதான்.

மழுப்பலும் கண்டனமும்

எல்லாம் நடந்து முடிந்தபிறகு அமெரிக்க அதிகாரிகள் சிலர் இந்தப் பயிற்சி வகுப்பைக் குறைகூறியுள்ளனர். ஜெனரல் மார்டின் டேம்பஸி, இது மதச்சுதந்திரத்தில் அமெரிக்காவுக்குள்ள ஈடுபாட்டுக்கு முரணானது. தீவிரவாத முஸ்லிம்களுடனேயே அமெரிக்கா போரிடுகிறது; இஸ்லாத்துடன் அல்ல என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஏப்ரலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அந்தப் பயிற்சி முகாம் தனியார் விருப்பத்தின்பாற்பட்டது. பயிற்சி முகாமை நடத்திய மாசியோடோலி பேராசிரியர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அதாவது ஆசிரியர் பணி இல்லையே தவிர, ஆய்வைத் தொடர்வார் என்கிறது பென்டகன்.)

எகிப்து அஸ்ஹர் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் அஹ்மத் தய்யிப், அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்துள்ளார். அத்துடன் அமெரிக்கர்களுக்கு இஸ்லாத்தின் மனிதநேயப் பண்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம்களும் இஸ்லாத்தின் இப்பண்புகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான அமைப்பு ஒன்று, இந்தப் பயிற்சி முகாமை நடத்திய அதிகாரியை நீக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மையின் எதிரிகள்

உண்மையில் மனித குலத்தின் சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் அமெரிக்கர்கள்தான் எதிரிகள். வியட்நாட், இராக், ஆப்கானிஸ்தான் உதாரணங்கள் எதைக் காட்டுகின்றன? பொதுவாக அமெரிக்க வெள்ளையர்கள் இரத்தத்திலேயே “நாங்கள்தான் பெரியவர்கள்” என்ற இனவெறி கலந்திருக்கிறது.

உலகத்தை மீட்கத் தோன்றிய ஒரே மதம் கிறித்தவம் மட்டுமே! உலக மக்களை ஆளப்பிறந்தவர்கள் கிறித்தவர்கள் -அதிலும் வெள்ளைக்காரர்கள் மட்டுமே! கர்த்தரின் அவதாரங்களாக நாங்களே இருக்கிறோம்- என்ற மமதை உணர்வும் பொய்யான சிந்தனையும் அமெரிக்கர்களிடம் ஊறிப்போயுள்ளன.

எனவேதான், உயிரோட்டமுள்ள இஸ்லாத்தை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி ஒடுக்கப்பார்க்கிறார்கள்; முஸ்லிம்களின் முன்னேற்றத்தைத் தடுக்கப்பார்க்கிறார்கள்; உலகப் பொதுமறையாம் குர்ஆனை முடக்கப்பார்க்கிறார்கள்.

இது ஒருகாலும் நடக்காது. இந்த வேதத்தைக் காக்கும் பொறுப்பை, அமெரிக்கர்களைப் படைத்தவன் ஏற்றிருக்கின்றான். இஸ்லாம் என்ற ஒளியை நிறைவுசெய்யாமல் விடப்போவதில்லை என்று வெள்ளைக்காரர்களைப் படைத்தவன் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறான்.

மாசியோடோலிக்கு அப்துல் முத்தலிபின் வரிகள்:
இந்த கஅபாவுக்கு இருக்கின்றான்
ஓர் அதிபதி
அதை அவன் காப்பாற்றிக்கொள்வான்.
(‘அல்முஜ்தமா’ வார இதழ்)

Friday, May 25, 2012

நாட்டு நடப்பு (செய்தித் துணுக்குகள்)

அமெரிக்கப் படைகளின் காட்டுமிராண்டித்தனம்


ப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள், அப்பாவி கிராம மக்களை அநியாயமாகக் கொலை செய்துவிட்டு, நின்றுகொண்டு அவர்களின் பிரேதங்கள்மீது சிறுநீர் கழிக்கம் காட்சி. கடந்த மார்ச் மாதம் நடந்த அவலம் இது.

இஸ்ரேலுக்கு எரிவாயு சப்ளையை நிறுத்தியது எகிப்து



கிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இஸ்ரேலுக்குச் செய்துவந்த எரிவாயு சப்ளையை எகிப்து நிறுத்திவிட்டது. இதனால் 700 மில்லியன் டாலர் அளவுக்க இழப்பு என்றால், 10 மில்லியன் ஷைகல் (2.6 மில்லியன் டாலர்) இஸ்ரேலுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், எகிப்துடனான உறவைச் சீரமைக்க உதவுமாற அமெரிக்க அதிபர் ஒபாமாவை இஸ்ரேல் கேட்டுள்ளது. எகிப்து எல்லையைக் கடக்க எவன் முயன்றாலும் காலை ஒடிப்போம் என்று எகிப்து இராணுவப் படைத் தலைவர் ஹுசைன் தன்தாவி அண்மையில் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சர்கோஸி வீழ்ச்சிக்கு இக்வான்கள் காரணமா?



பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோஸிக்கு எதிராக வாக்களிக்குமாறு பிரான்ஸ் முஸ்லிம்களை டாக்டர் தாரிக் ரமளான் (ஹசனுல் பன்னாவின் பேர்ர்) கேட்டுக்கொண்டார். இதனால் பிரான்ஸில் எதிர்க்கட்சிக்கு இக்வானுடனான கூட்டணி ஒப்பந்தம் இருக்கிறது என்று சர்கோஸி குற்றம் சாட்டினார். 700 பள்ளிவாசல்களின் இமாம்கள் வெள்ளிமேடையில் எதிர்க்கட்சி வேட்பாளர் பிராங்கோயிஸ் ஹோல்ண்டேவுக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டனர்.

சர்ச்சில் குர்ஆன் விளக்கவுரை அளித்த பேராயர்


மெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில் ஒரு கிறித்தவ ஆலயத்திற்குள் ஸ்கோட் மார்ஜன் என்ற பேராயர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி விளக்கமும் அளித்தார் என்று சொன்னார் நம்புவீர்களா? உண்மை அதுதான். குர்ஆன் முஸ்லிமல்லாதோர்மீத வன்முறையை கட்டவிழ்த்துவிட தடை விதிக்கிறது என்றும் பெண்களை மதித்து சமூகக் கட்டமைப்பில் பெண்களுக்கான பங்கை எடுத்துரைக்கிறது என்றும் பேராயர் விவரித்தார்.
பேராயர் மார்ஜன் சிறு வயதில் தம் தந்தையுடன் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தவர். முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழ்ந்தபோது இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டவர். இது, பெரியவரானபின் அவரது மனத்தை நன்கு ஆக்கிரமித்துக்கொண்டது. நான் கற்றுக்கொண்ட உண்மையை என் சமூகத்திற்குச் சொல்வதுதான் என் கடமை என்றார் மார்ஜன்.

இக்வான்களின் கட்சித் தலைவர் எகிப்து அதிபராகிறார்

கிப்தில் 80 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னால் எகிப்து ஆட்சியை இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் கைப்பற்றுகின்றனர். அரசியல் ரீதியான சுதந்திர நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் முஹம்மது முர்சீ எகிப்து அதிபராகிறார். இவர் ஒரு பொறியாளர்; முனைவர்; பேராசிரியர்; 1992லிருந்து இக்வான்களின் அரசியல் பிரிவு உறுப்பினர்.
1951ல் அல்அத்வாகிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டதாரி ஆனார். அதே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபின், கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 2000 – 2005ல் எகிப்து மக்களவையில் இக்வான் உறுப்பினர் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.

அமெரிக்காவில் முஸ்லிம்களே அதிகம்

மெரிக்காவில் யூதர்களைவிட முஸ்லிம்களே அதிகம். அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த பருவத்தில் அதிகமாயிருப்பதாக அமெரிக்க மதங்களுக்கான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மத்திய மேற்கு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் அமெரிக்க யூதர்களின் எண்ணிக்கையைவிட அமெரிக்க முஸ்லிம்களின் எண்ணிக்கையே கூடுதலாகும். இப்பகுதியில் யூதக் கோயில்களில் பெரும்பாலானவை பக்தர்களே இல்லாமல் காலியாகிவிட்டன.
இந்த ஆய்வில் கலந்துகொண்ட டேல்ஜோன்ஸ் கூறுகிறார்: 2010ல் இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்கர்கள் 2.6 மில்லியனைவிட அதிகம்; இது 2000ல் ஒரு மில்லியனாக இருந்த்து. இதற்கிடையில், அமெரிக்கர்களில் 55 விழுக்காட்டினர் சமய நிகழ்வுகளில் முறையாக்க் கலந்துகொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

லண்டன் மேயர் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவித்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனின் மேயர் போரிஸ் ஜான்சன் தமது பதவி காலத்தில் லண்டன் முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளாததற்கு வருத்தம் தெரிவித்தார். 50 பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது இந்த வருத்தத்தை அவர் தெரிவித்தார். லண்டன் மாநகரில் மட்டும் 50 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.
பிரிட்டன் சூழ்நிலைகளுக்கேற்ப இஸ்லாமிய அடிப்படைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மேயர் ஜான்சன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்காகவும் மன்னிப்புக் கேட்டார். இஸ்லாம் ஒரு சாந்தி மார்க்கம்என்று குறிப்பிட்ட மேயர், தான் அந்தக் கட்டுரையை எழுதியது சரியல்ல என்றார். ஐரோப்பா மனித உரிமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிரிட்டன் முஸ்லிம்களில் யாரையும் அமெரிக்காவிடம் நீதி விசாரணைக்காக ஒப்படைப்பதைத் தன்னால் ஏற்க முடியாது என்றும் லண்டன் மேயர் தெரிவித்தார்.
தமிழாக்கம்: mஅ. முஹம்மது கான் பாகவி
அல்முஜ்தமா இதழிலிருந்து

Monday, May 07, 2012

திருப்புமுனையாகும் புனிதப் பயணம் - 3

அ. முஹம்மது கான் பாகவி

புனித ஹஜ் கிரியைகள் உண்மையில் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 8ல் இருந்துதான் தொடங்குகின்றன. அன்று ஹாஜிகள் மக்காவில் தங்கள் இருப்பிடங்களிலேயே ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் ‘மினா’ புறப்படவேண்டும்.

‘மினா’ என்பது, புனித ஹரம் எல்லைக்குட்பட்ட ஒரு திறந்தவெளியாகும். மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலுக்கு வடகிழக்கே 8கி.மீ. தொலைவில் இது உள்ளது. ஹாஜிகள் நடந்துசெல்வதற்கான சுரங்கப்பாதையில் சென்றால் 4கி.மீ. தூரம்தான் இருக்கும்.

இங்குதான் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானை நோக்கிக் கல் எறிந்தார்கள்; தம் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பதிலாக ஓர் ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். விடைபெறும் ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் கல் எறிந்தது, குர்பானி கொடுத்தது எல்லாம் ‘மினா’வில்தான். இங்கு ‘அல்கைஃப்’ பள்ளிவாசல் உண்டு; கல்லெறியும் 3 இடங்கள் உண்டு.

அன்சாரி தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாவது மற்றும் இரண்டாவது ‘அகபா’ ஒப்பந்தங்கள் மினாவில்தான் நடந்தன. இங்குதான், ‘அந்நஸ்ர்’ அத்தியாயம் (110) அருளப்பெற்றது.

இந்திய ஹஜ் கமிட்டியில் செல்கின்றவர்களைப் பெரும்பாலும் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 7 இரவிலேயே மினா அழைத்துச் சென்றுவிடுகின்றனர். 

மினாவில் கூடாரங்கள்

இப்போது மினாவில் தீப்பிடிக்காத கூடாரங்களை சஊதி அரசு அமைத்துள்ளது. குளிர்சாதன வசதியும் உள்ளது. ஒரு பெரிய கூடாரத்தில் நூற்றுக்கணக்கான ஹாஜிகள் தங்கவைக்கப்படுகின்றனர். அளவான சிறிய மெத்தை விரிப்பு, தலையணை, போர்வை வழங்கப்படுகின்றன.

பல்லாயிரக்கணக்கான பயணிகளைக் கொண்ட பல தொகுதிகள் [BLOCKS] உள்ளன. அவற்றில் குறைந்த எண்ணிக்கையிலேயே கழிப்பறைகள், உளூ செய்வதற்கான இடங்கள் இருப்பதால், மினா வாழ்க்கையை ஹாஜிகள் எளிதில் மறக்கமாட்டார்கள். அதைவிட, உணவு, தேநீர், பால் போன்ற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஹாஜிகள் படும் அவதி சொல்லி மாளாது.

பல நேரங்களில் பட்டினிதான். படுக்கை, கப்று வாழ்க்கையை நினைவூட்டும். எல்லா கூடாரங்களும் பிளாக்களும் ஒரே மாதிரி இருப்பதால், கூடாரத்தைவிட்டு வெளியேறியவர்கள் அடையாளம் கண்டுபிடித்து தங்கள் இடத்திற்குச் சரியாகத் திரும்பிவருவதற்குள் போதும் என்றாகிவிடும். இதற்கு அஞ்சிக்கொண்டே முக்கிய தேவைக்காகத் தவிர பெரும்பாலோர் கூடாரத்தை விட்டே வெளியேறுவதில்லை.

பிறை – 8

துல்ஹிஜ்ஜா 8ஆம் நாள் ஹாஜிகள் மினாவில் லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா அடுத்த நாள் ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளை நிறைவேற்றுவார்கள். மினாவில் கூடாரங்களில்தான் பெரும்பாலும் ஹாஜிகள் தொழுகிறார்கள். மஸ்ஜிதுல் கைஃப் சற்று தள்ளி இருப்பதாலும் போய்வருவதில் சிரமம் இருப்பதாலும் கூடாரங்களிலேயே தொழுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விடைபெறும் ஹஜ்ஜில் கலந்து கொண்ட நபித்தோழர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்றி, இஹ்ராமிலிருந்து வெளியேறியபின், பிறை எட்டில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்கள்தான். அவர்களில் பெரும்பாலோர் மதீனாவிலிருந்து வந்தவர்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டும் ‘கிரான்’ ஹஜ்ஜை நிறைவேற்றியதால் இஹ்ராமைக் களையவில்லை.

இருந்தாலும், நபி (ஸல்) அவர்களும் மதீனா நபித்தோழர்களும் மினாவில் தொழுதபோது, நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள். மக்காவாசிகளும் இரண்டு ரக்அத்களாகவே தொழுதனர். மக்கவாசிகளுக்குப் பயணத்தின் காரணத்தால் மினாவில் சுருக்கிக்தொழுதல் இல்லை என்றாலும், ஹஜ் கிரியைகளில் ஒன்றாக இவ்வாறு சுருக்கித் தொழுதார்கள். இதனால்தான், இஹ்ராம் கட்டாத மக்காவாசி ஒருவர் மினாவில் ஹாஜிகளுடன் சேர்ந்து தொழுதால், அவர் சுருக்கித் தொழமாட்டார்.

ஆனால், தமிழ்நாடு ஹாஜிகள் இந்த விஷயத்தில் பெரும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். ஒரே கூடாரத்தில் பல ஜமாஅத்கள் நடக்கின்றன. சிலர் சுருக்கியும் சிலர் முழு ரகஅத்களைத் தொழுவதும் அதுதான் சரி; இதுதான் சரி என்ற விவாதங்கள் அடிக்கடி நடப்பதும் அதை முன்னிட்டு ஹாஜிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

கூடாரத்தில் தொழுகை, திக்ர், தஸ்பீஹ், குர்ஆன் ஓதுதல், துஆ ஆகிய வழிபாடுகளில் ஹாஜிகள் ஈடுபட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மினாவில் மஸ்ஜிதுல் ஃகைஃபில் ஃபஜ்ர் தொழுதிருக்கிறார்கள். அப்போது ஜமாஅத்துடன் சேர்ந்து தொழாமல் இருந்த இருவரிடம் நபியவர்கள் விசாரித்தபோது, நாங்கள் கூடாரத்திலேயே தொழுதுவிட்டோம் என்றனர். அதற்கு நபியவர்கள், உங்கள் இருப்பிடத்தில் ஒரு தொழுகையை நிறைவேற்றியபின், ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு வந்தால், ஜமாஅத்துடன் சேர்ந்தும் தொழுதுகொள்ளுங்கள். அது உங்களுக்கு கூடுதல் (நஃபில்) ஆகும் என்று கூறினார்கள். (திர்மிதீ)

மஸ்ஜிதுல் கைஃப் பள்ளிவாசலுக்குத் தெற்கே உள்ள ஒரு மலையில் ‘அல்முர்சலாத்’ குகை உண்டு. அக்குகையில் நபித்தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோதுதான் குர்ஆனில் ‘அல்முர்சலாத்’ அத்தியாயம் (77) அருளப்பெற்றது. (புகாரீ)

பிறை - 9

துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது நாள் அரஃபா தினம். அன்று சூரியன் உதித்தபின் ஹாஜிகள் மினாவிலிருந்து அரஃபாத் புறப்பட வேண்டும். இதுவே விரும்பத் தக்கதாகும். ஆனால், இந்திய ஹஜ் கமிட்டியினர் அன்று இரவோடு இரவாக மினாவிலிருந்து பேருந்தில் அழைத்துக்கொண்டு அரஃபாத் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகின்றனர். ஆக, அரஃபா நாள் நள்ளிரவே நம் ஹாஜிகள் அரஃபாத் வந்துவிடுகின்றனர்.

‘அரஃபாத்’ என்பது, மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலுக்குத் தென்கிழக்கே 22 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு திறந்தவெளியாகும். மினாவிலிருந்து அரஃபாத் சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆனால், இந்தத் தூரத்தை கடக்க பலமணி நேரம் பிடிக்கிறது. அவ்வளவு நெரிசல்.

அரஃபாத் மைதானத்தில் இந்திய ஹாஜிகள் தங்க விசாலமான கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. கூடாரம் வெயிலைத் தாங்கும்; மழையைத் தாங்காது; வேகமாகக் காற்று வீசினால் கூடாரம் சாய்ந்துவிடும். அதிகாலைக்கு முன்பே அங்கு ஹாஜிகள் சென்றுவிடுவதால் குளிக்க விரும்பும்போது, போதுமான கழிப்பறைகளோ குளியறைகளோ அரஃபாத்தில் கிடைப்பதில்லை. காலையில் பல் விளக்கவே சிரமப்படுகின்றனர்.

அன்றைய காலை உணவும் மதிய உணவும் சஊதி மன்னர் சார்பாக வழங்கப்படுகிறது என்று சொன்னார்கள். காலை உணவு கிடைப்பது கஷ்டம். மதிய உணவு கூடாரத்திலேயே பரிமாறப்படுகிறது. அன்று தஹஜ்ஜுத், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளைக் கூடாரத்தில் நிறைவேற்றுகிறார்கள். திக்ர், தஸ்பீஹ், குர்ஆன் ஓதுதல், துஆ என்று அன்றைய பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். முக்கியமாகப் பாவமன்னிப்பு (தவ்பா) கோர வேண்டும். அந்த நாளும் அந்த இடமும் கிடைப்பதற்கரிய வாய்ப்புகளாகும்.

அரஃபா நாளில் லுஹ்ரையும் அஸ்ரையும் லுஹ்ர் நேரத்தில் இரு, இரு ரக்அத்களாக ஒரே பாங்கு இரண்டு இகாமத்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். அத்தொழுகைகளுக்கு முன்னால் இமாம் சிறிது நேரம் உரையாற்றுவதும் அடுத்துச் செய்ய வேண்டிய கிரியைகளை மக்களுக்கு விளக்குவதும் நபிவழி ஆகும்.

அரஃபாத்தில்தான் ‘நமிரா’ பள்ளிவாசல் உள்ளது. அந்தப் பள்ளிவாசலுக்கு மேற்கே ‘நமிரா’ எனும் சிறுமலை உண்டு. இந்தப் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு மக்களுக்கு உரையாற்றினார்கள். ஆனால், இந்தப் பள்ளிவாசலின் முற்பகுதி அரஃபாத் எல்லைக்கு வெளியிலும் பிற்பகுதி அந்த எல்லைக்கு உள்ளேயும் உள்ளது.

எனவே, இப்பள்ளிவாசலில் தங்கும் ஹாஜிகள் அரஃபாத் எல்லைக்கு உட்பட்ட இடம் பார்த்துத் தங்க வேண்டும். அரஃபாத்தில் தங்குவது ஹஜ்ஜின் முக்கிய கிரியை ஆகும். அதன் எல்லையில் தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. நமிரா பள்ளிவாசல் ஹாஜிகள் தங்கும் கூடாரத்திற்குச் சற்று தொலைவில் இருப்பதால் பெரும்பாலோர் அப்பள்ளிவாசலுக்குச் செல்வதே இல்லை.

அரஃபாத்திற்குக் கிழக்கே ஒரு மலை உண்டு. அதுதான் ‘அர்ரஹ்மத்’ மலை (ஜபலுர் ரஹ்மத்) எனப்படுகிறது. ‘நமிரா’ பள்ளிவாசலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள இம்மலைக்குக் கீழே ‘அஸ்ஸக்ராத்’ (பாறைகள்) பள்ளிவாசல் உண்டு. இப்பள்ளிவாசல் உள்ள இடத்தில் நபி (ஸல்) அவர்கள் அன்றைய மாலைப்பொழுதில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள்.

முஸ்தலிஃபா

அரஃபா நாளன்று சூரியன் மறைந்தபின் ஹாஜிகள் அரஃபாத்திலிருந்து முஸ்தலிஃபா புறப்பட வேண்டும். முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும் அரஃபாத்துக்கும் இடையே உள்ள மலைகள் நிறைந்த ஓரிடமாகும். இதற்கு ‘ஜம்உ’ எனும் பெயரும் உண்டு. 12.25 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த இடத்தின் இரு மருங்கிலும் மலைகள்தான். இரவு நேரத்தில் ஹாஜிகள் அங்கு தங்குவதால் அந்த இடத்தின் முழுப் பரிமாணம் தெரிவதில்லை.

முஸ்தலிஃபா எல்லையில் ஹாஜிகள் அன்றைய இரவைக் கழிக்க வேண்டும். ‘அல்முஹஸ்ஸிர்’ எனும் இடத்தைத் தாண்டி ‘மஃஸிமைன்’ எனும் இடம்வரை சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு முஸ்தலிஃபாவின் எல்லை உள்ளது. இந்த எல்லைக்கு உட்பட்ட இடத்தில்தான் ஹாஜிகள் தங்க வேண்டும். எனவே, தங்குவதற்குமுன் அந்த இடம் எல்லையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லையின் தொடக்கமும் முடிவும் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

முஸ்தலிஃபாவில் ஹாஜிகள் அன்றைய (துல்ஹிஜ்ஜா ஒன்பது) மஃக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளைச் சேர்த்து இஷா நேரத்தில் தொழ வேண்டும். ஒரே பாங்கு இரண்டு இகாமத்கள் சொல்லி, இஷாவை இரு ரக்அத்களாகச் சுருக்கித் தொழ வேண்டும்; துஆ செய்ய வேண்டும்.

முஸ்தலிஃபாவில் ஒரு பள்ளிவாசல் உண்டு. ‘மஷ்அருல் ஹராம்’ பள்ளிவாசல் என்பது அதன் பெயராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பள்ளிவாசலின் கிப்லா உள்ள இடத்தில் தங்கியுள்ளார்கள். இப்போது இப்பள்ளி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 12 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் தொழுவதற்கு வசதியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மினாவிலுள்ள மஸ்ஜிதுல் கைஃபிலிருந்து 5கி.மீ. தொலைவிலும் அரஃபாத்திலுள்ள நமிரா பள்ளிவாசலில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.

ஆனால், லட்சக்கணக்கான ஹாஜிகள் ஒரே நேரத்தில் முஸ்தலிஃபாவில் ஒன்றுகூடுவதால், கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். அரஃபாத்திலிருந்து எட்டு கி.மீ. நடந்தே முஸ்தலிஃபா வர வேண்டியுள்ளது. வாகன ஏற்பாடு சரியில்லை என்பதோடு, வாகனத்தில் பயணித்தால் பலமணி நேரம் பிடிக்கும் என்பதும் உண்மையாகும்.

இரவோடு இரவாக நடந்தே முஸ்தலிஃபாவை அடைந்துவிட்டாலும் ஜமாஅத்தாக நின்று தொழுகையை நிறைவேற்றவோ நிம்மதியாக அமர்ந்து துஆவில் ஈடுபடவோகூட இயலவில்லை. சொல்லப்போனால், கால்வைக்கவே இடம் கிடைப்பது கஷ்டம். இந்நிலையில், இரவெல்லாம் விழித்திருந்து, கிடைத்த இடத்தில் முடிந்ததைத் தொழுதுவிட்டு, நின்றுகொண்டே இரவைக் கழிப்பவர்களும் உண்டு. 

அடுத்த நாள் துல்ஹிஜ்ஜா 10ஆவது நாள் ஃபஜ்ர் தொழுகையை முஸ்தலிஃபாவில் நிறைவேற்றிவிட்டு, மீண்டும் மினா செல்ல வேண்டும். இதுவும் பெரும்பாலும் நடைப்பயணம்தான். வாகனத்தில் பயணித்தால் இரண்டரை கி.மீ. தூரத்தில் உள்ள மினாவை அடைய பலமணி நேரமாகும். காலை 8.00 மணிக்கு பஸ்ஸில் புறப்பட்ட நாங்கள் 12.00 மணிக்குத்தான் மினா வந்து சேர்ந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிறை - 10 

சூரியன் உதயமாவதற்கு முன்பே முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்படுவதும் வழியில் சிறுகற்களைப் பொறுக்கிக்கொள்வதும் நல்லது. பிறை பத்தில் – அதாவது ஹஜ் பெருநாளன்று – மினாவில் ஹாஜிகள் ஷைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். ‘ஜம்ரத்துல் அகபா’ எனப்படும் பெரிய ஜம்ராவில் ஏழு கற்களை மட்டும் அன்று எறிய வேண்டும்.

இப்போது நெரிசலில்லாமல் ஷைத்தானுக்கு ஹாஜிகள் கல் எறிவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கீழே மூன்று தூண்கள், இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்தூண்களைச் சுற்றி கல் விழுவதற்கு வசதியாகத் தொட்டிகள் கட்டப்படுள்ளன. பெரிய ஜம்ராவிலிருந்து 247 மீட்டர் இடைவெளியில் நடு ஜம்ராவும் அங்கிருந்து 200 மீட்டர் இடைவெளியில் சிறிய ஜம்ராவும் உள்ளன.

கீழே மட்டுமன்றி நான்கு மாடிகளிலிருந்தும் கல் எறியலாம். அந்த மாடிகளுக்குச் செல்ல மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ‘ஜம்ரா மேம்பாலம்’ என இது அழைக்கப்படுகிறது. அங்கிருந்து லிஃப்ட் வசதியும் உள்ளது. நெரிசலின்றி மேம்பாலம் வழியாக ஹாஜிகள் ஏறிச்சென்று அந்தந்த மாடிகளில் உள்ள தூண்கள்மீது கல் எறிந்தால், அக்கல் அப்படியே கீழ்த்தளத்தில் இருக்கும் தொட்டியில் வந்து சேர்ந்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் பிறை பத்தாம் நாளன்று பஜ்ருக்குப்பின் சூரியன் உதிப்பதற்குமுன் முஸ்தலிஃபாவிலிருந்து மினா நோக்கிப் புறப்பட்டார்கள். மினாவில் முற்பகல் (ளுஹா) பெரிய ஜம்ராவில் ஏழு கற்கள் எறிந்தார்கள். ஆக, அன்று சூரியன் உதித்தபின் சூரியன் மறைவதற்குமுன் கல் எறிந்துவிடுவது நல்லது. இரவிலும் எறியலாம்.

கல் எறிந்தபின் குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானியை பொறுத்தமட்டில் ஹாஜிகளுக்குச் சிரமமில்லாத வழி யாதெனில், சஊதி அரசிடம் பணம் கட்டிவிடுவதுதான். மக்காவில் இருக்கும்போதே ஹரமுக்கு அருகில் உள்ள இஸ்லாமிக் டெவலெப்மென்ட் வங்கியில் சுமார் 400 ரியால் கட்டிவிட்டால், பணம் கட்டியதற்கு அடையாளமாகக் கூப்பன் தருவார்கள். அரசே ஆடுகளை வாங்கி, அறுக்க வேண்டிய நாளில் அறுப்பதற்கு ஏற்பாடு செய்துவிடும். அது மட்டுமன்றி, குர்பானி இறைச்சி வீணாகிவிடாமல் பதப்படுத்தப்பட்டு, ஏழை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இத்திட்டத்தால் இரண்டு நன்மைகள். 1. குர்பானி எளிதாக நிறைவேறிவிடும். 2. குர்பானி இறைச்சி வீணாகாமல் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிடும். ஆனால், நம் ஊர் ஹாஜிகளில் சிலர், தாங்களே நேரடியாக குர்பானி கொடுக்க வேண்டும்; அதன் இறைச்சியைச் சமைத்து உண்ண வேண்டும் என்ற ஆவலில் தேவையில்லாத சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அறிமுகமில்லாதவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போவோரும் உள்ளனர்; அல்லது காலதாமதம் ஏற்பட்டு, மற்றக் கிரியைகள் செய்வதில் பின்தங்கிவிடுகிறார்கள். இது தேவைதானா?

தவாஃபுல் இஃபாளா

குர்பானி கொடுத்தபின், அல்லது ஏற்கனவே குர்பானிக்குப் பணம் கட்டியிருந்தால் கல் எறிந்தபின் தலைமுடியைக் களைய வேண்டும்; அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் ஹாஜிகள் ஹஜ்ஜின் இஹ்ராமிலிருந்து வெளியேறிவிடுவர். இஹ்ராம் ஆடைகளைக் களைந்து சாதாரண ஆடைகளை அணிந்துகொள்ளலாம். எனினும், தவாஃபுக்குப் பிறகே தாம்பத்திய உறவுக்கு அனுமதி உண்டு.

அடுத்து ‘தவாஃபுல் இஃபாளா’ செய்ய வேண்டும். இதற்கு ‘தவாஃபுஸ் ஸியாரா’ என்றும் கூறுவர். இது ஹஜ்ஜின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகும். இந்த தவாஃபை பத்தாவது நாளன்றே செய்வது நல்லது. முடியாவிட்டால் அடுத்தடுத்த நாட்களிலும் நிறைவேற்றலாம். முதலில் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, பிறகு ஸஃபா – மர்வா இடையே சயியும் செய்ய வேண்டும்.

பெரும்பாலான ஹாஜிகளுக்கு பிறை பத்தில் இந்த தவாஃபை செய்ய முடிவதில்லை. அன்றைக்கு முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குத் திரும்பி, கல் எறிந்து குர்பானி கொடுத்து, முடி களைவதற்குள் இரவாகிவிடுகிறது. அதற்குமேல் மக்கா சென்று, தவாஃபையும் சயியையும் முடித்துக்கொண்டு, இரவோடு இரவாக மினா திரும்புவதில் பெரும் சிக்கல் உண்டு. இதனால் அடுத்தடுத்த நாள்களிலேயே இந்த தவாஃபை நிறைவேற்றுகிறார்கள்.

பிறை – 11,12,13

துல்ஹிஜ்ஜா பிறை 11,12 ஆகிய இரு நாட்களின் இரவுகளிலும் ஹாஜிகள் மினாவில் தங்க வேண்டும். பிறை 11ல் சூரியன் உச்சி சாய்ந்தபின் ஷைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். சிறிய ஜம்ரா, நடு ஜம்ரா, பெரிய ஜம்ரா ஆகிய ஒவ்வொன்றிலும் தலா 7 கற்கள் வீதம் 21 கற்கள் எறிய வேண்டும். அவ்வாறே பிறை 12 அன்றும் 21 கற்கள் எறிய வேண்டும். கற்கள் தூண்மீது பட்டு தொட்டிக்குள் விழுமாறு எறிய வேண்டும். இத்துடன் மொத்தம் 49 கற்கள் (7+21+21) ஆகின்றன.

பிறை 13 இரவன்றும் மினாவில் தங்கியிருந்து காலையில் சூரியன் உச்சி சாய்ந்தபின் 21 கற்கள் எறிந்துவிட்டு மக்கா திரும்புவதுதான் நல்லது. இதன்படி 70 கற்கள் (7+21+21+21) ஆகும். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்துள்ளார்கள். கூடுதல் அமல் செய்வதற்கும் இதுவே ஏற்றதாகும். இருப்பினும், கூடாரத்தில் அனைவரும், அல்லது பெரும்பாலோர் பிறை 12 அன்று கல் எறிந்த கையோடு மக்கா திரும்பிவிடுகின்றனர். இதற்கும் அனுமதி உண்டு.

பிறை 12 அன்று சூரியன் மறையும்வரை மினாவிலேயே இருந்துவிட்டு, பயணம் புறப்படுவதற்கான ஏற்பாட்டிலும் ஒருவர் ஈடுபடாமல் இருந்துவிட்டால், அன்றைய இரவு மினாவிலேயே தங்கிவிட வேண்டும். காலையில் கல் எறிந்துவிட்டே புறப்பட வேண்டும். எந்தத் திசையில் தூணை நோக்கிக் கல் எறிந்தாலும் செல்லும். இருப்பினும், பெரிய ஜம்ராவில் எறியும்போது ஹாஜிகளுக்கு வலப்பக்கம் மினாவும் இடப்பக்கம் மக்காவும் இருக்குமாறு நின்று எறிவது சிறந்ததாகும்.

அடுத்து ஹாஜிகள் மக்காவைவிட்டுப் புறப்படுவதற்குமுன் ‘தவாஃபுல் வதா’ (விடைபெறும் சுற்று) சுற்ற வேண்டும். அத்துடன் ஹஜ் நிறைவடையும்.
(...தொடரும்)

Thursday, April 12, 2012

கலங்கவைக்கும் கருக்கலைப்பு


- கான் பாகவி

வீன இயந்திரங்களின் வருகையால் மனித நாகரிகமும் உயர்பண்பாடுகளும் நாளுக்குநாள் செத்துக்கொண்டிருக்கின்றன. அறிவியல் முன்னேற்றம் மனிதகுலத்தை மீளமுடியாத துயரங்களில் ஆழ்ப்படுத்திவருகிறது. ஒரு பக்கம், மனித நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துவதில் வெற்றிகண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள், இன்னொரு பக்கம் மனிதனை இதயமில்லாத இயந்திரமாக மாற்றிவருகின்றன என்பதுதான் உண்மை.

கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா என்பதை, குழந்தை பிறப்பதற்கு முன்பே கண்டுபிடிக்கின்ற நுண்ணிய கருவிகள் வந்துவிட்டன. இக்கருவிகளால் சிசுவின் பாலினத்தை அறிந்துகொண்டு, பெண்சிசுவாக இருப்பின் அதைக் கருவிலேயே கலைத்துவிடுகின்ற கொடுமை உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. தவறான உறவால் உண்டாகும் கருவை கலைப்பது மற்றொரு புறம் அரங்கேறிவருகிறது.

இதனால் உலக அளவில், குறிப்பாக ஆசிய நாடுகளில் ஆண்-பெண் விகிதாசாரம் அபாயகரமான அளவுக்கு வித்தியாசப்படுகிறது. இந்நிலை நீடித்தால், பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, திருமண வாழ்வே கேள்விக்குறியாகிவிடலாம். ஆண்களுக்குப் பெண்கள் கிடைக்காத காலகட்டத்தில், விபசாரம், ஒருபால் உறவு, சுயஇன்பம் போன்ற பாலியல் குற்றங்கள் தலைவிரித்தாடத் தொடங்கிவிடும். இது மனித இனத்திற்கே பெரும் கேடாக முடியும்.

அச்சுறுத்தும் ஆய்வு
பிரிட்டனிலிருந்து வெளிவரும் Lancet மருத்துவ இதழும் அமெரிக்காவின் Guttmacher எனும் மகளிர் சுகாதாரத்துறை அகாடமியும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் நம்மை கதிகலங்கச் செய்கின்றன.
  • உலகம் முழுவதிலும் ஆண்டுக்கு 4 கோடியே 20 லட்சம் கருக் கலைப்புகள் நடக்கின்றனவாம்! அதாவது நாளொன்றுக்கு 1.15 லட்சம் கருக்கள் கலைக்கப்படுகின்றன.
  • உலக சுகாதார மையம், பாதுகாப்பாற்ற கருக்கலைப்புகளைத் தடுக்க முயன்றும், ஆண்டுக்கு 21.6 மில்லியன் கருக்களையும்விட அதிகமானவைக் கலைக்கப்படுகின்றன-என்று அந்த மையம் அறிவித்தது. திரும்பத் திரும்ப கருக்கலைப்பு செய்துகொள்ளும் 74 ஆயிரம் பெண்கள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.
  • ஆசிய நாடுகளில் மட்டும் புதிய தொழில்நுட்பம் நுழைந்தபின் ஆண்டு ஒன்றுக்கு 160 மில்லியன் கருக்கள் கலைக்கப்படுகின்றன வாம்!

இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? மனிதர்களின் போக்கு தலைகீழாக மாறிவிட்டது; இயற்கையான பண்புகள், சமய விதிகள் ஆகியவற்றிலிருந்து மனித சமுதாயம் வெகுதூரம் விலகிச்சென்றுவிட்டது. இதனால், மனித உயிர்களின் புனிதம் மதிக்கப்படாமல் மிதிக்கப்படுகிறது- என்பதைத்தானே இந்த ஆய்வுகள் உணர்த்துகின்றன!

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் நடக்கும் கருக்கலைப்புகளில் மூன்றில் இரு பங்கு மணமாகாத கர்ப்பிணிகளுக்கே நடக்கிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் நடப்பவை, பகுத்தறிவையும் மார்க்கத்தையும் புறந்தள்ளிவிட்டன; இயற்கை விதிகளுக்கும் பலஇன படைப்பு முறைக்கும் வேட்டுவைக்கின்றன.

பரிசோதனை செய்துபார்க்கையில் பெண் சிசுதான் என்பது தெரிந்தவுடனேயே கருவைக் கலைத்து சிசுவைக் கொன்றுவிடுகின்றனர். இது முந்தைய அறியாமைக்கால கலாசாரத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அறியாமைக் கால மனிதர்கள் பெண்குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்தார்கள்; இன்றைய புதுயுக மனிதர்கள் வயிற்றிலேயே சமாதி எழுப்பிவிடுகின்றனர்.

அவனாவது, குழந்தையின் பால்வடியும் முகத்தைப் பார்த்துவிட்டுப் புதைத்தான்; இவனோ முகம் காணாத சிசுவை இரத்தமாக்கிக் கழிப்பிடத்தில் கரைத்துக்கொண்டிருக்கிறான். ஈவிரக்கம் இல்லாவிட்டாலும் புதைப்பதில் ஒரு செய்முறை உண்டு; ஆனால், கலைப்பதில் அந்த நாகரிகமும் இல்லை.

கலைப்புக் கலாசாரம்

ஒலியலைக்கு (Sound Wave) 12 வார கருவை இனம் கண்டு, ஆணா, பெண்ணா என்று காட்டும் திறன் உண்டு. தாய் வயிற்றில் கருவைச் சுற்றியுள்ள பனிக்குடத்தின் (Amnion) திரவத்தை வெளியே எடுத்துப் பரிசோதித்தால் 15 முதல் 20 வாரம்வரையிலான கருவின் பாலினம் தெரிந்துவிடும்.

ஆனால், இதுவரை ஆசியாவை எட்டாத புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தாயின் இரத்தத்தையும் கருவின் உயிரணுக்களையும் பரிசோதிப்பதன்மூலம் ஏழுவாரக் கருவின் பாலினத்தைக் கண்டறிய முடியுமாம்.

தாயின் சிறுநீரைப் பரிசோதித்துப்பார்த்து 10 வாரக் கருவின் பாலினத்தைச் சொல்ல முடியுமாம்!

இந்த விஞ்ஞானக் கருவிகளின் பயன்பாடு, இன்று மனிதகுலத்திற்குப் பேரழிவைத் தந்துகொண்டிருக்கிறது; ஆசியாவில் மட்டும் 16 கோடி கருக்கலைப்பு குற்றங்களைச் செய்யவைத்திருக்கிறது.
இந்தியக் குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவில்லை. இதனால், பெண் குழந்தை என்றால் பெற்ற தாய்கூட முகம் சுளிக்கிறாள். இதன் எதிரொலியாக, கடைசி 50 ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்தே வந்திருக்கிறது. இந்த வெறுப்புக்குக் காரணங்கள் பல. சமூக மற்றும் பொருளாதார பின்னணிகளே முக்கியக் காரணமாகும்

சிசுவின் பாலினப் பரிசோதனைக்குச் சட்டப்படி தடை இருந்தாலும், பணத்துக்காக இந்தப் பாவத்தைச் செய்யும் மருத்துவர்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. இச்சோதனைக்குக் கிடைக்கும் வருவாய், பிறகு பெண்சிசு என்று தெரிந்தால் கருவைக் கலைப்பதில் கிடைக்கும் வருவாய் ஆகியன அவர்களின் மனதைக் கல்லாக்கிவிடுகின்றன.

இவ்வாறு இந்தியாவையும் சீனாவையும் ஆட்டுவித்த கருக்கலைப்பு, இப்போது ஆரிமீனியா, ஜார்ஜியா, அல்பானியா, வியட்நாம் போன்ற இதர நாடுகளுக்கும் பரவிவருகிறது.

சீனாவைப் பொறுத்தவரை, கடந்த மூன்று அரசியல் பருவங்களாகவே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. முதல் குழந்தை பெண்ணாக இருப்பின், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள கிராமப்புற தம்பதிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

ஒரு குழந்தைஅரசியல் காரணத்தாலும் ஆண் குழந்தைகளையே விரும்பும் பெற்றோரின் காரணத்தாலும் சீனாவில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். பெண்சிசு என்றவுடன் அதிகமானோர் கருக்கலைப்புக்கே செல்கின்றனர்.

இன்று சீனாவில் நிலைமை என்னவென்றால், 121 ஆண் குழந்தைகள் பிறக்கும் இடத்தில் 100 பெண் குழந்தைகளே பிறக்கின்றன. மீதியுள்ள 21 ஆண் குழந்தைகள் வளர்ந்து ஆளானபின் திருமணம் செய்ய பெண்களுக்கு எங்கே போவார்கள்?

கிழக்கை அழிக்கும் மேற்கு

ஆசிய நாடுகளில் பரவிப்போயுள்ள கருக்கலைப்பு பாவங்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஊக்கமளித்துவருகின்றன. எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து நடந்துவரும் இந்தக் கொலைக்கு ஆசியாவில் மட்டும் 160 மில்லியன் சிசுக்கள் பலியாகியுள்ளன என்கிறார், இந்தியாவின் பிரபல பெண் எழுத்தாளர் மாரா.

ஒரு பக்கம் குடும்பக் கட்டுப்பாடு; இன்னொரு பக்கம் பிறந்தபின் பெண்சிசுக் கொலை; மூன்றாவதாகக் கருக்கலைப்பு. மேற்குலகின் பணம் இதற்காகத் தண்ணீராய் செலவழிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் குறைப்பதற்கு 1969ஆம் ஆண்டு அமெரிக்கா முன்வைத்த 12 திட்டங்களில் ஒன்றாக சிசுவின் இனத்தைக் கண்டுபிடித்து அழிக்கும் முறையையும் சேர்த்தது.

மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருக்கலைப்பே சிறந்த தீர்வாகும் என அமெரிக்கா அறிவித்தது. உலக வங்கி இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்தது. ராக்ஃபில்லர், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் பணத்தை வாரிஇறைத்தன. இந்தியாவில் AIIMS எனும் மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் டாக்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தாயின் வயிற்றில் வளரும் கருவின் பாலினத்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வுமுறையை இந்திய மருத்துவர்கள் கற்றார்கள். இன்று அதன் விளைவை இந்தியா அனுபவிக்கிறது என்கிறார் மாரா.

அதே மருத்துவக் கழக டாக்டர்கள் மட்டும் ஒரு லட்சம் பெண்கருக்களைக் கலைத்துச் சாதனை படைத்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று இந்தியாவில் 112 ஆண் குழந்தைகளுக்கு நிகரில் 100 பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

மார்க்கம் என்ன சொல்கிறது?

திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அரசாட்சி உரியது. அவன், தான் நாடுவதைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண் குழந்தைகளை அவன் வழங்குகின்றான்; தான் நாடுவோருக்கு ஆண் குழந்தைகளை வழங்குகின்றான்; அல்லது ஆண்களையும் பெண்களையும் கலந்து வழங்குகின்றான். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன்; ஆற்றல்மிக்கவன். (42:49,50)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு மூன்று பெண்குந்தைகளோ மூன்று சகோதரிகளோ, அல்லது இரண்டு பெண்குழந்தைகளோ இரண்டு சகோதரிகளோ இருந்து, அவர்கள் விஷயத்தில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்து, அவர்களுக்கு நன்மை புரிந்தால், அவர் சொர்க்கம் செல்லாமலிருப்பதில்லை. (முஸ்னது அஹ்மத்)
இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் அளித்தள்ள தீர்ப்பாவது:
கரு உண்டான முதல் 40 நாட்களுக்குள் தகுந்த காரணமிருந்தால் கருவை கலைப்பது தவறாகாது. இதையும் சிலர் ஹராம் என்கின்றனர். 40 நாட்களுக்குப்பின் கலைப்பது ஹராம் ஆகும்.

120 நாட்கள் கடந்துவிட்டாலோ கருக்கலைப்பு கடுமையான ஹராமாகிவிடும். தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நெருக்கடியில் மட்டுமே விதிவிலக்கு உண்டு.

ராப்பிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் ஃபத்வா பிரிவு அளித்துள்ள தீர்ப்பு:

சிசுவின் பாலினத்தை அறிய எந்தப் பரிசோதனையும் செய்வது கூடாது. சிசுவுக்கு ஏற்பட்ட சில நோய்களுக்கான சிகிச்சைக்காக மட்டுமே இப்பரிசோதனை அனுமதிக்கப்படும். ஏனெனில், ஆண் சிசுவாக இருந்தால் அதற்கு ஒரு விதமான சிகிச்சையும் பெண்சிசுவாக இருந்தால் அதற்கு ஒரு விதமான சிகிச்சையும் அளிக்கவேண்டியதிருக்கும். இது மரபுவழி நோய்களுக்குப் பொருந்தும்.

ஆகவே, முஸ்லிம்கள் இந்தப் பாவத்தைச் செய்யக் கூடாது.

Tuesday, April 03, 2012

அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்


மௌலவி, . முஹம்மது கான் பாகவி



வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்ற நாட்களும் சரி; ஆசிரியர் பணியாற்றிய நாட்களும் சரி; என் வாழ்நாளில் மறக்க முடியாத அத்தியாயமாகும். அந்தப் பசுமையான நினைவுகள் சுகமான அனுபவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

நான் மட்டும் என்றில்லை. பாக்கியாத்தில் கால்வைத்து, சில மாதங்கள் கல்வி பயின்ற யாரையும், பாக்கியாத்தின் மீது கொண்ட அன்பும் மாறாத பாசமும் கட்டிப்போட்டுவிடும். அந்த அளவுக்கு அதன் ஈர்ப்பு வசீகரமானது; வாடாதது. இது, அக்கல்விக்கூடத்தை நிறுவிய, அதன் உயர்வுக்காக உழைத்த பெரிய மனிதர்களின் தூய்மையான எண்ணத்தின் விளைவு என்றே சொல்லத் தோன்றுகிறது. 

மொத்தத்தில் பாக்கியாத் ஒரு பாக்கியம் என்றுதான் ஒவ்வொரு மாணவனும் கருதுவான். அங்கு ஆசிரியராகப் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஒவ்வோர் ஆசிரியரும் தம் பிறவிப் பலன் என்றே கருதுவார். அந்த வான்வெளியின் பெருமை அப்படி. 

கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக் கல்லூரியில் ஆறாம் ஆண்டு கல்வி பயின்றுவந்த வேளையில், இடையிலேயே வேலூர் பாக்கியாத்தில் மாணவனாகச் சேர வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த ஆண்டின் துவக்கத்தில் பாக்கியாத்தில் சேர்வதற்காகச் சென்றுவிட்டு, அதன் பிரமாண்டத்தைப் பார்த்து அஞ்சி, மீண்டும் மன்பஉல் உலாவிற்கே திரும்பிய என்னை, அதே ஆண்டின் இறுதியில் பாக்கியத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தான் இறைவன். 

பாக்கியாத்தில் கல்வி கற்று முடித்த என் ஒரே கனவு, அங்கு ஆசிரியராவது மட்டுமே. உடனே அந்த அரிய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த்து. அது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாகவும் பிறந்த பலனை அடைந்துவிட்ட மனநிறைவாகவும் அமைந்தது. 

பலவகை மாணவர்கள் 

பாக்கியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பலவகை மாணவர்களைச் சந்தித்தேன்; பல்வேறு சிந்தனைகளும் குணங்களும் கொண்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்தினேன். 

மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதோடு என் பணி முடிந்தது என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. மாணவர்களின் உடல்நிலை, அவர்களின் குடும்ப நிலவரம், எதிர்காலத் திட்டம் ஆகியவை பற்றியெல்லாம் கூட நான் சிந்திப்பதுண்டு; மாணவர்களின் திறமைக்கும் சுவைக்கும் ஏற்ற யோசனைகளை அவர்களிடம் கூறுவதுண்டு. 

பாடப் புத்தகங்களில் கவனம் செலுத்துகின்ற அதே நேரத்தில், பேச்சு, எழுத்து, இலக்கியம், பொதுஅறிவு முதலான துறைகளிலும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற தனிப்பட்ட அக்கறையும் ஆர்வமும் எனக்கு இருக்கும். 

இதனால், மாணவர்களின் சொற்பயிற்சி மன்றத்தில் அடிக்கடி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உற்காசமூட்டுவது என் பழக்கமாக இருந்தது. குறிப்பாக, மாணவர்கள் நடத்தும் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு மாணவர்களை ஊக்குவிப்பது என் மனதுக்கு இதம் அளிக்கும். இன்றும் அத்தகைய மாணவர்கள் பல்துறைகளில் மிளிர்வது கண்டு பூரிப்படைபவன் நான். 

அவ்வாறே, மாணவர்களின் கையேட்டு இதழான ‘அல்இர்ஷாத்’ பயிற்சி இதழில் கட்டுரைகள், கவிதைகள் எழுதிப் பழகுவதற்கு மாணவர்களை உற்சாகப்படுத்துவேன். மாணவர்களின் கன்னிப் படைப்புகளைப் படித்து, அவர்களைப் பாராட்டுவதும் யோசனைகள் கூறுவதும் எனக்குப் பிடிக்கும். 

மதரசா பாடத்திட்டம் பற்றியும் மாணவர்களுக்கான வளர்ச்சித் திட்டம் பற்றியும் எனக்கென தனிக் கருத்து உண்டு. அவ்வாறே முஸ்லிம்களின் நடைமுறையில் புகுந்துவிட்ட சடங்குகள் குறித்தும் தனிப் பார்வை உண்டு. என் கருத்துகளை வகுப்பில் மாணவர்களுக்கு எடுத்துரைப்பேனே தவிர, திணிக்கமாட்டேன். மாறுபட்ட சிந்தனை கொண்ட மாணவர்கள்மீது பகைமை பாராட்டமாட்டேன். 

ஓர் ஆசிரியர், தந்தை என்றால், மாணவர்கள் அவருடைய பிள்ளைகள் ஆவர். பிள்ளைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மை புலப்படும்போது உணர்வார்கள்; திருந்துவார்கள் என்ற நம்பிக்கைதான். எந்தவொரு தத்துவமும் உணர்ந்து ஒப்புக்கொள்ளப்படாத வரை, திணிப்பதில் பலனில்லை. எந்தவொரு கனியும் தானாக்க் கனியாத வரை அடித்துக் கனியவைப்பதில் சுவை இல்லை. 

நிறுவனத்தின் மீது திணிப்பு 

முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையில் மார்க்கத்தின் பெயரால் புகுந்துவிட்ட சடங்குகள், அல்லது ஆசாரத்தின் பெயரால் புகுந்துவிட்ட அநாசாரம், அல்லது நபிவழி (சுன்னத்) என்ற பெயரால் நுழைந்துவிட்ட புதுவழி (பித்அத்) குறித்து பாக்கியாத்தின் பழைய மாணவர்களான பாகவிகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து இருக்கலாம். அது அவரவர் சொந்தப் பிரச்சினை. 

ஆனால், இந்த விஷயங்களில் இதுதான் பாக்கியாத்தின் நிலை என்று நிறுவ, அல்லது பாக்கியாத்தின் மீதே திணிக்க என்ன உரிமை இருக்கிறது? 

அப்படியே ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது, அதற்கு எதை அளவுகோலாகக் கொள்வது? பாக்கியாத்தில் இருந்துவரும் நடைமுறைகள் அளவுகோலாகுமா? அல்லது வகுப்பறையில் ஒவ்வோர் ஆசிரியரும் ஒரு விதமாகச் சொல்லிக்கொடுப்பார்களே அது அளவுகோலாகுமா? அல்லது இடைக்காலத்தில் வந்த முஃப்திகள் அளிக்கும் ஃபத்வா அளவுகோலாகுமா? எது அளவுகோல்? 

உண்மையில் இதற்கு அளவுகோலாக இருக்க, அளவுகோலாக எல்லாராலும் ஏற்கப்பட் முழுத் தகுதியும் பொருத்தமும், பாக்கியாத்தை ஒரு இலட்சியக் கனவோடு அரும்பாடுபட்டு உருவாக்கிய அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தீர்ப்புகளுக்கே உண்டு. 

சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் பாக்கியாத்தின் நிலைப்பாடு, அல்லது போக்கு (மஸ்லக்) என்னவாக இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு, பாக்கியாத்தை நிறுவிய ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களுக்கே முழு அதிகாரம் உண்டு. இடையில் வந்த எனக்கோ உங்களுக்கோ அந்த அதிகாரமும் இல்லை; தார்மிக உரிமையும் இல்லை. 

சரியான அளவுகோல் 

பாக்கியாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பாக்கியாத்தைத் தொடங்கியதற்கான காரணம், அப்போதைய காலச்சூழல், அன்னார் தம் வாழ்நாளில் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் ஆகிய அனைத்துக்கும் பதிவு உண்டு. 

இந்த விஷயத்தில், மற்றக் கல்வி நிறுவனங்களையோ அமைப்புகளையோ முன்மாதிரியாகக் கொள்ளவோ சம்பந்தப்படுத்தவோ தேவையில்லை. பாக்கியாத் ‘மஸ்லக்’ என்ன என்பதை அறிய தனி அளவுகோலாக, சரியான முன்மாதிரியாக அஃலா ஹள்ரத் அவர்கள் அளித்த ஃபத்வாக்களே போதும். இந்த ஃபத்வாக்கள் உருது மொழியில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. 

1987ஆம் ஆண்டு வெளிவந்த அந்த்த் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஃபத்வாக்களில் பெரும்பாலானவை அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் அளித்தவை. சில ஃபத்வாக்கள் மட்டும் அன்னாரின் புதல்வரும் முதல்வருமான மௌலானா ஜியாவுத்தீன் முஹம்மத் ஹள்ரத் அவர்கள் காலத்தில் அளிக்கப்பட்டவை. பெரும்பாலான ஃபத்வாக்களில், பாக்கியாத்தின் அப்போதைய ஆசிரியர்களும் ஒப்புதல் கையொப்பம் அளித்துள்ளார்கள். 

இந்த ஃபத்வாக்கள் அசலுக்கு மாற்றமாக உள்ளன என்று சிலர் புரளி கிளப்புகிறார்கள். அப்படி ஒரு சந்தேகம் இருந்தால், பாக்கியாத் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு, அசலையும் தொகுப்பையும் ஒப்பிட்டுச் சரிபார்த்து, மாற்றம் இருப்பின் திருத்தி, அசல்படியே வெளியிடலாமே! இதைவிடுத்து, சிற்சில தவறுகள் இருப்பதாகப் படம் காட்டி, ஒட்டுமொத்த ஃபத்வாக்களையே இருட்டடிப்பு செய்ய நினைப்பது எந்த வகையில் நியாயம்? 

நமக்குத் தெரிந்த வரை, அசலுக்கும் தொகுப்புக்கும் உள்ள ஒரே வித்தியாசம், மொழிநடை மட்டுமே. இரண்டாவது, பாடத் தலைப்பு வாரியாக ஃபத்வாக்கள் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. உட்பொதிவில் வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. 

அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தீர்ப்புகளையே அளவுகோலாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதால், பாக்கியாத்தின் மற்ற முஃப்திகளை அலட்சியப்படுத்துகிறோம் என்பது பொருளாகாது. 

சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையில் அஃலா ஹள்ரத் அவர்களின் தீர்ப்பும் பிற்கால முஃப்திகளின் தீர்ப்பும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால், பிரச்சினையே இல்லை. இரண்டும் வேறுபட்டால், யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தெளிவு. ஏனெனில், பின்னால் முஃப்தியாக இருந்தவர்களுக்கு அஃலா ஹள்ரத் அவர்கள் ஆசிரியராக இருந்திருப்பார்கள்; அல்லது ஆசிரியரின் ஆசிரியராக இருப்பார்கள். 

ஒரு பிரச்சினைக்கு அன்னாரின் ஃபத்வாக்களில் தீர்ப்பு காணப்பட்டாதபோது, பின்னால் வந்த முஃப்திகளின் தீர்ப்பைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். 

எடுத்துக்காட்டுக்கு ஒன்று 

1918 நவம்பர் 19ஆம் தேதியிட்ட ஃபத்வா (பதிவேடு பக்கம்: 194, 195) ஒன்று, இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் பல்வேறு சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது. 

அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பாக, மைசூரைச் சேர்ந்த மௌலவி, சையித் அப்துல்லாஹ் அவர்களின் மகன் சையித் அஹ்மத் அவர்கள் ஒன்பது கேள்விகளைக் கேட்டிருந்தார். 

வினா: 

1. மய்யித்திற்கு அணிவிக்கப்படும் கஃபனில் திருக்கலிமாவையோ, திருக்குர்ஆனின் வசனங்களையோ எழுதி மய்யித்தை அடக்கம் செய்வது, இக்லாஸ் அல்லது தபாரக் சூராக்களை ஓதி மண் கட்டியில் ஊதி மய்யித்துடன் வைப்பது, பீர்களின் ஷஜராவை (வம்சப் பெயர்கள் அடங்கிய படம்) கப்றில் வைப்பது ஆகியன பற்றி தீர்ப்பு என்ன?
2. மய்யித்தை அடக்கம் செய்தபின் ஒரு தடவையும் 40 அடி நடந்தபின் ஒரு தடவையும், மய்யித்தின் வீட்டை அடைந்தவுடன் ஒரு தடவையும் ஃபாத்திஹா ஓதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? 
3. மய்யித்தை அடக்கம் செய்த மூன்றாம் நாளில் ஜியாரத்துச் செய்து பேரீத்தம்பழம், மிட்டாய், சந்தனம், பூ ஆகியவற்றைப் பகிர்வதும் கப்றுமீது சந்தனம், பூ போடுவதும் கப்றில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து ஃபாத்திஹா ஓதுவதும், சம்பிரதாயப்படி ஏழு, பத்து, இருபது, முப்பது மற்றும் நாற்பதாம் நாள் ஃபாத்திஹா ஓதுவதும், ‘நாற்பது தபாரக் கலசங்கள்’ என்று சொல்லி மண் கலசங்களை கப்றுமீது சாத்துவதும் கூடுமா? 
4. மேற்கண்ட சடங்குகளை ‘கட்டாயம்’ எனக் கருதி செய்வதும், இச்சடங்குகளைத் தவிர்ப்போர் பழிப்புக்குரியவர்கள் எனக் கருதுவதும் சரியா? 
5. ஆண்டுதோறும் ஷைகு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களது பெயரால் ‘கியார்வீன்’ செய்வது, அவர்களின் பரக்கத்தைப் பெறுவதாக எண்ணி அந்த உணவை மரியாதையோடு புசிப்பது, ஹள்ரத் ஸாலார் மஸ்ஊத் ஙாஸி பெயரால் கந்தூரி நடத்துவது, இமாம் ஜஅஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் பெயரால் பூரியான் ஃபாத்திஹாவைக் கண்ணியத்துடன் செய்வது ஆகியன பற்றி சட்டம் என்ன? 
6. முஹர்ரம் மாதத்தில் வெள்ளிப் பெட்டி, ஷர்பத் முதலான பானங்களை வைத்து ஹுசைன் (ரலி) அவர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதுதல், பஞ்சா மீது நடந்து ஜனங்களின் தலை மற்றும் முகத்தில் பூசுதல், மயில் இறக்கையை தடவுதல் ஆகியன பற்றி சட்டம் என்ன? 
7. கப்றாளிகளிடம் தேவைகளை முறையிடுவது கூடுமா? 
8. அவ்லியாக்கள் பெயரால் நேர்ந்துவிடப்பட்ட பிராணிகளை, ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ சொல்லி முறைப்படி அறுத்திருந்தால், அதன் மாமிசத்தை சாப்பிடுவது கூடுமா? 
9. ‘உருஸ்’களின்போது, நிகழ்த்தப்படும் கவாலி, கவிதை, கதை ஆகியவற்றைக் கேட்பதால் நன்மை கிடைக்கும் என நம்புவது சரியா? 

இக்கேள்விகளுக்கு அஃலா ஹள்ரத் அவர்கள் அளித்த விடையைப் பார்ப்போம். 

விடை: 

நாம் அல்லாஹ், ரசூல்மீது விசுவாசங்கொண்டு கலிமாச் சொன்னவர்கள். இதிலிருந்து, வணக்கத்துக் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் தஆலாவின் ஏவல் – விலக்கல்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே வணக்கம் என்பதன் பொருளாகும். ஏவல்களும் விலக்கல்களும் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கிடைத்தவையாகும். நமது இறைவனின் ஏவல் – விலக்கலுக்கும், சுன்னத்துக்கும் மாற்றம் செய்வது, மேற்சொன்ன விசுவாச வாக்குமூலத்திற்கு எதிரானதாகும்; முஃமினுக்கு உகந்த செயலன்று. 

இந்தஅடிப்படையில், கேள்வியில் கண்டுள்ள விஷயங்கள் – காரியங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில் இவை, குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்தோ, ஸஹாபா பெருமக்களின் சொல் மற்றும் செயலில் இருந்தோ, இமாம்களின் கூற்றுகள் மூலமோ உருவானவை அல்ல. இவை யாவும் பித்அத்து மற்றும் மக்ரூஹ்களாகும். அவற்றில் சில ஹராம் ஆகும். மற்ற சிலதில் குஃப்ரின் சாயல் உண்டு. இதன் முழு விபரம் மார்க்க நூல்களில் காணக்கிடைக்கிறது. இப்போது அவை ஒவ்வொன்றையும் விவரித்துக் கூற நமக்குப் போதிய சந்தர்ப்பம் இல்லை. இதனால் இறைவாக்கு ஒன்றை நினைவுபடுத்துவதோடு நிறுத்திக்கொள்கிறோம். 

அல்லாஹு தஆலா சொல்கிறான்: எவர் ஓர் அணுவளவு நன்மை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். எவர் ஓர் அணுவளவு தீமை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். (99:7,8) 

ஆக, முஃமின்கள் ஒவ்வொரு விஷயம் குறித்தும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதன்படி செயல்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்று, உயர் அந்தஸ்து பெற அவர்கள் முயல வேண்டும். நல்ல மனிதர் என்ற பெயரைப் பெறுவதற்கும், நல்ல எதிர்பார்ப்பை உடையவராக ஆவதற்கும் பாடுபட வேண்டும். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகம் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. அங்கு குழுமியிருந்தோர் அந்த மய்யித்தைப் பற்றி ‘நல்ல மனிதர்’ எனப் புகழ்ந்து பேசிக்கொண்டார்கள். அதைச் செவியேற்ற அண்ணலார் ‘உறுதியாகிவிட்டது’ என்றார்கள். 

சற்று நேரத்தில் வேறொரு ஜனாஸா வந்தது. அந்த மய்யித்தைப் பற்றி ‘கெட்ட மனிதர்’ எனக் கூடியிருந்தோர் பேசிக்கொண்டனர். அப்போதும் ‘உறுதியாகிவிட்டது’ என நபியவர்கள் சொன்னார்கள். பின்னர், இரண்டு ஜனாஸா விஷயத்திலும் ஒரே வார்த்தையை ‘(உறுதியாகிவிட்டது)’ அண்ணலார் சொன்னதன் நோக்கம் என்ன என்று தோழர்கள் வினவினர். 

அதற்கு “நீங்கள் அல்லாஹ்வின் நிலத்தில் அவனது சாட்சியாளர்களாக இருக்கிறீர்கள். எவரை நீங்கள் ‘நல்லவர்’ எனப் புகழ்ந்து கூறுகிறீர்களோ அவருக்கு ‘சொர்க்கம்’ உறுதியாகிவிட்டது. எவரைக் ‘கெட்டவர்’ எனக் குறைகூறுகிறீர்களோ அவருக்கு ‘நரகம் உறுதியாகிவிட்டது’ – என அண்ணலார் விளக்கினார்கள். 

இன்னொரு விஷயத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது ரங்கூனிலிருந்து ஃபத்வா கேட்டு நம் மதரஸாவுக்குச் சில கேள்விகள் வந்தன. அதற்குப் பதில் தரப்பட்டது. அந்த பத்வா நகலையும் இத்துடன் இணைத்துள்ளோம். அதையும் கவனத்தில் கொண்டு, சுன்னத்துக்கேற்ப அமல் செய்யுங்கள். ஆதாரமற்ற – பித்அத்தான செயல்களை விட்டொழியுங்கள். 

(இதை தம் கைப்பட எழுதி, நகல் எடுக்குமாறும் பணித்தார்கள்.) 

ஒப்பம், 

அப்துல் வஹ்ஹாப்
(கானல்லாஹு லஹூ) 

பதில் சரியானதே ஒப்பம் 

முஹம்மது அப்துல் ஜப்பார், ஷைகு ஆதம்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

அப்துர் ரஹீம் முஹம்மது யஃகூப்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

முஹம்மது அப்துல் அலி முஹம்மது ஹஸன் பாஷா
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

தேதி: 19 நவம்பர், 1918.
பத்வா பதிவேடு பக்கம், 194, 195 





நிர்வாகத்தின் கவனத்திற்கு 

பாக்கியாத் அணுகுமுறை (மஸ்லக்) குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பாக்கியாத் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதும் மக்களுக்கு ஒரு தெளிவைத் தருவதும் காலத்தின் கட்டாயமாகும். 

பாக்கியாத் மௌனமாக இருக்க, அதன் நிலைப்பாடு குறித்து ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி மக்களைக் குழப்பும் நிலை தொடர இடமளிக்கக் கூடாது. வெளியிலிருப்பவர்கள் – அவர்கள் பாக்கியாத்தின் மூத்த குடிமக்களாக இருந்தாலும் இளவல்களாக இருந்தாலும் – பாக்கியாத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்; அதன் நிறுவனரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

இதுவே பழம்பெரும் கலைக்கூடமான பாக்கியாத்திற்கும் ஆயிரக்கணக்கான அதன் பிள்ளைகளுக்கும் சமுதாயத்திற்கும் நல்லது.