உங்களுடன் நான் மனம்விட்டு... - 15
க
|
ற்றல் மூலம் மனிதன் தன் அறியாமையை அகற்றிக்கொள்கிறான் என்றால், கற்பித்தல் மூலம் பிற மனிதனின் அறியாமையை அகற்றுகிறான். அது சுயநலம் என்றால், இது பொதுநலன். பசி, பட்டினி, பிணி, பீடை, ஏழ்மை, கீழ்மை, அநியாயம், அநாசாரம், மூடநம்பிக்கை,
மூடத்தனம்... என ஒவ்வொரு சவால்களையும் தனித்தனியே
எதிர்கொள்வதைவிட, அறியாமை எனும் சவாலை எதிர்கொண்டு வாகை சூடிவிட்டாலே, மற்றவை தாமாகப் பின்வாங்கிவிடும். அறியாமைதான் எல்லா வீழ்ச்சிக்கும் முதற்புள்ளி.
இந்த மகத்தான பணியைச் செய்பவரே ஆசிரியர், அல்லது ஆசான். இறைத்தூதர்கள், சான்றோர்கள், பெரியார்கள், சீர்திருத்தவாதிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் இப்பணியில் தங்களை
ஏதோ ஒரு வகையில் ஈடுபடுத்திக்கொண்டவர்கள்தான். ஏனெனில், ஆசிரியர் பணி,
வழிகாட்டும் ஒரு தொண்டாகும். சுருங்கக்கூறின், இது தலைமுறை உருவாக்கப் பணியாகும். ஆசிரியர் பணியில் ஈடுபடுவோரின் எண்ணத்தைப் பொறுத்து, இப்பணிக்கு இறைவனிடமும் வரவேற்பு உண்டு; அவன் அளிக்கும் வெகுமதியும்
உண்டு.
இதனாலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறைவன் என்னைக் கற்றுக்கொடுப்பவனாகவே அனுப்பியுள்ளான்” என்று தெரிவித்தார்கள் (முஸ்லிம்).
மற்றொரு
நேரம், ‘‘நன்மைக்கு வழிகாட்டுபவர், அதைச் செய்தவர் போன்றவர் ஆவார்” என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (திர்மிதீ)
ப
|
ள்ளிப் பருவத்திலேயே ஆசிரியர் பணிமீது தீராத காதல் கொண்டிருந்தேன் என முன்பே ஒரு
தொடரில் தெரிவித்திருந்தது நினைவிருக்கும். 1974ஆம் ஆண்டு மத்ரசா கல்வி
முடிந்து விடுமுறையும் வந்தது. ஏதேனும் ஒரு அரபிக் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைக்காதா
என ஏங்கினேன். அதற்காக நான் கடிதம் எழுதாத மத்ரசாவே இல்லை. பின்னர் சில மத்ரசாக்களுக்கு
நேரில் சென்றும் வேலை கேட்டுப் பார்த்தேன். எங்கும் வேலை கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி,
வேலூர் சென்று பாக்கியாத் ஆசிரியர்களிடம்
ஆலோசனை கலந்ததில்,
மரியாக்குரிய கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பந்திலுள்ள ‘தாருல் உலூம்’ மத்ரசா சென்று ‘தவ்ரத்துல் ஹதீஸ்’ (நபிமொழிப் பிரிவு) வகுப்பில் சேர்ந்து ஓராண்டு
கற்று வருமாறு சொன்னார்கள். அதற்காக முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டு தில்லி புறப்பட்டேன்.
அங்கிருந்து தேவ்பந்த். நான் கற்றிருந்த உருதுமொழிதான் இப்பயணத்தில் எனக்கு உதவியது.
நுழைவுத் தேர்வு முடிந்து வகுப்பிலும் சேர்ந்து சுமார் ஒரு மாதம் ஓடியிருக்கும்.
நான் எழுதிய கடிதத்திற்குத் தாயாரிடமிருந்து வந்த பதிலில், ஓதியது போதும்;
ஊருக்குத் திரும்பி வந்துவிடு என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
நீண்ட தொலைவு ஒரு காரணம்; அறிமுகமற்ற ஊர்; உணவுப் பழக்கம் வேறு; மொழி வேறு. இப்படி பல அச்சங்கள் அம்மாவுக்கு!
ஒருவேளை தந்தை இருந்திருந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பார்கள். முன்பே இறந்துபோனதால், நான் ஓராண்டு கல்வியை இழந்துபோனேன். வேறு வழியின்றி ஊர் திரும்பினேன்.
ஊ
|
ரில் ஓய்வில் இருந்த எனக்கு வேலூரிலிருந்து தகவல்! பள்ளபட்டி மக்தூமிய்யா மத்ரசாவிற்கு
ஆசிரியர் தேவை; அங்கு செல்லவும் என்றது தகவல். 1976ஆம் ஆண்டு! மூன்று வகுப்பு
(ஜும்ரா)வரை. இரண்டு ஆசிரியர்கள்! சுமார் 15 மாணவர்கள்; பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள். இவர்களுக்கு அரபி இலக்கணம் மற்றும் இலக்கியப்
பாடங்கள் நடத்திப் புரியவும் வைக்க வேண்டும். சவாலான பணி!
சிரத்தையோடு வகுப்பெடுத்தேன். புரியவைக்கப் பல யுக்திகளைக் கையாண்டேன். பெரும்பாலும்
அரபி மத்ரசாக்களில் பாடம் நடத்தும் முறை என்னவென்றால், அரபி மொழியிலுள்ள பாடநூலை வாசித்து, வார்த்தைக்கு வார்த்தைத்
தமிழில் பொருள் செய்து, பிறகு மொத்தமாக வாக்கியத்திற்குப் பொருள்
கூறி, அடுத்து அதன் கருத்தை எடுத்துச்சொல்லி புரியவைக்க முயல்வார்கள். மாணவன் அரபிச்
சொல்லை உள்வாங்குவானா? சொற்பொருளைப் புரிவானா? மொத்த வரியின் பொருளையும் அதையடுத்து கருத்தையும் மூளையில் ஏற்றுவானா?
இதனால் அப்போதே ஒரு வழியை &அதுவும் ஒருசில ஆசிரியர்கள்
எங்களுக்குக் காட்டிய முறையை-& கையாளத் தொடங்கினேன். அது
இதுதான்: பாடப்புத்தகத்தைத் திறந்தவுடன் அன்றைய பாடத்தின் கருவை, ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் செலவழித்து, எளிய & பேச்சுவழக்கில் & தாய்மொழியில் உதாரணங்களோடு விளக்கிச்
சொல்லிவிடுவேன். தேவையானால் கரும்பலகையில் எழுதிப்போட்டு விளக்கவும் செய்யலாம்! மேட்டர்
புரிந்தபிறகு, வாசகத்தைப் படித்துப் பொருள் கூறும்போது மாணவர்களுக்கு எளிதாகப் புரிந்துவிடும்.
புதிய அரபிச் சொற்கள் இருப்பின், குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்ளப்
பணிக்கலாம்! ஆக, வார்த்தை முந்தியதா? விளக்கம் முந்தியதா? என்பதே கேள்வி! விளக்கத்தை முதலில் சொல்லிவிட்டால், வார்த்தையை அடுத்துப் பார்த்துக்கொள்ளலாம் என்பதே நான் வகுத்துக்கொண்ட வழிமுறை!
தலைமை ஆசிரியராக இருந்த வேலூர் மீரான் அன்சாரி ஹள்ரத் அவர்கள், ‘‘எதற்காக இவ்வளவு அலட்டிக்கொள்கிறீர்கள்? இந்த மாணவர்கள் என்ன பெரிய
ஆசிரியர்கள் ஆகப்போகிறார்களா? அல்லது பேச்சாளர்கள் ஆகப்போகிறார்களா? ஏதோ சுமாராக நடத்திவட்டுப் போங்கள்” என்றார்கள். எனக்கு ஏமாற்றமாகப்
போய்விட்டது. இருந்தாலும், எதையும் திருத்தமாகவும் ஈடுபாட்டோடும் செய்வதே
என் இயல்பு. அதன்படியே பணியைத் தொடர்ந்தேன்.
என் உழைப்பு வீணாகவில்லை. கடின உழைப்பிற்கு & இம்மையிலோ மறுமையிலோ & பலன் இல்லை என்றால், உழைக்க ஆள் இருக்கமாட்டான். உழைப்பில் சலிப்பு ஏற்பட்டால் பிழைப்பு என்னாவது? பத்து பதினைந்து மாணவர்களில் பள்ளபட்டி கே.எம். அஷ்ரப் அலீ என்ற மாணவர் என் உழைப்பின்
பலனாக உருவானார். பின்னாளில் வேலூர் பாக்கியாத்திலும் என்னிடம் பயின்றார். அடுத்து
அதே மக்தூமிய்யா மத்ரசாவில் 12 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், 14 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பையும் வகித்துச் சிறப்பித்தார் மௌலவி, கே.எம். அஷ்ரப் அலீ ஃபாஸில் பாகவி. தமது 52 வயதிலேயே இறந்துவிட்டார்.
இவ்வாறுதான், மௌலவி, எஸ். ரஃபீஉத்தீன் பாகவியும் இதே வயதில் மறைந்துவிட்டார். நல்ல எழுத்தாற்றலும் பேச்சுத்
திறமையும் வாய்த்தவர். இப்படி இளம் வயதில் நம் மாணவர்கள் இறக்கும்போது சொந்தப் பிள்ளைகளே
பிரிந்துவிட்ட உணர்வுதான் ஏற்படுகிறது.
பொ
|
துவாக எந்த மாணவரையும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. பாடப் புத்தகத்தில், தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதில், பேச்சு மற்றும் எழுத்தில்
மாணவர்கள் சிலர் பின்தங்கியிருக்கலாம். ஆனால், வேறு விதமான திறமைகள் அவருக்குள் ஒளிந்திருக்கக்கூடும். அதைக் கொண்டு அவரிடம் அல்லாஹ்
பிற்காலத்தில் வேலை வாங்கக்கூடும். அப்படி பல மாணவர்களை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
எடுத்துக்காட்டுக்குச் சிலரைக் குறிப்பிடுவது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையலாம். இவர்கள்
பாடத்தில் சுமார்தான்; ஆனால், சாதனையில் முன்னுதாரணங்கள்.
கொடுவாயூர் மௌலவி, எஸ்.என். ஜஅஃபர் சாதிக் பாகவி, அவர்களில் ஒருவர். இவர் பட்டம் பெற்றபின் கணினி தொழில்நுட்பத்தைச் சுயமாகக் கற்றுக்கொண்டார்.
படிப்படியாக முன்னேறி, இன்று ‘சமநிலைச் சமுதாயம்’ எனும் பிரபல மாத இதழின் ஆசிரியராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சிறந்த பேச்சாளர்;
கவிஞர்; பாடகர்; பத்திரிகையாளர். முதல் மதிப்பெண் பெறாததால் முதல் இடம் இவருக்கு நழுவிப்போய்விடவில்லை.
மதிப்பெண்ணைக் கொண்டு மதியை மதிப்பிட வேண்டாம்.
இன்னொருவர், தேவதானப்பட்டி மௌலவி, முஹம்மது ஹுசைன் மன்பஈ. இவர் இமாமாகப் பணியாற்றிய
இடங்களில் நற்பெயர் எடுத்தவர்; சமுதாய அறநெறி வாழ்க்கைக்காக
உழைத்தவர்; நல்ல பேச்சாளர். இன்று பெரியகுளம் அருகில் ஒரு பெரிய கலைக்கூடத்தை நிறுவி, இருவழிக் கல்வி முறையை [ஞிuணீறீ ஷிஹ்றீறீணீதீus ஷிஹ்stமீனீ] அளித்துவருகிறார். ‘அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல்
கல்லூரி’ என்பது அவர் தொடங்கிய மத்ரசாவின் பெயர். இப்போது 40 மாணவர்கள் பயில்கிறார்கள்; 5 ஆசிரியர்கள் பயிற்றுவிக்கிறார்கள்.
கல்லூரிக்காகத் தனியிடம் வாங்கி, பள்ளிவாசலுடன் வகுப்பறைகள், மாணவர் விடுதி... என உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இதே பாடத்திட்டத்தில் இன்ஷா
அல்லாஹ் பெண்களுக்கான ஒரு கல்லூரி உருவாக்கும் திட்டமும் அவருக்கு உண்டு.
வத்திராயிருப்பு மௌலவி, கா. அஹ்மத் அலீ பாகவி, பள்ளபட்டி மௌலவி, ஜி.எம். தர்வேஷ் ரஷாதி, சேலம் மௌலவி, அபூதாஹிர் பாகவி, சென்னை முஜீபுர் ரஹ்மான் பாகவி, பரங்கிப்பேட்டை கலீல் பாகவி, இன்னும் என் நினைவுக்கு
வராத பல சாதனையாளர்கள். இவர்களெல்லாம் படிக்கிற காலத்தில் புள்ளிகளாக இல்லாவிட்டாலும்
இன்று சமுதாயத்தில் முக்கியப் புள்ளிகளாக மிளிர்கிறார்கள்; தம் சேவைகளால்.
1977
|
மற்றும் 1978 ஆகிய இரண்டாண்டுகள் அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா மத்ரசாவில் ஆசிரியர் பணியாற்றினேன்.
அதிரை அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்களே அப்போது அதன் முதல்வர். தஞ்சை மாவட்ட
ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவராகவும் இருந்தார்கள். நான் அப்போது சபையின் மாவட்டத் துணைச்
செயலாளர். சபை சார்பாகப் பருவப் பிரசுரங்கள் வெளியிடுவது வழக்கம். பல்வேறு தலைப்புகளில்
அப்பிரசுரங்களை எழுதும் பொறுப்பை தலைவர் என்னிடம் கொடுத்திருந்ததால், அப்போதே என் எழுத்து அச்சில் வெளிவரும் வாய்ப்புக் கிடைத்தது.
அங்கு என்னிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலரது பெயர், ஊர் மறந்துபோயிற்று. இப்படி நிறைய மாணவர்கள் நினைவில் இல்லை. சிலர் நேரில் சந்திக்கும்போது
தங்களை அறிமுகப்படுத்திக்கொள்கையில் நினைவுக்கு வரும்; அப்போதும் நினைவில் வர மறுக்கும் மாணவர்களும் உளர். தொடர்பு இல்லாததே காரணம்! உறவு
மலர தொடர்பு என்ற நீர் பாய்ச்ச வேண்டும். இல்லையேல் உறவு பட்டுப்போகும் என்பது உண்மை.
அதிலும் வேலூர் பாக்கியாத்தில் தமிழக மாணவர்கள் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாணவர்களும் மலேசியா, இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாட்டு மாணவர்களும் கல்வி பயின்றனர். அவர்களில் ஒருசிலரைத்
தவிர மற்ற யாரும் ஞாபகத்தில் இல்லை.
1979 மற்றும் 1980 ஆகிய இரண்டாண்டுகள் திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் ‘மஃக்னமுஸ் ஸஆதா’
அரபி மத்ரசாவில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினேன்.
அது ஒரு கிராமம். சாதாரண எளிய மக்கள். அன்புக்குப் பஞ்சமில்லை. பள்ளிவாசலை ஒட்டியே
மத்ரசா. வசதிகள் இல்லாத தங்கும் விடுதி. வகுப்பறைகளும் அவ்வாறுதான். பள்ளிவாசல் வளாகத்திலும்
பாடங்கள், தேர்வுகள் நடப்பதுண்டு. நான்கைந்து ஆசிரியர்கள்; இருபது & இருபத்தைந்து மாணவர்கள். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
ஐந்து வகுப்புகள் (ஜும்ரா).
இருந்தாலும், ஒரு பெரிய மத்ரசாவிற்கான விதிமுறைகள், வகுப்பு நடத்தும் முறைகள், தேர்வுகள், மாணவர்களுக்கென ஒழுக்கநெறிகள், பேச்சுப் பயிற்சி... என
அம்மத்ரசா களை கட்டியது. நாம் எடுத்த முயற்சிகளுக்கு நிர்வாகம் முழு ஒத்துழைப்புத்
தராவிட்டாலும் தடையாக இல்லாததே பெரிய உதவிதான். உழைப்புக்கேற்ற பலன். மாணவர்கள் பல
வகைகளிலும் தேறி வந்தனர். இவர்களில் பலர் பின்னாளில் வேலூர் பாக்கியாத்தில் சேர்ந்து
பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கு அடுத்த கட்டம்தான், என் வாழ்நாளின் கனவாகவும்
இலட்சியமாகவும் இருந்த ஆசிரியர் பணிகாலம். அதுவே என் முன்னேற்றத்திற்குக் களம் அமைத்துக்
கொடுத்தது. இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போமே!
என் ஆசிரிய தந்தை மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்களின் மோதிரக்குட்டு எனக்கும் கிடைத்தது.
ReplyDelete..........பரங்கிப்பேட்டை கலீல் பாகவி, இன்னும் என் நினைவுக்கு வராத பல சாதனையாளர்கள். இவர்களெல்லாம் படிக்கிற காலத்தில் புள்ளிகளாக இல்லாவிட்டாலும் இன்று சமுதாயத்தில் முக்கியப் புள்ளிகளாக மிளிர்கிறார்கள்; தம் சேவைகளால்.......