Monday, December 07, 2015

நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை


து நாம் சொல்வதல்ல; பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல். ஆனால், இதில் எனக்கு வியப்பில்லை. காரணம், முஸ்லிம்கள் ஊடகத்தில் முகத்தைக் காட்டிக்கொள்ளவோ தீவிரவாதப் பழியைத் துடைக்கவோ நல்லபேர் எடுக்கவோ இந்த மகத்தான சேவையைச் செய்யவில்லை.

அவர்கள் பின்பற்றும் மார்க்கம் சொன்ன கட்டளைக்கு அடிபணிந்து, இறைவனின் அன்பையும் நெருக்கத்தையும் எதிர்பார்த்தே இந்தத் தொண்டை மேற்கொண்டனர். ஒரு உண்மையான முஸ்லிம், மற்றவர் துயரத்தைக் கண்டு வாளாவிருக்கமாட்டான்.  ஓடிப்போய் தன்னால் முடிந்த உதவிகளை நல்குவான். அது, தம்மைக் கொல்ல வந்த பகைவனாக இருந்தாலும் சரியே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லாத பகைவர்களா? அந்தப் பகைவர்களுக்குக்கூட நன்மையே செய்யுமாறுதான் இறைவன் கட்டளையிட்டான். அப்படி நடந்துகொண்டால் பகைவனும் நண்பனாகக்கூடும் என்று விளக்கமளித்தான்.

“நன்மையும் தீமையும் சமமாகா. நன்மையைக் கொண்டே (தீமையை) வெல்வீராக! அப்போது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை இருக்கிறதோ அவர்கூட உற்ற நண்பரைப் போன்று மாறிவிடுவார் (41:34) எனத் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

அவ்வாறே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள்மீது அன்பும் கருணையும் காட்டாதவர்மீது இறைவன் கருணை காட்டமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)

மறுமை நாளில் மனிதனிடம் இறைவன் இப்படிக் கேட்பானாம்:

மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேன்; நீ எனக்கு உணவளிக்கவில்லையே!

அப்போது மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதி! உனக்கு எப்படி நான் உணவளிப்பேன்?என்பான். அதற்கு இறைவன்,

“என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான்; அவனுக்கு நீ உணவு தரவில்லை. அவனுக்கு மட்டும் நீ உணவளித்திருந்தால், அதை என்னிடம் (இப்போது) நீ அடைந்திருப்பாய்?என்பான். அவ்வாறே, தண்ணீர் கேட்டதாகவும் இறைவன் கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நிவாரணப் பணியில்…
கடந்த பத்து நாட்களாக சென்னை மாநகரை வரலாறு காணாத கனமழை புரட்டிப் போட்டுவிட்டது. சென்னை மாவட்டம் மட்டுமன்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் பெருவெள்ளத்தில் சிக்கின. அதிலும் கடந்த சில நாட்களாக கடலூர் உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலமும் பேரிழப்புகளைச் சந்தித்தன.

இது மனிதத் தவறுகளால் நிகழ்ந்திருக்கட்டும்! இயற்கைச் சீற்றத்தால் நிகழ்ந்திருக்கட்டும்! எப்படியானாலும், இலட்சக்கணக்கான மக்கள் பேரிழப்புகளைச் சந்தித்தனர். இறப்பு மட்டும் 294பேர் என்று அரசு கூறினாலும், உண்மையில் அதைக் காட்டிலும் பன்மடங்கானபேர் வெள்ளத்தில் சிக்கியும் வேறு முறைகளிலும் உயிரிழந்துள்ளனர் என்பது அதிகாரிகள் மட்டத்தில் பேசிக்கொள்ளப்படும் இரகசியமாகும் என்று சொல்லப்படுகிறது.

விலை உயர்ந்த பொருட்கள், பள்ளி மற்றும் கல்லூரி புத்தகங்கள், முக்கியமான ஆவணங்கள், அடையாள அட்டைகள், உணவுப் பொருட்கள், வாகனங்கள்… என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, அடுத்த வேளை உணவுக்கும் ஒரு செம்பு குடிநீருக்கும் வழியில்லாமல் மக்கள் நின்றது பாறையையும் கரைத்துவிடும் துயரம்.

குழந்தைகள் பாலின்றி, நோயாளிகள் மருத்துவ உதவியின்றி, கர்ப்பிணிகள் சுமையை இறக்கிவைக்க இடமின்றி, முதியோர் மற்றும் பெண்கள் வெளியேற வழியின்றி பட்ட அவதிகள் எழுத்தில் அடங்கா. பலரிடம் பணம் இருந்தது. அதனால் எந்தப் பயனும் இல்லை. சொந்தங்கள் இருந்தனர் ஊரில். அவர்களால் இங்குள்ளவர்களுடன் தொலைபேசியில்கூடப் பேச முடியாத நெருக்கடி. ஏன்? என்று கேட்க ஆளில்லாத யுகமுடிவு நிலை.

அரசாங்கம் விழித்து உதவிக்கு வருவதற்குள் நிலைமை கைமீறிவிட்டது. இந்த நெருக்கடியான நிலையில்தான் சமூகக் கரம் தேவைப்படுகிறது. உதவிக்கு ஏங்கும் மனிதர் எந்த மதம்? எந்த சாதி? எந்த மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்ப்பதற்குரிய நேரமன்று இது. இஸ்லாம் காட்டிய வழியில், கூப்பிடாமலேயே உணவுப் பொட்டலங்களையும் குடிநீர் பாக்கெட்களையும் பாய், துப்பட்டி போன்ற அவசர பொருட்களையும் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு, இடுப்பளவு தண்ணீரில் நடந்து அல்லது படகில் நீந்திச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பொற்கரங்கள் முஸ்லிம் இளைஞர்களின் பண்பட்ட மனிதநேயக் கரங்களாகும்.

பார்ப்போர் அதிசயிக்க, ஊடகங்கள் பல அலட்சியம் செய்ய, பாதிக்கப்பட்டோரின் கண்களும் கல்புகளும் அகல விரிய – இரவு, பகல் பாராமல் – களப் பணியாற்றிய அந்த இளவல்களும் அவர்களுக்கு வழிகாட்டிய தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள்; நன்றிக்குரியவர்கள். அவர்களை எவ்வளவு மெச்சினாலும் தகும். முஸ்லிம்களைப் பற்றிய தவறான பார்வையை நொடியில் மாற்றிப்போட்டவர்கள் இந்தத் தம்பிகள்; பெண்களும்தான். தங்கள் பங்கிற்குக் களம் கண்ட அந்தச் சகோதரிகள் சமுதாயக் கண்மணிகள்.

முழு ஈடுபாட்டோடு…
இளவல்கள்தான் இப்படி என்றால், முஸ்லிம் பெருங்குடி மக்கள் தாராளமாக அள்ளிக் கொடுத்ததை என்னவென்று வர்ணிப்பது? அரசாங்கம் கொடுப்பதற்கும் சாதாரண குடிமக்கள் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அரசாங்கம் தரும் உதவிகளை வாங்குவதற்கு அணிவகுத்து நிற்போர் மத்தியில், பிறருக்கு உதவ அணிவகுக்கும் கூட்டம் எவ்வளவு பண்பட்ட, கண்ணியமான கூட்டமாக இருக்க வேண்டும்! பணமாக, துணியாக, தானியமாக, பொருளாக எனப் பல வழிகளில் நிவாரண உதவிகளை வழங்கிய ஜமாஅத்தார் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
 
உதவப்போன இளவல்களும் ஏனோதானோ என்றில்லாமல், ஈடுபாட்டுடன் பணியாற்றியதைக் காண முடிந்தது. மேல் மாடியிலிருந்து கீழே இறங்க ஏணி இல்லாமல், நம் இளைஞர்களின் தோள்களில் கால்களைப் பதித்துக் கீழே இறங்கிய பெண்களையும் ஆண்களையும் பார்க்க நேர்ந்தபோது மெய்சிலிர்த்துவிட்டேன். கர்ப்பிணிகளைப் பக்குவமாகக் கையாண்டு கொண்டுசேர்த்ததையும் குழந்தைகளையும் முதியோரையும் அரவணைத்து எடுத்துச் சென்றதையும் கண்டபோது அந்த இளைஞர்கள் உயரத்துக்குச் சென்றுவிட்டார்கள்.

நந்தகோபால் என்ற நண்பர் கூறுவதைக் கேளுங்கள்: மாடியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த எங்கள் குடும்பத்தை இஸ்லாமியர்கள் சிலர் மீட்டனர். ஒருவர் உணவு பார்சல் வழங்கினார். அதில் முட்டை இருந்த்து. உடனே மன்னிப்புக் கேட்ட அவர், சைவ பார்சலை வழங்கினார். என் பேத்தி காய்ச்சலால் நடுங்கிக்கொண்டிருந்தார். இதைக் கண்ட இஸ்மாயில் என்ற இளைஞர், தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தார். கண்கள் கலங்க என் தம்பி இஸ்மாயிலுக்கு நன்றி!

ராஜ்குமார் கூறுகிறார்: கேமராவும் இராணுவமும் நுழையாத இடங்களில்கூட முஸ்லிம்கள் உதவினார்கள். அவர்களில் யாரும் செல்ஃபி எடுத்துக்கொள்ளவில்லை. சென்னை அம்பேத்கர் நகரில் மட்டும் 5ஆயிரம் பேருக்கு உணவும் தண்ணீரும் வழங்கினர்.

பாராட்டு மழை
நாளேடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் முஸ்லிம் சேவகர்களுக்குப் பாராட்டும் நன்றியும் குவிந்தவண்ணமுள்ளன. தி இந்து தமிழ் நாளேட்டின் தமிழ் எழுத்தாளர் சமஸ் (06.12.2015) குறிப்பிட்டிருப்பது முக்கியமானது. அவர் எழுதுகிறார்:

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: இதுநாள்வரை பொதுச் சமூகம் யாரை அதிகம் வெறுப்புணர்வோடும் கசப்புணர்வோடும் பார்த்துக் கடந்ததோ, ஒரு வீட்டை வாடகைக்கு விட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடிஓடி உதவுவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்.

இவர் சொன்னதற்கேற்ப, மீட்புப் பணியின்போது ஒரு நிகழ்ச்சி: நம் தம்பிகளில் ஒருவர், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட குடும்பம் ஒன்றைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தார். அவர்களில் ஒரு பெரிய மனிதர். இவர் அந்த பில்டிங்கின் உரிமையாளர். சில மாதங்களுக்குமுன் அவரிடம் போய் இதே தம்பி வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். ‘முஸ்லிம்என்பதால் அப்பெரியவர் வீடு தர மறுத்துவிட்டார். அவரைத்தான் காப்பாற்றி பள்ளிவாசலில் தங்கவைத்தார் அந்த இளைஞர்.

செல்வி சொல்கிறார்: இந்த வெள்ளத்தில் மட்டுமன்றி, சுனாமியிலும் இஸ்லாமியர்கள் அரும்பணி ஆற்றினர்.

கமலி பன்னீர் செல்வம் நெகிழ்கிறார்: மூன்று மாடி கட்டடம். கீழ்தளத்தில் நாங்கள். முதல் மாடியில் சுபைதா குடும்பம். இவர்கள் பாதுகாப்புக் கருதி படகில் வெளியே சென்றுவிட, தங்கள் வீட்டுச் சாவியை எங்கள் வசம் கொடுத்துவிட்டார்கள். இரண்டாவது மாடியில் இருந்த கிறிஸ்தவர் வீட்டிலிருந்து அரிசி எடுத்து சுபைதா வீட்டில் வைத்து சமைத்து உயிர் பிழைத்தோம். சுபைதா இல்லைன்னா நாங்க பிழைத்திருக்க முடியாது.

நன்றி வெளிப்பாட்டின் உச்சகட்டமாக மோகன் கூறுவதைக் கேளுங்கள்: என் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. பெயர்: சித்ரா. வெள்ளத்தில் சிக்கிக்கொண்டோம். உதவிக்கு வந்த பொறியாளர் யூனுஸ் எங்களைக் காப்பாற்றிப் பத்திரமான இடத்தில் சேர்த்தார். அங்கே பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தையும் பிறந்தது. மகிழ்ச்சியில் குழந்தைக்கு யூனுஸ் என்றே பெயர் சூட்டிவிட்டோம்.

விஜய சங்கர் சொல்கிறார்:

வழிபாட்டுத் தலங்களைத் திறந்துவிட்டதில் தீவிரம்;
மத வேற்றுமையின்றி அடைக்கலம் அளித்ததில் தீவிரம்;
அதிவேகமாய் நிவாரணம் வழங்கியதில் தீவிரம்;
சந்தேகமே இல்லை; இவர்கள் தீவிரவாதிகள்தான்.

இனி என்ன?
தேர்தல் வரும். அரசியல்வாதிகள் வருவார்கள். ஓட்டுக்காக மத, சாதி வேறுபாட்டை ஊட்டுவார்கள். மக்களைப் பிரிப்பார்கள். வெள்ளமோ சுனாமியோ வந்து மக்களை ஒன்றுபடுத்தும்!

சிதம்பரம் மகேஷ் அதைத்தான் சொல்கிறார்: எப்போதும் பக்கத்து வீட்டு சலீமும் டேவிட்டும் எங்களுக்கு நண்பர்கள்தான். அரசியல்வாதிகளான நீங்கள்தான் பிரிக்கிறீர்கள்.

ராஜ்குமார் கூறுகிறார்: இனி ஒரு பாபர் மசூதியும் இடிக்கப்படக் கூடாது. மழைக்கு ஒதுங்க உதவும்.

K.P. முத்து: நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள் என்றும் பிறரின் துன்பங்களை உணர்வார்கள். பள்ளிவாசலை சாதி – மதம் பேதம் பார்க்காமல் வழங்கினார்கள். இஸ்லாமியர்களுக்கு நன்றி.

விக்னேஷ் குமார்: முஸ்லிம் மக்கள் தங்களது சகோதரத்துவத்தையும் பெருந்தன்மையையும் நிரூபித்துவிட்டனர்.

இத்தனை பேரின் அன்பு இருக்கையில், நாம் ஏன் தனிமைப்பட வேண்டும்? இப்போதும்கூட சிலர், நம் சேவைகளைக் கொச்சைப்படுத்தியதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவ்வாறே, நம்மில் சிலரே சிலரது கடின உழைப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதையும் கண்டுகொள்ள வேண்டியதில்லை.

அல்லாஹ்விடம் மட்டுமே பிரதிபலனை எதிர்பார்ப்போம்! பாராட்டோ நன்றியோகூட தேவையில்லை. 

Monday, November 30, 2015

திருமண கவுன்சிலிங் – தேவை பயிற்றுநர்கள்


டந்த 28.11.2015 சனிக்கிழமை காலை சென்னையில், ‘குடும்ப மாண்பு காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, திருமண கவுன்சிலிங் பாடத்திட்ட நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்வியாளர் கேப்டன் அமீர் அலீ அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ், எம்.என். புகாரீ திருமறை ஓதித் தொடங்கிவைத்தார்.

திருமண கவுன்சிலிங் பாடத்திட்டக் குழு உறுப்பினர்களான மௌலவிகள், அ. முஹம்மது கான் பாகவி, கா.மு. இல்யாஸ் ரியாஜி, எம். முஹம்மது மன்சூர் காஷிபி, எம். முஜீபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். உருது மொழியில், மௌலவி, ஃபய்யாஸ் ஆலம் உமரி உரையாற்றினார். மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார்.

புரஃபஷனல் கூரியர் எஸ். அஹ்மத் மீரான் பாடத்திட்ட நூலை வெளியிட, முஸ்லிம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ முஹம்மது ஹனீஃபா உள்ளிட்ட சமுதாயப் பிரமுகர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். பொறியாளர், பி.கே. ஷப்பீர் அஹ்மத் நன்றியுரை ஆற்றி, தீர்மானங்கள் வாசித்தார். மௌலவி, எம். முஜீபுர் ரஹ்மான் பாகவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


ஆல் இண்டியா மில்லி கவுன்சில் (தமிழ்நாடு), பைத்துல் மால் – தமிழ்நாடு, இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. மார்க்க அறிஞர்கள், இமாம்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என சுமார் 350 பேர் கலந்துகொண்டனர்.

மதுரை, புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலிருந்தும் முகநூல் அழைப்பைப் பார்த்துவிட்டு விழாவில் கலந்துகொண்டவர்களும் உளர். பிரச்சினையின் ஆழத்தை அறிந்து, தகவல் கேள்விப்பட்டு வந்த நண்பர்கள் பலரும் உள்ளனர்.

கவுன்சிலிங் பாடநூல்

இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருமண கவுன்சிலிங் பாடப் புத்தகம் மூன்று பிரிவுகளைக் கொண்டனது. திருமணத்திற்குமுன், திருமணத்தின்போது, திருமணத்திற்குப்பின் ஆகியவையே அப்பிரிவுகள். இவற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் ஆணும் பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள், சந்திக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும், உளவியல் ரீதியான எதிர்பார்ப்புகளும் அவற்றை அடைகின்ற சுமுகமான நடைமுறைகளும், மணவிலக்கை இயன்றவரைத் தவிர்ப்பதும் வேறு வழியில்லாதபோது சுன்னத்தான முறையில் மணவிலக்குச் செய்வதும்... எனப் பல அறிவுரைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடத்த வேண்டிய கவுன்சிலிங் பாடத்திட்டம் தனியாக வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். பாட வகுப்பு நடத்துவதற்கான மேட்டருடன், அந்த மேட்டருக்கு உதவும் நூல்களின் (தமிழ், அரபி) பட்டியலும் தரப்பட்டிருக்கிறது. இந்தப் பாடத்திட்டத்தை ஏழு ஆலிம்கள் கொண்ட குழு தயாரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கவுன்சிலிங் நடத்துநர்

உண்மையில் இந்த நூல், கவுன்சிலிங் வகுப்பு எடுக்கும் நடத்துநர்களுக்கு ஒரு வழிகாட்டிதான். இந்நூலை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ‘காதல்என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள், இனக் கவர்ச்சியால் விளையும் விபரீதங்கள், சமூக விரோதிகளின் வலையில் சிக்கி, குடும்பத்தைத் துறந்து ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளல், பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் படலம், கணவன் – மனைவி இடையிலான புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும், உறவுகளை மதித்தல், பெரியவர்களைக் கலங்காமல் பார்த்துக்கொள்ளல், சண்டை சச்சரவுகளைத் தீர்க்கும் முறைகள்... என இன்றைய குடும்பங்களின் அவலங்களை அகற்றும் நல்லிணக்க நடைமுறைகளைப் பயிற்றுநர் சொல்லிக்கொடுப்பார்.

தேவை – பயிற்றுநர்கள்

குறிப்பிட்ட சிலபேரை மட்டும் வைத்து தமிழகம் முழுவதும் கவுன்சிலிங் முறையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லாத காரியம். எனவே, முதலில் பயிற்றுநர்களை உருவாக்குவது அவசியம். அதற்காகத்தான், இந்தக் கூட்டத்தின் அழைப்பிதழுடன் ஒரு படிவமும் சேர்த்து அனுப்பப்பட்டது.

ஒவ்வொரு மஹல்லாவிலும் சமூக ஆர்வமும் அறச்சீற்றமும் கொண்ட தகுதிவாய்ந்த இருவர், அல்லது மூவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை, அந்தந்த மஹல்லா ஜமாஅத் நிர்வாகம் எங்களிடம் வழங்கிட வேண்டும் எனக் கோரியிருந்தோம். ஒரு தேதியை நிர்ணயித்து, அவர்களையெல்லாம் அழைத்து ஓரிரு நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டமும் உண்டு. பயிற்சி முடித்தவர்கள் தங்களின் பகுதிகளில் கவுன்சிலிங் நடத்துவார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், திருமண வயதை அடைந்தவர்கள், பள்ளி – கல்லூரி மாணவ – மாணவியர், புதுமணத் தம்பதியர் எனப் பல்வேறு நிலையிலிருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்பு நடத்தலாம்.

இதுவரை, பலர் படிவங்களை நிரப்பிக் கொடுத்துள்ளனர். கொடுக்காதவர்கள் விரைவில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வலைதளத்தில் கண்போர் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்திற்கு நகல் எடுத்து, நிரப்பி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி படிவத்திலேயே உண்டு.

ஆர்வமுள்ள ஆலிம்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ‘தாஇகள், சமூக ஆர்வலர்கள் என யாரும் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். பயிற்சியாளர்களுக்குத் தேவை: சமுதாய கவலை; சீர்திருத்தத்தின் மீதான அக்கறை; அடிப்படை மார்க்க அறிவு; சரளமாகப் பேசும் திறன்; சூழ்நிலை அறிந்து பேசும் பக்குவம். இவை இருந்தால் போதும்.

நம்மைக் கொண்டு, இரண்டு இளம் உள்ளங்கள் திருந்த வேண்டும்; மனஸ்தாபத்தில் இருக்கும் ஒரு தம்பதியாவது சமாதானம் அடைந்து சுமுகமாக வாழ வேண்டும்; ‘தலாக்முடிவுக்கு வந்தவர்கள் மறுபரிசீலனை செய்து, அவ்வெண்ணத்தைக் கைவிட வேண்டும்; தந்தை – மகன், மாமியார் – மருமகள், அண்ணன் – தம்பி போன்ற உறவுகள் சீர்பெற வேண்டும். இதைச் செய்யும் உங்களுக்கு அல்லாஹ்விடம் சன்மானம் உண்டு.


நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றின் தகுதியைவிடச் சிறந்த செயல் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவா? அதுதான், இருவரிடையே சமாதானம் செய்துவைப்பது. (நபிமொழி, திர்மிதீ)

Tuesday, November 10, 2015

பீகார் ஒரு முன்னுதாரணம்



பீ
கார் மாநிலத்தின் 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் முடிந்து, தெளிவான முடிவுகளும் வெளிவந்துவிட்டன. தேர்தலில் மதச்சார்பற்ற மகா கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியிருப்பது, இந்தியாவின் மதச் சகிப்புத்தன்மைக்குக் கிடைத்த ஆதரவுதான் என்பதில் துளியளவும் ஐயமில்லை. யார் என்ன கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மறுக்க முடியாத அப்பட்டமான யதார்த்தம் இதுதான்.

ஆளும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் – 71; ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 80; காங்கிரஸ் – 27 இடங்களைப் பெற்றுள்ளன. இது, பதிவான வாக்குகளில் 41.9 விழுக்காடு ஆகும்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டனி 58 இடங்களைப் பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. அவர்களின் ஆர்ப்பரிப்பையும் திமிரான பேச்சுகளையும் கருத்தில் கொண்டால், ‘படுதோல்விஎன்றே சொல்ல வேண்டும். இந்த மதவெறி கூட்டணி 33.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது என்று சொல்லி ஆறுதல் அடைவது, தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் தந்திரமே தவிர வேறல்ல.

இதில் பரிதாபத்திற்குரியவர் ராம் விலாஸ் பாஸ்வான்தான். தலித்களின் பரம விரோதி என்று தெரிந்தும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, இவரது கட்சியான லோக் ஜனசக்தி 40 இடங்களில் போட்டியிட்டது. 2 இடங்களை மட்டுமே வென்றது. பா.ஜ.க. 160 இடங்களில் களத்தில் நின்றது. கிடைத்ததோ 53 இடங்கள் மட்டுமே. இது, 2010இல் பெற்ற இடங்களைவிட 38 இடங்கள் குறைவு. அத்தேர்தலில் பா.ஜ.க. 91 இடங்களைப் பெற்றது, நிதீஷ்குமாரின் பெருந்தன்மையால்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.

பா.ஜ.க.வின் பயங்கரவாதம்

ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது என்பதைக்கூட மறந்து பா.ஜ.க.வும் அதன் உதிரிகளும் போட்ட ஆட்டம் கொஞ்சமா? மதவெறி தலைக்கேறி, எழுத்தாளர்களைப் படுகொலை செய்தது; நாட்டின் அறிவுஜீவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது; மாட்டிறைச்சி பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொன்றது, மதச் சகிப்பித்தன்மை பற்றி யார் உபதேசித்தாலும் மை ஊற்றி அவமானப்படுத்தியது, விருதுகளைத் திருப்பிக் கொடுத்த சாதனையாளர்களின் அறச் சீற்றத்திற்கு உள்நோக்கம் கற்பித்த்து, சினிமா நடிகர்களைக்கூட விட்டுவைக்காமல் பாகிஸ்தானுக்கு ஓடிவிடுமாறு மிரட்டியது என இந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் சொல்லிமாளாது.

தேர்தல் கூட்டங்களில் பேசிய பேச்சுகளிலும் அதே காட்டுமிராண்டித்தனம். ‘மூன்று முட்டாள்கள்என்று நிதீஷ் கூட்டணியை நரேந்திரமேடியே விமர்சித்தார். அந்த ‘முட்டாள்கள்தான் இன்று அறிவாளிகளாக ஜொலிக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணி தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என்று பொறுப்புள்ள பதவி வகிக்கும் ஒருவர் உளறினார். இப்போது பட்டாசு கொளுத்தி பா.ஜ.க.வின் தோல்வியைக் கொண்டாடிய பீகாரிகள் பாகிஸ்தானிகளா...?

சிறுபான்மையினர் பங்கு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணிப்பின்படி, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் மகா கூட்டணிக்குக் கிடைத்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது. பீகார் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் முதலான சிறுபான்மை வாக்காளர்கள் தங்களின் சமய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்; பீகார் தேர்தல் இந்தியா முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்; மதவெறி சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று யோசித்து, திட்டமிட்டு பா.ஜ.க.வைத் தோற்கடித்துள்ளார்கள்.

பீகாரில் முஸ்லிம் மக்கட்தொகை 15 விழுக்காடு. மொத்தம் 23 முஸ்லிம்கள் நிதீஷ் கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பின் – 12 பேர்; ஐ.ஜ.த. சார்பில் – 5 பேர்; காங்கிரஸ் சார்பில் – 6 பேர்; சி.பி.எம். சார்பில் வென்ற ஒருவரையும் சேர்த்து 24 முஸ்லிம்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர். இது மொத்த உறுப்பினர்களில் 10 விழுக்காடு ஆகும்.

பீகாரில் மகா கூட்டணி அமைத்த சூட்சுமதாரர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு. ஒரு தேசிய கட்சி; முன்னாள் ஆளும் கட்சி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? அதுவும் 41 இடங்களை வாங்கிக்கொண்டு – என ஈகோ பார்த்திருந்தால், இப்போது கிடைத்த 27 இடங்கள்கூட நிச்சயமாகக் கிடைத்திருக்காது. அவ்வாறே லாலுவையும் சும்மா சொல்லக் கூடாது. கூடுதல் இடங்களைப் பெற்றும் நிதீஷ்தான் முதல்வர் என்று தன்முனைப்பு காட்டாமல் அறிவித்தார்.

ஆக, தீய சக்தியை அடக்கிவைக்க, நல்ல சக்திகள் தங்களிடையே விட்டுக்கொடுத்து, கௌரவம் பார்க்காமல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் பீகார் சொல்லும் பாடம்.

தமிழ்நாடு – 2016

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால் நன்றாக இருக்கும். முஸ்லிம் கட்சிகள் என்ன வியூகம் அமைக்கப்போகின்றன என்று தெரியவில்லை. வாக்குச் சிதறல் இருக்கும்போல் தெரிகிறது. அ.தி.மு.க. தனியாகவோ, சிறு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிடலாம். தி.மு.க. இரண்டாவது அணியாகக் களத்தில் நிற்கிறது. மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது ஓர் அணியும் உண்டு. இதில் தே.மு.தி.க. எந்தப் பக்கம் சாயப்போகிறது என்று தெரியவில்லை.

இதற்கிடையில், பா.ஜ.க.வுடன் இணக்கமான அணுகுமுறையை மேற்கொண்டால்தான், இந்தியாவில் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியும் என்ற சிந்தனைப்போக்கு அண்மைக்காலத்தில் முளைக்கத் தொடங்கியுள்ளது. குஜராத் போறா முஸ்லிம்கள், வடநாட்டிலுள்ள சில முஸ்லிம் அமைப்புகள் இவ்வாறு கிளம்பியுள்ளன.

இப்போக்கு, கேரளா வரை வந்து, தமிழ்நாட்டையும் எட்டியிருப்பதுதான் அச்சமூட்டும் செய்தியாகும். கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் இந்துத்துவா சக்திகளுடன் சேர்ந்து, தாமரைச் சின்னத்தில் முஸ்லிம் பெண் உள்படச் சிலர் போட்டியிட்டுள்ளனர். ஆலிம் தோற்றத்திலுள்ள சிலரும் போட்டியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் அதற்கான விதை தூவப்படுவதாக அஞ்சப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கமே இந்த அச்சத்திற்குக் காரணம். ஆலிம்கள், சமூகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே கலந்துகொண்ட அக்கூட்டத்தில் வந்திருந்த முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறியவர் யார் தெரியுமா? ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன், பாதுகாப்புத் துறை நிபுணர் நிரஞ்சன்.

கர்னல் ஹரிஹரன் பேசியதாவது: அல்காயிதா, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய அமைப்புகளில் இந்திய முஸ்லிம்கள் யாரும் இல்லை என்று பிரதமர் மோடியே கூறுகிறார். எனவே, இந்திய முஸ்லிம்கள் எல்லாரும் நல்லவர்கள். எனினும், வெளியிலிருந்து வரும் பயங்கரவாதிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அடுத்துப் பேசிய நிரஞ்சன் கூறியதாவது: முஸ்லிம்களாக இருப்பவர்களால் பிரச்சினை இல்லை. மதம் மாறி வருபவர்கள்தான் தீவிரவாதிகளாக வருகிறார்கள். இந்தியாவில் தேவ்பந்த் மதரசாதான் 1930களிலேயே தீவிரவாதிகளை தயார் செய்தது. தப்லீக் ஜமாஅத்தும் தீவிரவாதத்தைப் பரப்பும் அமைப்புதான். சஊதியின் இப்னு சஊத், சீனாவின் ஸ்டாலின் மற்றும் மாவோ ஆகியோர் ஒரே மாதிரியானவர்கள். பயங்கரவாதத்தின் மூலம் தங்கள் மேலாண்மையை நிலைநிறுத்த முயன்றவர்கள்.


ஆக, பரேலவி – தேவ்பந்தி இடையே பிரிவினையை அதிகமாக்கி, ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, குளிர்காய மோடி அரசு போட்ட சதிக்கு இங்குள்ளோரும் அறிந்தோ அறியாமலோ பலியாகிவருகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், பா.ஜ.க. காரர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பார்களா? இராணுவம் மற்றும் உளவுத்துறை என்று மேல்மட்டத்தில் உள்ளவர்கள் வந்து வகுப்பு எடுப்பார்களா? யார், யாரிடம் பாடம் படிப்பது என்பதற்கு ஒரு முறை வேண்டாமா? அல்லாஹ்தான் காக்க வேண்டும்.

Wednesday, October 28, 2015

கவிக்கோ எங்கள் தமிழ் ஆசான்



விக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களை நான்அண்ணன்என்றுதான் அழைப்பேன். அவரிடம் கவிதை மொழியைவிட அன்புமொழி தூக்கலாக இருப்பதே காரணம். அதனால் என்னையும் அறியாமல்அண்ணன்உறவு ஒட்டிக்கொண்டுவிட்டது. அநேகமாக அவரும் அதை நேசிக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

1980 மற்றும் 90களில் வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபோதுதான் கவிக்கோ அண்ணனின் அறிமுகம் ஏற்பட்டது. வேலூர் நகரில் அப்போதெல்லாம் அவரது கவியரங்கம் அடிக்கடி நடக்கும். அரபிக் கல்லூரி மாணவர்கள் சிலர் அதில் தவறாது கலந்துகொள்வார்கள். அவர்கள் என்னிடம் வந்து கவியரங்கம் பற்றியும் அண்ணன் பொழிந்த கருத்துரைகள் பற்றியும் சிலாகித்துச் சொல்வார்கள்.

ஜூனியர் போஸ்டில் வெளிவந்த ‘ஆறாவது விரல்’, ஜூனியர் விகடனில் வெளிவந்த ‘சிறகுகளின் நேரம்’ ஆகிய தொடர்கள் மூலம் அண்ணனை நான் வாசித்திருந்தாலும் சந்தித்தது இல்லை. வேலூர் சோலைநாதன் அவர்களின் சோலை ஹோட்டலில் தங்கும் அண்ணன், அதே தெருவில் உள்ள எங்கள் கல்லூரிக்கு ஒருநாள் வருகைதந்தார். எனக்கோ பூரிப்பு; மாணவர்களுக்கோ வியப்பு. கல்லூரி முதல்வரைச் சந்தித்து, மாணவர்களுடன் அளவளாவி, என்னுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றார்.

இடைவெளி குறைந்தது


முன்பெல்லாம், மார்க்கம் கற்ற ஆலிம்களுக்கும் முஸ்லிம் பட்டதாரிகளான பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், கவிஞர்கள் போன்ற அறிஞர்களுக்கும் இடையே இனம்புரியாததோர் இடைவெளி இருந்ததை மறுக்க முடியாது. ஒரு பெரிய கவிஞரும் தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அவர்களின் நெருக்கம் கிடைத்தபிறகு, அவரைக் கொண்டே இடைவெளியைக் குறைத்தால் என்ன என்று யோசித்தேன்.

என்னை ஆசிரியராகக் கொண்டு அப்போது வெளிவந்துகொண்டிருந்தஅல்ஹுதா’ (இப்போது மனாருல் ஹுதா) மாத இதழில் அண்ணன் கவிக்கோ அவர்களைத் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அதுவும் மார்க்கம் தொடர்பாக எழுதச் சொன்னேன். நான் ஆசிரியராக இருந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த பெரும்பாலான இதழ்களில் அண்ணனின் கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இதழ் வாசகர்களில் கணிசமானோர் ஆலிம்கள். அண்ணனின் எழுத்துகளுக்கு அமோக வரவேற்பு.

அவ்வாறே, மற்றொரு கவிஞரும் பேராசிரியருமான தி.மு. அப்துல் காதிர் அவர்களிடமும் கட்டுரைகள் பெற்று வெளியிட்டோம். நானே சுவைத்து வாசித்த கட்டுரைகள் இவை. வார இதழ்கள் வாயிலாகத் தமிழ் ஆர்வமுள்ள ஆலிம்களுக்கு முன்பே அறிமுகமாயிருந்த கவிக்கோ அவர்கள், மேலும் பலருக்கு அறிமுகமாகவும் நெருக்கமாகவும் ‘அல்ஹுதா தொடர்கள் பெரிதும் துணை நின்றன.

மொழிபெயர்ப்பு வழிகாட்டி


சென்னை ரஹ்மத் பதிப்பகத்தில் 1998ஆம் ஆண்டு தலைமை மொழிபெயர்ப்பாளராக நான் பொறுப்பேற்றதிலிருந்து அண்ணன் கவிக்கோ அவர்களுடனான தொடர்பும் நெருக்கமும் எனக்கு மேலும் வலுப்பெற்றது. மொழிபெயர்ப்பாளர் குழுவில் இருக்கும் ஆலிம்கள் அண்ணனின் குடும்ப நண்பர்களாயினோம். குழுவில் ஒருவராகவே இருந்து தமிழாக்க ஆலோசகராகவும் மேற்பார்வையாளராகவும் அன்றுமுதல் இன்றுவரை அண்ணன் கவிக்கோ செயல்பட்டுவருகிறார்.

இஸ்லாத்தின் மூலாதார நூல்களான திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழித் தொகுப்புகள் ஆகிய பெருநூல்களை அரபி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதே இக்குழுவின் பணியாகும். இதுவரை இருபது தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களைக் கொண்டது. மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்து, கணினியில் தட்டச்சு செய்து பிரதியெடுத்து, மேலாய்வுக்காக என்னிடம் வழங்குவர்.

மொழிபெயர்ப்பிலுள்ள தவறுகளைத் திருத்தி, சொல்லாக்கத்தைச் சீராக்கி எளிமைப்படுத்தி, அடிக்குறிப்புகள் வரைவதே என் பணி. திருத்தங்களையும் விளக்கக் குறிப்புகளையும் கணினியில் ஏற்றி வடிவமைத்து மீண்டும் படியெடுப்பார்கள். அதனை குழுவிலுள்ள அனைவரும் பார்வையிட்டுப் பக்குவப்படுத்துவார்கள். இதில் ஒரு படி அண்ணன் கவிக்கோ அவர்களின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும்.

தமிழாக்கத்தைப் படித்துப்பார்த்து, தேவையான இடங்களில் தமிழைச் செழுமைப்படுத்தி, தகுதிவாய்ந்த அணிந்துரை ஒன்று வழங்குவது அண்ணனின் பொறுப்பு. தொடக்கத்தில் சில தொகுதிகளை முழுவதும் வாசித்து, தமிழ் மொழிபெயர்ப்பு எந்தெந்த இடங்களில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். இது, எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது; மொழிபெயர்ப்பின் தரத்தைக் கூட்ட துணை புரிந்தது. அடுத்தடுத்த தொகுதிகளில் புதியதாக வரும் சொற்கள், வாக்கியங்களுக்கு மட்டும் நல்ல தமிழை எங்களுக்கு அறிமுகப்படுத்துவார்.

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி என்பதால், மூலத்திற்குச் சற்றும் வேறுபடாத வகையில், அதே நேரத்தில் எளிதில் புரிகின்ற சரளமான நடையில் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும் என்பது எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்ட கட்டுப்பாடு. இதனால் அரபி மூலத்தைச் சொல்லுக்குச் சொல் ஒரு சொல்கூட விடுபட்டுவிடாத முறையில்- மொழிபெயர்க்கின்ற இக்கட்டான நிலை எங்கள் குழுவிற்கு. அதற்காக, அரபிக்கே உரிய சில தனி நடைகளைத் தமிழில் திணித்துவிடவும் கூடாது.

இந்த இறுக்கத்தைத் தளர்த்த அண்ணன் கவிக்கோ அவர்கள் சொன்ன யோசனைகள் ஆக்கபூர்வமானவை. அந்த வழிமுறைகளைப் பின்பற்றிவருவதால் மூலமொழியான அரபியின் தனித்தன்மையும் பேணப்படுகிறது; மொழிபெயர்ப்பு மொழியான தமிழின் மரபும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. இதையடுத்து மொழிபெயர்ப்பு இயல்பானதாகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் அமைய ஏதுவாகிறது.

அண்ணன் காட்டிய வழியை நாங்களும் உள்வாங்கிக்கொண்டுவிட்டதால் நாளடைவில் திருத்தங்களுக்கு அவசியமில்லாமல்போனது. சிற்சில புதிய திருத்தங்களை மட்டும் ஒரு தாளில் எழுதிக்கொண்டுவந்து அண்ணன் காட்டுவார். தேவையானவற்றை எடுத்துக்கொள்வோம். எனவே, அண்ணனின் மொழிப்புலமை தமிழுக்கு மட்டுமன்றி, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி விளக்கங்கள் மக்களைச் சென்றடைவதற்கும் பயன்பட்டிருப்பது நன்றியோடு என்றும் நினைவுகூரத் தக்கது.

அணிந்துரைக்கு அணிசெய்தவர்


மலேசியா ஈப்போவில் நூல் அறிமுக விழாவில் (2009)
ஒரு நூலுக்கு, புகழ்பெற்ற ஒருவர் தரும் அறிமுகம்தான் அணிந்துரை. ரஹ்மத் பதிப்பகத்தின் ஒவ்வொரு வெளியீட்டிலும் அண்ணன் கவிக்கோ அவர்களின் அழகானதோர் அணிந்துரை கட்டாயம் இருக்கும். அணிந்துரை எப்படி எழுத வேண்டும் என்பதைக் கவிக்கோ அவர்களிடம்தான் கற்க வேண்டும். அவரது அணிந்துரையை வாசித்து முடிக்கும்போது, அந்த நூலையே ஒருமுறை வாசித்த திருப்தி ஏற்படும்; நிதானமாக இன்னும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பிறக்கும்.

இறைமறைக்கோ நபிமொழிக்கோ அறிமுகம் அவசியமில்லைதான்; மொழிபெயர்ப்புக்கு அது தேவைதானே! இறைவாக்கையும் நபிமொழியையும் எடுத்துவைத்துக்கொண்டு, தற்கால சூழலோடு பொருத்தி எழுதுவார் பாருங்கள்! திரும்பத் திரும்ப சுவைக்கலாம்! கவிக்கோ அவர்கள் இங்கு எழுதிய அணிந்துரைகள் சில, கட்டுரைகளாக இதழ்களில் வெளிவந்திருக்கின்றன என்றால், அதன் அருமை எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

தஃப்சீர் இப்னு கஸீர்திருக்குர்ஆன் விரிவுரை ஆறாவது தொகுதிக்கு அண்ணன் கவிக்கோ வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுவார்:

இஸ்லாத்தைப் பற்றிச் சரியாகப் படித்துப் புரிந்துகொள்ளாத சிலர், ‘இஸ்லாம் வாளேந்திய மதம்என்று குற்றம் சுமத்துவதுண்டு. இஸ்லாம் வெறும் ஆன்மிக விஷயங்களைப் பற்றி மட்டும் கூறும் வழிபாட்டு நெறியன்று. அது மனித வாழ்க்கை முழுமைக்குமான வழிகாட்டி. அதில் அரசியலும் உண்டு. இஸ்லாம்தான் முதன்முதலாக இவ்வுலகத்தில் ஆன்மிகத்திற்காக அரசை அமைத்த மார்க்கம்!

ஏக இறைவனை வணங்குதல் என்ற உண்மையான, தூய இறைநெறியைப் பின்பற்றியதற்காக மக்காவின் குறைஷிகள் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தினர். இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களோடு மதீனாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். ஆனால், குறைஷிகள் முஸ்லிம்களை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்தில் மதீனாவின் மீது படையெடுத்து வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் ஏகத்துவச் சுடர் அணையாமல் காக்க ஆயுதம் ஏந்துமாறு இறைவன் முஸ்லிம்களுக்கு ஆணையிடுகின்றான். இது ‘தாக்குதல் போர்’ (Offense) அல்ல; ‘தற்காப்புப் போர்’ (Defence).

முஸ்லிம்கள் வாளேந்த வேண்டிய அவசியம் பற்றிக் குறிப்பிடுகிற இறைவன், போர் தொடுக்கப்பட்டோர் அநீதியிழைக்கப்பட்ட காரணத்தால் (பகைவர்களை எதிர்த்துப் போரிட) அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது”. (22:39). “நியாயமே இன்றித் தம் இல்லங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறியதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை (22:40) என்று கூறுகிறான்.

இந்தத் தொகுதியில் இடம்பெற்ற இரு திருவசனங்களை எடுத்துக்கொண்டு ஆய்வு நோக்கில் விளக்கம் கூறியிருப்பதுடன், ஒரு முக்கியமான விவாதத்திற்கு இதன்மூலம் முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் கவிக்கோ; அதுவும் சில வரிகளில்.

அவ்வாறே நபிமொழித் தொகுப்புகளில் மூன்றாம் இடம் வகிக்கும்ஜாமிஉத் திர்மிதீமூன்றாவது தொகுதிக்கு கவிக்கோ வழங்கிய ஆய்வுரையிலிருந்து சில துளிகள்:

தர்மம் என்பது பணக்காரர்களாலேயே செய்ய முடியும்; ஏழை எளியவர்களால் இயலாது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், பெருமானார் (ஸல்) அவர்கள்,

உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து முறுவலிப்பதும் தர்மம். நன்மை செய்ய ஏவித் தீமையைத் தடுப்பதும் தர்மம். திக்குத் தெரியாமல் தடுமாறும் ஒருவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றவருக்கு உதவுவதும் தர்மம் (நபிமொழி-1879)

என்று கூறுவது வியப்பை அளிக்கிறது. எளியவர்க்கும் இவை எளிதானவைதாமே!

மற்றொரு நபிமொழியைக் குறிப்பிட்டு ஆய்வு செய்கிறார் கவிக்கோ:

உனக்கு நீ எதை விரும்புகிறாயோ அதையே மற்ற மக்களுக்கும் விரும்பு! நீ முஸ்லிமாக இருப்பாய். (நபிமொழி-2227)

இது கவனத்திற்குரிய மிகச் சிறந்த அறிவுரையாகும். முஸ்லிமின் இலக்கணத்திற்கு இதைவிடச் சுருக்கமாக, ஆனால் மிக ஆழமாக வேறோர் அறிவுரை இருப்பது அரிது.

இதில் கவனிக்க வேண்டியதுவியப்புக்குரியது என்னவென்றால், இந்த அறிவுரை இடம்பெறாத சமய நூல்களே இல்லையென்று சொல்லிவிடலாம். யூதர்களின் வேதமாகியதவ்ராத்’ (தோரா), கிறித்தவ வேத நூலாகிய புதிய ஏற்பாடு, பௌத்த வேதமாகிய தம்ம பதம், மகாவீரரின் பொன்மொழிகள், மகாபாரதம், ஜொராஸ்டிர வேதமாகிய ஸென் அவெஸ்தா, திருக்குறள் ஆகிய சமய நூல்கள் அனைத்திலும் இந்த அறிவுரை இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவு ஏன் மதங்களையே வெறுக்கும் பெரியாரின் பொன்மொழிகளிலும் இது இடம்பெற்றிருக்கிறது.

சோகம் என்னவென்றால், இந்த அறிவுரை தங்கள் வேதத்தில் இருக்கிறது என்பதை அறிந்தவர் சிலரே. அனைத்து மதத்தவரிடமும் இருக்கும் பொதுப்பண்பு. இதை யாருமே பின்பற்றுவதில்லை. அப்படிப் பின்பற்றியிருந்தால், உலகில் மதச் சண்டைகளே இரா. மனிதனுக்கு மனிதன் இழைக்கும் கொடுமைகளும் இரா. உலகம் அமைதிப் பூங்காவாகிவிடும்.

நபிமொழிகளில் கவிக்கோ அவர்களின் நிகழ்காலப் பார்வை மயிர் சிலிர்க்கவைக்கிறதல்லவா?

உரையழகு


அண்ணன் கவிக்கோ அவர்களின் உரைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதன்கீழ் பேசுகின்ற ஆற்றல் அவருக்கு உண்டு. அதிலும் மேலோட்டமான அணுகுமுறை இருக்காது. ஆழம் இருக்கும். நாங்கள் மாதாந்தி ஆய்வுரை நிகழ்த்த ஒருமுறை கவிக்கோ அவர்களை அழைத்திருந்தோம். நாங்கள் கொடுத்த தலைப்பு: வீணாகும் மனித வளம்.

சுமார் ஒன்றரை மணி நேரம்நேரமே போனது தெரியாமல்- அருவியாகக் கொட்டியது அவரது உரை. மனிதனுக்குள்ள ஆற்றல்களை வகைப்படுத்தி, அவை எங்கே, எப்படி, ஏன் வீணாகின்றன என்பதை ஓர் ஆய்வுக் கட்டுரைபோல அள்ளித் தெளித்தார்.

அண்ணன் ஒரு கவிஞர்; உரையாளர்; எழுத்தாளர்; நூலாசிரியர்; சமூகவியலாளர்; பேராசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தை மனம் படைத்த ஒரு நல்ல மனிதர். வெளிநாட்டுப் பயணங்களில் கவிக்கோவுடன் நான் பலமுறை சென்றுள்ளேன். என் சுமைகளையும் தன் சுமைகளாகத் தூக்கி வருவார் பாருங்கள்! நமக்குக் கூச்சமாக இருக்கும். வக்ஃப் வாரிய தலைவராக இருந்தபோது சாதாரண கவிக்கோவாகவே நடந்துகொண்டது பலருக்கும் வியப்பைத் தந்தது. வீட்டுக்குச் சென்றால், தாயுள்ளத்தோடு உபசரிக்கும் நற்குணம் எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. அவரிடம் உண்டு.

மொத்தத்தில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் மொழியை மட்டும் வளர்க்கவில்லை; இறைமொழியையும் நபிவழியையும் வளர்த்தவர். நல்ல பண்பாளர். நல்ல மனிதர். வாழ்க அவர் புகழ்!

திருக்குர்ஆன் விரிவுரை (இப்னு கஸீர்) அறிமுக விழாவிற்காக கோலாலம்பூரிலிருந்து பினாங்கு சென்ற வழியில் கவிக்கோ உடன் கான் பாகவி படகில் (2009)

(கவிக்கோ கருவூலம் சிறப்பு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரை)