Wednesday, February 03, 2016

திருமண ஆலோசனை கவுன்சிலிங் பயிற்றுநருக்கான பயிற்சி முகாம்


-கான் பாகவி

டந்த ஜனவரி 30,31 ஆகிய இரு தினங்கள் சென்னை ஆயிரம் விளக்கு ஆஷா நிவாசில் திருமண ஆலோசனை கவுன்சிலிங் பயிற்றுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்கள் சுமார் 100 பேர் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இளம் ஆலிம்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், இறையில்லப் பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு துறையினர் ஆர்வத்தோடு முகாமில் பங்கேற்றனர். சென்னையிலிருந்து மட்டுமன்றி திருச்சி, சேலம் போன்ற வெளிமாவட்டங்களிலிருந்தும் பயிற்றுநர்கள் கலந்துகொண்டது இந்த முகாமின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.

முதல்நாள் காலை 9.00 மணியிலிருந்து 10.00 மணிவரை வருகையாளர்களின் பெயர் பதிவு முறைப்படி நடந்தது. பத்து மணிக்கு மௌலவி, . முஹம்மது கான் பாகவி அனைவரையும் வரவேற்று, இப்பயிற்சி முகாமின் அவசியம் குறித்து விவரித்தார். இந்த இயந்திர உலகில் சிதைந்துபோய்க்கொண்டிருக்கும் குடும்பப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும்; அவசர கதியில் இல்லறத்தின் மாண்பு அழிந்துவருவதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திய கான் பாகவி, அதற்கான தீர்வையும் எடுத்துரைத்தார்.

மணமுடிப்பதற்குமுன் திருமணம், கணவன்-மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள், இல்லற வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளும் அவற்றைச் சுமுகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளும், மணவிலக்கால் ஏற்படும் இழப்புகள், மணவிலக்கைத் தவிர்க்கும் வழிமுறைகள் முதலான விஷயங்களை மணமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அறியச் செய்வதற்கான ஒரு வகுப்புதான் ஆலோசனை கவுன்சிலிங். அந்த வகுப்பை நடத்த மார்க்க அறிஞர்கள், சட்ட நிபுணர்கள், உளவியல் அறிஞர்கள் முதலானோரின் உழைப்பு தேவை. இந்தப் பயிற்றுநர்களை உருவாக்கவே இந்த முகாம் -என்று அவர் விளக்கினார்.

மௌலானா, ஃபய்யாஸ் ஆலம் உமரீ
அதையடுத்து மௌலானா, ஃபய்யாஸ் ஆலம் உமரி அவர்கள் உருதுமொழியில் சுருக்கமாக அறிமுக உரையாற்றினர். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய வழக்குரைஞர் முனீருத்தீன் ஷரீஃப், அறிமுக உரையைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

முதல் அமர்வு
மௌலவி, சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி
தேநீர் இடைவேளைக்குப்பின், முதல் அமர்வு தொடங்கியது. மௌலவி, யூசுப் சித்தீக் மிஸ்பாஹி, “திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்? காதலும் காதல் திருமணமும்; துணையைத் தேர்வு செய்யும் முறை என்ன?” ஆகிய அடிப்படை விஷயங்களை விவரமாக எடுத்துச்சொன்னார். நெறியாளர் டாக்டர் அம்ஜத் கான் இதற்கு முன்னுரையாக முதலில் பேசினார்.

மௌலவி, நூஹ் மஹ்ளரி
கணவன் மற்றும் மனைவியின் கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பதை மௌலவி, நூஹ் மஹ்ளரி சுவைபட எடுத்துரைத்தார். இத்தலைப்புக்கு நெறியாளராக இருந்த ஃபாத்திமா முஸஃப்பர் தம் கருத்துகளைச் சுருக்கமாகப் பதிவு செய்தார்.

இரண்டாவது அமர்வில் மௌலவி, முஜீபுர் ரஹ்மான் உமரி, மஹ்ர் மற்றும் வரதட்சிணை, திருமணத்தில் பெற்றோரின் பங்கு ஆகிய கருத்துகளை பவர்பாயிண்ட் மூலம் விளக்கினார். இதற்கு நெறியாளராகப் பொறியாளர் P.K. ஷப்பீர் அஹ்மத் பொறுப்பேற்று, தம் கருத்துகளைப் பதிவு செய்தார்.


மௌலவி, மன்சூர் காஷிஃபி, எளிமையான திருமணம் குறித்தும் மணவிருந்து (வலீமா) குறித்தும் வகுப்பெடுத்தார். சமுதாயத்தின் அவலங்களை அவர் பட்டியலிட்டபோது அனைவரின் கண்களிலிருந்தும் நீர் வழிந்தது. அழுகையைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டனர். நெறியாளராக இருந்த குர்ஷித் பேகம் ஏற்கெனவே கவுன்சிலிங் நடத்திவருபவர். தம் அனுபவங்களை உருக்கமாக விவரித்தார்.

இரண்டாம் நாள்


காலையில் தொடங்கிய முதல் அமர்வில் சகோதரர் S.K. ஷமீமுல் இஸ்லாம் திருமண குத்பா உரையின் மகத்துவத்தை விளக்கியதுடன், திருமணங்களில் காணப்படும் ஆடம்பரம், சடங்குகள் குறித்து விவரித்தார். இறையச்சம் (தக்வா) ஒன்றுதான் குடும்பங்களில் நடக்கும் தவறுகளையும் அக்கிரமங்களையும் தடுக்கவல்லது; அதனால்தான், இறையச்சத்தை வலியுறுத்தும் திருவசனங்களை நிகாஹ் குத்பாவில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என விளக்கினார்.

இதற்கு
நெறியாளராக இருந்த மௌலானா, ஃபய்யாஸ் ஆலம் உமரி, திருமண உரை, திருமணத்தின் வாழ்த்து மற்றும் பிரார்த்தனை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

மௌலவி, முஜீபுர் ரஹ்மான் உமரி (மௌலவி, இல்யாஸ் ரியாஜி வெளியூர் சென்றுவிட்டதால்) மீண்டும் வகுப்பெடுத்தார். உடலுறவுச் சட்டங்கள், உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் ஆகியன குறித்து உமரி விளக்கினார்.

இந்த
வகுப்பின் நெறியாளர் டாக்டர் குர்ஷித் நசீர், கவுன்சிலிங் துறையில் புகழ்பெற்ற உளவியல் நிபுணர். இவர் பவர்பாயிண்ட் மூலம் நீண்ட நேரம் கவுன்சிலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடைமுறைகளை எடுத்துச்சொன்னார். இத்துறையில் தாம், எதிர்கொண்ட சிக்கல்களைவும் அவற்றைச் சமாளிக்கும் முறைகளையும் அவர் எடுத்துரைத்தவிதம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

ரண்டாவது அமர்வில் மௌலவி, கான் பாகவி மணவிலக்கு (தலாக்) தொடர்பாகப் பாடம் எடுத்தார். சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் 4 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2016 ஜனவரியில் 8 ஆயிரம் மணவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, மேலும் 4 குடும்பநல நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன.

புதிதாகத்
திருமணமாகும் தம்பதியரில் 10 விழுக்காட்டினர் 6 மாதத்திற்குள் விவாகரத்து வழக்கு தொடுக்கின்றனர். காதலித்தபோது பார்த்த காதலனின் பிம்பம் கல்யாணத்திற்குப்பின் நிஜ வாழ்க்கையில் மாயமாகிவிடுகிறதாம்! பெண்களுக்குக் கல்வி, வேலை, கைநிறைய சம்பளம் ஆகியவை கிடைத்துவிடும் துணிச்சலில் விவாகரத்திற்குச் சர்வசாதாரணமாக முனைகின்றனர்.

இதுவெல்லாம்
, தமிழகப் பெண் வழக்கறிஞர் அமைப்பின் தலைவியான சாந்தகுமாரி அண்மையில் கொடுத்த செய்திகளாகும் எனக் குறிப்பிட்டார். தம்பதியரிடையே எழும் கருத்துமோதல்களும் முரண்பாடுகளும் மணவிலக்கைத் தவிர்த்தல், மணவிலக்கின் பின்விளைவுகள், மணவிலக்கின் சரியான -சுன்னத்தான- நடைமுறை ஆகியவை குறித்து பவர்பாயிண்டுடன் விளக்கினார் கான் பாகவி.


இறுதியில், கலந்துரையாடல் நடந்தது. முகாமில் கலந்துகொண்ட பயிற்றுநர்கள், திருமண ஆலோசனை கவுன்சிலிங் நடைமுறையின் அவசியத்தை வழிமொழிந்தனர். சிலர் இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். பலரும் தங்கள் பகுதிகளில் கவுன்சிலிங் முறையை நடத்துவோம் என்று உறுதியளித்தனர்.

வரதட்சிணைக்கு
எதிராகவும் ஆண்கள் தலாக் உரிமையை முறைதவறி பயன்படுத்துவதாகவும் பெண் பயிற்றுநர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில், ‘குலாஎனும் உரிமையைப் பெண்கள் சின்னச்சின்ன காரணங்களுக்காகவெல்லாம் பயன்டுத்தத் தொடங்கிவிட்டனர் என்ற கசப்பான உண்மையையும் பெண் பயிற்றுநர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை.

நீங்களும் செயல்படுத்தலாம்!

இனி, ஆங்காங்கே தத்தமது ஊர்களிலும் மஹல்லாக்களிலும் திருமண ஆலோசனை கவுன்சிலிங் வகுப்புகளை ஆர்வலர்கள் நடத்த முன்வர வேண்டும். இனியும் தாமதித்து, நம் குடும்பங்கள் சிதைவதை அனுமதிக்கக் கூடாது. இறைமறையும் நபிவழியும் காட்டியுள்ள இல்லற இலக்கணங்களை அனைவரும் பின்பற்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிற்சி
முகாமில் கலந்துகொள்ளாத தகுதிமிக்க ஆலிம்கள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், உளவியல் படித்தவர்கள், ஏற்கெனவே கவுன்சிலிங் நடத்திவருபவர்கள் ஆகியோரை உங்கள் பகுதியில் ஒன்றிணையுங்கள். கவலையைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவசியத்தை உணர்த்துங்கள். வழிகாட்டல் தேவைப்படின், கீழ்க்கண்ட எண்களுடன் தொடர்புகொள்ளுங்கள்!

இதற்குப்
பெரிய பொருட்செலவோ இடப் பிரச்சினையோ இராது. உள்ளூர் பள்ளிவாசலின் ஒரு ஓரத்தில், அல்லது குர்ஆன் மதரசாவில், அல்லது ஏதேனும் ஒரு அரங்கத்தில் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை முதலில் நடத்துங்கள். வட்டாரத்தில் புதிதாகத் திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் அணுகி, மணமக்களும் மணமக்களின் பெற்றோரும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.


மஹல்லா இமாம், பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோரைச் சந்தித்து, கவுன்சிலிங்கின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களின் இசைவையும் ஒத்துழைப்பையும் பெற ஆவன செய்யுங்கள்! பிறர் குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் பாடுபட்டால், உங்கள் குடும்பத்தை அல்லாஹ் காப்பான். மறக்க வேண்டாம்! தாமதிக்க வேண்டாம்! அலட்சியம் வேண்டாம்.

தொடர்புக்கு:

94440 54119, 94443 16031, 97911 17765

__________________

No comments:

Post a Comment