Monday, November 30, 2015

திருமண கவுன்சிலிங் – தேவை பயிற்றுநர்கள்


டந்த 28.11.2015 சனிக்கிழமை காலை சென்னையில், ‘குடும்ப மாண்பு காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, திருமண கவுன்சிலிங் பாடத்திட்ட நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்வியாளர் கேப்டன் அமீர் அலீ அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ், எம்.என். புகாரீ திருமறை ஓதித் தொடங்கிவைத்தார்.

திருமண கவுன்சிலிங் பாடத்திட்டக் குழு உறுப்பினர்களான மௌலவிகள், அ. முஹம்மது கான் பாகவி, கா.மு. இல்யாஸ் ரியாஜி, எம். முஹம்மது மன்சூர் காஷிபி, எம். முஜீபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். உருது மொழியில், மௌலவி, ஃபய்யாஸ் ஆலம் உமரி உரையாற்றினார். மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார்.

புரஃபஷனல் கூரியர் எஸ். அஹ்மத் மீரான் பாடத்திட்ட நூலை வெளியிட, முஸ்லிம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ முஹம்மது ஹனீஃபா உள்ளிட்ட சமுதாயப் பிரமுகர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். பொறியாளர், பி.கே. ஷப்பீர் அஹ்மத் நன்றியுரை ஆற்றி, தீர்மானங்கள் வாசித்தார். மௌலவி, எம். முஜீபுர் ரஹ்மான் பாகவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


ஆல் இண்டியா மில்லி கவுன்சில் (தமிழ்நாடு), பைத்துல் மால் – தமிழ்நாடு, இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. மார்க்க அறிஞர்கள், இமாம்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என சுமார் 350 பேர் கலந்துகொண்டனர்.

மதுரை, புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலிருந்தும் முகநூல் அழைப்பைப் பார்த்துவிட்டு விழாவில் கலந்துகொண்டவர்களும் உளர். பிரச்சினையின் ஆழத்தை அறிந்து, தகவல் கேள்விப்பட்டு வந்த நண்பர்கள் பலரும் உள்ளனர்.

கவுன்சிலிங் பாடநூல்

இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருமண கவுன்சிலிங் பாடப் புத்தகம் மூன்று பிரிவுகளைக் கொண்டனது. திருமணத்திற்குமுன், திருமணத்தின்போது, திருமணத்திற்குப்பின் ஆகியவையே அப்பிரிவுகள். இவற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் ஆணும் பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள், சந்திக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும், உளவியல் ரீதியான எதிர்பார்ப்புகளும் அவற்றை அடைகின்ற சுமுகமான நடைமுறைகளும், மணவிலக்கை இயன்றவரைத் தவிர்ப்பதும் வேறு வழியில்லாதபோது சுன்னத்தான முறையில் மணவிலக்குச் செய்வதும்... எனப் பல அறிவுரைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடத்த வேண்டிய கவுன்சிலிங் பாடத்திட்டம் தனியாக வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். பாட வகுப்பு நடத்துவதற்கான மேட்டருடன், அந்த மேட்டருக்கு உதவும் நூல்களின் (தமிழ், அரபி) பட்டியலும் தரப்பட்டிருக்கிறது. இந்தப் பாடத்திட்டத்தை ஏழு ஆலிம்கள் கொண்ட குழு தயாரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கவுன்சிலிங் நடத்துநர்

உண்மையில் இந்த நூல், கவுன்சிலிங் வகுப்பு எடுக்கும் நடத்துநர்களுக்கு ஒரு வழிகாட்டிதான். இந்நூலை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ‘காதல்என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள், இனக் கவர்ச்சியால் விளையும் விபரீதங்கள், சமூக விரோதிகளின் வலையில் சிக்கி, குடும்பத்தைத் துறந்து ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளல், பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் படலம், கணவன் – மனைவி இடையிலான புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும், உறவுகளை மதித்தல், பெரியவர்களைக் கலங்காமல் பார்த்துக்கொள்ளல், சண்டை சச்சரவுகளைத் தீர்க்கும் முறைகள்... என இன்றைய குடும்பங்களின் அவலங்களை அகற்றும் நல்லிணக்க நடைமுறைகளைப் பயிற்றுநர் சொல்லிக்கொடுப்பார்.

தேவை – பயிற்றுநர்கள்

குறிப்பிட்ட சிலபேரை மட்டும் வைத்து தமிழகம் முழுவதும் கவுன்சிலிங் முறையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லாத காரியம். எனவே, முதலில் பயிற்றுநர்களை உருவாக்குவது அவசியம். அதற்காகத்தான், இந்தக் கூட்டத்தின் அழைப்பிதழுடன் ஒரு படிவமும் சேர்த்து அனுப்பப்பட்டது.

ஒவ்வொரு மஹல்லாவிலும் சமூக ஆர்வமும் அறச்சீற்றமும் கொண்ட தகுதிவாய்ந்த இருவர், அல்லது மூவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை, அந்தந்த மஹல்லா ஜமாஅத் நிர்வாகம் எங்களிடம் வழங்கிட வேண்டும் எனக் கோரியிருந்தோம். ஒரு தேதியை நிர்ணயித்து, அவர்களையெல்லாம் அழைத்து ஓரிரு நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டமும் உண்டு. பயிற்சி முடித்தவர்கள் தங்களின் பகுதிகளில் கவுன்சிலிங் நடத்துவார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், திருமண வயதை அடைந்தவர்கள், பள்ளி – கல்லூரி மாணவ – மாணவியர், புதுமணத் தம்பதியர் எனப் பல்வேறு நிலையிலிருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்பு நடத்தலாம்.

இதுவரை, பலர் படிவங்களை நிரப்பிக் கொடுத்துள்ளனர். கொடுக்காதவர்கள் விரைவில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வலைதளத்தில் கண்போர் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்திற்கு நகல் எடுத்து, நிரப்பி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி படிவத்திலேயே உண்டு.

ஆர்வமுள்ள ஆலிம்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ‘தாஇகள், சமூக ஆர்வலர்கள் என யாரும் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். பயிற்சியாளர்களுக்குத் தேவை: சமுதாய கவலை; சீர்திருத்தத்தின் மீதான அக்கறை; அடிப்படை மார்க்க அறிவு; சரளமாகப் பேசும் திறன்; சூழ்நிலை அறிந்து பேசும் பக்குவம். இவை இருந்தால் போதும்.

நம்மைக் கொண்டு, இரண்டு இளம் உள்ளங்கள் திருந்த வேண்டும்; மனஸ்தாபத்தில் இருக்கும் ஒரு தம்பதியாவது சமாதானம் அடைந்து சுமுகமாக வாழ வேண்டும்; ‘தலாக்முடிவுக்கு வந்தவர்கள் மறுபரிசீலனை செய்து, அவ்வெண்ணத்தைக் கைவிட வேண்டும்; தந்தை – மகன், மாமியார் – மருமகள், அண்ணன் – தம்பி போன்ற உறவுகள் சீர்பெற வேண்டும். இதைச் செய்யும் உங்களுக்கு அல்லாஹ்விடம் சன்மானம் உண்டு.


நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றின் தகுதியைவிடச் சிறந்த செயல் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவா? அதுதான், இருவரிடையே சமாதானம் செய்துவைப்பது. (நபிமொழி, திர்மிதீ)

1 comment:

  1. மாஷா அல்லாஹ் ! காலாகாலத்திற்கும் தேவையான நல்ல முயற்சி ! அல்லாஹ் கபூல் செய்வானாக ! ஆமீன்.

    ReplyDelete