Wednesday, November 20, 2013

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

- அ. முஹம்மது கான் பாகவி


ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய

அரசியல் கட்சி

வீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான்.

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான், இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud.

இஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான், இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. இவர் நபி (ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.

முஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்களுடன் நல்லுறவு பாராட்டிவரும் நண்பர்களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார்.

வரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச் செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காகமனிதகுலத் தலைவர் முஹம்மத்எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.

அத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க எண்ணியுள்ளேன்என்றார் அவர். ‘எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? சத்தியம் அப்படித்தான்! இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை!


வளைகுடா நாடுகளில்

அமெரிக்காவின் புதிய வியூகம்

ராக், ஆப்கானிஸ்தான் ஏன், ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில்கூட அமெரிக்காவின் கனவு நனவாகவில்லை. மிகப்பெரும் விலை கொடுத்தும் நினைத்ததை முழுவதுமாகச் சாதிக்க முடியவில்லை. எகிப்து, இராக், சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் பிடி தளர்ந்துபோனது.

மத்திய கிழக்கில் எண்ணெய் ஊற்றுகள்மீது அதிகாரம், இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பும் அதன் நலன்களும்தான் அமெரிக்காவின் இலக்கும் இலட்சியமும். எகிப்து, சிரியா ஆகிய நாடுகளின் பிரச்சினையில் இனியும் வளைகுடா நாடுகளை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துவிட்டதுபோல் தெரிகிறது.

இதனால் இன்றுவரை வளைகுடா நாடுகளுடன் நெருங்கிய தொடர்பும் பாதுகாப்பு ஒப்பந்தமும் வைத்திருக்கும் அமெரிக்கா, அந்நாடுகளுடன் தள்ளி நின்று கைகுலுக்கவே விரும்புகிறது. இப்போதைய அரசியல் மேகத்தில் ஈரானுடன் நெருக்கமான உறவுவைத்துக்கொள்வதே அமெரிக்காவுக்குப் பல வகைகளிலும் நன்மை என்ற நிலையை ஒபாமா எடுத்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எகிப்து, சிரியா, இராக் ஆகிய நாடுகளில் ஈரான் வமிசாவளி ஷியாக்களின் கையே இப்போது ஓங்கியுள்ளது. வளைகுடா அரபுகளுக்கு ஈரான் பிடிக்காது என்பது அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தன் நலனுக்காக பழைய நண்பர்களைப் பலி கொடுக்க அமெரிக்கா தயங்காது என்பது தெரிந்ததே!

இதுவரை ஈரானின்அகண்ட மத்திய கிழக்குகனவிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள மலைபோல் நிம்பியிருந்த அமெரிக்காவே ஈரானுடன் கைகோக்க ஆரம்பித்துவிட்டதைக் கண்டு வளைகுடாவே பீதியில் உறைந்துபோயிருக்கிறது. சுயகாலில் நிற்கத் திராணியில்லாத எவரும் ஒருநாள் நடுரோட்டில் விடப்படுவார் என்பது வளைகுடா அரபியர் விஷயத்தில் பலிக்கப்போகிறது. குறிப்பாக, சஊதி, பஹ்ரைன், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஈரானிடமிருந்து மிகப்பெரும் அச்சுறுத்தல் காத்திருக்கிறது.

இனி என்ன செய்ய வேண்டும் என்று வளைகுடா அரசியல் நிபுணர்களும் அறிவுஜீவிகளும் சில பரிந்துரைகளை முன்வைக்கிறார்கள். இனிமேலும் வங்காள தேசத்திலிருந்தோ யமனிலிருந்தோ கூலிக்கு இறக்குமதி செய்யும் படைவீரர்களால் வளைகுடாவைக் காப்பாற்ற முடியாது. மாறாக, சகோதர, பிராந்திய அளவில் ஓர் இராணுவ திட்டத்தை உருவாக்குவதுதான் தீர்வாக இருக்க முடியும். எனவே, அவசரமாக அத்தகைய ஒருங்கிணைந்த வளைகுடா கூட்டுப் படையை உருவாக்க வேண்டும் என்பது அப்பரிந்துரைகளில் முதன்மையானது. செய்வார்களா?


4 ஆயிரம் ஐரோப்பியர்கள்

முதல் தடவையாக ஹஜ்

ரோப்பிய நாடுகளில் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களில் 4,500 பேர் இவ்வாண்டு புனித ஹஜ்ஜை நிறைவேற்றினர். இஸ்லாமிய சமூக அமைப்பொன்று இப்பனிதப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கான இந்த அமைப்பு ஐரோப்பா எங்கும் தன் கிளைகளை அமைத்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் கமால் அர்கோன் கூறும்போது, ஒவ்வோர் ஆண்டும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வரும் புதிய முஸ்லிம்கள் தங்களின் புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்கு எங்கள் அமைப்பு ஏற்பாடுகளைச் செய்கிறது. உலகையே உலுக்கிய செப்டம்பர் 11 நிகழ்வு எங்கள் சங்கத்திற்கு ஒரு சாதகமான நிலையையே ஏற்படுத்தியது.

ஐரோப்பிய சமூகங்களைச் சேர்நத் ஏராளமானோர் இஸ்லாத்தைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்குக் காரணம், நாங்கள் எதிர்நோக்கும் மோசமான பிரசாரம்தான். ‘இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம்என்ற பரப்புரை அநியாயமாகப் பரவிப்போயுள்ளது. உண்மையை அறிய விரும்பும் மக்கள் இவ்வாறு இஸ்லாத்தை வாசிக்க வருகின்றனர்என்றார்.

நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; அதுவே உங்களுக்கு நன்மையாக அமையும்.


சுலேவீனியாவில் முதல் பள்ளிவாசல்

கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறித்தவர்கள். முஸ்லிம்கள் சுமார் 47 ஆயிரம்பேர் உள்ளனர். இதன் தலைநகர் லியுப்லியானா. இதுதான் அந்நாட்டின் பெரிய நகரம்.

இங்குள்ள முஸ்லிம்கள் தலைநகரில் 2016இல் திறக்கப்பட உள்ள முதல் பள்ளிவாசலின் கட்டட வேலையை இம்மாதம் (நவம்பர்-2013) தொடங்கியுள்ளனர். இப்பள்ளிவாசல் தொழுமிடம், கலாசார மையம், நூலகம், வகுப்பறைகள் ஆகியவை கொண்ட பன்னோக்கு இல்லமாகச் செயல்படவுள்ளது.

இப்பள்ளிவாசலுக்கு சுலோவீனியக் குடியரசு தலைவி எலைங்கா பிராடோஸ்க் அடிக்கல் நாட்டினார். தலைநகர் மேயர் சோரான் யான்கோவிச் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கத்தர் நாட்டின் வக்ஃப் அமைச்சர் ஃகைஸ் பின் முபாரக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். 1916இல் வடமேற்கு சுலோவீனியாவில் கட்டப்பட்டிருந்த முதல் பள்ளிவாசல் முதலாம் உலகப் போருக்குப்பின் இடித்துத் தள்ளப்பட்டது.

இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இந்த இறையில்லம் 12 மில்லியன் யூரோ (15.9 மில்லியன் டாலர்) செலவில் எழுப்பப்பட உள்ளது. இதில் 70 விழுக்காடு தொகை கத்தரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தாலி முஸ்லிம்களுக்கு

மார்க்க அறிஞர்கள் பஞ்சம்

த்தாலியில் 1.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். 700க்கும் குறைவில்லாத இஸ்லாமிய மையங்கள் இத்தாலியில் உள்ளன. வளைகுடா நாடுகள் உள்பட பல இடங்களிலிருந்து அவர்களுக்கு உதவிகள் கிடைத்துவருகின்றன.

ஆனால், இந்த நிதி எங்கே போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை; அதில் துளி அளவுகூட இத்தாலி முஸ்லிம்களில் தேவையுள்ளோருக்குக் கிடைப்பதில்லை; அதேநேரத்தில், ‘கார்டஸ்அமைப்பு மூலமாக வாடிகனிலிருந்து வரும் உதவிகள் சிரமப்படும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றனஎன்று இத்தாலியில் வாழும் எகிப்திய முஸ்லிம்கள் முகநூலில் தெரிவித்துள்ளனர்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தாலி மஸ்ஜிதுகளில் பணியாற்றும் இமாம்கள் முறையாக மார்க்கக் கல்வி கற்றவர்கள் அல்லர். அஸ்ஹர் (கெய்ரோ) பல்கலைக் கழகத்திலோ வேறு அதிகாரபூர்வ மதரசாக்களிலோ அவர்கள் பயின்றவர்களாகத் தெரியவில்லை. அவர்கள் சொல்லும் மார்க்கக் கருத்துகளும் ஃபத்வாக்களும் எங்கிருந்து எடுத்தாளப்படுகின்றன என்பது யாருக்கும் புரியவில்லை.

இத்துணை பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் அஸ்ஹர் போன்ற கல்வி நிலையங்களின் பங்கு என்ன என்று வினா தொடுக்கும் இத்தாலிய முஸ்லிம்கள், இத்தாலி இமாம்களில் மூன்றில் ஒரு பங்கினரே அஸ்ஹரில் படித்தவர்கள்; பெரும்பாலோர் பர்மாவையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இதனால் இத்தாலி உள்பட ஐரோப்பிய முஸ்லிம்களை அஸ்ஹர் கண்டுகொள்ளவே இல்லை; விவரம் தெரியாத அறிவிலிகளின் கையில் எங்களை அது காவுகொடுத்துவிட்டது என்று ஆதங்கப்படுகின்றனர். ஆக, முஸ்லிம் நாடுகளுக்கு வெளியே இஸ்லாம் அபாய கட்டத்தில் உள்ளது என்று இத்தாலி முஸ்லிம்களின் முகநூல் விமர்சிக்கிறது.



பிரிட்டன் சிறைக்கைதிகள்

மத்தியில் பரவும் இஸ்லாம்


பிரிட்டனில் சிறைக் கைதிகளிடையே இஸ்லாமியர் ஊடுருவி, இஸ்லாமியப் பிரசாரம் செய்வது மட்டுமன்றி, கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என்று பிரிட்டன் சிறைக்காவலர்கள் சங்கம் பதறுகிறது. புதிதாக வருபவர்கள்இஸ்லாமிய தீவிரவாதத்தைவளர்க்கிறார்கள் எனக் குற்றம்சாட்டுகிறது.

சங்கப் பொதுச் செயலாளர் ஸ்டீவ் கெய்லன் அளித்த நேர்காணலில், இஸ்லாத்தைத் தழுவுமாறு இளைஞர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது என்றார். நாட்டில் பல இடங்களைச் சுற்றிப்பார்த்தபோது இது நாளுக்குநாள் அதிகமாவது தெரிகிறது என்கிறார், பிரிட்டன் சிறைகள் சட்ட ஆலோசகர் ஜோ டிஷப்மேன்.

ஆனால், பிரிட்டன் சட்டத்துறை அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் அளித்த விளக்கம் வேறுவிதமாக உள்ளது. அவர் சொன்னார்: பொதுவாகச் சிறைக்கைதிகளிடம் இறைநம்பிக்கை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது அவர்களைத் திருத்துவதில் முக்கியப் பங்காற்றலாம். எனவே, இது ஆக்கபூர்வமான மாற்றம்தான். ஆனால், பலவீனமான சிறைக்கைதிகள்மீது கட்டாயத் திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
(அல்முஜ்தமா)

Monday, October 21, 2013

வதைக்கும் விவாகரத்து வழக்குகள்

மௌலவி, . முஹம்மத கான் பாகவி

செ
ன்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன. விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைகள்மீதான உரிமை, மீண்டும் சேர்ந்துவாழ விருப்பம் ஆகிய வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.

இதில் நம்மை வதைக்கின்ற வேதனை என்னவென்றால், 2003ஆம் ஆண்டு விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 2,570ஆக இருந்தது. இது 2012ஆம் ஆண்டு 4,770ஆக உயர்ந்தது. 2013 செப்டம்பர்வரை மட்டுமே 3,500ஆக இவ்வழக்குகள் உள்ளன.

இவ்வாறு இரு மடங்காக, மும்மடங்காக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. இந்த எண்ணிக்கை நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள் மட்டுமே! நீதிமன்றம்வரை வராமல் சுமுகமாக முடிக்கப்படும் விவாகரத்துகள், பஞ்சாயத்துகளில், அல்லது ஜமாஅத்துகளில் நடக்கும் விவாகரத்துகள் முதலானவற்றைக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கில் இருக்கக்கூடும்; லட்சத்தை எட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

முந்தைய தலைமுறையில் காணப்படாத இந்த அலங்கோலம், இன்றைய இளைய தம்பதியரிடையே பரவக் காரணமென்ன? இத்தனைக்கும் இந்த இளம் தம்பதியர் படித்தவர்கள்; பட்டம் பெற்றவர்கள்; பெரிய பணிகளில் கைநிறைய சம்பாதிப்பவர்கள்; வாழ்க்கை வசதிகளைக் குறைவின்றி அனுபவிப்பவர்கள்; திட்டம்போட்டு இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்பவர்கள்.

சுருங்கக்கூறின், எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி, முறுவல்என எதுவும் இல்லை. ஆனால், பற்றாக்குறையே வாழ்க்கையாக மாறிவிட்டிருந்த முந்தைய தலைமுறையினரிடம் இந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லை. காரணம் என்ன?

வாழ்க்கைப் பாடம்

படிப்பறிவு இல்லாத, அல்லது குறைவான படிப்பே இருந்த அம்மக்களிடம் பண்பாடு இருந்தது; நிதானம் இருந்தது. எதார்த்த வாழ்க்கை என்ன? குடும்பக் கௌரவம் என்ன என்பதையெல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள். குடும்பம் சிதறிவிடக் கூடாது; கட்டுக்கோப்பு குலைந்துவிடக் கூடாது என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள்; கடமையில்லாத தைக்கூட இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள் பள்ளிப் பாடம் இல்லையே தவிர, வாழ்க்கைப் பாடம் அவர்களின் விரல் நுனியில் இருந்தது.

இன்றைய இளைய தம்பதியரிடையே மருந்துக்குக்கூட சகிப்புத் தன்மையைப் பார்க்க முடியவில்லை. சுயநலம் ஒன்றைத் தவிர, குடும்பத்தின் வேறு எந்த அடிப்படையும் அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றுவதில்லை. எதிலும் அவசரம்! எதையும் உடைத்துவிடும் வறட்டுத் துணிச்சல்! தன் சுகத்தைத் தவிர, எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் சிந்திக்காத ஏகாந்த நிலை! அவர்களின் ஏட்டுப் படிப்பு, பணம் சம்பாதிக்க உதவுவதைப் போன்று, சம்பாதித்த பணத்தில் நிம்மதியாக வாழ கற்றுக்கொடுக்கவில்லை.

திருமணம்

முதலில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது, ஒரு வலுவான ஒப்பந்தம்; அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்ற, நீடித்திருக்க வேண்டிய புனித இணைப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கை ஆகும். அதை எளிதில் அறுத்தெறியக் கூடாது.

அவர்கள் உங்களிடமிருந்து வலுவானதோர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்” (4:21) எனத் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அதாவது கணவனை மனைவியுடன் பிணைக்கும் உறுதியான, மிக வலுவான ஒப்பந்தத்தைப் பெண்கள் தம் கணவன்களிடமிருந்து திருமணத்தின் மூலம் பெற்றுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள்விடைபெறும் ஹஜ்ஜின்போது ஆற்றிய பேருரையில், பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள் என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

ஆக, அல்லாஹ்வை முன்வைத்து செய்தகொள்ளப்பட்ட மண ஒப்பந்தத்தைப் பெரிதும் மதித்து நடக்க வேண்டும்! தகுந்த காரணமின்றி அதை முறித்துப் போட்டுவிடலாகாது. தகுந்த காரணமே இருந்தாலும்கூட, இயன்றவரை முறிக்காமலிருக்க வழியேதேனும் உண்டா என்றே பார்க்க வேண்டும்.

இதனாலேயே, மணஒப்பந்தத்தை முறிக்கும் மணவிலக்கை (தலாக்), அனுமதிக்கப்பட்ட ஹலால்களிலேயே இறைவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூதாவூத்)

மணமுறிவு ஏன்?

முதலில், மணவிலக்கு என்ற எண்ணம் வந்ததனாலேயே அந்த முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதக் கூடாது. ஏதோ ஒரு மருட்சி; அல்லது அழுத்தம் அந்த எண்ணம் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். அதனால், அதற்குக் காரணம் என்ன என்று அலச வேண்டும். கணவனாகட்டும்; மனைவியாகட்டும்! மணவிலக்கு எண்ணம் பிறக்கக் காரணமாக அமைந்த அம்சங்கள் என்னென்ன என்பதை நிதானமாக அசைபோட்டுப் பார்க்க வேண்டும்.

அதாவது பிரிந்துவிட வேண்டும் என்ற உந்துதல் தம்பதியருக்குப் பிறக்கத் தூண்டுகோலாக அமைந்த அகக் காரணிகள் என்ன? புறக் காரணிகள் என்ன என்று அமைதியாக யோசித்துப்பார்க்க வேண்டும். அக்காரணிகள் ஏன் இவையாக இருக்கக் கூடாது!

  1. தம்பதியரில் ஒருவர் மற்றவரின் உரிமையை மதிப்பதில்லை. இதையே, அவர் தமது கடமையை உணரவில்லை என்றும் சொல்லலாம்! ஒருவரின் உரிமைதான் மற்றவரின் கடமையாகிறது.
  2. ஒருவர் தமது உரிமைக்கு மேலாக மற்றவரிடம் எதிர்பார்ப்பது, அதாவது மற்றவர்மீது கடமையில்லாத ஒன்றைக் கடமைபோல் திணிப்பது.
  3. ஒருவருக்கொருவர் தம் உணர்வுகள், ஆசாபாசங்கள், தேவைகள், உடல் உபாதைகள், மனஅழுத்தம், பற்றாக்குறை ஆகியவற்றைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
  4. இதனால்தான், தம்பதியர் மனம் திறந்து பேச வேண்டும்; அவர்களுக்கிடையில் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது என்கின்றனர். அதே நேரத்தில், வெளிப்படுத்தும் விதம் காயப்படுத்தாததாக, பக்குவமானதாக இருத்தல் அவசியம்.
  5. ஒருவருக்கு மற்றவர்மேலுள்ள அவநம்பிக்கை, கோபம், சந்தேகம், தவறான எண்ணம் ஆகியவையே பெரும்பாலும் பிரிவுக்குக் காரணிகளாகிவிடுகின்றன. இவற்றைக் களைய இருவருமே முயல்வதில்லை; அல்லது ஒருவர் முயன்றால், மற்றவர் வாய்ப்பளிப்பதில்லை.

எண்ணங்களில் சில பாவமாகும் (49:12) என்கிறான் இறைவன்.

பெரும்பாலும் சந்தேக நோயே மணவிலக்கிற்குக் காரணமாகிறது. ருசி பார்க்கும் ஆண்களையும் ருசி பார்க்கும் பெண்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னது அல்பஸ்ஸார், தப்ரானீ)

அதாவது பாலியல் சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு, வேறு துணையை நாடுவோரை அல்லாஹ் விரும்பமாட்டான்.

5.        கணவன், மனைவி இருவரில் ஒருவர்மீது குற்றம் குறை இருப்பின் மற்றவர் அதைப் பெருந்தன்மையோடு சகித்துக்கொள்ளாமல், தடாலடியாக எதிர் நடவடிக்கையில் இறங்கிவிடுவது பிரிவுக்குக் காரணமாகிவிடுகிறது. குறையை மறைப்பதிலும் குற்றங்களை மன்னிப்பதிலும் நிறைய நன்மைகள் இருக்கலாம்.

ஒன்றை நீங்கள் வெறுப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் அதில் ஒன்றல்ல; பல நன்மைகள் இருந்துவிடக்கூடும்.

“(இல்லற வாழ்க்கையில்) அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தாலும் (பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில்,) நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். (ஆனால்,) அதில் அல்லாஹ் அதிகமான நன்மைகளை வைத்திருக்கலாம் (4:19) என்று அறிவுரை கூறுகிறது அருள்மறை குர்ஆன்.

அதாவது மனைவியை நீங்கள் வெறுத்தபோதும் அவளை வீட்டிலிருந்து விரட்டிவிடாமல், பொறுமையோடு அவளுடன் குடும்பம் நடத்துங்கள். அவ்வாறே, கணவன் பிடிக்கவில்லை என்று தாய் வீட்டிற்கு ஓடிவிடாதீர்கள். பொறுமையோடு அவனுடன் வாழுங்கள். அதனால் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு அதிகமான நன்மைகள் விளையலாம்.

சேறுபட்டுவிட்ட துணியைச் சற்று காய விட்டுவிட்டால், இலேசாகத் தட்டிவிட்டாலே மண் உதிர்ந்துவிடும். ஈரத்தோடு உடனுக்குடன் அகற்ற முனைந்தால், சேறு பரவும்; அகற்றுவது கடினம்.

இதனால்தன் நபித்தோழரும் குர்ஆன் அறிஞருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: மனைவியிடம் கணவன் அன்போடு நடந்துகொள்ள வேண்டும். அவள்மூலம் அவனுக்குப் பிறக்கும் குழந்தை வாயிலாக அவனுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. (இப்னுகஸீர்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை கொண்ட ஓர்ஆண் இறைநம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை அடியோடு வெறுத்து ஒதுக்க வேண்டாம்! அவளிடமுள்ள ஒரு குணத்தை அவர் வெறுத்தாலும், மற்றொரு குணத்தால் திருப்தி அடையட்டும்! (முஸ்லிம்)

முன்கோபம் உள்ளவளிடம் கற்பொழுக்கம் இருக்கலாம். கஞ்சனிடம், கெட்ட வழியில் செலவழிக்கும் பழக்கம் இல்லாமலிருக்கலாம்.

அவ்வாறே, மனைவியும் கணவனின் குறைகளை நயமாகச் சுட்டிக்காட்டி திருத்த முயல வேண்டுமே தவிர, எடுத்ததற்கெல்லாம்குலாகேட்கும் தவறைச் செய்யக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கடுமையானதோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்: கட்டாயமும் நெருக்கடியும் இல்லாமல் கணவனிடம் எந்தப் பெண்தலாக்கோருகிறாளோ அவளுக்குச் சொர்க்கத்தின் வாடைகூட தடுக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)

மேற்சொன்ன காரணிகளை ஆய்வு செய்து, அவற்றைத் தம்பதியரே நிவர்த்தி செய்ய முடியும். மூன்றாவது ஆளின் தலையீடே இல்லாமல் இருவரும் பேசி சுமுக முடிவு காணலாம். மனம் இருப்பின் மார்க்கம் உண்டு.

அப்படியே இருவரால் தீர்க்க முடியாதுபோனால், நடுவர் ஒருவரை அணுகலாம். அவர் நல்ல மனிதராகவும் இருவரின் நலன்மீதும் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இதன்படி, மனைவி தரப்பில் ஒருவரும் கணவன் தரப்பில் ஒருவரும் நடுவர்களாக இருந்து உளப்பூர்வமாக முயன்றால் வெற்றி நிச்சயம்.

அவ்விருவரும் நல்லிணக்கத்தை நாடினால் அல்லாஹ்வும் அத்தம்பதியருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான் (4:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மணவிலக்கின் பின்விளைவுகள்

சரி! அப்படியே பிரிந்துவிடுவது எனத் தம்பதியர் இருவரும் மனதளவில் முடிவெடுத்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போதுகூட, சில உண்மைகளை அவர்கள் சீர்தூக்கிப்பார்த்தால், மணவிலக்கு எவ்வளவு கசப்பானது என்பது புரியும்.

மணவிலக்கிற்குப்பின் ஒரு சுமுகமான வாழ்வு அமைவதென்பது சுலபமான காரியமல்ல. வீட்டையோ வாகனத்தையோ வேலைபார்க்கும் இடத்தையோ நினைத்தவுடன் மாற்றிக் கொள்வதைப் போன்றதல்ல, வாழ்க்கைத் துணையை மாற்றுவதென்பது. அதிலுள்ள சுடுகின்ற எதார்த்தங்களை இதோ எண்ணிப்பாருங்கள்!

1. தம்பதியரில் இருவருக்குமோ, அல்லது இருவரில் ஒருவருக்கோ பிரிவுக்குப்பின் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் நேரலாம். மறுமணம் என்பது எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தனிமை, மனிதனைக் குற்றம் செய்யத் தூண்டலாம். கேள்வி கேட்பதற்கு ஆளில்லை என்ற துணிச்சலே மனிதனைப் படுகுழியில் தள்ளிவிடும்.
அவ்வாறே தனிமை, மனஅழுத்தத்தையும் விரக்தியையும் தரவல்லது. கண்டதையும் சிந்தித்தே உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக்கொள்ள நேரும். வேண்டாத நட்பையும் தீய பழக்கங்களையும் தனிமை தேடிக் கொடுத்துவிட அதிக வாய்ப்பு உண்டு.

2. இதையெல்லாம்விட, கணவன்மனைவி இடையிலான பிரிவு குழந்தைகளைப் பாதிப்பதுதான் மிகவும் கொடுமை. தாயின் அன்பு, அல்லது தந்தையின் பரிவு, அல்லது இரண்டுமே கிடைக்காத துர்நிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடும்.
ஆம்! தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் நெருக்கடியைக் குழந்தைகள் சந்திப்பார்கள். இரு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்று கேட்பதற்குச் சமம் இது. குழந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ அவர்களின் அரவணைப்பு கிடைக்கலாம்; அந்த அரவணைப்புகூட எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. மற்றவரை அவ்வப்போதுதான் பார்க்கவே முடியும்; சில வேளைகளில் பார்ப்பதற்குக்கூட தடை வரலாம்!

பெற்றோரின் பிரிவைச் சரிவர புரிந்துகொள்ளாத குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப் படுவர். அந்த ஏக்கம் வெறியாக மாறி, பெற்றோருக்கெதிராகத் திரும்பினாலும் வியப்பதற் கில்லை. முறையான வளர்ப்பும் இயல்பான அன்பும் கிடைக்காதபோது குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறவும் இடமுண்டு.

3. விவாகரத்து ஏற்பட்டால் பொருளாதாரச் செலவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. விவாகரத்து வழக்கு நீதிமன்றம்வரை செல்லக்கூடும். அப்போது கணவன்மனைவி இருவர் தலையிலும் நீதிமன்றச் செலவுகள், வழக்குரைஞர் கட்டணம் முதலான செலவுகள் விழும்.

மனைவியின்இத்தாகாலத்திற்குக் கணவன் தனியாக ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும். மனைவிக்கும் கணவனுக்கும் சொந்தமான சொத்துகள், உடைமைகள் ஆகியவை கலந்துபோயிருந்தால், அவற்றைத் தனித்தனியாககப் பிரித்து உரியவருக்கு ஒப்படைத்தாக வேண்டும். அதில் இருவருக்குமிடையே பிரச்சினை தோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கும்.

சுமுகமாகவே பிரித்துக்கொண்டாலும், ஒன்றாக இருந்த சொத்து, ஆளுக்கு இவ்வளவு எனப் பிரியும்போது பலம் குன்றத்தானே செய்யும்! வசதிகள் குறையத்தானே செய்யும்! மணவிலக்கும் பிரிவும்தானே இதற்குக் காரணம்! சேர்ந்து வாழ்ந்தால் இதற்கு இடமில்லையே!

மறுமணத்திற்குப்பின்

பழைய உறவை உதறித்தள்ளியவர்கள், புதிய உறவை நாடிச்சென்று மறுணைம் செய்து கொள்கிறார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்! புதிய உறவும் மறுமணச் சூழலும் எவ்வாறு அமையும் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

புதியவன், அல்லது புதியவள் எப்படி இருப்பாரோ! யார் கண்டது? பழைய துணையை விடப் புதிய துணை மோசமாக இருந்துட்டால்…? எலிக்குப் பயந்து புலிக்கு இரையான கதையாகிவிடும்; அல்லது களை பிடுங்கப்போய் நிலம் பிளந்த கதையாகிவிடும். புதியவர் பழைய வாழ்க்கையைச் சொல்லிக்காட்டி, குத்திக் காயப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதைப் போன்றதொரு சித்திரவதை வேறு உண்டா? சொல்லுங்கள்!

அது மட்டுமா? ஊர் வாயை யார் மூடுவது? அவரவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசித்தீர்ப்பார்களா, இல்லையா? துக்கம் விசாரிப்பதைப் போன்று, கேள்வி கேட்டே பிராணனை வாங்கிவிடுவார்கள். சொன்னாலும் தொல்லை; சொல்லாவிட்டாலும் தொல்லை. தேவைதானா இந்த அனுபவம்?

குர்ஆன் கூறும் ஒழுங்குமுறை

சரி! பிரிவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எல்லையை எட்டிவிட்டது நிலைமை, மணவிலக்குதான் தீர்வு என்ற முடிவுக்கும் வந்தாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போதுகூட, குர்ஆன் கூறும் அழகிய வழிமுறையைப் பின்பற்றுவதை விடுத்து, கண்மூடித்தனமாக ஏன் முத்தலாக்’ சொல்ல வேண்டும்?

அல்லாஹ் காட்டியுள்ள வழியைப் பின்பற்றினால், பிரிந்த உள்ளங்கள் இணைவதற்குக்கூட அதிக வாய்ப்பு உண்டு. அது மட்டுமன்றி, ‘நபிவழி (சுன்னத்) தலாக்எனப்படும் முறையைக் கையாண்ட பேறு கிடைக்கும். முறிவைக்கூட முறையாகச் செய்வதுதானே முறை! அது என்ன ஒழுங்குமுறை என்பதைப் பார்ப்போமா?

அல்லாஹ் கூறுகிறான்: (மனைவியைத் திரும்ப அழைக்க உரிமையுள்ள) ’தலாக்இரண்டேதான். பின்னர் முறைப்படி சேர்ந்து வாழலாம்; அல்லது நன்முறையில் (அவளை) விடுவித்துவிடலாம். (2:229)

1. ஒரே மூச்சில் மூன்று தலாக்கைப் பயன்படுத்தாமல், முதலில் ஒருதலாக்மட்டுமே சொல்ல வேண்டும்.

2.  அதையும், மாதவிடாய் நாட்கள் முடிந்து மனைவி தூய்மை அடைந்த நிலையிலேயே சொல்ல வேண்டும். அவ்வாறே, பிரசவ இரத்தப்போக்கு நின்று, மனைவி தூய்மையாக இருக்கும்போதுதான் சொல்ல வேண்டும். அப்போதுதான், மனைவியின் காத்திருப்புக் காலமானஇத்தாகாலம் நீளாமல் கணக்கோடு முடியும். இப்னு உமர் (ரலி) அவர்கள் மாதவிடாயிலிருந்த தம் துணைவியாரை மணவிலக்குச் செய்த தகவல் தெரிந்தபோது, திரும்ப மீட்டுக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆணை யிட்டார்கள். (புகாரீ)

3. தாம்பத்திய உறவு கொண்ட புதிதில் மனைவியைக் கணவன் மணவிலக்குச் செய்யக் கூடாது. காரணம், அந்த உறவில் மனைவி கர்ப்பமடைந்திருக்க வாய்ப்பு உண்டு. குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும்வரைஇத்தாகாலம் நீளும் அபாயம் உண்டு.

4.  கர்ப்பிணி மனைவிக்கு தலாக் சொல்லக் கூடாது. ‘இத்தாகாலம் நீளும் என்பதே இதற்கும் காரணம். மனஉளைச்சலுடன் கர்ப்பக் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். இது தாய், சேய் இருவருக்கும் நல்லதல்ல.

5. தலாக்சொல்லப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் காத்திருப்பில் (‘இத்தா’) இருக்க வேண்டும். அதாவது மறுமணம் செய்யாமல் காததிருக்க வேண்டும். மாதவிடாய் ஏற்படாத பெண்ணாக இருந்தால் மூன்று மாதங்கள்இத்தாமேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பிரசவமாகும்வரைஇத்தாஇருக்க வேண்டும். மணமாகி இல்லறச் சுகம் அனுபவிக்காத பெண்ணுக்கு இந்தக் காத்திருப்பு (இத்தா) இல்லை.

இத்தாகாலத்தில் கணவன் இல்லத்தில் மனைவி இருப்பதுதான் முறையாகும். அக்காலத்திற்கான உணவு, உடை உள்ளிட்ட வசதிகளைச் செய்துதருவதுஅதாவது ஜீவனாம்சம் வழங்குவதுகணவனின் பொறுப்பாகும்.

தலாக்கின் சரியான நடைமுறை

1.        முதல் தலாக் சொல்லப்பட்ட பெண்இத்தாவில் இருக்கும் காலத்தில் இருவருக்கும் மனமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரே வீட்டில் இருந்துகொண்டு, இருவரது வாய் பேசாவிட்டாலும் கண் பேசலாம் அல்லவா? ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் மனம் மாறிவிடாதா? இருவரும் மீண்டும் இணைய எண்ணலாம் அல்லவா? அப்படி சேர்ந்து வாழ விரும்பினால் எந்தச் சம்பிரதாயமுமின்றி தாராளமாகச் சேர்த்துகொள்ளலாம்.

இதற்குமீட்டுக்கொள்ளும் தலாக்’ (ரஐயீ தலாக்) என்று பெயர். ‘இத்தாகாலமே முடிந்துவிட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ‘இத்தாமுடிந்துவிடின், தலாக்பாயின்’ (பிரிவு) ஆகிவிடும். எனவே, இருவரும் திருமண ஒப்பந்தத்தைப் புதிப்பித்துக்கொண்டாலே போதும்; இருவரும் சேர்ந்து வாழலாம். அல்லது அப்படியே பிரிந்துபோய், மறுமணம் செய்து கொண்டோ தனியாகவோ வாழ்ந்துகொள்ளலாம்.

அவ்வாறு இருவரும் சேர்ந்து வாழும் நாட்களில் இருவரிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, சுமுகத்தீர்வு காண முடியாத அளவுக்கு நிலைமை முற்றி, பிரிவுதான் வழி என்ற முடிவுக்கு வரும்போது கணவன் இரண்டாவதுதலாக்கைப் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டாவதுதலாக்சொல்லப்பட்ட பிறகும் மனைவி மூன்று மாதவிடாய்க் காலம்இத்தாமேற்கொள்ள வேண்டும். கணவனின் இல்லத்தில், அவனது பராமரிப்பில் மனைவிஇத்தாஇருந்துவரும் நாட்களில் இருவரும் விரும்பினால் சேர்ந்து வாழலாம். ‘இத்தாகாலம் முடிந்துவிட்டாலும்கூட பிரச்சினை இல்லை; இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால், திருமண ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு இணைந்து வாழ முடியும்.

தம்பதியர் முற்றாகப் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனை வாய்ப்புகள்! எத்தனை வழிகள்! இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதில்தான் இறைவனுக்கு எத்தனை கருணை! இல்லறத்திற்கு நல்வழி காட்டிய நபிகளாருக்குத்தான் எத்தனை அக்கறை! இந்த சன்மார்க்கத்திற்குத்தான் எத்தனை ஆர்வம்!

இந்த அரிய வாய்ப்புகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தடாலடியாக ஒரே மூச்சில் முத்தலாக்கைப் பயன்படுத்தும் இளைய தம்பதிகளை என்னவென்பது! ஆத்திரப்பட்டு அவசரமாக மூன்று தலாக்கையும் ஒரே தடவையில் கொட்டித் தீர்த்துவிட்டு, பின்பு மனம் திருந்தி சேர்ந்து வாழ விரும்புகிறோம் என்று மார்க்கத் தீர்ப்புக் கேட்டு அலைவோரை என்னவென்பது!

இரண்டாவதுதலாக்சொன்ன பிறகு மீண்டும் சேர்ந்து வாழும்போது தம்பதியருக்கு மத்தியில் பிணக்கு ஏற்படின், சுமுகமாகத் தீர்வு காணவே முயல வேண்டும். ஏனெனில், சச்சரவு முற்றி, பிரிவதுதான் வழி என்ற நிலை ஏற்படின் மூன்றாவது வாய்ப்பைக் கணவன் பயன்படுத்தி, மூன்றாம் தலாக் சொல்லாம். ஆனால், இதுதான் இறுதியான தலாக். இனி சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம்.

மனைவி மூன்று மாதவிடாய்க் காலம்இத்தாமேற்கொள்ள வேண்டும் அதன்பின் வேறொரு ஆணை அவள் மணக்க வேண்டும். புது இல்லறம் கண்ட அவ்விருவருக்கிடையே பிணக்கு ஏற்பட்டு, இயல்பாக மணவிலக்கும் உண்டாகி, அதற்கானஇத்தாமுடிந்த பிறகே பழைய கணவனை அந்த மனைவி மீண்டும் மணந்து, சேர்ந்து வாழ முடியும். இந்தக் கசப்பான அனுபவம் தேவைதானா? இதே நிலைதான், முத்தலாக்கை ஒரே நேரத்தில் பாவித்துவிட்டு, மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் தம்பதியரும் சந்திக்க வேண்டியுள்ளது.

இப்போது சொல்லுங்கள்! ‘தலாக்சொல்லும் உரிமையைப் படிப்படியாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றாகச் சொல்கின்றசுன்னத்தானஇந்த நடைமுறை சிறந்ததா? அல்லது ஒரேயடியாக முத்தலாக்’ சொல்லும்பித்அத்தான முறை சிறந்ததா?

தலாக் சொன்னபின்பும் சிரமமின்றி மீண்டும் சேர்ந்து வாழ்கின்ற நான்கு வாய்ப்புகளை வழங்கும்நபிவழிமுறை மேலானதா? அல்லது அந்த வாய்ப்புகளுக்கே இடமளிக்காத, ஒரேயடியாகக் கதவை இழுத்து மூடும்அநாசாரமுறை மேலானதா?

தம்பதியர் வாழ்வில் பிரச்சினையே ஏற்பட்டாலும் மூன்றாவது ஆளின் தலையீட்டிற்கு வழியே இல்லாத, குர்ஆன் கூறும் நடைமுறை அறிவார்ந்ததா? அல்லது ஊர் வாய்க்கு அவல் போடும் முட்டாள்தனம் அறிவார்ந்ததா?

இளம் தம்பதியரே! நிதானமாக யோசியுங்கள்! பஞ்சாயத்திற்கு இடம்வைக்காதீர்கள்! குற்றவாளிக் கூண்டில் நிற்காதீர்கள்!