பொதுவாக இன்று ஹாஜிகள் ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜையே மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சஊதிக்கு வெளியிலிருந்து வரும் ஹாஜிகள் இந்த வகை ஹஜ் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதுதான், முதலில் ‘உம்ரா’வை முடித்துவிட்டுப் பிறகு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு வசதியாக இருக்கும்.
விமானத்தில் ஹாஜிகள் |
‘யலம்லம்’ வரைபடம் |
உம்ரா அல்லது ஹஜ் செய்வோர், அதற்காக உறுதிமொழி எடுத்துக்கொள்வதுடன் சில கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நகம் வெட்டக் கூடாது; முடி களையவோ வெட்டவோ கூடாது; உடலுக்கோ உடைக்கோ நறுமணம் பூசக் கூடாது; தைத்த ஆடை அணியக் கூடாது; தலையைத் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் மறைக்கக் கூடாது (இந்த இரண்டிலும் பெண்களுக்கு விலக்கு); பாலுறவு கொள்ளக் கூடாது.
சுருங்கக் கூறின், அலங்காரம் ஆகாது. எல்லாம் இருந்தும், அல்லாஹ்வுக்காக எதையும் அனுபவிக்காமல் துறக்கிறார் புனிதப் பயணி. தம்மை ஒரு பரதேசிபோல இறைமுன் காட்டி, தாம் ஓர் அடிமைதான் என்பதைச் செயல்பூர்வமாக மெய்ப்பிக்கிறார் அவர்.
அதற்காக, தவிர்க்க முடியாத சில நடவடிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்பதில் சிலர் பிடிவாதமாக இருப்பது தேவைதானா? தூரிகை (பிரஷ்) கொண்டும் பற்பசை கொண்டும் பல் துலக்கலாகாது என்றும் ‘மிஸ்வாக்’ எனும் பல் குச்சியாலேயே துலக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகின்றனர். பற்பசையில் நறுமணம் இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
நறுமணம் இல்லாத, மருத்துவ குணமுள்ள பற்பசைகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? வாடையே இருக்கக் கூடாது என்றால், மிஸ்வாக் குச்சியிலும் வாடை இருக்கத்தானே செய்கிறது? இவ்வாறுதான், உடலில் பயன்படுத்தும் சோப்பு. நறுமணமில்லாத, அழுக்கை அகற்றும் குணமுள்ளதாக சோப்பு இருந்தால் அதைப் பயன்படுத்துவதிலும் தவறில்லை. இவ்வாறு இனம் பிரிப்பது சிரமம் என்று கருதுவோர் சோப்பைத் தவிர்ப்பதே முறை.
உம்ரா திருமக்கா நகரை அடைந்து, புனித கஅபா வந்தவுடன் உம்ரா கிரியைகளைப் புனிதப் பயணிகள் மேற்கொள்வர். ‘உம்ரா’ என்பது மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரு வழிபாடாகும். 1. புனித கஅபாவை ‘தவாஃப் செய்தல். அதாவது ஏழு முறை கஅபாவைச் சுற்றிவர வேண்டும்.
இங்கு கஅபாவின் அமைப்பு குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. கஅபா ஒரு சதுர வடிவ கட்டடமாகும். கஅபாவின் தலைவாயில் உள்ள பகுதி கிழக்கு நோக்கி உள்ளது. அரைவட்டப் பகுதி (ஹத்தீம் அல்லது ஹிஜ்ரு இஸ்மாயீல்) வடக்கு நோக்கி உள்ளது. தலைவாயிலுக்கு நேர் எதிர்ப் பகுதி மேற்கு நோக்கியும் அரைவட்டச் சுவருக்கு நேர் எதிர்ப் பகுதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
புனித கஅபாவின் தென்கிழக்கு மூலையில்தான் ‘அல்ஹஜருல் அஸ்வத்’ எனும் கறுப்புக் கல் 1.15 மீட்டர் உயரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 25 செ.மீ; அகலம் 17 செ.மீ. ‘கறுப்புக் கல்’ ஒரு காலத்தில் ஒரே கல்லாக இருந்தது. பின்னர் ஓர் அசம்பாவிதத்தின்போது உடைந்து எட்டு துண்டுகளாகிப்போனது. அந்தத் துண்டுகளையே பளிங்கிக் கல்லில் பதித்துவைத்துள்ளனர்.
புனித கஅபாவின் தென்மேற்கு மூலைக்கே ‘யமானீ’ மூலை என்பர். அதில் எதுவும் பதிக்கப்படவில்லை. என்றாலும், ஓர் அடையாளம் இருக்கும். மற்ற மூலைகளிலும் எதுவும் பதிக்கப்படவில்லை. கஅபாவுக்கு வடக்கே உள்ள அரைவட்டச் சுவரையும் சேர்த்தே சுற்ற வேண்டும். அதுவும் புனித கஅபாவின் ஒரு பகுதிதான். அச்சுவரின் உயரம் 1.32 மீட்டர்; அகலம் 1.55 மீட்டர். இச்சுவருக்கு மேலே கஅபாவில் ‘மீஸாப்’ என்றொரு குழாய் போன்ற பகுதி உண்டு. கஅபாவின் கூரையைக் கழுவினாலோ மழை பெய்தாலோ மேலிருந்து நீர் வடிவதற்காகக் கட்டப்பட்ட வடிகால்தான் மீஸாப்.
தவாஃப் செய்யும் முறை |
அங்கிருந்து ஹஜருல் அஸ்வத் மூலைக்கு வர வேண்டும். இடையில் யமானீ -ஹஜருல் அஸ்வத் ஆகிய மூலைகளுக்கிடையே ‘ரப்பனா ஆத்தினா’ துஆவை ஓதிக்கொள்வது நபிவழி (சுன்னத்) ஆகும். ஹஜருல் அஸ்வத் மூலைக்கு வந்தவுடன், முடிந்தால் அதை முத்தமிட வேண்டும். முத்துவதற்கு முடியாதபோது கையால் அல்லது வேறு பொருளால் கல்லைத் தொட்டு, கையை அல்லது அப்பொருளை முத்தமிட வேண்டும். அதுவும் சாத்தியமாகாதபோது, அதை நோக்கிக் கையால் சைகை செய்தால் போதும்.
‘ஹஜருல் அஸ்வத்’ கல் |
இதைத் தவிர, ஒவ்வொரு சுற்றின்போதும் இன்ன ‘துஆ’தான் ஓத வேண்டும் என்பதற்கெல்லாம் நம்பத் தகுந்த ஆதாரம் இல்லை. நமக்குத் தெரிந்த தஸ்பீஹ், அல்லது துஆ, அல்லது குர்ஆன் சூரா ஓதிக்கொள்ளலாம். தவாஃப் செய்யும்போது அவசியமில்லாத பேச்சுகளையும் உரையாடல்களையும் தவிர்ப்பது நல்லது.
மகாமு இப்ராஹீம் |
இப்ராஹீம் நபியின் பாதச் சுவடு |
ஸஃபா - மர்வா சஃயு
2. உம்ராவின் இரண்டாவது அம்சம் ஸஃபா மலைக்கும் மர்வா மலைக்கும் இடையே சுற்றுவதாகும். இயன்ற வரை, தவாஃபை முடித்த கையோடு சஃயு செய்துவிட வேண்டும்.
‘ஸஃபா’ என்பது கஅபாவுக்குத் தென்கிழக்கே 130 மீட்டர் தொலைவில் உள்ள சிறிய மலையாகும். இப்போது கண்ணாடி அறைக்குள் அது அமைந்திருக்கிறது. ஹஜருல் அஸ்வதுக்குத் தெற்கே அதற்கு வழி உண்டு.
‘மர்வா’ என்பது, புனித கஅபாவுக்கு வடகிழக்கே 300 மீட்டர் தொலைவில் உள்ள சிறு மலையாகும். அதில் மலையே தெரியாத அளவுக்குக் கட்டடம் எழுப்பப்பட்டுவிட்டது.
ஸஃபா மர்வா சஃயு ஓடும் பாதை |
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு சுற்று; மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு மீண்டும் வருவது இன்னொரு சுற்று. இப்படியே ஏழு முறை சுற்ற வேண்டும். இந்தச் சுற்றுப் பாதை 390 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் கொண்டது. ஏழு முறை சுற்ற வேண்டுமானால், 2.73 கி.மீ. நடக்க வேண்டும். ஒரே நேரத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் சஃயு செய்யலாம்.
ஸஃபா - மர்வா இடையே சுற்றும்போது இன்ன ‘துஆ’தான் ஓத வேண்டும் என்ற குறிப்பு ஏதுமில்லை. தெரிந்த தஸ்பீஹ், துஆ, குர்ஆன் சூராக்களை ஓதலாம். கஅபாவை தவாஃப் செய்யும்போது அங்கத் தூய்மை (உளூ) உடன் இருப்பது அவசியம். ஸஃபா - மர்வா இடையே சுற்றும்போது தூய்மையுடன் இருப்பது நல்லது; கட்டாயமல்ல.
தலைமுடி களைதல் 3. உம்ராவின் மூன்றாவது அம்சம் தலைமுடி களைவதாகும். முதலில் தவாஃப்; அடுத்து சஃயு செய்து முடித்தவுடன் தலைமுடியை மழித்துக்கொள்ள வேண்டும்; அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். மழிப்பதே சிறந்தது.
எனினும், உம்ரா முடிந்த ஒருசில நாட்களிலேயே ஹஜ் கிரியைகள் தொடங்குவதாக இருந்தால், உம்ராவுக்குப்பின் தலைமுடியைக் குறைத்துக்கொள்வதே நன்று. அப்போதுதான், ஹஜ் முடிந்தபின் தலைமுடியை மழிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
ஆண்களைப் பொறுத்த வரை, அவர்கள் மழித்தாலும் குறைத்தாலும் தலைமுடி முழுக்கப் பரவலாக மழிக்க வேண்டும்; அல்லது குறைக்க வேண்டும். தலையில் சில பகுதியைச் சிறைத்துவிட்டு, அல்லது குறைத்துவிட்டு வேறு பகுதியை வெறுமனே விட்டுவிடலாகாது.
பெண்களைப் பொறுத்தமட்டில், விரல் நுனி அளவுக்குத் தலைமுடியின் ஓரத்தை வெட்டிக்கொண்டால் போதும்.
இத்துடன் உம்ராவின் கிரியைகள் நிறைவுபெறும். இதன்பின் ஹஜ்ஜுக்கு நாட்கள் இருந்தால், இஹ்ராமைக் களைந்துகொண்டு சாதாரணமாக இருக்கலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் இஹ்ராமுடைய கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக இருப்பதாலேயே, இந்த ஹஜ் முறைக்கு ‘தமத்துஉ’ (ஓய்வெடுத்தல்) எனப் பெயர் வந்தது.
உம்ரா - ஹஜ் இடைப்பட்ட காலம் உம்ராவை நிறைவு செய்தபின் ஹஜ் நாளை அடைய சிலருக்கு 20 நாட்கள், சிலருக்கு 15 அல்லது 10 நாட்கள் இடைவெளி இருக்கலாம். இந்நாட்களில் சிலர் மதீனா சென்று வந்துவிடுவர். சிலர் ஹஜ் முடிந்தபின் மதீனா செல்வதுண்டு.
இந்த இடைப்பட்ட நாட்களில் மக்காவில் தங்கியிருப்போர் கூடுதலாகப் பல உம்ராக்களை மீண்டும் மீண்டும் செய்து முடிக்கின்றனர். ஒருமுறை, தன்யீமில் உள்ள ஆயிஷா பள்ளிவாசலுக்குச் சென்று இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்து உம்ரா செய்கின்றனர். இன்னொரு முறை ‘ஜிஇர்ரானா’ எனும் இடத்திற்குச் சென்று இஹ்ராம் கட்டி, ‘பெரிய’ உம்ரா செய்கின்றனர்.
இவ்வாறு கூடுதலாகப் பல உம்ராக்கள் செய்ய முன்மாதிரி இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். சஊதி அரசு புனிதப் பயணிகளுக்குத் திரும்பத் திரும்ப ஓர் அறிவிப்பைச் செய்துவருகிறது. ஏற்கெனவே உம்ரா செய்து முடித்தவர்கள், அடுத்தடுத்து வரும் பயணிகள் உம்ராவைச் சிரமமின்றி மேற்கொள்ள வழி விடுங்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு.
ஆம்! கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்வதற்கும் ஸஃபா - மர்வா இடையே சுற்றுவதற்கும் நாள் செல்லச் செல்ல கடும் நெருக்கடியும் நெரிசலும் ஏற்பட்டு, பயணிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த நெரிசலுக்குக் காரணமே ஒரே நபர் பல தடவை உம்ரா செய்வதுதான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விடைபெறும் ஹஜ்ஜில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம் சென்று இஹ்ராம் கட்டி வந்து உம்ரா செய்தது உண்மைதான். ஹஜ்ஜுக்குமுன் உம்ரா செய்ய முடியாமல் ‘அரஃபா’ நாள்வரை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அதனால், ஹஜ் முடிந்தபின் இவ்வாறு உம்ரா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள். (புகாரீ, முஸ்லிம்)
நாம்தான் முன்பே -மக்கா வந்தவுடனேயே- உம்ராவை நிறைவேற்றிவிடுகிறோமே! அவ்வாறே ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு நடந்த மக்கா வெற்றிக்குப்பின் ஹுனைனில் கிடைத்த போர்ச் செல்வங்களை மக்காவுக்கருகில் உள்ள ‘ஜிஅரானா’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள். அப்போது அந்த இடத்தில் இஹ்ராம் கட்டி உம்ரா மட்டும் நிறைவேற்றினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
இதற்கும் இப்போது ஹாஜிகள் செய்வதற்கும் என்ன தொடர்பு? நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபின் நான்கு முறை உம்ரா செய்துள்ளார்கள். ஒவ்வொன்றும் தனித்தனி ஆண்டுகளில் நடந்தது. நபியவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் ஒரே உம்ராதான் செய்தார்கள். நபியவர்கள் செய்த ஹஜ் ‘கிரான்’ (ஒரே இஹ்ராமில் உம்ராவும் ஹஜ்ஜும் நிறைவேற்றல்) ஆகும்.
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இரண்டு (தடவை) உம்ரா செய்துவந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரே ஆண்டில் மூன்று தடவை உம்ரா செய்திருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் ஓராண்டில் தனித் தனிப் பயணத்தில் பல முறை உம்ரா செய்தவர்கள். ஒரே பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நபித்தோழர்கள் யாரும் உம்ரா செய்திருந்தாலும், அது உம்ராவுக்கென மேற்கொண்ட தனிப் பயணத்தில் நடந்திருக்கும்; ஹஜ் பயணத்தில் அல்ல.
ஹஜ் பயணத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட தடவை முன்னோர்கள் யாரும் உம்ரா செய்திருந்தாலும், அக்காலத்தில் இவ்வளவு கடுமையான கூட்ட நெரிசல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இரண்டு (தடவை) உம்ரா செய்துவந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரே ஆண்டில் மூன்று தடவை உம்ரா செய்திருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் ஓராண்டில் தனித் தனிப் பயணத்தில் பல முறை உம்ரா செய்தவர்கள். ஒரே பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நபித்தோழர்கள் யாரும் உம்ரா செய்திருந்தாலும், அது உம்ராவுக்கென மேற்கொண்ட தனிப் பயணத்தில் நடந்திருக்கும்; ஹஜ் பயணத்தில் அல்ல.
ஹஜ் பயணத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட தடவை முன்னோர்கள் யாரும் உம்ரா செய்திருந்தாலும், அக்காலத்தில் இவ்வளவு கடுமையான கூட்ட நெரிசல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
எனவே, கூடுதல் உம்ரா செய்ய விரும்பும் ஹாஜிகள் அடுத்தவருக்கு வாய்ப்பளித்து நெரிசலைக் குறைப்பதற்கு உதவ வேண்டும்.
என்ன செய்யலாம்? இந்த இடைப்பட்ட காலத்தில் செய்வதற்கு நிறைய வழிபாடுகள் உள்ளன. இயன்ற வரை, ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் புனித ஹரம் பள்ளிவாசலில் ஹாஜிகள் நிறைவேற்ற வேண்டும்; அதில் வைராக்கியமாக இருக்க வேண்டும்.
அத்துடன் தஹஜ்ஜுத் தொழுகைக்கே புனித ஹரமுக்குச் சென்றுவிட வேண்டும். அங்கு எட்டு ரக்அத்கள் தனியாகத் தொழுதுவிட்டு, தஸ்பீஹ், திக்ர், குர்ஆன் ஓதுதல் ஆகிய வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். பின்னர் துஆ செய்ய வேண்டும். துஆவில் மனமுருகி அழுது மன்றாடி அல்லாஹ்விடம் இறைஞ்சி கேட்க வேண்டும்.
பாவங்களை மன்னிக்குமாறும், இனிமேல் பாவம் செய்யாமல் காக்குமாறும், மார்க்கக் கடமைகளைச் சீராகச் செய்யவும் பாவங்களிலிருந்து விலகியிருக்கவும் உதவுமாறும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். வாழ்க்கை வசதி உடல்நலம், கல்வி முன்னேற்றம், பாதுகாப்பு, நற்குணம், நன்னடத்தை, மறுமை விடுதலை ஆகியவற்றை நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.
அஸீஸிய்யா போன்ற இடங்களில் தங்கியிருப்போர் தஹஜ்ஜுதுக்கே புனித ஹரமுக்கு வந்து, ஃபஜ்ர் தொழுகையையும் முடித்துக்கொண்டு வீடு திரும்பலாம். லுஹ்ர் தொழுகைக்காக ஹரமுக்கு வர முடியாதவர்கள் இருக்கும் இடத்திலுள்ள பள்ளிவாசல்களில் தொழுதுகொள்ளலாம். பிறகு அஸ்ருக்கு ஹரம் சென்றால், இஷாவரை இருந்து மேற்சொன்ன வழிபாடுகளில் ஈடுபடலாம்.
வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்கு அவசியம் ஹரமுக்குச் சென்றுவிடுங்கள். ஜுமுஆவில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், காலை பத்து மணிக்கெல்லாம் ஹரமுக்குள் நுழைந்துவிட வேண்டும். இல்லையேல் சாலையில்தான் தொழ வேண்டியது வரும்.
இதுவெல்லாம், மனிதனுக்கு வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய பெரும் பேறுகளாகும். வாய்ப்புகளைப் பெற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பை நழுவவிட்டு, வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பிவிடக் கூடாது.
புனித ஹரம் பள்ளிவாசல் என்பது, கஅபாவைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள விசாலமான பெரிய பள்ளிவாசலாகும். இதற்குச் சிறியதும் பெரியதுமாக 155 தலைவாயில்கள் உள்ளன. அவற்றில் 32 தலைவாயில்களில் மின் ஏணி (எஸ்கலேட்டர்) உள்ளது. ஹரம் பள்ளிவாசலின் சுற்றளவு 2 லட்சத்து 66 ஆயிரத்து 168 சதுர மீட்டராகும். ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தொழலாம்.
புனித ஹரம் பள்ளிவாசலைச் சுற்றி -அதற்கு வெளியேயும் மக்கள் தொழுவதுண்டு. அதன் சுற்றளவு 88ஆயிரம் சதுர மீட்டராகும். கழிப்பறை வசதி, அங்கத்தூய்மை செய்வதற்கான வசதி, குடிதண்ணீர் (ஸம்ஸம்) வசதி, குளிப்பதற்கான வசதி பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளது.
Thanks Hazrath. Very useful.
ReplyDelete