Monday, April 06, 2015

நான் ஒரு மாணவனாக...!


ரு மாணவனின் வாழ்க்கைப் போக்கை நிர்ணயிப்பது அவனது மாணவப் பருவமே! “விளையும் பயிர் முளையிலேஎன்பார்கள். ஆயுளில் முதல் கால் நூற்றாண்டு எதை நோக்கிச் செல்கிறது என்பது மிக முக்கியம். படிப்பாகட்டும்! ஓதுகையாகட்டும்அல்லது சிறுவயதிலேயே திணிக்கப்படும் தொழிலாகட்டும்! அல்லது வெட்டியாக ஊரைச் சுற்றுவதாகட்டும்! அதைக் கொண்டு ஓரளவுக்கு எதிர்காலத்தை எடைபோட்டுவிடலாம். நமது கணிப்புப் பிசகாகி, எதிர்பாராத திருப்பங்களால் அடுத்த கால்நூற்றாண்டு திறைமாறுவது விதிவிலக்கு!

நான் பிறந்து பச்சிளங்குழந்தையாக இருந்தபோது, உறவுக்காரப் பெரியவர் ஒருவர் வந்து பார்த்துவிட்டு, பையனுக்குக் கல்வியில் நல்ல எதிர்காலம் உண்டு என வாழ்த்தினாராம்! என் தாயார் சொல்வார்கள். அப்பெரியவர் வேறு யாருமில்லை. என் உறவினரும் ஆசிரியருமான சித்தையன்கோட்டை அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்களின் தகப்பனார்தான். அவர்கள் குடும்பம், நாட்டாண்மை குடும்பம் என அழைக்கப்படுவதுண்டு. நிலபுலன், தோட்டந்துரவு என்று செல்வாக்கோடு வாழ்ந்த குடும்பம்.

எல்லாரையும் போல என்னையும் உள்ளூர் அரசு முஸ்லிம் துவக்கப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். ஐந்தாம் வகுப்புவரை நன்றாகப் படித்ததாகவே ஞாபகம். அதே நாட்களில் குர்ஆன் (மக்தப்) மதரசாவிலும் சமயக் கல்விக்காகச் சேர்க்கப்பட்டேன். அப்போது பெரியகுளம் அருகில் உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த மௌலானா, அப்துல் கரீம் நூரீ அவர்கள் பணியாற்றிய ஓராசிரியர் மதரசாவாக அது இருந்தது. அவர்கள்தான் புதுப்பள்ளிவாசல் இமாமும் – நல்ல காரீ; பயானும் நன்றாகவே இருக்கும். ஆனால், கண்டிப்பான, கம்பீரமான கேரக்டர். மற்ற பிள்ளைகளுக்குப் போலவே எனக்கும் அக்கறையோடு கற்பித்தார்கள். எனக்கென்னவோ! பள்ளிப் படிப்பைவிட மதரசா ஓதுகையில்தான் இயல்பாகவே ஆர்வம் அதிகம்.

திருக்குர்ஆன் ஓதிமுடித்து, அரபுத் தமிழில் வழிபாட்டு விதிகள் பயின்று, திக்ர் மற்றம் தஸ்பீஹ் வரை கற்றுவிட்டேன். சிறிய மாணவர்களுக்குப் பாடம் எடுக்குமாறு ஆசிரியர் அவர்கள் ஆணையிட அதையும் செய்தேன். இதற்கிடையில் உள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படித்துவந்தேன். பள்ளிப்படிப்பு ஏனோதானோ என்றாயிற்று. இறுதித் தேர்வில் எப்படியோ தேர்ச்சி பெற்றேன்.

இந்நிலையில் மதரசாவில் என் ஆசிரியர் எனக்கு மட்டும் அரபிமொழி சொல்இலக்கணம் கற்பிக்கத் தொடங்கிவிட்டார்கள். அரபிக் கல்லூரிகளின் ஏழாண்டு பாடத்திட்டத்தில் முதலாமாண்டுக்குரிய முதல் புத்தகத்தை முடித்துவிட்டு, இரண்டாம் புத்தகமும் குர்ஆன் மதரசாவிலேயே கற்க ஆரம்பித்துவிட்டேன்.

பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு; வேண்டா வெறுப்பாக! சரியாக வகுப்புகளுக்குச் செல்வதில்லை. பள்ளிக்கூடம் போக வேண்டிய நேரத்தில் பள்ளிவாசல் போனேன். அங்கே முஅத்தினுக்கு –அவர் செய்யும் வேலையில்- உதவி செய்வேன். பள்ளி விடும் நேரத்தில் வீட்டிற்குச் சென்றுவிடுவேன். இப்படியாகப் பள்ளிப் படிப்பை வீணாக்கியதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன். கவனமாகப் படித்திருந்தால், அன்றைக்குள்ள ஆங்கிலம் –சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தையது- கை வந்திருக்கும். ஏழாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு எழுதி முடிக்க, அரபிக் கல்லூரிகள் திறக்கும் நாளும் வர சரியாக இருந்தது. எனது விருப்பம் ஒரு பக்கம்! தந்தையின் ஆசை மறுபக்கம்! இதில், “10ஆம் வகுப்பு வரையிலாவது படித்துக்கொள்! எதிர்காலத்திற்கு உதவும்என்று தாயார் மன்றாடியது எடுபடவில்லை. தாய் சொல்லைத் தட்டினேன்; இப்போது ஏங்குகிறேன். காலம் தவறிய ஞானமும் காலம் கடந்த நீதியும் ஒன்று!

ழநி அருகே முஸ்லிம்கள் நிறைந்த கிராமம் கீரனூர். அந்த ஆண்டுதான் (அநேகமாக 1965), தாருல் உலூம்என்றொரு அரபி மதரசா அங்கு தொடங்கப்பட்டது. ஒரே வகுப்பு; ஓராசிரியர்; மாணவர்கள் ஐந்தாறுபேர். அவர்களில் நானும் ஒருவன். எல்லாரும் எங்களூர்காரர்கள். ஆசிரியர் சித்தையன்கோட்டை எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி (உத்தமபாளையம் அல்ல). ஆசிரியர் பணிக்குப் புதியவர். ஊரில் மக்தபில் முதலிரண்டு பாடப் புத்தகங்கள் (மீஸான், அஜ்னாஸ்) படித்திருந்ததால், அரபி மதரசாவில் அவை பிரச்சினை இல்லாமல் ஓடின. மூன்றாம் புத்தகம் (ஸன்ஜானி) –இயல்பாகவே கடினமானது- புரிவதற்கும் பிடிபடுவதற்கும் சிரமமாக இருந்தது. அடுத்த இலக்கணப் புத்தகமும் (அவாமில்) அப்படித்தான்.

முழுஆண்டுத் தேர்வுக்குப்பின் விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த வேளையில், அடுத்த ஆண்டு வேறு மதரசாதான் போக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தேன். தகவல் அறிந்த கீரனூர் மதரசா நிர்வாகி, தம் கணக்கரை என் ஊருக்கே அனுப்பிவிட்டார். கணக்கர் என் தந்தை முன்னிலையில் என்னைச் சமாதானப்படுத்தி, தொடர்ந்து தங்கள் மதரசாவிலேயே ஓத வேண்டும் என்று வற்புறுத்தினார். நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதிவரை நான் என் முடிவில் உறுதியாக இருந்துவிட்டேன். ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார் கணக்கர். ஆனாலும், கீரனூரில் ஓராண்டாக எனக்கு உணவளித்து, தம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவனாக என்னைப் பாவித்து வளர்த்த நூர் முஹம்மத் அம்பா, என்னைப் பெறாத தாய் கதீஜா அம்மையார் ஆகியோரை என்னால் மறக்கவே முடியாது. மதரசா நிறுவனர், கே.என்.எஸ். ஹாஜியாரும் நமது துஆவுக்கும் நன்றிக்கும் உரியவர். சில ஆண்டுகளிலேயே அந்த மதரசா நின்றுபோனது கவலைக்குரியது.

அடுத்த ஆண்டு கோவை மாட்டம், மேட்டுப்பாளையம் ஃபைஜுல் பரகாத்மதரசாவில் சேர்ந்தேன். அரபி இலக்கணம் அங்குதான் இரண்டு ஆண்டுகள் தரவாகக் கற்க முடிந்தது. ஆசிரியர் சித்தையன்கோட்டை அப்துல்லாஹ் ஹள்ரத். அரபி இலக்கணத்தில் புலி. அன்புக்கு அன்பு; கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பாடு. பல்லாண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு இப்போது ஊரில் ஓய்வெடுக்கிறார்கள். ஓய்வுக் காலத்தையும் வெறுமனே கழித்துவிடாமல், அரபிக் கல்லூரிகளின் பழங்காலத்துப் பாடநூல்களைப் புதுப்பித்து, எளிமைப்படுத்தி, அடிக் குறிப்புகள் வரைந்து முறைப்படுத்தி வெளியிட்டுள்ளார்கள்.

ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின்பேரில் நான்காம் ஆண்டுக்காகத் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மன்உல் உலாஅரபிக் கல்லூரியில் சேர்ந்தேன்.

ன்பஉல் உலா கல்லூரி அக்காலத்தில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கியது. திருக்குர்ஆன் விரிவுரை (தஃப்சீர்), நபிமொழி (ஹதீஸ்), தர்க்கவியல் (லாஜிக்), சட்டம் (ஃபிக்ஹ்), அரபி இலக்கியம் (பலாஃகத்) போன்ற பாடங்கள் அங்கு பயின்றேன். உடன்குடி (முன்பு கம்பம்) மௌலானா, எஸ். அப்துல் கனி பாகவி அவர்கள்தான் தலைமை ஆசிரியர். கண்டிப்பு என்றால், அவ்வளவு கண்டிப்பு. தவறு செய்யும் மாணவர்களை, வகுப்பு வித்தியாசம் பார்க்காமல் விளாசுவார்கள். ஆளைப் பார்த்தாலே அச்சமாக இருக்கும்.

அதே நேரத்தில், பாடத்தில், நினைவாற்றலில், தகவல்கள் சொல்வதில் சூரர். குறிப்பாக, அரபு இலக்கணத்தில் கரை காண முடியாத கடல். வகுப்பில் அருவிபோல் கொட்டும் அன்னாரின் குறிப்புகளை அள்ள முடியாமல் மாணவர்கள் திணறுவார்கள். புதிய மாணவர்களுக்கு அவரது பாடம் புரியாது. ஓராண்டு கழிந்தபின்பே அன்னாரது பாணி புலப்படும். மாணவர்கள் இரவில் அன்றாடப் பாடங்களைத் திரும்பப் படித்துக்கொண்டிருக்கும்போது கண்காணிக்க வரும் ஹள்ரத் அவர்கள், வாசிக்கும் மாணவனின் தவறைப் போகிற போக்கில் திருத்துவார்கள். அடிக்குறிப்பு வரிகளை, நூலைப் பார்க்காமலேயே வாசித்து விளக்கம் கூறுவார்கள். அபார ஆற்றல். இன்றைக்கெல்லாம் அப்படியொரு ஆளுமையைப் பார்ப்பது குதிரைக் கொம்பு. இத்தனைக்கும் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய குடும்பம்.

ஆயங்குடி மௌலானா, சாலிஹ் ஹள்ரத் இன்னொரு ஆசிரியர். இவர்களிடம்தான் நான் உருது மொழி கற்றுக்கொண்டேன். மாணவர்கள்மீது தந்தையின் பாசம் கொண்டவர். தாம் சாப்பிடும் வடை, அருந்தும் தேநீரைக்கூட மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்தே சாப்பிடுவார்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு அதிகம். உணர்ச்சிகரமான உரையாளர். நெல்லை மௌலானா, அய்யூப் ஃபாஸில் பாகவி அவர்கள், பாடங்களைப் புரியவைப்பதில் வல்லவர். கூத்தாநல்லூர் மௌலானா, சர்தார் முஹ்யித்தீன் ஹள்ரத் அவர்கள் வானவியல், கணிதம் ஆகிய துறைகளில் அனுபவசாலி.

இப்படி பலதரப்பட்ட துறைசார்ந்த அறிஞர்களிடம் அங்கு கல்வி பயின்றதால் கல்வியில் நல்ல பிடிப்பு ஏற்பட்டது. தேர்வுகளில், வகுப்பில் முதலாவது அல்லது இரண்டாவது மாணவனாகத் தேர்வு பெறுவேன். வகுப்பிலேயே சிறியவனான நான்தான், பெரும்பாலும் இரவு நேரங்களில் சக மாணவர்களுக்குப் பாடம் வாசித்துக்காட்டுவேன். உடல்நலம் குன்றி, படுக்கையில் கிடந்தபோதுகூட அவ்வாறு நான் பாடம் படிப்பித்துக் காட்டிக்கொண்டிருந்தபோது, சுற்றுக்கு வந்த தலைமை ஆசிரியர் என் வகுப்புத் தோழர்களைக் கடிந்துகொண்டது நினைவிருக்கிறது. மன்பஉல் உலாவில்தான் என் சொற்பயிற்சி தொடங்கியது. மன்பஉல் உலா என் கல்விப் பயணத்தில் ஒரு மைல்கல். அங்கு பயின்றபோது சீனியர் மாணவர் ஒருவருடன் நட்பு முகில்ந்தது பற்றி முன்பே ஒரு தொடரில் குறிப்பிட்டுள்ளேன்.

நா
ன்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்றாண்டு கல்வியை அங்கு முடித்தபின், பட்டவகுப்பான ஏழாம் ஆண்டு, தாய்க் கல்லூரியாம் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் தொடங்கியது. புதிய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றால் மட்டுமே பாக்கியாத்தில் மேல்வகுப்பில் சேர்ப்பார்கள். இல்லையேல், கீழ் வகுப்பில் போட்டுவிடுவார்கள். மௌலானா, பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்களே எனக்கு நுழைவுத் தேர்வு நடத்தியவர்கள். வாய்மொழித் தேர்வின்போது ஆசிரியர் அவர்கள் தொடுத்த வினாக்களுக்கு, அடிக்குறிப்புகளைப் பார்த்து விடையளித்ததைக் கண்டு என்னை பாஸாக்கினார்கள் என்று நினைக்கிறேன்.

பாக்கியாத்தில் நான் கல்வியை மட்டும் கற்கவில்லை. உலகத்தைப் படித்ததே அங்குதான். உலக நடப்புகள், அரசியல், கலை, இலக்கியம், வாழ்வியல்... என எல்லாவற்றையும் நான் தெரிந்துகொள்வதற்கு வேலூரே வழிவகுத்தது. பேச்சு, எழுத்து, கற்பித்தல் ஆகிய திறன்களுக்கு வித்திட்டது பாக்கியாத் என்ற தாய்மடிதான். மறக்க முடியுமா அந்த வான்வெளியை? அந்த வெயிலை? குளிரை? முஹம்மது உணவகத்தின் சிற்றுண்டியை? தேநீரை? அதிகம் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகக் குடலையே சுருக்கிவிட்ட விடுதி உணவை? எதையுமே மறக்க முடியாது.

பாக்கியாத் ஆசிரியர்கள் என்று பார்த்தால், முதலில் என்மேல் பாசம் காட்டிய பெரிய மேதை மௌலானா, ஷைகு ஹசன் ஹள்ரத் அவர்கள்தான் என் உள்ளத்தை ஆக்கிரமித்த மகான். கேரளாவைச் சேர்ந்த அன்னார்தான் அப்போது கல்லூரி முதல்வர். வணக்க வழிபாடுகளிலும் சுன்னத்தைக் கடைப்பிடிப்பதிலும் கொள்கைப் பிடிப்பிலும் அவர்களைப் போன்ற ஒருவரை அவ்வளவு நெருக்கத்தில் நான் கண்டதில்லை. என் மீது அப்படியொரு தனி அக்கறை!

கட்டுப்பாட்டிற்கும் கண்டிப்பிற்கும் முன்னுதாரணமாக விளங்கிய ஹள்ரத் அவர்களிடம் பேசுவதற்கு ஆசிரியர்களே தயங்குவார்கள். அறையைவிட்டு ஹள்ரத் அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்றவுடன் அவர்கள் எதிரில் ஒரு மாணவரைக்கூடப் பார்க்க முடியாது. சட்டம் போடாமலேயே, தண்டனை வழங்க வேண்டிய அவசியமே இல்லாமல், பாடம், தொழுகை, ஒழுக்கம், கடமை என எல்லாம் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் தானாகவே ஒட்டிக்கொண்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அவர்களின் அறைக்குச் செல்ல ஆசிரியர்களும் நிர்வாகிகளும் அஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், என்னை தம் அறைக்கு அழைத்து, உடல்நலம் விசாரிப்பதும் ஊக்கமளிப்பதும் என்னை பிரமிக்கவைத்தன.

பகலிலோ இரவிலோ நான் என் அறையில் அமர்ந்து சக மாணவர்களுக்குப் பாடம் வாசித்துக்கொண்டிருக்கையில் ஹள்ரத் அவர்கள் என் அறையைக் கடந்த செல்வதுண்டு. அப்போதெல்லாம் யார் இவ்வளவு ஓசையோடு பாடம் வாசிப்பது என்று நின்று பார்த்துவிட்டுச் செல்வார்கள். இதனாலேயே, என்மீது ஏதோ ஒரு புகார் தெரிவிக்கப்பட, ஹள்ரத் அவர்களே எனக்காகப் பரிந்துபேசி, மற்ற ஆசிரியர்களை அமைதிகாக்கச் செய்துவிட்டார்களாம்!

மரியாதைக்குரிய ஷைகு ஹசன் ஹள்ரத் அவர்கள் முன்னால் மண்டியிட்டுப் பாடம் படிக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பு அன்னாரிடம் நான் கற்ற பாடப் புத்தகம். குறிப்புகள் எதையும் பார்க்காமலேயே நபிமொழிகளுக்கு அவர்கள் அளிக்கும் விளக்கம் வியப்பூட்டும். உருது மொழியில்தான் பாடம் எடுப்பார்கள். தமிழிலோ மலையாளத்திலோ மாணவர்கள் சந்தேகம் கேட்டால், அந்தந்த மொழிகளில் விளக்கம் சொல்வார்கள். எல்லாவற்றையும்விட அன்னார்மீது எனக்கு உச்சகட்ட மரியாதை ஏற்படுத்தியது ஒரு நிகழ்ச்சியாகும்.

ஆலிம் பட்டம் பெற்றுக்கொண்டு, ஹள்ரத் அவர்களிடம் விடைபெறுவதற்காக அவர்களின் அறைக்குச் சென்றேன். சிரிப்போடு பார்த்த ஹள்ரத் அவர்கள், அடுத்து என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டார்கள். முதுநிலை (முதவ்வல்) வகுப்பில் சேர்ந்து கல்வியைத் தொடர எண்ணியிருந்த நான் பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தேன். அப்போது அவர்களே பேசினார்கள்: நீ எதிர்காலத்தில் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும். அதற்கு இன்று தேவை உள்ளது. உன்னால் எழுத்துத் துறையில் சாதிக்க முடியும் – என்று அறிவுரை கூறி, துஆ செய்து அனுப்பிவைத்தார்கள்.

எனக்கோ ஆச்சரியாம்! எழுத்துத் துறையில் அரிச்சுவடிகூட தெரியாத, முன்அனுபவம் அறவே இல்லாத என்னைப் பார்த்து ஹள்ரத் அவர்கள் இத்துறையில் ஈடுபடு; நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்கிறார்களே! அப்போது அதன் வீரியம் புரியவில்லை. இப்போதுதான் அதன் மெய்ம்மை புரிகிறது. அதே பாக்கியாத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோதே என் எழுத்துப்பணி தொடங்கி, இன்று எழுத்தே முழுநேரப் பணியாக மாறியிருக்கிறது என்றால், அந்த வித்தகரின் விவேகத்தை என்னவென்பது? பொதுவாக ஒருவரின் வளர்ச்சிக்குப் பெற்றோரின் துஆ; ஆசிரியர்களின் துஆ; நல்லோரின் துஆ மிகவும் முக்கியம் என்பதை என்னால் நன்கு உணரமுடிகிறது.

பா
க்கியாத்தில் எனக்குப் பயிற்றுவித்த ஆசான்கள் ஒன்பதுபேர். அனைவரும் முத்தானவர்கள். அவர்களில் மௌலானா, அப்துர் ரஹ்மான் ஃபள்பரீ (கேரளா), கொல்லம் மௌலானா, முஸ்தபா ஹள்ரத் ஆகியோரிடம் தர்க்கவியல் கற்றேன். மௌலானா, ஓ.கே. அப்துர் ரஹ்மான் ஹள்ரத் (கேரளா), பக்த்தியாரீ ஹள்ரத் (ஆந்திரா), கடப்பா அப்துல் ஜப்பார் ஹள்ரத் ஆகியோரிடம் முதவ்வல் – ஃபாஸில் வகுப்பில் கற்றேன். உஸ்தாத் ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத், பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத், பூவார் முஹம்மது ஹனீஃபா ஹள்ரத் ஆகியோர் பட்ட வகுப்பு ஆசிரியர்கள் ஆவர்.

கனம் கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், ஒரு பக்கம், ஒன்றரை பக்கத்தில் உள்ள பாடத்தை 10 நிமிடங்களில் சுருக்கமாக விளக்கிச் சொல்லும் ஆற்றல் உடையவர்கள். புத்தகப் பாடத்தைவிட, அவர்கள் சொல்லிக்கொடுத்த வாழ்க்கைப் பாடமே அவர்களின் மாணவர்களுக்கு இன்றும் மறக்க முடியாத வழிகாட்டிகளாகத் திகழ்கிறது என்றால் மிகையாகாது. பொருளாதார நெருக்கடி, மகன்களின் வளர்ப்பு, குடும்பப் பிரச்சினை, உடல் ஆரோக்கியம், நட்பு வட்டங்கள் முதலான சொந்த வாழ்க்கை அனுபவங்களை ஒளிக்காமல் மாணவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். அவர்களின் எளிமை, கரிசனை, கடன் வாங்கும் நிலையிலிருந்து ஸகாத் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தபோதும், ஆசிரியராக இருந்து முதல்வராக உயர்ந்தபோதும் அலட்டிக்கொள்ளாத இயல்பான போக்கு அனைவருக்கும் சிறந்த பாடம்.

உஸ்தாத் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்கள், சிறிய விஷயத்தையும் சிரத்தை எடுத்து போதிப்பார்கள். தற்போது சென்னையில் குடியேறிய பிறகும் ஏதேனும் நூல்களை ஆலிம்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். பிரபல பேச்சாளர். நான் ஆசிரியராக இருந்தபோது, அவர்களுடன் இணைந்து பாக்கியாத் வெளியிட்டுவரும் தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன் தமிழ் விரிவுரைக்காகப் பணியாற்றிய அனுபம் எனக்கு உண்டு. அப்போது வார்த்தைப் பிரயோகத்தில் அவர்கள் காட்டிய அக்கறை, இன்றும் எனக்கு வழிகாட்டி வருகிறது. முன்பே ஒரு தொடரில் நான் குறிப்பிட்டிருந்தபடி, பி.எஸ்.பி. ஹள்ரத் அவர்கள்தான், நான் பேச்சுத் துறையில் ஈடுபட ஊக்கமளித்த ஆசிரியர் ஆவார்கள்.

எம்.
ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டபோதுதான் எனக்கு அரசியலில் ஆர்வம் பிறந்தது. அப்போது நான் பாக்கியாத்தில் ஃபாஸில் (முதவ்வல்) வகுப்பு மாணவன். அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பின் அதில் தீவிர ஈடுபாடு காட்டினேன். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக நின்ற மாயத்தேவருக்கு வாக்கு கேட்டு, எம்.ஜி.ஆர். சித்தையன்கோட்டை வந்தபோது, அக்கூட்டத்திற்காக மும்முரமாக உழைத்தேன். மதரசாவில் என் அறையில் அரசியல் பத்திரிகைகள், ஒரு கயிறு கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும்.

இதை அறிந்த கல்லூரி முதல்வர் அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள், என்னை அழைத்து அன்பாக அறிவுரை கூறினார்கள். நீங்கள் அரசியலில் ஈடுபடுவதை நான் தடுக்கமாட்டேன்; ஆனால், கல்லூரிக்குள் மாணவனாக இருக்கும்போது அரசியல் ஈடுபாட்டை அனுமதிக்க முடியாது; கற்று முடித்தபின் அதையெல்லாம் வைத்துக்கொள்ளுங்கள்என்று சொன்னார்கள்.

ஒருமுறை வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம். வேலூர் மாவட்டச் செயலாளர் அரங்கநாதன் என்னையும் கூட்டத்தில் பேசச் சொன்னார். மாணவரணி சார்பாகப் பேசுங்கள் என்றார். நானும் தயாராகிவிட்டேன். அப்போது பாருங்கள்! ஒரு முஸ்லிம் நண்பர் என்னை அணுகி, நீங்கள் மதரசா மாணவராக இருந்து, கட்சிக் கூட்டத்தில் பேசினால், மதரசாவிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று எச்சரித்தார். நல்ல வேளை தப்பித்தேன். சமுதாயப் பார்வையோ பிரக்ஞையோ இல்லாத விடலைப் பருவம். இன்றுதானே தெரிகிறது! இந்த அரசியல் எவ்வளவு ஆபத்தானது! ஆக, அத்தோடு அரசியல் கட்சித் தொடர்புகளை அறுத்துக்கொண்டு, நான் ஓர் ஆலிம் என்ற நிதானத்திற்கு வந்துசேர்ந்தேன். ஆலிமுக்கு மார்க்க சேவை செய்யவே இந்த நாட்டில் நேரம் போதாதபோது, அரசியல் சேவைக்கு நேரம் எங்கே?

இதே எம்.ஜி.ஆர்.தான், பின்னால் ஒரு கட்டத்தில், முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது, இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இருந்தால் என்ன?என்று கேட்டவர். அப்படியானால், அவருக்காக, அவரது கட்சிக்காக, மார்க்கம் கற்ற நான் உழைப்பது எவ்வளவு பெரிய பேதமை! இன்றைக்கும் பலர் சமுதாயம் மறந்து, சமயம் துறந்து, அரசியலில் ஈடுபட்டு, மாற்றுக் கட்சிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக உள்ளார்கள்! திராவிடக் கட்சிகள் என்ன? பா.ஜ. கட்சியிலேயே முஸ்லிம் பெயர்தாங்கிகள் இல்லையா? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பார் அண்ணா. அப்படி ஒரு பொதுக் கட்சியில் சேர்ந்து உழைப்பதானால், சமுதாயத்திற்காகக் குரல் கொடுங்கள்! சமுதாய உரிமைகளுக்காகப் போராடுங்கள்!


ஆக, எனக்கு மார்க்கக் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மொத்தம் 17 பேர். அவர்களில் 10 பேர் மறைந்துவிட்டனர்; 7 பேர் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகிறேன்.

No comments:

Post a Comment