Thursday, October 13, 2011

கொள்ளைபோகும் இராக் எண்ணெய் வளம்


- கான் பாகவி


ண்ணெய் வளமிக்க மேற்காசிய நாடுகளில் இராக் முதலிடம் வகிக்கிறது. இராக்கில் பூமிக்கடியில் 505 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) பீப்பாய்கள் (Barrel) அளவுக்கு பெட்ரோல் உண்டு. அவற்றில் 134 பில்லியன் பீப்பாய் பெட்ரோல் வெளியே எடுப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.

இது கடந்த அக்டோபரில் இராக் எண்ணெய் அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரமாகும். ஆனால், சர்வதேச அறிக்கை ஒன்று, 240 முதல் 300 பில்லியன் பேரல்கள் வரையிலான பெட்ரோல் தற்போது வெளியே எடுக்க வாய்ப்பு உண்டு என்கிறது.

இதன் மூலம், எண்ணெய் வளத்தில் இராக் முதலிடத்தைப் பிடிக்கிறது எனலாம். இதுவரை 264.5 பில்லியன் பேரல்கள் என்ற அளவில் முதலிடத்தில் இருந்த சஊதியை இராக் முந்திவிட்டது தெளிவாகிறது. 211.1 பில்லியன் பேரல் அளவில் வெனிஸுலா இரண்டாம் இடத்தையும், 137 பில்லியன் பேரல்கள் அளவில் ஈரான் மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தன. பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஓபெக்’ [OPEC]  வெளியிட்ட கணக்காகும் இது.

இராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்து அந்நாட்டை இன்றுவரைத் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்கு, இராக்கில் உள்ள எண்ணெய் வளம்தான் காரணமா என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய கட்டாயத்தை இப்புள்ளிவிவரங்கள் ஏற்படுத்திவிட்டன.


2003ஆம் ஆண்டுக்குப்பின் இராக்கில் எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு முதல் காரணம், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புக்கு முந்தைய கடைசி இரு மாதங்களில் 2.85 மில்லியன் (1 மில்லியன் 10 லட்சம்) பேரல்களாக இருந்த கச்சா எண்ணெய்யின் தினசரி உற்பத்தி, ஆக்கிரமிப்புக்குப் பிறகு 2.3 மில்லியன் பேரல்களாகக் குறைந்தது. அதாவது நாளொன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்கள் குறைந்துபோயின.

அமெரிக்க ஆக்கிரமிப்பு செய்த நாள் முதலாய் இராக்கின் எண்ணெய் உற்பத்தி மொத்தத்தில் 60 விழுக்காடு குறைந்துபோனது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் 5 முதல் 6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு எண்ணெய்ப் பொருட்களை இராக் இறக்குமதி செய்துவருகிறது.

இராக் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த முதல் வாரங்களில் நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகளையும் அரசு அலுவலகங்களையும் அமெரிக்க ராணும் இடித்துத் தரைமட்டமாக்கியது; எரித்துச் சாம்பலாக்கியது. இனி இவற்றைச் செப்பனிட்டுப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமானால், எல்லா வசதிகளும் உள்ள பெரிய எண்ணெய் நிறுவனங்களாலேயே அது சாத்தியமாகும். இத்தகைய நிறுவனங்கள் அமெரிக்காவிடமும் அதன் நேச நாடுகளிடமும்தான் உண்டு.

இது தொடர்பான ஒப்பந்தங்களை அமெரிக்க தன் நேச நாடுகளுடன் இரகசியமாக ஏற்கெனவே இறுதி செய்துவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா இராக்கைவிட்டு வெளியேறினாலும், புனரமைப்பு என்ற பெயரில் மேற்கு நாடுகள் இராக்கைச் சுரண்டப்போகின்றன.

இன்னொரு பக்கம், 2003க்குப் பிறகு இராக்கின் நிர்வாக அமைப்பும் சட்ட ஒழுங்கும் அடியோடு சிதைந்துபோயின. இதனால், பெட்ரோல் உள்பட எல்லாப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. அரசின் நிதி ஆதாரம் ஆட்டம் காணும் அளவுக்கு நாட்டின் பட்ஜெட் எகிறியது. கடந்த ஆண்டு இராக்கின் வரவு - செலவு திட்டம் 320 பில்லியன் இராக் தீனார் (சுமார் 280 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

இது, கடந்த 70 ஆண்டுகளாக இராக் கண்டிராத பயங்கரமான பட்ஜெட் என்கிறார்கள். மின்வெட்டை அறிந்திராத இராக் மக்கள், இன்று இருட்டிலேயே தங்களது வாழ்வைக் கழிக்கிறார்களாம்! சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் தினமும் 18 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. நல்ல குடிநீருக்குக் கடுமையான பஞ்சம். 25 விழுக்காடு மக்களுக்குக்கூட குடிநீர் சரியாகக் கிடைப்பதில்லை.

சுகாதாரத் துறை செயலிழந்து ஆண்டுகள் பல கழிந்துவிட்டன. குர்திஸ்தான் மாநிலம் தவிர இராக்கில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் மகப்பேறு சிகிச்சைகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெறவே இல்லையாம்?

2008ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 50 விழுக்காட்டுக்கு மேலாக எந்த அமைச்சகமும் செலவிடவில்லை; செலவிட இயலவில்லை. சில அமைச்சகங்கள் 20 சதவீதத்தைக்கூட எட்டவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

உள்கட்டமைப்புகளை அனைவரும் ஒன்றுசேர்ந்து நிலைநிறுத்த வேண்டியதிருக்க, இராக் மக்கள் இன்னும் தங்களிடையே சண்டையிட்டுக்கொண்டு நாட்டை மேலும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பழிவாங்குவதிலும் கணக்குத் தீர்ப்பதிலும் தீவிரம் காட்டிவரும் இராக்கியர் தங்களிடையேயான பிரச்சினைகளைத் தாங்களே பேசித் தீர்க்காமல் டெஹ்ரான், லண்டன், நியூயார்க் என அந்நிய பூமியில் எதிர்க்கட்சிகள் இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இராக்கின் சாலைகள் இரத்தத்தால் சிவக்கின்றன; வானுயர்ந்த கட்டடங்கள் எல்லாம் அகதிகள் முகாம்களாகின்றன.

இராக்கில் எண்ணெய் துறைக்கு மட்டும் 2003 - 2011வரை 493 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இராக்கியரின் ஆண்டு வருமானம் 3,500 டாலரிலிருந்து 18ஆயிரம் டாலராக உயர்வதற்கான வாய்ப்பு இருந்தும் நிர்வாகச் சீர்கேட்டால் 8.5 மில்லியன் வேலை வாய்ப்புகள் வீணாகிக் கிடக்கின்றன.

இராக்கில் எண்ணெய் உற்பத்தி தாமதப்படுவதால் 2006 - 2011 வரை 227 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுவே 2012 - 2016 இடைப்பட்ட காலங்களில் 538 பில்லியன் டாலர்களாக உயரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இன்னொரு கொடுமையும் அங்கு அரங்கேறுகிறது. அதுதான் பெட்ரோல் கடத்தல். சட்ட ஒழுங்கு சீர்குலைவைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் இக்கடத்தல் வேலையில் ஈடுபடுகின்றனராம்! தற்போதைய அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் (ஷியா) கட்சிகள் ஈரானுக்கு பெட்ரோலைக் கடத்துகின்றன. அங்கு பாதி விலைக்கு விற்று நாட்டைச் சுரண்டுகின்றன. இதற்கு ஈரானும் உடந்தை.

மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே குர்திஸ்தான் மாநில அரசு எண்ணெய் விற்பனையில் இறங்கிவிட்டது. இதனாலும் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

ஆக, வெளியிலிருந்து வந்த குள்ளநரிக் கூட்டம் மான்களை வேட்டையாடிக்கொண்டிருக்க, மான்கள் தங்களுக்குள் முட்டிமோதி செத்து மடிந்துகொண்டிருக்கின்றன.

வனவிலங்குகளுக்கு மனிதநேயம் வரப்போவதுமில்லை; மான்களின் சண்டை ஓயப்போவதுமில்லை. தொலைவிலிருந்து கேட்கும் அவர்களின் ஓலத்தை கேட்டுக்கொண்டிருப்பதுதான் நம் தலைவிதியோ!
மூலம்: அல்முஜ்தமா 

No comments:

Post a Comment