Thursday, July 20, 2023
Saturday, July 09, 2022
Tuesday, May 10, 2022
இலங்கை அடித்துள்ள
எச்சரிக்கை மணி!
~~~~~~~~~~~~~~~~
இலங்கை சந்தித்துவரும் மிக மோசமான நிலை, ஒற்றைக் குடும்பம், ஒற்றை மொழி, ஒற்றை மதம் என்ற ஒவ்வாத ஆட்சி முறைக்கு விழுந்த சரியான சாட்டையடி என்பதுதான் எதார்த்தம்.
அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய ஓர் அரசாங்கம், குறிப்பிட்ட மொழி, மதம், கலாசாரத்திற்குக் கொடி பிடித்தால், இப்படித்தான் நாடு குட்டிச்சுவராகப் போகும் என்பதே வரலாறு.
மற்ற மக்களின் ஆதரவைப் பெறாமல், ஒற்றை மக்களை வைத்துக்கொண்டு, அராஜக ஆட்சி நடத்தும்போது, பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, ஒருநாள் நாடே முடங்கிப் போய்விடும்; அப்போது சொந்த மக்களும் அரசுக்கு எதிரிகளாக மாறி, தெருவில் போராடத் தொடங்கிவிடுவார்கள் என்பதற்குச் சரியான சான்றுதான் இலங்கையின் அவலநிலை.
நாட்டின் முன்னேற்ற வழிகளை மறந்துவிட்டு, சாதி, சமயம், சங்கம், பாஷை...என்று பிளவு சக்திகளைத் தூக்கி நிறுத்த அரசு முனையும்போது யாரும் கைகொடுக்கமாட்டார்கள்.நாடு காடாக மாறும்; மக்கள் மாக்களாக மாறுவர்; ஆட்சியாளர்கள் ஆளுக்கொரு பக்கம் அடங்கிப்போவார்கள்.
இது இலங்கைக்கு மட்டுமல்ல; வல்லரசுகளுக்கும் வலதுசாரிகளுக்கும் பொருந்தும்.
Wednesday, May 04, 2022
Monday, May 02, 2022
Thursday, March 31, 2022
Saturday, March 05, 2022
அதிகரித்துவரும் காதுகேளாதோர் எண்ணிக்கை
அதிகரித்துவரும் காதுகேளாதோர் எண்ணிக்கை
~~~~~~~~~~~~~~~~~~
உலக அளவில் காதுகேளாதோர் 46.6 கோடி பேர் உள்ளனர்.
இந்திய அளவில் 6.3 கோடி பேரும் தமிழகத்தில் 50 லட்சம் பேரும் காதுகேளாதோர் உள்ளனர்.
பொழுதுபோக்கிற்காக அதிகப்படியான ஒலியை நீண்ட நேரம் கேட்பதினால் கேட்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இதைக் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
- தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன்.
Monday, February 28, 2022
Saturday, February 19, 2022
சென்னை மாநகராட்சித்
சென்னை மாநகராட்சித்
தேர்தலில் வாக்களித்தோம்
*******************************
சென்னை மாநகராட்சி வார்டு எண் 115இல் குடும்பத்துடன் பிரச்சினை ஏதுமின்றி குடும்ப சகிதம் சுமுகமாக வாக்களித்தோம்.
காலையிலேயே சென்றுவிட்டதால் நெரிசல் இல்லை. கூட்டம் குறைவாகவே இருந்தது. பரபரப்பு இல்லை. வாக்காளர்களிடம் ஆர்வமும் காணப்படவில்லை.
வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் யாரையும் வெளியே காண முடியவில்லை. அதிகாரிகள் சிலர் மட்டுமே பூத்திற்கு வெளியே காணப்பட்டனர்.சொல்லப்போனால் இந்த அமைதியான சூழல்தான் தேவை.
பார்ப்போம்! தேர்தல் முடிவுகளை. இனி இவர்கள் கூடி மேயர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மறைமுகமாக
தேர்ந்தெடுப்பர். இந்தத் தேர்வும் சுமுகமாக அமையட்டும்!
பிறகு ஏன் சில சிற்றூர்களில் பிரசாரத்தின் போது கைகலப்பும் சலசலப்பும் ஏற்பட்டன?என்று தெரியவில்லை.
எப்படியாயினும், வெல்வோர் யாராக இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் வார்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும், யாரிடமும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் கடமை ஆற்ற வேண்டும் என எதிர்பார்ப்போம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி
சென்னை மாநகராட்சித்
தேர்தலில் வாக்களித்தோம்
*******************************
சென்னை மாநகராட்சி வார்டு எண் 115இல் குடும்பத்துடன் பிரச்சினை ஏதுமின்றி குடும்ப சகிதம் சுமுகமாக வாக்களித்தோம்.
காலையிலேயே சென்றுவிட்டதால் நெரிசல் இல்லை. கூட்டம் குறைவாகவே இருந்தது. பரபரப்பு இல்லை. வாக்காளர்களிடம் ஆர்வமும் காணப்படவில்லை.
வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் யாரையும் வெளியே காண முடியவில்லை. அதிகாரிகள் சிலர் மட்டுமே பூத்திற்கு வெளியே காணப்பட்டனர்.சொல்லப்போனால் இந்த அமைதியான சூழல்தான் தேவை.
பார்ப்போம்! தேர்தல் முடிவுகளை. இனி இவர்கள் கூடி மேயர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மறைமுகமாக
தேர்ந்தெடுப்பர். இந்தத் தேர்வும் சுமுகமாக அமையட்டும்!
பிறகு ஏன் சில சிற்றூர்களில் பிரசாரத்தின் போது கைகலப்பும் சலசலப்பும் ஏற்பட்டன?என்று தெரியவில்லை.
எப்படியாயினும், வெல்வோர் யாராக இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் வார்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும், யாரிடமும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் கடமை ஆற்ற வேண்டும் என எதிர்பார்ப்போம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி
Friday, February 11, 2022
இன்றைய ஜும்ஆ உரை
யூனிடி பள்ளிக்கூடப் பள்ளிவாசலில்-
கான் பாகவி
~~~~~~~~~~~~~~~~~~~
சென்னை கோட்டூர்புரம் யூனிடி பள்ளிக்கூடம் இன்று -11.02.22 வெள்ளிக்கிழமை சென்றிருந்தோம். பள்ளியின் அரபித் துறை தலைவர் உஸ்தாத் ஷமீம் அவர்களின் அழைப்பை ஏற்று நான், மொழிபெயர்ப்பாளர் அப்துல்லாஹ் பாகவி,நூல் டிவமைப்பாளர் ஹைதர் அலி ஆகியோர் சென்றோம். அங்கு திரளாகக் கூடியிருந்த பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, இடைவெளிவிட்டு அணியணியாக அமர்ந்திருந்த காட்சியே பார்க்க இதமாக இருந்தது.
நான்தான் ஜுமுஆ உரையாற்றினேன்.உரையைக் கவனமாகக் கேட்டனர். இனிய குரலில் உஸ்தாத் ஒருவர் தொழவைத்தார்.
பிறகு பள்ளி முதல்வர் ,அரபித் துறை ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடந்தது. அலிஃப் , பா வில் தொடங்கி தஜ்வீத், தர்த்தீல், தஹ்ஃபீழ் என ஒவ்வொரு செகஸனைப் பற்றியும் உஸ்தாத்கள் ஷமீம்,தர்வேஷ் ஹசனீ ஆகியோர் விளக்கிவந்தனர்.
அடுத்து அரபி மொழி பாடங்கள் பற்றிப் பேசலயினர். ஆரம்ப வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரைக்கும் உஸ்தாத் ஷமீம் குழுவினர் தயாரித்துள்ள பாடப்புத்தகங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை.
அரபியை வாசிக்க, எழுத கற்பிக்கும் நூல் முதல், இலக்கணம், இலக்கணப்
பாடங்கள், பயிற்சிகள் முதலான அனைத்தும் நவீன/தற்கால பயன்பாட்டிற்கான அரபியில் வரையப்பட்டிருப்பதுடன்,. மார்க்க நம்பிக்கை, வழிபாடு, வரலாறு, ஒழுக்கம், பண்பாடு ஆகிய பயன்மிக்க விவரங்களைக் கொண்டவையாக இருப்பது அற்புதத்திலும் அற்புதம்.
இத்தனைக்கும் பள்ளிப் பாடத்திட்டம் CBSE சிஸ்டம் என்பது குறிப்பிடத்தக்கது
ஆக, கல்வி, மொழிப் பயிற்சி,
நல்லொழுக்கம், மார்க்க வழிகாட்டல்...என் எல்லாம் ஒன்றினைந்த முன்மாதிரியான பள்ளியாக அது விளங்குவதைக் கண்டறிந்து விடைபெற்றோம்.
அரபி மொழியியல் பாடங்களை நடத்திவரும் பள்ளிகள் சென்னை யூனிடி பள்ளியின் பாடப்புத்தகங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்துப் பயனடைய வேண்டும் என்பது எமது அன்பான வேண்டுகோள் ஆகும். வஸ்ஸலாம்.
Friday, February 04, 2022
இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய அறிஞர்பேராசிரியர்.#முஹம்மது_கான் பாகவி.(بارك الله في عمره)
இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய அறிஞர்
பேராசிரியர்.
#முஹம்மது_கான் பாகவி.(بارك الله في عمره)
*************************
தமிழகத்தில் இன்று மிகச் சிறந்த பல மார்க்க அறிஞர்கள் சத்தமில்லாமல் சமுதாய மேம்பாட்டிற்காக சேவை செய்து வருகிறார்கள்.
அவர்களை இன்றைய இளந்தலைமுறையினர் அறிந்து அவர்களின் அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் நோக்கோடு இங்கு ஒரு அறிஞரின் சேவைகளை நினைவுகூறுகிறேன்.
لكل فن رجال
#ஒவ்வொரு துறையிலும் சில நிபுணர்கள் இருப்பார்கள்" என்கிறது அரபு பழமொழி.
#அல்லாஹ், தான் விரும்புபவர்களுக்கு நுண்ணறிவை வழங்குகிறான்" என்கிறது குர்ஆன்.
அத்தகைய நிபுணத்துவமும் நுண்ணறிவும் வாய்க்கப் பெற்ற மார்க்க ஆளுமை தான் #கான்பாகவி என அழைக்கப்படும் 'பேராசிரியர் #அப்ஃஸலுல்உலமா #முஹம்மது_கான்_ #பாஸில்_பாகவி அவர்கள்.
கற்றல்,கற்பித்தல்,
பேச்சு,எழுத்து, உலகநடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் நவீன அரபி மொழியில் புலமை என பல துறைகளில் இளமையிலேயே திறன் படைத்தவர்.
பெரும் மார்க்க ஜாம்பவான்கள் ஆசான்களாக பணியாற்றிய,ஆற்றுகின்ற தாய் மதரஸாவான பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தில் தனது இருபத்து நான்காம் வயதிலேயே பேராசிரியராக இணைந்தார்.
பேராசிரியராக தனது பணியைச் சிறப்பாக செய்ததுடன் எழுத்துத் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
எனக்கு கான் பாகவி அவர்களை முதலில் அறிமுகப் படுத்தியது #தினமணி நாளிதழ் என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.
அக்காலத்தில் தமிழ் நாளிதழ்களில்
#பாமர மக்கள் வாசிப்பது #தினத்தந்தி, #படித்தவர்கள் #வாசிப்பது #தினமணி என்பார்கள்.
பல லட்சம் வாசகர்களைக் கொண்ட தினமணியின் ஆசிரியராக ஏ.என்.எஸ்.என அழைக்கப்பட்ட ஏ.என்.சிவராமன் அவர்கள் இருந்தார்.
அவரின் தலையங்கமும் உலக நடப்புகளைப் பற்றிய அவரின் கட்டுரைகளும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கும். தினமணியின் சிறுவயதிலிருந்தே தீவிர ரசிகன் நான்.
அதில் வரும் வாசகர் கடிதமும் மக்கள் விரும்பி வாசிக்கும் வகையில் சிறப்பான கடிதங்களே வெளியாகும்.
அதில் அரபுக்கல்லூரி பேராசிரியர் என்ற அடையாளத்துடன் கான் பாகவி அவர்கள் ஆசிரியர் ஏ.என்.எஸ் அவர்களின் கட்டுரைகளை விமர்சித்து எழுதும் கடிதத்திற்கு ஆசிரியர் முன்னுரிமை கொடுப்பார்
சிலநேரங்களில் 'பாகவி'யாரின் கடிதத்தைத் தனியாக கட்டம் கட்டி வெளியிடுவார்.
ஆலிம் களுக்கு பிழையின்றி நல்ல தமிழில் பேசவோ எழுதவோ வராது எனச் சொல்லப் பட்ட கால கட்டத்தில் எளிய நடையில் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில்
நல்ல விஷய ஞானத்துடன் எழுதும் ஆற்றல் படைத்தவராக இருந்தார்.
எழுத்துத் துறையைப் பொறுத்தவரையில் 1977 ஆம் ஆண்டிலேயே இவரது முதலாவது எழுத்து
அச்சிலேறிவிட்டது. தினமணி தினகரன், மாலை முரசு போன்ற பிரபல நாளேடுகளில் இவரது
கட்டுரைகள், கடிதங்கள் வெளிவந்துள்ளன, மணிச்சுடர், மறுமலர்ச்சி, சமரசம், முஸ்லிம் முரசு, ரஹ்மத்
ஜமாஅத்துல் உலமா, சிராஜ். இஸ்மி, குர்ஆனின் குரல், சமநிலைச் சமுதாயம் உள்ளிட்ட சமுதாய
ஏடுகளில் இவருடைய தொடர் கட்டுரைகளும் தனிக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. மலேசியா
நம்பிக்கை மாத இதழிலும் இவர் எழுதியுள்ளார்.
பேராசிரியராகப் பணியாற்றிய கால கட்டத்தில்
மாணவர்களுக்குப் பாடநூல்களைப் போதிப்பதோடல்லாமல் பேச்சு எழுத்து இலக்கியம் ஆகிய
துறைகளிலும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டிவந்தார் உலக நடப்புகள், நவீன அரபி, பத்திரிகைத் துறை
ஆகியவற்றிலும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பிவந்தார். மாணவர்களிடையே சுயமரியாதை
தன்னம்பிக்கைப் போக்கை ஊக்குவித்தார். இதனாலேயே இன்றும் அவரிடம் கற்ற மாணவர்கள் பலர்
அவர் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சுயமரியாதை யும் பிறரிடம் கையேந்தக் கூடாது என்ற கொள்கையும் கொண்டவர்.
முகஸ்துதி செய்வது அவருக்குப் பிடிக்காது.
அதே நேரத்தில் எவ்வித பந்தா இல்லாமல் அனைவரிடமும் இனிமையாக பழகுபவர்
சிதம்பரத்தில் செல்வந்தர் ஒருவர் நடத்தும் மதரஸா ஆண்டுவிழா விற்கு அதன் செயலாளராக இருந்த நான் சிறப்பு விருந்தினராக கான் பாகவி அவர்களை அழைத்திருந்தேன்.
விழா மேடையில் உரையாற்றியவர்கள், பெரும்பாலானோர்
அந்த செல்வந்தரை வானளாவ புகழ்ந்தார்கள்.
அச் செல்வந்தர் அருகே அமர்ந்திருந்த பாகவி அவர்கள் சற்று தள்ளி அமைந்திருந்த என்னை முக சுளிப்பு டன் பார்த்தார்.
தனது உரையில் சபை நாகரீகம் கருதி முகஸ்துதி கூடாது என்பதை நாசூக்காக சுட்டிக் காட்டினர்.
விழா முடிந்ததும் என்னிடம் "மவ்லானா! இது போன்ற தனிநபர் புகழ் பாடும் விழாக்களுக்கு என்னை அழைக்காதீங்க" என்றார்.
யார் தவறு செய்தாலும் முகத்திற்கு நேராக அதை சுட்டிக் காட்டுபவர்.
அதனால் சில இழப்புகளையும் சந்தித்தவர்.
அதே நேரத்தில் பாரட்டுக்குரியவர்களை மனந் திறந்து பாராட்டி ஊக்குவிப்பவர்.
மொழிபெயர்ப்புத் துறையில் #கான்_பாகவி
சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஏழு மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழுவினர் மூலம் குர்ஆன், ஹதீஸ் கருவூலங்களை தமிழாக்கப் பணியை மேற்கொண்டது.
வேலூரில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே மேற்கண்ட பணியில் கான் பாகவி மேலாய்வாளராக இருந்தார்.
ஸஹீஹூல் புகாரியின் மூன்று பாகங்கள் வெளியான நிலையில் ரஹ்மத் அறக்கட்டளையினரின் நீண்ட நாள் தொடர் வேண்டுகோளை ஏற்று தாம் நீண்ட நெடுங்காலம் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் பணியை பிரிய மனமின்றி பெரும் தயக்கத்துடன் ராஜினாமா செய்து விட்டு திருத்தூதரின் பொன்மொழிகளைப் பரப்ப வேண்டும் எனும் தூய எண்ணத்துடன் மொழிபெயர்பாளர் கள் குழுவின தலைவராக இணைந்தார்.
மவ்லானா கான் பாகவி அவர்கள் முழு நேர மேலாய்வளராகப் பொறுப்பேற்ற பின் ஹதீஸ் களை அரபிலிருந்து தமிழில் மொழிமாற்றம் மட்டும் செய்யாமல் நபிமொழி க்கான விளக்கத்தையும் சுருக்கமாக விளக்கும் அடிக்குறிப்பு என்ற நடைமுறையை உருவாக்கினார். மூல மொழியின் அடிப்படை கருத்துமாறாமல் சிக்கலான வாக்கிய அமைப்பின்றி எளிய தமிழ் நடையில் தமிழாக்கம் செய்வது தான் பாகவி அவர்களின் குழுவினரின் தனிச்சிறப்பு.
இவரது
மேலாய்வில் இதுவரை ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் ஏழு பாகங்களும் ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம்
நான்கு பாகங்களும் தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் பத்து பாகங்களும் ஜாமிஉத் திர்மித் தமிழாக்கம்
மூன்று பாகங்களும் வெளிவந்துள்ளன.
தற்போது ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷனில் முஸ்னது
அஹ்மத் தமிழாக்க மேலாய்வாளராக பணியாற்றிவருகிறார்
இவருடைய குழுவில் பாகவிஅவர்களுடன் இருபதாண்டுகளுக்கு மேலாக இணைந்து பணியாற்றிவரும் மெளலவி,ஹாபிஃழ்
#அப்ஃஸலுல்உலமா
சா.யூசுப் சித்தீக் மிஸ்பாஹி.M.A.M.phill அவர்களும்
மெளலவி,ஹாபிழ்
#அப்ஃஸலுல்உலமா
சா.அப்துல்லாஹ் பாகவிM.A.,M.P.hill அவர்களும்
இணைந்து பணியாற்றி வருகிறார்கள்
இதுவரை பாகவி அவர்கள் ஆற்றிவந்த பணிகளில் மிகப் பெரிய பணி முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் நூல் தமிழாக்கப் பணியாகும்.
ஏனென்றால் முஸ்னத்அஹ்மத் மூலமொழியான அரபி மொழியிலேயே 12 பாகங்களைக் கொண்டது
14 அத்தியாயங்கள்,
1306 பாடங்கள்,
26363 நபிமொழிகள் இடம் பெற்றுள்ள பெருநூல்.
இதுவரை மூன்று பாகங்கள் சிறந்த அடிக்குறிப்புகளுடன் வெளியீடப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமின்றி 12க்கும் மேற்பட்ட பல தலைப்புகளில் ஆய்வு நூல்களை பாகவி அவர்கள் எழுதியுள்ளார்.
1 ஹினால் - மாத இதழ் (1986 - 1988)
2 மனாருல் ஹுதா - மாத இதழ் (1993 - 1999)
ஆசிரியராக பத்திரிக்கை துறையிலும் பயணித்திருக்கிறார்.
பல்வேறு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்களில் இவர் உரை
நிகழ்த்தியுள்ளார். சென்னையில் பல பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரை ஆற்றிவருகிறார். 1976 முதல்
நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்
இவரது மார்க்க உரைகள், கேள்வி - பதில்கள், பேட்டிகள் சன் டி.வி. ஜெயா டிவி விஜய் டி.வி,
ராஜ் டிவி தமிழன் டிவி, வின் டிவி ஆகிய தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி யுள்ளன.
லண்டன் தீபம் தொலைக்காட்சியில் கடந்த 2002 பிப்ரவரி முதல் இவரது உரைகள் ஒளிபரப்பாயின்
700-க்கும் மேற்பட்ட தொடர்கள் வந்துவிட்டன, தூர்தர்ஷன் பொதிகையிலும் இவரது உரை
இடம் பெற்றிருக்கிறது.
வெளிநாடு பயணங்கள்
1, 1991 அபுதாபி துபாய் நாடுகளிலிருந்து வந்த அழைப்பின் பேரில் மார்க்கச் சொற்பொழிவு
2 1996 சிங்கப்பூர் ஷரீஅத் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்,
3 1994 சிங்கப்பூர் நபிமொழித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்பு
4 2000 சிங்கப்பூர் திருவிதாங்கோடு முஸ்லிம் யூனியன் (TMU) கூட்டங்களில் பங்கேற்பு
5. சவூதி 6 குவைத் 7. மலேஷியா 8. இலங்கை 9. பாங்காக்
மவ்லானா கான் பாகவி அவர்களின் சேவையைப் பாராட்டி
#1993இல் அய்யம்பேட்டையில் நடந்த திருக்குர் ஆன் மாநாட்டில் ரூ. 2500 பொற்கிழியும்,
எழுத்துலகின் இளைய தலைமுறை கேடயமும் இவருக்கு வழங்கப்பட்டன.
இப்படி மௌலானா கான் பாகவி அவர்களின் சேவைப் பயணம் எவ்வித இவ்வுலக எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி த்தொடர்கிறது. வாழ்க்கையில் சாதிக்க
வேண்டும் என்ற வேகம் பாகவியிடம் தெரிகிறது. தாம் மட்டுமன்றி தம் சமுதாயமும் ஆலிம்களும்
முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் பளிச்சிடுகிறது.
கல்வி பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டும்
என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டில் இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் என்ற அமைப்பை மற்ற
ஆலிம்களுடன் சேர்ந்து ஆரம்பித்து சமூக சேவை ஆற்றிவந்தார்.
தற்போதும் பல கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.
அவரது பயணம் தொடர, இலட்சியங்கள் வெற்றிபெற அவரால் சமுதாயம் தொடர்ந்து பயன்பெற
வாழ்த்தி துஆச் செய்வோம்.
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி
Saturday, January 29, 2022
பன்முக வித்தகர் டிஜேஎம் ரியாஜி மறைவு
பன்முக வித்தகர் டிஜேஎம் ரியாஜி மறைவு
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
திருநெல்வேலி பேட்டை என்றவுடன் எங்களுக்கெல்லாம் நினைவில் வருவது மெளலானா TJm சலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் தான்.
பேட்டை மத்ரஸா வில் கல்வி கற்று பட்டம் வாங்கியதுடன் அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனியாக ஒரு மத்ரஸா தொடங்கி நடத்தியதுடன், எழுத்து, பேச்சு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கிய மூத்த மார்க்க அறிஞர் தான் அவர்.
மாணவர்களுக்கு மட்டுமன்றி, இளம் ஆலிம்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டி, ஊக்கத்தோடு செயல்பட வழிகாட்டிய பெருமகனார் இன்று மறைந்துவிட்டார்.
இத்தகைய தகுதிவாய்ந்த பெரியவர்கள் ஒவ்வொருவராக விடைபெறும் போதெல்லாம், எதிர்காலம் பற்றிய அச்சம் நம்மைத் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை.
அன்னாரின் மறுமை வாழ்வு வசந்தமிக்கதாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக எனப் பிரார்த்திப்போம்.
அத்துடன் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைச் சிரமேற்கொண்டு சீராகவும் சிறப்பாகவும் செயல்படுகின்ற நல்வாய்ப்பை நமக்கெல்லாம் இறைவன் வழங்குவானாக! எனவும் பிரார்த்திப்போம்.
அல்லாஹ் கருணை புரிவானாக!
அன்புடன் உங்கள்
கான் பாகவி
28.01.2022
Tuesday, January 11, 2022
இன்றைய தினமணியில் (10.01.22) வெளிவந்துள்ள செய்தி
இன்றைய தினமணியில் (10.01.22) வெளிவந்துள்ள செய்தியால் எந்த முஸ்லிமும் அதிர்ச்சி அடையப் போவதில்லை. காரணம், 15 நூற்றாண்டு நெடிய வரலாற்றில் இதுபோன்ற எத்தனையோ வித்தைகளை முஸ்லிம்கள் கண்டுள்ளனர். ஏனெனில், இஸ்லாத்தில் இவர்கள் இருந்ததாகக் கருதப்படும் நாட்களிலும் இவர்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தோர் அல்லர்.
இவர்கள் அமைப்பு தொடங்குவதற்குச் சொல்லும் காரணம்தான் வேடிக்கையானது. ஆம்! முஸ்லிம்களிடமிருந்து இன்னல்களைச் சந்திக்கிறார்களாம்.அவை அளவுக்கு அதிகமாக உள்ளதாம்.உடலளவிலும் மனத்தளவிலும் அச்சுறுத்தப்படுகிறார்களாம்! இதையெல்லாம் விட, சமூகத்தில் வாழ்வதற்கான அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகறார்களாம்!
இது உண்மையாகவே இருந்தாலும், இஸ்லாத்திலிருந்து வெளியோறிவிட்டு, முஸ்லிம்களின் அடையாளமான இஸ்லாமியப் பெயர்களிலேயே இருந்துகொண்டு, சமூகத்தோடு உறவாடிக்கொண்டே இருந்தால், பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிலைகளில் , நீங்கள் முஸ்லிம்கள் என்று நம்பி மற்றவர்கள் ஏமாந்து போவார்களா இல்லையா?
ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியது , பெயர் உட்பட முஸ்லிம் அடையாளங்களைத் துறந்து விடுங்கள். சமயமே வேண்டாம் என்றான பிறகு சமய அடையாளம் மட்டும் எதற்கு?
அவ்வாறு மட்டும் நீங்கள் செய்துவிட்டால் , உங்களை யாரும் சீண்டமாட்டார்கள்; சீந்தவும்மாட்டார்கள்.
Thursday, January 06, 2022
மூத்த மார்க்க அறிஞர்கள் தலைமுறை விடைபெற்றது
மூத்த மார்க்க அறிஞர்கள்
தலைமுறை விடைபெற்றது
~~~~~~~~~~~~~~~~~~~~
2022 ஜனவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை வேளையில் , பிரபல மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலானா பி.எஸ்.பி. ஸைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் இறந்துவிட்டார்கள்.
சென்னையில் அன்னாரின் புதல்வர் மெளலவி பரகத் அலி பாகவி இல்லத்தில் அன்னாரது உடலைப் பார்த்தபோது ஏனோ தெரியவில்லை; தேம்பித்தேம்பி அழுதேன். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான பிஎஸ்பி ஹழள்ரத் அவர்களிடம் பயின்ற பல்லாயிரம் மாணவர்களில் இந்த எளியோனும் ஒருவன்.
கல்லூரியில் நான் கற்றபோதும் சரி; அதே கல்லூரியில் 18 ஆண்டுகள் ஆசிரியராக நான் பணியாற்றிய போதும் சரி! என்மீது தனி அக்கறை காட்டிய பெருமகனார் அவர். குறிப்பாக பேச்சுத் துறையில் எனது தயக்கத்தைப் போக்கி ஊக்கமளித்து முன்னுக்கு வர ஊக்குவித்த ஆசிரியர் தந்தை அவர்.
அவ்வாறே, எழுத்துத் துறையில் என்னை ஊக்குவித்துச் சிறந்த சில வழிகாட்டுதல்களை வழங்கிய பயிற்சியாளர் அவர். சுருஙகக்கூறின் அக்கறையுள்ள ஒரு தந்தையின் இடத்தை வகித்தவர் என்பதாலோ என்னவோ அறியாமல் வந்தது கண்ணீர்.
ஆக, பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு...எனப் பல்துறை வழிகாட்டுதல்களை வழங்கிய வள்ளல் மறைந்துவிட்டார் என்பேன்.
இப்போது என்னவென்றால், தமிழகத்தில் வாழ்ந்த மூத்த தலைமுறை மார்க்க அறிஞர்கள் வரிசை முற்றுப்பெற்றுவிட்டதோ என்ற அச்சம் என் போன்றோரை வாட்டுகிறது.
ஆம்! எது குறித்துக் கேட்டாலும் விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. அதுமட்டுமன்றி, நாலு எழுத்து கற்றவுடனே எல்லாம் அறிந்துவிட்டோம் எனும் மனப்பான்மை இன்று அதிகமாகவே காணப்படுகிறது.ஆனால், அந்த நிறைகுடங்கள் எப்போதும் ததும்பியதில்லை.
மறைந்த மேதைகளின் மறுமை வாழ்வு செழிக்க வல்லமையும் மாண்புமிக்க இறைவன் அருள் புரிவானாக எனப் பிரார்த்திப்போம். அவர்களின் அறிவாற்றல், அடக்கம், எளிமை, புகழ் விரும்பாமை, சமூக அக்கறை, இறையச்சம் முதலான உயர் தன்மைகளை நமக்கும் அருள அல்லாஹ்வைப் பணிந்து வேண்டுவோம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி
06.01.2022
Thursday, December 23, 2021
18இல் வளையாதது 21இல் வளையப்போகிறதா?
18இல் வளையாதது
21இல் வளையப்போகிறதா?
~~~~~~~~~~~~~~~~~~~
பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது.
சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இவர்கள் மறைக்கப்பார்க்கிறார்கள்.
பருவமடைவதில் தொடங்கி, பாலியல் இச்சை, குழந்தைப்பேறு, நோய் நொடிகள்,உடலமைப்பு, குழந்தை வளர்ப்பு, ஆயுள் காலம்...என ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்- பெண் வேறுபாடு என்பதை இவர்களால் மறுக்க முடியுமா?
பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கொடுமைகளுக்கு இலக்காகி வரும் பெண்களை கல்லூரிப் பருவம் வரை இழுத்து , இன்னும் மூன்றாண்டுகளுக்குக் கொடுமைகளை அனுபவியுங்கள் என்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் பாலின சமுத்துவமா?
ஆண்களுக்குக் கருப்பை இல்லை. புகுந்து விளையாடுகிறார்கள். பெண்ணோ என்னதான் தடுப்புச் சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கருக்கலைப்பு வரை போகிறதே எப்படி?
பாலின சமத்துவம் பேசி எல்லா அரங்குகளுக்கும் மகளிரை இழுத்துவந்து விட்ட இந்த அநாகரிக உலகில், ஆண்களின் வக்கிரப் புத்திக்கு மேலும் கால அவகாசம் தரவா? இந்த ஏற்பாடு?
படிப்பு, வேலைவாய்ப்பு, சுயமுன்னேற்றம் என்றெல்லாம் கதைகட்டிவிட்டு மங்கையரின் மானமிகு வாழ்க்கைக்கு வேட்டுவைப்பது எந்தவகை தத்துவம்?
ஒரு பெண்ணின் குடும்பச் சூழ்நிலை, வரன் தாமதம், உடல் நிலைப் பாதிப்பு போன்ற நியாயமான காரணங்கள் இருந்து, தாமே முன்வந்து 21 என்ன? 31இல் திருமணம் செய்துகொண்டால் அஃது அவளது உரிமை. அதைவிடுத்து, எல்லாம் சாதகமாக இருக்கும்போது ஒரு பெண் 18இல் திருமணம் செய்ய விரும்பினால் அதை எப்படி சட்டம் போட்டுத் தடுக்கலாம்?
இல்லை. முன்னேற்றம், பக்குவம், வளர்ச்சி...என நீங்கள் காரணத்தை அடிக்கினால் ,18இல் வளையாதது 21இல் வளையப்போகிறதா?
இறைவனே!காப்பாற்று எம் இளவரசிகளை.
வேறு என்ன சொல்ல?
Saturday, November 13, 2021
இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++
இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++
தமிழக ஆலிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். இஸ்லாமியப் பேரறிஞர். நபிமொழி கலை விற்பன்னர். சிறந்த பேராசிரியர்; பேச்சாளர். சமூக அக்கறையாளர் ,,,, எனப் பன்முக வித்தகர்.
தனிப்பட்ட முறையில் என்மீது பாசமும் பரிவும் கொண்ட மூத்த மகான்.
அன்னாருக்காகப் பிரார்த்திப்போம்..
اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين. اللهم اغسله بالماء والثلج و البرد ونق ذنوبه كما ينقى الثوب الأبيض من الدنس.
Thursday, October 28, 2021
பொறியியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~
பொறியியல் பட்டதாரிகளின்
பரிதாப நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்நாட்டில் 2016-17இல் கல்லூரிகளில் 1,85,000ஆக இருந்த மொத்த இடங்கள்,நடப்புக் கல்வியாண்டில்1,51,870 இடங்களாகக் குறைந்துள்ளன. அதாவது56,801 இடங்கள் காலியாக உள்ளன.கல்லூரிகளின் எண்ணிக்கையும் 525இலிருந்து 440ஆகக் குறைந்து போனது.
இதற்கு அடிப்படைக் காரணம், பொறியியல் படிப்புகளால் வேலைவாய்பிற்கு உத்தரவாதமோ உறுதியோ அளிக்க முடியாததுதான்.ஒன்றிய அரசின் மனிதவளத் துறை வெளியிட்ட 2019 அறிக்கையில், 38.52 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதாகக் குறிப்பிடுகிறது.
ஆனால்,ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் எனும் வேலை வாய்ப்பு கணக்கெடுப்பு நிறுவனம்,2019இல் 80% பொறியாளர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர் என மதிப்பிட்டுள்ளது.
இதனால் கிடைக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அப்பட்டதாரிகள் ஆளாகியுள்ளனர்.இதனால் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உருவாகிவருகிறது.
( இந்து தமிழ்-27.10.2021)
Monday, October 25, 2021
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி- ஒரு சிறந்த முன்னோடி
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் எனும் இறைமார்க்கம் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. இதற்கு வரலாற்றுப் பூர்வமான தரவுகள் உண்டு.
இக்காலகட்டத்தில், இங்கே தமிழகத்தில் இஸ்லாமிய மேதைகள், சட்ட அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் முஃப்திகள் எனப் பல்துறை அறிஞர்கள் இருந்துள்ளனர்.
ஆனால், கடந்த 13 நூற்றாண்டுகளாக அரபி மொழியில் தமிழக முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓத மட்டுமே செய்துள்ளனர். அதன் பொருள், கருத்து, விளக்கம் ஆகியவற்றை ஆலிம்கள் வாயிலாக வாய்மொழியாகவே கேட்டு அறிந்து வந்துள்ளனர். தாய்மொழியாம் தமிழ்மொழியில் திருமறையின் மொழிபெயர்ப்பையோ உரைகளையோ வாசிக்கின்ற பெரும்பேறு கிடைக்காமலேயே இருந்துவந்துள்ளது.
ஆ.கா. பாகவி
இந்நிலையில், மார்க்க அறிஞர்களை மதிக்கும் ஒரு வணிகர் குடும்பத்தில் 26.11.1876 (ஹிஜ்ரி 1294)
ஞாயிற்றுக்கிழமை சேலம் ஆத்தூரில் காதிர் முகைதீன் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு அப்துல் ஹமீது எனப் பெயர் சூட்டினர்.
குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளியில் சேர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களைக் கற்றார்.பின்னர் தமது இளமைப் பருவத்தில் கிலாஃபத் இயக்க முன்னோடியாகவும், மதுவிலக்குப் பிரசாரகராகவும், கதர் அணியாத திருமணங்களில் கலந்துகொள்ள மறுத்த காந்தியவாதியாகவும் விளங்கினார்.
பாகியாத்தின் பாக்கியம்
இதற்கிடையில், அண்ணல் அஃலா ஹழ்ரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் வேலூர் நகரில் கி.பி. 1884 ( ஹிஜ்ரி 1301)ஆம் ஆண்டு அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் எனும் பெயரில் ஓர் அரபிக் கல்லூரி தொடங்கி நடத்த வந்தார்கள்.
அங்கு நிஸாமிய்யா பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. நிறுவனர் அஃலா ஹழ்ரத் அவர்களுடன் மூத்த ஆசிரியப் பெருமக்கள் பயிற்றறுவித்துவந்தனர். மெளலானாக்களான குலாம் முஹ்யித்தீன், அப்துல் காதிர் பாஷா, முஹம்மது கமாலுத்தீன், அப்துல் ஜப்பார் ஆகியோரும் , வட இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் நூர் முஹம்மது பஞ்சாபி , ஷாஹ் ஸமான் தேவ்பந்தீ , அப்துர் ரஹ்மான் பஞ்சாபி ஆகியோரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
கி.பி. 1892 ( ஹிஜ்ரி 1314)ஆம் ஆண்டில்-அதாவது 130 ஆண்டுகளுக்கு முன்- முதலாவது பட்டமளிப்பு விழா அங்கு நடந்தது. அதில் தஹ்சீல் ( இளங்கலை) வகுப்பில் தேறிய 17 ஆலிம்களுக்கும் முதவ்வல் (முதுகலை) வகுப்பில்
தேறிய ஃபாஸில்கள் 2 பேருக்கும் தாருல் உலூம் தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மெளலானா சையிது அஹ்மத் தஹ்லவீ அவர்கள் பட்டம் வழங்கினார்கள்.
பாகவி ஆனார் மெளலானா
பாரம்பரியமிக்க இந்த அரபிக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் முதல் அணியில் தமது 17ஆம் வயதில் ஆ.கா. அப்துல் ஹமீது அவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அங்கு பத்தாண்டுகள் கல்வி பயின்று 1906ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் ஆலிம் பட்டம் பெற்றார்கள்.
அப்படியானால், 1896ஆம் ஆண்டு அன்னார் பாகியாத்தில் சேர்ந்திருக்க வேண்டும். அங்கு மாணவராகச் சேர்ந்த நாள் முதலாய் , திருக்குர்ஆனுக்குத் தமிழில் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மெளலானா அப்துல் ஹமீது அவர்களுக்கு இருந்துவந்துள்ளது.
ஆலிம் பட்டம் பெற்ற பிறகு வியாபாரம், அரசியல், கிலாஃபத் இயக்கம் என அன்னாரின் பொழுதுகள் கழிந்தன. பின்னர் 1926 பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தொடங்கினார்கள்.
அல்பகரா- அத்தியாயம்
திருக்குர்ஆனின் 'அல்பகரா' (2) அத்தியாயத்தின் தமிழாக்கம், விரிவுரை ஆகியவற்றை எழுதி முடித்தபின், தமிழகத்தின் தலைசிறந்த ஆலிமகளின் பார்வைக்கு அனுப்பிவைத்து, அவர்கள் கொடுத்த முறையான திருத்தங்களுடன் 19.02.1929 அன்று முதல் பாகம் வெளியிடப்பட்டது.
பின்னர் பொருளாதார தேக்கநிலை ஏற்படவே, சிரமப்பட்டுக் கொண்டிருந்த மெளலானா அவர்களுக்கு, ஹைதராபாத் நிஜாம் மன்னரின் மாமனார் நவாப் நஸீர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அதையடுத்து பொருளாதார உதவி கிடைக்கவே, காரைக்காலில் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
இரவு பகலாக பணி தொடர்ந்தது. ஒரு வழியாக 1942 அக்டோபர் 24இல் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.இருந்தாலும், உடனே அச்சிடாமல் , பாகியாத் பேராசிரியர் குழுவின் ஆய்விற்கு உட்படுத்தி 9.11.1943இல் பணி முடிவுற்றது.
இரண்டாம் உலகப் போர்
எழுபது வயதைக் கடந்துவிட்ட மெளலானா அவர்கள் பலமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இரண்டாம் உலகப் போர் நடந்த நேரம் அது. பயணம் என்பதே பெரிய கேள்விக்குறியதான நேரம். இதனால் தமது மொழிபெயர்ப்பைப் பாதுகாக்க மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ஒரு வேலை செய்தார்கள்.
தமது கையேட்டுப் பிரதிநிதிகள் இரண்டைத் தயார் செய்தார்கள்.ஒரு பிரதியைத் தமது இல்லத்தில் பத்திரமாக வைத்துவிட்டு , மற்றொன்றை பாகியாத் கல்லூரி நூலகத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
இறுதியாக, 1949ஆம்ஆண்டு மே மாதம் முதல் நாள் - ஹிஜ்ரி 1368 ரஜப் பிறை 2 -முழு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தது.
1955 ஜூன் 23ஆம் தேதி மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைந்தார்கள். அவர்களின் அகவை 79. அந்த மொழிபெயர்ப்பு இன்றுவரை கிடைக்கிறது.பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. அன்னார் நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.
( 23.10.2021இல் நடந்த ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் நினைவு நிகழ்ச்சியில் அ.முஹம்மது கான் பாகவி ஆற்றிய உரையின் சுருக்கம்)
Subscribe to:
Posts (Atom)