Tuesday, November 10, 2015

பீகார் ஒரு முன்னுதாரணம்



பீ
கார் மாநிலத்தின் 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் முடிந்து, தெளிவான முடிவுகளும் வெளிவந்துவிட்டன. தேர்தலில் மதச்சார்பற்ற மகா கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியிருப்பது, இந்தியாவின் மதச் சகிப்புத்தன்மைக்குக் கிடைத்த ஆதரவுதான் என்பதில் துளியளவும் ஐயமில்லை. யார் என்ன கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மறுக்க முடியாத அப்பட்டமான யதார்த்தம் இதுதான்.

ஆளும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் – 71; ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 80; காங்கிரஸ் – 27 இடங்களைப் பெற்றுள்ளன. இது, பதிவான வாக்குகளில் 41.9 விழுக்காடு ஆகும்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டனி 58 இடங்களைப் பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. அவர்களின் ஆர்ப்பரிப்பையும் திமிரான பேச்சுகளையும் கருத்தில் கொண்டால், ‘படுதோல்விஎன்றே சொல்ல வேண்டும். இந்த மதவெறி கூட்டணி 33.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது என்று சொல்லி ஆறுதல் அடைவது, தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் தந்திரமே தவிர வேறல்ல.

இதில் பரிதாபத்திற்குரியவர் ராம் விலாஸ் பாஸ்வான்தான். தலித்களின் பரம விரோதி என்று தெரிந்தும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, இவரது கட்சியான லோக் ஜனசக்தி 40 இடங்களில் போட்டியிட்டது. 2 இடங்களை மட்டுமே வென்றது. பா.ஜ.க. 160 இடங்களில் களத்தில் நின்றது. கிடைத்ததோ 53 இடங்கள் மட்டுமே. இது, 2010இல் பெற்ற இடங்களைவிட 38 இடங்கள் குறைவு. அத்தேர்தலில் பா.ஜ.க. 91 இடங்களைப் பெற்றது, நிதீஷ்குமாரின் பெருந்தன்மையால்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.

பா.ஜ.க.வின் பயங்கரவாதம்

ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது என்பதைக்கூட மறந்து பா.ஜ.க.வும் அதன் உதிரிகளும் போட்ட ஆட்டம் கொஞ்சமா? மதவெறி தலைக்கேறி, எழுத்தாளர்களைப் படுகொலை செய்தது; நாட்டின் அறிவுஜீவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது; மாட்டிறைச்சி பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொன்றது, மதச் சகிப்பித்தன்மை பற்றி யார் உபதேசித்தாலும் மை ஊற்றி அவமானப்படுத்தியது, விருதுகளைத் திருப்பிக் கொடுத்த சாதனையாளர்களின் அறச் சீற்றத்திற்கு உள்நோக்கம் கற்பித்த்து, சினிமா நடிகர்களைக்கூட விட்டுவைக்காமல் பாகிஸ்தானுக்கு ஓடிவிடுமாறு மிரட்டியது என இந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் சொல்லிமாளாது.

தேர்தல் கூட்டங்களில் பேசிய பேச்சுகளிலும் அதே காட்டுமிராண்டித்தனம். ‘மூன்று முட்டாள்கள்என்று நிதீஷ் கூட்டணியை நரேந்திரமேடியே விமர்சித்தார். அந்த ‘முட்டாள்கள்தான் இன்று அறிவாளிகளாக ஜொலிக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணி தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என்று பொறுப்புள்ள பதவி வகிக்கும் ஒருவர் உளறினார். இப்போது பட்டாசு கொளுத்தி பா.ஜ.க.வின் தோல்வியைக் கொண்டாடிய பீகாரிகள் பாகிஸ்தானிகளா...?

சிறுபான்மையினர் பங்கு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணிப்பின்படி, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் மகா கூட்டணிக்குக் கிடைத்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது. பீகார் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் முதலான சிறுபான்மை வாக்காளர்கள் தங்களின் சமய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்; பீகார் தேர்தல் இந்தியா முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்; மதவெறி சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று யோசித்து, திட்டமிட்டு பா.ஜ.க.வைத் தோற்கடித்துள்ளார்கள்.

பீகாரில் முஸ்லிம் மக்கட்தொகை 15 விழுக்காடு. மொத்தம் 23 முஸ்லிம்கள் நிதீஷ் கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பின் – 12 பேர்; ஐ.ஜ.த. சார்பில் – 5 பேர்; காங்கிரஸ் சார்பில் – 6 பேர்; சி.பி.எம். சார்பில் வென்ற ஒருவரையும் சேர்த்து 24 முஸ்லிம்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர். இது மொத்த உறுப்பினர்களில் 10 விழுக்காடு ஆகும்.

பீகாரில் மகா கூட்டணி அமைத்த சூட்சுமதாரர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு. ஒரு தேசிய கட்சி; முன்னாள் ஆளும் கட்சி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? அதுவும் 41 இடங்களை வாங்கிக்கொண்டு – என ஈகோ பார்த்திருந்தால், இப்போது கிடைத்த 27 இடங்கள்கூட நிச்சயமாகக் கிடைத்திருக்காது. அவ்வாறே லாலுவையும் சும்மா சொல்லக் கூடாது. கூடுதல் இடங்களைப் பெற்றும் நிதீஷ்தான் முதல்வர் என்று தன்முனைப்பு காட்டாமல் அறிவித்தார்.

ஆக, தீய சக்தியை அடக்கிவைக்க, நல்ல சக்திகள் தங்களிடையே விட்டுக்கொடுத்து, கௌரவம் பார்க்காமல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் பீகார் சொல்லும் பாடம்.

தமிழ்நாடு – 2016

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால் நன்றாக இருக்கும். முஸ்லிம் கட்சிகள் என்ன வியூகம் அமைக்கப்போகின்றன என்று தெரியவில்லை. வாக்குச் சிதறல் இருக்கும்போல் தெரிகிறது. அ.தி.மு.க. தனியாகவோ, சிறு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிடலாம். தி.மு.க. இரண்டாவது அணியாகக் களத்தில் நிற்கிறது. மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது ஓர் அணியும் உண்டு. இதில் தே.மு.தி.க. எந்தப் பக்கம் சாயப்போகிறது என்று தெரியவில்லை.

இதற்கிடையில், பா.ஜ.க.வுடன் இணக்கமான அணுகுமுறையை மேற்கொண்டால்தான், இந்தியாவில் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியும் என்ற சிந்தனைப்போக்கு அண்மைக்காலத்தில் முளைக்கத் தொடங்கியுள்ளது. குஜராத் போறா முஸ்லிம்கள், வடநாட்டிலுள்ள சில முஸ்லிம் அமைப்புகள் இவ்வாறு கிளம்பியுள்ளன.

இப்போக்கு, கேரளா வரை வந்து, தமிழ்நாட்டையும் எட்டியிருப்பதுதான் அச்சமூட்டும் செய்தியாகும். கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் இந்துத்துவா சக்திகளுடன் சேர்ந்து, தாமரைச் சின்னத்தில் முஸ்லிம் பெண் உள்படச் சிலர் போட்டியிட்டுள்ளனர். ஆலிம் தோற்றத்திலுள்ள சிலரும் போட்டியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் அதற்கான விதை தூவப்படுவதாக அஞ்சப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கமே இந்த அச்சத்திற்குக் காரணம். ஆலிம்கள், சமூகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே கலந்துகொண்ட அக்கூட்டத்தில் வந்திருந்த முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறியவர் யார் தெரியுமா? ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன், பாதுகாப்புத் துறை நிபுணர் நிரஞ்சன்.

கர்னல் ஹரிஹரன் பேசியதாவது: அல்காயிதா, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய அமைப்புகளில் இந்திய முஸ்லிம்கள் யாரும் இல்லை என்று பிரதமர் மோடியே கூறுகிறார். எனவே, இந்திய முஸ்லிம்கள் எல்லாரும் நல்லவர்கள். எனினும், வெளியிலிருந்து வரும் பயங்கரவாதிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அடுத்துப் பேசிய நிரஞ்சன் கூறியதாவது: முஸ்லிம்களாக இருப்பவர்களால் பிரச்சினை இல்லை. மதம் மாறி வருபவர்கள்தான் தீவிரவாதிகளாக வருகிறார்கள். இந்தியாவில் தேவ்பந்த் மதரசாதான் 1930களிலேயே தீவிரவாதிகளை தயார் செய்தது. தப்லீக் ஜமாஅத்தும் தீவிரவாதத்தைப் பரப்பும் அமைப்புதான். சஊதியின் இப்னு சஊத், சீனாவின் ஸ்டாலின் மற்றும் மாவோ ஆகியோர் ஒரே மாதிரியானவர்கள். பயங்கரவாதத்தின் மூலம் தங்கள் மேலாண்மையை நிலைநிறுத்த முயன்றவர்கள்.


ஆக, பரேலவி – தேவ்பந்தி இடையே பிரிவினையை அதிகமாக்கி, ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, குளிர்காய மோடி அரசு போட்ட சதிக்கு இங்குள்ளோரும் அறிந்தோ அறியாமலோ பலியாகிவருகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், பா.ஜ.க. காரர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பார்களா? இராணுவம் மற்றும் உளவுத்துறை என்று மேல்மட்டத்தில் உள்ளவர்கள் வந்து வகுப்பு எடுப்பார்களா? யார், யாரிடம் பாடம் படிப்பது என்பதற்கு ஒரு முறை வேண்டாமா? அல்லாஹ்தான் காக்க வேண்டும்.

7 comments:

  1. S.s.fஎன்பது அரசியல் இயக்கமே அல்ல.அரசியலில் மறை முக ஆதரவும்இல்லை.பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை விரும்பாத சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் இயக்கம்.பல இலட்சம் மாணவர்களை புனிதர்களாக மாற்றிய இயக்கம்.p.j.p வேட்பாளர்களுக்கு s.s.fஆதரவு என்பதற்க்கு கட்டுரையாளரிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் வெளியிட்டிருக்கலாமே! S.s.fக்கும் p.j.p வேட்பாளர்களுக்கும் தொடர்பே இல்லை என்பதுWatssApp ல்தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.தேவையில்லாமல் சம்பந்தமே இல்லாத இயக்கத்தை ஆதாரமில்லாமல் வெளியிடுவது நல்ல எழுத்சாளருக்கு அழகல்லவே! பல ஸ்தாபனங்களை நடத்துபவர்கள் நிர்வாக ரீதியாக பிரதமர் என்ற நிலையில சந்தித்தர்கு இப்படி ஏன் விளக்கம் கொடுக்கிறீர்கள்.ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். தயவு செய்து comment ல்இருந்து அகற்ற வேண்டாம்.சத்தியம் வெளிப்படட்டும். ஸெய்யிது அப்துற் றஹ்மான் பாக்கவி பாழில் அஹ்ஸனி mop 9443462611 mail; sarthangaltvc@gmail.com

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்....

    இந்துத்துவாவுடன் கைக் கோர்த்த சுன்னத் வல் ஜமாஅத்!

    என்று ஒரு தகவலை அருமை நண்பர் எழுதியிருந்தார்.....

    கேரளாவில் பஞ்சாயத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது
    அதில் அனைத்து கட்சிகளுக்குமிடையே வலுவான போட்டி நடக்கிறது....

    BJP யும் போட்டியிடுகிறது....

    பாரதிய ஜனதா பார்ட்டி
    BJP யின் பெயரில் சில முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர்

    அம்முஸ்லிம்கள் காந்தபுரம் AP அபு பக்கர் முஸ்லியார் அவர்களின் அமைப்பான SSF என்ற அமைப்பை சார்ந்தவர்களென்ற ஒரு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்....

    நஊதுபில்லாஹ்...

    அல்லாஹு பாதுகாப்பானாக....

    காந்தபுரம் உஸ்தாது அவர்களின் இஸ்லாமிய முன்னேற்ற செயல் பாடுகளின் மீது பொறாமைக்கொண்ட சில எதிரிகள் இட்டு கட்டிய ஒரு சதி வேலையாகும்....

    BJP யின் பெயரில் போட்டியிடுபவர்கள்
    SSF என்ற அமைப்பை சார்ந்தவர்களே அல்ல...

    மட்டுமல்ல உஸ்தாது அவர்களின் அமைப்பை சார்ந்தோர்கள் ஒரு அரசியல் இயக்கத்திற்க்காகவும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

    KOVAI FAIZAL

    ReplyDelete
    Replies
    1. இக்கட்டுரையில் கேரளாவின் எஸ்.எஸ.எஃப். எனும் அமைப்பு பற்றி இடம்பெற்றுவிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என நம் நம்பிக்கைக்குரிய சகோதரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எனவே, தவறுக்கு வருந்துகிறோம்.- கான் பாகவி

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி மிக்க நன்றி

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி மிக்க நன்றி

    ReplyDelete
  5. அன்புள்ள ஹலரத் அவர்களுக்கு

    கட்டுரையில் தவறு ஏன்று தெரிந்து விட்டது பின்பு ஏந்த காரணத்தால் அதை அளிக்காமல் விட்டு வைத்து உள்ளாரிகள்

    ReplyDelete
  6. ஆனால் mr. காந்தபுரம் அபுபக்கர் அவர்களின் உன்மை சுயரூபம் தெரியாமல் மலையாளச் சகோதரர்கள் மளைச்சலவை செய்யப்படுவது ஆச்சரியமளிக்கிறது. அவருடைய இரண்டு முக்கியமான ஊர்வளங்களை ஆரம்பித்து வைத்ததும் முடித்து வைத்ததும் RRS ன் ஆயுள்கால உறுப்பினரும் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஆயுத பேரம் நடத்துபவர். இவர்கள் தர்ஹா வழிபாட்டிலும் தரீக்கா ஜதபுகளிலும் தங்களின் நிலை மறந்தவர்கள். அல்லாஹ் காந்தபுரத்தவரின் உண்மை நிலயை உலகுக்கு அறிவிப்பான். இவர்களின் அசிங்கங்களால் இஸ்லாத்தின் எதிரிகள் நம் தூய மார்க்கத்தையும் தூற்றுவார்கள் என்ற ஒரே காரணத்தால அல்லாஹ்வும் இவருடைய வண்டவாலங்களை மறைத்து வருகிறானோ என்னவோ? அல்லாஹ் அஃலம். ஒரளவு சமுதாய, மார்க்க, சிந்தனை உள்ளவர்கள் இவர்களின் RSS, BJP நடனம் உள்ள உறவை நன்றாக அவதானிக்கலாம். வேறு யாருக்கும் இவரின் அளவுக்கு தென்னிந்தியாவில் வர்னாசிரம வானரங்களோடு தொடர்பில்லை. யா அல்லாஹ்! எங்கள் மக்களுக்கு மார்க்க அறிவையும் தங்களை சுற்றி நடக்கும் பின்னப்படும் சதி வலை பற்றிய அளவையும் முழுமையாக தருவாயாக.

    ReplyDelete