Thursday, October 04, 2012

மியான்மர் முஸ்லிம்களைக் கவனிக்க யாரும் இல்லையா?

-    கான் பாகவி


தெ
ன்கிழக்கு ஆசிய நாடுகளில் பரப்பளவில் பெரிய நாடான மியான்மரில் (பழைய பர்மா) 6 கோடிப்பேர் வசிக்கின்றனர். பௌத்தர்களே பெரும்பான்மையினர். முஸ்லிம்கள் சுமார் 40 லட்சம். 1948-இல் சுதந்திரமடைந்த இந்நாட்டில் நீண்ட காலமாக இராணுவ ஆட்சிதான். தற்போது பெயருக்கு ஜனநாயகம் வந்திருக்கிறது.


பர்மா முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பர்மிய பூர்வீகக் குடிகள், சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து குடியேறியோர், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தோர் என மூன்று இனங்களாக உள்ளனர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்தியாவிலிருந்து குடியேறிய முஸ்லிம்கள் `ரோஹிங்கியர்’ என அறியப்படுகின்றனர். இவர்கள் மியான்மரின் மேற்கு மாகாணமான அரக்கானில் வசிக்கின்றனர். அரக்கான் ஒரு சுதந்திர முஸ்லிம் நாடாகவே முதலில் இருந்தது. பிறகுதான் பர்மாவுடன் இணைக்கப்பட்டு, மதமாற்றப் பிரசாரம் மேலோங்கியது.

அரக்கான் பௌத்தர்களின் புனிதபூமி என்றும், இங்கு தாழ்ந்த இனத்தவரான ரோஹிங்கிய முஸ்லிம்கள் இருப்பது புனிதத்தைக் கெடுக்கிறது என்றும் பௌத்த மதக்குருக்கள் பிரசாரம் செய்துவருகின்றனர்.

அது மட்டுமன்றி, இந்த முஸ்லிம்கள் நாட்டைச் சூறையாட வந்தவர்கள்; ஏமாற்றுப் பேர்வழிகள்; தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றெல்லாம் மியான்மரின் தேசிய வரலாற்றுக் குறிப்பிலும் எழுதிவைத்துள்ளனர்.

தொடரும் கொடுமைகள்
இதனால் அடிக்கடி அங்கே கலவரம் வெடிப்பதும் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதும் வாடிக்கை. இவ்வாறு 1991, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் நடந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது 2012 ஜூனில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 90 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்; ஈவிரக்கமின்றி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்; இலட்சக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன; சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன; இலட்சக்கணக்கானோர் வீடு வாசலை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிராக இதுவரை நடந்த கொடுமைகளிலேயே இதுதான் மிகவும் மோசமானது.

அண்டை நாடுகளில் தஞ்சம் அடையலாம் என்றால், இந்தியாவும் வங்காளதேசமும் எல்லைகளை மூடிவிட்டன. பாகிஸ்தானுக்குக் கணிசமானோர் புலம்பெயர்ந்துவருகின்றனர். ஆனால், கராச்சி நகரிலிருந்து தொலைவான ஓரிடத்தில் அரக்கான் முஸ்லிம்கள் மோசமான சூழலில் வாழ்ந்துவருகின்றனர் என்கிறது பாகிஸ்தானின் `ஆஜ் நியூஸ்தொலைக்காட்சி.

மியான்மர் இராணுவம் என்ன சொல்கிறது? முஸ்லிம்கள் பௌத்த மதத்தில் சேர வேண்டும்; அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அல்லது அகதிகளாகக் கூடாரங்களில் ஒடுங்கிக் கிடக்க வேண்டும். இல்லையேல், ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கடலில் வீசிக் கொல்வோம் -இப்படித்தான் பகிரங்கமாக மிரட்டிவருகின்றனர்.

தட்டிக்கேட்க ஆளில்லையா?
சரி! அந்த நாட்டில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரே இல்லையா? ஜனநாயகத்திற்காகப் போராடி, பல்லாண்டு காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற வீராங்கனை (?) ஆங்சான் சுசி இருக்கிறார். அவரும் இராணுவ மிருகங்களின் குரலையே ஒலிக்கிறார் என்பதுதான் வேடிக்கை.

சிறுபான்மையோருக்காக உலகமெங்கும் குரல் கொடுக்கும் உலக நாட்டாண்மை அமெரிக்கா மியான்மர் முஸ்லிம்களைக் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா. சபை கண்டன அறிக்கை (பெயருக்கு) வெளியிட்டதோடு சரி!

பூர்வீக இந்தியர்களான ரோஹிங்கிய முஸ்லிம்களை இந்தியாவும் ஏன் என்று கேட்கவில்லை. வங்காள தேசமோ இந்தியாவின் கைப்பாவைகளில் ஒன்று. அதனிடம் பரிவை எப்படி எதிர்பார்க்க முடியும்?

முஸ்லிம் நாடுகள் என்ன செய்கின்றன? எகிப்து, சஊதி, கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மியான்மர் அரசையும் கொலை வெறித் தாக்குதலையும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இந்நாடுகளும் குவைத் போன்ற நாடுகளும் பொருளாதார உதவிகள் அளிக்கின்றன. சஊதியில் ஏற்கெனவே ஒரு லட்சம் மியான்மர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்; அந்நாட்டு குடிமக்களாகவே அவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களை இவ்வுலகம் எப்படி பார்க்கிறது; எவ்வளவு மோசமாக நடத்துகிறது பார்த்தீர்களா? இத்துணைத் துயரங்களுக்கு மத்தியிலும் ஈமான் இழக்கமாட்டோம் என்று உறுதியோடு அழுதுகொண்டிருக்கும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக நாமும் ஒரு துளி கண்ணீர் வடிப்போம்!

ரோஹிங்கிய பர்மிய முஸ்லிம்களைக் காப்பாற்ற யாராவது வாருங்களேன்!

இறைவா! அந்த மக்களைக் காப்பாற்று! கொடியவர்களைத் திருத்து! அல்லது தூக்கிலிடு! அரக்கானில் ஓடும் இரத்த ஆற்றை வற்றச்செய்! அம்மக்களை உயிர்வாழச்செய்! குழந்தைகளை ஈமானுடன் வளரச்செய்! தாய்மார்களின் கற்பைக் காப்பாற்று!

இப்படி இறைஞ்சுவதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்?

No comments:

Post a Comment