Saturday, April 07, 2018

அரசியலுக்காக நடக்கும் அரக்கத்தனமான போர்

அரசியலுக்காக நடக்கும் அரக்கத்தனமான போர்
***********************************
(அ. முஹம்மது கான் பாகவி)

அரசியல் பதவி என்று வந்துவிட்டாலே, மனிதன் அரக்கன் ஆகிவிடுகிறான். ஈவு, இரக்கம், அன்பு போன்ற மென்மையான மனிதப் பண்புகளுக்கு அரசியலில் இடமிருப்பதில்லை. பதவிச் சுகம் ஒன்று மட்டுமே இலக்காகிவிட்ட மனிதன், மிருகத்தையும்விடக் கேவலத்திலும் கேவலமான பிறவியாகிப்போகிறான். இது, இன்றல்ல; நேற்றல்ல. நாடு, நகரம் என்ற அமைப்பு தோன்றிய நாள் முதலாய் இந்த வெறித்தனம் மனிதனிடம் குடிகொண்டுவிட்டது.
இஸ்லாமியத் தரவுகளில் இடம்பெறும் ‘ஷாம்’ தேசம் என்பது, இன்றைய சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான் முதலான மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு நாட்டின் பெயராக விளங்கியது. அதன் பெரும் பகுதி இன்றைய சிரியாவில் அடங்கியிருப்பதால், ‘ஷாம்’ என்றாலே ‘சிரியா’தான் எனப் பெயராகிப்போயிற்று. ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமான சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட சிரியா, 1 கோடிக்கும் அதிகமான மக்கட்தொகையைக் கொண்ட செழிப்பான நாடாகும்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் (திமஷ்க்), ‘பூவுலகச் சொர்க்கம்’ எனும் பெயர் பெற்றது. அந்த அளவிற்கு அந்நகரம் கட்டமைப்பு, அழகு, பசுமை, கனிவகைகள், தூய்மை, நீர்வளம், வசதிகள் ஆகியன நிறைந்த பூமியாகும். ஹலப், ஹிம்ஸ் (அல்லது ஹும்ஸ்), லாதிகிய்யா, தைருஸ் ஸூர், அல்ஃகூ(த்)தா ஆகியன சிரியாவின் முக்கிய நகரங்களாகும். தோட்டங்கள் நிறைந்த ‘அல்ஃகூத்தா’ நகரம்தான், தற்போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
தற்போதைய சிரியா
சிரியா நாட்டில் அரபியரே பெரும்பான்மையினர் ஆவர். அரேபிய முஸ்லிம்களில் சன்னி பிரிவினர், சலஃபிகள், ஷியாக்கள், ஷியாக்களிலேயே தற்போது மூர்க்கத்தனமாக சன்னிகளைக் கொன்று குவிக்கும் ‘அலவி’கள் ஆகியோர் உள்ளனர். கிறித்தவர்கள், யூதர்கள் ஆகியோரும் சிறுபான்மையினராக அங்கு வசிக்கின்றனர். கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், குர்துகள் எனப் பல்வேறு இனத்தாரும் அங்கு வாழ்கிறார்கள்.
சிரியா நாட்டின் வருமானத்தில் நாற்பது விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதிமூலம் கிடைத்துவந்தது. உள்நாட்டு போருக்குப்பின் கடனாளியாக மாறிவிட்டது சிரியா. எண்ணெய் ஏற்றுமதி மூன்றில் இரு மடங்கு குறைந்துவிட்டது. சுற்றுலாத் துறைமூலம் இருபது விழுக்காடு வருவாய் கிடைத்துவந்த நிலையில், இப்போது அத்துறையே படுத்துவிட்டது.
நாட்டு மக்களில் முப்பது விழுக்காட்டினர் ஏழைகளாகிப் போனார்கள். 11.4 விழுக்காட்டினர், வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுவிட்டனர். குழந்தைகளும் கையில் துப்பாக்கிகளுடன் சுற்ற வேண்டிய கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரில் 2013இல் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாண்டுபோயினர். அவர்களில் 11ஆயிரம் பேர் குழந்தைகள் என்பது கொடுமையின் உச்சம். அண்மையில் 11 நாட்களில் 602பேர் இறந்துபோனதில், 185பேர் குழந்தைகள், 109பேர் பெண்களாம்!
சிரியாவில் என்னதான் நடக்கிறது?
சிரியாவில் நடக்கும் அரக்கத்தனமான போருக்குக் காரணமே அதிகாரப் போட்டிதான். சண்டாளன் ஃபிர்அவ்னைப் போன்ற ஒருவன் அங்கே ஆட்சியில் அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கின்றான். அவன் பெயர் பஷ்ஷார் அல்அசத். ஷியா பிரிவினனான இவன், மக்களின் செல்வாக்கை இழந்தவன். இந்த அரக்கன் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்பது பெரும்பான்மை சிரியர்களின் வேட்கை. அதற்காகப் பலர் உயிரைக் கொடுத்துப் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டம் 11 ஆண்டுகளாக நீடிக்கிறது.
2011ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் தோன்றிய ‘அரபு வசந்தம்’ எழுச்சியின் ஒரு பகுதியே சிரிய மக்களின் இந்தப் போராட்டமும். அரபு நாடுகள் பலவற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இல்லை. சர்வாதிகார மன்னர் ஆட்சியே அங்கே கோலோச்சுகிறது. நாட்டு வளங்களை, ஆட்சியாளர்களின் குடும்பங்கள் சுரண்டுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்வு திணறடிக்கிறது. எதிர்த்தால் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
இக்கொடுமைகள் எல்லை தாண்டியதால் தன்னெழுச்சியாக மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு சிரியா, எகிப்து, துனீசியா, யமன், லிபியா, பஹ்ரைன் முதலிய நாடுகளில் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் வெடித்தன. சிரிய அதிபர், ராணுவத்தைக் கொண்டு போராட்டங்களை நசுக்கிவருகிறான். கிளர்ச்சியாளர்கள் பிரிந்து சிதறிக் கிடப்பதுதான், அசதுக்கு வசதியாகப் போனது.
அதிபரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படை ஒருபக்கம்; அமெரிக்க ஆதரவுடன் குர்து இன மக்கள் மற்றொரு பக்கம்; ஐ.எஸ் என்ற நயவஞ்சகர் கூட்டம் இன்னொரு பக்கம். இப்படி இவர்கள் சிதறிக்கிடக்க, சர்வாதிகாரி அசதுக்கு ஆதரவாக ஈரானும் ரஷியாவும் சீனாவும் ஆதரவுக் கரம் நீட்டி, இராணுவப் படைகளை அனுப்பி சிவிலியன்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்துவருகின்றன.
தங்களை சன்னி முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஐ.எஸ். முனாஃபிக் படைகள், ரஷியாவையோ சீனாவையோ ஈரானையோ அசதையோ தைரியமாக எதிர்கொண்டு தாக்குதல் தொடுத்திருக்க வேண்டுமா, இல்லையா? ஷைத்தான்கள் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்து அவர்கள் வேஷம் –முகமூடி கிழிந்துபோயிருப்பதுதான் உண்மை. இவர்களை ‘அறப்போராளிகள்’ என்று நம்பி, இவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளும் நல்ல இளைஞர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது.
அமெரிக்காவும் ரஷியாவும், ஏன் சீனாவும்கூட பிணம் தின்னும் கழுகுகள் என்பது உலகறிந்த உண்மை. எங்காவது உள்நாட்டுச் சண்டை மூளாதா? அடித்துக்கொள்ளும் இரு கோஷ்டிகளில் ஒன்றுக்கு ஆதரவு என்ற பெயரில், அவர்கள் அழைத்தோ, அல்லது அழைக்கவைத்தோ உள்ளே புகுந்து, அந்நாட்டு மக்களை வேட்டையாடி, ஆதரவு கோரிய கைகளில் ஆயுதங்களை விற்றுக் காசாக்கி, போர் நடக்கும்போதும் நடந்தபின்பும் அந்நாட்டின் வளங்களை அனுமதியோடு கொள்ளையடித்துக் கேவலமான பிழைப்பு பிழைப்பதே அவர்களின் வாடிக்கை!
ஈரானுக்கு என்ன வந்தது? இஸ்லாத்தில் ஒரு பெரும் கரும்புள்ளியாகத் தோன்றி, அன்று முதல் இன்றுவரை மார்க்கத்தின் தனித்தன்மையைச் சீரழித்து, எதிரிகளுக்கு வால் பிடித்து, பெரும்பான்மை முஸ்லிம்களை எதிர்ப்பதும், அவர்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கிக் குளிர் காய்வதும், நேரத்திற்கேற்ப நண்பர்களை மாற்றிக்கொண்டு பொதுஜனத்திற்குக் கொள்ளிவைப்பதும்தான் ஈரானியரின் குருதிக் குணமாகவே இருந்துவருகிறது.
அகண்ட பாரசீகத்தை உருவாக்கும் கனவில் மிதக்கும் ஈரான், தன் ஆட்களை விட்டு, முஸ்லிம் நாடுகளில் குழப்பம் விளைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது. சரியான ஈமானை என்றைக்கு அவர்கள் அடைமானம் வைத்துவிட்டு, யூதனான இப்னு சபாவைப் பின்பற்றத் தொடங்கினார்களோ அன்றைக்கே இச்சமுதாயத்தினர் விஷச் செடியாக மாறிவிட்டார்கள்.
அவர்களின் பிள்ளைதான் இந்த அசது எனும் கொடுங்கோலன். ஹிஸ்புல்லாஹ் என்ற ஷியா அமைப்பு லெபனானிலிருந்து தம் ஆட்களைத் திரட்டி சிரியாவுக்கு அனுப்பி, அசதைக் காப்பாற்றத் துடிக்கிறது. ஈரான் தன் நாட்டிலிருந்து மட்டுமன்றி, இராக், யமன் போன்ற நாடுகளிலிருந்தும் ஷியா துருப்புகளை சிரியாவுக்கு அனுப்பி அசதைத் தூக்கி நிறுத்த அலைகிறது.
நம் முன்னுள்ள கேள்வி
அக்கம்பக்கத்தில் உள்ள முஸ்லிம் நாடுகள் என்ன செய்கின்றன என்பதுதான் நம் முன்னுள்ள விடை தெரியாத வினாவாக உள்ளது. துருக்கியைத் தவிர, யாரும் வாய் திறந்ததாகத் தெரியவில்லையே! கொடுங்கோலன் அசதை எதிர்த்துப் போராடிவரும் படைகளுக்கும் போராளிகளுக்கும் அவர்கள் என்ன துணை செய்தார்கள்?
ஒன்று, சிரிய அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே சமாதானம் செய்வித்து, பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நியாயமான தேர்தல் நடத்தி, வெல்வோர் ஆள்வதற்கு வகை செய்ய வேண்டும். அரசைப் பணியவைக்க ஐ.நா.வையோ, அமெரிக்காவையோ, வேறு உகந்த நாடுகளையோ ஏன் அணுகக் கூடாது?
இல்லையா? அரசுக்கெதிரான கட்சிகளையும் படைகளையும் ஒன்றிணைத்து, வேண்டிய எல்லா வகையான உதவியையும் ஒத்துழைப்பையும் அளித்து, சனியனை விரட்டியடிக்க கைகோக்க வேண்டுமா, இல்லையா?
எங்களுக்கென்ன? நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணி, கண்ணை மூடிக்கொண்டால், உங்கள் நாட்டிலும் ஒரு ஃபிர்அவ்ன் தோன்றமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி தோன்றிவிட்டால், உங்களைக் காக்க மற்ற முஸ்லிம் நாடுகள் முன்வருமா? இப்படி எதையாவது யோசித்தார்களா என்று நமக்குத் தெரியவில்லை.
உண்மையைச் சொல்வதானால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் அடிமைகள் என்றும் எடுபிடிகள் என்றும் மக்கள் மனதில் பதிந்துவிட்ட கருத்து உண்மையோ என எண்ணத் தோன்றுகிறது. சகோதரச் சண்டையில் ருசி கண்டு, எதிரியின் ஆயுதக் கிடங்கிற்குச் சந்தையாகச் செயல்படும் சொத்தைகளா அவர்கள்? அந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடவோ திராணியற்றவர்கள்தானே!
பிற மத்தியக் கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்கேயும் உட்பூசல்களையும் அரசியல் எதிரிகளையும் சமாளிக்கவே நேரம் இல்லாமல் திகைப்பவர்கள்; நாட்டை முன்னேற்றப்படுத்த வக்கில்லாமல், இறைவன் கொடுத்த இயற்கை வளங்களைத் தின்று தீர்த்து, அனுபவித்து, ஆடம்பரத்தில் இன்பம் காணும் உல்லாசப் பிரியர்கள்.
மொத்தத்தில், கனடா நாட்டுக்காரனுக்கு ஏற்பட்ட இரக்கம்கூட இல்லாத கல்நெஞ்சர்கள் இவர்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
இறுதியாக, இறைவா!
இறுதியாக, இறைவா! உன்னிடம் கையேந்துவதைத் தவிர, வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை. குண்டு துளைத்த இளங்குருத்துகளைப் பார்க்கும்போது, எங்கள் நெஞ்சம் வெடித்துவிடும்போல் தெரிகிறது. எங்கள் முஸ்லிம் அன்னையரின், அடுக்கிவைக்கப்படும் ஜனாஸாக்களைக் காணும்போது உண்மையிலேயே துடித்துப்போகிறோம்.
தந்தையின் பிணத்திற்கருகே அமர்ந்துகொண்டு, அவர் தலையைத் தொட்டுக் கதறும் பச்சிளம் குழந்தையைக் கண்டு கண்ணீர் வடிப்பதைத் தவிர எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! தான் பெற்ற செல்வத்தின் இரத்தம் தோய்ந்த உடம்பைத் தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரைப் பார்த்தும் ஆறுதல்கூட சொல்ல முடியாத அபலைகளாகிவிட்டோமே நாங்கள்!
இறைவா! எங்களை மன்னித்துவிடு! எங்கள் இயலாமையை மறந்துவிடு! அந்த அப்பாவி மக்களுக்குக் கருணை செய்! அந்நாட்டில் அமைதியைக் கொண்டுவா! கொடுங்கோலனைக் கொளுத்திவிடு! நல்லாட்சியைக் கொண்டுவா!
வேறு என்ன சொல்ல முடியும் என்னால்?
____________________________

No comments:

Post a Comment