Monday, August 01, 2011

இஸ்லாம் அடிமை முறையை ஆதரிக்கிறதா? - 1


ஸ்லாம் அடிமைத்துவத்தை ஆதரிப்பதாகவும், மக்களைச் சிறைப்பிடிக்கத் தூண்டுவதாகவும் இஸ்லாத்தின் மீது மேலைநாட்டினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனாலேயே அடிமைகளுக்கும் சிறைக் கைதிகளுக்கும் தனிச் சட்டங்களையும் ஒழுக்க நடைமுறைகளையும் இஸ்லாம் வகுத்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில், அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையை ஒழித்தார் என்றும் அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.


ஆப்ரஹாம் லிங்கன் அடிமைகளுக்கு விடுதலை அளிப்பதாக அறிவித்தது அரசியல் காரணங்களுக்காகத்தானே தவிர, அடிமைகள்மீது அவருக்கு இருந்த உண்மையான அக்கறையின் காரணத்தால் அல்ல என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்றாகவே புரியும். அப்படியில்லாவிட்டால், இன்றளவும் அமெரிக்காவில் கறுப்பர்-வெள்ளையர் என்ற இனப்பாகுபாடு நீடிக்குமா?

பிரான்ஸ் ஆட்சியாளர்கள் ஓட்டுக்காகப் பெண்களுக்குச் சில பொருளாதார உரிமை களை வழங்கியதைப் போன்றதுதான் இதுவும். பிரிட்டனில் இயங்கும் அடிமை ஒழிப்பு இயக்கம் ஒன்று, அமெரிக்கா மட்டுமன்றி, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலும் இன்னும் அடிமை முறை இருந்துவருவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.


ஏதோ இஸ்லாம்தான் புதிதாக வந்து அடிமை முறையை உருவாக்கியது போல் இவர்கள் பேசுவது உண்மைக்குப் புறம்பானதாகும். இஸ்லாம் வருவதற்கு முன்பே பன்னெடுங்காலமாக அடிமை முறை இருந்துவந்தது. இஸ்லாம் வந்து அடிமைகள் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக முறையான சட்ட விதிகளைக் கொண்டுவந்தது என்பதே உண்மையாகும். அடிமைகளுடன் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வதற்கும், படிப்படியாக அடிமை முறையை ஒழிப்பதற்கும் இஸ்லாம் வழிவகுத்தது.


வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே அடிமைகள் இருந்துவந்துள்ளனர். தனி மனித அடிமைத்துவம், சமூக அடிமைத்துவம், வர்க்க அடிமைத்துவம், மத அடிமைத்துவம், இன மற்றும் நிற அடிமைத்துவம் எனப் பல்வேறு அடிமைத்துவங்கள் உலக நாடுகளில் இருந்து வந்திருக்கின்றன.


அரிஸ்டாட்டில் முதல் மனுதர்மம்வரை


கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் பெரிய மேதையாகக் கருதப்பட்டுவருபவர். அவர் அடிமை முறையை ஆதரித்தார். அவர் சொன்னார்: மக்களில் சிலர் தலைமைக்காகவே படைக்கப்பட்டுள்ளனர்; வேறுசிலர் கீழ்ப்படிவதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நடமாடும் இயந்திரங்களாவர். எங்கே இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதே தெரியாமல் இவர்கள் ஊழியம் செய்வார்கள்.


மற்றொரு தத்துவ அறிஞர் பிளாட்டோ. இவர் கூறுகிறார்: மனிதர்களைப் படைத்த கடவுள் சிலரை மட்டும் பொன் கலந்த களிமண்ணிலிருந்து படைத்தார். அவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக. மற்ற சிலரை வெள்ளி கலந்த மண்ணிலிருந்து படைத்தார்; அவர்கள் ஆட்சியாளர்களுக்கு உதவியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக. அடிமைகளை இரும்பு மற்றும் செம்பு கலந்த மண்ணிலிருந்து உருவாக்கினார்; அவர்கள் விவசாயிகளாகவும் தொழிலாளர்களாகவும் இருப்பதற்காக.


இந்துக்களின் மனுதர்மம் என்ன சொல்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணர்கள் பிறந்தனர். அவனுடைய கைகளிலிருந்து படை வீரர்களான சமணர்கள் தோன்றினர். அவனுடைய தொடையிலிருந்து வணிகர்களான வைணவர்கள் பிறந்தனர். அடிமைகளான சூத்திரர்கள் கடவுளின் கால்களிலிருந்து வந்தவர்கள் என்கிறது மனுதர்மம்.


சூத்திரன் எப்போதும் இன்னொருவனின் வேலையாளகவே இருக்க வேண்டும் என்கிறது ஆத்ரேய பிரமானம். இட்ட பணியை ஆற்றுவதே சூத்திரனின் தர்மம் என்கிறது கீதை.


யூதர்களோ போர்களில் மட்டுமன்றி, சந்தைப் பொருட்களைப் போன்று அடிமைகளை விற்கவும் வாங்கவும் அனுமதிக்கிறார்கள். அடிமைகளுக்கென சில விதிமுறைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு, அவை தங்களுடைய வேதமான தவ்ராத்தில் கூறப்பெற்றவை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். ரோமர்களும் அடிமை முறையை ஏற்று, அடிமைகளைத் தம்முடைய சுக போகங்களுக்காகப் பயன்படுத்தினர். பாரசீகர்களும் இதில் சளைத்தவர்கள் அல்லர்.


கிறித்தவ தேவாலயங்களும் அடிமை முறையை அனுமதித்தன. இயேசுக்குக் கீழ்ப்படிவதைப் போன்றே அடிமைகள் தம்முடைய எசமானர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று பௌலுஸ் அறிவித்தார். அடிமைத்துவம் என்பது செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகும் என பத்ரஸ் அறிவுரை கூறினார்.


விடுதலை செய்யும் புதிய நடைமுறை


இஸ்லாம் அறிமுகமானபோது அரபகத்தில் பலவகை அடிமைகள் இருந்தனர். போர்க் கைதிகள், அரபுக் குலங்களுக்கிடையே நடந்த சண்டைகளில் பிடிபட்டவர்கள், சந்தையில் வாங்கப்பட்ட அடிமைகள், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அடிமையானவர்கள் எனப் பலதரப்பட்ட அடிமைகள் இருந்துவந்தனர். இந்நிலையில்தான் இஸ்லாம் வந்தது. எனவே, அடிமைத்துவத்தைப் புதிதாக இஸ்லாம் அறிமுகப்படுத்தவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆனால், அடிமைகளை விடுதலை செய்யும் புதிய நடைமுறையை இஸ்லாம்தான் அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்த அடிமை வகைகளில் போர்க் கைதிகளை மட்டுமே அடிமைகளாக இஸ்லாம் அங்கீகரித்தது. அதுவும் போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்ளவோ, பிணைத் தொகை பெறவோ ஒப்பந்தம் ஏற்படும் வரையில்தான். பகை நாட்டுடன் இத்தகைய சமாதான உடன் படிக்கை ஏற்பட்டுவிட்டால் போர்க் கைதிகள் விடுதலையாகி விடுவார்கள்; அடிமைகளாக நீடிக்கமாட்டார்கள்.


பிணைத் தொகை பெற்றுக்கொண்டு விடுவிப்பதைவிடக் கருணை அடிப்படையில் போர்க் கைதிகளை விடுதலை செய்வதையே இஸ்லாம் மேலாகக் கருதுகிறது.
அதன் பின்னர் கருணை அடிப்படையில், அல்லது ஈட்டுத் தொகை பெற்றுக்கொண்டு அவர்களை விட்டுவிடுங்கள் (47:4)
எனத் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. இவ்வாறு பத்ருப் போர்க் கைதிகளில் சிலரை நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகை பெறாமலேயே விடுவித்தார்கள்.


கறுப்பர்கள் நிலை


அதே நேரத்தில், கி.பி. 599ஆம் ஆண்டு ரோமானியப் பேரரசன் மௌரீஸ் போர்க் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகை பெற்றுக்கொள்ள மறுத்து, அவர்களில் பலரைப் படுகொலை செய்தான். இன்னும் பலரைக் கொத்தடிமைகளாக்கிக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு வேண்டிய உணவு, உடைகளைக்கூட அளிக்காமல் கொடுமை செய்தான்.


ஏன், இன்றும்கூட அமெரிக்காவில் கறுப்பர்கள் அடிமைகளைப் போன்றே நடத்தப்படுகிறார்கள். அதே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்களான அமெரிக்கக் கறுப்பர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவே அங்கு நடத்தப்பட்டுவருகிறார்கள். அமெரிக்க வெள்ளையர்கள் நடத்தும் ஹோட்டல்களிலும் கிளப்களிலும் வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் என்றோ, கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை என்றோ எழுதிவைத்தார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அடிமை முறை ஓழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது எதற்காகத் தெரியுமா?
தொடரும்...

No comments:

Post a Comment