Monday, April 05, 2021

தனிமனித உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை

~~~~~~~~~~~~~~~~~~~
தனிமனித உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை
~~~~~~~~~~~~~~~~~~~
தனிமனித உரிமைகளில் வாழ்வாதாரம் , கல்வி, கலாசாரம், கருத்துச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை,  பரைப்புரை , எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமை ஆகியன அடங்கும்.

வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை, அவரவர் உழைப்பு, உத்வேகம், வாய்ப்புகள் முதலான பக்க துணைகளைப் பொறுத்து தரம் வேறுபடலாம். மக்களை ஆளும் அரசுத் துறைகள் அன்றைய காலச் சூழ்நிலைகளுக்கேற்ப குடிமக்களின் வாழ்வாதாரத்திற்குக் கைகொடுக்க வேண்டும்.

கல்வி,சுகாதாரம்,போக்குவரத்து போன்ற பொதுத் துறைகளில் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது மக்களாட்சியின் தலையாய கடமையாகும்.

இதற்கெல்லாம் அடிகோலுவது எதுவென்றால் , குடியுரிமையும் நடமாடும் உரிமையுமதான். இந்த உரிமைக்கே வேட்டுவைக்கும் அரசியல் கட்சிக்கோ, அதன் கூட்டணிக் கட்சிக்கோ வாக்களிப்பது  தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடுவது தவிர வேறென்னவாக இருக்க முடியும்? 

அவ்வாறே, மதச் சுதந்திரம் என்பது, அரசியல் சாசனம் பிரிவு-25 வழங்கியுள்ள வலுவான உரிமையாகும். இதில் கைவைத்து, மதத்தின் சட்டங்களை மிருக பலம் கொண்டு மாற்றி,. ஒரு சமூகத்தின் மதக்கோட்பாட்டைச் சீரழிப்பது எந்த வகை ஜனநாயகம்? இந்த  வெறியர்களுக்கோ , இவர்களின் சாரபுக் கட்சிகளுக்கோ வாக்களிப்பது ஒருவர் தம் சமய நம்பிக்கையைப் புதைப்பதற்குச் சமம் அல்லவா? 

தனியாக மாட்டிக்கொண்ட அப்பாவி ஒருவனை, அவன் பெயரைக் கேட்டு சமயத்தைப் புரிந்துகொண்டு, அவன் ஏற்காத நம்பிக்கையை அவன்மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பதும் மறுத்தால் ஆயுதங்களால் அடித்துத் துவம்சம் செய்வதும் இந்தக் கொடுமைகளை அருகில் இருந்தே கண்டும் மெளனமாக இருக்கும் காவல்துறையைக் கொண்ட அரசு அமைய வாக்களிப்பது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மற்ற மொழிகளை அழிக்கவும் , அவர்கள் விரும்பும் மொழிக்காரர்களுக்கே கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வாய்ப்புகள் அளித்து மற்றவர்களை நிர்க்கதியாக்கும் கட்சி மக்களாட்சி தருமா? இக்கட்சிக்கோ அதன் நட்புக் கட்சிக்கோ வாக்களிப்பது நம் அடுத்த தலைமுறையை நடுத்தெருவில் நிறுத்திவிடாதா?

யோசிக்க இனி நேரமில்லை.இப்போதே முடிவெடுங்கள். பாசிச சக்திகளைத் தோற்கடியுங்கள். ஜனநாயக, மனித மாண்புகளை மதிக்கின்ற, வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற, இந்தியர்கள் யாவரையும் ஒன்றாக நடத்துகின்ற, சுருஙகச் சொன்னால் மனிதாபிமானமிக்க கட்சியை, கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள்.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று சொல்லும் பூத் அதிகாரி பேச்சைக் கேட்டு திரும்பிவிடாதீர்கள். உங்கள் ஐடிகளைக் கையோடு கொண்டு போங்கள். காட்டுங்கள். வாதாடி உங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டிவிட்டு வாருங்கள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புடன் உங்கள்
கான் பாகவி

No comments:

Post a Comment