Thursday, October 16, 2014

மோடி அரசின் தொழில் கொள்கை


. முஹம்மது கான் பாகவி

ந்தியாவின் தொழில்துறை ஆர்வலர்கள், எது நடந்துவிடக் கூடாது என அஞ்சினார்களோ அது வேங்கைப் பாய்ச்சலில் வெளிப்படையாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மன்மோகன்சிங் அரசு ஒரு கதவை மட்டும் திறந்து வைத்தது என்றால், நரேந்திர மோடியின் அரசு தடுப்புச் சுவரையே அகற்றி, வெளிநாட்டு நிறுவனங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து ராஜமரியாதையோடு வரவேற்கிறது.

இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இண்டியா) எனும் கோஷத்தை அண்மையில் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, உடல் முழுவதும் இயந்திரப் பாகங்கள் சுழலும் சிங்கத்தின் படத்தை, தம் பொருளாதாரக் கொள்கையின் சின்னமாக அறிமுகப்படுத்தினார். வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து, இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகமாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

தமது கோஷத்திற்கு ஆதரவாக மோடி தமது அமெரிக்கப் பயணத்தில் உதிர்த்த தத்துவம் என்ன தெரியுமா? “அரசாங்கம் தொழில்களில் ஈடுபடக் கூடாது. அதன் வேலை தொழில்களுக்குத் துணையாக இருப்பதுதான்”.

ஒரு நாடு தன்னிறைவு பெற இது ஒரு சிறந்த திட்டம்தானே! என்கிறீர்களா? பன்னாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவில் தன் தொழிற்சாலையைத் திறந்தால் நமக்குப் பல அனுகூலங்கள் கிடைக்குமல்லவா? உற்பத்தியாகும் பொருட்கள் உள்நாட்டிலேயே கிடைக்கும்; இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம் இந்தியக் குடும்பங்களில் வளம் சேரும்; அரசாங்கத்திற்கு வரிகள்மூலம் வருவாய் வரும்; இங்கு தயாராகும் பொருட்களில் ‘மேட் இன் இண்டியா’ முத்திரை பதிக்கப்படுவதால் வெளிநாடுகளில் இந்தியாவின் தொழில் புகழ் பரவும்... இப்படி பல அனுகூலங்கள்!

ஆனால், இதற்காக இந்தியா கொடுக்கும் விலையைக் கணக்கிட்டால், அனுகூலத்தைவிட இழப்புகளே அதிகம் என்பது புரியும். தொழிலில் இலாபமும் உண்டு; நஷ்டமும் உண்டு. ஆனால், இலாபத்தைவிட நஷ்டமே அதிகம் எனும்போது பெருமைக்காகத் தொழில் செய்வதாகவே அமையும். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி பூஜ்யமாகவே இருக்கும். இந்த பூஜ்ய வளர்ச்சிக்காக இழப்புகள் வேறு! இதுவா வளர்ச்சி!

நோக்கியா ஓர் உதாரணம்


சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் நோக்கியா தொழிற்சாலை ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்தத் தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 8 ஆயிரம் பேர் நேரடியாகவும் 12 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றுகின்றனர்.

இங்கு தயாராகும் செல்போன்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த நிறுவனம் தொழில் தொடங்குவதற்கு குறைந்த விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், வரிச்சலுகை முதலான சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அளித்தன. ஆனால், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை இந்நிறுவனம் வேலைக்கு அமர்த்தியது.

தொழிலாளர் நலச் சட்டங்களோ தொழிற்சங்க உரிமைகளோ இங்கு கிடையாது. தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு மட்டும் குறைந்த விலையில் சுரண்டப்பட்டது. பெருமளவில் செல்போன்களை உற்பத்தி செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் இலாபம் கண்டது. மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைக்கூட செலுத்தவில்லை.

இந்நிலையில்தான், கடந்த மார்ச் மாதம் நோக்கியா நிறுவனத்தை (எல்லா கிளைகளையும்) மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியது. இதையடுத்து, உள்நாட்டுத் தேவைக்கென ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஆலை, செல்போன்களை ஏற்றுமதி செய்வதால் ரூ.2,400 கோடி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு நோட்டீல் அனுப்பியது. அத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றும் முன்பாக ரூ. 3,500 கோடியை காப்பீட்டுத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று வரி தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் மார்ச் 14 அன்று ஆணையிட்டது.

இதனால் ஸ்ரீபெரும்புதூர் ஆலையை மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த ஆலையிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்து அளிப்பதற்கான சேவை ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தையும் வரும் நவம்பர் முதல் தேதிமுதல் ரத்துச் செய்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது.

கடந்த மார்ச்வரை மாதத்திற்கு 1.30 கோடி செல்போன்கள் தயாரிக்கப்பட்டுவந்த நிலைமாறி, தற்போது 40 லட்சமே தயாரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர், அது மட்டுமன்றி, நவம்பரிலிருந்து உற்பத்தியையே நிறுத்தப்போவதாக அந்த ஆலை நிர்வாகம் இப்போது அறிவித்துவிட்டது. இதனால் 800-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள்.

பின்லாந்து நாட்டுக்காரன், இந்தியா கொடுத்த எல்லா சலுகைகளையும் அனுபவித்து, குறைந்த ஊதியத்தில் இந்தியத் தொழிலாளர்களிடம் வேலையும் வாங்கிக்கொண்டு, கோடிக்கணக்கான டாலர்கள் இலாபமும் ஈட்டிக்கொண்டு, இறுதியில் டாடா காட்டிவிட்டுப் போகப் போகிறான்.

இப்போது சொல்லுங்கள்! இதில் யாருக்கு அனுகூலம்? யாருக்கு இழப்பு? நன்மையைவிடச் சேதம் யாருக்கு அதிகம்? நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்!

இதுதான் மோடி வித்தை

இப்படி நாட்டு வளங்களையும் தொழிலாளர்களின் வியர்வையையும் வழித்தெடுத்து தானம் செய்துவிட்டு, கார்ப்பரேட் முதலாளிகளை அதிலும் அந்நிய முதலாளிகளை- கொழுக்க வைக்கத்தான் நம் பிரதமர் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் போய் தொழிலதிபர்களை ஒன்றுகூட்டி, இந்தியாவின் கதவு திறந்திருக்கிறது; வந்து உங்கள் திறமையைக் காட்டுங்கள் என உரத்த குரலெழுப்பிவிட்டு வந்தார்போலும்!

அழைப்பு விடுத்ததோடு நிறுத்தவில்லை பிரதமர். பன்னாட்டு நிறுவனங்களுக்காகப் புதிய பல சலுகைகளையும் அறிவித்தார். சட்டங்களைக்கூட உங்களுக்காக மாற்றவும் நீக்கவும் தயார் என்றும் அறிவித்தார்.

அறிவித்ததோடு நில்லாமல் செயலிலும் இறங்கிவிட்டார் பிரதமர் மோடி:

டாடா குழுமத் தலைவர், பிர்லா குழுமத் தலைவர் உள்ளிட்ட 500 பெருநிறுவன முதலாளிகள் பங்கேற்ற விழாவில் மோடி பேசியது:

அரசுக் கொள்கைகள் அடிக்கடி மாற்றப்படுவது, சிபிஐ விசாரணை எனப் பல்வேறு காரணங்களால் தொழிலதிபர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை அகற்றவும் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். இந்நாடு உங்களுடையது. நம் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வேண்டும்.

2.     அமெரிக்கப் பயணத்தின்போது மோடி ஆற்றிய உரை:

சில சமயங்களில் அரசுகள் புதிய சட்டங்களை இயற்ற விரும்புகின்றன. நான் அதைச் செய்யமாட்டேன். தேவையற்ற சட்டங்களை நீக்குவதற்கென்றே புதிய குழு ஒன்றை அமைக்கப்போகிறேன். இந்தியாவுக்கு வந்து தொழில் தொடங்குங்கள்!

அவர் நீக்க விரும்பும் சட்டங்கள் என்ன தெரியுமா? இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு எதிரான சட்டங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களும் தொழிலாளர்கள் நலன் சார்ந்த சட்டங்களும்தான். இவையெல்லாம் பெரிய முதலாளிகளுக்குத் தடையாக உள்ளவை என்பது குறிப்பிடத் தக்கது.

தொழிலாளர்கள் தொடர்பான சட்ட விதிகளில் மட்டும் 20 விதிகள் நீக்கப்பட உள்ளனவாம்! எடுத்துக்காட்டாக, நூறு பேருக்கு மேல் பணியாற்றும் ஓர் ஆலையை, அதன் முதலாளி மூட எண்ணினால் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியைச் சொல்லலாம்! இதை அகற்றிவிட்டு, ஆயிரம் பேர்வரை பணியாற்றும் ஆலையை இழுத்துமூட அரசின் அனுமதி தேவையில்லை என்ற சட்டத்தைக் கொண்டுவரப் போகிறார்களாம்!

அப்படியானால், 800 பேர் பணியாற்றுவதாகச் சொல்லப்படும் நாம் குறிப்பிட்ட ஸ்ரீபெரும்புதூர் நோக்கியாவை மூட அரசிடம் கேட்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்த அரசு, பத்திரப் பதிவுக் கட்டணம்கூட வாங்காமல் பதிவு செய்து கொடுத்த அரசு, தடையில்லா மின்சாரம் வழங்கிய அரசு, வரி விலக்குகள் வழங்கிய அரசு ஏன் மூடுகிறாய்? என்று கேட்க முடியாது என்றால், நாம் சுதந்திரம் பெற்றது உண்மைதானா?

3.     ஜப்பான் பயணத்தில் ஜப்பான் தொழிலதிபர்கள் முன் மோடி உரையாற்றுகிறார்:

இந்தியாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். இந்தியாவில் ஏராளமான உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். வாருங்கள்!

அதாவது இந்தியாவில் மக்கள் தொகை அதிகம்; வறுமையும் அதிகம். குறைந்த, மிகக் குறைந்த ஊதியத்தில் நாள்பூராவும் கடினமாக உழைக்க ஏராளமான கரங்கள் உள்ளன. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இலாபம் சம்பாதிக்கலாம்! இல்லை; கொள்ளையடிக்கலாம்! சட்டம் குறுக்கே நிற்காது. எப்போது வேண்டுமானாலும் ஆலை திறக்கலாம்! எப்போது வேண்டுமானாலும் ஆலையை மூடலாம்! எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்! எவ்வளவு குறைவாகவும் காசு கொடுக்கலாம்! யாரும் கேட்க முடியாது.

முதலாளித்துவத்தின் கோரப் பிடி


இந்தியா முதலாளித்துவத்தைத் தழுவி ஆண்டுகள் பல கழிந்துவிட்டன. மேலை நாட்டில் பொருளாதாரம் படித்த மன்மோகன்சிங், அமெரிக்காவின் சமிக்ஞைபேரில் ஆட்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால், குக்கிராமத்தில் பிறந்து, டீ கடையில் வேலைபார்த்த நரேந்திர மோடியோ அமெரிக்க முதலாளித்துவத்தையே தன் வேதமாக ஆக்கிக்கொண்டாரே என்பதுதான், காலத்தின் கோலம்! இனி பகவத் கீதையைப் பரிசலிப்பதைக் கைவிட்டு, முதலாளித்துவ மூலகர்களின் நூல்களைத் தலைவர்களுக்கு நம் பிரதமர் பரிசளிக்கலாம்!

ஒருநாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற அடிப்படை அம்சங்கள் என்ன?

Ø உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; அந்த உற்பத்தியின் முதலீடு, அதன் நிர்வாகம், வேலை செய்யும் தொழிலாளர்கள், விநியோகம், சந்தைப்படுத்தல் முதலான எல்லா கூறுகளும் சுதேசியாகஉள்நாட்டைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும்.
Ø  இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகமாக்க வேண்டும். ஏற்றுமதியால் கிடைக்கும் பலன்கள் யாவும் உள்நாட்டவருக்கே சொந்தமாக இருக்க வேண்டும்.

Ø  தொழில் கருவிகளைக்கூட வெளியிலிருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே தயாரிக்கின்ற திறனைப் பெற வேண்டும்.

Ø  மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரித்து, பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும்.

Ø  தொழிலாளர்களின் உரிமை, ஊதியம், சலுகை ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். தொழிலாளர்களும் வாங்கும் சம்பளத்திற்கு துரோகமில்லாமல் பணியாற்ற வேண்டும்.
இதையெல்லாம் செய்வதற்குத் துப்பில்லாமல், 100 பேருக்கு வேலை கிடைக்கிறது என்பதற்காக, அவர்கள் பெறும் ஊதியத் தொகையைவிடப் பன்மடங்கு சலுகைகளை வெளிநாட்டுக்காரனுக்கு வாரிக் கொடுத்துவிட்டு, கோடிக்கணக்கில் கொள்ளை லாபம் சம்பாதிக்க விட்டுவிட்டு, அவனுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்யும் அடிமை சேவகம் சுதந்திர இந்தியாவில் தேவைதானா?

அமெரிக்கா! அமெரிக்கா!


எடுத்ததற்கெல்லாம் அமெரிக்காவைப் பின்பற்றுகின்ற இழிநிலையை நம் தலைவர்கள் முதலிலே துடைத்தெறிய வேண்டும். அமெரிக்காவில் என்ன நடக்கிறது தெரியுமா? நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த அண்மைத் தகவல் இதோ!

சாதாரண குடிமகன் ஒருவர் மாதந்தோறும் 1000 டாலர் சம்பாதிக்கிறார் என்றால், பெரிய பதவியில் இருப்பவர்கள், பணக்காரர்கள் 30 லட்சம் டாலர் சம்பாதிக்கிறார்கள். செல்வம் சிலரிடம் மட்டும் குவிகிறதா, இல்லையா? 1973இல் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒரு விழுக்காட்டினரிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் 25 விழுக்காடு இருந்தது. இப்போது அது 40 விழுக்காடாகியுள்ளது. அதாவது வெறும் ஆயிரம்பேர் நாட்டின் வளத்தில் பெரும் பகுதியைத் தமதாக்கிக்கொண்டுள்ளனர். ஆனால், இந்தப் பயங்கரமான ஏற்றத்தாழ்வை மக்கள் இன்னும் உணரவில்லை.

இதே ஏற்றத்தாழ்வை இந்தியாவிலும் கொண்டுவரவே நரேந்திரமோடியின்மேக் இன் இண்டியாதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும்வேலைவாய்ப்புஎன்ற ஒற்றைப் பலனை மட்டுமே அதுவும் தாற்காலிகமான பலனை- நோக்குகிறார்கள். அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சுரண்டலை யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

இறைவன் கூறுகின்றான்: உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் (செல்வம்) சுற்றிக்கெண்டிருக்கக் கூடாது. (அல்குர்ஆன், 59:7)

___________________

No comments:

Post a Comment