Monday, February 01, 2021

கல்யாண ராமன் என்னசொல்கிறான் தெரியவில்லையா?

~~~~~~~~~~~~~~~~~~~
கல்யாண ராமன் என்ன
சொல்கிறான் தெரியவில்லையா?
~~~~~~~~~~~~~~~~~~~~
வருகின்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு யாரும் வாக்களிக்காதீர்கள். மீறி வாக்களித்தால் இதை விடக் கேவலமாக நடந்து கொள்வோம்.

உங்களை, சிறுபான்மையினரை,அவர்களின் மத உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்துவோம். காயம் உள்ளத்தில் மட்டுமல்ல;உடம்பிலும் இருக்கும்.

கூட்டணியில் உள்ள நாங்கள் இதைத் தைரியமாகச் செய்வோம். நீங்கள் சட்டத்தை நாடுவீர்கள். சட்ட அமல் எங்கள் கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக இடம் இருக்கும். அதிமுக எங்களைக் காக்கும். தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும்.

உங்கள் முயற்சிகளுக்கோ கூச்சலுக்கோ எந்நப் பயனும் கிடைக்காது.அப்படியானால் எங்களை அடக்கி வைக்கும் கூட்டணி எதுவோ அது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் . அப்போதுதான் நாங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்போம்.

நண்பர்களே! தமிழகத்தில் அமைதி நிலைக்க வேண்டுமென்றால் , மதச்சார்பற்ற கூட்டணி வென்றாக வேண்டும் என்பதைத்தான் அவன் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.

இன்றிலிருந்து, இப்பொழுதிலிருந்து தயாராகுங்கள் இந்தக் கழிசடைகளைத் தோற்கடிக்க! இளைஞர்கள், தாய்மார்கள், படித்தவர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடமும் இதையே சாக்காக வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

தமிழகத்தைப் பிடித்த பீடையை விரட்டுவோம்.
நல்ல விமோசனம் காண்போம் ;
இறை நாடினால்.

அன்புடன் உங்கள்
கான் பாகவி

Sunday, January 31, 2021

பட்டிமன்றம் பத்ம ஸ்ரீவிருது பெற்றது

~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றம் பத்ம  ஸ்ரீ
விருது பெற்றது
~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றங்கள் மக்களை மேம்படுத்தும் கலையாக மாறியுள்ளது. இது பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் தாம் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துத் தெரிவித்த கருத்தாகும்.

மார்க்க அறிஞர்களான இளம் ஆலிம்கள் இத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.1970களில் வேலூர் பாகியாத்தில் நாங்கள் கல்வி பயின்ற காலத்திலேயே பட்டிமன்றம் ஆலிம்கள் வட்டாரத்தில் பேச்சுப் பொருளாகிவிட்டது.

1972இல் பட்ட வகுப்பில் நான் பயின்ற அன்றே லஜ்னத்துல் இர்ஷாத் மாணவப் பயிற்சி மன்றத்தில் பட்டிமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்கத் தொடங்கிவிட்டனர்.

ஆரம்பத்திலேயே விமர்சனம் ஒன்று தலைதூக்கியது. மார்க்கம் கற்கும் மாணவர்கள் மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடைசெய்யப்பட்தாகவும், தடைசெய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதாகவும் மாற்றவா இந்தப் பட்டிமன்றம்? என்பதே அந்த க் கடும் விமர்சனம்.

உண்மை அதுவலல. பட்டிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தலைப்பு, இரண்டும் அனுமதிக்கப்பட்டதே. இரண்டில் எது மிகவும் சிறந்தது என்ற ரகத்திலேயே இருக்கும். எடுத்துக்காட்டிற்குச் சில :

1.குடும்ப அமைதிக்கு ஆணும் காரணம்தான்; பெண்ணும் காரணம்தான். அதிகச் சீரழிவு யாரால்?

2. முன்னேற்றத்திற்கு அதிகக் காரணம் கல்வியா? செல்வமா?

3.சமுதாயப் பின்னடைவுக்கு முதல் காரணம் கல்வியின்மையா? ஒழுக்கமின்மையா?

இரண்டு பக்கமும் உள்ள நன்மை மற்றும் தீமையை ஈரணியினர் தத்தம் ஆதாரங்களை முன்வைத்து வாதிடுகையில் , பார்வையாளர்களுக்குத்  தெளிவு பிறக்கும். இரண்டில் ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியம் என்பது புலப்படும்.

சாதாரண உரைக்கும் பட்டிமன்ற உரைக்கும் உள்ள வித்தியாசமே சுவைகூட்டி புரியவைப்பது தான்.

பாகியாத்தில் தொடங்கிய இப்பயிற்சி, எண்பதுகளில் பொதுமக்கள் வரை சென்றது. மன்றத்தில் பயிற்சி பெற்றவர்களில் ஈரணிகளை உருவாக்கி, நான் நடுவராக இருந்து பல ஊர்களில் பட்டிமன்றம் மூலமாக மார்க்கப் பரப்புரை செய்துள்ளோம். சாதாரண பயான்களைவிட பட்டிமன்றத்திற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

சில வேளைகளில் நாள்கணக்கில் எங்கள் பயணம் நீண்டதுண்டு. முதல் கூட்டத்தில் சொன்ன அதே நகைச்சுவையை அல்லது ஒரு நிகழ்வைப் பேச்சாளர் குறிப்பிடுகையில், புதிதாகக் கேட்கும் பாவனையில் நடுவராக இருந்த நான் கேட்பேன். இது பேச்சாளருக்கு. உற்சாகத்தை ஊட்டும்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபிறகு, பத்து தடவை கேட்டிருந்தும் அதெப்படி புதிதாகக் கேட்பதுபோல் கேட்கிறீர்கள் என்று நண்பர்கள் சிரிப்பார்கள்.

இன்றும் இளம் ஆலிம்களால் இத்தகைய பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

அன்புடன் உங்கள்
 கான் பாகவி

Wednesday, January 27, 2021

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு
~~~~~~~~~~~~~~
நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மெளலவி, அப்துல் வாஹித் பாகவி கடந்த 06.01.2021 புதன்கிழமை இறந்
துவிட்டார்.தகவல் தாமதமாகவே கிடைத்தது.

இவர் என் வகுப்புத் தோழர் மட்டுமன்றி ரூம் மேட் கூட.
பள்ளிப் படிப்பை முடித்தவர்.ஆங்கிலம் நன்கு கற்றவர்.1972ஆம் ஆண்டு ஸலஜ்னத்துல் இர்ஷாத் மாணவ மன்றச் செயலாளராக நன்கு செயல்பட்டவர். 

வேலூர் கல்லூரிகளில் நடக்கும் கவியரங்கம், கருத்தரங்கம்,பட்டிமன்றம் ஆகியவற்றுக்குப் சென்று வருவார்.

இந்த அனுபவத்தைக் கொண்டே எங்களாண்டில் மன்றத்தில் பட்டிமன்றம்  தொடங்கினோம் என்று நினைவு. அவ்வாறே கவியரங்கமும் நடத்தினோம்.

ஓதி முடித்தபின் சில இடங்களில் இமாமத் பணியாற்றியவர் , பின்னர் அரபு நாடு சென்றார். ஊர் திரும்பி நீண்ட நாள் ஓய்வில் இருந்தார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நண்பர் மாரடைப்பால் கடந்த ஆறாம் தேதி இறந்துபோனார்.

அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள்.இருவருக்கும் திருமணமாகி குழந்தைகுட்டிகளுடன் நலமாக உள்ளனர்.

என் உற்ற நண்பரின் மறுமை வாழ்வு செழிக்க அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். 
اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين.
அன்புடன் உங்கள்
கான் பாகவி

Friday, January 22, 2021

இனிய நண்பர் இழப்பு ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎இளம் ‎வயதில்

இனிய நண்பர் இழப்பு இளம் வயதில்
~~~~~~~~~~~~
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை  அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் பிறந்து,பள்ளிப் படிப்பை முடித்து பாகியாத்தில் கற்றவர்தான் மெளலானா சதகத்துல்லாஹ் ஹழ்ரத்.அவர் எனக்குப் பிந்திய வகுப்பில் துவரங்குறிச்சி சலாம் பாகவி, அஷ்ரப்  பாகவி ஆகியோருடன் கல்வி பயின்றவர். பின்னாளில் பாகியுத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
அத்துடன் ஒருசில பாடங்களும் நடத்தினார்.மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், ஆங்கிலம் போன்றவற்றில் ஆர்வமூட்டியதுடன் மாணவர்கள் சிலருக்குக் கற்பிக்கவும் செய்தார்.

பிழையின்றி தமிழை எழுதும் தமிழ் எழுத்தாளர். எளிமையாகப் பேசினாலும் விஷயத்தோடு பேசும் பேச்சாளரும் கூட.

எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதே தமிழ் எழுத்தால் தான். ஆம்! தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆனின் வசன மொழிபெயர்ப்பு கடையநல்லூர் மதிப்புக்குரிய யூசுப் அன்சாரி ஹழ்ரத் அவர்கள் எழுதியது.மொழிபெயர்ப்பு மட்டும் வெளியிடலாம் என்று திட்டத்தில் மேலாய்வைத் தொடங்கிய பாகியாத், பின்னர் விரிவுரையாகவே வொளியிட முடிவு செய்தது.கனம் கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் விரிவுரை எழுத, தமிழைச் செப்பனிடும் பணியை சதகத்துல்லாஹ் ஹழ்ரத் அவர்கள் ஏற்றார்.

பின்னர் என்னையும் அப்பணியில் இணைத்தனர். 

இறுதிவரை தஃப்சீர் எழுத்துப் பணியில் ஈடுபட்டதுடன், முஃப்தி அவர்கள் கொடுக்கும் ஃபத்வாக்களை தமிழில் எழுதி அனுப்பும் பணியையும் மேற்கொண்டிருந்தார்.
தஃப்சீரின் ஆரம்பப் பாகங்கள் அச்சாகி, அதன் அச்சுப் பிழைகளைத் திருத்தும் பணிக்காக நானும் மெளலானா அவர்களும் சென்னையில் அறை போட்டு பல வாரங்கள் தங்கி ,திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். அப்போதெல்லாம் மெளலானா அவர்களின் எளிமை, அலட்டிக்கொள்ளாத போக்கு, எதையும் பாசிடிவாகப் பார்க்கும் பண்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.

சுருங்கக் கூறின், அவருக்கு இருந்த ஆற்றல்கள் வேறு யாருக்கும் அமைந்திருந்தால், அவரைக் கையில் பிடிக்க முடியாது.அத்துணை ஆற்றல்களை த் தமக்குள் வைத்துக்கொண்டு, ஒன்றுமே தெரியாதவர் போன்று நடந்துகொண்ட  ஒரு துறவி என்றுகூட அவரைச் சொல்லலாம்.அதற்காக இந்த அளவுக்கா தம்மை மறைத்து வாழ்வது என்றுகூட அவர் நண்பர்கள் அவரிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.

அவருக்கிருந்த ஆங்கில அறிவுக்கும் மார்க்க அறிவுக்கும் வேறு யாருமாக இருந்தால் ,எங்கோ போயிருப்பார்கள்.
உடல்நிலை ஒத்துழைக்காத இறுதி நாட்களில் மதரசாவிலிருந்து விடைபெற்று ஓய்வில் இருந்தார்.அப்போதும்கூட மாணவர்களின் அழைப்பை ஏற்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
ஆனால் ,துரத்தி வந்த நோய் இறுதியாக அன்னாரை நம்மிடமிருந்து பிரித்து விட்டதுதான் சோகம்.

கண்ணீர் மல்க அவருக்காக இறையைப் பிரார்த்திப்போம்.
اللهم اغسله بالماء والثلج ونقه من الذنوب كما ينق الثوب الأبيض من الدنس. اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا رب العالمين.

--அன்புடன் உங்கள் கான் பாகவி.

Wednesday, December 02, 2020

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இந்துத்துவா சக்திகள்

*இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இந்துத்துவா சக்திகள்*

*உரிய விளக்கத்தை முதலில் நாம் அறிவோம்*

*-கான் பாகவி*

இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்துகிறது. பெண்களை முஸ்லிம்கள் அடிமைகளாக நடத்துகின்றனர். இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த உரிமையுமில்லை -என்றெல்லாம் கதை கட்டிவிட்டு, அதற்கு ‘ஆதாரங்கள்’ என்று குர்ஆன் வசனங்கள் சிலவற்றையும் நபிமொழிகள் சிலவற்றையும் காட்டி, முஸ்லிமல்லாதோரிடம் பிரசாரம் செய்துவருகின்றனர் சிலர்.

அவர்கள் எடுத்துக்காட்டும் குர்ஆன் வசனங்களின் எண்களையும், நபிமொழி நூல்கள் மற்றும் ஹதீஸ் எண்களையும் கீழே தருகிறோம்.

இவற்றுக்கான சரியான விளக்கங்களை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம், மற்றும் ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் போன்ற வெளியீடுகளையும், அவற்றில் தரப்பட்டுள்ள அடிக்குறிப்பு விளக்கங்களையும் தயைகூர்ந்து, நிதானமாக வாசித்துத் தெளிவுபெறுங்கள்!

யாரேனும் உங்களிடம் இவை குறித்துக் கேட்டால், பொறுமையாக அவர்களுக்கு உண்மை விளக்கங்களை எடுத்துக் கூறுங்கள்!

வஸ்ஸலாம்.


குறிப்பு:
அவர்களின் அநாகரிகமான வாதங்களை நாமும் பரப்பிவிடக் கூடாது என்பதற்காக அவற்றை விலாவாரியாக நாம் குறிப்பிடவில்லை.


1. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 304, 1462; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் ஹதீஸ் - 132.

2. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 3331, 5186; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 2913, 2914.

3. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 5096; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 5290, 5291.

4. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 304, 1462; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 132.

5. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 2859, 5093, 5094; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 4478.

6. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 511, 514; ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 886-888.

7. ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ் - 1083. (தஃப்சீர் தபரீ)

8. தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் - 4:24; 33:50; 4:11; 2:282; 4:34. ஆகிய வசனங்கள்.

Monday, October 26, 2020

இப்போதும் விழிக்காவிட்டால்..?

*இப்போதும் விழிக்காவிட்டால்..?*

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அநேகமாக, தமிழகத்தில் ஈரணிகள் களம் காண்பதற்கே வாய்ப்பு அதிகம். ஒன்று, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஓரணி. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையில் மற்றோர் அணி. அப்படி மூன்றாவது அணி உருவானாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு, அதன் பாதிப்புகள் இருக்கமா என்பது கேள்விக்குறியே!

இந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் தி.மு.க. அணியில் அங்கம் வகிப்பதுதான் எழுதப்படாத விதியாகிவிட்டது என்பதே அரசியல் கணிப்பாக உள்ளது. முஸ்லிம் கட்சிகள், அதிலும் தேர்தல் களம் காணும் கட்சிகள் என்று நான்கைக் குறிப்பிடலாம். 1. பாரம்பரியக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML). 2. வளர்ந்துவரும் மனிதநேய மக்கள் கட்சி (MMK).

3. SDPI கட்சி. இது, தமிழகத்தில் மட்டுமன்றி வேறுபல மாநிலங்களிலும் தேர்தல் களம் கண்டுவரும் கட்சி. 4. சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி தலைமையில் உள்ள மனிதேநேய ஜனநாயகக் கட்சி (MJK). இது அண்மையில் உருவாகி, தேர்தல் களம் கண்டு வெற்றிவாகை சூடிய புதிய கட்சி என்பது தெரிந்ததே!

இந்த நான்கு கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் வாக்காளர்களிடையே மட்டுமல்ல; பொதுவான வாக்காளர்களின் எதிர்பார்ப்பும்கூட. இவை அனைத்தும் ஓரணியில் நின்று, அதிகபட்சமாக 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றியே ஈட்டிவிட்டாலும், சமுதாயத்திற்குச் சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பெரிய சாதனை எதையும் படைத்துவிடப் போவதில்லை என்ற கருத்தும் உலவுகிறது.

சரி! அப்படி நான்கு கட்சிகளும் ஓரணியில் இணையுமா? அக்கட்சிகளே அதற்கு முன்வருமா? முன்வந்தாலும் அணியின் பெரிய கட்சி எந்த அளவிற்கு வரவேற்கும்? வரவேற்றாலும், பாதகமின்றி ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கைச் சரியாகக் கணித்து நியாயமான தொகுதிகளை ஒதுக்குமா? அல்லது பெரியண்ணன் எண்ணத்தில் கெடுபிடியைக் காட்டுமா?

எல்லாமே தெளிவற்ற நிலைதான். விடை கிடைக்காமல் திணறவைக்கும் கேள்விகள்தான். அநேகமாக, முதலிரு கட்சிகளுக்குத் தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்கலாம்! அதிலும் முதல் கட்சிக்கு ஓரிரண்டு தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாகத் தெரிகிறது. எப்படிப்போனாலும், இரண்டுக்கும் சேர்த்து ஐந்தைத் தாண்டாது என்பதும் மேல்மட்டத்தில் அடிபடும் பேச்சு என்கிறார்கள்.

அப்படியானால், கடைசி இரண்டு கட்சிகளின் நிலை என்ன என்பதே இப்போதைய பட்டிமன்றத் தலைப்பாக மாறியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால், மாற்று அணிக்குச் சென்றுவிடுவார்களா? அல்லது மூன்றாம் அணி காண்பார்களா? அல்லது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல், மற்றக் கட்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்களா? அல்லது எதிலும் தலையிடாமல் ஒதுங்கிவிடுவார்களா? விடை தெரியா வினாக்கள்.

அரசியல் கட்சிகள் உருவாக்குவதும் அதை முன்னிட்டு ஓடியோடி உழைப்பதும் சட்டமன்றத்தில், அல்லது பாராளமன்றத்தில் நாற்காலியில் அமரத்தான். அதுவே உச்சபட்ச அரசியல் முன்னேற்றம். அதையடுத்து ஆட்சி நாற்காலியைப் பிடிப்பதுதான் அடுத்த கட்ட வாழ்நாள் கனவு. இதை யாரும் மறுக்கமாட்டார்கள். இதுவெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை என்போர் கட்சியே தொடங்கியிருக்கமாட்டார்கள்.

அப்படியிருக்க, நீங்கள் தேர்தலில் நிற்காதீர்கள்! அல்லது எங்களுக்கு ஆதரவு தெரிவிரித்துவிட்டுப் பெரிய மனதோடு நடந்துகொள்ளுங்கள்! –என்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவது, கடையைத் திறந்துவிட்டீர்கள்! வியாபாரம் செய்யாதீர்கள் என்ற நகைப்பிற்கிடமான யோசனையாகவே அமையும்.

மக்களவைத் தேர்தலாக இருந்தால்கூட, சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் எனப் பேரம் பேசலாம். இப்போது நடக்கவிருப்பதோ சட்டப்பேரவைத் தேர்தல்! இதை விட்டால், அக்கட்சிகள் எதைக் கொண்டு சமாதானம் அடைய முடியும்?

சரி! அப்படியானால் இக்கட்சிகள் என்னதான் செய்வது? இக்கட்சிகளின் மேலிடம் நேரடியாகக் களத்தில் இறங்கி, கூட்டணித் தலைமைக் கட்சியின் கதவைத் தட்ட வேண்டியதுதான். எங்களைக் கூட்டணியில் சேர்ப்பதுடன் தொகுதியும் ஒதுக்குவதால், கூட்டணிக்குக் கிடைக்கும் அனுகூலங்களைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்து, கூட்டணித் தலைமையை இணங்கவைத்தாக வேண்டும்.

அதுவும் கைகூடாதபோது, வெற்றி – தோல்வியைப் பொருட்டாகக் கொள்ளாமல் மூன்றாம் அணி காண்பது ஒன்றுதான் அவர்கள் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி! ஆனால், இந்த முடிவால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பையும் நினைவுபடுத்தாமல் இருப்பது நீதியாகாது. அதே நேரத்தில், இந்த இழப்பில், கூட்டணியில் சேர்க்காமல் உதாசீனம் செய்த பெரிய கட்சிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதுதான், தர்க்கரீதியான வாதம் என்பதை, நியாய உணர்வோடு சிந்திக்கும் யாரும் மறுக்கவியலாது எனலாம். ஆயினும்கூட, மிக அபூர்வமாகச் சாத்தியமாகின்ற ஒரு யோசனையும் உண்டு. அநேகமாக அதுதான் கடைசி யோசனையாகவும் இருக்கலாம்!

அது வேறொன்றுமில்லை; தி.மு.க. கூட்டணியில் உரிய இடம் கிடைக்காத கட்சிகள், வேண்டுமானால் தாமாக முன்வந்து இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க முன்வருவதுதான், அந்த யோசனை. இது, இக்கட்சிகளுக்கு எட்டிக்கசப்பான தீர்வுதான். நாட்டின் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ளும்போது, தாற்காலிகமானதொரு முடிவாக இதை எடுத்தால் என்ன?

அதே வேளையில், இன்று சமூக வலைத்தளங்களில் நடந்துகொண்டிருக்கும் அநாகரிகமான, அசிங்கமான விமர்சனங்கள் சமுதாயத்தைத் தலைகுனியச் செய்து வருகின்றன என்பதை எம்மால் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த ஏச்சுப் பேச்சுகளால் யாருக்கு என்ன இலாபம்? அதிலும் இரு பக்கங்களிலும் மார்க்கம் படித்த ஆலிம்களும் அரசியல்வாதிகள்போல் தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் வசைபாடுவதை எந்த வகையில் சேர்ப்பது? இந்தப் போக்கானது, சாமானிய மக்களுக்கு எத்தகைய சமிக்ஞையைத் தரும் என்பதைக்கூட இவர்கள் நினைத்துப்பார்க்கவில்லையா? இனி எப்படி ‘மின்பர்’படிகளில் ஏறி நின்று பொதுமக்களுக்குச் சொல்லொழுக்கத்தைப் போதிப்பது என்று யோசித்துப் பாருங்கள்!

போதும்! இந்தச் சொற்போரை நிறுத்துங்கள். மற்ற அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழுங்கள்! பேசினால் நல்லதையே பேசுங்கள்! அதையும் நயமாகப் பேசுங்கள்! இல்லையேல், மௌனமாக இருந்துவிடுங்கள்!

அன்புடன் உங்கள்
*கான் பாகவி*

Tuesday, September 29, 2020

உலக மொழிபெயர்ப்பு நாள்-செப் - 30

~~~~~~~~~~~~~
உலக மொழிபெயர்ப்பு நாள்-செப் - 30
~~~~~~~~~~~~~
ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன.அதாவது இருபது விழுக்காடு. 
மூலநூலின் முழு உணர்வினையும் கருத்துகளையும் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும் அதிகப்படுத்தாமலும் மாற்றாமலும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலை உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.

மூல மொழியின் கருத்தினின்று மொழிபெயர்ப்பாளர் மாறுபடின் , மொழிபெயர்ப்பாளரின் அறியாமையைத்தான் உணர்த்தும்.

நூற்றுக்கு நூறு கல்வி வளமும் நூற்றுக்கு எண்பது பேர் இரு மொழிப் புலமையும் நூற்றுக்கு எழுபது பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்பு செல்வாக்குப் பெறலாம்.

தமிழக அரசு மொழிபெயர்ப்புக்கு மட்டும் 11 விருதுகள் வழங்கிவருகிறது.

நன்றி:
முனைவர் ந.அருள்.
தினமணி-29.09.2020.

Sunday, July 05, 2020

அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...

~~~~~~~~~~~~~
அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...
~~~~~~~~~~~~~
அண்மைக் காலமாக வரும் மரணச் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 

உறவுகள், ஆசிரியர்கள், உடன் கற்றவர்கள்,நம்மிடம் கற்றவர்கள், சமூக ஆர்வலர்கள்,சமுதாயத் தலைவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், சாமானியர் ...என எல்லாத் தரப்பினரும் இந்தப் பெருநோயால் பாதிக்கப்பட்டும் பலர் உயிர்நீத்தும் வருகின்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதற்கு வயது வித்தியாசமோ பார்க்கின்ற தொழில் வித்தியாசமோ கிடையாது.தலைவிதி எதுவோ அது நடந்தே தீரும். யாராலும் ஒரு விநாடிகூடத் தள்ளிப்போட முடியாது. ஜனாஸாவைக்கூட உறவினரும் சம்பத்தப்பட்டவரும் பார்க்க முடியாத, இறுதிப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியாத பரிதாபம் இருக்கிறதே சொல்லிமாளாது.

இருப்பினும், நமக்கென சில தற்காப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவைதானே! அதைக் கடைப்பிடிப்பதில் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும் அல்லவா? 

முதலில் வெளியே போவதை இயன்ற வரை தவிருங்கள். அடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியமின்றி மேற்கொள்ளுங்கள். திக்ர் மற்றும் துஆக்களில் அதிகம் ஈடுபடுங்கள்.அலுவலகப் பணியை வீட்டில் அல்லது பாதுகாப்பான இடத்தில் செய்யுங்கள்.கரோனா தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்காதீர்கள். அதைப் பற்றியே எப்போதும் பேசாதீர்கள்.சிந்திக்காதீர்கள்.

இறுதியாக இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு ரிலாக்ஸாக இருங்கள்.உடன் இருப்போரையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஒளிந்திருந்த குகை வாயிலை எதிரிகள் ஆயுதத்துடன் நெருங்கிவிட்ட நெருக்கடியான நிலையிலும் தோழரிடம் , மூன்றாவதாக நம்முடன் இறைவன் இருக்கிறான் என்று நபிகளார் சொன்ன ஆறுதலை அடிக்கடி நினைத்துக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் அவனே போதுமானவன். حسبنا الله ونعم الوكيل

அன்புடன் உங்கள் கான் பாகவி

Wednesday, July 01, 2020

கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?

*கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?*

*அ. முஹம்மது கான் பாகவி*

பொது முடக்கம் என்றும் முழு ஊரடங்கு என்றும் அரசு ஆணை பிறப்பிக்க, நாமெல்லாரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து பல மாதங்களாகிவிட்டன. இது எப்போது முடியும்; விடிவு பிறக்கும் என ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் பரிதாபத்தைக் கண்டு நெஞ்சு வெம்பித்தான் போகிறது. எல்லாம் கரோனா கொடுத்த ‘சீர்’கள்.

‘சும்மா’ இருப்பதைப் போன்றதொரு தண்டனை வேறு இருக்காது. நகராமை உயிரின்மையின் அடையாளம் அல்லவா? உயிர் வாழ்கிறோம் என்பதற்குச் சான்றே இயக்கம்தானே! அதுவே நின்றுபோனால், மூச்சு நின்றுவிட்டது என்றுதானே பொருள்! சிலவேளை இது மன அழுத்தத்திற்குக் காரணமாகி மரணத்திற்கே வழிவகுத்தாலும் வியப்பதற்கில்லை.

இப்போது தெரிகிறதா? பணி செய்வதன் அருமை! சரி! விதியை நோகக் கூடாது. ஏன், இதையே நமக்குக் கிடைத்த ஓர் ஓய்வாகக் கருதி, புண்ணியங்கள் தேடிக்கொள்ளக் கூடாது? காலம் கையிலிருக்கும்போது பயன்படுத்தத் தவறினால், பின்னர் கெஞ்சினாலும் கிட்டாது காலத்தின் ஒரு கணம்கூட.

மாணவக் கண்மணிகளே! பள்ளி, கல்லூரி, மத்ரஸா ஆகிய கலைக் கூடங்களில் பயின்றுவரும் நீங்கள், உங்களுக்குக் கிடைத்த ஓய்வு காலத்தை வீணாகக் கழிக்காமல், வினயமாகக் கழித்தால் என்ன என்று யோசித்துப்பாருங்கள்!

முதலில் மத்ரஸாக்களில் கற்ற, அல்லது கற்றுக்கொண்டிருக்கிற மார்க்கக் கல்வியாளர்களுக்குச் சில யோசனைகள்! பரிந்துரைகள்:

1. “கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு” -என்பார்கள். மத்ரஸா பாடத்திட்டத்தில் இல்லாத, அதே நேரத்தில் நமக்கு மிகவும் இன்றியமையாத நூல்கள் எத்தனையோ உண்டு. அவற்றைக் கண்டுபிடித்து நீங்களே வாசிக்கலாம்! முக்கியக் குறிப்புகளைப் பதிவு செய்துகொள்ளலாம்! தெரிய முடியாததை அருகிலுள்ள அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வரலாறு, நபித்தோழர்கள் வரலாறு, இந்திய வரலாறு, முடிந்தால் உலக வரலாறு, இதிய சாசன சட்டம், இஸ்லாமிய அறிவியல், பொருளியல், அரசியல், சட்டவியல், குடும்பவியல், சமூகவியல், தனிமனித ஒழுக்கவியல், உளவியல், வணிகவியல்... என நிறைய துறைகள் நமக்கு அந்நியமாக உள்ளன.

இவற்றை உங்களால் சுயமாகக் கற்க முடியும் என்பதைவிடக் கற்றாக வேண்டும். அதற்கு இந்த ஓய்வைப் பயன்படுத்துங்கள்.

2. இமாம்களாக இருப்பவர்களுக்கு, ஏன் எல்லா ஆலிம்களுக்கும் ‘தஜ்வீத்’ கலை மிகமிக அவசியமானது. இக்கலைக்காக நேரத்தைச் செலவிட்டுப் பயிற்சியாளர்கள் மூலம் தரமான பயிற்சி பெறலாம்.

3. ஜும்ஆ உரை மட்டுமன்றி, பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் உரையாற்ற வேண்டியவர்களாக உள்ளோம். உரைக்குக் குரல் மட்டும் போதாது. மொழியும் தேவை. அத்துடன் காலத்திற்கேற்ற தகவல்களும் தரவுகளும் தேவை. இவற்றைத் தலைப்புகள் வாரியாகத் திரட்டிப் பதிவு செய்துகொண்டால், நம் உரைகள் அர்த்தமுள்ளவையாக அமையும்.

அடுத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர். வீட்டுக்குள் அடைந்து செல்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் இணையத்திலேயே நேரத்தைக் கழிப்பதைக் கைவிடுங்கள்! உங்கள் எதிர்காலத்திற்கு உதவக்கூடிய துணைக் கலைகளைக் கற்றுப் பயிற்சி பெறுவதில் இந்த ஓய்வு நாட்களை உருப்படியாகச் செலவிடுங்கள்.

1. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பயிற்சி. என்னதான் திறமையாகப் படித்திருந்தாலும், வேலைவாய்ப்புக்கு மிகவும் அவசியமானது மொழியாற்றல். நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலில் நீங்கள் வெல்ல வேண்டுமென்றால், மொழித் திறன்தான் முதல்படியாக உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

மொழித் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அவற்றில் சேர்ந்து, உங்கள் பொன்னான நேரத்தைப் பயனுள்ள வகையில் கழியுங்கள்.

2. கணினிப் பயிற்சி. கணினியில் தட்டச்சுப் பயிற்சி, கணக்குப் பதிவுப் பயிற்சி, செயலிகளை (ஆப்) உருவாக்கி இயக்கும் பயிற்சி என வகைவகையான துறைகள் உள்ளன. இவற்றை நீங்கள் இப்போதே கற்றுக்கெண்டால், பின்னால் துணை நிற்கும்.

கையால் யாரும் எழுதுவதில்லை இப்போதெல்லாம்; எல்லாம் கணினிமயமாகிவிட்டன என்பதை மறவாதீர்!

3. கைத்தொழில் ஏதேனும் ஒன்றைக் கற்கலாம்! வயரிங், ஃபிட்டிங், ரிப்பேரிங்... என ஏராளமான -லாபகரமான- தொழில்கள் எப்போதும் உங்களுக்கு உதவும்.

4. நீங்கள் கல்லூரி அல்லது பள்ளி மாணவர்கள். உங்களால் எத்தனை பேருக்குத் தொழுகைமுறை தெரியும்? குர்ஆன் பார்த்து ஓதத் தெரியும்? சூராக்கள் மனப்பாடமாக ஓதத் தெரியும்? தஸ்பீஹ், திக்ர், துஆக்கள் ஆகியன முறையாகக் கற்றவர்கள் எத்தனை பேர்?

அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சுன்னத்தான நடைமுறைகள், ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடை செய்யப்பட்டது), ஈமான் மற்றும் இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் போன்ற மார்க்க விஷயங்களைக் கற்றவர்கள் உங்களில் எத்தனை பேர்?

இதையெல்லாம் கற்க இந்த ஊரடங்கை ஏன் நமதாக்கிக்கொள்ளக் கூடாது? அருகிலுள்ள ஆலிம்களைச் சந்தித்து, இதற்கான டியூஷன் நடத்தச் சொல்லுங்கள்! ஆங்கிலமும் கணினியும் தொழில்நுட்பமும் இம்மையில் சோறுபோடும் என்றால், மார்க்கம்தான் மறுமையில் சோறுபோடும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

Monday, June 22, 2020

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?
அ. முஹம்மது கான் பாகவி
கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆயிரக்கணக்கானோரின் இன்னுயிரைப் பலிகொண்டுவிட்டது. பொருளாதாரத்தில் கோடிக்கணக்கான டாலர்களை விழுங்கிவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, வணிகம், உற்பத்தி, ஏற்றுமதி... என எல்லாத் துறைகளையும் நலிவடையச் செய்துவிட்டது.
ஆன்மிகத்தையும் அது விட்டுவைக்கவில்லை. ஆம்! வழிபாட்டுத் தலங்கள் பல மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. அங்கே தொழுகை, தியானம், திருமறை ஓதல், திக்ர் செய்தல், நல்லுரை கேட்டல்... என உளத் தூய்மைக்கும் மன ஆறுதலுக்கும் வழிவகுக்கும் அத்துணை அமல்களும் தடைபட்டுப் போயுள்ளன.

மார்க்கக் கலைக் கூடங்கள் கலையிழந்துவிட்டன. உரிய காலத்திற்கு முன்பே கட்டாய விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் நடத்தாமலும் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாமலும் தொங்கலில் விடப்பட்டிருக்கின்றன. அடுத்தக் கல்வி ஆண்டின் நிலையும் தெளிவில்லாமல் இருக்கிறது.
இமாம்கள், ஹாஃபிழ்கள், மக்தப் ஆசிரியர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. சிலர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். பலருக்கு ஊரடங்கு கால ஊதியம், போனஸ் போன்ற பயன்கள் மறுக்கப்பட்டுள்ளன. வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்; முஅத்தினை வைத்துச் சமாளித்துக்கொள்கிறோம் என்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விதிவிலக்கு இருக்கலாம்! நல்ல முறையில் இமாம்களைக் கண்ணியப்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
மற்றொருபுறம் அரபிக் கல்லூரி மாணவர்களின் நிலை, இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையை நினைவுபடுத்துகிறது. மூன்றாம் ஆண்டு மாணவராக ஒருவர் இருப்பார். அந்த ஆண்டுக்கான பாடங்களை நிறைவு செய்யாமலும், செய்திருந்தாலும் தேர்வு எழுதாமலும் சென்றிருப்பார். அடுத்த ஆண்டு நிலை என்ன; எப்படி என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில் மாணவர்கள் சிலர், இடைப்பட்ட நாட்களில் குடும்பத் தொழில் அல்லது வேறு தொழிலில் ஈடுபட்டு, அதில் சுவை கண்டிருக்கலாம்! இனியும் அதையே தொடர்ந்தால் என்ன என எண்ணலாம்! அல்லது பள்ளி - கல்லூரியில் சேர்ந்து, விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தால் என்ன என்றுகூட ஆசைப்படலாம்!
ஆக, ஏற்கெனவே மார்க்கப் பணியில் ஈடுபட்டுள்ள ஆலிம்களோ, மார்க்கக் கல்வி பயின்றுவரும் மாணாக்கரோ துறை மாற வாய்ப்பு இல்லாமலில்லை.
இதனால் யாருக்கு இழப்பு? மொத்த சமுதாயத்திற்குத்தான் மெத்த இழப்பு. இந்த விவகாரத்தில் சமுதாயத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மெத்தனமாக இருக்கலாகாது. ஏற்கெனவே, அரபி மத்ரஸாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவரும் காலகட்டத்தில், கரோனாவால் மேலும் மாணவர்களின் வருகை குறைவது பெரும் கேடாக முடியும்.
அவ்வாறே, சமயப் பணியாற்றக்கொண்டிருக்கும் ஆலிம்கள் துறைமாற அனுமதிப்பதும் பெரும் நெருக்கடியை உண்டாக்கும். வடமாநிலத்தவரை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணுவோருக்கு ஒரு வார்த்தை, அவர்களால் நம் தாய்மொழியில் உரை நிகழ்த்த முடியாது. நம் குழந்தைகளுக்கு, அவர்கள் புரியும் பாஷையில் மார்க்கத்தைச் சொல்லிக்கொடுக்க முடியாது.
குர்ஆனைக்கூட சரியான உச்சரிப்பில் சொல்லித் தராமல், ஃதால், ளாத், ழாத் போன்ற எழுத்துகளை ஸால், ஜாத்... எனத் தவறாக உச்சரிப்பார்கள். தொழுகையிலும் இதுதான் அவர்களுக்கு வரும். தாய்மொழியின் தாக்கம் நிச்சயமாக அவர்களின் உச்சரிப்பில் தொற்றிக்கொள்ளாமல் இராது.
இறையில்லப் பொறுப்பாளர்களுக்கு ஒரு தார்மிகப் பொறுப்பு உண்டு. உங்கள் பள்ளிவாசலில் பணியாற்றிய இமாம், தம் பணியில் தொடர அனுமதியுங்கள். அதற்கு முன்பாக, விடுபட்ட இடைப்பட்ட மாதங்களுக்கான ஊதியம், போனஸ் போன்ற பலன்களை அவர்களுக்கு மனமார வழங்குங்கள்.
அவ்வாறே, எல்லா அரபிக் கல்லூரி நிர்வாகப் பெருமக்களுக்கும் அன்பானதொரு வேண்டுகோள். தங்கள் கல்லூரி பேராசிரியப் பெருமக்கள், முதல்வர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் ஊரடங்கு காலத்திற்கான ஊதியம், போனஸ் ஆகிய பலன்களை வழங்கி ஆசுவாசப்படுத்துங்கள்.
உங்கள் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள், தம் கல்வியைத் தொடர உதவி செய்யுங்கள்; அவர்களில் யாரும் இடைநிறுத்தம் செய்துவிட அனுமதித்துவிடாதீர்கள்.
மேலும், அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர், மஹல்லா ஜமாஅத், ஆலிம்கள் ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள்! அம்மாணவர்களைச் சந்தித்து உற்சாகமூட்டி, உதவிகள் செய்து ஆதரவு காட்டுங்கள்!
இந்த நடவடிக்கைகள் மூலம் அனைவரும் சேர்ந்து, மார்க்க அறிஞர்களை ஊக்குவிப்போம். மார்க்கம் கற்கும் மாணவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்.
பாரம்பரிய மார்க்க அறிஞர்களின் சேவை தொடர வேண்டும்! இந்த அறிஞர்களை உருவாக்கும் அரபி மத்ரஸாக்களில் மாணவர்கள் தொடர்ந்து சேர வேண்டும்.
இறையில்லங்களில் இறைமறை என்றும் ஒலிக்கட்டும்! மார்க்க உரைகள் எப்போதும் உரக்க முழங்கட்டும்! இந்தப் புண்ணியத்தில் நம் ஒவ்வொருவரின் பங்கும் அணிவகுக்கட்டும்! அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்!
_____________________

Sunday, April 26, 2020

தீமையிலும் ஒரு நன்மைஉண்டு!

~~~~~~~~~~~~
தீமையிலும் ஒரு நன்மை
உண்டு!
~~~~~~~~~
நான் மாணவனாக இருந்த சமயம் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் எங்கள் மாணவ நண்பர்களின் ரமளான் பொழுதுகள் இனிமையாகக் கழிந்ததுண்டு.

அருகில் உள்ள புதுப்பட்டி எனும் சிற்றூரில் ஒரு சிறிய மஸ்ஜித். அங்கு ஹாஃபிழ் வைத்து தராவீஹ் நடத்தும் அளவுக்கு வசதியில்லை.நாங்கள் சில மாணவர்கள் சேர்ந்து தராவீஹ் நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.

ரக்அத்களைப் பிரித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று பேர் தொழவைப்போம். அந்த எளிய மக்களுக்கோ ஆனந்தம்.தங்கள் மஹல்லாவிலும் சிறப்புத் தொழுகை நடக்கிறதே!

இப்படி சில ஆண்டுகள்.நானும் இமாமத் செய்தேன் மனநிறைவோடு. அதற்குப் பிறகு இமாமத்திற்கான வாய்ப்பு வாய்க்கவில்லை. நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுவதை விட்டதில்லை. அதில் அவ்வளவு ஓர் ஆனந்தம்; மனநிறைவு.

  இந்த ஆண்டு வந்ததே வைரஸுடன். பேரிடிதான். நினைத்தும் பார்க்கவில்லை. பள்ளியில் தொழமுடியாதென்று. நொந்து போனேன்.

திடீரென ஒரு யோசனை. இல்லத்தில் ஆறு பேர். ஏன் நாமே இமாமாக நின்று ஜமாஅத்தாகத் தொழக்கூடாது? அதையே நடைமுறைப்படுத்திவருகிறேன். மகிழ்ச்சியாக கழிகிறது ரமளான்.

ஆனாலும் என்ன? முழு குர்ஆன் ஓதி தொழமுடியவில்லை. சின்னச் சின்ன சூராதான். இதுவே என்ன கஷ்டமாக இருக்கிறது தொரியுமா?

இப்போதுதான் தெரிகிறது இமாமத் எவ்வளவு பெரிய மகத்தான பணி! அதிலும் ஹாஃபிழ்கள் பாடு எவ்வளவு பெரியது!

எப்படியோ கரோனா தீமையிலும் எனக்கொரு நன்மை!

அன்புடன் உங்கள் கான் பாகவி.

Sunday, April 19, 2020

மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே

~~~~~~~~~~~~
மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே
~~~~~~~~~~~~
பேரா.க.பஞ்சாங்கம்

மொழிபெயர்ப்பும் ஒரு கலையே; மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே என்ற கருத்துதான் இன்றைக்கு வலுவாக நிலைப்பெற்றுள்ளது.

       மூல நூலாசிரியரும் , மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.மொழிபெயர்ப்பாளரும் மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.

மொழிபெயர்ப்பாளருக்கு மூல நூலாசிரியர் உருவாக்கித்தந்த மொழி உலகம் வெளிப்படையாக முன் நிற்கிறது.மூல ஆசிரியருக்கு அவர் முன்னோர்கள் உருவாக்கித்தந்த மொழி உலகம் மறைவாக நிற்கிறது.அவ்வளவுதான்
வேறுபாடு. எனவே, பெரிதாக இருவருக்கும் இடையில் உயர்வு/தாழ்வு கற்பிக்கப் தேவையில்லை.

ஆக, மொழிபெயர்ப்பு என்பது, சிரமம் என்று கருதினால் சிரமம். அதேநேரத்தில்,ரசித்து இறங்கிவிட்டால் ,அதைப்போல சுவாரஸ்யமான பணி எதுவுமே இருக்க முடியாது.

மொழிபெயர்ப்பாளருக்குப் பன்மொழிப் புலமை இருந்தாக வேண்டும்.அது மட்டுமே மொழிபெயர்ப்பாளராகத் தகுதியா என்றால் அதுவும் இல்லை. மொழி
ஆளுமை வேண்டும். ரசனையும் வேண்டும்.

Thursday, April 02, 2020

~~~~~~~~~~~~எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~
எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு
~~~~~~~~~~~~
1960களில் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் எங்களுக்குத் திறம்பட கல்வி கற்பித்த என் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய ஆசிரியப் பெருமகனார் மெளலானா சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இன்று 02.04.2020 காலை லால்பேட்டையில் மறைந்தார்கள் எனும் செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமும் துக்கமும் அடைந்தேன்.

அன்னார் பொரவாச்சேரி , நெல்லை பேட்டை ஆகிய கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்கள். பின்னர் நீண்ட காலம் மலேஷியாவில் இருந்த ஹள்ரத் அவர்கள் மூப்பின் காரணத்தால் லால்பேட்டையில் தம் இல்லத்தில் ஓய்வு எடுத்துவந்தார்கள்.
சாலிஹ் ஹள்ரத் அவர்களிடம் நான் 3 ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளேன். பாடங்களை எளிமையாகப் புரியவைப்பதேடன் இறையச்சம், நல்லொழுக்கம் ஆகிய போதனைகளையும் செய்வார்கள். தாயுள்ளம் கொண்ட அந்த மகான் என்மீது தந்தை பாசத்தைப் பொழிவார்கள்.

நான் , கம்பம் பீர் முஹம்மது பாகவி, ஜைனுல் ஆபிதீன் உலவி, எம்.சி. ரோடு அப்துல் ஃபத்தாஹ் உலவி போன்றோர் அன்னாரின் மாணவர்கள். 

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள சில ஆண்டுகள் முன் லால்பேட்டை சென்றிரேந்தபோது சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இல்லம் சென்று அன்னாரைச் சந்தித்தோம். அச்சந்திப்பு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அண்மையில் ரஹ்மத் பப்ளிகேஷன் வெளியிட்ட தஃப்சீர் இப்னு கஸீர் பத்தாம் பாகத்திற்கு எங்கள் அன்பான வேண்டுகோளை ஏற்று அணிந்துரை வழங்கினார்கள்.ஒரு மாணவனின் எழுத்துக்கு, அவன் ஆசிரியர் வழங்கும் மதிப்புரையைவிட உயர்ந்த விருது வேறு இருக்க முடியாது. ஹள்ரத் அவர்களின் இறுதி நாட்கள் என்பதை உணர்ந்து, இப்போது விட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என்ற துடிப்பில் தான் அணிந்துரை வற்புறுத்தி வாங்கினோம்.

கிட்டத்தட்ட என் ஆசிரியர்கள் அனைவரும், அல்லது பெரும்பாலோர் என் எழுத்துத் தொண்டை ஊக்கிவித்து மதிப்புரை வழங்கியது நான் செய்த புண்ணியம் என்பேன்.
ஹள்ரத் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள தந்தான் வேண்டும். ஆனால் நாட்டு நிலைமை இடம் கொடுக்காது. அன்னாரின் மறுமை வாழ்வு செழிக்க அல்லாஹ் அருள் புரிவானாக.
اللهم اغفر له و ارحمه وأدخله جنة الفردوس الأعلى يارب العالمين.
என வேண்டி விடைபெறுகிறேன். வஸ்ஸலாம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி

Tuesday, March 10, 2020

அனைத்து ஆலிம்களும்அவசியம் ஆஜராகுஙகள்

~~~~~~~~~~~~~~~~
அனைத்து ஆலிம்களும்
அவசியம் ஆஜராகுஙகள்
~~~~~~~~~~~~~~~~
இன் ஷா அல்லாஹ் வருகின்ற 14.03.2020 சனிக்கிழமை மாலை 6.00மணிமுதல் 9.00மணிவரை சென்னை மண்ணடி மஸ்ஜித் லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளிவாசலில் நடைபெறவுள்ள எங்கள் ஆசிரியர் பெருந்தகை 
மெளலானா பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்களின் சுயசரிதை நூல் வெளியிடப்பட உள்ளது.

அன்னாரே தம் நாவால் சொல்லச் சொல்ல அன்புத் தம்பி மெளலவி கலீலுர் ரஹ்மான் மன்ப ஈ அவர்கள் வாசகம் அமைத்துத் தொகுத்துள்ளார்.

அத்தோடு ஹள்ரத் அவர்களின் என் போன்ற மாணவர்கள் ஹள்ரத் அவர்கள் பற்றி எழுதியுள்ள சுவையான சம்பவங்கள் கொண்ட கட்டுரைகளும் நூலில் இடம்பெறுகின்றன.

நம் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த ஆலிம் பெருமகனாருக்குப் புகழ் சேர்க்கும் இவ்விழாவில் எல்லா ஆலிம்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்ப்பது கடமையல்லவா? 

இன்றைய இளம் ஆலிம்கள் பெரும்பாலும் அன்னாரின் மாணவர்களாக, மாணவர்களின் மாணவர்களாக இருப்பர். இரண்டு மூன்று தலைமுறைகளைக் கண்ட ஹள்ரத் அவர்களின் சுயசரிதை நம் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பாடமாக இருக்கும்.இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.

காலையிலிருந்து தொடங்கும் நிகழ்ச்சிகளில் பல ஆலிம்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

ஒருவர் , அதிலும் மார்க்கத்திற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு பெருந்தகை வாழ்வில் சந்தித்த மேடு பள்ளங்கள்  இளையவர்களுக்குச் சிறந்த பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாருங்கள்! நாமும் வாழ்ந்து பார்ப்போம் !

- உங்கள் அன்பு 
கான் பாகவி
~~~~~~~~~~~~~~~~